உள்ளடக்கத்துக்குச் செல்

மேனகா 1/018-022

விக்கிமூலம் இலிருந்து


14-வது அதிகாரம்

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

ன்பதாவது அதிகாரத்தின் இறுதியில் தாசில்தார் தாந்தோனிராயர், டிப்டி கலெக்டருடைய வீட்டிற்குள் வந்து அவருக்குக் காலைவந்தனம் செய்தார் என்பது சொல்லப்பட்டது அல்லவா! உடனே சாம்பசிவம் தமது கோபத்தையும், மனதின் துன்பத்தையும் சடக்கென்று மறைத்துக் கொண்ட வராய், “ராயரே! வாரும்; உட்காரும்” என்ற கூறிய வண்ணம் எதிரிலிருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக் காட்டினார். அசந்தர்ப்பமான அந்த வேளையில் தாசில்தார்தம்மிடம் வந்தது, சாம்பசிவத்தின் மனத்திற்குப் பெருத்த துன்பமா யிருந்தாலும், தமது வீட்டைத் தேடி வந்த ஒரு பெரிதய மனிதரை உபசரியாமல் இருப்பது மரியாதைக் குறைவான காரியமென்று நினைத்து, அவருக்கு ஆசனம் அளித்துத் தாமும் தமது சாய்மான நாற்காலியில் உட்கார்ந்தார். கனகம்மாளும் இருந்தவிடம் தெரியாமல் பறந்து போய்விட்டாள். டிப்டி கலெக்டர் மீது அந்தரங்க அபிமானங் கொண்டவரைப் போல நடித்துத் தாண்டவமாடிய தாந்தோனிராயர் நாடகத்தில் சோகரசங் காட்டுவதைப் போல தமது முகத்தில் விசனக் குறிகளையும், அநுதாபக் குறிகளையும் வரவழைத்துக் காண்பித்தவராய் மிகவும் தயங்கி, ஒரு நாற்காலியில் உட்கார்ந்தும், உட்காராமல் நின்றும், “அதென்ன துரை முழுமூடனா யிருக்கானே! அவசரமாகப் பட்டணம் போகவேண்டுமென்று நீங்கள் கடிதம் அனுப்பிய தென்ன ரஜா கொடுக்கப்பட மாட்டாது என்று எழுதியனுப்பி விட்டானாமே?” என்று தளுக்காக ஆரம்பித்தார்.

சாம்ப:- (மாறுதலடைந்த முகத்துடன்) ஆம்; என்றைக்கும் கேட்குமுன் ரஜாக் கொடுக்கிற துரை, இன்று நல்ல சமயத்தில் இப்படிச் செய்து விட்டாரே, காரணமென்ன? நீர் அப்போது அங்குதானே இருந்தீர்?

தாந்தோ:- இந்த வெள்ளையர்களெல்லாம் குரங்குகள்; பேனெடுத்தாலும் எடுப்பார்கள், காதை அறுத்தாலும் அறுப்பார்கள்; நீங்கள் வரவில்லையென்று கோபித்துக் கொண்டே இருந்தான். உங்களுடைய கடிதத்தை டபேதார் கொண்டு வந்து கொடுத்தான். அது உங்களுடையது என்பது அப்போது எனக்குத் தெரியாது. அவன் கோபச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு, ஏதோ பதில் எழுதி டபேதாரிடம் அனுப்பியபின், என்னிடம் விஷயத்தைத் தெரிவித்து, தான் ஏதோ பெருத்த ஜெயமடைந்து விட்டதாக பெருமை பாராட்டிக்கொண்டான். எனக்கு அதைக் கேட்க நிரம்பவும் வருத்தமாக இருந்தது. என்ன அவனுடைய பாட்டன் வீட்டு சொத்தை நீங்கள் எடுத்துக்கொண்டது. வரக்கூடாத அவசரமென்றால், அதற்கு யார் தான் என்ன செய்வார்கள்? நான்தான் இருக்கிறேனே! என்னை வைத்துக்கொண்டு அர்ஜியை அனுப்புகிறதுதானே? அல்லது அது நாளைக்குத்தான் போகட்டுமே. மனிதருக்கு ஆபத்தென்றால், அதற்காக நாக்கைப் பிடுங்கிக் கொள்வதா? இவன்தான் திடீரென்று மாண்டு போகிறான்; அல்லது இவனுடைய துரைசானிக்குத் தான் வாந்திபேதி வந்துவிடுகிறது. அப்போது அர்ஜி எப்படிப் போகும்? தன்னைப் போலப் பிறரையும் பார்க்கவேண்டும். அதுதான் இந்தப் பயல்களிடம் கிடையாது. உண்மையில் அவசரமான காரியம் இல்லாதிருந்தால், தாங்கள் அவ்விதம் எழுத மாட்டீர்களென்று நான் சொன்னேன். அவர் அவசரமாக உங்களை வரச்சொல்லியிருந்தானாம். நீங்களே நேரில் வந்து ரஜாக் கேட்கவில்லையாம். இன்ன விஷயமென்றும் கடிதத்தில் குறிக்க வில்லையாம். எல்லாம் தான் என்கிற அகம்பாவம்; வேறொன்றுமல்ல.

சாம்ப:- (ஆத்திரமாக) நன்றாக இருக்கிறது! கடிதத்தில் எழுதும் காரியமும் உண்டு, எழுதாத காரியமும் உண்டு. நான் நேரில் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? என்னுடைய ஆபத்துக் காலத்தில் அதைப் பாராட்டாமல் அடக்கிக் கொண்டு இவரிடம் போவதுதான் இவருக்கு மரியாதை செய்வது போலவோ? அழகாயிருக்கிறதே!

தாந்தோனி:- (புன்சிரிப்போடு) நான் அவனை எளிதில் விடவில்லை. அவன் தயவு எனக்கு எதற்காக? மடியில் கனமிருந்தாலல்லவா வழியில் பயம்? இப்போது நீங்கள் சொன்ன மாதிரியே நான் அவனிடம் சொன்னேன். அவனுடைய பிடிதான் குரங்கு பிடியாயிற்றே; தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றான். அவனுடைய மூர்க்கம் தணிவடையட்டும் என்று பேசாமல் விட்டுவிட்டேன். இந்த அக்கிரமத்தைக் கண்டு என் மனது சகிக்க வில்லை. தங்களிடம் வந்து, இவ்விடத்திய சந்தர்ப்பத்தை அறிந்து, அதற்குத் தகுந்தாற்படி நடந்து கொள்ளலாம் என்று இங்கு வந்தேன். மிகவும் அவசரமாகத் தாங்களே அவசியம் பட்டணம் போக வேண்டிய காரியம் போலிருக்கிறது?- என்று தணிவான குரலில் நயமாகக் கேட்டார். அது, என்ன அவசர காரிய மென்று கேட்பதைப் போலிருந்தது.

அதைக் கேட்ட சாம்பசிவம் உடனே விடை தராமல் தயங்கி யோசனை செய்தார்; தம்முடைய பெண் காணாமற் போய்விட்டாளென்று சொல்வது, பெண்ணின் கற்பைப்பற்றி அவர் சந்தேகிக்க இடங்கொடுக்கும் என்றும், பல இழிவான யூகங்களை உண்டாக்கும் என்றும், அது தனக்கு அவமானமாய் முடியும் என்றும் நினைத்தார். கடைசியாக, ஒரு சிறிய பொய் சொல்லவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அந்தப் பொய்யினால் பிறருக்கு எவ்விதத்துன்பமும் உண்டாவதில்லை யென்றும், தமது மானத்தைக் காப்பதற்கே சொல்லப்படுகிறது என்றும் நினைத்த சாம்பசிவம், “ஆமாம்! நானே போக வேண்டிய அவசரந்தான். என்னுடைய பெண்ணுக்கு உடம்பு மிகவும் அசெளக்கியமாக இருக்கிறதாம். உடனே வந்தால்தான் பெண்ணைப் பார்க்கலாம் என்று தந்தி வந்தது. அந்த விசனத்தினால் இன்று எனக்குப் பங்களாவுக்கு வரப் பிடிக்கவில்லை. இன்று காலை முதலே ரஜா வேண்டுமென்று எழுதினேன்” என்றார்.

