உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்

விக்கிமூலம் இலிருந்து

 1 


கதிரவன் கண்ணீர்!

உண்மை தழுவிய கற்பனை

இது ஒரு மனிதனின் கதை அல்ல. கடவுளின் கதை. கடவுளின் மனைவி கதையுங்கூடத்தான். கடவுளின் கதை என்றால், நாம் காணாத, கேட்டு மட்டும் இருக்கும் புராணமல்ல. நிஜமாக நடந்த கதை.

மனிதர்களுக்கு வாழ்வும், தாழ்வும் சகஜம். சுகமும் துக்கமும் பகலும் இரவும்போல மாறிமாறித் தானே வருமென்பார்கள். குப்பைமேடு உயரும், கோபுரம் தாழும், குசேலர் குபேரராவர், குபேரர் குசேலராவர். இது சகஜம். ஆண்டவனின் திருவிளையாடல் என்பர். ஆனால் கடவுள்களின் கதி பற்றிய கதை இது!

“கரத்தாயி! நாம் நேரே சூரியபகவானிடம் போய் நமது குறையைக் கூறுவோம்வா” என்றார் சடையப்பர்.

“வா போகலாம். ஆனால் சூரியபகவானுக்கு நமது குறையைக் கேட்க நேரமேது. ஓயாது ஓடிக்கொண்டிருக்க வேண்டுமே, சற்று நின்று செய்தி விசாரித்து, ஆறுதல் கூற அவருக்கு அவகாசம் இராதே” என்றாள் காத்தாயி.

“அதுவும் உண்மைதான். என்றாலும் நமது குறையை யாரிடமாவது கூறிக்கொண்டால் தான் மனம் நிம்மதியாகும்” என்று சடையப்பர்கூற, ‘போய்த்தான் பார்ப்போம், வாரும்.’ என்று காத்தாயி சம்மதிக்க இருவரும் கிளம்பினர்.

“ஐய்யோ! அட பாவிகளே! இது என்ன அக்கிரமம். வேண்டாமடா, நிறுத்துங்களடா. என்முகமெல்லாம் இரத்தமடா. முதுகெல்லாம் வீக்கமடா. ஆயிரக்கணக்கான பேர்வழிகளாகக் கூடிக்கொண்டு இப்படி கற்களால் அடித்து இம்சிக்கிறார்களே. ஆண்டவனே! கேட்கக்கூடாதா! இப்படியும் நடக்கவேண்டுமா”—என்று சூரியபகவான் கூறி அழுதுகொண்டிருந்தார், கண்களிலே நீர்தாரை தாரையாகப் பெருகிற்று, அந்த நீர் கீழே வீழ்ந்த பிறகே, கல்லால் அடித்த ஆயிரக்கணக்கானவர்கள் கற்களைக் கீழே போட்டு விட்டு, ரகுபதிராகவ ராஜாராம் பதீதபாவன சீதாராம்—என்று பாடி, ஆடிக்களித்தனர். தங்கள் குறையைக் கூறிக்கொள்ள வந்த காத்தாயியும் சடையப்பரும், சூரிய பகவான் அழுத கண்களுடன் நிற்பதையும், முகத்திலும் முதுகிலும் உடலிலும், கல்லடிக்காயம் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டு, தங்கள் விஷயத்தைக் கூறாது, முதலிலே சூரியபகவானை துக்கம் விசாரிக்கத் தொடங்கினார்கள்.

சூரிய பகவான், “சற்றேபொறுங்கள், சனியன்கள் தொலைந்தார்களா என்று பார்த்து விட்டுப் பிறகு பேசுவோம்” என்று கூறிவிட்டு, கீழேபார்த்தார். மக்கள் கும்பல் கும்பலாக குதூகலத்துடன் போகக் கண்டு “தொலைந்தது பீடைகள்” என்று கூறி பெருமூச்சு விட்டுக்கொண்டே தன் உடலில் இருந்த தழும்புகளைத் தடவலானார்.

“ப்ரபோ! இதென்ன கோலம். ஏன் இந்த அழுகை? இதென்ன காயங்கள்?”—என்று காத்தாயி கேட்க, சூரிய பகவான் கூறினார்.

“என் விதியை எண்ணித்தான் காத்தாயி! நான் அழுதேன். நான் அழுத பிறகுதானே அந்தப் பாவிகள் என்னை அடிப்பதை நிறுத்தினார்கள். என்ன பலமான அடி! என்ன அடி! போறாதகாலம் எனக்கு” என்று மனம் நொந்து கூறினார்.

“என்னதான் நடந்தது?” என்று சடையப்பர் கேட்டார்.

“என்ன நடந்ததா? ஏன் கேட்கிறீர்கள் அந்த வேதனையை! மகா புண்ணிய க்ஷேத்திரமாகிய காசிக்கு வந்தும் கர்மம் தொலையவில்லையே என்பார்கள். எனக்கோ காசிக்கு வந்ததாலேயே இந்தக் கர்மம் வந்தது. நான் வராமல் எப்படி இருக்க முடியும்? காசி ராமேஸ்வரம், கண்டி கதிர்காமம், ரங்கூன் சிங்கப்பூர், லண்டன் பாரிஸ், பெர்லின் பக்தாது, மாஸ்கோ, மிலான், அங்காரா, அஜோர்ஸ், நியூயார்க், ஆட்டவா, நியூஜிலந்து முதல் எந்த இடத்தைத்தான் நான் போய்க்காணாமல் இருக்கிறேன், காடுமேடுகளையும் காண்கிறேன், காதலர்கள் கொஞ்சிடும் வீட்டையும் பார்க்கிறேன், சகாரா பாலைவனத்தில் சஞ்சரிக்கிறேன், மூடுபனிப்பிரதேசங்களில் நுழைகிறேன், மன்னாதி மன்னர்களும் என்வரவை எதிர்நோக்கி நிற்கக் காண்கிறேன், மகாபாதகம் புரிவோரும் என் வரவுக்கு மகிழக் காண்கிறேன், யாரிடமும் பேதங்கொண்டு, இன்னவருக்கு இவ்வளவு என்று இராமல், எதிர்ப் பட்டோரிடம் எள்ளளவும் பாராபட்சமின்றித்தான் நடக்கிறேன். என் கடமையைச் செய்யத் தவறவேயில்லை. முதுகு வளைய மூட்டை சுமந்து செல்லும் வறியவனைக் கண்டு, அவனது காலும் தலையும் காயுமே என்று சிறிது மனதில் ஈவு இரக்கம் தோன்றிய போதிலும், நாம் என்ன செய்வது, அது அவன் விதி, அவன்மீது காய்வது நம் விதி” என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு கடமையைச் செய்கிறேன். அன்னநடை அணங்குகள் என்று ஆயிரமாயிரம் கவிகள் கூறக்கேட்டுத்தான் இருக்கிறேன் என்றாலும், அந்த மாதர்கள், கால்கொப்புளிக்க நடந்து செல்லக் காணும்போது, தவிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் நான் என்ன செய்வது, நான் தயை தாட்சணியம் காட்டுவதற்கில்லை. “அச்சம் கொண்டு கடமையைச் செய்யத் தவறியதில்லை அப்படிப்பட்ட எனக்குத்தான் இந்தக் கதி வந்தது” என்று கூறி சோகித்த சூரிய பகவானை நோக்கி. காத்தாயி, கண்ணீர் உதிர்த்து “பகவானே! உமக்குமா இந்தக்கதி வந்தது?” என்று பரிவுடன் விசாரித்தாள்.

