விளையாட்டு உலகம்/தன்மானத் தங்கம்!

விக்கிமூலம் இலிருந்து
தன்மானத்
தங்கம்!

"ஒலிம்பிக் பந்தயத்தில் நீ வென்ற தங்கப் பதக்கங்களை எல்லாம் உடனே திருப்பித்தர வேண்டும்" என்ற கட்டளையைக் கேட்ட அந்த வீரனுக்கு, கேட்கவே அதிர்ச்சியாக இருந்தது.

'உலகத்திலேயே நீதான் சிறந்த வீரன்' என்று புகழ் பாடிக்கொண்டே தங்கப் பதக்கங்களை அணிவித்துக் கௌரவித்த ஸ்வீடன் தேசத்து மன்னன் பாராட்டிய வீரனைப் பார்த்தா இப்படி ஒரு கட்டளை? என்று அமெரிக்காவே அயர்ந்து போனது.

ஒரு தங்கப் பதக்கம்கூட வாங்க முடியாத நாடுகள் உலகத்திலே எத்தனையோ இருக்கின்றன. பென்டாத்தலான் எனும் 5 நிகழ்ச்சிப் போட்டிகளிலும், டெக்காத்தலான் எனும் பத்து நிகழ்ச்சிப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, தங்கப் பதக்கங்களை ஏற்று, தன் தாயகமான அமெரிக்காவிற்கு வானளாவிய புகழை வாரிக்கொண்டு வந்த மாவீரனைப் பார்த்துத்தான், இந்தக் கட்டளை கட்டாரியாகப் பாய்ந்தது.

இதுவரை இப்படி ஒரு சாதனையை யாரும் செய்ததில்லை என்று சாதித்த அந்த மாவீரனின் பெயர் ஜிம்தோர்ப்.

‘ஏன் தன்னுடைய தங்கப் பதக்கங்களைத் திருப்பிக் கேட்கின்றார்கள்?’ என்று விவரம் புரியாமல் விழித்தான் ஜிம்தோர்ப். தங்கப் பதக்கங்களை தனக்கு அணிவிக்கும்போது, ஸ்டாக்ஹோமில் நடந்த 5வது ஒலிம்பிக் பந்தயங்களை வேடிக்கைப் பார்க்க வந்த அத்தனை பேருமே எழுந்து நின்று மாியாதை செலுத்திய காட்சியும், அந்த மாவீரன் மனக்கண் முன்னே வந்து நின்றது.

தங்கப் பதக்கங்களுடன் தன் தாயகமான அமெரிக்கா வந்து சேர்ந்தபோது, அமெரிக்க நாடே முன்னெழுந்து வந்து நின்று மலர்மாரிப் பொழிந்தது போல, வாழ்த்துக்களைப் பொழிந்து வரவேற்ற காட்சியும் அவ்வீரன் நினைவுக்கு வராமல் இல்லை. இன்பம் தராமல் இல்லை.

இந்த நினைவுகளுக்குள்ளேதான், ஏன் தன்னிடமிருந்து தங்கப் பதக்கங்களைக் கேட்கின்றார்கள் என்ற வினாவும் எழுந்து விளையாடிக் கொண்டிருந்தது. அதுவும், தங்கப் பதக்கங்களைப் பெற்று ஓராண்டு கழித்து ஏன் கேட்க வேண்டும் என்பதுதான் அந்த வினாவுக்குள் கிளைத்தெழுந்து தொடர்ந்த வினா, அவனது ஆச்சரியத்தை மேலும் விரட்டியது.

அமெரிக்க இந்தியனான ஜிம்தோர்ப்பின் வெற்றி, அங்கிருந்த ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை. வேப்பங்காயாகக் கசந்தது என்றாலும் வெற்றியையும், புகழையும் குறுக்கே விழுந்து தடுக்க முடியவில்லை. அதனால், குறுக்கு வழியில் சென்றேனும் அவனது இன்பத்தைக் குலைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிவிட்டார்கள். அந்த சதித் திட்டத்தின் கீழேதான், தங்கப்பதக்கங்களை உடனே திருப்பித்தர வேண்டுமென்ற சட்டம் பிறந்தது. சட்டத்தைப் பிறப்பித்தது அமெரிக்க ஒலிம்பிக் கழகமாகும்.

‘ஒலிம்பிக் பந்தயங்கள் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே, நீ காசு வாங்கிக்கொண்டு தளப்பந் தாட்டம் ஆடியதாகத் தெரிகிறது. அதனால் நீ அமெச்சூர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டாய். அமெச்சூர் விளையாட்டு வீரர்கள் தான் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்ள முடியும். ஆகவே, நீ ஒலிம்பிக்கில் வெற்றிபெற்றாலும், வெற்றிவீரன் என்ற பட்டத்தை இழக்கிறாய். தங்கப் பதக்கங்கள் உன்னிடம் இருப்பது தவறு. திருப்பித் தந்துவிடு' என்ற கட்டளையைப் பிறப்பித்து விட்டது கழகம்.

