முத்தம்/அத்தியாயம் 5
5
‘ஓ! நீங்களா!’ என்றாள், தேன் குரலை இன்னிசையாய் இழைய விட்டு.
குழப்பம் அதிகக் கலவரமாக, என்ன செய்வது; என்ன சொல்வது; அவள் என்னவாவது எண்ணிக் கொள்வாளே என்று திகைத்து ‘மன்னிக்கனும்… வருத்தம்… நான்… நான் வந்து…’ என்று சரியான சொற்களுக்காகத் திணறித் தடுமாறினான் அந்த ‘ஓ, நீங்களா?’ ஆகி விட்ட ஆசாமி.
அவள், அவன் தடுமாற்றம் கண்டு அதிகம் சிரித்தாள். ‘பரவாயில்லே, மிஸ்டர் ரகுராமன். தப்பு என் மீதும் தான். மாடிப்படி ஏறும் போதும் நானும் பார்த்து நடந்திருக்க வேண்டுமல்லவா? போகிறது' என்றாள்.
விலகி, ஒன்றிரு படிகள் மேலேறியதும் பத்மா நின்று திரும்பி நோக்கினாள் அந்த மிஸ்டர் ரகுராமனோ தரையைப் பார்த்தபடி ஆறேழு படிகள் கீழிறங்கி விட்டான். 'மிஸ்டர் ரகுராமன்!' என்றாள் அவள்
அவன் மற்றுமொரு படி கீழிரங்கினான். அவள் கைவளைக் கலகலப்பு அவன் கவனத்தை இழுக்கும் அலாரமாக ஒலிக்க வேண்டி யிருந்தது. அவன் மேலே விட்டெறிந்தான் பார்வையை. 'என்ன? கூப்பிட்டீர்களா?' என்று கேட்டான், அவனையே கவனித்து நின்ற பத்மாவிடம்.
அவள் கலங்கமிலா முழுநகை உதிர்த்துச் சொன்னாள், 'இன்று உங்களுக்கு ஆழ்ந்தயோசனை போலிருக்கு, கலைநயம் மிகுந்த கற்பனையிலே கரை காண முடியாமல் நீந்தத் தொடங்கி விட்டீர்களோ?'
'ஹிஹி, அதெல்லாம் ஒண்ணுமில்லே' என்று தலையைச் சொரிந்தான் ரகுராமன்.
'அன்றைய விவாதத்திற்குப் பிறகு உங்களைப் பார்க்கவே முடியவில்லை.சந்தித்துப் பேசவேண்டும் என்று நினைத்தேன். உங்களை எங்கே பார்க்கலாம்?'
அவள் விசாரணை எதிர்பாராத விபத்து அவனுக்கு மறுபடியும் குழப்பம். 'என்னையா? நான் வந்து ஹோட்டலிலே......"
'அப்போ நீங்கள் எங்கவீட்டுக்கு வாருங்களேன் ஒருநாள். அன்றைய விவாதத்தில் உங்கள் பேச்சு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதைப் பற்றி உங்களிடம் அதிகம் பேசவேண்டும். அவசியம் வாருங்கள், வருவீர்களா? கட்டாயம் வரணும்? ஊங்?' அவள் நடப்பதும் நிற்பதும் பேசுவதும் எல்லாமே கலை, அவளே அற்புதக் கலை அவள் ஒயி லாக நின்று அழகாகத் தலையசைத்துக் குழைவாகப் பேசும்போது, சொல்லவா வேண்டும்!
ஆனால் அப்பாவி ரகுராமனுக்கு அவள் அழகை அள்ளிப் பருகத் தைரியம் கிடையாது. கார்மேகத் திரை விலக்கி முழுநிலா அவன்மீது பூரணமாகச் சிந்தத் தயாராகத் தவித்தும் கூட, அவன் இருள் மூலையில் ஒடுங்க முயல்வதுபோல் தான் நின்றான். அவளை ஒருகணம் பார்ப்பான். அந்த அழகு வெளிச்சத்தின்மீது தாவிய விட்டில் கண்களை இழுத்து தரையையோ, மாடிப் படியையோ, வேறு எங்காவது எதையாவது காணவோ ஏவுவான். அவளுக்கு பதில் சொல்லியாகவேண்டுமே! "உம். வாறேன்" என்று தலையசைத்தான். நகரத் தொடங்கினான். - "ஓ மறந்துவிட்டீர்களே, மிஸ்டர் ரகுராமன்! என் வீட்டு விலாசத்தை கேட்கவே யில்லையே. அப்புறம் எப்படி வருவீர்களாம்?’ என்று சிரித்தாள் அழகி. அவன் அசட்டுச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான். - பத்மா தன் கையிலிருந்த நோட்டு ஒன்றிலிருந்து தாளைக் கிழித்து அதில் தன் விலாசம் குறித்தாள். மெதுவாகப் படியிறங்கி வந்து அதை அவனிடம் கொடுத்தாள். கொடுக்கும்போதே 'நீங்க அவசியம் வரணும் இந்த ஞாயிற்றுக்கிழமை. ஊம்? சரியா?' என்று தலை அசைப்பு, கையசைவுகளோடு கேட்டுக் கொண்டாள்.