“ஆமாம்! காத்தாயி! என் கதை கிடக்கட்டும். நீங்கள் பசியோடு இருப்பீர்களே,” ஏதேனும் சாப்பிடலாமே என்று சூரிய பகவான் கேட்டார்.

சடையப்பர், சம்பிரதாயத்துக்காக, “பசி இப்போது இல்லை, முதலிலே உமது கதையைக் கூறும்” என்றார்.

“ஆமாம், உங்களுக்குப் பசி ஏன் இருக்கப்போகிறது. ஆடு கோழியும், அன்னமும், பாலும், பழமும், பட்சணமும் பக்தகோடிகள் படைக்கிறார்கள். தின்று தெகிட்டிவிட்டு இருக்கும்” என்றார் சூரிய பகவான். ஆறு நாட்கள் அன்னாகாரமின்றி காத்தாயியும் சடையப்பரும் அலைந்தது அவருக்குத் தெரியாது.

இந்தக் காசி க்ஷேத்திரத்திலே, கங்கையில் மூழ்கி எழுந்து, கைகூப்பி என்னைத் தொழுதோர் கணக்குண்டா? எனது செந்நிற மேனியைப் புகழ்ந்து பூசித்தவர்கள் கோடானுகோடி பேர். கண்கண்ட தெய்வமே! காசினியின் விளக்கே! காரிருளை அகற்றும் கருணாமூர்த்தி! என்று கவிதைகள் பாடுவோர் எவ்வளவோ பேர். அப்படிப்பட்ட கங்கைதான் இது!

அவ்விதமாகவெல்லாம் பூஜித்துவந்த புண்ணிய க்ஷேத்திரத்தில்தான் அதே பக்தகோடிகள் என்னை, சபித்து, பைத்தியக்காரனைச் சுற்றிச் சிறு பிள்ளைகள் நின்றுகொண்டு கற்கள்கொண்டு அடிப்பதுபோல் அடித்து, இவ்வளவு காயங்களை உண்டாக்கினார்கள். எவ்வளவு கூட்டம் தெரியுமோ! என்ன ஆத்திரத்தோடு அடித்தார்கள் தெரியுமோ! ஆயிரக்கணக்கானவர்கள், கற்களை வாரி வாரி வீசினார்கள். “அடபாவி, பாதகா, பழிகாரா” என்று தூற்றினார்கள் என்றார், சூரியபகவான்.

“ஏன்” என்றார் சடையப்பர்.

“ஏனோ! ஏன் இப்படிக் காய்ந்து தொலைக்கிறாய் என்று கேட்கிறார்கள். கோபிக்கிறார்கள். அடிக்கிறார்கள்” என்றார் சூரியர்.

“காய்வதுதானே கதிரவன் கடமை” என்றாள் காத்தாயி.

“ஆமாம்! கடமையும் அதுதான். விதியும் அதுதான்” என்றார் சூரியன்.

“மக்கள் பிறகு கோபிப்பானேன்?” என்றாள் காத்தாயி.

“மக்கள்! கேட்கிறாயே காத்தாயி. அவர்களின் கோபத்துக்குக் காரணம் வேண்டுமா! எதற்குத்தான் அவர்கள் காரணம் பார்க்கிறார்கள்” என்று சடையப்பர் வெறுப்புடன் கூறினார்.

காத்தாயியும் “ஆமாம்! அதுகளுக்கு, எதுதான் தெரிகிறது” என்று சோகத்துடன் கூறிவிட்டு, “இப்படி வெறிபிடித்தவர்கள்போல், உம்மைக் கல்லால் அடித்த பேர்வழிகள் இப்போது ஏன், ஆனந்தமாக ஆடுகிறார்கள்” என்று கேட்க, “அதைத்தான் நான் ஆண்டவனிடம் கேட்கப்போகிறேன். இந்த அக்ரமம் உண்டா என்று கேட்கவேண்டாமா?” என்று சூரியன் கோபத்துடன் கூறிவிட்டு, “இரு! இரு! காத்தாயி, அதோ அந்த மக்கள் ஏதோ கூறுகிறார்கள் கேட்போம்” என்றார். மூவரும் உற்றுக் கேட்டனர்.

