உள்ளடக்கத்துக்குச் செல்

முத்தம்/அத்தியாயம் 6

விக்கிமூலம் இலிருந்து

6

ஞாயிற்றுக்கிழமை.

தனக்கு அன்று காரணமற்ற, தேவையற்ற பரபரப்பு இருப்பதாக பத்மாவே உணர்ந்தாள். அடிக்கடி ‘ரகுராமன் வந்து விட்டாரா? இன்னும் வரவில்லையே, ஏன்?’ என்று வீட்டுக்கும், வாசலுக்குமாக அலைந்தாள். ‘வருவாரா? வராமலே இருந்து விடுவாரோ?’ என்று சந்தேகம் வேறு.

அன்று காலையில் எழும் பொழுதே, ‘இன்று ஞாயிற்றுக் கிழமை. ரகுராமன் வருவார். வருவதாகச் சொல்லியிருக்கிறார்’ என்று நினைவு புரண்டு கொடுத்தது. அலுவல்களையெல்லாம் முடித்துக் கொண்டு, அதிக சிரத்தையோடு அழகு செய்து முடித்தாள். என்றுமில்லாதபடி அதிக நேரம் செலவு செய்து, கருத்தாக அலங்காரம் செய்திருப்பது பிறகுதான் அவளுக்கு மனதில் பட்டது. ‘எனக்கு இன்றைக்கு என்ன இது! ஏன் இத்தனை உற்சாகமும், படபடப்பும்? ரகுராமன் வந்தால் வரட்டுமே?’ என்று எண்ணினாள். எனினும் அமைதியாக இருக்க இயலவில்லை. தெருவில் காலடி ஓசை கேட்டால் அவன் தானா என்று பார்க்க விரைவாள். ஏமாற்றம்'தான் காத்திருக்கும்.

அவளைப் பலமுறை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிய பிறகு, ரகுராமன் வந்து சேர்ந்தான். அவளது ஆனந்தத்துக்கு அளவில்லை. அவள் உளமகிழ்வு முகத்தில் நன்கு பூத்து மிளிர்ந்தது.

"வாருங்கள். நீங்கள் எங்கே வராமலே இருந்து விடப் போகிறீர்களோ என்று பயந்தேன்" என அன்பாகச் சொன்னாள். "உள்ளே வாருங்கள். இப்படி வந்து உட்காருங்கள்".

ரகுராமன் கண்கள் வீட்டை ஆராய்ந்தன. பெரிய வீடு. வசதிகள் நிறைந்தது தான். செல்வத்தின் பொன் வெயில் சுவருக்குச் சுவர், மூலைக்குமூலை பிரகாசமாகப் பட்டுத் தெறித்து, வீட்டையே சிறப்பாக்கிக் கொண்டிருந்தது. கலையழகும் ரசனைத் திறமும் அணிசெய்தன. ஆனால் அப்போது அங்கு அவளைத் தவிர வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.

அவன் கவனிப்பதைக் களிப்புடன் பின்பற்றிக் கவனித்து வந்த பத்மா முந்திக்கொண்டாள்." என்ன யோசிக்கிறீர்கள்? இங்கே வேறுயாரையுமே காண வில்லை என்றா? ஒருத்தருமில்லை தான். தாத்தா தான் உண்டு. எங்க அப்பா அம்மா இல்லை, அவர்கள் எல்லாரும் போயி ரொம்ப நாளாச்சு! தாத்தாதான் என்னை வளர்த்தது. அவர் கிராமத்துக்குப் போயிருக்கிறார், நிலங்களை கவனித்து வர வருவதற்கு ஒரு வாரமாவது ஆகும்" என்று விளக்கமாகக் கூறினாள்.

"வாங்க, இந்த அறையில் வந்து உட்காருங்கள் என அழைத்துச் சென்றாள். அந்த அறை அற்புதமாக இருந்தது. பத்மா படிப்பதற்கு உபயோகிக்கும் அறை. புத்தக அலமாரிகள், மேஜை நாற்காலிகள், புத்தகங்கள் - சுவர்களில் அழகான படங்கள்-மனதுக்கு இனிமைதரும் சூழ்நிலை.

ரகுராமன் ரசித்தபடி உட்கார்ந்தான்.

'இந்தாங்க. சாப்பிடுங்கள்' என்று பழங்கள் பலவற்றை அவன் முன்வைத்தாள். -

அவன் எதிர்பாராத உபசரிப்பு இவையெல்லாம். அதனால் அவனுக்கு தயக்கம். சங்கோஜம். 'இதெல்லாம் என்னத்துக்கு-வீணாக'என்று இழுத்தான்.

அவள் சிரித்தாள். "வீணா இது! சாப்பிடுவது வீணா என்ன! காபி இதோ இருக்கு" என்று வெள்ளி டம்ளரில் காப்பியூற்றி மேஜைமேல் அவன் முன் வைத்தாள்.

