உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்

விக்கிமூலம் இலிருந்து

கடவுள் விஷயம்

கடவுள் இருக்கிறார்!
கடவுளுக்குத் தெரியும்!
கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்!
கடவுளுக்குப் பொதுவாக நட!
கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்!
கடவுள் கைவிடமாட்டார்!
கடவுளின்மீது பாரத்தைப் போடு!

கடவுளைக் கண்டவர் இவர்—பெரிய ஞானி—மூடுடா வாயை!

கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்?

கடவுளா கொடுத்தார் — கொள்ளை அடித்துவிட்டு கடவுளையா சாட்சிக்கு இழுக்கிறாய்!

கடவுளையே நம்பிக்கொண்டுகிடடா—காரியம் நடந்துவிடும்—மூடா, உன் கடமையைச் சரியாகச் செய்யாமே, கடவுளைக் கூப்பிடறயா, எதற்கு எடுத்தாலும்!

கடவுள் காப்பாற்றுவார் போடா—ஏன் என் எதிரே பல்லைக் காட்டிகிட்டு நிற்கவேணும்—போ, போ—கடவுளைக் கேளுதாச்சொல்லி—தருவார்—போ.

கடவுள் எப்படித்தான் இந்த அக்ரமத்தைப் பொறுத்துக்கொண்டாரோ தெரியவில்லை.

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று துளியாவது பயந்தா நடக்கிறான், அந்தப் பாவி.

கடவுள்கூடத்தான் பயப்படுகிறார், இப்படிப்பட்டவர்களிடம்.

கடவுள் என்ன செய்துவிட்டார் அவனை—கண்ணைக் குருடாக்கிவிட்டாரா—கைகாலை ஒடித்துவிட்டாரா—கொழுத்துத்தான் கிடக்கிறான்.

கடவுள் கொடுத்தார்னுதான் ‘ஜம்பம்’ பேசுகிறான், அந்தக் கள்ளன்.

கடவுள், அவன் பக்கமா இருப்பது—அடுக்குமா?

கடவுள் கண் பார்த்தா, நமக்கா இந்தக் கஷ்டம் வரும்?

கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?

கடவுள் இருந்தால், இப்படியா செய்வார்?

கடவுள், கடவுள் என்று நாம்தான் கதறுகிறோம்—காரியவாதி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துதான் வேலை செய்கிறான்—கடைசியிலே அவன் பக்கம்தான் கடவுள் சேர்ந்துகொள்கிறார்.

கடவுளே! நான் என்ன பாபம் செய்தேன், இந்தப் பாடுபடுத்துகிறயே!

கடவுளே! ஏனோ இப்படி என்னைச் சோதிக்கிறாய்?

கடவுளே! இனி என்னாலே சகித்துக்கொள்ள முடியாது!

கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார்—அரசன் அன்று கொன்றால் கடவுள் நின்று கொல்லும்.

கடவுள் ‘பேர்’ சொல்லி ஊரை ஏய்க்கிறானப்பா, அந்த எத்தன்.

கடவுள் காப்பாத்துவார்னு கிடந்தான் அந்த ஏமாளி, கடைசிவரையிலே.

கடவுள், என்ன செய்யச் சொல்வார் என்பது எனக்கும் தெரியும்—நீ ஒரு உபதேசமும் செய்யவேண்டாம், உன் வேலையைக் கவனி.

கடவுள் கேட்டாரா உன்னை, ஊர்த் தாலியை அறுத்து உற்சவம் செய்யடான்னு?

கடவுள் தான் தின்கிறாரா பொங்கலையும் புளியோதரையையும்?

கடவுள் எங்கும் நிறைந்தவர்—எல்லாம் அறிந்தவர்.

கடவுள், கோயிலைக் கேட்கவில்லை, கும்பாபிஷேகம் கேட்கவில்லை, உன் மனசைத்தாண்டா கோயிலாகத் தரவேணும். அன்புதான் அவருக்குப் பிரியமான அபிஷேகம்.

