முல்லைக்காடு/கண்டதும் காதல்

விக்கிமூலம் இலிருந்து

காதற் பகுதி

கண்டதும் காதல்!

(வண்ணம்)

ஸ்ரீமதிஇவ ளார்? உலகிடை மானிடமதி லேதிவள்? ஒரு
சேலிணையினை நேரிருவிழி, கோகனகவி நோதஅதரம்,
மாமதிநிகர் ஓரிளமுகம், வானுறுமழை தானிருள் குழல்,
வாழ்மதுகரம் ஊதிடுமலர் சூடியமுடி யோடிவளிரு
மத்தக மொத்த தனத்தொடு சித்தமி
னித்திட நிற்பது மிக்கவும் அற்புதம்!
மலர்வாய் திறந்தொரு வார்த்தை சொல்லாளோ?

தோய்மதுமலர் மாலையைநிகர் ஆகிய ஒருதேகவனிதை
தீவிரநடம் ஆடியமயி லேஎனுமொரு சாயலினோடு
மாசறுகலை மானெனமருள் வாளவள்நடை யோ அனநடை
வாழுலகினி லேஇவளரு ளாலதிசுக மேபெருகிடும்!
வைத்திடு புத்தமு தத்தையெ டுக்கம
றுத்திடல் மெத்தவ ருத்தமெ னக்குறும்!
மதுவோடையை மொண்டுண வாக்கு நல்காளோ?


மாமயலெனும் ஓர் அனலிடையே எனதுளம் நோயடைவதை
மாதிவளறி யான் இதைஎவர் போயவளிடமே புகலுவர்?
ஆம். அவள்தரு வாயிதழமு தேஇதுததி மாஅவுஷதம்!
ஆவியுனவ ளே உடைமைக ளாதியுமவ ளேயுலகினில்!

அற்புத சித்திர சிற்ப கலைக்கொரி
லக்கியம் வைத்தசி லப்புமி குத்திடும்
அழகாகிய வஞ்சியென் வீட்டை நண்ணாளோ?

காமுறுதமிழ் நாடெனுமொரு தாயுறுபுக ழோ!இனிதென
நாவலர்களு மேதுதிநிதம் ஓதிடுதமிழோ நவநிதி
யோ!முழுநில வோ!கதிரவ னோ!கவிதையி லேவருசுவை
யோ!இதுகன வோபுதுயுக மோ! வடிவழ கேவடிரசம்

மக்கள் உயிர்க்குறு நற்பதம் இப்படி
வைத்த தெனச்சொல விட்டசு கக்கடல்!
மனமே இனும்பொறு வீழ்ச்சி கொள்ளாதே!