வஞ்சிமாநகரம்/7. குமரன்நம்பியின் திட்டம்

விக்கிமூலம் இலிருந்து
7. குமரன்நம்பியின் திட்டம்

அன்று நள்ளிரவில் உடன் வந்த வீரர்களை நடுக்கடல் தீவில் காத்திருக்கச் செய்துவிட்டுக் கடம்பர்களின் கொள்ளை மரக் கலங்களில் புகுந்து உளவறியச் சென்ற குமரன்நம்பி திரும்பி வரத் தாமதமான ஒவ்வொரு விநாடியும் காத்திருந்த கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத்து வீரர்கள் கணக்கற்ற சந்தேக நினைவுகளால் குழப்பமடையலானார்கள். ஒரு வேளை குமரன் நம்பி கடம்பர்களின் கையில் சிக்கிச் சிறைப்பட்டு விட்டானோ என்ற சந்தேகமும் இடையிடையே மனத்தில் தோன்றி அவர்களை பயமுறுத்தியது. நல்ல வேளையாக மேலும் அவர்களுடைய பொறுமையைச் சோதிக்காமல் குமரன் நம்பி திரும்பி வந்து சேர்ந்தான்.

வந்ததும் வராததுமாக, “உடனே வந்தது போலவே கரைக்குத் திரும்பி விடுவோம்! கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திற்குச் சென்று மற்றவற்றைச் சிந்திப்போம்” என்று அவர்களை விரைவு படுத்தினான் குமரன் நம்பி அவன் அவ்வாறு விரைவு படுத்துவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டுமென்று உணர்ந்தவர்களாக அவர்களும் உடனே அவனோடு படகேறிப் புறப்பட்டனர். படகு கடலின் அலைகள் நிறைந்த பகுதியை எல்லாம் கடந்து பொன்வானி முகத்துவாரத்தை அடைகின்றவரை அவர்கள் ஒருவரோடொருவர் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.

கரை சேர்ந்தபின் விடிவதற்குக் கொஞ்ச நேரமே இருந்தது. குமரன்நம்பி உட்பட யாவருமே சோர்வடைந்திருந்தார்கள். பேசி முடிவு செய்ய வேண்டியவற்றைக் காலையில் பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு அப்போது தோன்றியது. உறங்குகின்ற மனநிலை யாருக்குமே இல்லை என்றாலும் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியிருந்தது. மறுநாள் பொழுது புலர்ந்தது. படைக்கோட்டத்து வீரர்கள் கலந்து பேசினார்கள். குமரன் நம்பியின் மனம் கொள்ளைக் காரர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அமுதவல்லியின் நிலை என்னவோ, ஏதோ என்பதைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தாலும் வீரர்களிடையே அவன் சில திட்டங்களைக் கூறலானான்.

“பலமுறை நம்முடைய பெருமன்னர் செங்குட்டுவரால் ஓட ஓட விரட்டப்பட்டிருக்கும் இந்தக் கொடிய கடற் கொள்ளைக்காரர்களான கடம்பர்கள் மறுபடி சமயம் பார்த்து முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் மன்னரும் சேர நாட்டுப் பெரும் படைகளும் வடக்கே படையெடுத்துச் சென்றிருப்பதை அறிந்தே கொள்ளைக்காரக் கடம்பர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். கொடுங்கோளுர்ப்படைக் கோட்டத்திலோ நாம் சிலர்தான் இருக்கிறோம். தலைநகரில் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து தம்மை வந்து சந்திக்கும்படி அமைச்சர் அழும்பில்வேள் எனக்குக் கட்டளையிட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்த்து வந்தேன். கடற்கரையிலும், பொன்வானி முகத்துவாரத்திலும் கொடுங்கோளூர் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு என்னை அமைச்சர் பெருமான் வேண்டிக் கொண்டிருக்கிறார். மேலும்...”என்று சொல்லிக் கொண்டே வந்த குமரன் நம்பி தயங்கிப் பேச்சை நிறுத்தினான்.

