மேனகா 1/019-022

விக்கிமூலம் இலிருந்து


15-வது அதிகாரம்

கண்டதும் பொய் விண்டதும் பொய்

த்தாவது அதிகாரத்தின் முடிவில், நைனாமுகம்மது மரக்காயன், கட்டிலின் மீது படுத்திருந்த பெண்மணியை மேனகா வென்று நினைத்து அவளைப் புகழ்ந்தும் தனது மனைவியைத் தூற்றியும் அருகில் நெருங்கி அவளது முகத்தை வலுவாகத் திருப்ப, தன் மனைவி நூர்ஜஹானே அவ்விதம் படுத்திருந்தவள் என்று அறிந்து திடுக்கிட்டு அச்சங்கொண்டு மயங்கி வீழ்ந்து விட்டான் என்பது சொல்லப்பட்டதல்லவா.

நூர்ஜஹான் என்ற பெண்ணரசியின் அப்போதைய மனோ நிலைமையை உள்ளவிதம் அறிந்து கூற யாரே வல்லவர் மனிதர் முதல் விலங்கு பறவை புழு முதலிய இழிந்த ஜெந்துக்கள் வரையிலுள்ள ஆன்மாக்கள் எல்லாம் எதைப் பொறுக்கினும் பொறுக்கும், ஆனால் அதனதன் ஜோடி அதன் கண்முன்னாகவே இன்னொன்றுடன் விபச்சாரம் செய்வதை மாத்திரம் பொறுத்துச் சும்மாவிருக்க இயலாத காரியமல்லவா? அதனால் உண்டாகும் கோபமும், பகைமையும், மூர்க்கமும் அளவிறந்தனவாகும்; உடனே குத்து, வெட்டு, கொலை முதலிய கொடிய செய்கைகள் உண்டாதல் நிச்சயம். அப்படியே தனது கணவனுடைய கன்ன கடூரமான சொற்களையும், செய்யத்தகாத செயலையும், அன்றிரவு ஆரம்பம் முதல் கேட்டும் கண்டுமிருந்த நூர்ஜஹானின் மனதில் எழுந்த கோபமும் பொறாமையும் ஒரு சண்டமாருதத்திற்கு இணயாக இருந்ததென்று கூறுவதும் குன்றக் கூறியதாகும். “மேலும் என்ன நடக்குமோ பாாக்கலாம்” என்று நினைத்து நினைத்து அவள் மிகவும் பாடுபட்டு தம் மனத்தின் நிலைமையை வெளியிற் காட்டாமல் அடக்கிக் கொண்டிருந்தாள். அன்று நிகழ்ந்தவை யாவும் கனவோ அன்றி உண்மையோ என்று ஐயமுற்றாள். அதுகாறும் தன்னிடத்தில் பரம யோக்கியனைப் போலவும் நடித்து வந்த தனது கணவன், தன்னிடம் வரும்போதெல்லாம், “கண்ணே!” என்றும் “முத்தே!” என்றும் கொஞ்சிக் குலாவி, “உன்னை ஒரு நொடி விடுத்தாலும் உயிர் வாழ்வேனா” என்று சொல்லி வஞ்சித்துத் தன் மனதையும் காதலையும் ஒருங்கே கொள்ளை கொண்ட கணவன் - தன் கண்ணெதிரில் அப்படிச் செய்ததை உண்மை யென்று அவள் மனது எளிதில் நம்பவில்லை. அவளுக்கு யாவும் வியப்பையும் திகைப்பையும் கொடுத்தன. சித்தப்பிரம்மை கொண்டவளைப் போல உருட்டி உருட்டி விழித்தாள். அவளது மனத்தில் எழுந்த உணர்ச்சிகளும் எண்ணங்களும் புயற் காலத்தில் கடல் கொந்தளிப்பு ஆர்ப்பரித்தலைப் போல இருந்தன. ஆனால், திகைப்பு என்னும் பூட்டினால் வாயின் சொற்கள் பூட்டப்பட்டு வெளிப்படாமல் தடைபட்டு நின்றன.