“அனாதரட்சகா! ஆபத்பாந்தவா! அடியார்களாகிய, எங்கள் குறையைத் தீர்க்க முன்வந்ததற்காகத் தங்களுக்கு ஆயிரங்கோடி வந்தனம் செலுத்துகிறோம். கதிரோன், காய்ந்து காய்ந்து, ஊரிலுள்ள நீர் நிலையங்கள் காய்ந்துபோயின, பயிர் பச்சைகள் தீய்ந்துபோயின. எங்கள் வயிறு எரியத் தொடங்கிற்று. சூரிய பகவானுக்கு நாங்கள் ஒரு குறையும் செய்யவில்லை. கண்ணால் காணும்போதே “பகவானே!” என்று கூறி துதிக்கிறோம். பரிசுத்தமான கங்கையில் குளித்தானதும், கைகூப்பி, “கண்கண்டதெய்வம்” என்று பூஜிக்கிறோம். பாற்பொங்கல் படைக்கிறோம். சிரித்த முகத்துடன் கிளம்பி, எங்கள் பூஜையை ஏற்றுக் கொண்டானதும், சீற்றத்துடன் எங்களை முறைத்து முறைத்துப் பார்த்துவிட்டு, நாங்கள் படுக்கைக்குப் போகுமுன்னம், எங்களை நோக்கி கேலி செய்வதுபோல் புன்சிரிப்புடன் மறைகிறார். பிரதிதினமும் இதே கதிதான். எவ்வளவோ “தீட்சணியம், உக்கிரம்! எங்கள் பூஜையைப் பெற்றுக்கொண்டு தரும்பலன் இதுதானா? இப்படிச் செய்தால் எமக்குக் கோபம் வராதா! மழை இல்லை மக்களுக்கு உணவுக்கு வழியில்லை. மாடு கன்றுக்குப் புல் இல்லை. உமது பூஜைக்கு மலர் இல்லை. மனதிலே மகிழ்ச்சியில்லை. எவ்வளவோ வேண்டினோம், துதித்தோம். சூரியனுக்கு மனம் இரங்கவில்லை. கடைசியில் பார்த்தோம். அடியா மாடு படியாது என்பார்களல்லவா? எடுத்தோம், கற்களை. விடுத்தோம் சரமாரியாக, சக்கைபோடு போட்டோம் பிறகுதானே, மழை பெய்தது. உமது கருணையே கருணை!

நாங்கள் சூரியனை இம்சித்தோம் என்று உமக்குக் கோபம் வருமோ என்று முதலில் பயந்தோம். இப்போது தெரிந்துவிட்டது. சூரியனை நாங்கள் கல்லால் அடித்ததைத் தாங்கள் தவறாகக் கொள்ளவில்லை என்று. தயாநிதே! தாங்கள் அனுப்பிய மழைக்காகத் தங்களுக்கு எங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்” என்று காசி க்ஷேத்திரவாசிகள், விஸ்வநாதர், ஆலயத்திலே வந்தனை வழிபாடு, செய்துகொண்டு, ஆண்டவனைத் துதித்துக்கொண்டிருந்தனர்.

“கேட்டாயோ காத்தாயி! நான் அழுத கண்ணீர் அவர்களுக்கு மழையாயிற்று. அதற்காக ஆண்டவனுக்கு பூஜை செய்கிறார்கள். கல்லடி எனக்கு, பூஜை அவருக்கு! கஷ்டம் எனக்கு, சுகம் அவருக்கு! இதுவும் என் விதிதானோ” என்று சூரியபகவான் சோகித்துவிட்டு, “என்விஷயம் இது. உங்களைப்போல் எனக்கும் நிம்மதியான வாழ்வு கிடைத்தால் போதும், இந்த உத்தியோகத்தை ராஜிநாமாக்கூடச் செய்துவிடுவேன்” என்றார்.

அதுவரை, பொறுத்துக்கொண்டிருந்த காத்தாயியால் அதற்குமேல் தாளமுடியவில்லை. கண்களில் நீர் கசியக் கசிய, முந்தானையால் துடைத்துக்கொண்டே, “எங்கள் கதையைக் கேட்டால்தானே தெரியும். அதைக்கூறத்தான் இங்கு வந்தோம். வந்த இடத்திலே இந்தச் செய்தி கேட்டோம்” என்று விம்மினாள்.

“உங்களுக்கு வந்த கஷ்டம் என்ன?” என்று சூரியபகவான் உருக்கத்தோடு விசாரிக்க, காத்தாயி தனது கதையைக் கூறினாள்.

“நீங்கள் மறந்துவிட்டீர்களோ என்னமோ! நாங்கள் மஞ்சப்பட்டினத்தில் உத்தியோகம் ஏற்று 15 வருடமாகிறதல்லவா! நாங்களாகவா போனோம்?” இல்லையே! எவ்வளவு வேண்டினார்கள், கூத்தாடினார்கள், கொண்டாடிக் கும்பிட்டார்கள். அதை நினைத்துக் கொண்டால் நெஞ்சு பகீரென்கிறது. மஞ்சப்பட்டினம், காசிபோல் பூர்வகாலப் பெருமையுள்ள ஊருமல்ல, கல்கத்தா பம்பாய் போல் நவீன நாகரீகப் பட்டினமும் அல்ல. ராமநாதபுரம் ஜில்லாவிலே பரமக்குடி தாலூக்காவிலே, அது ஓர் பட்டிக்காடு. அங்கு போய் வாசம் செய்ய எங்களுக்கு இஷ்டம் இல்லை. துளிகூடக் கிடையாது. கிராம வாழ்க்கையின் சிறப்பு பற்றி, பட்டினத்துப் பிரசங்கிகள் பன்னிப் பன்னிப் பேசியும் எமக்கு மஞ்சப்பட்டினம் போக மனம் வரவில்லை. ஆனால் மஞ்சப்பட்டினத்து மக்கள் எங்களுக்கு அனுப்பிய மனு அவ்வளவு உருக்கமாக இருந்தது.