“மேலும் என்ன?...ஏன் சொல்ல வந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்?” என்று வினவினான் படைக் கோட்டத்தைச் சேர்ந்த வீரனொருவன். ஆனால் குமரன் நம்பியோ தன் தயக்கத்தை தொடர விட்டவனாக மேலும் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் சொல்வதற்கிருந்த செய்தியோ கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி காணாமற்போனதைப் பற்றியது. அதைத் தானே படை வீரர்களிடம் தன் வாய்மொழியினால் சொல்லி விவரிப்பதற்கு அவன் மனம் வேதனைப்பட்டது. என்ன காரணத்தினாலோ இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி கொடுங்கோளுரில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கும் என்பதை அவன் மனம் நம்ப மறுத்தது.

ஆனால் கொடுங்கோளுர் நகரெங்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததையும், அதை அதே இரவில் நகர் பரிசோதனைக்காக வந்திருந்த அமைச்சர் அழும்பில்வேள் அறிந்து சென்றதையும் பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இரத்தின வணிகர் வீட்டில் தானே நேரிற்சென்று இச்செய்திபற்றி அறிய குமரன்நம்பி கூசினான். ஆனால் இரத்தின வணிகரின் வீட்டிலும் அதற்குரிய சோகம் பரவியிருப்பதாகவே மற்றவர்கள் மூலம் அவன் கேள்விப்பட்டறிய முடிந்தது. இப்போது வீரர்கள் திரும்பத் திரும்ப அவனைக் கேள்விகளால் துளைக்கத் தொடங்கினர். எனவே அவன் தன் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைக் கூற வேண்டியதாயிற்று. கப்பலில் கடம்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டதிலிருந்து அமுதவல்லி காணாமற் போன இரவில் அவர்கள் பொன்வானி முகத்துவாரத்தின் வழி வந்து திரும்பியிருக்கிறார்கள் என்றே தெரிந்தது. தான் கொள்ளைக் கப்பலில் ஒட்டுக்கேட்டறிந்த செய்தியைக் கூறாமலே, “அமுதவல்லி கொள்ளைக்காரர்களான கடம்பர்களிடம் சிறைப்பட்டிருப்பது சாத்தியமென உங்களுக்குத் தோன்றுகிறதா?” என்று தன் நண்பர்களான படைக்கோட்டத்து வீரர்களிடம் கேட்டான் குமரன் நம்பி.

“சாத்தியமென்று தோன்றவில்லைதான் படைத்தலைவரே. ஆனால் சாத்தியமில்லை என்றும் எப்படி மறுப்பது?” என்றே அவர்களிடமிருந்து மறுமொழி கிடைத்தது.

அதன்பின் அந்த வினாவுக்கு விடை காண்பதை விடுத்து முற்றுகையிட்டிருக்கும் கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை விரட்டியடிப்பது எவ்வாறு என்பதையும் அவர்களிடமிருந்த இரத்தின் வணிகரின் மகள் அமுதவல்லியை மீட்பது எவ்வாறு என்பதைப் பற்றியுமே படைக்கோட்டத்து வீரர்களோடு அவன் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தது. பல கொள்ளைமரக் கலங்களில் முற்றுகையிட்டிருக்கும் எண்ணிக்கை நிறைந்து முரட்டுக் கொள்ளைக்காரர்களோடு சில வீரர்களைக் கொண்டு மட்டுமே நேருக்கு நேர் எதிர்ப்பதென்பது சாத்தியமில்லை. ஆகவே சாதுர்யத்தால் எதிரிகளை மடக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதை குமரன் நம்பி நன்கு உணர்ந்திருந்தான்.

திடீரென்று இருந்தாற்போலிருந்து நண்பர்களிடம் விநோதமான வேண்டுகோளை விடுத்தான்.

“சேர நாட்டு அரச முத்திரையாகிய விற்கொடி இலச்சினையோடு கூடிய புத்தம் புதுக் கொடித் திரைச்சீலைகள் சில நூறு இப்போது உடனே வேண்டும். நமது சூழ்ச்சியை அவை மூலமே தொடங்க முடியுமென்று தோன்றுகிறது.”