அவள் ஒரு பெரிய குடும்பத்தில் உதித்த உத்தமி, நற்குண நல்லொழுக்கத்திற்கு இருப்பிடமானவள்; தமிழ் நாட்டுப் பெண்ணாகையால் அவள் இந்துஸ்தானி பாஷையிற் பேசுதல் மாத்திரம் அறிவாள். தமிழ் ஆங்கிலம் முதலிய இரண்டு பாஷைகளிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவள்; அவ்விரண்டு பாஷைகளிலும் கவிகள் பாடும் திறமை வாய்ந்தவள்; அழகிலும், புத்தியிலும் சிறந்தவள்; இயற்கை அழகும் குணமும் வாய்ந்த அவள், கல்வி கேள்விகள் நிரம்பப் பெற்று பட்டை தீட்டப்பெற்ற வைரக்கல்லைப் போல, தனிச்சுடராய் விளங்கினாள். அவளுடைய தந்தை சென்னை கவர்னரின் நிருவாக சபையில் ஒரு அங்கத்தினர்; அவர் செல்வாக்கும், செல்வமும் நிரம்ப உடையவர். அவரது அருமைப் புத்திரியாயிருந்தும் அவள் செருக்கென்பதே அற்றவளாய், பெண்களுக்கெல்லாம் நற்பெயரும் மேம்பாடும் தேடிக் கொடுக்கும் சட்டகமாய் விளங்கினாள். அவளது நடைஉடை தோற்றம் யாவும் மிருதுத் தன்மையையும், பொறுமையையுமே சுட்டின. அவள் தமிழ்ப் பாஷையிலுள்ள இதிஹாச புராணங்கள், நீதி நூல்கள், சமய நூல்கள் முதலியவற்றை நன்றாகப் படித்தவள் ஆதலின் இந்துக்களின் சகோதர வாஞ்சையையும் மனமார்ந்த அன்பையுங் கொண்டவள். பரிசுத்தமான பழக்க வழக்கங்களை உடையவள். கணவனிடம் பக்தியும், நம்பிக்கையும் நிரம்பக்கொண்டவள்; அவனே தனது உயிரென மதித்தவள். அத்தகைய கபடமற்ற ஸ்திரீ ரத்னம் தன் விஷயத்தில் நைனா முகம்மது அந்தரங்கத்திற் செய்து வந்த வஞ்சகங்களை அறிந்து, அதற்குப் போதிய ருஜாவையும் கண்ணிற்கு எதிரே காண்பாளாயின், அவள் மனது எப்பாடுதான் படாது? மாயாண்டிப் பிள்ளையின் கடிதங்களைக் கண்டபோது வராகசாமியின் மனம் எப்பாடு பட்டதோ, மேனகாவைப் பற்றி எவ்வகையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் கொண்டதோ அவற்றைக் காட்டினும் பதின்மடங்கு அதிகரித்த அல்லலையும் ஆத்திரத்தையும் நூர்ஜஹானது மனம் பெற்றது; அவள் புருஷனாகவும், நைனாமுகம்மது மனைவியாகவும் இருந்தால், தன் கண் முன்னே கண்ட விபசார நடத்தையின் பொருட்டு நைனா முகம்மதைக் கத்தியாற் குத்தி சித்தரவதை செய்து கண்டதுண்டமாக்கியிருப்பாள். அல்லது நைனாமுகம்மதுவின் கண் காண அவன் மனைவி அவ்விதமான தீய செயலைப் புரிய முயன்றிருந்தால், அவனும் அப்படியே செய்வான் என்பதற்கு ஆட்சேபனையில்லை. ஆனால், பெண் பேதையாகி அவள் அவனை அவ்வாறு தண்டித்தல் கூடுமா? கணவன் மீது அதிகாரமற்ற அபலையின் மனதில் எவ்வளவு வீராவேசம் தோன்றினாலும் அதனால் யாது பயன்? கணவன் மனைவி என்னும் சம்பந்தத்தில் பலவான் கட்சியே நீதியானதாக வல்லவோ இருந்து வருகிறது. நூர்ஜஹான் யாது செய்தாள்? ஆண்மக்களைப் போல கொல்ல வேண்டும் என்னும் நினைவைக் கொண்டாளா? இல்லை; தனது ஆருயிர்க் கணவனது தேகம் - தனக்கே உரிய பொருளாகியதன் கணவனது - தேகம் அன்னிய மாதரால் தீண்டப்படுவதா வென்னும் பொறாமை ஒன்றையே கொண்டாள். அவனது தேகத்தின் மதிப்பு அவள் மதிப்புக்கு முன்னிலும் கோடி மடங்கு உயர்ந்து தோன்றியது. பிற மாதர் மீது சிதறிச்சென்றிருந்த அவனது ஆசை முழுதும் தன்மீது திரும்பிவிட, இந்த உலகத்தை அவள் கொடுக்கக் கூடுமாயின், அப்படியே செய்துவிடுவாள். கணவனைத் தண்டிக்க வேண்டுமென்னும் விருப்பத்தை அவள் கொள்ளாவிடினும் அவன் விஷயத்தில் பெரிதும் அருவருப்பும், ஆத்திரமும் அடைந்தாள். உடனே எழுந்து அவனை விடுத்து அப்பாற் போய்விட வேண்டுமென்னும் பதைபதைப்பு மாத்திரம் தோன்றியது. படுத்திருந்தவள் சுருக்கென எழுந்து உட்கார்ந்தாள்.

