மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/10. உணவும் உடையும்

விக்கிமூலம் இலிருந்து
10. உணவும் உடையும்

விளைபொருள்கள்

சிந்து ஆற்றுவெளி பருவ மழையும் ஆற்றுப் பாய்ச்சலும் சிறப்புறப் பெற்று விளங்கியதாகும். ஆதலின், அங்கு இருந்த நிலங்கள் செழிப்புற்று இருந்தன; வண்டல் மண் படிந்திருந்தன: சிறந்த மருதநிலங்களாக விளங்கின. ஆதலின், அங்குக் கோதுமை, நெல், வாற் கோதுமை (பார்லி), பருத்தி, பட்டாணி, எள், பேரிந்து, முலாம்பழம் முதலியன ஏராளமாகப் பயிராக்கப்பட்டன. இன்றும் அப்பகுதிகளில் நெல்லும் கோதுமையும் சிறப்புடை விளை பொருள்களாக இருத்தல் கவனிக்கத் தக்கது. இப்பலவகை விளைபொருள்களை அப்பண்டை மக்கள் தாழிகளிற் சேமித்து வைத்திருந்தனர்.அத்தாழிகள் நிலத்தில் பாதியளவு புதைக்கப் பட்டிருந்தன.

மருத நிலமும் நகர் வளமும்

இங்ஙனம் மருத நிலப்பண்பு மிகுதிப்பட்ட சிந்துவெளியில், நகரங்கள் செழிப்புற்று இருந்தன என்பதில் வியப்பொன்றும் இல்லை அன்றோ? ஆற்றுப்பாய்ச்சல் பெற்ற மருத நிலமே, மக்கள் நாகரிக வாழ்க்கை நடத்த ஏற்றதெனத் தமிழ்நூல்களும் சான்று பகர்கின்றன. அங்குத்தான் அழகிய நகரங்களும் கோட்டை கொத்தளங்களும் அமைக்கப்படுதல் பெருவழக்கு ஆரியர், சிந்து-கங்கைச் சமவெளிகளில் நூற்றுக்கணக்கான அநாரியர் நகரங்கள் இருந்தன என்று ரிக் வேதத்தில் கூறியிருத்தலையும் சிந்து வெளியில் சுமார் 3200 கி. மீ. தொலைவு சுற்றிப் பல பண்டை நகரங்கள் மண் மூடு பட்டுக் கிடக்கின்றன; அவற்றைத் தோண்டி ஆராய்ச்சி நட்த்துதல் வேண்டும் என்று அறிஞர் பானர்ஜீ தம் அறிக்கையிற் கூறியிருத்தலையும் நோக்க, சிந்துப் பிரதேசத்தின் வளமும் அவ்வளப்பங் காரணமாகப் பல நகரங்கள் அங்கு அமைக்கப்பட்டமையும் நன்கு விளங்கும்.

புலால் உண்ட மக்கள்

மொஹெஞ்சொ-தரோவில் உள்ள தெருக்களிலும் இல்லங்களிலிருந்து வெளிப்படும் கால்வாய்களிலும் வடிகால் களிலும் பிற இடங்களிலும் எலும்புத் துண்டுகள் பல சிதறிக் கிடந்தன. அவற்றைப் பார்வையிட்ட ஆராய்ச்சியாளர், ‘பொதுவாக இந்நகர மக்கள் புலால் உண்ணும் வழக்கத்தினர் என்று கருதுகின்றனர். இக்காலத்தில் சோற்றிலேயே இறைச்சியைக் கலந்து தயாரிக்கும் ‘புலவு’ (புலால்)[1] என்னும் ஒருவகை உணவு அக்காலத்திலும் சமைக்கப்பட்டு வந்தது. அம்மக்கள் சோற்றில் ஆடு மாடு, பன்றி, ஆமை, முதலை இவற்றின் இறைச்சித் துண்டங்களைக் கலந்து ‘புலவு’ செய்தனர்; பலவிகை மீன் இனங்களை உண்டு வந்தனர்; பலதிறப்பட்ட பறவைகளை உண்டு வந்தனர்; பிறநாடுகளிலிருந்து கலன்கள் மூலம் கொண்டுவரப் பட்ட உலர்ந்த மீன் இனங்களும்[2] இறைச்சி வகைகளும் உண்டனர்; இறைச்சித் துண்டங்களை உலர்த்திப் பக்குவப்படுத்திப் பெரிய தாழிகளில் அடைத்து அவ்வப்போது பயன்படுத்தி வந்தனர். ‘இத்தாழிகளில் வெள்ளாடு, எருது, செம்மறியாடு இவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன. எனவே, இவ்விலங்குகளின் இறைச்சிகள் பதப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டன என்பது உண்மை. ஆனால், இப்பதப்படுத்தப்பட்ட இறைச்சித்துண்டங்கள் தினந்தோறும் பயன்படுத்தப்பட்டன என்றோ, விசேட காலங்களிற்றாம் பயன்படுத்தப்பட்டன என்றோ இப்போது திட்டமாகக் கூறுதல் இயலாது’.[3]

