வர்ணாஸ்ரமம்/அத்தியாயம்-1

விக்கிமூலம் இலிருந்து


வர்ணாஸ்ரமம்


I

"பாகனே! தேரை விரைவாகச் செலுத்து.

"நற்றிறம் வாய்ந்த பாகனே! தேர் விரைந்துசெல்வதாக!

"விரைந்து செல்லவேண்டும். அங்குதான்! அறியாயோ நீ? கேள்!

"பைங்கிளியே! மழலை பல பேசவல்லாய் எனினும், நான் கேட்டுக் களித்திட ஒரே ஒரு சொல்கூறு; வேறு வேண்டிலேன். அவர் இன்று வருவார் என்றுரை. நம்மைப் பிரிந்து சென்றவர், இன்று வருவார் எனும் இன்சொல்லை, கிளியே, நீ கூறு' என்று, தன் முன்கையில் அமர்ந்துள்ள தத்தையினைக் கேட்கும், என் கிளிமொழியாளின் இல்லத்திற்குச் சென்றாக வேண்டும், விரைவாக! நொந்த மனத்துடன் வெண்மதிநுதல் சுருங்க, கிள்ளையுடன் பேசும் சொல்லினை வீட்டார் கேட்டிடுவரோ, என்று பயந்து, நாணி உரையாடுவாள் அந்நங்கை, தன் அங்கையில் கிளி ஏந்தி ! அவள் துயர் துடைக்க, நாணம் நீக்க நான் செல்லவேண்டும். நற்றிறம் படைத்த பாகனே! செலுத்துக தேரினை விரைந்து !! சிவந்த மாலையை யணிந்ததுபோன்ற கழுத்தினையுடைய, அந்தப் பச்சைக் கிளி, பலப்பல பேசவல்லதுதான். எனினும் ஒரே ஒரு சொல் நீ உரைப்பாய், 'இன்று வரல் உரைமோ' என்று மட்டுமே கேட்கிறாள், என் மனத்தைக் கோயில்கொண்டாள்! என் செய்வாள் ஏந்திழை? இல்லத்துள்ளோர் அறிந்திடுவரோ, என்ற அச்சம்: அஞ்சுகத்தினிடம் அதிகம் பேச நேரமில்லை. நினைப்போ என் மாட்டுளது. அந்த நேரிழையாளின் மனை செல்ல, விரைவாகத் தேரை நீ செலுத்து! உனக்குத்தான் திறமை உண்டே! பாகா! செலுத்து ! அந்த மனையின்கண்ணே, அக மகிழ்வுடன் அன்னங்கள் விளையாடுகின்றன; பெடையும் ஆணும், பெருமிதத்தோடு ஆடுகின்றன. தூய்மையான சிறகு, அந்த அன்னங்கட்கு. வெண்மை, அழகான வெண்மைநிறச் சிறகுகள். பெரிய தோள்களையும் மெல்லிய விரல்களையும் உடைய, ஆடை ஒலிப்பவள், நீர்த்துறையிலே, ஆடையிலே தோய்ந்துள்ள கஞ்சிப் பசையினை அலசிவிடுவது கண்டுள்ளாயன்றோ! அதுபோன்ற நிறம், அன்னங்களின் சிறகுக்கு !! அவை ஆணொடு பெண் அளவளாவி, அகமகிழ்கின்றன! காதல் இன்பத்தை அவை நுகரக்கண்டு, என் அன்னம் பச்சைக்கிளியுடன் பேசுகிறாள், பாகனே ! செலுத்துக தேரை விரைவில்! என் நெஞ்சமோ நோகிறது! காதலின் மேம்பாட்டை, காதலின் பெருங் குணத்தை நான் கண்டேன் ஈண்டு. என் இச்சைக்கினியாளைப் பச்சைக் கிளியுடன் பேசி ஏங்கிட விட்டுப் பாவியேன், பரிதவித்தேன். தெளிந்த நீர் தழுவிச் செல்லும் மணற்கரையிலே, பெண்மான் படுத்துறங்கக், கனிவுடன் காவல்புரியும் ஆண்மானைக் கண்டேன். அதன் பெருந் தன்மையினைக்கண்டு எனது நெஞ்சம் தளர்ந்துளது. அறுகு அருந்தச்செய்து, அருவியோரத்தில் அழகுறத் தூங்கச் செய்து, ஆண்மான், துயிலும் தன் பெண் மானுக்குத் துணைநிற்பது கண்டேன்; என் துக்கம் நெஞ்சைத் துளைக்கிறது; என் துடியிடையாளை நான் தனியே தவிக்கவிட்டேன். அவள் தத்தையைக் கேட்கிறாள், 'இன்று அவர் வருவாரோ, கூறு' என்று. அந்த மனைக்கு விரைந்து சென்று, அவள் துயர் தீர்த்துத், தளர்ந்த என் நெஞ்சும் இன்பம்பெறச் செய்யவேண்டும். வேகமாகத் தேர் செலுத்தும் திறமையுடைய பாகனே! தேரை, விரைந்து செலுத்து!!”

வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குரைத்தது, நான் மேலே தீட்டியிருப்பது. மதுரை மருதன் இளநாகனார் எனும் புலவர் பெருமானின் மணிமொழியினை, கொழித்தெடுத்துக் கோத்தேன், சிறு சொல்லாரம்.

தலைவியைப் பிரிந்து, தலைவன் சென்றான். தத்தளித்தாள் தளிர்மேனியாள். தத்தையிடம் பேசித் தவித்துக் கிடந்தாள். சென்றவிடம் சிறப்புப்பெற்று, தேரிலே மீள்கிறான் தலைவன். மானினத்தினிடம் காதற் பாடம் காண்கிறான்; மங்கைநல்லாளை எண்ணி ஏங்குகிறான்; அவள் மனையிலேயும், அன்னங்கள் காதற்களியாட்டத்திலே ஈடுபட்டு உலவுமே என்பதை எண்ணினான்,நாணமுடைய நங்கை, நெஞ்சிலேயுளதை வீட்டார் அறியக்கூடாதே என்றெண்ணி அஞ்சிப், பிரிந்துபோன தலைவன், வருவார்! இன்று வருவார்!! என்ற இன்சொலை எவரேனும் பேசிடக் கேட்டால் புண்ணாறும் என்று கருதிப், பேசிட ஓர் பைங்கிளியை எடுத்துத் தன் அங்கையில் ஏந்தி, பல பேசிச் சலசலப்புண்டாக்கி மனையுளோருக்குத் தன்னைக் கிளி காட்டிக் கொடுத்துவிடுமோ என்று அஞ்சி, 'கிளியே! அவர் இன்று வருவார் என்ற சொல்மட்டுமே உரைத்திடு, என்று கேட்பாள், எனத் தலைவன் எண்ணி, வேகமாகத் தேரைச் செலுத்து, என்று தேர்ப்பாகனுக்குக் கூறுகிறான். அவனை ஊக்குவிக்கக் கருதிப்போலும், 'நற்றிறம்படைத்த பாகனே' என்றும் அவனைப் புகழ்கிறான். காதற் பாதையைக் கவி இளநாகனார் கன்னித் தமிழிலே, கவிதையாக்கிக் கூறியுள்ளார், அகநானூறு எனும் அருந்தமிழ் நூலிலே!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, பட்டமளிப்பு விழாவிலே, அண்ணல் சர் சண்முகம் ஆற்றிய அழகிய, அரிய, சொற்பொழிவினைப் படித்ததும் எனக்கு இந்தச் செந்தமிழ்ச் செய்யுள் நினைவிலே நர்த்தனமாடிற்று.

"பரதா! சர் சண்முகத்தின் வீரவுரை படித்த உனக்கு விரகதாபச்செய்யுள் நினைவிற்கு வருவானேன்! தமிழ்க்கலையின் உயர்வுபற்றி, சேரநாட்டாட்சியினைச் சில ஆண்டுகள் நடாத்திய சண்முகம் செப்பினாரே, இதுபற்றி, ஏடு விரித்து எடுத்தாயோ இன்சுவையை" என்று கேட்பீர்கள். இல்லை தோழர்களே! கன்னித் தமிழின் கருவூலத்தைத் தேடியல்ல, நான் அக்கவிதையைக் கண்டது. என் நெஞ்சத்திரை முன்னே, இரு காட்சிகள் ஒரே சமயத்திலே நின்றன. ஒன்று சர் சண்முகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, அறிவாளிகள் சுவைக்க, மாணவர் மகிழக், கம்பீரமாக நின்று,சொற்பெருக்காற்றிய காட்சி; மற்றொன்று, தேரிலே தலைவன், அவன் உரைகேட்கும் பாகன், வரவு நோக்கி வாடிடும் தலைவி,எனும் காட்சி; இரண்டும் நின்றன!