அதற்குள், முதல் பயத்திலிருந்தும் மன அதிர்ச்சியிலிருந்தும் தெளிவடைந்த நைனா முகம்மது சிறிது துணிவைப் பெற்றான். அவன் தனது சபல புத்தியினாலும் தன்னோடு பழகும் மற்ற புருஷரின் கெட்ட நடத்தையைக் கண்டும் விபச்சாரத்தில் விருப்பம் கொண்டவனாயினும், அவன் தன் மனைவியின் பாண்டித்தியம், புத்திசாலித்தனம், நற்குணம் முதலியவற்றைக் கண்டு அவளிடம் உள்ளார்ந்த அச்சங் கொண்டவன்; செல்வாக்கையுங் கருதி, அவளிடம் பெருத்த மதிப்பும் வைத்திருந்தவன். ஆகையால் அவன் அவளைக் கேவலம் தனக்குள்ளடங்கிய மனைவி தானே என அசட்டை செய்யத் துணியவில்லை. அவள் வெளியிற்போய் தனக்கு எவ்விதமான தீங்கைச் செய்வாளோ, விஷயத்தை அவளுடைய தந்தை அறிவாரானால், அவர் எவ்விதமான துன்பம் இழைப்பாரோ என்றும் பெரிதும் அச்சமும் கவலையும் கொண்டான். அவளால் மேனகா விடுவிக்கப்பட்டுப் போனாள் என்பதை உடனே யூகித்துக்கொண்டான். ஆதலின், மேனகா தன் கணவனிடம் சென்று நிகழ்ந்ததைத் தெரிவிப்பாளாயின் அதனால் தனக்கு எவ்வகையான பொல்லாங்கு சம்பவிக்குமோ என்று ஒரு புறத்தில் கலங்கினான்; மேனகா எங்கு சென்றாள் என்பதை இவளிடம் அறிந்து, மேனகா இன்னமும் தன் வீட்டில் இருந்தால், தன்னைக் காட்டிக் கொடாமலிருக்க நூர்ஜஹான் மூலமாக ஏற்பாடு செய்ய நினைத்ததும் அன்றி, தன் மனைவியின் கோபத்தையும் தணித்து அவளுடைய அன்பைத் திருப்பவும் நினைத்தான்; இவ்விரண்டு காரியங்களும் மிகவும் எளிதில் சாதிக்கக் கூடிய விஷயங்களல்லவா! அவ்வெண்ணம் மலையை விழுங்கினவன் அதை ஜீரணம் செய்து கொள்ள சுக்குக் கஷாயம் குடிக்க நினைத்தது போலிருந்தது எழுந்து உட்கார்ந்த தன் மனைவியின் கரத்தை அவன் மெல்லப் பிடித்தான். ஆல கால விஷத்தைக் கொண்ட கொடிய நாகம் தனது கையின் மேல் பட்டதைப்போல மதித்த நூர்ஜஹான், தனது கையை அப்பால் இழுத்துக்கொண்டு விரைந்து கட்டிலை விட்டுக் கீழே இறங்கினாள். அவனும் எழுந்து பாய்ந்து அவளை இறுகக் கட்டிப் பிடித்தான். நூர்ஜஹானுக்கு அடக்க முடியா ஆத்திரமும், அழுகையும், அருவருப்பும் மிகுந்த உரத்தோடு பொங்கி யெழுந்தன. அவனைக் காண்பதற்கும் அவளது கண்கள் கூசின; தன் சுந்தர வதனத்தை அப்புறம் திருப்பிய வண்ணம் பதைபதைத்தவளாய்த் தன்னை விடுவித்துக் கொண்டு போய்விடவேண்டும் என்னும் ஆவலோடு நின்றாள். நைனா முகம்மது அவளை முரட்டாட்டமாக இழுத்துக் கட்டிலில் உட்காரவைத்து, தானும் அவளுக்கருகில் உட்கார்ந்து அவளது மோவாயை தன் வலக்கரத்தால் தாங்கி முகத்தைத் தன் பக்கம் திருப்பி நயமாக, “அப்பாடா! எவ்வளவு கோபம்! எவ்வளவு ரோஷம்! நீ ஆண் பிள்ளையாக மாத்திரம் இருந்தால் இந்நேரம் என்பாடு திண்டாட்டமாயிருக்கும்” என்று மிகவும் கொஞ்சிய குரலால் பேசி, தனது முகத்தை அவளுடைய முகத்திற்கு அருகில் கொணர்ந்து, “கண்ணே! இவ்வளவுதானா உன்புத்தியின் மேன்மை! இதையெல்லாம் உண்மை யென்று நினைத்துக் கொண்டாயா! ஆகா! நீ பிராமணப்பெண்ணைப் போலவே இருக்கிறாயே! இம்மாதிரி உடைதரிக்க நீ எங்கு கற்றுக் கொண்டாய்? இந்த உடையில் உன் அழகே குறைந்து போய்விட்டதே! இதை நீ சீக்கிரம் விலக்கி விட்டால், அதன் பிறகே என் கண்ணாட்டியான நூர்ஜஹான் தன் இயற்கை அழகில் விளங்குவாள். இதையெல்லாம் உண்மை யென்று நினைக்காதே!” என்று தேன்போல மொழிந்து முகத்தில் முத்தமிட முயல, அவள் மகா அருவருப்போடு தனது முகத்தை அப்பால் இழுத்துக்கொண்டு, “எதை யெல்லாம் ?” எனறு கேட்டாள்.

