மெய்யறம் (1917)/மெய்யியல்
மெய்யியல்.
௧௨௧-ம் அதி.–மெய் யுண்மை.
உயர்கரி சுருதி யுத்தி யநுபவம்.
௧௨0௧
தூயர் பகருரை சுருதி யென்ப.
௧௨0௨
பலமதத் தூயரும் பகர்ந்துள ருண்மை.
௧௨0௩
ஏது சிலகொண் டோதுவ துத்தி.
௧௨0௪
ஆத னிலவ லழித லிவணுள;
௧௨0௫
அவைசெயக் கர்த்தா வவசிய மென்க.
௧௨0௬
அறிந்துள் ளுணர்தலை யநுபவ மென்ப.
௧௨0௭
இடருறும் போழ்துமெய் யெண்ணுகின் றனர்பலர்;
௧௨0௮
பாவஞ் செயவுளம் பதைப்ப தநுபவம்;
௧௨0௯
அரசரு மாளப் படுவ தறிகிறோம்.
௧௨௧0
௧௨௨-ம் அதி.–மெய்யின் அடக்கநிலை.
அடக்க நிலைமெய் யடங்கிய வறிவு.
௧௨௧௧
அண்டப் பொருளெலா மணுக்களின் சேர்க்கை.
௧௨௧௨
வலியிலா தணுக்கண் மருவிநிற் கும்மோ?
௧௨௧௩
அண்டஞ் சுற்றலு மதுகொண் டன்றோ?
௧௨௧௪
ஆதலா லெங்கணு மஃதமைந் துளதே.
௧௨௧௫
அகில நிகழுமா றாள்வ தறிவு.
௧௨௧௬
அன்றே லொழுங்கா வவைகண நிகழுமோ?
௧௨௧௭
ஆதலா லெங்கணு மறிவமைந் துளதே.
௧௨௧௮
நிறைபொரு ளிரண்டு நிலவா வென்ப.
௧௨௧௯
ஆதலால் வலியு மறிவு மொரேபொருள்.
௧௨௨0
௧௨௩-ம் அதி.–மெய்யின் விளக்கநிலை.
விளக்க நிலைமெய் விளங்கு மறிவு.
௧௨௨௧
அடக்கமெய் விறகு ளடங்கிய தீப்போன்ம்.
௧௨௨௨
விளக்கமெய் கடைய விறகெழுந் தீப்போன்ம்.
௧௨௨௩
ஐயறி வுயிர்களின் மெய்யொளி யடங்கும்.
௧௨௨௪
ஆறறி வினரு ளவ்வொளி விளங்கும்.
௧௨௨௫
அவர்மறஞ் செயச்செய வதனொளி குன்றும்.
௧௨௨௬
அவரறஞ் செயச்செய வதனொளி பெருகும்.
௧௨௨௭
அவரொழுக் கறிந்தபோழ் தஃதக விளக்காம்.
௧௨௨௮
அவரொழுக் கடைந்தபோழ் ததுமலை விளக்காம்.
௧௨௨௯
ஒழுக்கில்வாய் ஞானமஃ தொழிக்குங் காற்றாம்.
௧௨௩0
௧௨௪-ம் அதி.–மெய் யுணர்தல்.
ஒழுக்க முடையா ருணர்வர் மெய்யை.
௧௨௩௧
அறநூ லெண்ணில வறைந்துள வொழுக்கம்.
௧௨௩௨
அவற்றைவிட் டயலுற றவற்றைப் புரிதலாம்.
௧௨௩௩
அடிவிட் டேணியி னந்தமே றுவரோ?
௧௨௩௪
அறநூல் கற்றுநின் றான்மநூ லாய்க.
௧௨௩௫
ஓருட லளவி லுறுமறி வான்மா.
௧௨௩௬
அணையுள குளநீர்க் கான்மா விணையாம்.
௧௨௩௭
ஆன்மா மெய்யொன் றாணவம் வேற்றுமை.
௧௨௩௮
அறஞ்சே ரொழுக்கா லாணவங் களைக.
௧௨௩௯
உண்மை மெய்யான்மா வுலகுமெய்த் தோற்றம்.
௧௨௪0
௧௨௫-ம் அதி.–மெய்ந்நிலை யடைதல்.
உயிரியல் விடமெய் யியலுறு முடனே.
௧௨௪௧
விடலே வீடது மெய்யறஞ் செயினாம்.
௧௨௪௨
மெய்யற மாந்தர் மிகைவிட வுதவல்;
௧௨௪௩
ஒழுக்க வுயிர்மெய் யுணர்ந்திட வுதவல்;
௧௨௪௪
உலகி லுயிர்க ணிலவுற வுதவல்.
௧௨௪௫
இவ்வற மரசர்க் கியற்றுத லெளிது.
௧௨௪௬
அறிவ ரரச ராகுத லரிதோ?
௧௨௪௭
அரசரை யாள்வ தமைச்சறி வன்றோ?
௧௨௪௮
அறிந்தில் வாழ்ந்துல காண்டறஞ் செய்க.
௧௨௪௯
அருள்கொடு மெய்யற மாற்றிமெய் யடைக.
௧௨௫0
மெய்யியல் முற்றிற்று.
மெய்யறம் முற்றுப் பெற்றது.