"தேறியோருக்குத் தெளிவுரையாற்றும், சர் சண்முகத்தையும், தேரிலே அமர்ந்து பாகனை விரைந்து செலுத்தச் சொன்ன தலைவனையும், ஒருங்கே கண்டது. ஏன்?" என்பீர். கண்டேன், இதோ உம்மிடம் விண்டிடுவேன்; காரணம் சரியா, என்பதனை முடிவுசெய்யும் கடமை, எனதன்று, உமதே!

சர் சண்முகம், தென்னாட்டுத் தாகூர், இந்தியாவின் கிளாட்ஸ்டன்,என்று புகழ இழிமனமற்ற எவரும் தயங்கார்! அவருடைய அரசியல் அறிவும், தரணியறிந்த தன்மையும், தளராத்திறனும், நிர்வாக நேர்மையும், எவருமறிவர்! திராவிடமணி- மாசு இல்லை! தமிழகத்தின் நிலவு-வளர்பிறை! உன்னதமான ஊற்று, அவருடைய ஆற்றல்! ஆம்! சர் சண்முகம், ஏடெடுப்போரின் மொழிமாலையைச் சூடிட வேண்டிய பருவத்தைக் கடந்து விட்ட காவலர். கொங்குபுகழ் கோமான் மட்டுமல்ல, மங்காப்புகழைத் தமிழ்மாநிலமும், அதை அடுத்த தரணிபலவும் பரப்பி அரச அவையிலும், அறிஞர் சபையிலும், களத்திலும் கொலுமண்டபத்திலும், எங்கும் புகழ்பெற்று விளங்கும் ஆற்றலரசர். ஆயினும், அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று கூறேன்! ஏன் கூறல் வேண்டும்? இவர், எந்நாட்டுவீரர், தமிழகத்தின் தளபதி. தாகூருக்கு வங்கத்திலே, பங்கம் விளைவிக்கக் கொடுங்கையில் வஞ்சனை வாளேந்தினோர் எவருமில்லை! தாகூரின் நாதநடையினைக் கண்டதும் சங்கை கொண்டோர், வங்கத்திலே இல்லை! அவர்மொழி, வங்க மக்கள் எவரின் விழியிலும் களிப்புத் துளி எழச் செய்ததேயன்றி, காய்ச்சலும் குளறலும், எழச் செய்யவில்லை. வங்கம் தாகூரை, உச்சிமோந்து முத்தமிட்டு, வாரி அணைத்து வாஞ்சனையுடன் கொஞ்சிற்று. இங்கோ? எவ்வளவு எதிர்ப்பு, எத்துணை வஞ்சனை, எவ்விதமான சதிகள்! பழி எத்துணை, பதைப்பு எவ்வளவு! சிங்கமென முழக்கமிட்ட சண்முகத்தைச் சீறிக் கடிக்கச்சென்ற செந்நாய்க் கூட்டமும், பாய்ந்து. பிடுங்கச்சென்ற ஓநாய்களும், நகைமுகங்காட்டி பகைச் செயல்புரிந்த நரிக்கூட்டமும், கொஞ்சமா? வங்கம், தாகூரை உயர்த்திடக் கண்டோம். தமிழகத்திலோ, சர் சண்முகத்தைச், சாணக்கியர்களும் குடிலர்களும் சாய்த்திட ஜல்லடம் கட்டியதையும், சரங்கள் பல தொடுத்ததையும் கண்டோம். வங்கத்தின் அணைப்பிலே, கவி தாகூர் வளர்ந்தார் ! தமிழகத்திலே தருக்கரின் எதிர்ப்பிலே, தழைத்தது கொங்குநாட்டு வேங்கை! தாகூர், மாசு மருவற்ற வானத்திலே உலவிய முழுமதி; சர் சண்முகம், முகிலைக் கிழித்தெறிந்த முழுமதி ! இத்தமிழரைக், கவியுடன் ஒப்பிட நான் ஒப்பேன்!

