உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைக்காடு/நிலாப்பாட்டு

விக்கிமூலம் இலிருந்து

நிலாப் பாட்டு

நிலவே நிலவே, எங்கெங்குப் போனாய்?
உலக முற்றும் உலவப் போனேன்.

உலாவல் எதற்கு விலாசத் தீபமே?
காடும், மலையும், மனிதரும் காண.

காண்ப தெதற்கு களிக்கும் பூவே?
சூரிய வெப்பம் நீங்கிக் குளிர.

குளிர்ச்சி எதற்கு வெளிச்சப் பொருளே?
செய்யுந் தொழிலிற் சித்தங் களிக்க.

சித்தங் களிக்கச் செய்வ தெதற்கு?
நித்தமும் நாட்டை நிலையில் உயர்த்த.

நாட்டை உயர்த்தும் நாட்டம் எதற்கு?
வீட்டைச் சுரண்டும் அடிமை விலக்க.

அடிமை விலக்கும் அதுதான் எதற்கு?
கொடுமை தவிர்த்துக் குலத்தைக் காக்க.

குலத்தைக் காக்கும் குறிதான் எதற்கு?
நிலத்துச் சண்டையைச் சாந்தியில் நிறுத்த.

சாந்தி ஆக்கும் அதுதான் எதற்கோ?
ஏய்ந்திடும் உயிரெலாம் இன்பமாய் இருக்க.

பதந்தனில் இன்ப வாழ்வுதான் எதற்கோ?
சுதந்தர முடியின் சுகநிலை காணவே!