மேனகா 1/013-022

விக்கிமூலம் இலிருந்து

9-வது அதிகாரம்


காணாமற் போனாயோ கண்மணியே?


மே
னகா காணாமற் போனதைப் பற்றித் தமக்குக் கிடைத்த தந்தியைப் படித்த சாம்பசிவமும், அவருடைய தாயும், மனைவியும் பெருத்த திகைப்பையும், அச்சத்தையும், கவலையும் கொண்டனர். எதிர்பாராத வகையில் கோடை காலத்தில் உண்டாகும் பேரிடியைப்போலத் தோன்றிய அந்த விபத்தை அவர்கள் எதிர்பார்த்தவரல்லர். ஒரு வருஷகாலம் துயர்கடலில் ஆழ்ந்து வருந்திக் கிடந்த தமக்கும், தமது அருமைப்பெண் மேனகாவிற்கும் அப்போதே நல்ல காலம் திரும்பியதாக மதித்துக் கவலைச்சுமையை அகற்றி, ‘உஸ்’ஸென்று உட்கார்ந்த தங்களை விதி என்னும் கொடிய நாகம் இன்னமும் துரத்தியதாய் நினைத்துத் தளர்வடைந்தனர். வழக்கத்திற்கு மாறாகத் தமது மருமகப் பிள்ளை தம்மிடம் அன்பையும் வணக்கத்தையும் காட்டியதை நினைத்து சாம்பசிவம், இனி மேனகா துன்புறாமல் சுகமாய் வாழ்க்கை செய்வாள் என்று நினைத்துப் பெரு மகிழ்வு கொண்டிருந்தார். அதற்கு முன்தாம் தமது மருகப்பிள்ளையைப் பற்றிக் கொண்டிருந்த அருவருப்பை மாற்றி அவன் மீது முன்னிலும் பன் மடங்கு அதிகரித்த வாஞ்சையை வைத்தார். அந்த முறை மருகப்பிள்ளை தம்மிடம் காட்டிய நன்னடத்தையைப் பற்றித் தாய், மனைவி முதலியோரிடம் பன் முறை கூறி அவர்களையும் மகிழ்வித்தார். இரு நூறு ரூபாயில் மருமகப் பிள்ளைக்குத் தங்கச்சங்கிலி கடியாரம் முதலியவற்றை வாங்கி வைத்திருந்தார். மனிதன் எத்தகைய இடைஞ்சலுமின்றி தனது இச்சைப்படி தனது வாழ்க்கையையும் தனது நிலைமையையும் செவ்வைப் படுத்திக்கொள்ளவும் நீங்காத சுகம் அநுபவிக்கவும் வல்லமை உடையவனாயிருப்பானாயின் அவனுக்கு உண்டாகும் செருக்கிற்கும் இறுமாப்பிற்கும் அளவிருக்குமோ! பிறகு அவன் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்பதை நினைப்பானா! தன்னையே கடவுளா யன்றோ மதிப்பான். எவனும் பிறனை மதியான். இரண்டு மனிதருக்கு இடையிலுள்ள நட்பு, சார்பு, அன்பு, உதவி, பணிவு முதலியவை சிறிதும் இல்லாமல் போய்விடும்; உலகமே கலக்கத்திற்கு இருப்பிடமாய் நாசமடையுமன்றோ? அதனால்தான் கடவுள் விதி யென்பதை நியமித்து நம்முடைய நினைவுகளில் தலையிடச் செய்து நமது சிறுமையை நமக்கு ஓயாமல் அறிவுறுத்தி வருகிறார். நமது வாழ்க்கையாகிய காட்டை நாம் எவ்வளவு தான் வெட்டி அழகுப் படுத்தினாலும், அதில் விதியென்னும் புலியும், சிங்கமும், பாம்பும், தேளும், முட்களும், கற்களும் மேன்மேலும் காணப்படுகின்றன. விதிக்குக் கலெக்டரானாலும், கவர்னரானாலும் ஒரு பொருட்டோ? ஆசையோடு மோக்க நினைத்த ரோஜாப்பூவிதழில் கண்குத்தி நாகம் மறைந்திருந்ததைக் கண்டவரைப்போல நமது சாம்பசிவம் பெருந்திகைப்பும் மனக் குழப்பமும் அடைந்து என்ன செய்வதென்பதை அறியமாட்டாதவராய்த் தமது சாய்மான நாற்காலியையே சரணாகதியாக அடைந்தார். அன்று காலையில் பங்களாவிற்கு வரும்படி துரை தமக்கு உத்தரவு செய்திருந்ததையும் மறந்து பைத்தியம் கொண்டவரைப் போல உட்கார்ந்து விட்டார்.