நைனாமுகம்மது, “என்ன ஒன்றையும் அறியாதவளைப் போலக் கேட்கிறாயே! நடந்ததையெல்லாம் நான் திரும்பச் சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா? அதிருக்கட்டும், இந்தப்பெண் எங்கிருக்கிறாள்? இங்கேயே இருக்கிறாளா? தன்னுடைய வீட்டுக்குப் போய்விட்டாளா? அதைத் தெரிவி! கோபிக்காதே! என் சீமாட்டியல்லவா! “ஆறுவது சினம்” என்று தினந்தினம் படித்துக் கொண்டேயிருப்பாயே; அதை நினைத்துக்கொள். இதன் உண்மையையெல்லாம் நான் உனக்குப் பின்னால் விரிவாய்ச் சொல்லுகிறேன். அப்போது நான் குற்றமற்றவன் என்று நீ நிச்சயமாக அறிவாய். முதலில் அவள் எங்கிருக்கிறாள் என்பதைத் தெரிவி” என்று தந்திரமாக மொழிந்தான்.

நூர்ஜஹான் ஒன்றையும் அறியாதவளைப்போல, “பெண்ணா! எந்தப் பெண்?” என்றாள். நைனா முகம்மது புன்சிரிப்பைக் காட்டி, “ஆகா என்ன வேஷம் இது? அவளை உனக்குத் தெரியாதா? கொஞ்ச நேரத்துக்கு முன் இங்கிருந் தாளே அவள் தான்; இதோ உன் மேலிருக்கும் உடைக்கு எவள் சொந்தக்காரியோ அவள்தான்” என்றான்.