பிற உணவுப் பொருள்கள்

அப்பண்டை மக்கள் காய்கறிகளையும் பால், வெண்ணெய், தயிர், மோர், நெய் முதலியவற்றையும் உணவுப்பொருள்களாகக் கொண்டிருந்தனர்; பலவகைப் பழங்களையும் உண்டு வந்தனர்.

சமையற் பொருள்கள்

அவர்கள் மாவரைத்துப் பலவகை உணவுப் பொருள்கள் செய்யக் கற்றிருந்தனர். வாணல் சட்டி, ஆட்டுக்கல், இட்டலி ஊற்றும் சட்டி இவை கிடைத்துள்ளமையே இம்முடிபுக்குரிய சான்றாகும். குழம்பு கூட்டுவதற்குரிய வேறு கறிகள் செய்வதற்குரிய மசாலைப் பொருள்களை இடித்து, அவற்றைப் பல அறை (மசாலை)ப் பெட்டியில் வைத்திருந்தனர். அங்குக் கிடைத்த அம்மி - குழவி, கல் உரல் இவற்றால் மசாலைப் பொருள்கள் அரைக்கப் பட்டன என்பதையும், இடிக்கப்பட்டன என்பதையும் நன்குணரலாம்.

உணவு கொண்ட முறை

அக்காலத்தவருள் பலர் பாய்கள்மீது அமர்ந்து உணவுப் பொருள்களை எதிரில் - வைத்துக்கொண்டு உண்டனர். பணக்காரர் நாற்காலிகளில் அமர்ந்து உண்டனர் என்று முத்திரைகளைக் கொண்டு கூறலாம். எனினும், இது ஒரோவழிக் கொண்டிருந்த வழக்கமாகக் கோடலே பொருந்துவதாகும். என்னை? இன்னும் பெரும்பாலான இந்தியர் வீடுகளில் நாற்காலி - மேஜைகளை உண்பதற்குப் பயன்படுத்தாமையின் என்க. மரம், சிப்பி, சங்கு, களிமண், செம்பு, வெண்கலம் இவற்றாலாய கரண்டிகள், கறிகளையும் குழம்பு, வகைகளையும் சோற்றையும் எடுக்கப் பயன்பட்டன. உண்ணற்குதவும் கரண்டிகளோ முட்களோ கிடைக்காமையின், அவர்கள் கைகளாலேயே உணவு பிசைந்து உண்டனர் என்பது தெரிகிறது.