தந்தி ஆபீசில் முன்னமேயே உண்மையை யறிந்து வந்திருந்தவரான தாந்தோனிராயர், “நீ பொய்சொல்லாத அரிச்சந்திரர் என்று எங்களிடம் ஆடம்பரம் செய்பவனல்லவா! இப்போது பொய் சொல்லுகிறாயோ! இருக்கட்டும்” என்று தமக்குள் நினைத்துக்கொண்டு, மிகவும் விசனத்தோடு, “அப்படியா குழந்தை மேனகாவுக்கா? இப்போது சமீப காலத்தில் தானே இங்கிருந்து புறப்பட்டுப் போனாள்? இங்கிருந்த வரையில் உடம்பில் ஒரு கெடுதலும் இல்லையே? இப்போது திடீரென்று என்ன வந்தது?” என்றார்.

சாம்ப:- (சிறிது தயங்கி) இன்ன வியாதி என்னும் விவரம் எழுதப்படவில்லை. நான் அவசியம் இன்றைக்குப் போயே தீரவேண்டும். அவ்வளவு அவசரம். துரை இப்படி மோசம் செய்துவிட்டாரே. இனிமேல் நானே அவரிடம் நேரில் போவதற்கும் என் மனதிற்குப் பிடிக்கவில்லை. அவர் ஏதாவது தாறுமாறாய்ப் பேசினால் எனக்கு நிரம்பவும் கோபம் வந்து விடும். அதனால் வீணில் காரியம் கெட்டுப்போம் - என்றார்.

தாந்தோனி:- (மிகவும் துயரமடைந்து, சாம்பசிவத்திற்கு வந்த துன்பத்தைத் தன்னுடையதாக மதித்தவராய் வேஷம் போட்டு) ஐயோ! என்ன தரும சங்கடமா யிருக்கிறதே! துரை இன்றைக்குச் செய்தது சுத்த அயோக்கியத்தனம்; மனிதருக்கு உயிருக்கு மிஞ்சிய ஆபத்து வேறென்ன இருக்கிறது? நீங்கள் வரவில்லையென்று கோபம் உண்டானால்தான் என்ன? என்ன காரணத்தினால் இவ்வளவு அவசரமாக ரஜா கேட்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தல்லவா காரியம் செய்யவேண்டும். சுத்தத் தடியடிக்காரன் வேலையாய் இருக்கிறதே. இந்த முரடன் கையில் ஒரு ஜில்லாவையே ஒப்புவித்துவிட்டார்களே! நான் எத்தனையோ கலெக்டர்களைப் பார்த்திருக்கிறேன்; எங்களைப் போன்ற சின்ன வேலைக் காரர்களிடம் கடுமை காட்டினால், தங்களைப் போன்ற சம அந்தஸ்துள்ள பெருத்த அதிகாரி களிடத்தில் நிரம்பவும் மரியாதையாக நடந்து கொள்வது வழக்கமாம். அவர்கள் கண்ணியமான மனதைக் கொண்டவர்கள். இவன் யாரோ அற்ப பயல்; இவன் சீமையில் ஒரு அம்பட்டனுடைய மகனாம். இந்தப் பயல் இங்கே இவ்வளவு ஆடம்பரம் செய்து தானே ராஜா வென்று நினைத்துக் கொண்டு நம்மை யெல்லாம் ஆட்டி வைக்கிறானே. இவன் போன வருஷம் ஆறு மாசம் ரஜா வாங்கிக்கொண்டு சீமைக்குப் போயிருந்தான் அல்லவா? அப்போது நமது வெங்கப்பட்டி ஜெமீந்தார் வீராசாமி வாண்டையாரும் ஒரு வியாச்சியத்தின் பொருட்டு சீமைக்குப் போயிருந்தாராம். வாண்டையார் இந்த துரையை தற்செயலாக பார்த்தாராம்.துரை தன்னுடைய அப்பனுக்குத் தலை சிரைத்துக் கொண்டிருந்தானாம். வீடு ஒரு கையகலம் மாட்டுக்கொட்டில் மாதிரி இருந்ததாம். வாண்டையாரை உட்காரக் கூட சொல்ல இடமில்லையாம். அவ்வளவு கேவலமானவன் இங்கே வந்து இப்படி நாடகத்தில் வரும் ராஜாவைப்போல வேஷம் போடுகிறான். இப்படிப்பட்ட தொழிலைச் செய்பவனுக்குத் தயாளமும் நீதியும் எங்கிருந்து உண்டாகும்?

சாம்ப :- அப்படியா! அதனாலென்ன? ஏழைகளாயிருந் தாலென்ன? கேவலத் தொழில்செய்பவராய் இருந்தால் என்ன? உண்மையில், அவர்களுக்குத்தான் பச்சாதாபமும், இரக்கமும், அதிகமாக இருக்கும். இவர் யாருடைய பிள்ளையாய் இருந்தால் நமக்கென்ன? அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எத்தனையோ விஷயங்களில் இவரே கண்ணியமாகவும், பெரும் புத்தியைக் காட்டியும் நடந்து கொள்ளவில்லையா? அல்லது பெரிய பிரபுக்களின் பிள்ளைகளென்று வருகிறார்களே அவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்வதில் லையா? அற்பத்தனமான காரியம் செய்வதில்லையா? இதை யெல்லாம் ஒரு பொது விதியாக வைத்துக்கொண்டு தூஷிக்கப்படாது. எனக்கு இவர் மீது வேறு எவ்வித வருத்தமும் இல்லை. இதுவரையில் நான் அறிந்தவரையில், இவர் என் விஷயத்திலும் மற்றவர் விஷயத்திலும் ஒழுங்காகவே நடந்துகொண்டி ருக்கிறார். இவர் நல்ல தங்கமான குணமுடையவர் என்றே சொல்லவேண்டும். ஆனால், இன்று இவர் செய்தது மாத்திரம் ஏதோ தப்பான எண்ணத்தின் மீது செய்யப் பட்டிருக்கிறது. இதை நம்முடைய வேளைப்பிச கென்றே சொல்லவேண்டும். அவசரமாக வரவேண்டுமென்று இவர் சொல்லி யிருந்தபடி நான் போக வில்லை. அதைக் குறித்துக் கோபம் உண்டாவது மனித சுபாவந்தான். இப்படிச் செய்து விடுவாரென்று நான் சந்தேகித்து என்னுடைய தாயாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். காரியம் அப்படியே முடிந்துவிட்டது- என்று கண்டித்த சொற்களாக நயமாக குரலில் கூறினார்.

அதைக் கேட்ட ராயருடைய முகம் சிறுத்தது. அவமானமும் அடைந்தார். என்றாலும் அதைப் பாராட்டாமல், சாம்பசிவத்தின் நோக்கம்போல தமது பேச்சையும் திருப்பிக் கொண்டார்.