எங்களை வரவழைக்க வேண்டுமென்ற எண்ணம், மஞ்சப்பட்டின மக்களுக்கு ஏன் வந்ததோ தெரியவில்லை. நாங்கள் இல்லாமல் என்ன குறைவு இருந்தது அந்த ஊரிலே? மக்கள், உழைத்து வந்தார்கள். குடும்பக் காலட்சேபத்தை நடத்திக் கொண்டுதான் வந்தார்கள். எங்கள் மீது ஏன் அவர்களுக்கு ஆசை பிறந்ததோ தெரியவில்லை. சடையப்பர் சொன்னார் யாரோ ஒரு பாரதப் பிரசங்கியாம், அவன் தனது பிழைப்புக்காக பாரதப் பிரசங்கம் செய்து முடித்துவிட்டு, கதை கேட்டு காசு கொடுத்தவர்களுக்கு உபதேசம் செய்தானாம், காத்தாயி கோயில் கட்டினால், கலியுகத்திலே கைமேற் பலன் கிடைக்குமென்று பேச்சை நம்பின மக்கள், கோயில் கட்டி, அங்கு என்னையும் சடையப்பரையும் குடிபுக வைத்தால் ஏதேதோ கிடைக்கும், வரண்ட நிலத்திலே திரண்ட கதிர் உள்ள பயிர் வரும், ஆற்றில் கரைபுரள ஓடும், தோட்டத்தில் காய்கறி குவியும், குடும்பத்தில் பிள்ளைகுட்டிகளும் தோன்றும், சுபீட்சமாக இருக்கும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள். அவர்கள் நாக்கில் ஜலம் சொட்டச் சொட்ட அந்தப் புராணிகன் சொல்லியிருப்பான். அவனுக்கென்ன, புளுகத் தெரியாதா? அவன் படித்த புராணங்களிலே அந்தச் சரக்குதான் அமோகமாச்சே! அவன் தம்பிக்கு பூஜரரி வேலை வரும். வருடந்தோறும் கோயிலிலே பாரதப் பிரசங்கம் நடத்தலாம் என்பது அவன் எண்ணம். அவன் பேச்சை “ஆமாம் அண்ணே” என்று ஏற்றுக்கொண்டவனுக்கு, கோயில் கட்டி குளம் வெட்டி, தேர் திருவிழா நடத்தினால், அதற்காக வசூல் செய்யும் தர்மப் பணத்திலே தனக்குக் கொஞ்சம், கிடைக்கும் என்ற ஆசை. தேனை வழிக்க யாருக்குத்தான் இஷ்டமிராது. “ஊரிலே ஏழை எளிபவர்கள், செய்ய வேண்டியது தான்!” என்று ஒப்புக்கொண்டார்கள். இல்லையானால் காத்தாயி கண்ணைப் பிடுங்கிக் கொள்வாள் என்று புராணிகன் புளுகி மிரட்டிவிட்டான். மேலும் காத்தாயி செலவுக்குக் கால் ரூபாய் கொடுத்தால், காலா காலத்துக்கும் நல்லது என்று நம்பினார்கள், அவர்கள் எதைத்தான் நம்பவில்லை. ஊரிலே இருந்த பணக்காரர்கள், இந்தப் பயல்கள் இப்படிக் கோயில் கட்டிக் கொண்டிருந்தால், நல்லதுதான் என்று எண்ணினார்கள். ஏனெனில், கோயில் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தால், தமது நிலையைப் பற்றிக் கவனிக்க ஏழைகளுக்கு நேரமிராது. ஆகவே பணக்காரருக்குத் தொல்லை இராது. கோயில் கட்ட கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டால், “தருமப் பிரபு, கர்ண மகாராசா” என்று பெயர் வரும், மற்றவைகளிலே பணம் சம்பாதிக்க மார்க்கம் இருக்கும். ஆகவே அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஒன்றுமில்லை என்றாலும், கோயில் கட்டினால், வேலையாவது கிடைக்காதா என்று எண்ணி, வெகு பேர், கட்டத்தான் வேண்டும் என்றார்கள். கட்டியும் விட்டார்கள்!

கட்டிய கோவிலுக்கு, நாங்கள் வந்துசேர எவ்வளவு காரியம் நடந்தது தெரியுமோ. ஊரெங்கும் உற்சாகம் வீடெல்லாம் விளக்கு. வீதிக்கு வீதி தோரணம், மூலைக்கு மூலை பூப்பந்தல், முச்சந்திகளில் கொட்டுமுழக்கு கொண்டையிலே பூ அணிந்த கன்னியர்கள், இடையிலே புது வேட்டியுடன் ஆடவர்கள், உடுக்கை சத்தமும் “ஓங்காளி” கோஷமும், ஊர்முழுதும் கேட்டது. அபிஷேகம், மந்திர உச்சாடனம் செய்ய, தேர்ந்த பூஜாரிகள், அவர்களுக்குத் துணைசெய்ய, வேறுபலர் விதவிதமான வாத்தியங்கள், விண் அதிரவெடி வேட்டு! அன்று மஞ்சப்பட்டினம், தேவேந்திரப் பட்டினந்தான்.

எவ்வளவு வைபவத்தோடு நாங்கள் வரவேற்கப்பட்டோம் என்பதை வர்ணிக்க முடியாது. கோயில் அழகும், கோபுரத்தின் அழகும் சொல்ல முடியாது. நான் தங்கியிருந்து தரிசனம் தர நல்ல சிலை. அதிலே சிற்பி தன் சமர்த்தைக் காட்டியிருந்த நேர்த்தியை என்னென்பேன். சடையப்பரின் இருப்பிடமாக இருக்க அமைக்கப்பட்டிருந்த சிலை எட்டடி உயரம்! பட்டாடையும் பவள மாலையும் எனக்கு! சடையப்பருக்கும் விசேஷ அலங்காரம். அதாவது, நாங்கள், மக்களின் பூஜையைக் கண்டு மனம் இளகி, சென்று தங்கியிருந்த அந்தச் சிலைக்கு, மக்கள் அவ்வளவு அலங்காரங்கள் செய்து, விளக்கேற்றி, விழுந்து கும்பிட்டு, விதவிதமான பண்டங்களைப் படைத்து பால் காவடி மீன்காவடி புஷ்பக் காவடி எடுத்து, பூஜைகள் புரிந்தனர். சுற்றுப் பக்கத்து கிராமமக்கள் வந்து சேவித்தனர். இது 1926-ம் வருடத்திலே.