கண்டனங்கள் எழுதி அலுத்த கரங்களும், கேலிப்படங்கள் வரைந்து அலுத்த பேனாமுனைகளும், சபித்துச் சலித்துப்போன திருவாய்களும், கனல்கத்திக் கருகிப்போன விழிகளும், சுருக்குக்கயிறு வீசிச்சோர்ந்து போன வலைவீசிகளும், படுகுழிவெட்டி ஆயாசமடைந்த அரசியல் வெட்டியான்களும் இன்று,சர் சண்முகம் அறிஞர் உலகிலே அரசு ஓச்சக்கண்டு, அயர்கின்றனர். ஒருகாலத்திலோ! ஏ, அப்பா! எவ்வளவு கேலி கிண்டல், என்னென்ன வசவுகள்! இவ்வளவுக்கு மிடையே பூத்தமலர், அதனை, வளமிகுந்த வங்கத்திலே வாஞ்சனை எனும்நீர் பெய்து வளர்த்த தாகூரெனும் மலருடன், ஏன் ஒப்பிடவேண்டும்? சர் சண்முகம், தமிழர்; பண்டைத்தமிழரை, தமிழ்வீரரை, நினைவூட்டும் தமிழர். வேறு உவமைகள் ஏன்?

அவர் அன்று ஆற்றிய அறவுரை, அகநானூற்று கவியை, எனக்கு நினைப்பூட்டுவானேன், என்று மீண்டும்கேட்பீர். நான்கூறுமுன்னர், நீவீர் சற்று எண்ணிப் பாருமின்.

இந்தத் திங்கள், பல்வேறு இடங்களிலே பட்டமளிப்பு விழாச்சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன. டாக்டர் ஜெயகர், பேராசிரியர் ஜா, பண்டித குன்சுரு முதலிய அறிஞர் பலர், வடநாட்டிலே, பட்டமளிப்பு விழாச் சொற்பெருக்காற்றினார்கள். படிப்பிலும் பாராளுந் திறனிலும்,மேலானவர்களான மேதாவிகள், தேசீய சர்க்காரின் அவசியத்தைப் பற்றியே பெரிதும் வலியுறுத்திப் பேசினர். தேசீயம், ஏன் இங்கு சரியான முறையிலே கமழவில்லை என்ற ஆராய்ச்சியிலேயோ அவர்கள் புகவில்லை. ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பது எளிது; கண்டிக்கவேண்டிய அளவு கசப்பு வளர்ந்துவிட்டதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் கண்டனத்தோடு நின்று விடாமல், நோய் போக எம்மருந்து உட்கொள்வதென்றுரைக்கும் நேர்மையும் நெஞ்சழுத்தமும், அந்தப் படிப்பாளிகட்கு இல்லையோ என்று அஞ்சவேண்டி இருக்கிறது. சர் சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தைச் சாடினார், சர்ச்சிலுக்குச் சூடெழ, அமெரிக்கு அழுகை கிளம்பக் கூடிய விதத்திலே!"தன் மானம் உண்டு எனக்கு ! எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலே நமக்கிருக்கும் அந்தஸ்த்துக் குறித்து மகிழ முடியாது. நான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் புகழ் பாடமுடியாது. எந்த ஆப்பிரிக்க மண்ணிலே என் இனத்தவரின் இரத்தம், போரிலே சிந்தப்படுகிறதோ, அதே ஆப்பிரிக்காவிலேயே அவர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு லாலி பாட மனம்வருமோ! மனம் முறிந்து விட்டது அன்பர்களே!' என்று சர் சண்முகம் கூறியிருப்பதுகேட்டு, அறிவும் தன் மானமும் உள்ள எவர்தான், 'சபாஷ்!' என்று கூறார் ? ஆனால், இந்தப் பகுதி எனக்குப் புள காங்கித மூட்டவில்லை. ஏனெனில், கண்ணியத்துடனும் காரணத்துடனும், கம்பீரமாகச் சர் சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தின் போக்கைக் கண்டித்தார். ஆனால், இதனினும் கடுமையாகவும், நரகல்நடையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தின் போக்கைக் கண்டிக்கத் தேசீயத் திருக்கூட்டத்திலே பலருண்டு. பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தைச் சின்னாபின்னமாக்குவேன் என்று சினந்து சூள் உரைத்தோரையும், அதன் பிடரியைப் பிடித்துக் குலுக்குவேன் என்று முழக்க மிட்டோரையும் நாடு கண்டிருக்கிறது. எனக்குத்தெரிய, ஒருதேசீயப் பிரசங்கியார் (இன்று அவர் இந்து மகாசபைவீரராக வேடமெடுத்துள்ளார்) ஒருமுறை பிரிட்டனைக் கண்டித்துப் பேசுகையிலே கூறினார், மகாஜனங்களே! பிரிட்டனிலே என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்? வெறும் சுண்ணாம்பும், நிலக்கரியும்! நிலக்கரிக்காகச் சுரங்கங்கள் தோண்டித் தோண்டி, பிரிட்டன் பாழாகிவிட்டது. முப்பதுகோடி இந்தியரும் (அன்றைய ஜனத்தொகை 30 கோடி) சேர்ந்து மூச்சு விட்டால், பிரிட்டன் ஆடிக்காற்றிலே சிக்கிய இலவம் பஞ்செனப் பறந்துபோகும்." இந்த உரைகேட்ட வீரர் குழாம் கை தட்டி ஆரவாரித்ததும், எனக்குத்தெரியும். ஆகவே, நான், சர் சண்முகம் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தைக் கண்டித்துப் பேசியதை மாபெரும் வீரம் என்று கூறவில்லை. 1920லே அம்மொழி வீரமாக இருந்திருக்கலாம். இன்றோ ! அம்மொழி பழங்கஞ்சி. வீட்டுக்கு வீடு,கலயத்திலே அது உளது! இந்நாட்டுச் சொற்பொழிவாளரின் அரிச்சுவடியே அதுவாக இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியல்ல எனக்கு ஆனந்த மூட்டியது.