கனகம்மாளுக்கு மாத்திரம் மேனகாவின் நாத்திமார்களின் மீதே சந்தேகம் உதித்தது. அவர்கள் செய்த துன்பங்களைப் பொறாமல் கிணற்றில் குளத்தில் வீழ்ந்து மேனகா உயிர் துறந்திருப்பாளோவென்று ஐயமுற்றாள். அருமைக் கண்மணி யான மேனகா வைத் தாம் இனிக் காண்போமோ காண மாட்டோமோ வென்று பெரிதும் சந்தேகித்தாள். அவளுடைய தேகம் பதைபதைத்து ஓரிடத்தில் நிலைத்து நில்லாமல் துடித்தது. துயரமும் ஆத்திரமும் கோபமும் பொங்கி யெழுந்தன. அவளுடைய மெய்யும் மனமும் கட்டுக் கடங்கா நிலைமையை அடைந்தன. எத்தகைய அலுவலும் காரணமுமின்றி அங்குமிங்கும் திண்டாடிக்கொண்டிருந்தாள். மேனகாவைத் தேடுகின்றாளோ அன்றி சென்னைக்குப் பறந்துபோக இரண்டு இறகுகளைத் தேடுகின்றாளோ வென்னத் தோன்றும்படி அறையறையாய்ப் புகுந்து புறப்பட்டாள். மேனகாவின் நாத்திமார் இருவரும் தனது கண்முன்னர் நிற்பதாகப் பாவித்து வெற்று வெளியை நோக்கிப் பல்லைக் கடித்து வைது கர்ச்சித்தாள்; காணப்படுவோரின் மீது சீறி விழுந்தாள். தனக்குத்தானே புலம்பினாள், அழுதாள், கதறினாள், பதறினாள், அயர்ந்தாள், சோர்ந்தாள், தடுமாறினாள், ஏங்கினாள், தள்ளாடினாள், வாய்விட்டு வைதாள், வயிற்றிற் புடைத்தாள், தெய்வங்களை யெல்லாம் தொழுதாள், “ என் மேனகா எங்கு போனாளோ ? என் செல்வம் தவிக்கிறதோ ? என் தங்கம் பசியால் துடிக்கிறதோ! என் மணிப்புறா களைத்துக் கிடக்கிறதோ? என் மாணிக்கக்கட்டி எங்கு மறைந்து போய்விட்டதோ? என் பஞ்சவருணக் கிளி எந்தக் குளத்தில் மிதக்கிறதோ? ஐயோ! என் வயிறு பற்றி எரிகிறதே! ஈசுவரா! உன் இடிகளை அனுப்பி அந்தப் பாழாய்ப்போன முண்டைகளின் மண்டையை உடைக்க மாட்டாயா? தெய்வமே! உன் சக்கராயுதத்தை அனுப்பி அந்தக் கொடிய வஞ்சகரின் நெஞ்சைப் பிளக்கமாட்டாயா?” என்று சரமாரியாக எதுகை மோனைகளோடு பிதற்றிச் சொற்களை வாரி வாரி வீசினாள். அரற்றிப் பொருமினாள். அவளுடைய வதனம் கொல்லன் உலையைப்போலக் காணப்பட்டது. பழுக்கக் காய்ந்த இரும்பிலிருந்து தீத்திவலைகள் தெறித்தலைப்போலக் கோவைப் பழமாய்ச் சிவந்த கண்களினின்று தீப்பொறி பறந்தது. அவள் அடிக்கடி விடுத்த நெடுமூச்சு இருட்டைத் துருத்திக்கொண்டு காற்றை விடுதலைப்போலிருந்தது. வாயின் சொற்கள் சம்மட்டி அடிகளைப் போல, “மூச்சுவிடுமுன்னே முன்னூறு, நானூறு ஆச்சென்றால் ஐந்நூறு மாகாதா” என்றபடி செத்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்துகொண்டிருந்தன. சொற்களின் கருத்திற் கிணங்க