கடவுள் காரியம் இது, முணு முணுக்காமல், உன் சக்தியானுசாரம் கைங்கரியம் செய்.

கடவுளுக்காக நீ வக்கீல் வேலை செய்யவேண்டாம், எனக்கும் தெரியும் கடவுள்.

கடவுளே! கடவுளே! நல்ல கடவுளடா இது! நயவஞ்சகனை வாழவிட்டு வேடிக்கை பார்க்கிற கடவுள்!

கடவுள் ‘மனசி’லே என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாரோ, யார் கண்டார்கள்?

கடவுளைக் காணவா முடியும்! கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்!

கடவுள்—இந்தச் சொல்லைக் கலந்து பேசுவதிலே, இப்படிப் பலவகை உண்டு. பேசுவோரின் சுபாவம், அவர் பேசும்போது அவருக்கு உள்ள நிலைமை, அவருடன் உரையாடுபவரின் தன்மை, ஆகியவைகளுக்கு ஏற்றபடி, இந்த ‘வகை’ இருக்கும். எல்லோரும் ஒரே மனப்பான்மை கொண்டவர்களல்ல—எனவே, அனைவரும் ஒரே வகையாகப் பேசவேண்டுமென்பதில்லை — பேச்சு பலவகையாகத்தான் இருக்கும். இதிலே ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், ஒரே ‘ஆசாமி’ கடவுள் சம்பந்தமாகப் பேசும்போது ஒரு வேளை ஒரு வகையாகவும், மற்றோர் வேளை மற்றோர் வகையாகவும் பேசுவார்—ஆச்சரியம் அதிலேதான் அதிகமிருக்கிறது. வேளைக்கோர் வகையாக இந்தப் பேச்சு மாறுவதை, பேசுபவரேகூடச் சரியாக உணருவதில்லை—சுட்டிக்காட்டும் போதுகூட, அவர் சிரிப்பார் அல்லது சீறுவார்—விளக்கம் தரமாட்டார்.

கடவுள் என்ற சொல்லைக் கலந்து பேசாதவர்கள் மிகக்குறைவு; கடவுள் என்ற சொல்லை எப்போதும் ஒரேவிதமான மனப்பான்மையுடன் பேசுபவரோ, அதைவிடக் குறைவு! சிலர் சில வேளைகளில் பேசும்போது பார்த்தால் அவர்களை நாயன்மார் வரிசையிலே வைக்கலாம்போல் தோன்றும்; சிலர் பேசும்போதே அவர்களை நாத்திகர்களோ என்று கேட்பவர்கள் ஐயுறுவர். விந்தை இதுகூட அல்ல. நாயன்மார் வரிசையிலே வைக்கலாம் என்று தோன்றக்கூடிய விதமாக ஒருசமயத்தில் பேசியவரின் மற்றோர் வேளைப் பேச்சு, அவரையே நாத்திகக் கூட்டத்திலே சேர்க்கவேண்டும்போல் காணப்படும்.

கடை முதலாளி கவலையுடன் உட்கார்ந்திருக்கிறார்—அவர் எதிரே, பார்வதிசமேதரின் படம், மலர்மாலையுடன் காட்சியளிக்கிறது — நீறுதான் நெற்றியில் — சந்தனமும் உண்டு. கவலையுடன் இருப்பவரிடம், பக்குவமாக நடந்து கொண்டு பழக்கப்பட்ட ‘எடுபிடி’, குத்துவிளக்கைத் தூண்டிக்கொண்டே பேசுகிறான்.

எ:—சந்திரசேகர செட்டியார் சரக்கு பூராவும் விலையாகிவிட்டதாம்......

மு:—பூராவுமா?

எ:—ஆமாம் — யார் கிடைப்பாங்களோ, தலையிலே மூட்டை கட்டலாம்னுதான் செட்டியார் காத்துக்கொண்டிருந்தாரே! கிடைச்சான் ஒரு ஏமாளி—பூரா சரக்கையும் தள்ளிவிட்டார் அவனிடம்.