நாட்டு விடுதலைபற்றிப் பேசிடாத தலைவர் இல்லை. ஆனால், அந்த விடுதலை கிட்டாததன் காரணம் என்ன என்று உசாவிடுவோர் வெகு சிலரே. உண்மை தெரிந்த பின், அதனைத் தைரியமாகக் கூறிடுவோர் அதனினும் மிகச்சிலரே. உரைத்ததோடு அமையாமல், உறுதியுடன் நின்று பணிபுரிவோர் அதனினும் மிகமிகச் சிலரே. அன்னிய நாட்டினரை மிரட்டவோ, மயக்கவோ, இங்கு ஆட்கள் அனேகர். ஆனால் இங்கு விடுதலைக்கு விரோதிகளாக உள்ளவர்களை "சற்றே விலகு" என்று கூறும் ஆண்மையாளர் மிகக் குறைவு.

சர் சண்முகத்தின் பேருரையிலே, ஆண்மை ததும்புகிறது; அதனைக் கண்டே நான் களிப்படைகிறேன். "நம்மை ஆளும் அயல்நாட்டாரின் வாக்குறுதிகளினாலோ, நல்ல எண்ணத்தினாலோ, நாட்டு விடுதலை கிடைத்துவிடுமா? கிடைத்து விடாது!" என்று கூறுகிறார் சர் சண்முகம். சுதந்தரம் சீமையிலே தயாரிக்கப்படும். சரக்கல்ல, சன்மானமாகப்பெற! அது, நாட்டுமக்களின் நாடிமுறுக்கினால் விளையக்கூடிய நிலை. அதனை இங்கேயே தான் பயிரிடமுடியும். ஆனால், அந்த வயலிலே, கள்ளிபடர்ந்திருக்கிறது. அதனைக் களையா முன்னம்,பயிர் இல்லை,பண்பு இல்லை, நாட்டு நலிவு போக்கும் பச்சிலை இல்லை. இதனை சர் சண்முகம் அஞ்சா நெஞ்சுடன் அறைவது கேண்மின்.

"இந்நாட்டிலே, அதிர்ப்தியும் துவேஷமும் அதிகரித்துளது. இது வருந்தத் தக்கது. ஆனால், இதற்குக் காரணம் என்ன ? இங்கு ஒரு கூட்டம், தனது நோக்கமும் கலையுமே பிரதானமென்று கூறி, மற்ற மக்கள்மீது அவைகளைத் திணித்தது. அதன் பலனாகவே கேடு பல தோன்றின. தேசீயத்தின் பெயரால் அக்கூட்டம். மற்றவர்களை அடக்கித் தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஸ்திரப்படுத்த முயற்சிக்கிறது."

இந்தப் பொன் மொழியை ஆராய்ந்து பாருங்கள் இந்த உபகண்டத்தின் வரலாறுகளிலே புதைந்து கிடக்கும் உண்மைகளை உணருங்கள். அந்த ஒரு கூட்டத்தின் செருக்கு எவ்வளவு! அது அழித்த அரசுகள் எத்தனை ! அதன் வயப்பட்டு அழிந்த வீரர்கள் எவ்வளவு! இறுமாப்புடன், அக்கூட்டம், தனது "தாசராக" மற்றவரை மாற்றிய கொடுமையை எண்ணிப் பாருங்கள். அப்போதுதான் அறிஞர் சண்முகத்தின் அறவுரையின் அழகு புலனாகும். இதோ வெளிப்படையாகவே வீரர் சண்முகம் விளம்புகிறார் கேளுங்கள்.