“ஆம் நீங்கள் சொல்லுவது சரியான வார்த்தைதான். இந்த ஒரு விஷயத்திலே தான் முன்கோபத்தினால் இவர் இப்படிச் செய்து விட்டார். சுபாவத்தில் தங்கமான குணமுடையவர்தான். புத்தியும் பெரும்புத்திதான். அதைப்பற்றி சந்தேகமில்லை. என்றாலும், தமக்கு சம அந்தஸ்திலுள்ள தங்களுக்கு அவசரமே இல்லாத காரணமாயிருந்தாலும் ரஜாக் கொடுக்க வேண்டியிருக்க, இவ்வளவு அவசர சமயத்தில் மோசம் செய்ததனாலேதான் வாண்டையார் சொன்னதைச் சொல்லும் படி நேர்ந்தது. எங்களைப் போல இருந்தாலும் பாதகமில்லை. விறகுகட்டுக்காரனுக்கு பிளவை புறப்பட்டால், விறகு கட்டையால் அடிப்பதே மருந்து. நாங்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்வோ” மென்று நேர்த்தியாகப் பேசினார் ராயர். அதைக் கேட்ட சாம்பசிவத்திற்கு முன்னிலும் அதிகரித்த அருவருப்பு உண்டாயிற்று. பளேரெனக் கன்னத்தில் அடிப் பவரைப்போல பேசலானார்.

“சேச்சே! அது சரியான பேச்சாகாது. அவசரம் என்றால் பெரிய மனிதருக்கும் அவரசந்தான்; சின்ன மனிதருக்கும் அவசரந்தான். பெரிய மனிதருக்கு மாத்திரம் ரஜாக் கொடுப்பதென்ன? சின்ன மனிதருக்கு இல்லையென்ப தென்ன? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. எனக்கு என் பெண்ணைப் பற்றி எவ்வளவு விசனம் இருக்கிறதோ, அவ்வளவு விசனம் சின்னமனிதருக்கும் தமது பெண் விஷயத்தில் இருக்கும் உண்மையில் அவசரமான காரிய மிருந்தால், எல்லோருக்கும் ரஜாக் கொடுத்து அநுதாபம் காட்ட வேண்டும். பொய்யான கடிதமாயிருந்தால், எனக்கு ரஜாக் கொடுப்பது தவறாகும். பொய் சொன்னதற்காக தண்டிக்கவேண்டும். டிப்டி கலெக்டரான எனக்கு விசேஷ மரியாதை காட்டவில்லை யென்று துரை மீது குற்றங்கூறுவது ஒழுங்கல்ல. ஏதோ தப்பான எண்ணத்தால், என்னுடைய அவசரத்தைக் கவனியாமல் ரஜாக் கொடுக்க மறுத்த தொன்றைப் பற்றித்தான் நான் விசனப்படுகிறேன்” என்றார். தமது சாமர்த்தியமான தளுக்கு மொழிகளைக் கேட்டு ஏமாறுவார் என்று நினைத்த தாந்தோனிராயருடைய சொற்களை சாம்பசிவம் சின்னாபின்னமாக்கி, அவருடைய தப்பான கருத்தை அவருடைய முகத்திலேயே அடிப்பதைப் போல மொழிந்தார். தாந்தோனிராயர் பெரிதும் வெட்கி, இஞ்சி தின்ற குரங்கைப் போல விழித்து ஏதோ யோசனை செய்பவரைப்போலக் கீழே குனிந்துகொண்டார். அவருடைய கண்கள் தரையை நோக்கின.

அப்போது நாற்காலிக் காலடியில் கிடந்த ஒரு சிவப்புக் காகிதம் அவருடைய கண்களில் பட்டது. அதுவே சென்னையிலிருந்து சாம்பசிவத்திற்கு வந்த தந்தி; அங்கு கனகம்மாளாலும் சாம்பசிவத்தாலும் நடத்தப்பட்ட ஆரவாரத்தில் அசட்டை செய்யப்பட்ட தந்தி காற்றில் பறந்து கீழே விழுந்து நாற்காலி அடியில் கிடந்தது. தாந்தோனிராயர் தற்செயலாய் அதிலேயே உட்கார்ந்து கொண்டார். இப்போது கீழே குனிந்தபோது அதையே கண்டார் . “ஆகா! என்னை அவனமானப் படுத்திக் கீழே குனியச் செய்தாயல்லவா. இதோ உன்னை அவமானம் படுத்தும்படி உன்னுடைய தந்தியே என்னிடம் வந்து சேர்ந்தது பார்” என்று தம் மனதில் நினைத்துக்கொண்ட ராயர், மெல்ல அதையெடுத்துக்கொள்ள நினைத்தார். சாம்பசிவத்திற்கு எதிரில் மேஜை மறைத்திருந் தமையால், அவர் காகிதத்தைப் பார்க்கவில்லை. என்றாலும், தாந்தோனிராயர் ஒரு தந்திரம் செய்தார்; தம்முடைய கையிலிருந்த கைக்குட்டையை எடுத்துத் தமது முகத்தைத் துடைப்பவர்போலச் செய்து அந்த தந்திக் காகிதத்தின் மேல் விழும்படி அதைவிட்டார். உடனே கீழே குனிந்து கைக்குட்டையையும், அதன் கீழிருந்த தந்தியையும் ஒன்றாய்ச் சேர்த்தெடுத்துத் தமது சட்டைப் பைக்குள் சொருகிக் கொண்டார். சாம்பசிவம் கண்டுபிடித்துக் கேட்டாலும் காகிதம் தவறுதலாய் சவுக்கத்தோடு வந்துவிட்டதாகச் சொல்லத் தீர்மானித்துக் கொண்டார். அந்தப் பீதாம்பரையர் ஜாலம் கால் நிமிஷத்திற்குள் நிறைவேறியது. உடனே, வியப்பைக் காட்டிய முகத்தோடு சாம்பசிவத்தை நோக்கி, “ஆகா! தங்களுடைய குணமல்லவோ குணம் எப்போதும் மேன்மக்கள் மேன்மக்களேதான்! இந்த அவசரத்தில் எங்களுக்கு ரஜாக் கொடுக்காமல் துரை இப்படிச் செய்திருந்தால், எங்களுக்கு மிகவும் மூர்க்கமான கோபம் பிறந்திருக்கும். வாயில் வந்தவிதம் பொருத்த மில்லாமல் தூற்றி யிருப்போம். துன்பச் சமயத்திலும் நீங்கள் நடு நிலைமை தவறவில்லை. அவர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த பதவி தான் கிடைத்திருக்கிறது. உங்களுக்கு ஈசுவரன் ஒருநாளும் குறைவு வைக்கமாட்டான்” என்று சாம்பசிவத்தைப் புகழ ஆரம்பித்தார்.

சாம்ப:- (புன்சிரிப்போடு) இப்போது சொன்ன நீதி நம்முடையதுரைக்கும் பொருந்துமல்லவா? கலெக்டர் பதவிக்கு அவர் தகுந்தவரென்றுதான் நாம் மதிக்கவேண்டும்- என்றார்.

தாந்தோனிராயர் என்ன செய்வார்? அவர் எவ்விதம் பேசினாலும் சாம்பசிவம் அதற்குமேல் ஏதாயினும் சொல்லி வளைத்துக்கொள்கிறார். அவரிடம் எதிர்த்துப் பேசுவதற்கும் அது சமயமல்ல. தான் கருதிவந்த காரியம் நிறை வேறவேண்டும். ஆகையால் ராயர் முடிவான காரியத்தைத்துவக்கினார். “எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அது தாங்கள் மனதிற்குப் பிடிக்குமோ என்னவோ?” என்றார். சாம்பசிவம், “என்ன யோசனை?” என்றார். தாந்தோனிராயர், “வேறொன்றுமில்லை; துரைமுதலில் ஆத்திரத்தில் எத்தனையோ விஷயங்களில் செய்த உத்தரவுகளை பிறகு நிதானமான யோசனை செய்து மாற்றியிருக்கிறார். விஷயம் உண்மையில் அவசரமானதென்றும், தாங்கள் இன்று அவசியம் பட்டணத்துக்குப் போக வேண்டுமென்றும், தயவுசெய்து மறுபடி ஆலோசனை செய்து ரஜாக் கொடுக்கவேண்டு மென்றும் ஒரு கடிதம் எழுதி என்னிடம் கொடுங்கள். நான் நேரில்போய் உண்மையான விஷயங்களைத் தெரிவித்து, நீங்கள் மிகுந்த மனோ சஞ்சலத்தினால் இன்று காலையில் வரவில்லை யென்று கூறி, அவரிடம் ரஜாப் பெற்றுக்கொண்டு வருகிறேன். என்னை அவர் இன்று மாலை நான்கு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் அப்போது இந்தக் காரியத்தை முடிக்கிறேன். நான் கேட்டுக்கொண்ட எந்த வேண்டுகோளையும் துரை இதுவரையில் மறுத்ததில்லை. நிச்சயமாக ரஜாக் கிடைக்கும். நீங்கள் ஊருக்குப் போகச் சித்தமாக இருங்கள்” என்றார்.

