வெற்றி முழக்கம்/62. நிறைவேறிய நோக்கம்

விக்கிமூலம் இலிருந்து

62. நிறைவேறிய நோக்கம்

ருமண்ணுவா தன்னிடம் கூறிய திட்டப்படி செயலாற்றக் கருதிய வயந்தகன், உதயணனைச் சந்தித்து ஒரு கருத்தை அவனிடமிருந்து அறிந்து கொள்வதற்காக மெல்லப் பேச்சு கொடுத்தான். “எந்த நேரமும் மறைந்துபோன தத்தையை எண்ணி எண்ணி வேறு நினைவே இல்லாமல் இப்படி அழுது அரற்றிக் கொண்டிருந்தால் என்ன செய்வது? பதுமை, தத்தை இருவருள் யார்மேல் தங்களுக்கு அதிக அன்பு என்பதும் தெரியவில்லையே?” வயந்தகன் இவ்வாறு கூறியதும் உதயணன், “வயந்தக! இதற்கு நான் விடை கூறித்தான் நீ உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? என் உயிரினும் இனிய காதலி வாசவதத்தையே அல்லவா? என் தீவினைப் பயனால் அவள் மறைந்துவிட்டாள். இலாவாண நகரத்திலே நெருப்பு அவளைக் கொன்றுவிட்டதே?” என்று மறுமொழி கூறினான்.

“அரசே! தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஆனால், அவர் மறைவை எண்ணி, ஒரு நாட்டிற்கு மன்னராகிய தாங்கள் இவ்வாறு வெளிப்படையாக அழுது அரற்றிக் கொண்டிருப்பது பிறருக்குத் தங்கள் பலவீனத்தைக் காட்டி விடும்! தங்கள் மனம் அடிக்கடி குழம்பும் இயல்புடையதாக இருக்கிறதே? வாசவதத்தையே உயிர்க் காதலி என்றால், பதுமையை எப்படிக் காதலித்தீர்கள்? ஏன் மணந்து கொண்டீர்கள்? இப்போது அவள்மேல் வெறுப்புக் கொள்வது எதற்காக?” என்று பேச்சுப் போக்கில் அதிக உரிமை பாராட்டி இந்தக் கேள்வியை வெளியிட்டான் வயந்தகன்.

வயந்தகனுடைய இந்தச் சொற்கள் உதயணனைத் திகைக்க வைத்துவிட்டன; சுருக்கென்று மனத்தில் தைத்தும் விட்டன. ஆனால் பொறுத்துக் கொண்டு, “பதுமை, வாசவதத்தையைப் போலவே உருவ அமைப்புப் பெற்றிருந்ததனால் என் மனம் அவளிடம் பேதலித்துவிட்டது. அன்றியும் பதுமையைக் காதலித்தது, மணம் புரிந்து கொண்டது யாவும் என் விதியினது விளைவுகள். அவற்றைத் தடுத்திருக்க நாம் யார்?” என்று பதில் கூறினான். “அன்று நாம் இராசகிரிய நகரத்திலே சந்தித்த அந்தண முனிவர், இன்று தற்செயலாக இங்கே வந்திருக்கிறார். அன்று வாசவதத்தையை எப்படியும் உயிரோடு காண முடியும் என்று வாக்களித்த அம் முனிவர் இன்றும் அதையே வற்புறுத்திக் கூறுகின்றார். ஆனால், இதற்காக அவர் உங்களுக்கு விதிக்கும் நிபந்தனை ஒன்றுண்டு. நீங்கள் உங்களது பள்ளியறையை மங்கலப் பொருள்களால் அலங்கரித்து, வாசவதத்தையைப் பற்றிய நீங்கா நினைவோடு, பதுமையைப் பிரிந்து சில நாள்கள் தனிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் தத்தை உங்களிடம் வருவாள்” என்று மகிழ்ச்சி மலரும் உதயணன் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கூறினான் வயந்தகன்.