மு:—எவ்வளவு கிடைச்சுதாம்?

எ:—ஆறுக்குக் குறையாதாம்.

கடை முதலாளி ஒரு நீண்ட பெருமூச்சுடன், “அம்பிகே!...” என்று ஒருமுறை கூறிவிட்டு, “ஆறு இருக்கும்னா சொன்னாங்க?” என்று மீண்டும் கேட்கிறார். எடுபிடி, “ஆமாங்க! ஆறுக்கு மேலேயே இருக்குமாம்” என்று பதிலளிக்கிறார்—மீண்டும் ஒரு பெருமூச்சு, மறுபடியும் “அம்பிகே!” என்று அழைக்கிறார், கடை முதலாளி.

இப்படிப்பட்ட நிகழ்ச்சி அன்றாடம் நடைபெறுகிறது—சர்வ சாதாரணமான நிகழ்ச்சி என்று கருதுகிறோம், ஆகையினாலேதான், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப்பற்றிச் சிந்திக்காமலேயே இருக்கிறோம்.

சந்திரசேகரருக்கு ஆறாயிரம் ரூபாய் இலாபம் கிடைத்தது—முடங்கிக் கிடந்த சரக்கு விற்பனையாகிவிட்டது. இந்தச் ‘சேதி’யைக் கேள்விப்படும், கடை முதலாளியின் கிடங்கிலே சரக்கு அடைபட்டுக் கிடக்கிறது—ஏட்டிலே இலாபம் குறிக்கப்படவில்லை—இந்நிலையில், வேறொருவர், வியாபாரத்திலே வெற்றிபெற்றார் என்று கேள்விப்பட்டதும், பெருமூச்சுடன், அம்பிகே! அம்பிகே! என்று அழைக்கிறார்! அவ்விதம் அவர் அழைக்கும்போது, அவர் மனப்பான்மை என்ன? பக்திப் பரவசத்திலே, அவ்விதம் கூவி அழைத்தாரா? பாராட்டுதலுக்காக அழைத்தாரா? துணை செய் என்று கூப்பிட்டாரா? அவன் அடித்துவிட்டானே கொள்ளை, எனக்குக் கிடைக்கவில்லையே, நான் உன்னைப் பூஜை செய்தவண்ணம் இருப்பவனாயிற்றே, என்ன செய்தாய் எனக்காக, அதோ பார் சந்திரசேகரன் இலாபம் சம்பாதித்துவிட்டான், உன் சக்தியை என் பக்திக்காக மெச்சி என் பக்கம் திருப்புவாய், எனக்கும் இலாபம் கிடைக்கும் என்றுதானே நம்பி உனக்கு நெய் விளக்கு ஏற்றினேன், இருந்தும், என்னைக் கவனிக்காமலிருக்கிறாயே—என்று அம்பிகையிடம் குறைபடுகிறாரா? மிரட்டுகிறாரா? அம்பிகையை அவர் அந்தச் சமயம் அழைத்தபோது, எந்தவிதமான மனப்பான்மையுடன் இருப்பதாக எண்ணுகிறீர்கள்? எண்ணிப் பாருங்கள்—எண்ண, எண்ண வேடிக்கை வளரும். அவரையே கேட்டுப் பாருங்கள்—அவர் சாதுவாக இருந்தால்—அதைவிட வேடிக்கையாக இருக்கும்.