அதைக்கேட்ட சாம்பசிவம் கீழே குனிந்து யோசனை செய்தார். தமக்குக் கீழ் உத்தியோகஸ்தரான தாசில்தார் மூலமாகக் கடிதம் எழுதிக் கொடுத்து அவ்விதம் சிபார்சு செய்யச் சொல்வது அவருக்கு இழிவாகத் தோன்றியது. தவிர, அந்த உதவியை தாசில்தார் பெரிதாக மதித்துக்கொள்வார். உத்தியோக முறையில் மேலதிகாரியான தாம், பிறகு அவரை எவ்விஷயத்திலும் கண்டித்தல் முடியாமற் போகுமென்றும், அதனால் தாம் தமது கடமையிற் பிழைசெய்ய நேருமென்றும் நினைத்தார். நிற்க, பெரிய கலெக்டரும் தம்மைபற்றி இழிவான அபிப்பிராயங் கெள்வாரென்று எண்ணினார். அவர் இவ்வாறு சிந்தித்திருக்கையில், உட்புறத்திலிருந்த படியே, இங்கு நடந்தவற்றைக் கவனித்திருந்த கனகம்மாள் சாம்பசிவத்தை நோக்கி உள்ளே வரும்படி சைகை செய்தாள்.

சாம்ப:- அம்மாள் கூப்பிடுகிறாள், என்னவென்று கேட்டுவிட்டு வருகிறேன். கொஞ்சம் இரும் - என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார். பொங்கியெழுந்த தனது ஆத்திரத்தையும், விசனத்தையும் சொற்களாலும் அபிநயங் களாலும் அதற்குமுன் வெளிப்படுத்திக்கொண்டிருந்த கனகம்மாள், தாசில்தாரைக் கண்டவுடன் ஒடுங்கி உட்புறத்தில் உட்கார வேண்டியது கட்டாயமாய்ப்போனது; அவள் பெரிதும் துடிதுடித்தவளாக உட்கார்ந்து வெளியில் நடந்த சம்பாஷணையை நன்றாகக் கவனித்துக்கொண்டிருந்தாள். உள்ளே வந்த சாம்பசிவத்தை நோக்கி, “அடே! வேற வழியில்லை; இப்போது மீன மேஷம் பார்த்துக் கொண்டிருந்தாயானால், அநியாயமாகப் பெண் நமக்கில்லாமல் போய்விடும்; இந்த உத்தியோகம் போனால் போகட்டும்; வேறு எந்த வேலை செய்தாயினும் பிழைத்துப்போகலாம். தங்க விக்கிரகத்தைப் போலப் பதினாறு வயதளவு வளர்த்த குழந்தை போனால் ஒருநாளும் வராது. யோசனை செய்யாதே; கடிதம் எழுதிக்கொடு. ஆபத்து வேளையில் கீழ் உத்தியோகஸ்தனுடைய உதவியையுந்தான் நாடவேண்டும்; வீண் கெளரவத்தைப் பாராட்டாதே. வயிறு வலிக்கிறதென்று வைத்தியரிடம் போய் மருந்து வாங்கி வரும்படி சேவக ரெங்கராஜாவை அனுப்பினாயே; அது ஒழுங்கா? அதைப் போல இதையும் ஒரு வயிற்று வலியாக நினைத்துக்கொள்; இந்த ஆபத்து வேளையில் எவ்விதமான குறைவு வந்தாலும் பார்க்கப்படாது” என்று உறுதியாகக் கூறினாள்.

சாம்பசிவம் வாய் திறவாதவராய் உடனே திரும்பி வந்தார். “ராயரே! அம்மாள் கூட நீர் சொல்லும் யோசனைப்படி செய்யலாமென்று சொல்லுகிறாள். நான் அப்படியே எழுதிக்கொடுக்கிறேன். தயவுசெய்து எடுத்துக்கொண்டு போம்” என்று சொல்லிய வண்ணம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட ராயர், “நான் நான்கு மணிக்கு துரையிடம் போகிறேன்; உடனே அவருடைய உத்தரவை வாங்கிவிடுகிறேன். என்னை சீக்கிரம் அவர் அனுப்பிவிட்டால் நானே இவ்விடத்திற்கு நேரில் வருகிறேன். தாமசமாகும் போலிருந்தால், ஒரு சேவகனிடம் சொல்லி யனுப்புகிறேன்; நீங்கள் பிரயாணத்துக்கு ஆயத்தமாக இருங்கள்” என்று அன்பொழுகப் பேசிவிட்டு விடை பெற்றுக்கொண்டு தாந்தோனிராயர் வெளியில் நடந்தார்.

அன்று பகல் முழுதும் சாம்பசிவத்தின் வீட்டில் எல்லோரும் பட்டினி கிடந்தனர். அவரும், அவருடைய தாயாரும், மனையாட்டியும், “ரஜா கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்கா விடில் என்ன செய்வது” என்று நினைத்து பெரிதும் மனக்கவலை கொண்டு ஏங்கித் தவித்த வராய், தாந்தோனிராயரது வரவை ஆவலோடு எதிர்பார்த் திருந்தனர். ஈன்று வளர்த்த பெற்றோர் பெரியோருக்கன்றோ தமது குழந்தைகளின் அருமை உள்ளபடி தெரியும். மலட்டு மனிதரான பெருந்தேவியம்மாள் சாமாவையர் முதலிய பஞ்சைகளுக்கு ஒரு காலும் நெஞ்சு இளகாது அல்லவா!

சாம்பசிவத்தின் மைத்துனனான கிட்டான் தனது அக்காள் மகள் மேனகையைத் தனக்கு மணந்து கொடுக்கவில்லை யென்ற ஒருவகையான அதிருப்தியை நெடுங்காலமாய்த் தன் மனதில் வைத்திருந்தான் ஆயினும், அவளைத் தன் உயிருக்குயிராய் மதித்து வந்திருந்தவன். ஆதலின், அவளுக்குத் துன்பமிழைத்த பெருந்தேவி முதலியோரை ஒரே குத்தில் கொன்றுவிடுவதாகச் சொல்லிக் கொண்டும், பெரும் துயரையும் கோபத்தையும் கொண்டு இருந்தான். ஆயினும் அவனுக்கு மாத்திரம் பசி தாங்கக் கூடவில்லை. அவன் ஹோட்டலிற்குப் போய் சொற்பமாக போஜனம் செய்துவிட்டு வந்தான். அவர்கள் பிற்பகல் 4 1/2 மணி நேரம் வரையில் பொறுத்திருந்தனர். அதற்குமேல் சும்மாவிருக்க அவர்களால் இயலவில்லை. கிட்டனை தாந்தோணிராயர் வீட்டிற்கு அனுப்ப நினைத்தனர். அப்போது ஒரு சேவகன் திடீரென்று உட்புறம் நுழைந்து வில்லாக உடம்பை வளைத்து சாம்பசிவத்தை வணங்கினான். சாம்பசிவம், “என்னடா சங்கதி? எங்கிருந்து வருகிறாய்?” என்று பெரிதும் ஆவலோடு கேட்டார். சாம்பசிவத்தினிடம் நெருங்குவதற்கும் அவரிடம் பேசுவதற்கும் சேவகர்களுக் கெல்லாம் நிரம்பவும் அச்சம் ஆதலால், அவனுடைய உடம்பு நடுங்கியது; வாய் குழறிப்போயிற்று. “கலெக்டர் எசமான் - இல்லை எசமான் தாலுகா எசமான்” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவன், தான் ஏதோ தவறுதலாகச் சொல்லிவிட்டதாக நினைத்து தன்னைத் திருத்திக்கொண்டான். அதற்குமேல் பேச மறந்துபோய் விட்டான். அதைக்கண்டு கோபங்கொண்ட சாம்பசிவம், “என்னடா குட்டிச்சுவரே விழிக்கிறாய்? சீக்கிரம் சொல்லித் தொலை. இந்த அற்ப சங்கதியைச் சொல்ல மாட்டாமல் தவிக்கிறாயே! தாசில்தாரிடமிருந்து தானே வருகிறாய்?” என்றார்.