கைகளையும் உடம்பையும் அசைத்து அபிநயங் காட்டி எண்ணெயில் தை தை யென்று குதிக்கும் அப்பத்தைப்போல நிலைகொள்ளாமல் ஆடித் தவித்தாள். வாயில்லா ஜெந்துக்களான பாத்திரங்கள் உணவுப்பொருட்கள் முதலியவற்றிற்குமே அந்த நாள் விசனகரமான நாளாய் முடிந்தது. அத்தகைய நிலையில் வீட்டின் காரியங்களைத் தான் செய்வதாக அவளுக்கு நினைவு; இங்கிருந்ததை அங்கு வைத்தல்; அங்கிருந்ததை இங்கு வைத்தல், அவ்வளவு காரியம் வீடு முற்றிலும் அலங்கோலம். மேனகா தன் கணவன் வீட்டைவிட்டுப் பிரயாணம் போனமையால் அன்று சாம்பசிவத்தின் வீட்டிலிருந்த பொருட்களுக்கெல்லாம் தத்தம் இருப்பிடத்தை விட்டுப் பிரயாணம். அவளுடைய அபி நயங்களுக் கிணங்கப் பாத்திரங்கள் யாவும் பக்க வாத்தி யங்களாய் முழங்கின. அம்மிக்குழவி “திமி திமி தை தா” வென்று நாட்டியமாடியது. செம்புகள் உருண்டு போய்த் தவலைகளிடம் முறையிட்டன. தவலைகள் தக்காளிப் பழமாய் நசுங்கிப் போய்ச்சுவரில் முட்டி அதைத் தட்டி யெழுப்பின; சுவர்களோ தாம் நியாயாதிபதியான டிப்டி கலெக்டர் வீட்டிலிருந்தும், அம்மாளின் செய்கைக்கு அப்பீலில்லையே என்று வருந்தி வாய்விட்டாற்றின. அடுப்புகள் இடிந்தன. துடுப்புகள் ஒடிந்தன, அறைகள், ஜன்னல்கள் முதலியவை அவள் நடந்த அதிர்ச்சியால் நடுக்கு ஜுரங் கொண்டு நடுங்கின. அரிசியும் பருப்பும் சிதறி யோடின. “பாழும் வயிற்றிற்கு இன்றைக்குக்கூடப் பிண்டமா?” என்று நினைத்த அம்மாள் அடுப்பில் தண்ணீரை வார்த்து அதற்கு நீராட்டம் செய்து வைத்தாள். மறைந்துகொள்ள இடமில்லாமல் ஓட்டின் மீது அஞ்சி நின்ற பூனைக்கூட்டி, அம்மாள் அடுப்பிற்கு அன்று விடுமுறை நாள் கொடுத்ததையறிந்து, அவளுக்குத் தெரியாமல் அதற்குள் மறைந்து அம்மாள் வருகிறாளோ வென்பதை அறிய இரட்டைத் தீவெட்டி போட்டதைப் போல கண்கள் மின்ன உற்றுப் பார்த்திருந்தது, அப்பூனைக்குட்டியைக் காட்டிலும் அதிகரித்த அச்சத்தையும், பெண்ணைப்பற்றிய விசனத்தையும் கொண்ட டிப்டி கலெக்டரின் மனையாட்டி தங்கம்மாள், மேனகா காணாமற் போனது பொய், தான் காணாமற் போனது நிஜமென்று செய்ய நினைத்தவளைப் போலக் கட்டிலிற்கடியில் மறைந்து துப்பட்டியால் தலைமுதல் கால்வரையில் மூடிப் படுத்து டிப்டி கலெக்டர் தன்னையும் தேடும்படி செய்தாள். அந்தப் பெரும்புயலையும் மழையையுங் கண்டு அதிலிருந்து தப்ப நினைத்த ரெங்கராஜு தனக்கு வயிறு வலிக்கிறதென்று எதிரிலுள்ள சுருட்டுக்கட்டை இராமச்சந்திராவிடம் சொல்லி விட்டுக் கம்பி நீட்டினான்.