1927-ல் எங்கள் மீது மஞ்சப்பட்டின மக்களுக்கு பழைய பக்தி இருந்தது. பூஜைகள் வழக்கப்படி நடந்து வந்தன. எங்களை வேண்டிக்கொள்ளத் தவறியதில்லை. எங்களின் வீரப்பிரதாபங்கள் பற்றி, பூசாரி, வாய் நோகப் பாடிக்கொண்டிருந்தான். பூசாரி கூறிவந்த புளுகுகள் எங்கள் காதுக்கு சலிப்பாகத்தான் இருந்தது. “ராத்திரி காத்தாயி, நடு நிசியிலே கனவிலே தோன்றி, கருப்பு ஆடு மூன்று காவு கொடுத்து, கருப்புச் சீலை வைத்து கும்பிட்டால் நம்ம ஊர் கரும்புப்பயிர் செழிக்கும் என்று கூறினாள்” என்று ஒரே போடு போடுவான். அந்த மக்கள் “அதுக்கென்ன பூசாரி, அம்மாளுக்கு இல்லாமே வேறுயாருக்குச் செய்யப்போகிறோம். எல்லாம் அவ இட்ட பிச்சை. அவ வாக்கற கஞ்சி, அவ கொடுக்கிற சொத்து” என்று கூறுவார்கள். ஆட்டுக்கறியும் சோறும், பூசாரி குடும்பத்துக்குக் கிடைக்கும், அலுமேலுவுக்கு கருப்புப்புடவையும், பூசாரிக்கு அபினி கஞ்சா கள்ளும் கிடைக்கும். இதற்கு நாங்கள் என்ன செய்வது?

இரண்டாண்டு, மூன்றாண்டு வரையிலும், இப்படி, சுகமாகவே இருந்தோம். 1930 ஆரம்பத்திலே, கொஞ்சம், கெட்டகாலம் ஆரம்பித்தது. மஞ்சப்பட்டினத்திலே, நாங்கள் குடி வந்ததும், இது நடக்கும் அது நடக்கும் என்று பூஜாரி புளுகினது நடக்கவில்லை. எது நடந்தாகணுமோ அது நடக்குமா, எங்களை வேண்டிக் கொண்டபடி நடக்குமா, நாங்கள் என்ன பிரம்மாவா? நினைச்சபடி நடக்காது போகவே, கொஞ்சம் வெறுப்புத்தட்டினமாதிரி ஜனங்கள் நடந்து கொண்டார்கள். அந்த வருடம் விளைச்சல் இல்லை. மழை கிடையாது, அதற்கு நாங்கள் என்ன செய்வது? நாங்கள் என்ன இந்திரபகவானா?

சோர்ந்துபோன மக்களுக்கு, பூசாரி தந்திரம் சொல்லிக் கொடுத்தான். “காத்தாயிக்கு, ஊர்ப் பொங்கல் வைக்கணும், வைத்தால், மழை, குடங்குடமாக் கொட்டும்” என்று சொன்னான். ஊர்ப் பொங்கல் வைத்தார்கள், பூசாரியின் வீடு கொஞ்சம் பொங்கிற்று. அவன் வயிற்றிலே கள் அதைவிட அதிகமாகப் பொங்கி வழிந்தது. மறுதினம்நல்லமழை! “பார்த்தாயா, காத்தாயியின் மகிமையை” என்று சொல்லி மக்கள் துதித்தார்கள். எங்கள் பாடு கொஞ்சம் நிம்மதியாயிற்று. ஆனால் பாழாய்ப்போன மழை விடவில்லை, அன்றெல்லாம் பெய்தது. ஆறு குளம் நிரம்பிற்று. கழனிகாடு முழுதும் வெள்ளம். மறுநாள் பெய்தது. மரங்கள் முறியும் பெருங்காற்று. வீடுவாசல் குளமாயிற்று. விடவில்லை மழை. மழை வந்ததே என்று சந்தோஷித்த மக்கள், “காய்ந்தா காயுது, பேய்ந்தா பேயுது. இது என்ன காத்தாயி அப்பா” என்று சலித்துக் கொண்டார்கள். மழையினால், ஊருக்கு நஷ்டம், எங்களுக்கும் மனக் கஷ்டந்தான்.

மறு வருடம், மழை இல்லை. மக்கள் முகத்திலே மலர்ச்சி இல்லை. எங்கள் வாழ்க்கையில் குளிர்ச்சி இல்லை. பூசாரியை, ஜனங்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். “என்ன பூசாரி! காத்தாயிக்குக் கடா வெட்றதிலே குறைவில்லை. நீயும் உடுக்கை அடிக்க ஓய்றதில்லை. ஒண்ணும் காணோமே. ஊர், நாளுக்கு நாள் க்ஷீணிக்குதே. அம்மாவுக்கு மனம் இரங்கலியா?” என்று கேட்பார்கள்.

“அண்ணே! அவசரப்படாதிங்க, இதெல்லாம் அம்மா சோதனை, அடுத்த வருஷம் பாருங்க” என்று பூசாரி சமாதானம் கூறுவான், ஆனால் யாருமில்லாத நேரத்திலே “காத்தாயி பாடும் நம்மபாடும் திண்டாட்டந்தான்” என்று மெள்ள முணுமுணுத்துக் கொள்வான்.

அடுத்த ஆண்டிலே பூசாரி சுபீட்சம் வரும் என்று சொன்னான். ஆனால் வந்தது அதுவல்ல. காலரா! அது ஆரம்பமானதும், கொஞ்சம் பூஜை அதிகரித்தது. ஆனால், பூஜை செய்த வீட்டிலேயே பிணம் பொத்தென விழ ஆரம்மிக்கவே, பூஜை நின்றுவிட்டது. பூசாரிக்கு சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு. “என்ன குறையைச் செய்தோம்! எங்கள் ஊருக்கு இந்த அவதி இது வரையில் வந்ததே கிடையாதே” என்று கேட்கலாயினர். இளநீர் அபிஷேகம் செய்தால், அம்மையின் கோபம் தணியுமென்றான். அரைகுறை மனதுடன் செய்தார்கள். காலரா ஓயவில்லை. ஊரிலிருக்கும் வேப்ப மரங்கள், மொட்டைக் கொம்புகளாயின. பல குடும்பங்களிலே பரிதாபகரமான சாவுகள். ஒரு ஏழைக் குடும்பத்திலே, தாய், தந்தை, கணவன் மூவரும் இறந்து விட்டனர். இளம் விதவை, அவளுக்கு ஐந்து வயதுப் பெண், அதற்கும் காலரா கண்டுவிட்டது. அவள், கோவிலை வளம் வந்தாள். எவ்வளவோ வேண்டிக்கொண்டாள். அபிஷேக நீரைக் குழந்தைக்குக் கொடுத்தாள். அலைந்தாள், பதை பதைத்தாள், “காத்தாயி, ஆத்தே கண்ணைத் திறந்து பாரேன்” என்று அழுதாள். அவளது குழந்தை இறந்தே விட்டது. அவளுடைய மனம் எவ்வளவு பதறிற்றோ “காத்தாயி கோயிலிலே இடி விழ, என் குடும்பம் போச்சேடி. உன்னை அகலும் பகலும் துதித்தேனே! ஆருமற்ற பாவி ஆனேனே. அருமைக் குழந்தையையும் இழந்தேனே” என்று வீறிட்டு அழுதாள். ‘சீச்சி காத்தாயியைப் பழிக்காதே’ என்று அவளை மற்றவர்கள் திட்டினார்களே தவிர, மனதிலே, “ஆமாம்! பாவம்! எவ்வளவோ வேண்டிக் கொண்டாள். காத்தாயிக்கு மனம் இரங்கவில்லையே. அவ்வளவு கல்மனதா? நாம் செய்த பூஜை வீணாகத்தானே போச்சுது” என்று விசாரப்பட்டார்கள்.

