முல்லைக்காடு/வறுமையிற் செம்மை

விக்கிமூலம் இலிருந்து

வறுமையிற் செம்மை (தாய்-மகள் சம்பாஷணை)

சகானா ஆதி

மகள் சொல்லுகிறாள்:
அம்மா என் காதுக்கொரு தோடு-நீ
அவசியம் வாங்கி வந்து போடு!
சும்மா இருக்க முடி யாது-நான்
சொல்லி விட்டேன் உனக்கிப்  போது! (அம்)

தாய் சொல்லுகிறாள்:
காதுக்குக் கம்மல் அழ கன்று-நான்
கழறுவதைக் கவனி நன்று
நீதர் மொழியை வெகு பணிவாய் நிதம்
நீ கேட்டு வந்து காதில் அணிவாய்! (கா)

மகள் மேலும் சொல்லுகிறாள்:
கைக் கிரண்டு வளையல் வீதம்-நீ
கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!
பக்கியென் றென்னை யெல் லோரும்-என்
பாடசாலையிற் சொல்ல நேரும்! (கைக்)
தாய் சொல்லும் சமாதானம்:
வாரா விருந்து வந்த களையில்—அவர்
மகிழ உபசரித்தல் வளையல்!
ஆராவமுதே மதி துலங்கு—பெண்ணே
அவர் சொல்வ துன்கைகட்கு விலங்கு! (வாரா)

பின்னும் மகள்:
ஆபர ணங்கள் இல்லை யானால்—என்னை
ஆர் மதிப்பார் தெருவில் போனால்?
கோபமோ அம்மா இதைச் சொன்னால்—என்
குறை தவிர்க்க முடியும் உன்னால் (ஆப)

அதற்குத் தாய்:
கற்பது பெண்க ளுக்கா பரணம்—கொம்புக்
கல்வைத்த, நகை தீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடு—தன்
கண்ணில் ஒற்றிக்கொள்ளுமன் போடு! (கற்)