உதயணன் அவ்வாறே விரதமிருப்பதாக வயந்தகனிடம் உறுதிமொழி தந்தான். வயந்தகன், ‘உருமண்ணுவாவின் சூழ்ச்சி வெற்றியே பெறும்’ என்ற நினைவோடு உதயணனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டான். அவன் சென்ற பின்னர் உதயணன், பதுமையை அழைத்து, ‘அன்றிலிருந்து தான் வேறு சில பகைவர்களையும் வெல்லுவதற்காகச் சில மறைவான யோசனைகளில் ஈடுபடப் போவதால் அவள் சில நாள்கள் தன்னைச் சந்திக்கவே வேண்டா’ என்று ஒரு பொய்யைக் கற்பித்துக் கூறினான். அந்தச் சொற்களில் பதுமை சூதுவாது காணாது ‘சரி’ என்று ஒப்புக்கொண்டாள். பிறருக்கும் இதே போன்றதொரு காரணத்தைக் கூறித் தனக்குத் தனிமையைப் பூரணமாக ஏற்படுத்திக் கொண்டான் உதயணன். பின்னர் அன்று இரவு வயந்தகன் கூறியபடியே பள்ளியறையை மங்கலப் பொருள்களால் அலங்கரித்துத் தூய ஆடை அணிகளை அணிந்து கொண்டு வாசவதத்தை பற்றிய நினைவுகளை இடைவிடாமல் எண்ணியவனாகக் கோடபதியை வாசித்துக்கொண்டே உறங்கிவிட்டான். பள்ளியறையிலோ, பள்ளியறைக்கு வெளிப்புறத்திலோ வேறு யாரும் இல்லை. ‘ஒரு சிறு பணிப்பெண்கூட மறந்தும் அங்கே இருக்கக் கூடாது’ என்று கடுமையான ஆணையிட்டிருந்தான் உதயணன். எனவே பூரணமான முறையில் தனிமை நிலவியது அங்கே.

இந்த நிலையில் உருமண்ணுவாவும் வயந்தகனும், மதுகாப்பீர வனத்திலிருந்து இரவின் தனிமை அமைதியில் யாரும் அறிந்துகொண்டு விடாமல், வாசவதத்தையை அழைத்துக்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டனர். ‘எங்கே அழைத்துச் செல்லுகின்றார்கள்?’ என்ற விவரம் அரண்மனையை அடையும்வரை வாசவதத்தைக்குக்கூடத் தெரியாது. அரண்மனையை அடைந்து உதயணனின் பள்ளியறை வாயிலுக்கு வந்ததும், “உன்னைப் பிரிந்து, உன் கணவனாகிய உதயணன் எவ்வளவு துன்புறுகின்றான் என்பதை நீயே உள்ளே சென்று கண்டுவா” என்று கூறி அவளை அவர்கள் உள்ளே அனுப்பினார்கள். அவள் உள்ளே நுழைகின்ற நேரத்தில்தான் “வாசவதத்தையே! என் ஆருயிர் மருந்தே! உன்னைப் பிரிந்து ஆற்றாமல் உயிர் பொறுத்து இன்னும் வாழ்கின்றேனே நான்” என்று கனவில் உதயணன் வாய் சோர்ந்து உறக்கத்தின் இடையே அரற்றிக்கொண்டிருந்தான். அவ் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே அவற்றால் மனம் நெகிழ்ந்து கனிய, வாசவதத்தை அவன் உறங்கிக் கொண்டிருக்கும் பஞ்சணைக்கு அருகே சென்றாள். தன்னை நினைந்து வெம்மையான பெருமூச்சுடன் விரகதாபத்தால் பஞ்சனையிலிருந்த மலர்களும் வாடும்படி கோடபதியைத் தழுவியவாறே உறங்கும் கணவனைக் கண்டு, அவள் மனம் பெரிதும் இரங்கியது. கனவிலும் நினைவிலும் அவன் உள்ளத்தில் தானே படிந்திருக்கின்றோம் என்பதை அறிந்து பெருமிதம் உண்டாயிற்று அவளுக்கு. அவள், உறங்கும் தன் கணவன் பாதங்களைத் தீண்டி மெல்ல வணங்கினாள். கோடபதியைக் கண்டதும், தொலைந்து போன மகனை மீண்டும் கண்டடைந்த தாய்போலக் களிப்புற்றாள் அவள்.

