உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைக்காடு/சோலை

விக்கிமூலம் இலிருந்து

சோலை

விரைமலர்த் தேன் வண் டெல்லாம்  
வீணையை மிழற்ற, ஆங்கே
மரங்கொத்திப் புட்கள் தாளம்
வகைப்படுத் திடத், தடாகக்
கரையினில் அலைக்கரங்கள்
கவின் மிருதங்கம் ஆர்ப்பக்,
கருங்குயில் பாடத் தோகைக்
கணிகை நின்றாடும் சோலை!

வானவில் ஏந்தல் கண்டு
மாந்தளிர் மெய் சிவக்கத்,
தேனுந்தும் மலர்க் குலங்கள்
செம்மக ரந்தம் தூவ,
ஆநந்தத் தென்றல் மெல்ல
ஆலவட்டம் பிடிக்க
வானவில் மறைய, மாவை
மல்லிகை சிரிக்கும் சோலை!

நெல்லியும் கமுகும் ஆலும்
நெடுங்கிளைக் கரம் வளைத்துச்
சொல்லுக இரண்டி லொன்று
தொட்டிழுத்திடுவோம் என்ன,

நல்ல மாதுளம் நடுங்கும்;
நறுவிளா நடுங்கும்; கொய்யா
வல்லி என் மார்போ கொய்யாக்
கனியென வழுத்தும் சோலை!

மாணிக்க அலகிற் கொஞ்சும்
மரகதக் கிள்ளைக் கூட்டம்
ஆணிப் பொன் னூசலாட,
அணிக்கிளை அசைக்கும் தென்றல்!
தூணிட்ட பச்சைப் பந்தல்
சூழ்கிளை மஞ்சத்தின்மேல்
ஆணொடு பெண்சிட் டின்பம்
மொண்டு மொண் டருந்தும் சோலை!
பறிபடாப் பசும்புற் பூமி

பட்டுத் தைத்திட்ட பெட்டி
திறந்த அப் பெட்டி யெங்கும்
சேர்பனி வயிரக் குப்பை!
அறைமணிக் குப்பை யெல்லாம்
அருக்கனின் ஒளிப் பெருக்கம்!
பறிபடாப் புற்கள் கண்ணைப்
பறித்திடச் சிறக்கும் சோலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=முல்லைக்காடு/சோலை&oldid=1508080" இலிருந்து மீள்விக்கப்பட்டது