'கட்டாயம் வாறேன்' என்று கூறிவிட்டு வேகமாக நடந்தான் அவன். தன் வழி ஏகிய பத்மா நினைத்தாள்: 'இவர் ரொம்ப நல்லவர். மற்றவங்களும் இருக்கிறாங்களே வெறிச்சுவெறிச்சு முழிச்சுப் பார்க்கிறது ம், பல்லை இளிக்கிறதுமாக, இவர் அன்றைக்குப் பேசினது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு'
ரகுராமனை அவள் முதன் முதலில் உணர்ந்து கொண்டதே 'விவாதக் குழு'வின் ஒரு கூட்டத்தில் தான். சாதாரணமாக அவள் பிறரை மதிப்பதில்லை, கவனிப்பதில்லை. அவர்கள் தன்னை கெளரவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதுமில்லை. அவன் சகஜ மாகப் பேசிச் சிரித்துப் பழகுவதெல்லாம் புஷ்பா, தேவகி, காந்திமதி முதலிய தோழிகளுடன் தான். மாணவர்களிடையே பலரகமானவர்களும் உண்டு, உலகம் பலவிதம் தானே!' என்று அறிந்து அவர்களை ஒதுக்கி விட்டாள். ஆனால் அந்த விவாத நாளில் ரகுராமன் ஒற்றைத்தனியன் என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்து விட்டது;
அந்த விவாதமே அவளது தோழிகள் விளையாட்டாக இழுத்துவிட்ட வினைதான். அவர்களுக்கு பத்மாவையும் அவள்போக்கையும் பற்றிப் பேசிச் சிரித்து ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என்று ஆசை. தினம் தங்களுக்குள் பேசிலூட்டியடிப்பது போதாது எனக்கருதி பெரிய ரகளைக்கு வித்து ஊன்றி விட் டார்கள் 'விவாதக்குழு'வில் 'இப்படியும் வாழலாம் 'என்கிற தொடரில் 'பிளட்டானிக் லவ்' பற்றி விவாதத்துக்கு ஏற்பாடுசெய்து விட்டார்கள். இதுமாதிரி விஷயங்களில் யாருக்குத் தான் உற்சாகம் குறையும் ?
ஆனால் பத்மா தயங்கினாள். சினுங்கினாள். சீறினாள்முடியாது, பேசமுடியாது. என மறுத்தாள்.
'அப்போ உன் கொள்கையில் உனக்கே நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம், இப்பேவே இப்படீன்னா, இந்த லெட்சணத்திலே இவவாழ்க்கை பூராவும் தெய்வீகக் காதலை அனுஷ்டிக்கப் போறாளாம்! வழிகாட்ட வேறே போகிறளாமேடி ! ஐயோடீயேன்னளாம்!' - புஷ்பாவும் பிறரும் இவ் விதம் கேலிசெய்யவே பத்மாவுக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று. பேசியே தீர்ப்பது என்று துணிந்து விட்டாள். விவாதம் கனகுஷியாகத் தான் நடந்தது. எல்லாரும் உற்சாகமாகப் பேசித் தள்ளினார்கள். கவிதைகளும் இலக்கிய மொழிகளும் தண்ணீர் படுகிற பாடுபட்டன. எதிர்த்துப் பலர்பிரசங்க மாரி பொழிந்தார்கள். சிலர் ஆதரித்தார்கள். பத்மாவின் கொள்கையை ஆதரித்தவர்களில் ரகுரா மனும் ஒருவன்.