கவர்ச்சியான வளைகள் அணிந்த அழகுக்கரம் அன்பாகப் பணியாற்றிய போதே அவன் பார்வையை வசியம் செய்தது. அழகு ரசிகனான அவனுக்கு மகிழ்வளித்தது. அவன் கண்கள் அவள் கையிலிருந்த் அவள் முகத்துக்குத் தாவின. மகிழ்வு விளையாடிக் கொண்டிருந்த எழில் முகம். 'அழகான கண்கள் பத்மா நல்ல அழகி. ரொம்ப அழகு...' ரகுராமன் திடுக்கிட்டான். தன் மனம் தறுதலைக் தனம் செய்வதாகத் தோன்றியது. கண்டித்து, பார்வையைத் தாழ்த்தினான். எனினும் அடிக்கடி பார்வை ஓடிக்கொண்டிருந்தது எதிரே யிருந்த அழகுச் சோலை மீது சிலசமயம் அவள் பார்வை வெட்டிவிடும் அவன் நோக்கை. அவன் காபி யை ரசித்துச் சாப்பிட்டான்

'காப்பி எப்படி யிருக்கு?' என்று விசாரித்தாள் பத்மா.

'ரொம்ப ஜோர். அருமை' என்றான் திருப்தியோடு.

அவள் பெருமையாகச் சொன்னாள் 'நானே தயாரித்தேன்’ என்று.

"ரொம்ப நல்லாருக்கு என்னாலே உங்களுக்கு ரொம்பச் சிரமம்" என்றது அவன் வாய். அது தானே! இவ்வளவு அழகான கரங்கள் தயாரித்து, அழகியே எதிர் நின்று மணிக் கரத்தால் அன்புடன் அளிக்கும் பொழுது காப்பி கசக்கவா செய்யும். அமிர்தமாமே. அதன் சுவையெல்லாம் கெட்டது போ!' என்று மனம் சொன்னது. அதை ஒலிபரப்பும் துணிவு அவனுக்குக் கிடையாது.

"சிரமம் ஒண்ணுமில்லே. இதிலே என்ன சிரமம்?' என்று பெருமையும் மகிழ்வும் கலந்து பதிலளித்தாள் அவள்.

'தினசரி நீங்க தான்... ... 'இல்லையில்லே. வேலைக்காரி இருக்கிறாள். இன்று நீங்கள் விசேஷமாக வரப்போவதனால் ஸ்பெஷலாக இருக்கட்டுமேன்னு நான் தான்...'

“ரொம்ப சந்தோஷம். தேங்ஸ்... தேங்ஸ்’ என முனங்கினான் அவன்.

'நீங்கள் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறீர்களா?

"ஆமாம். எத்தனையோ வருஷங்களாக அப்படித்தான். மனிதன் குடும்பமாக வாழும் பிராணி என் கிறார்கள். அது சரி தான். ஆனால் முழுதும் சரியல்ல என்று தான் நான் சொல்வேன். மனிதப்பிராணி ளை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். பெண்கள் சமையலைச் சாப்பிட்டு வாழ்கிறவர்கள், தாங்களே சமைத்து உண்டு உயிருடன் வாழமுடிகிறவர்கள்; ஹோட்டலில் சாப்பிட்டுவாழும் ஜந்துக்கள்! என்னை மாதிரி எவ்வளவோ பேர் ஹோட்டல் பிராணிகளாகவே வாழ்கிறார்கள். என் வாழ்வு பூராவும் அப்படியே கழிந்து விடும்" என்றான்,

அவள் சிரித்தாள். "நீங்கள் பேசுவது எனக்கு அதிகம் பிடிக்கிறது. சுவையாக இருக்கிறது. அன்று நீங்கள் விஷயங்களை விளக்கியதும், திறமையாகப் பதிலளித்து விவாதம் புரிந்ததும் சிறப்பாக இருந்தன" என்று பாராட்டினாள்.

நானென்ன பெரும் பேச்சுப் புலிகள், கொம்பர்கள் அருகிலே நான் வெறும் பூனை போல் தான்' என்று சொல்லிச் சிரித்தான் அவன், அவளது கலகலச் சிரிப்பும் இணைந்தது.

இப்படி மனோகரமாக ஆரம்பித்த சம்பாஷணை ரம்மியமாக வளர்ந்து கொண்டேபோயிற்று. முதல் சந்திப்பே அவனையும் அவளையும் நெடுநாட்களாகப் பழகிப் பேசி மகிழும் நண்பர்கள் போலாக்கி விட்டது. அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய வைகளை யெல்லாம் அவள் அறியமுடிந்தது. தன்னைப் பற்றியும் விரிவாகத் தெரிவித்தாள்.

