வெற்றி முழக்கம்/63. பதுமையின் பெருந்தன்மை

விக்கிமூலம் இலிருந்து

63. பதுமையின் பெருந்தன்மை

வாசவதத்தையின் தோற்றத்திலும் நீண்ட பிரிவுத் துயரமே தென்பட்டது. உடல் முழுவதும் பொன்னிறப் பசலை போர்த்திருந்தது அவளுக்கு. ஒளி வறண்ட நெற்றி, செழிப்புக் குறைந்து ஒடுங்கிய உடல் என்று இவ்வாறு இருந்த இந்த நிலையிலும், கணவனை நலமுறச் செய்வதற்காகத் தான் தனிமை வாழ்வை மேற்கொண்ட தியாகத்தின் ஒளியும் கற்பின் உறுதியும் அவள் முகத்தில் நன்றாகப் பிரதிபலித்தன. ‘உதயணனை அழைத்துக்கொண்டு வயந்தகன் வரப் போகின்றான் என்பதை அறிந்த உடனேயே, யூகியும் தத்தையும் மதுகாம்பீர வனத்து மாளிகையில் தனித்தனியாக இருந்த இரண்டு அறைகளில் வேறுவேறாக மறைந்து இருந்து கொண்டனர். சாங்கியத்தாயும் தத்தையுடனே இருந்து கொண்டாள்.

வயந்தகன் தேரிலிருந்து இறங்கி வனத்துக்குள் முன்னே செல்ல, உதயணன் அவனைப் பின்பற்றிச் சென்றான். மாளிகையினுள் நுழைந்து யூகி இருக்கும் அறைக்கருகே சென்றதும், “இவ்வறையினுள்ளேதான் மகதத்தில் நாம் சந்தித்த அந்த முனிவர் பெருமான் எழுந்தருளியிருக்கின்றார். உள்ளே சென்று அவரைக் காணுங்கள்” என்று உதயணனிடம் கூறி அவனை உள்ளே அனுப்பித்தான் வயந்தகன். உதயணன் பயபக்தியுடனே அவ்வறைக்குள் நுழையவும் வெளியே நின்ற வயந்தகன் தனக்குள் சிரித்துக்கொண்டான். உள்ளே சென்ற உதயணன் அறையினுள் முனிவரைப் போன்ற தோற்றத்துடனேயே யாரோ ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர் அருகே சென்றான். சென்றவன் அங்கே இருந்த வரின் முகத்தை ஏறிட்டு நோக்கினானோ இல்லையோ, உடனே திடுக்கிட்டான்; திகைத்தான்! தன் கண்கள் தன்னை ஏமாற்றுகின்றனவோ என்று தோன்றியது அவனுக்கு. மீண்டும் உற்றுப் பார்த்தபின் மாளிகையே அதிரும் படியாக, “யூகி” என்ற குரல் அவன் வாயிலிருந்து வெளிவந்தது. அடுத்த கணம் தாவிப் பாய்ந்து அவனைத் தழுவிக் கொண்டான். இருவர் கண்களிலும் நீர் முத்துக்கள் திரண்டன.

யூகியைத் தழுவிக்கொண்டபோது, அவன் இறந்துபோய் விட்டதாகத் தான் கேள்விப்பட்டிருந்த செய்தியைப் பற்றிய ஐயம், உதயணனது மனத்தில் எழுந்தது. உடனே யூகியின் மார்பிலிருந்த யானைக் கொம்பின் தழும்பு அவன் பார்வையில் தெரிந்து, அந்த ஐயம் முற்றிலும் ஏற்படாதவாறு செய்தது. இளமையில் கலிங்க தேசத்து அரசனின் பட்டத்து யானையோடு போர் செய்ததால், யூகியின் மார்பில் அந்த வடு இருப்பது உதயணனுக்கு நன்கு தெரியும். துயரப் பெரு மூச்சுடனே தான் தழுவிக் கொண்டிருந்த தன் இன்னுயிர் நண்பன் யூகியை நோக்கி உதயணன் பேசலானான். “பிறருக்கு நன்மை பயக்கும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு உழைப்பவனாகி, அதனால் துன்பங்கள் எவ்வளவு வரினும் தாங்கும் விந்தை மனிதன், நீ ஒருவன் யூகி! என் நலனுக்காகவே நீ இறந்து விட்டதாகச் செய்தி பரப்பியிருக்கிறாய் என்பது உன்னை நன்கு அறிந்த எனக்கு இப்போதல்லவா தெரிகிறது? எப்படியோ! பழைய நிகழ்ச்சிகள் போகட்டும்! இனி நீ என்றும் என்னைப் பிரியவேகூடாது! பிரிந்தால் பின்பு உன் உதயணனை நீ உயிரோடு காணமாட்டாய்! என்னால் இனி உன்பிரிவைத் தாங்கிக் கொள்ளவும் இயலாது” என்றான் உதயணன.

