வஞ்சிமாநகரம்/8. மரக்கலங்கள் எங்கே?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
8. மரக்கலங்கள் எங்கே?

குமரன் நம்பியும் அவன் நண்பர்களான படைக் கோட்டத்து வீரர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அடுத்த நாள் இரவும் வந்தது. பொன்வானி முகத்துவாரத்தில் அவர்கள் புறப்பட்டுச் செல்வதற்குப் படகுகள் வரிசை வரிசையாகக் காத்திருந்தன. படகுகளைப் படைக் கோட்டத்து வீரர்களே செலுத்திக் கொண்டு போவதில் சில இடையூறுகள் இருந்தன. ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்தவுடன் படகுகளில் இருக்கும் வீரர்கள் தாங்கள் எந்தக் காரியத்தைச் செய்ய வந்தார்களோ அந்தக் காரியத்தைச் செய்வதற்காகப் படகுகளிலிருந்து நீங்கிச் சென்றால் அவர்கள் மறுபடி திரும்பி வருகிறவரை உரிய இடத்திலே, தப்பித் திரும்பிச் செல்வதற்குப் படகுகள் நிறுத்தப் பட்டிருக்க வேண்டுமென்று கருதிப் பொறுப்பு வாய்ந்த படகோட்டிகளை உடன் அழைத்துச் செல்ல ஏற்பாடாகி இருந்தது அன்றைக்கு.

மேலும் அன்றிரவு அவர்கள் திட்டமிட்டிருந்த சூழ்ச்சியைப் போய் நிறைவேற்றுவதற்கும், நிறைவேற்றி விட்டுத் திரும்பி வருவதற்கும் - சந்தர்ப்ப வேகத்தையும், அவசரத்தையும் உணர்ந்து அதற்கேற்றபடி படகைச் செலுத்துவதற்கும் அவசியம் இருந்தது. அதனால் கடலில் எந்த நிலையிலும் படகு செலுத்துவதில் சூரர்களான படகோட்டிகள் சிலரை முன் கூட்டியே துணைக்கு ஏற்பாடு செய்திருந்தான் குமரன் நம்பி. படகுகள் நடுச் சாமத்திற்குக் கடலுக்குள் செல்ல வேண்டுமென்பது ஏற்பாடு. அதற்குமுன் குமரன் நம்பியும் படைக்கோட்டத்து வீரர்களும் பொன்வானிக்கரைப் படகுத் துறையில் கூடி விட்டார்கள். அந்த இருளில் தீப் பந்தங்களின் ஒளியில் மரங்கள் அடர்ந்து அமைதி நிறைந்த பொன்வானிக் கரையில் மனிதர்கள் கூடி நிற்பது ஏதோ அசாதாரணமான காரியங்கள் நிகழப்போகின்றன என்பதை அறிவிப்பது போலிருந்தது. ஒவ்வொரு படைக்கோட்டத்து வீரனின் முகத்திலும் கண்களிலும் செய்யப்போகிற காரியத்தைப் பற்றிய கவலையும் கடமையுணர்வும் ஒளிர்ந்தன. குமரன் நம்பி அவர்களிடம் தன் ஏற்பாட்டை விளக்கினான்.

