முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/2. அறிவுப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
2. அறிவுப் பத்து


1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப.

2. ஈரம் உடைமை ஈகையின் அறிப.

3. சோரா நன்னட்பு உதவியின் அறிப.

4. கற்றது உடைமை காட்சியின் அறிப.

5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப.

6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.

7. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப.

8. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப.

9. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்பு அறிப.

10. சீருடை ஆண்மை செய்கையின் அறிப.

2. அறியத் தக்க பத்துக் கருத்துகள்
  1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள் யாவராயினும், அவருடைய குளிர்ந்த அருளுடைமையைக் கொண்டுதான் அவர் உயர் குலத்தார் என அறியப்படுவார்.
  2. ஒருவர் பிறர்க்கு அளிக்கும் கொடையைக் கொண்டு அவர் குளிர்ந்த அருளுடையவர் என்பதை அறியலாம்.
  3. ஒருவர் செய்யும் உதவியை அளவுகோலாகக் கொண்டு, அவர் தளராத நட்பு உடையவர் என்பதை அறியலாம்.
  4. ஒருவரது உண்மை காணும் திறத்தைக் கொண்டு, அவரது கல்வி வல்லமையை அறியலாம்.
  5. ஒருவர் உயர்ந்த ஆராய்ச்சி உடையவர் என்பதை, அவர் எதிர்காலத்தில் வரக் கூடியதை முன் கூட்டி நுனித் துணர்ந்து செயல்படுவதைக் கொண்டு அறியலாம்.
  6. ஒருவர் தம்மைப் பெருமைப்படுத்திக் கொண்டு செருக்குற்று இருப்பதைக் கொண்டு, அவர் அற்பக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறியலாம்.
  7. ஒருவர் செய்யும் வஞ்சகச் சூழ்ச்சிச் செயலைக் கொண்டு, அவர் கள்ளத்தனம் உடையவர் என்பதை அறியலாம்.
  8. ஒருவரின் சொல் சோர்வைக் கொண்டு - அதாவது சொன்ன சொல்லைக் காப்பாற்றாததைக் கொண்டு, அவர் எல்லாவற்றிலும் சோர்ந்து தவறுவார் என்பதை அறியலாம்.
  9. ஒருவர் அறிவுடைமையில் குறைபாடு உடையவராயிருப்பின், அவர் எல்லாவற்றிலும் குறைபாடு உடையவராயிருப்பார் என்பதை அறியலாம்.
  10. ஒருவரது சிறப்பான ஆளுமைத் தன்மையை, அவர் செய்யும் செயல் திறமையைக் கொண்டு அறியலாம்.