இந்த விசாரம் வளரத் தொடங்கிற்று. எங்களுக்குத் திகில் பிறந்தது. பூஜைகள் குறைந்தன. கோயிலுக்கு, யாரோ சிலர், ஒப்புக்கு வந்தார்கள், போனார்கள். ஆனால், பழைய ஆசை போய்விட்டது. இவ்விதம் சில வருடமாயிற்று நாங்கள் ஏழைக் குடித்தனம் செய்தோம். எதுவோ நடக்கிற அளவு நடந்தாலும் போதும் என்று மனதைத் தேற்றிக்கொண்டுதான் வந்தோம். பூசாரியும் இளைத்துத்தான் போனான்.

போன வருடம் எங்களைச் சனி பிடித்துக்கொண்டது. மஞ்சப்பட்டினத்து வாலிபர்கள், மாகாளி புராணம், மகேஸ்வரன் பிறப்பு முதலிய கதைகளைப் படிப்பதை மறந்துவிட்டனர், சும்மாவாவது இருந்தார்களா! அந்தப் புராணங்களைக் கேலி செய்யத் தொடங்கினார்கள். ஊரிலிருந்த பெரியவர்கள், அடக்கித்தான் பார்த்தார்கள், முடியவில்லை. காலத்தின் கோலம் என்று கூறிவிட்டனர்.

“தாத்தா! நமக்குமட்டும் ஏன், ஆயிரக்கணக்கானசாமி, மற்ற நாடுகளிலே ஒரே சாமி இருக்கிறதே. அவர்களெல்லாம் நன்றாக வாழ்கிறார்களே, நாம் இப்படிவதைகிறோமே! காத்தாயி, மாரியாயி, மூக்காயி என்று மூலைக்கு மூலை இருக்கிறது. ஓயாமல் பூஜை செய்கிறோம். ஒரு பலனும் காணவில்லையே” என்று வாலிபன் ஆரம்பிப்பான்.

கிழவன், “அவனவன் தலையிலே எழுதினபடிதானேடா நடக்கும்; காத்தாயியைக் கும்பிட்டு, கால்படி அரிசி பொங்கிவிட்டா, அன்று அவன் எழுதினது அழிந்தா போகும்” என்று சாமர்த்தியமாகப் பேசுவார்.

“விதிப்படி காரியம் நடக்குமென்றால், நடுவிலே, இந்தக் காத்தாயி, கருப்பன் ஏன் தாத்தா? நடப்பது நடக்கட்டும் என்று நாம் சும்மா இருந்துவிடலாமே, இந்த வீண்செலவு ஏன்” என்று வாலிபன் கேட்பான்.

“போடா! பொல்லாத கேள்வி கேட்டுவிட்டே! நம்மைப் படைச்ச ஆண்டவனுக்கு நாம் பூஜை செய்ய வேண்டாமா?” என்பார் தாத்தா.

“தாராளமா தாத்தா! எரு போட்டால், விளைச்சல் காட்டணுமே. பூஜை செய்தால் பலிக்கணுமே. அறுவடை காணோமே. காத்தாயிகோயில் கட்டி 15 வருஷமாகிறதே! பஞ்சம் வருவது நின்றுவிட்டதா, காலரா போச்சா, நம்ம கஷ்டம் நீங்கிவிட்டதா” என்று வாலிபன் கேட்பான்.

“ஒன்றுந்தான் போகவில்லை. ஓயாத தொல்லைதான்” என்று கிழவர் ஒப்புக்கொள்வார்.

வாலிபன் தன் வாதம் கெலித்தது என்ற எண்ணிக் கொண்டு போய்விடுவான். ஆனால் வேறோர் கிழவரைக் கண்டதும், அந்தக் கிழவர், “நமது கஷ்டம் ஒரு பெரிதா, தலை எழுத்தின்படி தானே நடக்கும்” என்று பழையபல்லவிதான் பாடுவார். மற்றக் கிழவர், “இது என்ன எந்தக்காலத்திலும் நடப்பதுதானே. அப்பேர்க்கொத்த ராமபிரான்.........” என்று ஆரம்பிப்பார். இருவரும். ராமர், சீதையை விட்டு பிரிந்து தவித்தது, சிவன் பிச்சை எடுத்தது, பிரமனின் தலை போனது முதலிய கதைகளைப் பேசிக்கொண்டே காலந்தள்ளுவர். இந்தக் கிழவர்கள், பேசும் சக்தி பெற்றிருக்கும் வரையிலே நாம் காலந்தள்ளலாம் என்று ஒருவாறு தைரியப் படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தோம். ஆனால் இந்த வாலிபப்பிள்ளைகள் விடவில்லை. ஓயாமல் பேசினர். சுயமரியாதைச் சங்கமாம், தமிழர் கூட்டமாம், பத்திரிகையாம், ஏதேதோ ஆர்ப்பாட்டம் செய்தனர். வாலிபர்களின் பிரசாரம் வலும்பெற்றது. 1940—லும், சுபிட்சம் இல்லை. 1941 பிறந்ததும் பயனில்லை. வாலிபர்கள் மூட்டிவிட்ட கோபம் கிழவர்களையும் பிடித்துக்கொண்டது. என்ன சொல்வோம், எங்களைப் பூஜித்தவர்களே தூஷிக்கத் தொடங்கினர்.