கடை முதலாளியின் பெயரைக் கந்தப்பன் என்று கொள்வோம்—அவர் துணைவியாருக்கு, சின்னம்மா என்று பெயரிடுவோம். இருவரும் சந்திக்கின்றனர். அவரைச் சந்திக்குமுன்பே, சந்திரசேகரர் ‘சேதி’ அம்மைக்குத் தெரிந்து விட்டிருக்கிறது. சமயமறிந்து கேட்கிறார்கள், “அவர் கடையிலே சரக்கு பூராவும் விற்றுவிட்டாராமே” என்று. “ஆமாம்” என்று சுருக்கமாக, சோகத்துடன் கூறுகிறார், கந்தப்பர். “கடவுள் அவருக்கு நல்ல வழி காட்டினார்”—என்று சின்னம்மா கூறுகிறார்கள், எப்போதும்போல. கந்தப்பரை நாம் பார்த்திருக்கிறோம் முதலிலேயே, கவனமிருக்கிறதல்லவா? நீறு பூசியவர்!! எனவே, சைவர்! பக்தர்! எனினும் சீறுகிறார், சின்னம்மாவின் பேச்சைக் கேட்டதும்; “கடவுளு காட்டினாரா, கடவுளு! பய, ஆள் விழுங்கி......வாடிக்கைக்காரன்களை வலை போட்டு, பிடித்து, அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு பேசி, கொள்ளை அடித்துக்கிட்டான். கடவுளு கொடுக்கிறாரா, கடவுளு! இவனுக்கா! மாதத்திலே மூன்று தடவைகூட நிஜம் பேசமாட்டானே, அவனுக்குப் போய், கடவுள் உதவிசெய்யறாரா? தரகு தர்மலிங்கம் இல்லே, நம்ம கடைக்குவருவானே முன்னே எல்லாம், நமக்கும் அவனுக்கும் கொஞ்சம் தகறாரு, அதனாலே அந்தப் பய, நம்ம கடை வாடிக்கையைச் சந்திரசேகரன் கடைக்குத் திருப்பிவிடுகிறான்—அதனாலே ஒரு ‘சான்சு’ அடிச்சுது...கடவுளு, போய்க் கூட்டிகிட்டு வந்து சொன்னாரா, “போடா போய் சந்திரசேகரன் கடை சரக்கை வாங்கு — அவன் அநியாய விலை வைத்துத்தான் விற்பான், இருந்தாலும் அவனிடமே வாங்கடான்னு சொல்வாரா—அதுதானா கடவுளுக்கு வேலை.....”—என்று மடமடவெனப் பேசுகிறார். அந்தச் சமயத்திலே, அவர் யாராக இருக்கிறார்? பக்தராகவா? நாத்திகராகவா?—சிந்தித்துப்பாருங்கள்—வேடிக்கை வளரும். சின்னம்மாள், கணவரின் சீற்றம் அடங்கிய பிறகு, பேச்சைத் துவக்கி, ‘தரகு தர்மலிங்கத்தோடு ஏன் தகறாரு செய்துகிட்டீங்க? அவன் விஷமக்காரனாச்சே! நமக்கு ஏன் அவனோட விரோதம்? நஷ்டமும் கஷ்டமும் நமக்குத்தானே?” என்று கூறுகிறார். கந்தப்பர் இதற்கிடையிலே ஏழெட்டு முறை, முருகா! முருகா! என்று அழைத்துவிட்டார், ஆறேழுமுறை அம்பிகையை அழைத்துவிட்டார். கூடத்து மாடத்தில் உள்ள பிள்ளையாரைக் கும்பிட்டுக் கொண்டார். கந்தப்பரின் ‘ஆத்திகம்’ அப்பு அழுக்கின்றி நடந்துகொண்டே இருக்கிறது. எனினும் தரகு தர்மலிங்கத்தைக் குறித்துப் பேச நேரிட்ட உடனே அவர்மனம் புதுவிதமாகிவிடுகிறது. “தகறாரு ஏன் வந்ததுன்னா கேட்கறே? தரகு, மற்ற கடைக்காரர் கொடுக்கிறதைவிட நான், அவனுக்குத் தாராளமாகத்தான் தருவது வழக்கம்—பிள்ளை குட்டிக்காரன் பிழைச்சிப்போகட்டும்னு. அப்படி இருந்தும், அவன் தைரியம், பேராசை, போனவெள்ளிக்கிழமை, ‘நூறு ரூபாய்’ கொடுன்னு கேட்டான். ஏம்பா என்று கேட்டேன். அவரு, கோயில் கட்டறாராம் அவர் தெருக்கோடியிலே—அதுக்கு, ‘தர்மம்’ கொடுக்கவேணுமாம், நானு. தர்மலிங்கம்! காலம் இருக்கிறதைக் கவனிக்காமே, இப்படி நூறுகொடு, ஐம்பதுகொடுன்னு கேட்டா, என்னப்பா செய்யறது. கோயிலுக்கும் குளத்துக்கும் கொட்டிக் கொடுக்கிறபடியாகவா இங்கே இலாபம் குவியுது—அப்படின்னு, சமாதானமாகத்தான் சொன்னேன். உடனே ‘கடவுள் காரியமாக நான் கேட்கிறேன், என் வீட்டுக் கலியாணம், சீமந்தத்துக்கு