விளையாட்டு உலகம்/தனிப் பெருந்தலைவன்!

விக்கிமூலம் இலிருந்து
தனிப்பெருந்
தலைவன்!

அருகிலிருந்த அனைவரும் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்கள். 'தயவு செய்து விளையாட்டிலிருந்து விலகி வந்து விடுங்கள்' என்று. வேண்டா வெறுப்பினால் அல்ல. அவர் விளையாட்டு, அங்கு வேடிக்கை பார்ப்பவர்களை எரிச்சல் முட்டி வேதனையை ஊட்டுகிறது என்பதினாலும் அல்ல. அந்த வீரன்மேல் கொண்டிருக்கும் அளப்பரிய அன்பின் காரணமாகத் தான் அந்த ஆணை எழுந்தது.

ஆட்டம் தொடங்கி 4 நிமிடத்திற்குள்ளேயே, ஆட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் என்றால், வந்து விடுங்கள் என்று வற்புறுத்தி அழைத்திட வேண்டுமென்றால் ஏதாவது விசேஷம் இருக்குமே! ஆமாம்! அந்த விளையாட்டு வீரன்: அல்ல, அந்த விளையாட்டுக் குழுவின் தலைவனின் கையானது ஆட்ட நேரத்தில் முறிந்து போனதுதான் காரணம்.

அந்தத் தலைவனோ, 'வெளியே நான் வந்தால் என் குழு ஆட்டக்காரர்கள் சோர்ந்து போய்விடுவார்கள். அதனால் ஆட்டத்தில் தோற்றுப்போய் விடுவார்கள். அந்தத் தோல்வி என் தாய் நாட்டின் தன்மானத்தையும் பொன்னான புகழையும் போக்கிவிடும்’ என்று கூறிக்கொண்டே மறுத்தான். மறுத்ததோடல்லாமல் விளையாடிக்கொண்டும் இருந்தான்.

அது சாதாரணப் போட்டி அல்ல, ரக்பி ஆட்டம். பந்துக்காக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தாக்கி, தள்ளி, அழுத்தி, விரட்டிப்பிடித்து ஆடுகின்ற ஆட்டம் அது. ஆஸ்திரேலியாவிற்கும் கிரேட் பிரிட்டனுக்கும் இடையே நடைபெறுகின்ற போட்டி அது. போட்டி நடைபெறுகின்ற இடமோ பிரிஸ்பேன் என்பதாகும். 1958ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி.

கிரேட் பிரிட்டன் சார்பாகச் சென்ற குழுவின் தலைவனுக்குத்தான், ஆட்டம் தொடங்கிய நான்கு நிமிடங்களுக்குள் கைமுறிந்து விட்டது. கரம் முறிந்து வெளியே வந்து விட்டால், தன் குழுவினரின் ‘திறமும் தரமும்’ போய்விடும் என்பதால், தன்னுடைய வலியையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடி தன் குழுவினரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் அந்தத் தலைவன்.

இடைவேளை நேரம் வந்தது. அந்தத் தலைவனுக்கோ கையின் வலி தாங்கமுடியாத அளவுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. வேதனையைக் குறைப்பதற்காக, வலியைக் குறைக்கும் ‘இஞ்செக்ஷனையும்’ போட்டுக் கொள்கிறான். காரணம். இன்னும் 40 நிமிடங்கள் விளையாடி ஆகவேண்டுமே!

பக்கத்திலுள்ளவர்கள், ‘முறிந்த கை பாழாகிப் போய்விடும். பிறகு எதற்கும் பயன்படாது’ என்று பயமுறுத்துகின்றார்கள். ஏதேதோ எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்தப் பார்க்கின்றார்கள். முடியவில்லை. என் கை போனலும் போகட்டும். இந்தச் சமயத்தில் எனது சேவை என் நாட்டுக்குத் தேவைப்படுகிறது. என்னுடைய கடமையை சரிவர செய்யாமல் நான் ஒதுங்கிப்போய் விடமாட்டேன். என்று அந்தத் தலைவன் தகுந்த சமாதானம் கூறி, மீண்டும் ஆடத் தொடங்கிவிடுகிறான்.

நாற்பது நிமிடங்களும் பம்பரமாகச் சுழன்று பயங்கரமாக விளையாடுகிறான், தனது சக ஆட்டக்காரர்களை யெல்லாம் உற்சாகப்படுத்துகிறான். உணர்வினை ஊட்டுகின்றான். இறுதியிலே, வெற்றியை ஈட்டித் தருகின்றான் தன் தாயகத்திற்கு. தன் தாயகம் புகழ் பெற வேண்டும் என்பதற்காகத் தன்னையே தந்திடத் தயாராக நின்றவனாக விளையாடிய அந்த மாபெரும் வீரன், பெருந்தலைவன் பெயர் தெரியுமா? ஆலன் பிரஸ்காட் என்பதுதான்.

தகுதியும் திறமையும் தான், ஒருவரைத்தலைவனாக்குகிறது. “தலைவனாக வந்து விட்டால் எல்லாம் முடிந்து போய்விட்டது. எண்ணியதும் கிடைத்துவிட்டது, இனி எப்படியிருந்தால் என்ன?” என்பதாக ஒரு சிலர் எண்ணிக்கொண்டு ஏனோ தானோவென நடப்பதால் தான், வாய்ப்பினைப் பெற்றும் வந்த சுவடு தெரியாமல் போய்விடுகின்றனர்.

தன்னே நம்பி வந்தவர்களைத் தன்னம்பிக்கையுடன் நடத்தி, தகுந்த வழிகளையும், முறைகளையும் தந்து வெற்றிக்கு வழி நடத்திச்செல்லும் விவேகத்தினால் தான் தலைவன் என்று பிறர் புகழ்கின்றார்கள்.

அத்தகைய அரிய பண்புள்ளவர்களையே உலகம் புகழ்கிறது. சரித்திரம் சான்றுகாட்டி நின்று, பெரும் புகழைப் பிற்கால சந்ததியினருக்குப் பறைசாற்றிக் கொண்டும் வருகிறது.

அத்தகைய அரிய வரலாற்று நாயகனாக, தனிப்பெருந்தலைவனாக விளங்கும் பேறு பெற்றான் ஆலன் பிரஸ்காட். முறிந்த கையைக் காட்டி ஒதுங்கியிருக்கலாம். ஆனால், கடமையைக் கண்ணாகக் கருதி, தாய்நாட்டுக்காகத் தன்னையே தரத்தக்கத் தியாக மனத்தினனாய் விளங்கி, ‘தலைவர்கள் இவ்வாறுதான் விளங்கவேண்டும்’ என்ற ஓர் இலக்கியமாகத் திகழ்ந்த ஆலன்போல், இங்கேயும் தலைவர்கள் தோன்ற வேண்டும். அப்பொழுதுதான் நம் விளையாட்டுத்துறை பெருமை பெறும். நம்நாடும் உலக நாடுகளுக்கிடையே நாயகமாக விளங்க முடியும்.

தனிப்பெருந் தலைவனாக விளங்கியவனின் கடமை உணர்வை, குழுவை நேசிக்கும் பண்பை, தாயகப்பற்றை சகிப்புத் தன்மையை, வீர உணர்வினைப் போற்றுவோம். பின்பற்றுவோம். நாமும் உயர அதுதானே நல்லவழி!