சேவகன்:- ஆமா எசமான்! சாங்கிசன் ஆயிப்போச்சுன்னு ராயர் எசமான் சொல்லச் சொன்னாங்க - என்றான்.

சாம்ப:- அவர் எங்கடா இருக்கிறார்?

சேவ: - தொரே பங்களாவுல அவருக்கு வேலை இருக்குதாம். உள்ளற இருந்தவங்க வெளிலே அவசரமா வந்து என்னைக் கூப்பிட்டு, இந்தச் சங்கதியை ஒடனே ஒடியாந்து எசமாங்கிட்ட சொல்லிப்புட்டு வரச் சொன்னாங்க; ஒடனே உள்ள போயிட்டாங்க - என்றான்.

அதைக் கேட்ட சாம்பசிவத்தின் முகத்தில் சந்தோஷம் ஜ்வலித்தது. அன்று காலையில் எழுந்தது முதல் அப்போதே அவர் மனம் முதன் முதலாக ஒரு சிறிது மகிழ்ச்சி அடைந்தது. “அப்படியா? கடிதம் ஒன்றும் கொடுக்க வில்லையா?” என்றார் சாம்பசிவம்.

சேவ: - இல்லை எசமான்!

சாம்ப:- வேறொன்றும் சொல்லவில்லையா ?

சேவ:- பட்டணம் போவலாம்; சரிப்பட்டா, எசமான் ரயிலுக்குப் போறத்துக்கு முன்னாலே, அவுங்க வந்து பார்க்கிறேன்னு சொன்னாங்க, அவ்வளவுதான்.

சாம்ப:- அப்படியானால் சரி; நீ போ - என்றார்.

உடனே சேவகன் வெளியில் வந்து "செத்தேன் பிழைத்தே” னென்று ஒட்டம் பிடித்து இரண்டு நிமிஷங்களில் தாசில்தார் வீட்டிற்குள் நுழைந்து அவருக்கெதிரில் வந்து நின்றான்.

தாசில் :- ஏனடா சொன்னா யா ?

சேவ :- சொல்லிட்டேன்.

தாசில் :- என்ன சொன்னார்?

சேவ:- ஒண்ணும் சொல்லல்லீங்க, சரிதான் போன்னாங்க; வந்துட்டேன்.

தாசில் :- சேவகப் பக்கிரி எங்கே?

சேவ :- டிப்டி கலெக்டரு ஊட்டு வாசல்லே ரெங்கராசுக்கிட்ட ஒக்காரவச்சிட்டு வந்திருக்கிறேன்.

தாசில் :- சரி; அவன் வந்தவுடன் உள்ளே அழைத்துவா, எங்கேயும் போய்விடாதே - என்று சொல்லி அவனை வாசல் திண்ணைக்கு அனுப்பினார்.

மாலை ஆறுமணி சமயமானது; சேவகப் பக்கிரி புன்னகை செய்தவனாய் உள்ளே வந்தான்.

தாசில் :- (புன்னகை செய்து கொண்டு) என்ன சங்கதி,

பக்கிரி :- டிப்டி கலெக்டரும், பெரியம்மாவும் போவப் போறாங்க, ரங்கராசு போவல்லே, டிக்கிட்டு வாங்கப் பணங்கொடுத்துட்டாங்க. அவன் 6.45 மணிக்கு ரயிலுக்குப் போயி டிக்கிட்டு வாங்கப் போறான். அவுங்க ரெண்டு பேரும் சரியா 7 மணிக்கு ரயிலுக்குப் போறாங்க.

தாசில் :- பட்டணத்து ரயில் சரியாக எத்தனை மணிக்குப் புறப்படுகிறது உனக்குத் தெரியுமா?

பக்கிரி :- ஏழு மணி இருவது நிமிஷத்துக்குப் பொறப்படுதாம்.

தாசில்:- சரி; நிநேராகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் புளுகு மாப்பிள்ளை வீட்டிற்குப் போய், நான் ராத்திரி எட்டு மணிக்கு அவர் வீட்டிற்கு வருகிறேனென்று சொல்லிவிட்டு வா- என்றார்.

அவன் “அப்படியே செய்யறென்” என்று சொல்லி விட்டு வெளியிற் போய்விட்டான். தாந்தோனிராயர் தம்மை உடனே நன்றாக அலங்கரித்துக் கொண்டு வெளிப்பட்டு பெரிய கலெக்டருடைய பங்களாவை அடைந்து வெளியிலிருந்த டபேதாரிடம் கலெக்டர் என்ன செய்கிறார் என்று கேட்டார். துரையும், துரைசானியும் வெளியில் உலாவப் புறப்படும் சமயம் என்றும், சாரட்டு தயாராக நிற்கிறதென்றும் கூறினான். துரை வண்டியில் ஏறு முன் அவரைக் கண்டு அவர் உலாவப்போவதை நிறுத்திவிட வேண்டுமென்று எண்ணங் கொண்டவராய் தாசில்தார் குடுகுடு வென்று உள்ளே ஓடினார். தாழ்வாரத்தில் ஏறிப் பதுங்கி ஒதுங்கி நின்றார்; துரையைக் கண்டவுடன் குனிந்து சலாம் செய்து புன்முறுவல் காட்டி, “மன்னிக்கவேண்டும்; உலாவப் போகும் சமயம் போலிருக்கிறது” என்றார்.

துரை அவரைக் கண்டவுடன் புன்னகை செய்து அன்பாக, “என்ன தாசில்தார்? என்ன சங்கதி? எதாவது அவசரமான காரியமுண்டா” என்றார். தாசில்தார் மிகவும் பணிவாக, “ஆம்; இருக்கிறது; ஆனால், துரைசானி அம்மாள் வெளியில்போக காத்துக்கொண்டிருப்பார்களே என்று தான் கவலையாக இருக்கிறது” என்றார்.

துரை, “நான்தான் தினம் உலாவப் போகிறேனே. அவசர காரியம் இருந்தால் நான் போகாமல் நின்று விடுகிறேன். துரைசானியை மாத்திரம் அனுப்புகிறேன்” என்ற வண்ணம், தமக்குப் பின்னால் நின்ற துரைசானியிடம் திரும்பி, “எனக்கு அவசரமாக செய்யவேண்டிய வேலை வந்துவிட்டது; நீ மாத்திரம் போய்விட்டுவா’ என்று சொல்ல, அவள் புறப்பட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டாள்.