அல்ல—கொடுத்தா, அதுக்கான பலன், உங்களுக்குத்தான், கொடுக்காவிட்டாலும் சரி, உங்க இஷ்டம்—கடவுள் காரியத்துக்கு, பத்துபேரும் உபகாரம் செய்வாங்க—நீங்க, முடியாதுன்னு சொல்கிறிங்க —சரி — நான் என்ன சொல்ல இருக்குது—ஏதோ என்னாலே, உங்களுக்கு எவ்வளவோ கிடைச்சிருக்கும்; கடவுள் காரியத்துக்கு அந்தக் காசு உபயோகப்படக்கூடாது போலிருக்கு—உங்க இஷ்டம்—அப்படி இப்படின்னு, என்னமோ இவன்தான் கடவுளைக் கண்டுவிட்டவன்போலவும், நாமெல்லாம் கடவுள் பக்தியே இல்லாதவங்கபோலவும், என்னமோ கடவுள் இவனைக் கூப்பிட்டுக் கோயிலைக் கட்டச் சொன்னது போலவும், அளந்தான் அரை மணி நேரம்—அதுதான் தகறாருக்குக் காரணம்” — என்று விளக்குகிறார். சின்னம்மா, “என்னங்க, போனா போகுதுன்னு, ஒரு பத்தோ இருபதோ தொலைத்து விடுவதுதானே. அவனும் கடவுள் காரியமாகத்தானே கேட்டான்” என்றுகூற, சீறிய கந்தப்பர், “கடவுள் காரியமா! கடவுள் நேரிலேயா வந்தார், அவன்கிட்டே? ரூபாய்க்குக் கால்தரகு கேட்பாண்டி அவன். கடவுள்பேரைச் சொல்லிக்கிட்டு ‘காசு’ திரட்டக் கிளம்பிவிட்டான் அவன். எனக்கா தெரியாது இவன் நடத்தை. கோயில் இருக்கிற திக்குக்கூட இவனுக்குப் பிடிக்காது. காலையிலே தூங்கி எழுந்திருந்ததிலே இருந்து ராத்திரி படுக்கிறவரையிலே, பொய் பேசிப் பேசிப் பொழுதை ஓட்டுகிறான்—இவனுக்குக் கடவுள் பக்தி வந்து விட்டதோ! கடவுள் காரியம்னு சொன்னா, கண்ணை மூடிக்கொண்டு அள்ளிக் கொடுப்பாங்க என்கிற தைரியம்” என்று பேசுகிறார். சின்னம்மாவுக்கு, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கடவுள் காரியத்துக்காக என்று முன்பு ஒருமுறை காட்டுப்பட்டி மிட்டாதாரர் வந்தபோது, கந்தப்பர், ஆயிரத்தோரு ரூபாய் கொடுத்திருக்கிறார். “நம்ம சக்திக்கு மீறின தொகை” என்று சின்னம்மா தடுத்துக்கூடக் கேட்கவில்லை, காட்டுப்பட்டியார் நேரே நம்மவீடுதேடி வந்துவிட்ட பிறகு, ஆயிரம் கொடுக்காவிட்டா நல்லதா என்று வாதாடினார். காட்டுப்பட்டியாரிடம் காணிக்கை கொடுப்பதுபோலப் பணத்தைக் கொடுத்துவிட்டு, “கடவுள் காரியத்துக்கு உபயோகப்படாதபடிக்கு வேறே எதுக்குத்தானுங்க பணம் இருக்குது” என்று பேசினார். இந்தக் காட்சிகள் சின்னம்மாவின் மனக்கண்முன் தோன்றின. தரகு தர்மலிங்கத்தின் ‘கடவுள் காரியம்’ கந்தப்பருக்குக் கடும்கோபம் கிளப்பிவிட்டது கேட்டு, சின்னம்மாளுக்குச் சிந்தனை குழம்பலாயிற்று. நமக்கு மட்டும் என்ன! சிந்தித்துப் பாருங்கள் — கந்தப்பர், யார்? அவருடைய மனப்போக்கு எத்தகையது? அவரை எந்த ‘வகையிலே’ சேர்க்கலாம், என்று எண்ணிப் பாருங்கள். வேடிக்கை வளரும். சின்னம்மா, சயனித்துக்கொண்டார்—சிவன்கோயில் தர்மகர்த்தா சீருடையாப்பிள்ளை, எதிர்வீட்டுக்காரர்—அவரிடம் பேசிக்கொண்டிருக்கச் சென்றார் கந்தப்பர். அரைமணி நேரம், ‘சத்விஷயம்’ பேசிக்கொண்டிருந்தனர். வீட்டுக்குப் பிறகு திரும்பினார் பாலைப் பருகினார்—சின்னம்மாளைப் பார்த்தார், “பால்காரன், ஏன் இப்படி, அக்ரமக்காரனாகிவிட்டான்—கடவுளுக்குப் பொதுவாக நடக்கச் சொல்லு” என்று கூறிவிட்டு, முருகனை மூன்று முறை அழைத்தார், அம்பிகையையும் அழைத்தார், படுத்தார், உறங்க. அந்த ‘அழைப்பு’ விடுத்த சமயம் அவருடைய மனநிலை என்ன? எதற்கு அழைத்தார்? என்பதுபற்றி எண்ணிப்பாருங்கள்—விந்தையாக இருக்கும்.