தான் தாய்தந்தையரற்று தனியாக வளர நேர்ந்ததால், தாத்தா அவளது விருப்பு வெறுப்புகளுக்கு, வினோதமான ஆசைகள், புதுமையான போக்குகள் எதற்குமே வேலி கட்டியது கிடையாது. தடை விதித்தது கிடையாது. 'பத்மா தங்கமான பெண். அவள் தவறுகள் எதுவுமேசெய்யமாட்டாள். என்ற நம்பிக்கை அவருக்கு உண்டுமாம். அவளும் அவர் நம்பிக்கை குலையும் படி எதுவும் செய்ததில்லை. வாழ்க்கை அமைப்பிலே அவள் கொண்டுள்ள கருத்துக்கள் அவருக்கு சிரிப்பையே கொடுத்து வந்தனவாம்." உனக்கு என்ன வயசு ஆகிவிட்டது. பத்மா! அனைத்தையும் கரைகண்டவள் மாதிரிப் பேசுகிறாய். அனுபவம் மிகுந்த கிழவி போலப் பேசுதியே. அதனாலென்ன. போகப்போக எல்லாம். சரியாயிடும். நீயும் எல்லாரையும் போல மாறிப்போவாய்" என்று சொல்லிச்சிரிப்பாராம். நானும் சிரித்துக்கொண்டே "அதைத் தான் பார்க்கலாமே" என்று சொல்வது வழக்கம் என்றாள்.

"நான் ஒரு மாதிரியான ஆசாமி. எனக்கு யாரையும், எதையுமே பிடிக்கவில்லை. இந்த உலகம், மனிதவர்க்கம் இதில் உள்ள சீரழிவுகள் சிதைவுகள் எல்லாவற்றையும் காணக்காண வெறுப்பும் வேதனையும் தான் வளர்கின்றன. என் உள்ளம் லட்சிய நினைவுகளிலும் ஆசைகளிலும் கனவுகளிலும் தான் வட்டமிட்டுச் சுழல்கின்றன. அதனாலே என்ன ஆச்சு? நானும் எனது போக்கும் விசித்திரமானதாக, வாழத் தெரியாத பண்பாக மற்றவர்களுக்குத் தோன்றுவதில் வியப்பே கிடையாது. இதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? ஆதிமுதலே என்னை நானே தனியனாக்கி, தனிமை விரும்பி, தனிமையிலேயே என்னை உருவாக்கிக் கொண்டு வந்திருப்பதுதான்......."

அவன் தன்னையே விமர்சித்து விளக்கியது அவளுக்கு அவனிடம் அதிகமான பிரியத்தையே விளைவித்தது,

"மற்றவர்களைப் போல உங்களைப் பற்றி நான் நினைக்க வில்லை" என்றாள் பத்மா. "அது தான் தெரிகிறதே, நீங்கள், என்னை அழைத்து மதிப்பும் கெளரவமும் அளிப்பதிலிருந்து, இது நான் எதிர்பாராதது. ஒருநாள் இப்படித் திடீரென்று நீங்கள் என்னை அதிதியாக்கி உபசரிப்பீர்கள் என்று நான் போன வாரம் வரை எண்ணியிருக்க முடியாது. நினைத்தாலும் நடக்கும் என நம்பக் கூடிய காரியமா என்ன எல்லாம் அதிசயங்களாகவே உள்ளன" என்று சிரித்தான்.

"இதிலென்ன அதிசயமிருக்கு! ஒரேமாதிரி எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள் கொண்ட இருவர் ஒருவர் நட்பை ஒருவர் கோருவது அதிசயமா என்ன?"என்று கேட்டாள்

'இல்லை தான்'

" நீங்கள் சமயம் கிடைத்த போதெல்லாம் இங்கு வர வேண்டும். நமக்கும் நமது இலட்சியங்களுக்கும் நல்லதாக அமையும் நமது நட்பு. இல்லையா? "என்று ஆர்வமாகக் கேட்டாள் பத்மா.

ஆமாம்'

"அப்படியானால் நீங்கள் அவசியம் வருவீர்களல்லவா? கட்டாயம் வாருங்கள்’ என்று, அவன் வரவேண்டும் என்ற ஆசையை சொல்லிலும் பார்வையிலும் குழைத்து, உபசரித்தாள். அவனும் அவளை ஏமாற்ற விரும்பவில்லை.

அநேகமாக அடுத்த வாரம் தாத்தா வந்து விடுவார். உங்களைப் பார்க்கவும் உங்களுடன் பழகவும் அவர் ரொம்ப சந்தோஷப் படுவார் என்று உற்சாகமாக மொழிந்தாள் அவள்.

'அவசியம் வருகிறேன்' என்றான் அவன்.

அதற்காக நீங்கள் அடுத்த வாரம் தான் வரவேணும் என்றில்லை'

பத்மா சிரித்தாள். ரகுராமனும் சிரித்துக் கொண்டே விடைபெற்றுப் பிரிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=முத்தம்/அத்தியாயம்_6&oldid=1663353" இலிருந்து மீள்விக்கப்பட்டது