நூர்ஜஹான் பைத்தியங் கொண்டவளைப் போல உருட்டிப்பார்த்து, “என்ன ஆச்சரியம்! இதெல்லாம் கனவில் நடக்கிறது என்றல்லவோ நினைத்தேன்! உண்மையாக இவ்விடத்தில் வேறொரு பெண் வந்தாளா? அவளிடம் சொல்லப்பட்ட வார்த்தையெல்லாம் உங்களால் சொல்லப் பட்டது தானா?” என்றாள்.

அவள் பெருங்கொதிப்பை தன் மனதில் அடக்கிக் கொண்டு அவ்வாறு கேட்கிறாள் என்பதை உணர்ந்து எவ்விதமாயினும் அவளைச் சாந்தப்படுத்தாமல் விடக்கூடா தென உறுதிசெய்து கொண்டு அவன் முன்னிலும் இளக்கமும் உருக்கமும் காட்டி, “நூர்ஜஹான் என் தங்கமே! என்னைச் சோதித்தது போதும், காரியம் இப்படி விபரீதத்துக்கு வருமென்று முன்னமே ஒருவகையான சந்தேகம் உதித்தது. இதை நீ தப்பாக நினைத்துக்கொள்வாய் என்று எண்ணினேன்; அப்படியே செய்து விட்டாய். கோபிக்காமல் கொஞ்சமும் பொறுமை யோடு நடந்துகொள். நீ அருமையான உயர்ந்த குணமு டையவள் என்பதை இந்தச் சமயத்தில் நீ அவசியம் காட்டக் கடமைப்பட்டவள். இதிலேதான் உன்னுடைய மேன்மை இன்னமும் உயரப்போகிறது. ஒன்றையும் அறியாத அசட்டுப் பெண்களைப்போல , நீயும் இப்படி ஆத்திரம் அடைவதைக் காண என் மனம் வருந்துகிறது. உன்னுடைய உண்மைக் காதலை சோதனை செய்யவே இந்த நாடகத்தை நான் ஆடினேன். இது நிஜமான செய்கையல்ல. இதில் உன்னுடைய காதலின் பெருமையை உள்ளபடி அறிந்தேன். ஆனால், இதனால் உன்னுடைய உண்மைக் காதலை மாத்திரம் நான் அறிந்தேன் அன்றி உன் மீது எனக்குள்ள காதலை நீ சந்தேகிக்கும்படி செய்துகொண்டது மாத்திரம் ஒரு மூடத்தனம். நான் இப்படி விஷப்பரிட்சை செய்திருக்கக்கூடாது. என் காதலை உனக்கு நான் இன்னொரு முறை நான்றாக மெய்ப்பிக்கிறேன். அதுவரையில் பொறுமையோடு இரு; இப்போது பெருந்தன்மையோடு நடப்பாயானால், இதனால் உனக்கு ஒரு குறைவும் வராது. நாமிருவரும் இனி உயிரும் உடலுமென ஒன்று பட்டு வாழலாம்” என்று கூறி, அன்போடு அவளைக் கட்டி ஆலிங்கனம் செய்தான். குஷ்டநோய் கொண்டவரைக் கண்டு மனிதர் அருவருப்படைந்து அஞ்சி விலகுதலைப்போல, அவள் அவனது ஆலிங்கனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அப்பால் நழுவி, “என்ன இது மறந்துவிட்டீர்களா? கழுதையிலும் தாழ்ந்த மிருகமல்லவா! நான் தங்களைப் போன்ற மனிதப் பிறப்பினர் என்னைக் கையாலும் தொடலாமா! சே! இதென்ன கேவலம், இழிவான காரியம்! இந்த எருமை மாட்டை இனி பார்ப்பதே இல்லை யென்று இப்போதுதானே சொன்னீர்கள்! நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். தங்கள் உத்தரவுப்படி நடக்க நான் கடமைப்பட்டவள். நான் போய்வருகிறேன். இதுவே நான் தங்களைக் கடைசியாகப் பார்ப்பது; உத்தரவு பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறிக்கொண்டு எழுந்து விசையாக இரண்டோர் அடிகள் வைத்தாள். பெரிதும் வெட்கி அவமானம் அடைந்த அவன், வழிமறித்துக் குறுக்கில் நின்று, “கடைசியாகப் பார்ப்பதா! எங்கே போகிறாய்? உன்னை விட்டுப் பிரிந்து நான் ஒரு நிமிஷமும் உயிருடன் இருப்பேனா? என் சீமாட்டி! கோபித்தது போதும்; உட்கார்ந்துகொள்; இந்த நடுராத்திரியில் எங்கே போகிறாய்? இப்படியே படுத்துக்கொள்” என்றான்.