"இந்தியாவிலே வர்ணாசிரமம் ஏற்பட்டதனால், ஆளும் ஜாதி தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஏகபோக உரிமையாக அந்த அதிகாரத்தை அனுபவித்து வருகிறது. இந்த வகுப்பு, தனது ஏக போக உரிமையையும் பேராசையையும் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாகக் கைவிடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு துரிதமாக இந்தியாவுக்குச் சுதந்தரமும் ஜனநாயகமும் ஏற்படும்."

விடுதலை வீரர்களே! ஆசிரம அரசியவிலே அர்ச்சகராக உள்ள அருமைத் தோழர்களே! ஆகாத திட்டத்தைச் சுமந்து கொண்டு ஆமை வேகத்திலே செல்லும் அந்தணரின் அடிவருடிகளே! நாட்டை மீட்டிட நானாவிதமான முயற்சிகள் செய்தீர், அலுத்தீர், முடக்குவாத நோயால் வாடுகிறீர். இதுகாறும் செய்த பல, வெற்றி தரக்காணோம். வீணருக்கு அரசியலிலே உறைவிடமும், சுயநலமிகளுக்குச் சமுதாயத்திலே புகலிடமும் தரவே, உமது தொண்டு பயன்பட்டது. இதோ எமது தலைவர் இயம்பிடும் திட்டத்தைப்பற்றி யோசியுங்கள். விடுதலைப் பாதையை அடைத்துக் கொண்டுள்ள மமதையாளர்களை, மட்டந்தட்ட முன்வாருங்கள், பாருங்கள் பிறகு, பரிதிபோல் விடுதலை தோன்றிடக் காண்பீர். சர் சண்முகம் ஏகபோக மிராசுபாத்யதை அனுபவிக்கும் கூட்டத்திற்கு நன்னெறி புகல்கிறார். பேராசையை ஒழிமின்! எல்லாம் எமக்கே எனும் இறுமாப்பை, நீக்குமின்! என்று இதோபதேசம் புரிகிறார். காடியிலே பன்னீர் தெளித்துப் பயனென்ன என்பீர். ஆம் ! இதோபதேசத்தோடு நின்றுவிடவில்லை, இளங்கோ மன்றத்திலே இருந்தாண்ட வீரர். தாங்களாகப் பேராசையை விடவில்லையானால், என்ன நேரிடும் ? இந்த நிலை இப்படியே, என்றென்றும் நீடித்திருக்கும் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். ஜனநாயக வேகம் இந்தக் கூட்டத்தின் கொட்டத்தை ஒழித்துவிடும் என்ற உண்மையை உரைத்திருக்கிறார். ஆம்! இது சரிதங்கண்ட உண்மை. கிரேக்கநாட்டு ஹெலாட்களைப் (Helot) பலகாலம் அடக்கி வைத்திருந்த ஆண்டைக் கூட்டம் (Masters) அழிந்து போனது சரிதம் ! ரோம்நாட்டு பிளபியன் (Plebian), பெட்ரீஷியன் (Patrician) தகராற்றின் முடிவு என்ன? ஆதிக்கம் செலுத்தியகூட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. பிரிட்டனிலே காமன்ஸ் (Commons)பிரபுக்கள் (Lords) தகராற்றின் முடிவு என்ன? பிரபுக்கள் பெட்டிப் பாம்பு ஆனதுதானே ! ஆண்டவனால் ஆளப் பிறப்பிக்கப் பட்டவன் என்று ஆணவமாகப்பேசி (Divine Right of Kings) கடவுட் புதல்வர்கள் என்ற தத்துவத்தைப் பேசிய, முதலாம் சார்லஸ் மன்னனின் முடியும் முடிதரித்த சிரமும், என்ன ஆயிற்று ரஷியநாட்டிலே? முதலாளி (பூர்ஷுவா) தொழிலாளி (புரோலோடேரியன்) போர் மூண்டதன் பலன் என்ன? இங்குமட்டும் என்ன? ஆரிய திராவிடப்போர் மூண்டுவிட்டது. சரிதமுணர்ந்தோரின் உள்ளத்திலே, இதன் முடிவு என்னவாக இருக்கும், என்று தெரியும்! குடிலர்கள் கெடுவர்!! சழக்கர் சாய்வர் ! இத்தகைய வீர உரையாற்றிய சர் சண்முகத்தைப்பாராட்டுவதோடு நின்றுவிடக்கூடாது. எந்த ஏகபோகமிராசு ஒழிக்கப்படவேண்டும் என்று சர் சண்முகம் கூறினாரோ, எந்த வர்ணாஸ்ரமம் ஒழிய வேண்டும் என்று அவர் கூறினாரோ, அதனை ஒழிக்க மாணவர்கள் முயலவேண்டும், முனையவேண்டும்.இல்லையேல் அவர் மொழிகேட்டு யாது பயன் !