அந்தக் காரணத்தினால் மட்டுமே அவனிடம் கருணைபிறந்து விடவில்லை அவளுக்கு. மற்றவர்கள் விவாதத்துக்காகக் கூப்பாடு போட்டார்கள். அழகி பத்மாவை எதிர்த்து மட்டம் தட்டவேண்டும் என்பதற்காகவோ, பத்மாவின் புன்னகையைப் பெற வேண்டும் என்றகாரணமாகவோ பலர் உற்சாகமாக விவாதித்தார்கள். ஆனால் ரகுராமனோ கொள்கைக்காகப் போராடினான். அதில் அவனுக்கு அழுத்தமான பற்றுதலும், ஆழ்ந்த ஈடுபாடும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தன என்பது அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் ஒலித்தது. பத்மாவுக்காக அவன் பரிந்து பேச வில்லை. பத்மாவையே அவன் கவனிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். த ன க் கா க, தனது கொள்கைக்காக அவன் பேசினான்.
'ஒரு ஊரிலே இரண்டு பைத்தியக்காரர்களா' என்றொரு வசனம் உண்டு. அதன் சரியானபொருள் என்னவோ எனக்குத் தெரியாது. ஏனென்றால் ஒரே ஊரில் ஒன்பது பத்து பைத்தியங்கள் அலைவதை நாம் சர்வசாதாரணமாகக் காண முடிகிறது. என்றாலும் இங்கே இப்போது நான் ஒரு ஊரில்-இல்லை ஒரே யிடத்தில் - இரண்டு பைத்தியக்காரர்களா? என்று வியக்கத் தான் வேண்டியிருக்கிறது. குமாரி பத்மா அவர்கள்தான் புதுமை மோகத்திலே, இளமை உற்சாகத்திலே, கற்பனைச் செறிவிலே, காவிய உணர்வுத் குமிழ்விடுதலினாலே, கவிதை உள்ளக் குறுகுறுப்பிலே நடை முறைக்கு ஒவ்வாத ஒரு பைத்தியக்காரத் தனத்தை வைத்து விளையாடுகிறார்கள் என்று எண்ணினோம், சகோதரிக்கு அது வெறும் பொம்மை விளையாட்டு சிறு பெண் சிற்றில் கட்டி விளையாடுவதைப் போல, உணர்வும் உள்ளமும் உற்ற பருவமெய்தினால் தோழிபத்மா அவர்கள் இப்பேச்சைக் காற்றிலே பறக்க விட்டு நலங்கும், லாலியும் பாடத் துணிவார்கள் ; பிறகு ஆராரோ ஆரிராரோ.......தாலே தாலேலோ.....கண்ணே நீ யுறங்கு கண்மணியே நீ யுறங்கு என்று தாலாட்டுப் பாடவும் தயாராகி விடுவார்கள் என எண்ணினோம், ஆனால், நம்ம ரகுராமன்-இதுவரை மெளனச்சாமியாக இருந்த நம்மதோழர் ரகுராமன். இப்படி நாடக உத்திகாட்டி, இந்த இடத்திலே துப்பாக்கிச் சிரிப்பொன்றை வெடிக்கவிட்டார் பத்மாவை எதிர்த்துப் பேசவந்தஜாலிபிரதர், அவ்வளவுதான். அவருக்கு பிரமாதமான வெற்றி. ஆயிரமாயிரம் அப்பளங்களை அடித்துநொறுக்கி ஆரவாரிப்பதுபோல, கைகள் சடசடத்துக் கொட்டின. மேஜைகள் மத்தளங்களாயின. பத்மா 'ப்ரூட்ஸ்! மிருகங்கள்!' என்று முனங்கி வெளியேறினாள்.
எனினும் அவள் உள்ளத்திலே ரகுராமன் இனிய நிழலாய் நின்றான். அவனைக்கண்டு பேச வேண்டும் என எண்ணினாள். "அவர் ரொம்ப நல்லவர். ஆயிரத்தில் ஒரு மனிதர் .இவ்வளவு அமைதியாக அடக்கமாக அழகாக விளக்கிப் பேசினார்" என்று வியந்தாள். அவனிடம் அவளுக்கு அனுதாபம் ஏற்பட்டது. நட்புக்கு ஏற்றவர் என்ற எண்ணமும் ஒரு பிரியமும் எழுந்தன. அவனைச் சந்திக்க வேண்டும், சந்தித்தாகணும் என்று எண்ணி வந்தாள். அவளுக்கு சந்தர்ப்பம் துணை புரிந்தது.
அதனால், மாடிப்படி ஏறிக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளம் மீண்டும் சொன்னது ‘அவர் ரொம்ப நல்லவர்’ என்று அவளுக்கிருந்த உற்சாக உணர்வு இன்னும் அதிகமாகப் பொங்கிப் பிரவகிக்கவே, அவள் ‘டிராலலால… லல்லலா! லல்லலா, லல்ல லல்ல லல்லலா…’ என்று இசைத்தபடி குஷியாக நடந்தாள்.