முதுமொழிக்காஞ்சி, 1919/அல்ல பத்து
V. அல்ல பத்து.
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நீரறிந் தொழுகாதாள் தார மல்லள்.
(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்கட்கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள் மனையாளல்லள்.
(ப-ரை.) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கு எல்லாம்—மனிதர் எல்லார்க்கும், நீர் அறிந்து—புருஷனுடைய குணத்தை அறிந்து, ஒழுகாதாள்—அதற்கேற்றபடி நடவாதவள், தாரம் அல்லள்—மனைவியாகாள்.
நீர்—நீர்மை.
“கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி”யாகையால், கணவனுடைய குண விசேடங்களை யறிந்து தக்கபடி நடவாதவள் மனைவியென்கிற பெயருக்கு உரியவளாகாள்.
2. தாரமா ணாதது வாழ்க்கை யன்று.
(ப-பொ.) மனையாள் மாட்சிமைப்படாத மனை வாழ்க்கை, மனை வாழ்க்கையன்று
(ப-ரை.) தாரம் மாணாதது—மனையாள் மாட்சிமையுடையவளாகப் பெறாத இல்வாழ்க்கை, வாழ்க்கை அன்று—இல்வாழ்க்கை என்னத் தக்க தன்று.
மனையாள் மாட்சிமையுடையவளாகப் பெற்ற இல்வாழ்க்கையே இல்வாழ்க்கையென்று சிறப்பித்துச் சொல்லத் தக்கதாம்.
“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.”-திருக்குறள்.
மனையாளுக்கு மாட்சியாவது நற்குண நற்செயல்கள். நற்குணங்களாவன : துறவிகளை ஆதரித்தல், விருந்தினரை உபசரித்தல், ஏழைகளிடத்து அருளுடைமை முதலியன. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களைச் சேகரித்தல், உணவைப் பாகமாக அமைக்குந் திறமை, ஒப்புரவு முதலியன.
3. ஈரமில் லாதது கிளைநட் பன்று.
(ப-பொ.) மனத்தின் கண் ஈரமில்லாதது, கிளையுமன்று நட்புமன்று.
(ப-ரை.) ஈரம் இல்லாதது—மனத்தின் கண் அன்பில்லாதது, கிளை (அன்று)—சுற்றமுமன்று; நட்பு அன்று—சினேகமும் அன்று.
உறவினர்க்கும், நட்பினர்க்கும் அன்புடைமை உரிய லக்ஷணம். உள்ளன்பிலாதார் சுற்றத்தாருமாகார், நட்பினரும் ஆகார் என்பதாம்.
“விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.”
“அழிவந்த செய்யினும் அன்பறார், அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.”-திருக்குறள்.
4. சோராக் கையன் சொன்மலை யல்லன்.
(ப-பொ.) பிறர்க்கு ஒன்றை உதவாத கையையுடையோன், புகழைத் தாங்க மாட்டான்.
சோர்தல்—நெகிழ்தல். சோராக்கையன்—கை நெகிழ்ச்சி யில்லாதவன்—ஒன்றுங் கொடாதவன். சொல்—புகழ், சொன்மலை—மலை போன்ற புகழ்; மிக்க புகழ்; மிக்க புகழுடையவன்.
(ப-ரை.) சோரா(த)கையன்—பிறர்க்கு ஒன்றுங் கொடாதவன், சொன்மலை அல்லன்—மலை போன்ற புகழை உடையவனாகான்.
“உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.”—திருக்குறள்.
“சோரக் கையன்” என்ற பாடத்தைக் களவு செய்யும் கையையுடையவன், புகழுக்குரியவனாகான் எனப் பொருத்துகின்றனர். சோரம்—களவு, கை—ஒழுக்கம்; சோரக் கையன்—களவொழுக்க முள்ளவன்
5. நேரா நெஞ்சத்தோன் நட்டோ னல்லன்.
(ப-பொ.) வேறாய் உடன்படாத நெஞ்சத்தோன் நட்டோ னல்லன்.
(ப-ரை.) நேரா—ஒற்றுமைப் படாத, நெஞ்சத்தோன்—மனத்தை யுடையவன்,நட்டோன் அல்லன்—சினேகன் ஆகான்.