உடைகள்

அப்பழைய மக்கள் எத்தகைய உடைகளை எவ்வெவ்வாறு உடுத்திருந்தனர் என்பதை இன்று உறுதிப்படுத்திக் கூறுதற்குரிய சான்றுகள் கிடைத்தில. எனினும், அவர்கள் விட்டுப்போன ஒவியங்கள், பதுமைகள், முத்திரைகள் முதலியவற்றிற் காணப்படும் விவரங்களைக் கொண்டு, அவர்கள் உடைகளை உடுத்திவந்த முறைகளையும் உடை விசேடங்களையும் ஒருவாறு உணர்தல் கூடும். சிந்து வெளியில் பருத்தி மிகுதியாகப் பயிரானதாலும், நெசவுக்குரிய கருவிகள் அங்குக் கிடைத்தமையாலும் அம்மக்கள் நூல் நூற்று ஆடைகளை நெய்து உடுத்து வந்தனர் என்பது ஐயமறத் தெரிகிறது. எளியவர் சாதாரணப் பருத்தி ஆடைகளை அணிந்திருந்தனர். செல்வர் பூ வேலைப்பாடு பொருந்திய பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தி வந்தனர்; சிலர் கித்தான் போன்ற முரட்டு ஆடைகளை உடுத்தினர்; சிலர் நாரால் ஆன ஆடைகளையும் உடுத்திருந்தனர்[4] மொஹெஞ்சொ-தரோவில் கண்டெடுக்கப்பட்ட வடிவம் ஒன்றில் பூ வேலைப்பாடு அமைந்த போர்வை காணப்படுகிறது. அது சிறந்த வேலைப்பாடு உடையது. அத்தகைய போர்வைகளைச் செல்வரே பயன்படுத்தி வந்தனர் எனல் தகும். அவர்கள் தம் இடக்கையும் மார்பும் மறையுமாறு போர்வை போர்த்தினராதல் வேண்டும். ஆயின், எளிய மக்கள் இடை ஆடையுடனே திருப்தி அடைந்திருந்தனரோ - எளிய விலையிற் கிடைத்த போர்வைகளை அணிந்திருத்தனரோ-தெரியவில்லை. மொஹெஞ்சொ-தரோவில் பலவகைப் பொத்தான்கள் கிடைத்தன. ஆதலின், அந்நகர மக்கள் சட்டைகளை அணிந்திருந்தனர் என்பது வெள்ளிடைமலை. கழுத்துப் பட்டைகளும் வழக்கில் இருந்தன.

அணங்குகளின் ஆடைச் சிறப்பு

பண்டைச் சிந்துவெளிப் பெண்மணிகள் பாவாடைகளைப் பெரிதும் பயன்படுத்தினர் என்பதை முத்திரைகளைக்கொண்டு கூறலாம். அவை முன்புறம் ஒரளவு குட்டையாகவும் பின்புறம் நீண்டும் இருந்திருக்கலாம்; நாடாக்களைக் கொண்டனவாக இருக்கலாம். பாவாடைகளை இறுக்க, மணிகள் சேர்த்துச் செய்யப் பட்ட (ஒட்டியாணம் போன்ற) அரைக்கச்சைகளை அம்மகளிர் பயன்படுத்தினர். அக்கச்சைகளுட் சில முன்புறம் முகப்பு வைக்கப் பட்டுள்ளன. செல்வர் வீட்டு மகளிர் மெல்லிய மேலாடைகளை அணிந்து வந்தனர். எளிய மகளிர் மேலாடைகளைப்பற்றி ஒன்றும் கூறக்கூடவில்லை. மொஹெஞ்சொ-தரோவில் இன்னும் தோண்டி எடுக்கப்படாத பகுதி பத்தில் ஒன்பது பங்கு. ஆதலின், இன்றுள்ள நிலைமையில் எதனையும் உறுதியாகக் கூறக் கூடவில்லை என்பது இங்கு நினைவில் இருத்தத் தக்கது.

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த களிமண் படிவங்களுள் ஆண் உருவங்கள் பெரும்பாலான ஆடை இன்றியே காண்கின்றன. பெண் உருவங்கள் அனைத்தும் ஆடையுடனே காணப்படுகின்றன. ஆகவே, இவற்றைக் கொண்டு, ‘மொஹெஞ்சொ-தரோ ஆடவர் பண்டை எகிப்தியருட் பெரும்பாலரைப் போல் ஆடையின்றியே இருந்தனர்’ எனக் கூறுதல் இயலாது என்று அறிஞர் தீக்ஷத் அறிவிக்கின்றார்.[5] இம் முடியே பொருத்தமானது.

முண்டாசு கட்டிய மகளிர்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த பெண் வடிவங்களுட்பல, தலையில் ஒருவகை முண்டாசுடன் காணப்படுகின்றன. சில ஆண் படிவங்களிலும் இத்தகைய முண்டாசுகள் உள்ளன. இங்ஙனம் தலையில் முண்டாசு கொண்ட படிவங்கள், ஆசியா மைனரில் உள்ள அடலியா (Adalia) என்னும் இடத்திலும், டெல்-அஸ்மர் என் னும் இடத்திலும், சிரியாவிலும் கிடைத்துள்ளன. இத் தலை முண்டாசுகள் பருத்தியால் ஆனவை; நிமிர்ந்து விசிறிபோல விரைப்புடன் இருக்குமாறு ஓரங்களில் பட்டை வைத்துத் தைக்கப்பட்டவை; கனமானவை. இத்தகைய முண்டாசுகளை மங்கோலிய மகளிர் இன்றும் தலையில் அணிகின்றனர் என்பது நன்கு கவனித்தத் தக்கது.[6]

கால் சட்டையோ?