கடவுள் விட்டவழிப்படி நடக்கட்டும்—என்று சர்வ சாதாரணமாகப் பேசுவர், பெரும்பாலோர். அவர்களுக்குள்ள ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை இந்த வாசகம் காட்டுவதாகக், கருதப்படுகிறது.

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி

விட்ட சிவனும் செத்துவிட்டானோ?—முட்ட முட்டப்

பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கு.........

என்று கூறிடும் கவிதை வடிவிலே உள்ள கருத்தும் இது போன்றதே. ஆழ்ந்த ஆத்தீகத்தின், அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையின் அடையாளமாக இக்கருத்துக்களைக் கூறுகிறார்கள். இத்தகைய கருத்துள்ள ‘பேச்சு’ யாரால் எந்தவிதமான நிலைமைகளின்போது கூறப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் தான், இந்த வாசகங்களின் முழு உண்மை துலங்கும். கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும் என்றபேச்சு எப்படி, சர்வசாதாரணமாக நாட்டிலே கேட்கப்படுகிறதோ, அதுபோலவே, கடவுள் காப்பாற்றுவாருன்னு, நம்பிக்கொண்டே இருந்தானப்பா அந்த ஏமாளி—கடைசிவரையிலே! என்ற பேச்சும் நாட்டிலே கேட்கப்படுகிறது. ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை முதல்வாசகம் காட்டுகிறது என்றால், அந்த நம்பிக்கையைக் கேலிசெய்து கண்டிப்பதாக இருக்கிறது இரண்டாவது வாசகம்.—இந்த இருவகைக் கருத்துக்களை வெளியிட்ட இருவரில், ஒருவர் ஆத்திகர், மற்றவர் நாத்திகர் என்றும் அறுதியிட்டுக் கூறிவிடமுடியாது—அவர்களின் நினைப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கவனித்தால்.