“என்ன ஆச்சரியம் இது! நான் பட்டணத்திற்குப் போனேனாம்! அவர்களிடம் சொல்லாமல் பெண்ணை அழைத்து வந்துவிட்டேனாம்! ஜெகஜாலப் புரட்டா யிருக்கிறதே! இந்தத் தந்தியை வேறு யாராயினும் அனுப்பி யிருப்பார்களா? இங்குள்ள நம்முடைய விரோதிகளின் தூண்டுதலினால் நடந்திருக்குமா? பெருத்த அதிசயமாய் இருக்கிறதே!” என்று சாம்பசிவம் தனக்கு எதிரிலிருந்த கம்பத்தோடு பேசினார். அதைக் கேட்ட தாய் “போடா! பைத்தியக்காரா! நம்முடைய தந்தி போய்ச் சேர்ந்து இரண்டு நாழிகையாயிருக்குமே. பொய்த் தந்தியா யிருந்தால் உடனே மறு தந்தி அனுப்பி யிருக்கமாட்டானா? இம்மாதிரி பொய்த் தந்தி அனுப்புவதால் யாருக்கு லாபம்? ஒன்றுமில்லை. நிஜமாய்த்தான் இருக்கும். அந்த முண்டைகள் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்களே; அந்தப் பைத்தியம் வீட்டை விட்டுப் போயிருக்கையில் பெண்ணை வெட்டிக் கொல்லை யிற் புதைத்துவிட்டு, அவனிடம் இப்படிப் பொய் சொல்லி யிருப்பார்களா!” என்று ஆத்திரமும் துடிதுடிப்புங் கொண்டு கூறினாள்.