துரையும் தாசில்தாரும் உட்புறம் சென்று நாற்காலியில் உட்கார்ந்து கொண்டனர். தாந்தோணிராயர் தம்முடைய சட்டையிலிருந்த தந்தியை எடுத்து கலெக்டரிடம் நீட்டினார். துரை அதை வாங்கி ஆவலோடு படித்தார். முதலில் விஷயத்தைப் படிக்காமல், அது யாரால் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதைக் கவனித்துப் பார்த்தார். அது சென்னையிலிருந்து யாரோ ஒருவரிடத்திலிருந்து டிப்டி கலெக்டருக்கு வந்ததாக அறிந்தார்; பிறகு விஷயத்தைப் படித்தார். தந்தி அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது. “நேற்றைக்கு முந்திய நாளிரவு, நான் சேலத்திற்கு போயிருந்த காலத்தில், நீர் இங்கு வந்து உம்முடைய பெண்ணை அழைத்துக்கொண்டு போனதாக என் சகோதரிகள் சொல்லுகின்றார்கள். பெண்ணை ஒரு வாரத்திற்கு முன் கொணர்ந்து விட்ட நீர் இவ்வளவு சீக்கிரமாகவும் எவரிடமும் சொல்லாமலும், எங்களுடைய சம்மதியில்லா மலும், அழைத்துப்போன காரணமென்ன? உடனே தந்தியனுப்பவும்” என்று எழுதப்பட்டிருந்த தந்தியைப் படித்து முடித்த பின்னர் துரை, “என்ன ஒன்றும் நன்றாக விளங்கவில்லையே! வரகுசாமி என்று கையெழுத்துச் செய்யப் பட்டிருக்கிறதே! அந்த மனிதர் யார்?” என்றார்.

தாசில்:- வரகுசாமி யல்ல. அது வராகசாமி. அவன் டிப்டி கலெக்டருடைய பெண்ணின் புருஷர்; அவனுக்குப் பட்டணத்தில் வக்கீல் உத்தியோகம்.

துரை:- அவர் இல்லாதபோது இவர் போய் பெண்ணை அழைத்து வந்த காரணமென்ன?

தாசில்:- அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதிலே தான் ஏதோ சூதிருக்கிறது. அதை பின்னால் யோசிப்போம். நேற்றைக்கு முன் தினம் இவருக்கு தாங்கள் ரஜாக் கொடுத்தீர்களோ?

துரை:- இல்லையே! ஒரு வாரத்திற்கு முன், தம்முடைய பெண்ணைப் புருஷன் வீட்டில் கொண்டுபோய் விடவேண்டு மென்று ரஜா கேட்டார். கொடுத்தேன். அது நன்றாக நினைவிருக்கிறது. இந்த நாலைந்து நாளாக அவர் ரஜாவே வாங்க வில்லையே! - ஆம் இன்று அவருடைய சுற்றுப் பிரயாணச் செலவின் பட்டியை (Travelling Allowance Bill) அனுப்பியிருக்கிறார். அது என் பெட்டியிலிருக்கிறது; அதைப் பார்க்கிறேன். (பெட்டியைத் திறந்து பார்க்கிறார்) ஐந்து நாட்களாக அம்பாசமுத்திரம் முதலிய ஊர்களிலல்லவோ சுற்றுப்பிரயாணம் செய்ததாக எழுதி ரூ.35 பெற்றுக் கொண்டிருக்கிறார்.

தாசில்:- (புன்னகை செய்து) பார்த்தீர்களா முழுப் புரட்டை? முந்திய நாள் இவர் பட்டணத்தில் இருக்கிறார். இங்கே கிராமங்களில் சர்க்கார்வேலை செய்ததாக எழுதி பணம் வாங்கியிருக்கிறார்.

துரை:- (அடக்கிய கோபத்தோடு) இன்று காலையில் நீர் போன போது, அவர் இதைப்பற்றி என்ன சமாதானம் சொன்னார்?

தாசில்:- நான் போகும்போதே தந்தியாபீசிற்குப் போய் இம்மாதிரி தந்தி வந்திருப்பதாக அறிந்துகொண்டேன். பிறகு அவரிடம் போனேன். ஆனால், ஏன் அவரிடம் போனேன் ஆய்விட்டது. அவர் இவ்வளவு கெட்ட மனிதரென்று நான் இன்று தான் கண்டேன். இத்தனை நாளாக அவர் எங்களைத் தாறுமாறாக வைவது வழக்கம்; இன்று ரஜா கொடுக்கவில்லை யென்று அவர் துரையவர்களையும், துரைசானி யம்மாளையும் வைத வசவுகளை வாயாற் சொல்ல முடியாது. எனக்கு வந்த ஆத்திரத்தில் வேறு யாராவது மனிதனா யிருந்தால், காலில் கிடந்ததை எடுத்தே அடித்திருப்பேன்? என்னடா மேலதிகாரியைப் பற்றி இப்படிச் சொல்லுகிறனே என்று துரையவர்கள் நினைக்கப்படாது. அவர் தங்களைத் தூவித்தது அவ்வளவு அசங்கியமாக இருந்தது.

துரை:- (மிகவும் ஆத்திரமாக) என்னவென்று திட்டினார்.

தாசில்:- தயவு செய்து மன்னிக்க வேண்டும். நான் சொன்னால் துரையவர்களுக்கு வருங்கோபத்தில், என்னைக் கூட அடித்துவிடுவீர்கள்.

துரை:- அவர் சொன்னதற்காக உம்மிடம் கோபிப்பதேன், பாதகமில்லை; சொல்லும்.

தாசில்:- (மிகவும் தயங்கி) தாங்கள் அம்பட்டனுடைய பிள்ளையாம்; சின்ன ஜாதிப் பயலாம்; அற்பத்தனம் உள்ளவர்களாம் குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்த மாதிரி உங்களிடம் இந்த ஜில்லாவை ஒப்புவித்து விட்டார்களாம். தாங்கள் சென்ற வருஷம் நீண்டகால ரஜாவின் மேல் சீமைக்குப் போயிருந்த காலத்தில் வெங்கம்பட்டி வாண்டையார் உங்களை சீமையில் பார்த்தாராம்; அப்போது நீங்கள் உங்களுடைய அப்பனுக்குத் தலை சிரைத்துக் கொண்டிருந்தீர்களாம். உங்கள் வீடு, குப்பைத் தொட்டி போலிருந்ததாம். அவரை உட்காரவைக்க இடங்கூட இல்லையாம்; இப்பேர்பட்ட கீழ்ச்சாதி நாய்க்கு மனதிரக்கம் உண்டாகாதாம். அவர் சொன்ன ஆபாசமான வார்த்தைகளை வாயில் வைத்துச் சொல்வதுகூட அவமானம்; இப்படிப்பட்ட மனிதர் நாளைக்கு தாம் ஒன்றும் சொல்ல வில்லையே யென்று சொன்னாலும் சொல்லிவிடுவார். என்னவோ இந்த மனிதருக்கு கெட்டுப்போகும் காலம் கிட்டிவிட்டதென்று நினைத்து நான் பதில் பேசாமலிருந்து விட்டேன்- என்றார்.

அதைக் கேட்ட துரைக்கு வீராவேசம் பொங்கியெழுந்து கை,கால், மீசை முதலியவை துடித்தன. கண்கள் கோவைப் பழமாகச் சிவந்தன. அதுவரையில் அவர் அத்தகைய இழிவான சொற்களைக் கேட்டறியாதவர். ஆகையால் அது சகிக்கக்கூடாத அவமானமாயிருந்தது. அவர் தம்முடைய படபடப்பை அடக்கிக்கொள்ள பத்துநிமிஷ நேரமானது. வெங்கம்பட்டி வாண்டையார் அவரைச் சீமையில் கண்டது உண்மை. ஆகையால், சாம்பசிவம், அவ்வாறு நிச்சயமாகச் சொல்லியிருப்பார் என்று துரை எண்ணிக்கொண்டார்.