மனவொற்றுமை யில்லாதவன், சினேகத்துக்கு உரியவ னாகான்
“மனத்தி னமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் மூன்று.”
“புணர்ச்சி பழகுதல் வேண்டா. உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.”—திருக்குறள்.
6. நேராமற் கற்றது கல்வி யன்று.
(ப-பொ.) கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று
(ப-ரை.) நேராமல்—ஒன்றுங் கொடாமல், கற்றது—ஓராசிரிய னிடத்தில் கற்றது, கல்வி அன்று—கல்வியாகாது.
கற்பிக்கும் ஆசிரியனுக்குப் பொருள் கொடாமல் கற்றது, கல்வி யென்னும் பெயர்க்கு உரியதாகாது.
“நேராமை” “தேராமை”—பாடபேதம். ‘தேராமைக் கற்றது’ என்ற பாடத்துக்கு, உண்மையான பொருளைத் தெரியாமல் கற்றது, கல்வி என்கிற கணக்கில் சேர்ந்ததாகாது என்று பொருள் கொள்வது.
7. வாழாமல் வருந்தியது வருத்த மன்று.
(ப-பொ.) தன்னுயிர் வாழாமை வருந்தியது வருத்த மன்று.
(ப-ரை.) வாழாமல்—தன் உயிர் நன்கு வாழ்வதை வேண்டாமல், பிறவுயிர்கள் இன்புற்று வாழ்வதை வேண்டி, வருந்தியது—ஒருவன் வருந்தலுற்றது, வருத்தம் அன்று—வருத்தத்திற் சேர்ந்த தாகாது.
“தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம், வெங்குறை தீர்க் கிற்பார் விழுமியோர்” ஆதலால், சமுதாய நன்மையை வேண்டி உழைப்பவர்க்கு, அதிலுள்ள வருத்தம் வருத்தமாகத் தோன்றாது.
8. அறத்தாற்றி னீயாத தீகை யன்று.
(ப-பொ.) அறத்தின் நெறியின் ஈயாதது ஈகையன்று.
(ப-ரை.) அறத்தாற்றின் ஈயாதது—தரும மார்க்கத்திலே கொடாதது, ஈகை அன்று—ஈகை என்று சொல்லத் தக்கதாகாது.
அறத்தாற்றின் ஈதலாவது, பாத்திரமறிந்து கொடுத்தல். ஈகையின் இலக்கணமும் அதுவே.
9. திறத்தாற்றி னோலா ததுநோன் பன்று.
(ப-பொ.) தன் குலத்திற்கும் நிலைமைக்கும் தக நோலாதது தவமன்று.
நோற்றில்—விரதங் காத்தல்.
(ப-ரை.) திறத்து ஆற்றின்—தத்தம் கூறுபாட்டிற் குரிய வழியில், நோலாதது—காவாத விரதம், நோன்பு அன்று—விரதம் என்கிற கணக்கில் சேர்ந்ததன்று.
வருணாச்சிரமத்திற்கு ஏற்ற வழியிலே, அனுஷ்டிக்கும் விரதமே விரதமாம்: ஏலாத வழியிலே அனுஷ்டிப்பது விரதமாகாது.
10. மறுபிறப் பறியா ததுமூப் பன்று.
(ப- பொ.) மறு பிறப்பை யறிந்து அறத்தின் வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று.
(ப-ரை.) மறுபிறப்பு—மறு பிறப்பு நன்கு நடத்தற்குரிய வொழுக்கங்களை, அறியாதது—ஒருவன் அறியாமலே அடைந்த மூப்பானது, மூப்பு அன்று—மூப்பு என்னும் கணக்கிலே சேர்ந்ததாகாது.
“இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த பிறப்பா லறிக.- பிறந்திருந்து
செய்யும் வினையா லறிக இனிப்பிறந்
தெய்தும் வினையின் பயன்.”
“அம்மைத் தாஞ்செய்த அறத்தின் வருபயனை
இம்மைத்துய்த் தின்புறா நின்றவர்—உம்மைக்
கறஞ்செய்யா தைம்புலனும் ஆற்றுதல் நல்லாக்
கறந்துண்டஃ தோம்பாமை யாம்.”
இவ்வற நெறிச்சார வெண்பாக்களால் கருத்து நன்கு விளங்கும்.