“அரைக்காசுக்குப் பிரயோஜனமில்லை” என்றார் ஒருவர்.

“சுத்த தண்டம்” என்று ஒருபடி மேலேறினார் வேறொருவர்.

“வீணான செலவு. மெனக்கேடு” என்றார் இன்னொருவர்.

“காத்தாயியும் மூக்காயியும், இதெல்லாம் அந்தப் பசங்கள் சொல்றதுபோல, கட்டுக் கதையப்பா” என்றார். நடுத்தர வயதுள்ள ஆசாமியொருவர்.

“அந்தக் கோயில் போனால் என்ன இருந்தால் என்ன” என்றார் வேறொருவர் வெறுப்பாக.

“மதில் சுவர் இடிந்து வருகிறதே தெரியுமா” என்றார். இன்னுமொருவர்.

“இடியட்டும். இந்தக் காத்தாயி கோயில் கட்டினது முதல் நம்ம ஊரே நாசமாகி வருகிறது” என்றார் ஒருவர்.

“நல்ல வேளையிலே கோயில் கட்டவில்லை. அதனாலே வந்தவினை தான் இவ்வளவும்” என்று ஒரு கிழவர், கோயிலைக் குறை கூறாது வேளையைக் குறை கூறினார்.

“தாத்தா, நேரம் சரியில்லை என்றால், இன்னும் அந்தக் கோயிலைக் கட்டி அழுவது ஏன்? இடித்துத் தள்ளுவது தானே” என்று ஒரு வாலிபன் கேட்டான்.

“இடித்தால்தான் என்ன” என்றார். பல குரல்கள் கிளம்பின. நான் என்ன சொல்லுவேன், மண்வெட்டியும், கடப்பாரையும் எடுத்துக்கொண்டு, கோயிலுக்கு வந்தனர். எவ்வளவு பக்தியோடு கட்டினார்களோ, அவ்வளவு ஆத்திரத்தோடு இடித்தார்கள். மதில் சரிந்தது, கோபுரம் இடிக்கப்பட்டது. பிரகாரம் பிளக்கப்பட்டது.

ஒரே கூக்குரல். இடி! பிள! அடி! என்ற சத்தம். பெண்களிலே சிலர், “இடிக்க வேண்டியதுதான். அவள் முன்னமேயே காத்தாயி கோயிலிலே இடி விழ என்று சாபம் கொடுத்துத்தான் போனாள்; பத்தினியாச்சே அந்தப் பெண்” என்றனர்.

சிலர் கோயிலை இடித்தால் என்ன கேடு வருமோ என்று பயந்தனர். பூசாரி, ஊரைவிட்டே ஓடிவிட்டதாகக் கேள்வி. இடிக்கும் படை நாங்கள் தங்கியிருந்த மூலஸ்தானத்திற்கே வந்தது. “சடையப்பரே” என்று நான் கூறு முன்னம் “கிளம்பு” என்றார் அவர்; இருவரும் சிலையை விட்டுச் சரேலெனக் கிளம்பி, அந்தரத்தில் அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் நின்றோம்.

கண்ணைப் பாரடா காட்டுக் கோட்டான் போல! மூக்கைப் பாரடா மூணு முழ நீளம்! கையைப் பாரடா கலப்பையைப் போல! மீசையைப் பார், மீசை! இடுப்பிலே போட்டா அடி, பாதியாகப் பிளக்கும்! என்று அந்த மக்கள் எங்களைத் தூற்றிக்கொண்டே சிலைகளை உடைத்தனர். எங்களைக் கண்ணாயிரம் படைத்தவளே! கபால மூர்த்திக்குக்குகந்தவளே! கார்வண்ணன் தங்கையே! மலர்க்கண்ணி! மகாளி! என்று துதித்த வாய்கள், அன்று அப்படித் தூற்றின. சிலைகள் தூள் தூளாயின!

இனி இங்கிருப்பது ஆபத்து என்று எண்ணி, “இவ்விதமாக எம்மை வரவழைத்து 15-ஆண்டு எமது பரிபாலனத்தின் கீழிருந்து, பிறகு எங்கள் கோயிலை உடைத்து, அவமானப்படுத்தி, ஊரைவிட்டு நாங்கள் ஓடும்படி செய்த மக்களுக்குத் தக்க தண்டனையைத் தரவேண்டுமென ஆண்டவனிடம் முறையிட எண்ணினோம். முதலில் உம்மிடத்திலே சொல்லலாம் என்று வந்தோம். இங்கே, உமது நிலை இப்படி இருக்கிறது” என்று காத்தாயி தனது வரலாற்றைக் கூறிமுடிக்கச், சூரியன் “சரி வாருங்கள் ஆண்டவனிடம் சென்று முறையிடுவோம்” என்று கூறினவுடன், அந்தரத்தில் இருந்து ஓர் ஒலி கிளம்பிற்று!

“சூரியனே! காத்தாயி! சடையப்பா! கேளுங்கள், நீங்களும் உங்களை ஒருகாலத்தில் பூசித்து இப்போது இம்சித்த மக்களும், இந்த “வரலாற்றைக் கேட்டு நீதி வழங்குவார் என்றெண்ணி நீங்கள் வந்து அடுத்துள்ள நானும், எல்லாம், வேறு வேறு என்று எண்ணி வேதனைப்படுகிறீர்கள். வேறல்ல! எல்லாம் நானே! சோகிக்கும் சூரியனும் நானே! அவனைக் கல்லால் அடித்த காசிவாழ் பக்தர்களும் நானே, கோயில் கட்டிய மஞ்சப்பட்டின மக்களும் நானே, கோயிலை இடித்தவர்களும் நானே, காத்தாயி நானே, சடையப்பனும் நானே, உமக்கு, யாராலோ தொல்லை நேர்ந்ததாக முறையிடுகிறீர்களே பேதைகாள்! நான் வேறு நீங்கள் வேறல்ல! எல்லாம் நானே! அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை மறந்தீரோ!” என்று ஒலி கேட்டது!