பஞ்சணையின் ஒரு புறத்தில் மெதுவாக அமர்ந்து, உதயணன் தழுவிக் கொண்டிருந்த கோடபதியை அவன் உறக்கம் கலைந்துவிடாமல் எடுத்து மெல்ல வாசிக்கத் தொடங்கினாள் அவள். யாழை வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், அந்த இனிய ஓசை காதில் விழுந்ததனாலோ என்னவோ, உதயணன் தூக்கம் கலைந்து மெல்ல கண் விழித்துக்கொண்டான். விழித்த அவன் கண்கள், தன் அருகில் பஞ்சணையில் அமர்ந்து கோடபதியை வாசித்துக் கொண்டிருந்த வாசவதத்தையைக் கண்டனவோ இல்லையோ, வியப்பும் திகைப்பும் தோன்ற விரிந்து மலர்ந்தன. “வாசவதத்தாய் வந்துவிட்டாயா?” என்று அவளை நோக்கிக் கூறிவிட்டு எழுந்து, அவள் கூந்தலை நீவியவாறே அவளைத் தழுவிக் கொண்டான் உதயணன். “என்னை நினையாமல் உன்னால் இவ்வளவு நாள்களை எவ்வாறு கழிக்க முடிந்தது?” என்று குழைந்த குரலில், அவளை அணைத்துக்கொண்டே கேட்டான் அவன். வாசவதத்தை அவனுடைய வினாவுக்குப் பதிலே கூறாமல் தலைகுனிந்து நாணிக் கொண்டிருந்தாள். உதயணன் மேலும், தான் இலாவாண நகரில் அவள் வேண்டிக் கொண்டதற்கிணங்கத் தழை, பூ முதலியன கொய்யச் சென்றது, திரும்பி வருவதற்குள் அரண்மனையில் தீப்பற்றி அவள் எரியுண்டது முதலிய செய்திகளைத் திரும்பத் திரும்பக் கூறி அரற்றிக் கொண்டிருந்தான். அவற்றிற்கு வாசவதத்தை வாய் திறந்து மறுமொழி கூறவே இல்லை. நாணியே அமர்ந்திருந்தாள்.

உதயணன் விழித்துக் கொண்டிருந்தாலும், அவன் உடலும் உள்ளமும் உறக்கச் சோர்வில் ஈடுபட்டு மயங்கி இருந்ததனால், தன் எதிரே, வாசவதத்தை அமர்ந்திருப்பது, அவள் வீணை வாசிப்பது, தான் அவளைத் தழுவிக் கொண்டிருப்பது எல்லாவற்றையுமே கனவென்று எண்ணிக் கொண்டானோ என்னவோ? மீண்டும் அப்படியே துக்கத்திலாழ்ந்து விட்டான். அவன் கேட்ட கேள்விக்கு வாசவதத்தை மறுமொழி கூறாமல் எழுதிவைத்த பாவைபோல இருந்தாள். ஆகையினால் கனவு என்றே எண்ணிக் கொண்டு விட்டானோ என்னவோ? சிறிது நேரம் திரும்பத் திரும்ப அரற்றிக் கொண்டே கண்கள் சோர்ந்து அவன் தூங்கிவிட்டான்.

இந்தச் சமயத்தில் பள்ளியறைக் கதவைத் திறந்து கொண்டு வயந்தகன் உள்ளே வந்து. “இன்று தங்கள் நாயகர், தங்கள் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கின்றார் என்பதைக் காட்டுவதற்காகவே இங்கே அழைத்து வந்தோம். நீங்கள் முறைப்படி யூகியுடனே சேர்ந்துவந்து, நாளைப் பகலில் இருவருமாக உதயணனைச் சந்திக்க வேண்டும் என்ற ஏற்பாடு செய்திருக்கின்றோம். இப்போது இனிமேல் நீங்கள் இங்கே தங்குவது கூடாது! நாம் விரைவில் மதுகாம்பீர வனத்திற்குத் திரும்பிப் புறப்பட வேண்டும். வாருங்கள் போகலாம்” என்று அழைத்தான். கரையை உடைத்துப் பாயும் நீரைப் போலத் துயரம் பெருகிப் பாய்ந்தது தத்தையின் மனத்தில். கணவனைப் பிரிய வேண்டி நேர்கிறதே என்ற அந்தத் துயரத்தோடு தன் மடியில் சாய்ந்திருந்த உதயணன் தலையை மெல்ல எடுத்து வைத்துவிட்டு எழுந்திருந்தாள். யாழையும் அவனையும் பார்த்தவாறே நீர் துளிக்கும் கண்களோடு வயந்தகனைப் பின்தொடர்ந்து வெளியேறினாள். மதுகாம்பீர வனமடைந்து ஆகியோடும் சாங்கியத்தாயோடும் இருந்தாள்.

வயந்தகனால் வாசவதத்தை மதுகாம்பீர வனத்திற்கு அழைத்துச் செல்லப் பெற்றபின், இங்கே அரண்மனை மேல் மாடத்திலுள்ள பள்ளியறையிலே, ‘வாசவதத்தை தன் பக்கத்திலேயே இருக்கின்றாள்’ என்ற எண்ணத்துடனே உறங்கிக் கொண்டிருந்த உதயணன், இடையே விழித்துக் கொண்டான். விழிப்பு வந்ததும், மஞ்சத்திலே தன் அருகிலே தத்தையைத் தேடின. அவன் கண்கள், ஏமாற்றமடைந்து அவளை அங்கே காணாமற் கனவென்றே திகைத்தன.