நூர்ஜ:- எங்கே போகிறேனா! நான் மேனகாவின் வீட்டுக்குப் போகவேண்டாமா? மறந்துவிட்டீர்களா?

நைனா:- (அன்பாக) சே! நீ போகவேண்டாம்; நானே பெட்டி வண்டியில் வைத்து அவளைக் கொண்டுபோய் அவளுடைய வீட்டில் விட்டு வருகிறேன்.இதற்காக நீ ஏன் போக வேண்டும்?

நூர்ஜ:- இப்படி முன்னுக்குப்பின் விரோதமாக நீங்கள் பேசினால் நான் எதைச் செய்கிறது? மேனகாவுக்குப் பதிலாக அவளுடைய புருஷனிடம் என்னை அனுப்புகிறேன் என்று சொன்னீர்களே! அது ஞாபகமில்லையா? தங்களுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்யாமல் அடிமையாகிய நான் வேறு எதற்காக இருக்கிறேன்? உத்தரவு பெற்றுக்கொள்கிறேன் என்று மேலும் நடந்தாள். கூர்மையான அம்பால் அடிக்கப்பட்ட பறவையைப்போல நைனாமுகம்மது ஒரு நிமிஷம் தத்தளித்துத் தடுமாற்றம் அடைந்தான் தன்னுடைய பிழையை மறைக்கப் புன்னகை செய்தான். ஆனால், முகத்தில் அசடு வழிந்தது. குற்றமுள்ள மனதாகையால் தன் வினை தன்னையே சுட்டது. என்றாலும் அச்சத்தினால் தூண்டப்பட்டவனாய் விரைந்தோடினான். வாயிற் படியைக் கடந்துகொண்டிருந்த நூர்ஜஹானின் இடையில் கையைக்கொடுத்துக் குழந்தையை எடுப்பது போலத் தூக்கிக்கொணர்ந்து கட்டிலின் மேல் பலவந்தமாக உட்காரவைத்து, “நூர்ஜஹான்! என்ன இது? என்றைக்கும் என் மனம்போல் நடப்பவள் இன்றைக்கு இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாயே! இது ஆச்சரியமாகவே இருக்கிறது! நான் கபடமாக அவளிடம் பேசியதை நீ உண்மை யென்று நினைத்து இப்படி கோபிக்கிறாயே! உன்னை அன்னிய புருஷனிடம் அனுப்ப நான் பேடி யென்று நினைத்தாயா? வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தைகளை யெல்லாம் நிஜமாக நினைத்துக்கொள்ளலாமோ? எவ்வளவோ படித்த புத்திசாலியான நீ இப்படிப் பிணங்குவது சரியல்ல” என்று கூறிக் கெஞ்சி மன்றாடினான்.