துரை:- சரி; தூஷித்ததை விடுத்து மேலே நடந்த விஷயத்தைச் சொல்லும்; அவருக்கு எதற்காக ரஜா வேண்டுமென்று கேட்டாராம்? -

தாசில் :- அவருடைய பெண்ணுக்கு உடம்பு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், அவர் உடனே வந்தால் முகத்தில் முழிக்கலாம் என்றும் தந்தி வந்திருப்பதாக என்னிடம் பெரும் புளுகாய்ப் புளுகினார். காற்றில் பறந்து வந்து அவர் வீட்டில் முற்றத்தில் கிடந்த இந்தத் தந்தியை நான் தற்செயலாகக் கண்டேன். உங்களுக்குக் காட்டலாம் என்று எடுத்து வந்தேன்.

துரை:- பெண்ணைத்தான் இவர் இங்கே அழைத்து வந்துவிட்டாரே, பெண் நோய் கண்டிருக்கிறாள் என்று சொல்லி ரஜா வாங்கிக்கொண்டு பட்டணம் போவதேன்? எனக்கொன்றும் விளங்கவில்லையே?

தாசில்:- இது சாதாரணமாக உலகத்தில் நடக்கக்கூடிய விஷயமாயிருந்தால் எளிதில் விளங்கியிருக்கும். இது அசாதாரணமான காரியம்; வேறு எங்கும் நடக்காத அநியாயம். சேவகர்கள் இதைப்பற்றி மிகவும் இழிவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்; அப்போது அவர்கள் சொன்னதை நம்பாமல், அவர்களைக் கண்டித்தேன். அது இப்போது நிஜமாய்ப்போய்விட்டது; இந்த மனிதர் எவ்விதமான பஞ்சமா பாதகங்களுக்கும் துணிந்தவராக இருக்கிறார். இப்பேர்ப்பட்ட மனிதர்களாலேயே பிராம்மண ஜாதிக்கு ஒரு இழிவு உண்டாய்விட்டது. இதைச் சொல்ல வாய் கூசுகிறது.

துரை:- (ஏளனமாக) இந்தப் பெரிய மனிதருடைய யோக்கியதையைச் சொன்னதுதான் சொன்னீர் முழுவதும் சொல்லும்; கேட்டு சந்தோஷப்படுவோம். பெண் இப்போது இங்கேதானே இருக்கிறாள்?

தாசில்:- பெண்ணை நான் பார்க்க முடியவில்லை. சேவகர்களிடம் விசாரித்தேன், அவர்கள் பெண் இங்கே வரவில்லை யென்று சொல்லுகிறார்கள். உண்மையான விஷயத்தை உங்களுக்குச் சொல்லத் தடையொன்றுமில்லை. இந்தப் பெண் அபூர்வமான அழகுடையவளாம். அவருக்கு இவள் ஒரே குழந்தை. ஆதாலால், இவளை விடுத்து அவர் ஒருநிமிஷங்கூட பிரிகிறதில்லையாம்; இரண்டு வயது முதல் இவர் அவளைத் தம்முடைய படுக்கையிலேயே விடுத்துக் கொண்டு படுத்துக்கொள்வது வழக்கமாம்; இவள் இரண்டு வருஷத்திற்கு முன் புஷ்பவதி யானாளாம்; புஷ்பவதியான பிறகும் இவர் அப்படியே செய்துவந்தாராம். ஒரு வருஷமான பிறகு புருஷன் வீட்டார் பெண்ணை அனுப்பும்படி கேட்டார்களாம். மருமகன் இங்கேயே வந்திருந்து வக்கீல் வேலை செய்யட்டும் என்று இவர் சொல்லிவிட்டாராம்; பிறகு இவருடைய தாய் மனைவி அண்டை அயலார் முதலியோரின் தொல்லைக்குப் பயந்து, பெண்ணை புருஷன் வீட்டுக்கு அனுப்பினாராம். பெண் அங்கு சென்று ஐந்தாறு மாசங்கள் இருந்தபின், புருஷன் தன்னை அடித்து வருத்துவதாக தகப்பனுக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதை இவர் ஒரு பெருத்த ஆதாரமாக வைத்துக் கொண்டு சேவக ரெங்கராஜு முதலியோரின் பக்க பலத்தோடு பட்டணம் போய் மருமகப் பிள்ளையை அடித்துவிட்டு பெண்ணைப் பலவந்தமாக அழைத்துவந்து விட்டார். சென்ற ஒரு வருஷகாலமாக பெண் இங்கேயே இருந்தது. அதற்குள் ரகசியம் நன்றாய் வெளியாகி விட்டது. விஷயம் இன்னதென்று நான் விரிவாகச் சொல்லவேண்டுவதில்லை யென்று நினைக்கிறேன். அவர் சுற்றுப் பிரயாணம் போகும்போ தெல்லாம் அவரும் பெண்ணுமே போவது வழக்கம். வீட்டிலிருந்தாலும் வெளியிற் சென்றாலும், அவருக்கும் பெண்ணுக்கும் ஒரு படுக்கைதான். சேவகர்கள், கிராம அதிகாரிகள், கிராமத்து ஜனங்கள் யாவரும் இதைக் கண்டு காரித் துப்புகிறார்கள். பெண் வீட்டுக்காரர், இவருடைய வீட்டிலுள்ள தாயார், மனைவி முதலிய யாவரும் இவரை வற்புறுத்தி தூஷித்தமையால் இரு வாரத்திற்கு முன் பெண்ணைக் கொண்டுபோய் விட்டார். இரண்டு நாளைக்கு முன் இவர் என்ன நினைத்துக்கொண்டாரோ என்னவோ இரகசியமாய்ப் போய் பெண்ணை அழைத்து வந்திருக்கிறார்; ஆனால், பெண்ணை வீட்டிற்கு அழைத்துவரவில்லை. வேறு எவ்விடத்திலோ இரகசியமாக வைத்திருக்கிறார். மருமகப் பிள்ளையின் தந்தியைப் பார்த்தவுடனே தமக்கொன்றுந் தெரியாதென்றும், தாம் பட்டணத்திற்கு வரவில்லையென்றும், பெண் இவ்விடத்தில் இல்லை யென்றும் பதில் தந்தி அனுப்பி விட்டார். தம்முடைய தாயாரும், தாமும் போய்ப் பட்டணத்தில் மருமகப்பிள்ளையோடு கட்டியழுது விட்டு வர உத்தேசம்போலிருக்கிறது. அதற்காகவே ரஜா கேட்டிருக்கிறார் - என்றார்.

அந்த வரலாற்றை கேட்டதுரை பெரிதும் வியப்படைந்து கல்லாய்ச் சமைந்து பேச்சு மூச்சற்று உட்கார்ந்துவிட்டார்; தாசில்தார் சொன்னது தந்திக்குப் பொருத்தமாக இருந்தது. மருமகப் பிள்ளை இல்லாத சமயத்தில், அவர்களுடைய அநுமதியின்றி டிப்டி கலெக்டர் தமது பெண்ணை அழைத்து வந்து விட்டதாக எழுத்து மூலமான சாட்சி ஏற்பட்டிருந்தது. தாம் அவசரமாகப் பட்டணம் போக வேண்டுமென்று அவர் காலையில் எழுத்து மூலமாக ரஜாக் கேட்டிருக்கிறார். அதற்கு முன் பெண் ஒரு வருஷமிருந்து ஒருவாரத்திற்கு முன்னமே தான் கொண்டுபோய்விடப்பட்டாள். அவற்றை யெல்லாம் நன்றாக யோசித்த துரை, தாசில்தார் சொன்னது நிஜமென்று நம்பினவராய் மூக்கில் விரலை வைத்து, “என்ன ஆச்சரியம்! இது கேவலம் மிருகம் செய்யக்கூடிய காரியமே யொழிய மனிதர் செய்யத் தகுந்ததல்ல. இவன் என்னுடைய மாமனாராக மாத்திரம் இருந்தானானால், இவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பேன். இவன் லஞ்சம் வாங்கினதைக் கூட நான் இதுவரையில் நம்பாமல் இருந்தேன். இப்போது பார்த்தால் இந்த மனிதன் எந்தக் குற்றத்தையும் செய்யக்கூடியவனாக இருக்கிறான். சே இன்று சாயுங்காலம் இந்தச் சங்கதியா என் காதில் விழவேண்டும்! பாவம்! பாவம்!!” என்று கூறி விசனித்தார்.

