உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைக்காடு/குவட்டாவில் கூட்டக்கொலை

விக்கிமூலம் இலிருந்து

குவட்டாவில் கூட்டக்கொலை

எந்த நிமிஷத்திலும்—சாதல்
    ஏற்படக் காரணங்கள்
ஐந்து லக்ஷம் உளவாம்—இதில்
    ஐயமுற வேண்டாம்.
இந்த உலகத்திலே—“நீ
    இருத்தல்” என்பதெலாம்
வந்த விபத்துனையே—கொஞ்சம்
    மறந்த காரணத்தால்!

வானமும் மண்ணகமும்—உண்டு;
    மத்தியில் நீ யிருந்தாய்.
வானிடைக் கோடிவகை—“நிலை
    மாற்றம்” நிகழ்வதுண்டாம்.
ஆனஇம் மண்ணகத்தே—பதி
    னாயிரம் உற்பாதம்!
பானை வெடிக்கையிலே—அதிற்
    பருக்கை தப்புவதோ!

நாளைய காலையிலே— இந்த
    ஞாலம் உடைவதெனில்,
வேளை அறிந்ததனை—நீ
    விலக்கல் சாத்தியமோ?
ஆளழிக்கும் விபத்தோ—முன்
    னறிக்கை செய்வதில்லை.
தூளிபடும் புவிதான்—இயற்கை
    சுண்டுவிரல் அசைத்தால்!

மானிடர் மானிடரைக்—கொல்லும்
      வம்பினை மானிடர்கள்
ஆனபடி முயன்றால்—பகை
     அத்தனையும் விலகும்.
மானிடன் கொன்றிடுவான்—எனில்
     மந்த மனிதனைத்தான்!
மானிடன் மானிடனின்—உயிர்
     மாய்ப்பதும் மிக்கருமை!

நல்ல குவட்டாவில்—உன்
     நல்ல உறவினர்கள்
இல்லம் தெருக்களுடன்—அவர்
     இல்லை எனக்கேட்டோம்.
சொல்லத் துடிக்குதடா—உடல்!
     தூய வடநாட்டார்
அல்லற் பெருஞ்சாவின்—வயிற்றில்
     அகப்பட் டறைப் பட்டார்.

ஆகும் ஐம்பத்தாறா—யிரம்
     அன்பு மனிதர்களைப்
பூகம்ப உற்பா தம்—மண்ணிற்
     போட்டு வதைத்துவாம்!
சோகம் புலம்புமடா—இந்தத்
     தொல்லைச் செயல்கண்டால்!
ஊகத்தில் இக்கோரம்—தோன்றி
     உள்ளம் அறுக்குதடா!
மாடம் இடிந்தனவாம்!—அவை
     மண்ணிற் புதைந்தனவாம்!

ஆடும் தரையோடும்—மெத்தை
     அடுக் கொடிந்தனவாம்!
கூடத்து மக்களெலாம்—எழிற்
     கொஞ்சிப் பழம்போலே,
வாட நசுங்கின ராம்—ரத்த
     வாடை எடுத்ததுவாம்!

பெற்ற குழந்தைகளைத்—தினம்
     பேணிவரும் தாய்மார்,
சிற்றெறும்புக் கடிக்கே—அழும்
     திவ்ய அன்புடையார்!
வெற்றிக் குவட்டாவை—இயற்கை
     வேரறுக்கும் சமயம்
பெற்ற பிள்ளை துடிப்பும்—பிள்ளை
     பேணும் அன்னை துடிப்பும்,

எண்ணச் சகிக்கவில்லை!—நகர்
     எங்கும் சுடுகாடாம்!
கண்டவர் செத்திருப்பார்—இந்தக்
     கஷ்ட நிஷ்டூரமெலாம்!
அண்டை அயலிருப்பார்—அவர்
     அன்பினிற் செத்திருப்பார்!
எண்டிசை கேட்டிருக்கும்—இதை!
     ஏக்கம் அடைந்திருக்கும்

இன்றிரவே நமது—நிலைமை
     ஏதுகொல் என்றெண்ணும்
தின்றுபடுக்கு முனம்—உயிர்
     தீரும்என நடுங்கும்!

நன்று புவிவாழ்வு—மிக
     நன்று மிகநன்று!
மென்று விழுங்கும் “புலிப்—பெருவாய்”
     மேதினிஎன்று பொருள்.

தம்பிஉனக் குரைப்பேன்—நீ
     சஞ்சலம் கொள்ளுகின்றாய்!
வெம்புகின்றாய் உளந்தான்—இந்த
     வேதனைச் செய்தியினால்!
அம்பு தொடுக்காமல்—நா
     லாட்படை ஏவாமல்,
கும்பலிற் சாகும்வகை—இயற்கை
     கோடிவகை புரியும்!

பூகம்ப லோகத்திலே—தீயும்
     புனலும் வாழ்புவியில்,
வேகும் எரிமலைகள்—நல்ல
     வேட்டையிடும் புவியில்.
நோகும்படி தோன்றிக்—கொல்லும்
     நோய்கள் ஒருகோடி
ஆகுமிப் பூமியிலே—நீ
     அன்புறு வாழ்க்கையுற

மன மிருந்தாலோ—ஒரு
     மருந்துனக் களிப்பேன்.
தினமிரு வேளை—அதைத்
     தின்றுவர வேண்டும்.
எனை வெறுக்காதே—மருந்
     தின்னதெனச் சொல்வேன்.

தினையள வேனும்—அதைச்
      சீயென் றொதுக்காதே!
சாவது நிச்சயமாம்—நான்
      சாவது நிச்சயமாம்
சாவது நிச்சயமாம்—என்ற
      சத்திய வார்த்தையினைக்
கூவுதம்பி கூவு!—இந்தக்
      குவலயம் கேட்கக்
கூவுக லக்ஷமுறை!—உன்
      கொச்சை மனந்தெளியும்!

அந்தத் தெளிவினிலே—உனக்
      காண்மை உதித்துவிடும்!
சொந்த உலகினிலே—என்றும்
      தொல்லை விளைத்துவரும்
எந்த மனிதனையும்—நீ
      ஏறிக் கலக்கிடுவாய்!
சந்ததம் இன்பத்திலே—புவி
      சாரும் வகைபுரிவாய்!

மக்களுக் கிங்குழைப்பாய்—இங்கு
      வாழ்ந்திடும் நாட்களெலாம்,
தக்கன செய்வதற்கே—மனம்
      சலித்தல் விட்டொழிப்பாய்!
அக்கினி மத்தியிலும்—நீ
      அஞ்சுதல் நீக்கிடுவாய்!
புக்க மனிதரெலாம்—ஒற்றைப்
      போகமுறை உழைப்பாய்!