சாம்ப:- அவர்களுக்கு நம்முடைய குழந்தையிடத்தில் அவ்வளவு பகைக்கென்ன காரணமிருக்கிறது? அப்படி வெறுப்பவர்கள் இங்கிருந்தவளை அழைத்துப்போகவேண்டிய தன் காரணமென்ன? - என்றார்.

கனகம்:- உன்னைப்போல படித்த முட்டாள் ஒருவனும் இருக்க மாட்டான். பணத்தாசைஎதைத்தான் செய்யாது? அவள் உடம்பிலிருந்த நகைகள் மூவாயிரம் பெறுமே, அவைகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? அதற்கா கத்தான் இருக்கலாம். என்னவோ எல்லாம் நாளைக்குக் காலையில் விளங்கப் போகிறது. இன்றைய பகலும் இரவும் போகவேண்டுமே! பாழாய்ப்போன ரயில் சாயுங்காலத் திலல்லவா பட்டணத்திற்குப் புறப்படுகிறது. நீ அங்கே போனவுடன் அவசரத் தந்தி அனுப்ப வேண்டும். பேசாம லிருந்து விடாதே - என்றாள்.

சாம்ப:- கலெக்டர் இன்று காலையில் ஒருகாரியமாக என்னை வரச்சொல்லி யிருந்தார். நான் வரவில்லையென்று அவருக்குக் கோபமுண்டாயிருக்கலாம். ரஜாக் கொடுக் கிறாரோ இல்லையோ தெரியவில்லை, கொடுக்காவிட்டால் என்ன செய்கிறது?

கனகம்:- இந்த அவசரத்திற்கு இல்லாமல், வேறு எதற்காகத்தான் ரஜா இருக்கிறது? சே! பெரிய துரை நல்லவராயிற்றே! அவசரமென்று நீ எழுதி இருக்கும்போது, நீ வரவில்லை யென்று ஏன் கோபிக்கிறான்? அவன் அவ்வளவு அற்பத்தன்மை உடையவனல்லன். உன்னைப்போலவும் உன்னுடைய தாந்தோனிராயனைப்போலவும் நடப்பா னென்று பார்த்தாயோ? துரைகள் அறியாமையால் ஏதாயினும் தவறு செய்வார்கள். நீங்களோ வேண்டு மென்று செய்பவர்கள். துரை ஒரு அடி வைத்தால் நீங்கள் ஒன்பதடி பாய்கிறீர்கள். தகப்பனுக்குத் திதி யென்று கோபாலசாமி அய்யர் ரஜாக் கேட்டதற்குத் துரை, “ஏன் ஞாயிற்றுக்கிழமை சாவகாசமாய் வைத்துக்கொள்ளக் கூடாதா?” என்று அறியாமையால் கேட்டான். தாலுகா குமாஸ்தா தனகோடிப் பிள்ளை தனக்கு சாந்தி முகூர்த்தம் என்று இரண்டு நாளைக்கு ரஜாக் கேட்டபோது, வேறு ஏஜென்டு வைத்து அதை ஏன் நடத்தக் கூடாது என்று கேட்டான். வெள்ளைக்காரரை நம்பலாம்; உங்களை நம்பக்கூடாது - என்றாள்.

அப்போது கிண் கிண்ணென்று பைசைகிளின் மணியோசை உண்டாயிற்று. அடுத்த நிமிஷம் தடதடவென்று சைகிளை உள்ளே உருட்டிக்கொண்டு வந்த கிட்டன் அதை யொருபுறமாக நிறுத்தி விட்டு நேராகச் சாம்பசிவத்தினிடம் சென்று தனது சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை யெடுத்து மேஜை மீது வைத்தான். அவர் மிகுந்த ஆத்திரத்தோடு பாய்ந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தார். கனகம்மாளும் ரஜாக் கிடைத்ததோ இல்லையோ என்பதை அறிய ஆவல் கொண்டு துடிதுடித்து நின்றாள்.