அத்துடன் நில்லாது, அந்தக் கழகத்தின் ஆத்திரக்காரர்கள் மூன்றுபேர் ஒன்று சேர்ந்து ஸ்வீடன் ஒலிம்பிக் கழகத்திற்கும் கடிதம் அனுப்பி,'எங்கள்நாட்டு ஜிம்தோர்ப் வெற்றியை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வெற்றி வீரர்கள் பட்டியலிலிருந்து அவனது பெயரை எடுத்துவிடலாம்' என்றும் சிபாரிசு செய்துவிட்டனர்.

"பணம் வாங்கிக்கொண்டு நான் விளையாடவே இல்லை. இது யாரோ கட்டிவிட்டக் கட்டுக்கதை. என் பெயருக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்றுகூறிய கற்பனை” என்றெல்லாம் வாதாடிப் பார்த்த வீரனது பேச்சை, கேட்பார் இல்லை. மலையடிவாரத்தில் நின்று கத்தியிருந்தாலும் எதிரொலியாவது வந்திருக்கும். மலை போன்ற மனம் படைத்தவர்களிடம் கத்தி என்னபயன்? திட்டம் தீட்டி செயல் புரிந்தவர்கள் இறுதியில் வெற்றி பெற்று விட்டார்கள்.

ஜிம்தோர்ப் தனது தங்கப் பதக்கங்களைத் திருப்பித் தந்துவிட்டான். அவனது பெயர் ஒலிம்பிக் வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. செய்யாத தவறுக்குத் தண்டனை, செம்மையாக விதிக்கப்பட்டு, சிறப்போடு நிறைவேற்றப்பட்டும் விட்டது. தன்னோடு ஆடியவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல், தான் மட்டும் பணம் வாங்கியதாகக் கூறப்பட்ட பழியையும் வேதனையுடன் தாங்கிக் கொண்டான் தோர்ப்.

தங்கப் பதக்கங்கள் இரண்டும், ஜிம்தோர்ப்புக்கு அடுத்து வந்த வீரனுக்குக் கிடைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதற்குரிய வீரன் ஸ்வீடன் தேசத்தவன். அவன் பெயர் வீஸ்லேண்டர் என்பதாகும்.

அவனை அணுகி, 'நீயே வெற்றி வீரன். இந்தப் பதக்கங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று கேட்டனர்.

அந்த வீரனோ, தங்கப் பதக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். 1912ம் ஆண்டு ஸ்டாக் ஹோமில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் நான் வந்தது இரண்டாம் இடம் தான். எனக்குரிய பரிசு வெள்ளிப் பதக்கம் தான். என்னையும் பல வீரர்களையும் வென்ற ஜிம்தோர்ப்தான் உலகிலேயே சிறந்த வீரன்.

‘இன்னொரு சிறந்த வீரனுடைய தங்கப்பதக்கத்தைப் பெற்று மகிழ்வதைவிட, நான் பெற்ற வெள்ளிப் பதக்கத்தையே மேலாக மதிக்கிறேன். என் உழைப்பில் கிடைத்த பொருளே உயர்ந்தது. இன்னொருவர் பொருள் எனக்குத் தேவையேயில்லை. அதற்குரியவன் ஜிம்தோர்ப்தான். நானல்ல' என்று ஏற்றுக்கொள்ள மறுத்தான் வீஸ்லேண்டர் என்னும் வீரன்.

தங்கப் பதக்கம் என்றதும் தாவிக் குதித்துக் கொண்டு வந்து, தலை குனிந்து நின்று அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறந்த விளையாட்டு வீரன்தான் அவன் என்று, மாற்றாரையும் மதித்துப் போற்றும் தன்மானத் தங்கமாகத் திகழ்ந்தான் வீஸ்லேண்டர். அதனால் தான் அவன் சரித்திரத்தில் சாகாவரம்பெற்றத் துருவனாகத் திகழ்கிறான்.

வஞ்சகர்கள் விரித்த வலையானது 1913லிருந்து 1973வரை தொடர்ந்தது. 60 ஆண்டுகள் கழித்து, ஜிம்தோர்ப் வெற்றி வீரன்தான் என்று அமெரிக்க ஒலிம்பிக் கழகம் ஏற்றுக்கொண்டு அறிவித்தது. அறிவித்து என்ன பயன்? அதைக் கேட்க அவன் இல்லையே! விளையாட்டுத் துறையில் ஈடு இணையில்லாமல் இருந்த வீரன், இறுதி நாட்களில் வறுமையில் வாடி வதங்கி, மடிந்து போனான். செத்தும் புகழ்பெற்ற ஜிம்தோர்ப்புக்கு மேலாக, வெள்ளிப் பதக்கமே மேல் என்று தங்கத்தைத் தள்ளிவிட்டத் தன்மானத் தங்கமாகத் திகழும் ஸ்வீடன் தேசத்து வீஸ்லேண்டரையும் வணங்குவோம்.

நல்ல குணங்களை வளர்க்கும் விளையாட்டுக்களில், நயமார்ந்த குணாளனாக வாழ்ந்த வீஸ்லேண்டரைப் போல, உலகம் முழுதும் வீரர்கள் தோன்ற வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான இன்பம் விளையாட்டுக்களில் உலவும் என்று நம்பி, தன்மானத் தங்கத்தை வாழ்த்தி மகிழ்வோமாக!