“வீரர்களே! உங்களிடம் நம்முடைய சேரநாட்டு வில் இலச்சினைக் கொடிகள் சில தரப்பட்டுள்ளன. அந்தக் கொடிச் சீலைகளை இடுப்புப் பட்டைகளிலும் மார்க்கச்சைகளிலும் நான்காக மடித்து மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். பொன்வானி முகத்துவாரத்திலிருந்து கடலில் புறப்படும் போது படகுகள் ஒரு குறிப்பிட்ட வியூகத்தில் தனித்தனியே விலகிச் செலுத்தப்பட வேண்டும். எல்லாப் படகுகளும் சேர்ந்தார்போல் அணிவகுத்துச் செல்வதால் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தாலும் நேர்ந்துவிடும். பொன்வானி முகத்துவாரத்தைக் கடந்து பெருங்கடலுக்குள் நம் படகுகள் புகுவதற்கு முன் படகுகளில் உள்ளோர் தங்கள் தீப்பந்தங்களை அணைத்துவிடவேண்டும். மறுபடி அவை நமக்குத் தேவையானால் கொள்ளை மரக்கலங்கள் முற்றுகையிட்டுள்ள கடற்பகுதியை அடுத்திருக்கும் சிறு தீவை அடைந்ததும் அவற்றை எரியும்படி ஏற்றிக் கொள்ளலாம். அங்கும் கூட அவற்றை ஏற்றி எரியச் செய்வது அபாயத்தையே தரலாம். கொள்ளை மரக்கலங்களின் தளங்களில் காவலுக்கு நிற்கிற கடம்பர்கள் யாராவது தீவில் தீப் பந்தங்கள் எரிவதால் கவனம் கவரப்பட்டு நம்மைக் கண்டுபிடிக்க ஏதுவாகி விடக்கூடாது. அப்படி ஆனால் நாம் போகிற காரியம் எதுவோ அதைச் செய்ய முடியாமல் போய்விடும். இனி நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பதைக் கவனிக்கலாம். தீவை அடைந்ததும், படகுகளைத் துணைகொண்டு தனித்தனியே கொள்ளை மரக்கலங்களை நெருங்கவேண்டும். நம்மிடமிருக்கும் சேர நாட்டுக் கொடிகளை வந்திருக்கும் கொள்ளை மரக்கலங்களில் - பாதி எண்ணிக்கையுள்ளவற்றில்-பாய்மரக் கம்பங்களில் ஏறி - அங்கிருக்கும் கொள்ளைக்காரக் கடம்பர்களின் கொடியை அகற்றி விட்டு அதற்குப் பதிலாகக் கட்டிவிட வேண்டும். அப்படிக் கொடிகளை மாற்றிக் கட்டும்போதும் கொள்ளையர்களின் எல்லாமரக்கலங்களிலும் கட்டிவிடக்கூடாது. அவ்வாறு கட்டினால் ஒருவேளை நமது நோக்கமே பாழானாலும் ஆகிவிடலாம். கவனமாக அரைவாசி மரக்கலங்களின் கொடி மரங்களில் நம் கொடிகளை ஏற்றி மாற்றிவிட்டு மீதி அரை வாசி மரக்கலங்களில் கடம்பர்களின் கொடிகளே பறக்கும்படி விட்டுவிட வேண்டும்.”

இந்த இடத்தில் குமரன் நம்பியின் பேச்சில் குறுக்கிட்டு வீரனொருவன் கேள்வி கேட்டான்.

“அவ்வாறு சில கொடிகளை மட்டும் மாற்றிவிட்டுச் சில கொடிகளை அப்படியே விடுவதனால் நம்முடைய எந்த நோக்கம் நிறைவேறும்?”

"கடம்பர்களே தங்களுக்குள் ஒருவர்மேல் ஒருவர் சந்தேகப்பட்டு அடித்துக்கொண்டு சாவார்கள். சூழ்ச்சிகளில் இது மித்திர பேதமாகும்.”

“இந்த மித்திரபேதம் நாம் திட்டமிடுகிறபடி மித்திர பேதமாகாமல் அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கொடிகளை மாற்றியது பிறர் சூழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுவார்களானால் என்ன ஆகும்?”

“பெரும்பாலும் இந்த மித்திர பேதம் பலிக்குமென்று நம்பித்தான் தொடங்குகிறோம் விடிந்ததும் அருகருகே நிற்கும் கப்பல்களில் மாற்றார் கொடிகளைப் பார்த்தால் அந்தக் கப்பல்களைத் தாக்கத் தோன்றுவதுதான் இயல்பு” என்றான் குமரன் நம்பி.