அவர்கடிதத்தைப் படிப்பதற்குள் நாம் அதைக் கொணர்ந்த கிட்டனைப் பற்றிய விவரத்தில் சிறிதறிவோம். அவன் தங்கம்மாளின் தம்பி என்பதைச் சொல்வது மிகையாகும். அவன் இருபத்திரண்டு வயதடைந்தவன். அழகிய சிவந்தமேனியையும் வசீகரமான பெண் முகத்தையும் பெற்றவன். அவன் தலையின் குடுமியை நீக்கி முன்மயிர் வளர்த்து அதை இரண்டாய் வகிர்ந்து விட்டிருந்தான். அவனுடைய நெற்றியில் சாந்துத் திலகமும், வாயிற் புகையிலை அடக்கியதால் உண்டான கன்னப் புடைப்பும் எப்போதும் குன்றின் மேல் விளக்காயிருந்து அவன் முகத்திற்கு அழகு செய்து கொண்டிருந்தன. அவன் கல்வி கற்கும் பொருட்டுப் பள்ளிக்கூடத்திற்குப் பல வருஷங்கள் சென்று புகையிலை போடுதல், பொடி போடுதல் முதலிய இரண்டு பரிட்சைகளிலும் முதல் வகுப்பில் தேறிவந்தான். அவனுடைய தந்தை சொற்பமான நிலத்தின் வருமானத்தில் ஜீவனம் செய்துவந்தவர். புத்திரன் கல்வி கற்கச்சென்றவன் ஆதலால் நிலச்சாகுபடி செய்தலைக் கற்கவில்லை. நிலச்சாகுபடி செய்தலும் இழுக்கான தொழிலென அவன் மதித்தான். குமாஸ்தா, கணக்குப் பிள்ளை முதலிய உத்தியோகம் அவருடைய பெருமைக்குக் குறைவானது. அவற்றிலும் பெரிய உத்தியோகங்களைச் செய்யத் தேவையான உயர்ந்த பரிட்சைகளில் அவன் தேறவில்லை. ஆகையால், அவனுக்குத் தகுந்த உத்தியோகம் உலகத்தில் ஒன்றுமில்லை. இத்தகை யோருக்கு சாம்பசிவத்தைப் போன்ற மனிதர் வீட்டில் வந்திருந்து அதிகாரம் செய்து சாப்பிடுதலே உத்தியோகம். அவனுடைய கெட்ட பழக்க வழக்கங்களைக் கண்டு அவனுடைய தந்தையும் அவனை அடிக்கடி கண்டித்தார். தவிர, அவனுக்குத் தேவையான காப்பியும் பலகாரங்களும் வேளைக்கு வேளை அங்கு கிடைக்கவில்லை. ஆகையால், சாம்பசிவத்தின் வீட்டில் சர்வாதிகாரியா யிருத்தல் அவனுக்குப் பரமபதமாய் இருந்தது. அவன் தனது தகப்பன் வீட்டில் சோற்றுக்கு மல்லுக்கட்டினான். அக்காள் வீட்டிலோ இடுப்பிற்கு மல்லுக் கட்டினான். உடம்பில் பிளானல் ஷர்ட், தோளில் பட்டு உருமாலை, தலையில் மகம்மதியர் தரிக்கும் நீண்ட அரபிக் குல்லா, கையில் வெள்ளி முகப்பு வைத்த சிறிய பிரம்பு முதலியவைகளே அவன் மனதிற்கு உகந்த ஆடையா பரணங்கள். இத்தகைய அலங்காரத்தோடு அவன் வெளிப்படுவானாயின், பன்னிரண்டு நாமங்கள் தரித்த வைதிகரான அவனுடைய தந்தை அவன் தமது மைந்தரென்று சத்தியம் செய்தாலும், அவரது சொல்லை எவரும் நம்பார். தவிர, அவன் தமது புத்திரன் என்பதை அவரே கண்டுபிடித்தல் முடியாது. ஆனால் சூது, கபடம், வஞ்சம் முதலியவற்றை அவன் அறியாதவன். முகவசீகரம் பெற்றவன். அவனுடைய கபடமற்ற தோற்றமும், குழந்தைச் சொற்களும், அவன் மீது யாவரும் விருப்பங்கொள்ளச் செய்தன. சாம்பசிவம் தமது மனைவியின் மீது காதல் கொண்டிருந்தார். கிட்டான் மீதோ மோகங் கொண்டிருந்தார். தங்கம்மாள் சாம்பசிவத்தைக் காணாமல் ஒரு பகல் சகிப்பாள்; தமது செல்லத் தம்பியான கிட்டனைக் காணாமல் பத்து நிமிஷமும் சகித்திராள். வீட்டின் விஷயங்களில் அவ்விருவரும் அவன் சொல்லை மிக்க மதித்து அதன்படியே நடந்து வந்தனர். வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்குதலிலோ மற்ற தேவைகளைக் கவனித்தலிலோ அவன் எஜமான், அவன் சித்தமே மந்திரி. அவனுக்குப் பலவகைப்பட்ட மனிதரென்னும் வேறுபாடே கிடையாது. தம் வீட்டுக் குதிரைக் காசாரியோடும் சகோதர உரிமை பாராட்டி அவனோடு கட்டிப் புரளுவான். வாசற் பெருக்கி நாகம்மாளின் வெற்றிலை பாக்குப் பையைப் பிடுங்கி அதிலிருந்து புகையிலை எடுத்துப்போட்டுக்கொள்வான். அவன் மனதில் ஒரு இரகசியம் நிற்பதில்லை. பெருத்த கொலை, கொள்ளை முதலிய கேஸ்களில் சாம்பசிவம் முதல்நாளே தீர்மானம் எழுதிவிடுவார். கிட்டன் அதை வேடிக்கையாகப் படித்துப் பார்த்துவிட்டு இரகசியமாக சேவகர்களிட மெல்லாம் சொல்லிவிடுவான். அவர்கள் அந்தச்சரக்கை வைத்துக்கொண்டு தமது திறமைக்குத் தகுந்தபடி வர்த்தகம் செய்து டிப்டி கலெக்டர் பெயரைச் சொல்லி பெருத்த பொருள் தட்டி விடுவார்கள். அதனால் டிப்டி கலெக்டர் லஞ்சம் வாங்குகிறார் என்று பெருத்த வதந்தி கிளம்பி ஊரெல்லாம் அடிபட்டது. அவர்மீது ஆத்திரங் கொண்டவர் யாவரும் அதை ஒன்றிற்குக் கோடியாய் வளர்த்துப்பேசி வந்தனர்.