மீண்டும் எழுந்திருந்து பள்ளியறை முழுவதும் நன்றாகத் தேடிப் பார்த்தான். தத்தை அங்கே இல்லை என்பது உறுதி யானவுடன், அவன் மனம் துயரத்தினால் மிக்க வேதனை யடைந்தது. பெறுவதற்கரிய மாணிக்கம் ஒன்றைப் பெற்றவன் தவறுதலாக அதனை நீர் நிறைந்த ஆழமான மடு ஒன்றில் இட்டுவிட்டாற்போன்ற நிலையை எய்தினான் உதயணன். அந்தத் துயரம் முற்றிய மனநிலையால் அழுது கதறுதலைப் போலப் புலம்பத் தொடங்கிவிட்டான் அவன். அந்நிலையில் தத்தையை மதுகாம்பீர வனத்தில் கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பிய வயத்தகன், உதயணனுக்கு ஆறுதல் கூற வருவான்போல் அங்கே வந்தான்.

“இரவும் பகலும் இவ்வாறு வாசவதத்தை ‘வாசவதத்தை’ என்று அவளையே நினைத்து இரங்குதல் தங்களைப் போன்ற பேரரசர்க்கு ஏற்றதன்று! பகைவர் இதனைத் தங்கள் பலவீனமாக எண்ணி ஏதேனும் செய்யமுற்படுவர்” என்று பலமுறை கூறிய அறிவுரையையே அப்போதும் வயந்தகன் அவனுக்கு ஆறுதலாகக் கூறினான். வயந்தன் கூறிய இந்த ஆறுதல் மொழிகளைக் கேட்ட உதயணன், தத்தை சற்று நேரத்திற்குமுன் தன் பள்ளியறைக்கு வந்தது, தன்னருகில் அமர்ந்து கோடபதியை வாசித்தது, அவளது எண்ணெய் காணாது மாசுண்ட கூந்தலைத் தான் அன்போடு தன் கைகளால் தீவியது முதலிய யாவற்றையும் சோக உணர்ச்சி யும் ஆர்வமும் தொனிக்கும் குரலில் உதயணன் கூறினான். ஆனால், வயந்தகனோ சிரித்துக்கொண்டே அவனுக்குப் பதில் கூறினான். “கனவிலே கண்ட பொருளை நனவிலே அடைய வேண்டும் என்று தேவர்களே ஆசைப்பட்டாலும் முடியாதே! உன் வார்த்தையைக் கற்றவர்கள் கேட்டால் நகைப்பார்கள்! ஒன்று வேண்டுமானால் நடந்திருக்கும். ஆடலும் பாடலும் புன்னகையும் கொண்டு வாசவதத்தையைப் போன்ற உருவத்துடனேயே இங்கே அரண்மனையில் ஓர் இயக்கி உலாவி வருகின்றாள். அவள் மாயா வடிவமுடையாள். அவளே உங்கள் கனவில் வாசவதத்தை போலத் தோன்றி, உங்களை ஏமாற்றியிருக்க வேண்டும்! இனி அந்த மாயவடிவின் நடமாட்டம் நிகழாதபடி மந்திரங்களைக் கொண்டு பரிகாரம் புரிந்து காக்க ஏற்பாடு செய்துவிடுகின்றேன்” என்று தான் ஒன்றையும் அறியாதவன்போல் ஒரு பொய்யைத் துணிந்து கூறினான் வயந்தகன்.

ஆயினும் வயந்தகன் கூறியபடி அது ‘கனவாக இருந்து விடக்கூடாதே!’ என்று கலங்கியது உதயணன் நெஞ்சம். ‘புண்ணியப் பயனாக அது நனவிலேயே நிகழ்ந்துவிடலாகாதா?’ என ஏங்கினான் அவன். மறுநாள்பொழுது புலர்ந்ததும் ‘கனவாகவே இருப்பினும் அது நல்விளைவைத் தருதல் வேண்டும்’ என்ற கருத்துடன் பலவகை அறங்களை விரும்பிச் செய்தான். குளம்புகளிலும் கொம்புகளிலும் பொன் தகடுகளைப் பதித்து, ஒளிமயமான புதிய ஆடைகளால் உடம்பைப் போர்த்திய பசுக்கள் பலவற்றைத் தானமாக வழங்கினான். அந்தணர்கள் ஏழேழு முறை அப்பரிசில்களைப் பெற்றனர்.