“படைத் தலைவரே! உங்கள் வேண்டுகோள் விநோதமாக இருக்கிறது. வலிமையான ஆட்கள் இருந்தாலே கொடியவர்களான கடம்பர்களை வெற்றி கொள்வது அருமை. நீங்களோ சேர நாட்டுக் கொடிச் சீலைகளைக் கொண்டே அவர்களை வென்றுவிட நினைக்கிறீர்கள்” என்று சந்தேகமும் தயக்கமுமாக ஒரு வீரனிட்மிருந்து படைத் தலைவன் குமரன் நம்பிக்கு மறுமொழி கிடைத்தது.

குமரன் நம்பி அதைக்கேட்டு மனந்தளரவோ தயங்கவோ செய்யாமல் சிரித்த முகத்துடனேயே அந்த வீரனுக்கு மறுமொழி கூறலானான். “மரத்தை நோக்கிக் கற்களை எறிவோம். கற்களால் மாங்காய்கள் உதிருமானால் நமக்குப் பயன்தானே? காய்கள் விழாவிட்டால் நமக்கென்ன? மறுபடி வேறு கற்களை எறிவோம். அரச தந்திரச் சூழ்ச்சிகள் யாவுமே இப்படித்தான். நாம் நினைக்கிறபடியே தான் முடியவேண்டும் என்று திட்டமிட இயலாது. ஆனால் நாம் நினைக்கிறபடியேதான் முடியவேண்டுமென்ற திட நம்பிக்கையுடனேயே செயலைத் தொடங்க வேண்டும். அதில் எள்ளளவும் தளர்ச்சியிருக்கக் கூடாது.”

“மாங்காய்கள் விழுவதற்குப் பதிலாக நாம் எறிந்த கற்களே நம்மேல் திரும்பி விழுவதுபோல் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது?” என ஒரு வீரன் கேட்டான்.

"தீவினைவசத்தால் சிலருக்கு அப்படியும் சிலசமயங்களில் கேடுகள் நேரலாம். ஆனால் எப்படி நேருமென்பதே நம் எண்ணமாக முன் நிற்குமானால் நாம் எதையுமே துணிந்து செய்வதற்கு உரியவர்களாக முடியாது.”

குமரன்நம்பியின் இந்த மறுமொழிக்குப் பின் வீரர்கள் யாரும் அவனை எதுவும் வினாவத் துணியவில்லை. சேர நாட்டு விற்கொடிச் சீலைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு வீரர்கள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குமரன் நம்பி தன் மனத்தினுள் திட்டம் வகுக்கத் தலைப்பட்டான். கடம்பர்களை ஒடுக்கி ஒழிக்க அவன் மனத்தில் இரண்டு காரணங்களால் இப்போது அவன் சபதம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நாட்டுக் கடமையைத் தவிர அன்புக் கடமையும் இதில் இருந்தது. அவனுடைய ஆளுயிர்க் காதவியைத் தேடும் கடமையும் இதில் கலந்திருந்ததனால் சபதத்துக்கு உறுதி அதிகமாகி இருந்தது. அவனுடைய திட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவேற அந்த நாள் முழுதும் ஆயிற்று. அன்றிரவு மீண்டும் அவர்கள் கலந்து பேசித் திட்டமிடுவதில் கழிந்தது. அடுத்த நாள் இரவு மீண்டும் பொன்வானி முகத்துவாரத்தின் வழியே கடலிற் சென்று கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை அடைய வேண்டும் என்றும் தங்கள் சூழ்ச்சிகளைச் செயலாக்கிக் கடம்பர்களை முறியடிக்க வேண்டுமென்றும் அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். புத்தம்புதிய திரைச்சீலைகளில் எழுதப்பட்ட சேரர்களின் விற்கொடிகள் சில நூறு ஆயத்தமாகி இருந்தன. அடுத்த நாள் பகற்பொழுது முழுதும் ஒய்வாக இருந்தார்கள் அவர்கள். இரவில் உறக்கமின்றி கழிக்க வேண்டியிருந்ததால் குமரன் நம்பியும் படைக் கோட்டத்து வீரர்களும், அன்று பகற் பொழுதில் களைப்பாற வேண்டியிருந்தது.