நெருப்புப்போலக் காய்கிறது—மூடிய கண்களைத் திறக்கவில்லை—சொட்டுப்பால்கூட உள்ளே இறங்கவில்லை—பார்க்கிறவர்களெல்லாம், ஐயோபாவம்! என்று கூறிப் பரிதாபப்படுகிறார்கள், கண்ணீரைத் துடைத்தபடி தாயார் குழந்தையின் பக்கம் உட்கார்ந்திருக்கிறார்கள், பாண்டுரங்கனிடம், நண்பர்கள் வருகிறார்கள், குழந்தையின் நிலைமையைப்பற்றி விசாரிக்க.

“டாக்டர் தாமோதரத்திடம் காட்டினாயோ?”

“ஆறுநாள் அவர்தான் மருந்து கொடுத்தார்.........”

“கட்டுமாத்திரை கந்தப்பண்டிதரிடம் காட்டினா, ஒரே வேளையிலே காய்ச்சல் போயிடுமேப்பா! பாண்டு! அவரைக் கூப்பிட்டுக் காட்டிப்பாரேன்”

“அவர் நாலுவேளை மருந்து கொடுத்தாருங்களே — பிறகு அவரே தான் சொன்னார், இங்கிலீஷ் மருந்து கொடுத்துப்பாரு பாண்டுன்னு”

இப்படி நண்பர்கள் கேட்கிறார்கள். பாண்டுரங்கன், தான் எடுத்துக்கொண்ட முயற்சியை எல்லாம் கூறுகிறான்; கடைசியாகத்தான் அவன் சொல்கிறான், மனக் கஷ்டத்துடன், கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்—என்று. பெரிய டாக்டர் ஒருவர் பெங்களூருக்கு வந்திருக்கிறாராம் சீமையிலிருந்து — அவர், ‘பிராணவாயு’வையே நோயாளிகளுக்குத் தருவாராம், எப்படிப்பட்ட வியாதியானாலும் குணமாகிவிடுமாம், ஆனால், பணம் அதிகம் கேட்கிறாராம், 500க்குக் குறைவாக வாங்குகிற வழக்கமே கிடையாதாம்—என்ற ஒரு தகவலைத் தருகிறார் ஒரு நண்பர். பாண்டுரங்கனுடைய சக்திக்கு மீறிய காரியம், அந்த வைத்தியம்—அவனோ கடனாளி—500 ரூபாய் கேட்கும் சீமை டாக்டரை நாடமுடியாத நிலை—எனவே, ஒரு நீண்ட பெருமூச்சுடன் அந்தத் தகவலைக் கேட்டுக்கொண்டான்—பிறகுதான், கடவுள்விட்ட வழிப்படி நடக்கட்டும் என்றான். குழந்தை இறந்துவிட்டது—பெங்களூர் பெரிய டாக்டரைப் பற்றிய தகவலைத் தந்த நண்பர், வேறோர் நண்பரிடம் கூறுகிறார், “கடவுள் காப்பாற்றுவார் என்றே நம்பிக்கொண்டிருந்தான் அந்த ஏமாளி, கடைசிவரையிலே!” என்று—கேலியும் கண்டனமும் கலந்த குரலில். பாண்டுரங்கன் கடவுளின் மீது பாரத்தைப் போட்டது, அந்த நண்பருக்கு, ஆத்திகமாக ஆழ்ந்த நம்பிக்கையின் விளைவாக, பாராட்டுதலுக்குரியதாகத் தோன்றவில்லை—ஏமாளித்தனத்தின் விளைவு என்றே அவர், அவன் பேச்சைக் கருதுகிறார்; கடவுளின் மீது பாரத்தைப் போடுவது என்பது ஆத்திகமானால், அதைக் கேலியாகப் பேசுவது நாத்திகம்தானே! ஆனால், அந்தக் கேலி பேசியவர், சோமவார விரதக்காரர், சொக்கநாதரிடம் பக்தி கொண்டவர், பழுத்த சைவர்!!

கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும் என்ற ஆத்திக உரையாற்றிய பாண்டுரங்கன், அந்தப் பேச்சை முதலிலே கூறிக்கொண்டிருந்தவனல்ல. குழந்கைக்கு ஜுரம் என்ற உடனே மருந்து தரச் சொன்னான், மனைவியிடம் — பிறகு குழந்தை வைத்தியம் குப்பிப் பாட்டியை அழைத்துவந்து காட்டினான்—பிறகு கட்டு மாத்திரை கந்தப் பண்டிதரை அழைத்துவந்தான்—பிறகு மிஷன் ஆஸ்பத்திரிக்குக் குழந்தையை எடுத்துச் சென்றான்—பிறகு டாக்டர் சோமு L. M. P. யை அழைத்தான், அடுத்தபடி டாக்டர் சுந்தரம் M.B.B.S. வந்தார், பிறகு டாக்டர் தாமோதரம் வந்து பார்த்தார்—இதற்கிடையே, மிளகு மந்திரிக்கும் மாரிசாமி, கோழி சுற்றிவிடும் கோலப்பிள்ளை, விபூதிதூவும் மாயாண்டி இப்படிப் பல மந்திரவாதிகளின் துணையையும் நாடினான் — விளக்கு வைத்தான் கோயிலுக்கு—குலதேவதையை வேண்டிக்கொண்டான் — மஞ்சள் துணியால், குழந்தையின் கையிலே காப்புக் கட்டினான்—இவ்வளவெல்லாம் செய்தான் பிறகு, அலுத்துப்போய், பலன் காணாமல் பதைத்துப் போய், இனி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கும் போதுதான், பாண்டுரங்கன், கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும் என்றான் துவக்கத்திலே அல்ல — முயற்சி செய்து பார்க்காத முன்பு அல்ல—வீட்டு வைத்தியம், டாக்டர், மந்திரம், பூஜை, இவ்வளவுக்கும் பிறகு, வழக்கமான பல வழிகளையும் பார்த்தான் பிறகு, சொன்னான், கடவுள்விட்ட வழிப்படி நடக்கட்டும், என்று. அப்படி அவன் சொன்னது ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையின் விளைவு என்று கூறப்படுமானால், குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டதும், அவன், பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டானே, அப்போது அவன், யாராக இருந்தான் — ஆத்திகனாகவா நாத்திகனாகவா? சிந்தித்துப் பாருங்கள்—சிக்கலாக மட்டுமல்ல, சுவை தருவதாகவும் இருக்கும்.

பொதுப்படையாக எண்ணிப் பார்ப்பது கடினமாக இருக்கக்கூடும், பலருக்கு எப்போதும் — சிலருக்குச் சில வேலைகளில். அந்தக் குறைபைப் போக்க, கடவுள் பிரச்சனையை உள்ளடக்கிய கதைகள் சிலவற்றைக் கூறியிருக்கிறேன்.

நாட்டிலே அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காண்போருக்கு,—கருத்திலே காலக்கூளம் சுமையாகாமல் உள்ளவர்களுக்கு—நிச்சயமாக ஏற்படக்கூடிய எண்ணங்களே கதைவடிவுடன் தரப்பட்டுள்ளன. படித்தால், சிந்தனை கிளறிவிடப்படும் அனைவருக்கும்! சிலருக்குச் சீற்றம் பிறக்கும்—துவக்கத்தில்! இனிக் கேளுங்கள் கடவுட் கதைகளை!
—அண்ணாதுரை.