இத்தகைய குண வொழுக்கங்களைக் கொண்ட யெளவனப் புருஷனான கிட்டன் கொடுத்த கடிதம் பெரிய கலெக்டர் துரையிடத்திலிருந்து வந்தது என்பதைக் கூறுதல் மிகையாகும். அதைப் படித்த சாம்பசிவத்தின் முகம் மாறியது. கோபத்தினால் தேகம் துடித்தது. பெரிய கலெக்டர் அங்கி ருந்தால் அவருடன் கைக்குத்துச்சண்டைக்குப் போயிருப்பார். என்ன செய்வதென்னும் குழப்பமும் கோபமும் ஒன்று கூடி அவரைப் பெரிதும் வதைத்தன. மதிமயக்கங் கொண்டு திரும்பவும் தமது நாற்காலியில் சாய்ந்து விட்டார். ரஜாக் கொடுக்கப்படவில்லை என்று உணர்ந்த கனகம்மாளின் நிலைமையை வருணித்தல் எளிய காரியமன்று. குரங்கு இயற்கையில் சுறுசுறுப்பானது. அது மரத்திலேறி கள்ளைக் குடித்துவிட்டது. உச்சியிலிருந்த பேயொன்று குரங்கைப் பிடித்துக்கொண்டது. கீழே இறங்குகையில் தேளொன்று அதைக் கொட்டி விட்டது. அத்தகைய நிலைமையில் அக்குரங்கு எவ்வித ஆடம்பரம் செய்யுமோ அவ்வாறு கனகம்மாள் காணப்பட்டாள். அவளுடைய கோபமும், ஆத்திரமும் குதிப்பும் ஆயிரம் மடங்கு பெருகிப் பெரிய கலெக்டர் மீது திரும்பின. அவனுக்கு சகஸ்ரநாம (1000 - பெயர்களால்) அருச்சனை செய்யத் தொடங்கினாள். அது பேரிடி மின்னல்களுடன் ஏழு மேகங்களும் ஒன்று கூடி அந்த மாளிகைக்குள் பொழிந்ததை யொத்தது.