படைக்கோட்டத்து வீரர்கள் அதற்கு மேலும் தங்கள் தலைவனைக் கேள்வி கேட்டு விவாதிக்க விரும்பவில்லை. எல்லாரும் புறப்பட்டனர். இருளில் படகுகள் விரைந்தன. படகுகள் நதி முகத்துவாரத்தைக் கடந்து பெருங்கடலில் துழைந்ததும் முதல் வேலையாக எல்லோரும் தீப்பந்தங்களை அனைத்துவிட்டார்கள். கொள்ளை மரக்கலங்கள் முற்றுகை யிட்டிருந்த நடுக்கடல் தீவை நோக்கி கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்து வீரர்களின் படகுகள் விரைந்து செல்லத் தொடங்கின. குமரன் நம்பியின் படகு தலைமை தாங்கிக் செல்வதுபோல் முன்னால் சென்றது. ஆனால் கடலில் மேலே செல்லச் செல்லல குமரன் நம்பியின் மனத்தில் குழப்பம் அதிகமாகியது. தான் வழிதவறிவிட்டோமா அல்லது இருளில் கடம்பர்களது மரக்கலங்கள் நிற்பது தெரியவில்லையா என்பது புரியாமல் திகைத்தான் அவன்!

நடுக்கடல் தீவை நெருங்க நெருங்க அவன் சந்தேகம் அதிகமாகியது. பார்வை எட்டுகிற தொலை வந்ததும் அவன் சந்தேகம் தீர்ந்துவிட்டது. கடம்பர்களின் மரக்கலங்களில் ஒன்றுகூட முதல்நாள் நின்றதுபோல் அந்தத் தீவை ஒட்டி நிற்கவில்லை. தீவு சூனியமாயிருந்தது. கரையிலும் மனித சஞ்சாரமே இல்லை. இப்போது குமரன் நம்பியின் நிலை இரண்டுங்கெட்ட தன்மையில் ஆகிவிட்டது. ‘கடம்பர்கள் தங்கள் மரக்கல முற்றுகையை இரவோடிரவாக இடம் மாற்றிவிட்டார்கள் என்று முடிவு செய்வதா? அல்லது மரக் கலங்களைத் தீவின் மறுபக்க மறைவில் நிறுத்திவிட்டுக் கலங்களில் இருந்தவர்கள் மட்டும் - தீவில் இறங்கி எதிரிகளைத் திடுமென்று தாக்க மறைந்திருக்கிறார்களா? ஒன்றும் புரியவில்லையே?’ என்று மருண்டான் குமரன் நம்பி. தீவை நெருங்கிக் கரையை அணுகவும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது. மரக்கலங்களும் கொள்ளைக்காரர்களும் எங்கே மாயமாக மறைந்து போனார்கள் என்பதும் மர்மமாயிருந்தது. ஒன்றும் செய்யத் தோன்றாமல் எல்லாப் படகுகளையும் நடுக் கடலிலேயே நிற்கச் செய்வதற்குரிய ஏற்பாட்டை மேற்கொண்டான் அவன்.

“என்ன ஆயிற்று? நேற்று இரவும், அதற்கு முந்திய தினமும் மலைமலையாக இந்த இடத்தில் நின்ற கொள்ளை மரக் கலங்களைத் திடீரென்று காணவில்லையே?” என்று திகைப்போடு தங்கள் படைத்தலைவனை நோக்கினார்கள் உடனிருந்த வீரர்கள். கடம்பர்கள் முரட்டு இனத்தவராயினும் கடற்கொள்ளைக்காரர்களுக்கே உரிய சூழ்ச்சிகள் யாவும் நிறைந்தவர்கள். மறைவதுபோல் மறைந்து தோன்ற மாட்டார்கள் என்று நம்பியிருக்கிற வேளையில் திடீரென்று வதைக்கும் கொடிய காரியத்தை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியுமில்லை. படகுகளோடு பின் வாங்குவதே நல்லதென்று குமரனுக்குத் தோன்றியது. எல்லாப் படகுகளையும் பின்வாங்கும்படி ஆணையிடும் எண்ணத்தோடு அவன் ஏதோ கட்டளையிட வாய் திறந்தபோது, உடனிருந்த வீரன் ஒருவன் “அதோ, அதோ!” என்று வேறோர் திசையைச் சுட்டிக் காட்டினான். எல்லார் கண்களும் ஆவலோடு அத்திசையில் திரும்பின.