தெய்வங்கள் எனக் கருதப்படும் ஆண் உருவங்கள் சில, முழங்கால் அளவுவரை துண்டுகளை உடுத்தியுள்ளன போலத் தோன்றுகின்றன. ஆயின் ஒரு படிவம் மட்டுமே முழங்காலுக்குக் கீழே தொங்குமாறு வேட்டிகட்டியுள்ளதுபோலத் தோற்றுகிறது. உட்கார்ந்திருக்கும் மற்றோர் ஆண் உருவம் நீண்ட வேட்டியுடன் காணப்படுகிறது. ஹரப்பாவில் கிடைத்த மட்பாண்டத்தின் மீதுள்ள ஒவியம் ஒன்றில் காணப்படும் மனித உருவம் கால் சட்டை அணிந்திருப்பது போலத் தோற்றுகிறது. ஆயின், அது கால்சட்டை அன்று நீண்டவேட்டிஒன்று காற்றில் காலைச்சுற்றிக் கொண்டபோது காணப்படும் நிலையினையே அது குறிப்ப தாகும்’, என்று சிலர் செப்புகின்றனர். உண்மை உணரக் கூடவில்லை.

கூத்த மகள்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த படிவங்களுள் வெண்கலத்தை உருக்கி வார்த்துச் செய்யப்பட்ட கூத்த மகள் சிலையே மிகச் சிறந்ததாகும். இவ்வொன்றுதான் ஆடையே இன்றிக் காணப்படுகின்றது. இதைப்போலவே ஹரப்பாவிலும் வெண்கலப் படிவம் ஒன்று கிடைத்துள்ளது. அப்பெண் படிவங்கள் நீக்ரோ இனப்பெண்ணைக் குறிப்பனவாகவே தோற்று கின்றனவாம். அப்பதுமைகள் இரண்டும் நடனச் செயலைக் குறிக்கின்றன. மொஹெஞ்சொ- தரோவிற் கிடைத்த சிலையின் இடக்கை நிறைய வளையல்கள் உள்ளன; கூந்தல் சடையாகப் பின்னித் தலையின் பின்புறம் ஒதுக்கிக் கட்டப்பட்டு வலப்புறத் தோள் மீது படிந்துள்ளது. வலக்கை இடுப்பின்மீது இருக்கிறது. பண்டை எகிப்தில் நடனமாதர் ஆடையின்ளிச் சில வேளைகளில் நடிப்பது வழக்கமாம்.[7] அப்பழக்கம் சிந்து நாட்டிலும் இருந்திருத்தல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர்.




  1. பண்டைத் தமிழ் மக்களுட் சிலர் திருமண விருந்துகளிலும் ‘புலவு’ செய்து உண்டு வந்தனர். என்பது அகநானூற்று 186ஆம் செய்யுளால் அறிக.
  2. பண்டைத் தமிழர் ஏற்றுமதிப் பொருள்களில் உப்புப்படுத்திய மீனும் ஒன்றாகும் என்பது இங்கு அறியத்தக்கது.
  3. Dr.E.Mackay’s ‘The Indus Civilization’, p.185.
  4. நாராடை மரவுரி போன்றது. இஃது அப்பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்டதை அறிவிப்பதற்கே போலும், இன்றைய மக்கள் நார்ப்பட்டை விசேட காலங்களில் அணிகின்றனர். PTS. Iyengar’s ‘The Stone Age in India’, p.38,
  5. ‘Pre-historic Civilization of the Indus Valley’, p.26.
  6. Dr.E. Mackay’s ‘The Indus Civilization’, p. 135.
  7. பண்டைத் தமிழகத்தில் விறலியர் (ஒருவகை நடன மாதர்) விசேட காலங்களில் ஆடையின்றித் தழையை அரையிற் கட்டிக்கொண்டு ஆடுதல் மரபு - நற்றிணை, 170.