வாசவதத்தையைத் தன் பள்ளியறையில் தான் உண்மையாகவே கண்டிருப்பினும், வயந்தகன் கூறியவற்றாலும், உறங்கி விழித்ததும் அவளைக் காணாமையாலும், படிப்படியான சிந்தனைக்குப்பின் அது கனவாகத்தான் இருக்கும் என்ற முடிவிற்கே உதயணனும் வந்து சேர்ந்துவிட்டிருந்தான். தத்தையையே எண்ணி அவள்மேல் வேட்கை யுற்றிருந்த தன் மனநிலைக்கு ஏற்ப அவள் கண்முன் தெரிந்ததுபோலவும், பக்கத்திலமர்ந்து கோடபதியை வாசித்தது போலவும் தனக்குத் தோன்றியவை எல்லாம் ‘வெறும் பிரமை! ஆசையின் விளைவு!’ என்ற முடிவிற்கு வந்தான். ‘வேட்கையும் ஆசையும் உடைய எவருக்கும் இவ்வியல்பு இருக்கும் போலும்’ என்று தன் மனத்தையும் சமாதானப்படுத்திக் கொண்டுவிட்டான் அவன்.

உதயணன் நம்பிக்கை இழந்து மனந்தளர்ந்த இதே சந்தர்ப்பத்தில், வயந்தகன் மீண்டும் அவனைக் கண்டு அருமையான யோசனை ஒன்றைக் கூறினான். “முன்பு நாம் மகதநாடு சென்றிருந்தபோது இராசகிரிய நகரத்தில் சந்தித்தோமே ஓர் முனிவர், அவர் இப்போது இங்கே கோசாம்பி நகரத்திற்கு வந்து நகர்ப்புறத்திலுள்ள மதுகாம்பீர வனமெனும் சோலையில் தங்கியிருக்கிறார். வாசவதத்தை சென்றிருக்கும் இடம் ஏதுவாயினும் மந்திர வன்மையால் அவர் மீட்டுக் கொடுப்பார். நாம் இருவரும் சென்று இன்று அவரைச் சந்தித்தால், ஏதாவது நலம் விளையும் என்று கருதுகிறேன்” என வயந்தகன் கூறவும், முழு மனத்தோடு மதுகாம்பீர வனம் சென்று அவரைச் சந்திக்கச் சம்மதித்தான் உதயணன். உண்மையாகவே மதுகாம்பீர வனத்தில் அப்போது யார் வந்து தங்கியிருக்கின்றார்கள் என்பதை உதயணனிடம் கூற விரும்பாதவனல்லன் வயந்தகன்! ஆயினும் ‘அவனே நேரில் வந்து கண்டு திகைக்கவும் வியப்புக்கொள்ளவும் செய்ய வேண்டும்’ என்றே யாரோ ஒரு முனிவர் வந்திருப்பதாக ஒரு பொய்யைக் கூறினான். வயந்தகனும் உதயணனும் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேர் ஒன்றில் மதுகாம்பீர வனத்தை நோக்கிப் புறப்பட்டனர். விரைவில் ஊரெல்லையிலிருந்த அந்த வனத்தை அடைந்தது அவர்கள் தேர். உதயணனை அழைத்து வரப் போகின்ற செய்தியை யூகிக்கு ஏற்கெனவே புலப்படுத்தி விட்டு, தத்தையும் அவனும் உதயணனைச் சந்திக்க ஏற்றவாறு இருக்கும்படி முன்பே கூறிவிட்டுச் சென்றிருந்தான் வயந்தகன். யூகியின் தோற்றம், அவன் அப்போதிருந்த நிலை யாவும் மிகவும் துயரத்திற்கு உரியனவாக இருந்தன. பல நாள்களாக எண்ணெய் பூசிப் பேணப்படாமையினால் சடை படர்ந்து பிடரியில் தொங்கும் குஞ்சி! பாவத்துடனே போராடி வென்ற ஆண்மையைப் போன்று ஒருவிதமான புனித நிலையின் சாயல் மட்டுமே புலப்படும் ஒடுங்கிய தோற்றம்! காவி நிறத்து ஆடைகள்! ‘இரவு நேரத்தில் உண்பதில்லை’ என்ற விரதத்தைக் கொண்டிருந்ததனால், இளைத்திருந்த உடல்! அதுவரை அவனுடைய சிந்தையில் இருந்தது ஒரே ஒர் எண்ணம்தான். ‘உதயணன் நல்லபடி தன் அரசைப் பெற்று நீடுழி காலம் வாழ வேண்டும்’ என்பதுதான் அந்த எண்ணம்! அதுவும் நிறைவேறிவிட்டது.