நூர்ஜ:- இப்போதும் தங்களுடைய சொற்படிதானே செய்யப்போகிறேன். ஏன் என்னை இப்படி முரட்டுத்தனமாக கட்டாயப் படுத்துகிறது? ஆண்பிள்ளையாகிய உங்களுக்கு உடம்பில் பலம் அதிகம்; அபலைகளாகிய பெண்டு பிள்ளை களைக் காப்பாற்றும் பொருட்டு ஆண்பிள்ளைகளுக்கு ஆண்டவன் அதிக பலத்தைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் பெண்டுபிள்ளைகளை வஞ்சித்துத் தம்மிச்சைப்படி வற்புறுத்துவதற்கு அந்தப் பலத்தை உபயோகிக்கிறீர்கள். உங்களுக்கு அதிக பலமிருக்கிறது என்று அதன் உதவியால் உங்கள் விருப்பமே சட்டமாகச் செய்கிறீர்கள். நீங்கள் எங்களது கண்ணிற்கு எதிரே விபச்சாரம் செய்தாலும் நாங்கள் அதற்கு அநுசரணையாக இருந்து காதலராகிய உங்கள் இருவரையும் ஆசீர்வதிக்க வேண்டும்; ஆனால், நாங்கள் மாத்திரம் மிகவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இது என்ன நியாயமோ தெரியவில்லை. இது வலுக் கட்டாயமான நியாயமன்றி மனிதருடைய பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத நியாயம். அன்னிய புருஷனிடம் பெண்டாட்டியை அனுப்பும் பேடியா நான் என்கிறீர்களே? நீங்கள் ஒவ்வொரு தினமும் ஒரு அன்னிய ஸ்திரீயை அபகரித்து வருவதாகச் சொன்னீர்களே, அவர்களுடைய புருஷர்களெல்லாம் பேடிகளென்று நினைத்தீர்களா? நீங்கள் ஒருவரே உலகத்தில் பேடித்தனம் இல்லாதவர்கள் போலிருக்கிறது? அவர்களுடைய புருஷர் அறியாமல் திருட்டுத்தனமாகக் கொணர்ந்து துணையற்ற இடத்தில் வைத்துக்கொண்டு பெண்களை வற்புறுத்துவது சூரத்தனம் போலிருக்கிறது! அவர்களுடைய புருஷர்கள் தாம் பேடிகளாயிற்றே. அவர்களுக்கு முன்னால் நேரில் போய் இந்தக் காரியத்தை ஏன் செய்யக்கூடாது? இருக்கட்டும்; இந்த விஷயத்தை நியாய ஸ்தலத்திற்கே கொண்டுபோய் எது சூரத்தனம் என்பதை அறிந்து கொள்வோம்! இன்று வந்த மேனகா இந்நேரம் தன்னுடைய வீடுபோய்ச்சேர்ந்திருப்பாள். நாளைய தினமே நியாயாதிபதி இடத்தில் வழக்கு தொடருவதாகச் சொல்லி இருக்கிறாள். இங்கு நடந்த விஷயங்களையெல்லாம், நானும், என் அக்காளும், மற்றும் வேலைக்காரரும் நேரில் பார்த்திருந்தோம். அவளுடைய கற்பை அவளது கணவனுக்கு ருஜுப்படுத்த வேண்டும் அல்லவா! அதற்காக எங்களை யெல்லாம் அவள் சாட்சியாகக் கோரப் போகிறாள். நியாயாதிபதி, குரானை வைத்துக் கொண்டு சத்தியம் செய்யச் சொன்னால், நாங்கள் உயிர் போவதானாலும் பொய் சொல்லமாட்டோம்; நடந்த வற்றையே சொல்வோம். அங்கிருந்து இந்த சூரப்புலி தப்பி வந்தால் இனி மேலும் தினந்தினம் ஒரு அன்னியப் பெண்ணைக் கொண்டுவரலாம்; ஆனால், மேனகாவின் புருஷனுக்கு என்னைக் கொடுத்து விட்டால், பிறகு தினம் தினம் இங்கு வரும் பெண்களின் புருஷர்களுக்குக் கொடுக்க அத்தனை நூர்ஜஹான்களுக்கு எங்கே போவீர்கள்? இதற்காகத்தான் தனியாக இந்த சயன அறையை வைத்துக் கொண்டி ருக்கிறீர்களோ? அடாடா? என்னை எவ்வளவோ அருமையாக வளர்த்த என் தந்தை இருந்திருந்து என்னை நல்ல புருஷருக்கு கொடுத்தார் என் தலைவிதி இப்படியா இருக்க வேண்டும் நான் அவரிடம் போய் எல்லாவற்றையும் சொல்லுகிறேன்; அவர் இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடையட்டும். போய் வருகிறேன். இனி