சூரியன் காயச்சென்றான். காத்தாயியும் சடையப்பரும், கூப்பிட்டால் போவோம் என்று உடுக்கை சத்தம் எங்கு கிளம்புறதென்று எதிர்பார்த்து இருந்தனர். காசிவாசிகள் கங்கையில் மூழ்கி எழுந்து கதிரவனை வணங்கினர். ஆண்டவன் தயையால் நம்மைப் பிடித்த சனி இனித் தீர்ந்தது என்று மஞ்சப்பட்டினவாசிகள் தொழுதனர். மற்றோர் கோயில் கட்டுவிக்க என்ன தந்திரம் செய்யலாம் என்று மதவாதி யோசித்துக்கொண்டிருந்தார்.

“இது என்ன கதையப்பா! இப்படியும் ஒரு சம்பவமா?” என்று கேட்பீர்கள். “காத்தாயி சூரியனைப் பார்ப்பதாவது! கல்லடி பட்ட சூரியன் கதறுவதாவது! கோயில் இடிவதாவது! யாரிடம் இந்த அளப்பு!” என்று கேட்பீர்கள்.

காத்தாயி பேசினதோ, சூரியன் அழுததோ கிடக்கட்டும். சூரியனைக் கல்லாலடித்து மழை பெய்யவைத்த சூரர்கள் காசியிலே இருக்கிறார்கள். விக்ரமாதித்தன் காலத்து விசித்திரம் அல்ல—இப்போது, நம் கண்முன் உள்ள, இந்தத் தலைமுறை மக்களைத்தான் குறிப்பிடுகிறேன். இதோ, இது, ‘தினமணி’யில் வந்த செய்தி,


கதிரவனுக்குக் கல்லடி
காசிவாசிகள் கைவரிசை

காசி, ஜூன் 28.

மழை பெய்யாததால், வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் மனங்கொதிப்படைக்தார்கள். ஆதலால் சென்ற சில தினங்களாக அவர்கள் சூரியன் மீது கற்களை வீசிக்கொண்டிருந்தனர்.

இன்று அந்த மக்களின் மனம் மகிழ்ச்சியடையும்படி நீலவானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்தன. காலையில் அரைமணி நோமும் மாலையில் அரைமணி நேரமும் மழை பெய்தது. அதனால் இப்போது காசிநகரம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருக்கிறது.


காத்தாயி கோயிலை இடித்த செய்தி இதோ, சுதேச மித்திரனில்!

வைகைக் கரையில் விக்ரகங்கள்
மஞ்சப்பட்டினத்தில் சம்பவம்

ராமநாதபுரம், ஜூன் 18.

பரமக்குடி தாலுக்கா மஞ்சப்பட்டினத்தில் கிராமவாசிகள் சென்ற பிரமோதூத வருஷம் வைகாசி மாதம் சுமார் 2500 ரூபாய் செலவில் ஸ்ரீசடையப்ப ஸ்வாமி ஆலயத்துக்குக் கும்பாபிஷேகம் செய்தனர். மேற்படி

கிராமவாசிகள் அவ்வருட முதல் க்ஷீணித்து வருவதாகக் கருதினர். எனவே ஆலயத்தின்மீது வெறுப்புற்று சென்ற ஞாயிறன்று அவர்கள் அந்தக் கோயிலைப் பின்னப்படுத்தி அதிலிருந்த மூலவர், 8 அடி உயரமுள்ள காத்தாயி அம்மன் விக்ரகம், இன்னும் பல விக்ரகங்களையும் அப்புறப்படுத்தி வைகை நதிக்கரையோரமாக வைத்துவிட்டனர். இப்போது அவ்வாலயத்தில் பூஜை கிடையாது.

இது விஷயமாக கிராமத்தில் விசாரித்தால், அவர்கள் அனைவரும் ஏகோபித்தே இக்காரியத்தைச் செய்தனரென்று கூறப்படுகிறது.


இப்போது என்ன சொல்கிறீர்கள்? இவ்வளவு “பிரகஸ்பதிகள்” இருக்கும் நாட்டிலே, காத்தாயி பேசினதாகவும், கதிரவன் கண்ணீர் விட்டதாகவும் நான் கூறுவதுதானா, அளப்பு! 1640—1740—1840—இந்த ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவமல்ல, நினைவிருக்கட்டும்! 1940-க்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள்! அதாவது நாம் சுயராஜ்யத்துக்குத் தகுதியானவர்கள் என்று மாபெருந் தலைவர்கள், மன்றமேறிப் பேச ஆரம்பித்த பிறகு, நடைபெற்ற நிகழ்ச்சிகள்!!

இந்தப் பேதமை என்று ஒழியும்? எப்போதுதான் இவ்விதமான ஆபாசக் கருத்துக்கள் நமது மக்கள் மனதை விட்டு அகல்வது?

மௌனந்தான் பதிலா? வேறு பதில் கூறும் தீரர்கள் இல்லையா? இந்தக் கோசமான நிலைமையை மாற்றி, அறிவுதுலங்கச் செய்ய, மக்களை பகுத்தறிவாளர்களாகும்படிச்செய்ய, வீரர்கள் இல்லையா! நமக்கென்ன என்று இருந்து விடுவதும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்சு விடுவதும் அறிவாளரின் போக்காக இருந்திடலாமா? எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக—நடந்துகொள்கின்றனர், பாமரர் என்பதை எடுத்துரைக்க அஞ்சுவது அறிவுடைமையுமல்ல; ஆண்மையுமாகாது. சிலர் துணிந்து இந்தச் சீர்கேடுகளைப் போக்க, மக்களின் மனதிலே திணிக்கப்பட்டுள்ள மதியீனத்தைக் கண்டிக்க முன்வருகிறார்கள் என்றால், அவர்களையுமல்லவா, ‘கற்று மறந்த கண்ணியர்கள்’ கண்டிக்கிறார்கள். காட்டு மிராண்டித்தனத்தைக் களையவும் துணிவில்லை, துணிவுள்ளோர் களைய முற்பட்டால், பாராட்டும் பண்பும் இல்லை, மாறாக, கண்டிக்கிறார்களே!!