தாசில்:- இதோடு நிற்கவில்லை. நீங்கள் ரஜா கொடுக்க மாட்டேனென்று உத்தரவு செய்தீர்களே! அவர் அதை மதித்தாரா? இதோ 7 1/2 மணிக்குப் பட்டணம் போகிறார். இவரும் இவருடைய தாயாரும் போகிறார்கள். சுற்றுப் பயணம் போவதாகச் சொல்லிவிட்டுப் பட்டணம் போகிறார். இப்போது 6 1/2 மணியாகிறது. துரை யவர்கள் இப்போது ரயிலுக்கு வந்தால் அதையும் ருஜுப்படுத்தி விடுகிறேன் என்றார்.

துரை:- சரி, அதையும் பார்த்துவிடுகிறேன். எழுந்திரும் போகலாம் - என்று கூறி எழுந்தார்.

இருவரும் உடனே புறப்பட்டு அரைக்கால் மைல் தூரத்திலிருந்த ரயில் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது மணி ஆறே முக்கால் ஆயிருந்தது. இருவரும் டிக்கட்டு கொடுக்கப்படும் இடத்திற்குப் போய், அவ்விடத்தில் நின்ற சேவக ரெங்கராஜுவைக் கண்டனர். இவர்களைக் கண்ட ரெங்கராஜா திடுக்கிட்டு நடுங்கி துரைக்கும், தாசில்தாருக்கும் குனிந்து சலாம் செய்தான். -

தாசில் :- எங்கடா வந்தாய்?

ரெங்க:- எசமான் ஊருக்கு போறாரு, டிக்கெட்டு வாங்க வந்தேன்.

தாசில்:- எந்த ஊருக்கு?

ரெங்க:- பட்டணத்துக்கு.

தாசில்:- யார் யார் போகிறார்கள்?

ரெங்க :- எசமானும் அவுங்க அம்மாவும்.

தாசில்:- என்ன விஷேசம்?

ரெங்க:- எசமானுடைய மகளுக்கு உடம்பு அசெளக்கியமாம், அதுக்காவ போறாங்க.

தாசில்:- பட்டணத்தில் எசமானுடைய மருமகப்பிள்ளை எந்தத் தெருவில் குடியிருக்கிறார்?

ரெங்க:- தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலே - என்றான்.

அப்போது துரை, “பட்டணத்துக்கு இப்போது எவ்வளவு ரூபா கட்டணம்?” என்றார்.

அந்தக் குறிப்பை அறிந்த தாந்தோனிராயர், “அடே! டிக்கெட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாய்? எங்கே டிக்கெட்டைக் கொடு” என்று கூறி, இரண்டு டிக்கெட்டு களையும் அவனிடமிருந்து வாங்கி துரையினிடத்தில் கொடுக்க, அவர் அவைகளில் பட்டணம் என்னும் பெயர் இருக்கிறதா என்பதையும் அவற்றில் இருந்த இலக்கத்தையும் பார்த்துக் கொண்டு திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

தாசில்:- எசமான் இங்கே வந்துவிட்டாரா?

ரெங்க:- இன்னமில்லை, 7-மணிக்கு வருவாங்க-என்றான்.

அதன் பிறகு இருவரும் அவனை அவ்விடத்திலேயே விடுத்து அப்பாற் சென்று ஒரு மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழிந்தது; டிப்டி கலெக்டரும், கனகம்மாளும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ரெங்கராஜு தன் கையில் வைத்திருந்த இரண்டு டிக்கெட்டுகளையும் சாம்பசிவத்தினிடம் கொடுத்தான்; அவர் வாங்கிக்கொண்டார். மூவரும் உள்ளே போனார்கள். இரண்டொரு நிமிஷ நேரத்தில் சென்னைக்குப் போகும் வண்டியும் வந்தது. சாம்பசிவமும், கனகம்மாளும் வண்டியில் ஏறிக்கொண்டனர். யாவற்றையும் மறைவிலிருந்த கலெக்டர் நேரில் பார்த்தார்.

தாசில்:- பார்த்தீர்களா மனிதருடைய யோக்கியதையை? ரஜா கொடுக்க முடியாதென்று நீங்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறீர்கள். அதை மீறிக்கொண்டு போகிறார். ரெங்கராஜுகையில் டிக்கட்டுகளுடன் நின்றபோது, நாம் கண்டு கொண்டபடியால், அவன் உண்மையைச் சொன்னான்; இல்லாவிடில் சுற்றுப்பிரயாணம் போயிருப்பதாகத் தான் அவனும் சொல்லுவான். இவர் பட்டணத்துக்குப்போய்த் திரும்பி வந்து, எங்கேயாவது சுற்றுப் பிரயாணம் போனதாக எழுதி பணம் வாங்கப் போகிறார்; பாருங்கள்- என்றார்.

நிகழ்ந்தவை யாவும் கனவோ வென்று ஐயமுற்று துரை திகைத்தார். சாம்பசிவம் எவ்விஷயத்திலும் அயோக்கிய தனமாக நடக்கக்கூடியவ ரென்றும் எத்தகைய இழிவான காரியத்தையும் செய்யப் பின்வாங்காதவர் என்றும் நினைத்து, அவர் விஷயத்தில் என்ன செய்வதென்பதை பற்றி யோசனை செய்து தாந்தோனியாரிடம், “நாம் இப்போது என்ன செய்யலாம்?”-என்றார்.

தாசில்:- அவர் இரண்டு நாளைக்கு முன்னர் ரஜா இல்லாமல் பட்டணம்போய், உத்தியோக முறையில் அம்பாள் சத்திரம் முதலிய இடங்களுக்குப் போனதாக பணம் வாங்கி, சர்க்காரை ஏமாற்றியிருக்கிறதற்கு எழுத்து மூலமான ருஜுவிருக்கிறது. அதைக் கொண்டு அவரைத் தண்டனை செய்விக்கலாம். தவிர, இப்போது ரஜா இல்லாமல் திரும்பவும் பட்டணம் போகிறார். இது வேலையினின்று நீக்கப்படத் தக்க குற்றம். இவற்றைத் தவிர, லஞ்சம் வாங்கின விஷயங்கள் இருக்கின்றன. இப்போதே நாமொன்று செய்யலாம்; பட்டணத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிக்கு ஒரு தந்தி கொடுத்து, தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் இருக்கும் வக்கீல் வராகசாமி அய்யங்கார் வீட்டிற்கு, தஞ்சை டிப்டி கலெக்டர் இன்னார் நாளை காலையில் வருகிறார் என்றும், அவரை அப்படியே கைதி (Arrest) செய்யவேண்டும் என்றும் உத்தரவு அனுப்புங்கள். அவர் பட்டணத்தில் ரஜா இல்லாமல் இருந்ததற்கும், அது சாட்சியாகும்- என்றார்.

அதைக் கேட்ட துரை கால்மணி நேரம் யோசனை செய்தார். அருகிலிருந்த தந்தியாபீசில் ஒரு தந்திக்காகிதம் வாங்கிவரச்செய்து அதில் ஏதோ விஷயத்தை எழுதி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு அதை உடனே அவசரமாக அனுப்பும்படி சொல்லிக் கொடுத்தார். அவ்வாறே தந்தி உடனே அனுப்பப்பட்டுப் போனது.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/018-022&oldid=1252756" இலிருந்து மீள்விக்கப்பட்டது