அப்போதே அந்த மழைக்கு அஞ்சி அதில் நனையாமல் இருக்க முயல்பவனைப் போல சுவரோரத்தில் பதுங்கி, இடையில் அணிந்த வஸ்திரத்தை மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு மெல்ல ஒரு சேவகன் டிப்டி கலெக்டர் இருந்த இடத்திற்கு வந்தான். அவனைக் கண்ட சாம்பசிவம் கோபத்தோடு உரத்த குரலில், “ஏனடா! என்ன சங்கதி?” என்று அதட்டிக் கேட்டார். மழையில் நனைந்தவனுக்கு நடுக்கம் உண்டா தலைப்போல, அவனுடைய கை, கால்கள் அச்சத்தினால் வெடவெடென்று நடுங்கின. துணிந்து அவனது வாய் வரையில் வந்த சொல், திரும்பித் தொண்டைக்குள் போய்விட்டது. அவர் மேலும் இனுனொருமுறை முன்னிலும் ஓங்கி அதட்டிக் கேட்க, அவன் “சின்ன எஜமான்; சின்ன எஜமான்” என்று கையைப் பின்புறம் கட்டினான்.

கிட்டனை வேலைக்காரர் யாவரும் சின்ன எஜமான் என்று குறித்தல் வழக்கம். ஆதலால் கிட்டன் மீது ஏதோ கோட் சொல்ல அவன் வந்தான் என்று நினைத்த சாம்பசிவம், “ஏனடா கழுதை அவன் மேல் என்னடா சொல்ல வந்தாய்? செருப்பாலடி நாயே! இதுதான் சமயமென்று பார்த்தாயோ? போக்கிரிக் கழுதே! ஒடு வெளியில்” என்று கூறிய வண்ணம் எழுந்து அவனை அடிக்கப் பாய்ந்தார். அவன் நெருப்பின் மீது நின்று துடிப்பவனைப் போல தத்தளித்துத் தனது பற்களை யெல்லாம் ஒன்றையும் மறையாமல் வெளியிற்காட்டி, “இல்லை எஜமான்! ராயர் எஜமான் வந்திருக்கிறார்” என்றான்.

“அவன் யாரடா ராயன்? எந்தக் கழுதையையும் இப்போது பார்க்க முடியாது! போ வெளியில்” என்றார்.

தன் மீது அடிவிழுந்தாலும் பெறத் தயாராக நின்ற சேவகன் மேலும், “தாலுகா எஜமான் வந்திருக்கிறார்” என்றான்.

அதைக்கேட்ட சாம்பசிவத்தின் கோபம் உடனே தனிவடைந்தது. “யார்? தாசில்தாரா வந்திருக்கிறார்? உள்ளே அழைத்துவா!” என்றார்.

உட்புறத்தில் நடந்த அழகிய சம்பாஷணையை முற்றிலும் கேட்டிருந்த நமது தாந்தோனிராயர் பெரிதும் வெட்கினார்; அவருடைய தேகம் குன்றியது; என்றாலும் அக் குறிகளை மறைத்து, ஒன்றையும் கேளாதவரைப் போல எத்தகைய சலனமும் இல்லாத முகத்தோற்றத்தோடு உள்ளே நுழைந்தார். டிப்டி கலெக்டரிடத்தில் அந்தரங்க அன்பையும், மரியாதை யையும், பணிவையும் கொண்டவரென்று அவருடைய முகங் காட்டியது. “காலை வந்தனம் ஐயா!” (Good Morning Sir) என்னும் ஆங்கிலச் சொற்கள் அவருடைய வாயிலிருந்து வந்தன. அதே காலத்தில் இந்து மதக் கொள்கையின்படி கைகளைக் குவித்தார். அவர் ஒன்றற் கொன்று பொருந்தாக் காரியங்களைச் செய்யும் மனிதர் ஆதலின் அவரிடம் விழிப்பாயிருக்க வேண்டு மென்று அவருடைய வந்தனமே டிப்டி கலெக்டரை எச்சரித்ததைப் போல இருந்தது.


❊ ❊ ❊ ❊ ❊

"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/013-022&oldid=1252749" இலிருந்து மீள்விக்கப்பட்டது