உங்கள் முகத்திலும் விழிப்பேனென்று நினைக்க வேண்டாம்; என்னை விடுங்கள்” என்று கூறித் திமிறிக்கொண்டு எழுந்தாள். அவன் அவளை விடாமல் பிடித்துக்கொண்டு எழுந்து, “சே! என்ன பிடிவாதம் இது? உனக்கு நான் உண்மையில் வஞ்சம் செய்வேன் என்றா நினைத்தாய்? என்ன முட்டாள்தனம் இது! உன் மனதைப் பரீட்சை செய்தேனென்று நான் எவ்வளவு சொல்லியும் நீ நம்பமாட்டேன் என்கிறாயே? உனக்கு என்மீது அந்தரங்கமான காதலிருப்பதாக இதனால் நான் உணர்ந்து விட்டேன். என்னைப் பார்க்கிலும் பாக்கியவான் ஒருவனும் இருக்கமாட்டான். நான் இப்போது அடையும் ஆநந்தத்திற்கு அளவில்லை. அதை வீணாக நீ கெடுக்காதே!” என்று நயந்து கெஞ்சிக் கூத்தாடி அவளை அணைத்து சரச சல்லாபம் செய்யத் தொடங்கினான். அது காறும் தன்னுடைய ஆத்திரத்தை மிகவும் பாடுபட்டு அடக்கிக்கொண்டிருந்த நூர்ஜஹான் தனது பொறுமையை இழந்து, கோபம் மூட்டப்பட்ட சிங்கத்தைப் போலானாள். மகா ஆத்திரத்தோடும் கம்பீரமாகவும் தனது கணவன்முகத்தைப் பார்த்து, “இது யாரை ஏமாற்றும் வித்தை? நான் ஒன்றையும் அறியாத முட்டாள் என்று மதிக்க வேண்டாம். இதுவரையில் எனக்குத் தெரியாமல் என்னை முட்டாளாக்கிய திலிருந்து, எல்லாவற்றையும் நான் அறிந்த பிறகும் என்னை ஏமாற்ற நினைத்தீர்களா! அது ஒருநாளும் பலிக்காது. இந்த நியாயத்தையும் கச்சேரியில் சொல்லிக் கொள்வோம்” என்று கூறித் தனது முழுபலத்தையும் செலுத்தி அவனை மீறித்தன்னை விடுவித்துக்கொண்டு விரைந்தோடினாள். எதிர்பாராத அந்த அம்பு பாய்ந்ததனால் தளர்வடைந்து சிறிது தயங்கியபின் எதையோ நினைத்துக் கொண்டு அவளைத் துரத்தி ஓடினான். அவள் அந்த அறையை விடுத்து அப்பாற் சென்றாள். அவனும் விடாமல் தொடர்ந்தான். இரண்டொரு அறைகளைக் கடந்தவுடன் அவள், “அக்கா! அக்கா!” என்று உரக்கக் கூவ, சற்று துரத்திலிருந்து, “ஏன் அம்மா! இதோ வந்தேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. அதைக் கண்ட நைனா முகம்மது தயங்கி நின்றுவிட்டான். அவ்வீட்டில் இரண்டு நாட்களாக வந்திருந்த நூர்ஜஹானுடைய அக்காள் கோஷா ஸ்திரீயாதலால் அவளை நைனாமுகம்மது பார்த்தல் கூடாது; ஆகையால், தான் செய்யவேண்டுவது என்னவென்பதை அறியாமல் தத்தளித்துக் கலங்கினான். அச்சம் மேற்கொண்டு அவனைப் பெரிதும் வதைத்தது. நிற்கவும் வலுவற்றவனானான்; அவர்கள் என்ன செய்வார்களோ, மேனகா எங்கிருக்கிறாளோ, அவள் தனது வீட்டிற்குச் சென்றால் அதனால் என்னதுன்பம் சம்பவிக்குமோ, அதைத் தன் மாமனார் உணர்ந்தால் அதனால் என்ன விபரீதம் நேருமோ வென்று பலவாறு நினைத்துக் கலங்கினான். என்றாலும், தன் மனைவி தன்னை எவ்விதம் கோபித்துக் கடிந்தாலும் தன்மீதுள்ள ஆழ்ந்த அபிமானத்தினால் தன்னைக் காட்டிக்கொடுக்க மாட்டாள் என்று ஒரு அந்தரங்கமான குரல் அவன் மனதில் கூறியது. மிகவும் களைப்படைந்தவனாய்த் தனது சயன அறைக்குள்ளிருந்த கட்டிலில் படுத்து நித்திரையின்றி வருந்திக் கிடந்தான்.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/019-022&oldid=1252757" இலிருந்து மீள்விக்கப்பட்டது