" எல்லாம் சரி, பரதா! நாங்களும் சர் சண்முகத்தின் பேருரை கேட்டுப் பூரித்தோம். ஆதிக்கம் செலுத்தும் இனம் பிரமித்தது. ஆனால் அவருடைய சொற்பொழிவுக்கும், உனக்கு அகனூற்றுச்செய்யுள் நினைவிற்கு வந்ததற்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியக்காணோமே" என்றே அன்பர்கள் கேட்பர்.

தோழர்களே! சர் சண்முகம் தமது சொற்பொழிவின் இறுதியிலே, (வர்ணாசிரமம் ஒழியவேண்டும்! ஒரு இன ஆதிக்கம் அழியவேண்டும்! ஏகபோக உரிமை மடியவேண்டும் ! பேராசைப் பித்தம் போக வேண்டும்!) என்று முழக்கமிட்டாரே, அந்தப் பகுதி, என் செவிக்கு, 'தேரை விரைவாகச் செலுத்துவாய் பாகனே !' என்று தலைவன் கூறும் செய்யுள் போன்றிருந்தது. சர் சண்முகம், வர்ணாசிரம ஒழிப்புக்காகவே வாழும் கட்சியை விட்டுப்பிரிந்து, வேறு வினையில் ஈடுபட்டு, நெடுநாட்கள் பிரிந்திருந்தார். அவர் பிரிய நேரிட்டதால் திராவிடக் கட்சி தவித்துக் கிடக்கிறது. காவல்மிகுந்த மனையிலே கன்னி நிற்பதுபோல, வினைமுற்றிய தலைவன், விரைந்து சென்று தலைவியின் துயர் தீர்த்தல்போல சர் சண்முகம், தன் நெஞ்சமெனும் பாகனுக்குத் தேரை விரைந்து செலுத்து எனக் கூறுமாறு வேண்டுகிறோம். துயிலும் பெண்மானருகே ஆண்மான் நின்று காவல்புரிவதுபோல, ஆரியரிலே தலைவர்கள், ஆரிய இனத்தைத் தமிழ்ப் பண்ணையிலே மேயவிட்டுத், தமிழ்வளம் நீர்பெருகச் செய்து, உல்லாச வாழ்வு எனும் வெண்மணலிலே படுத்துறங்கச் செய்து, காவல்புரிவதை சர் சண்முகம் காணவில்லையா ! சங்கராச்சாரி கோலத்திலும் சரி, சர்க்கார் நிர்வாகி எனும் கோலத்திலும் சரியே, ஆரிய இனத்தலைவர்கள் ஆரிய இனத்தின் சுகமொன்றே குறிக்கோளாகக் கொண்டு உழைப்பது, சர் சண்முகத்துக்குத் தெரியாதா? மானினம் காதல் மேம்பாட்டைத் தலைவனுக் குரைப்பது போல, இக்காட்சிகள், சர் சண்முகத்துக்குத் திராவிட இனத்திடம் அவர் காட்டவேண்டிய அன்பின் பெருக்கை உணர்த்தவில்லையா! ஆமெனில், தேரை விரைவாகச் செலுத்துக, என்றுரைக்கத் தானே வேண்டும்.

திராவிடமணியை, பண்டைப் பெருமை வாய்ந்த டில்லியில் ஜொலித்திடவும், சேரநன்னாட்டிலே ஒளி வீடவும், இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான், வேறு எவரெவருக்கோ, "இரவல்" தந்தவண்ணமிருப்பது? திராவிடச் செல்வத்தை ஓமானுக்குப் பலியிட்டோம். அதன் பாழும் பசியடங்க! திராவிடத் திருவிளக்கு (சர் இராமசாமியை) வைசிராய் மாளிகைக்கு ஒளிதர "இரவல் அளித்துள்ளோம். திராவிடமணி சர் சண்முகம் தேரை விரைவாகச்செலுத்தித் தமது காதலகத்தை நோக்கி வரத் தாமதித்தால், திராவிடத்தைக் கப்பிக்கொண்டுள்ள காரிருள் நீங்கிட வழிகாணோமே என்றே நான் திகைக்கிறேன். எனவே, சர் சண்முகம், எந்த வர்ணாசிரமம் ஒழிந்தால் மட்டுமே, நாடு மீளும் என்று கூறினாரோ, அந்த வர்ணாசிரம ஒழிப்பையே, வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட திராவிடக் கட்சியிலே, இன்றே பங்கு எடுத்துக்கொண்டு பணிபுரிய வேண்டுகிறோம். இன்று அதன் பாரத்தைச். சுமந்து, பெரியார், உடல் தளர்ந்து, நோய்வாய்ப்பட்டு, படுத்த வண்ணம், பல எண்ணிச் சிலமட்டுமே வெளியே கூறிச் சோகித்தவண்ண மிருக்கிறார். வைத்தியர்கள் மருந்தூட்டுகின்றனர். கட்சியோ அவருக்கு நோயூட்டுகிறது. ஓய்வு இல்லை; மனநிம்மதி இல்லை, ஒன்றா இரண்டா அவருக்குள்ள தொல்லை. உண்மையியேயே. வாலிபமும் வீரமும் அறிவும் ஆற்றலுமிக்க, சர் சண்முகம் போன்றவர்கள், கட்சியிலே பணிபுரியா திருப்பது கண்டு அவர் மனம் நோகாதா என்று கேட்கிறேன். கிளைகளை ஓடித்தெடுத்துவிட்டால், மரத்திற்குத்தான் என்ன அழகு ? ரோஜாவைப் பறித்துக் கொண்டு செடியிலே முள்ளைமட்டும் வைத்திருப்பதுபோலப், பதவியும், சுகவாழ்வும், பலரைப் பறித்துக்கொண்டுபோகச், சுயநலமிகளும் சொல்லம்பரும் ஒரு கட்சியிலே இருந்து பயன் யாது ?

சர் சண்முகம், அமெரிக்கா சென்று திரும்பி எவ்வளவு காலமாயிற்று ! ஈரோடு மகாநாட்டிலே முன்னம், கொச்சித்திவானாக இருந்தகாலை, சர் சண்முகம் வந்திருந்தார். "இன்று நம்மிடை ஓர் விருந்தாளி வந்திருக்கிறார்" என்று பெரியார் உரைத்தார். அதற்குச் சர் சண்முகம் விடுத்த பதிலின் போது, அவர் மனம், முகத்திலே தாண்டவமாடக் கண்டேன்; "வந்திருப்பது விருந்தாளியல்ல, (குடும்பத்து மகன்), வேற்றூர் சென்று வாழுபவன், விழாநாளன்று வீடு வந்திருக்கிறான், குடும்பத்தினருடன் கூடிக்குலவ, களித்து இருக்க, கனிவுடன் பேச"-என்று சர்.சண்முகம் கூறினார். அஃதன்றோ தமிழ்ப்பண்பு, அதனை யன்றோ நாம் விரும்புவோம்! ஆனால், அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு, இதுவரை (இடையே ஓர் நாள் கன்னிமாரா ஓட்டலிலே பேசினது தவிர) சர் சண்முகம், குடும்பத்தாரைக் கண்டு குசலம் விசாரித்திருக்கக் கூடாதா, கூடிப்பேசிக் குலவிடலாகாதா, தள்ளாடும்போது கைகொடுத்திருக்கவாகாதா, தன் ஆற்றலெனும் செல்வத்தைத்தந்திருக்கக் கூடாதா? ஏன் அதைச் செய்யத் தவறினார்? பாகப் பிரிவினை ஏற்பட்டு விட்டதா ! குடும்பத்தின் உயர்வு தாழ்வு பற்றிக் கருதிடாத உதவா மகனா அவர்! இதுவே, என்னை வாட்டி வதைப்பது. இசைச் செல்வத்தை வளர்த்திடவும், கலைச்செல்வத்தைக்கண்டு கண்டு களிக்கவும், சர் சண்முகம் ஓயவில்லை. ஆனால் குடும்பத்தையே மறந்தார். எனவே, அவருடைய நெஞ்சமெனும் பாகனுக்கு இனியேனும், தேரை விரைந்து செலுத்து என்று அவர் கூறாரா, என்றோர் ஆவல் என் மனதைப் பிய்த்தது.