அப்போது வயந்தகனும் உள்ளே வந்தான். யூகி, வயந்தகன் இருவரும், அதுவரை அவன் நன்மை குறித்தே தாங்கள் அவ்வளவு சூழ்ச்சிகளையும் செய்ய நேர்ந்ததென்பதையும் வாசவதத்தை உயிருடனேயே இருக்கிறாள் என்பதனையும் உதயணனிடம் கூறித் தங்களை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டனர். உதயணன் உடனே வாசவதத்தையைக் காணவேண்டும் என்ற ஆவலால் துடித்தான். யூகியும் வயந்தகனும் அவனைப் பக்கத்திலிருந்த மற்றோர் அறைக்கு அழைத்துச் சென்றனர். உதயணனைக் கண்டதும் வாசவதத்தை தான் அவன் நன்மைக்காவே அதுவரை அவ்வாறு மறைந்து வசிக்க நேர்ந்தது என்று கூறிக் கண்ணிர் சிந்தி அரற்றினாள். அவன் திருவடிகளிலே வீழ்ந்து தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினாள். அவ்வாறு அவள் வணங்கியபோது, அவளது கண்ணிர் அவன் பாதங்களை நனைத்தது. அவிழ்ந்த கருங்குழல் அவன் அடிகளைத் தழுவியது. அவள் நிலை அவனை மனமுருகச் செய்தது. குனிந்து அவளைத் தன் கைகளால் தூக்கி நிறுத்தித் துயரந்தீரத் தழுவிக் கொண்டான்.

அருகிலே நின்ற சாங்கியத் தாய் அப்போது அவன் கண்களில் புலப்படவே, அவளைக் கை குவித்து வணங்கினான். “முன்பே பலமுறை என்னைத் துன்பங்களிலிருந்து மீட்டு அரிய பெரிய உதவிகளை எல்லாம் செய்துள்ளீர்கள்! உங்கள் உதவியின் அளவு ஆலம் வித்துப்போலச் சிறியதாக இருந்தாலும், அவற்றால் தோன்றி விளைந்து பல படர்ந்த நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அந்த நன்றியை நான் என்றுமே மறக்க மாட்டேன்” என்று சாங்கியத்தாய்க்கு நன்றி செலுத்தினான். பின் மீண்டும் தத்தையைக் கூர்ந்து நோக்கிய அவன், முதல் நாளிரவு தன் பள்ளியறையில் கண்டது போலவே அவள் தோற்றும் இப்போதும் இருந்ததைக் கண்டு வயந்தகனைக் கூப்பிட்டுக் கேட்டான். வயந்தகன் உண்மையாக நிகழ்ந்தவற்றை எல்லாம் அவனிடம் கூறிவிட்டான். சற்றைக்கெல்லாம் யாவரும் தேரேறி அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றனர். தேரில் செல்லும்போது எல்லார் மனத்திலும் மகிழ்ச்சியே நிரம்பியிருந்தது.

‘இறந்து போனார்கள்’ என்றெண்ணியிருந்த வாசவதத்தை, யூகி, சாங்கியத் தாய் ஆகிய மூவரையும் தேரில் ஏற்றிக்கொண்டு வயந்தகனும் உதயணனும் வருவதைக் கண்ட கோசாம்பி நகர மக்கள் மட்டிலா மகிழ்ச்சி கொண்டனர். தேர் சென்ற வீதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி இந்தக் காட்சியைக் கண்டனர். ‘பிரிந்தவர் கூடினோம்’ என்ற மகிழ்ச்சியுடனே யாவரும் கோசாம்பி நகரத்து அரண்மனையை வந்தடைந்தனர். ‘யூகிக்குத் தன் நன்றியைத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டும்’ என்பது போன்ற ஆசை உதயணனுக்கு அப்போது அடிக்கடி ஏற்பட்டது. ஆனால், ‘அடிக்கடி ஒருவருக்கு நன்றியைக் கூறுவதும் நட்பிற்கு ஏற்றது அல்லவே’ என்றெண்ணித் தன் ஆசையை அடக்கிக் கொண்டான். சாங்கியத் தாயை மட்டும் இரண்டு மூன்று முறை மீண்டும் பாராட்டுக் கூறி நன்றி செலுத்தினான். பதுமாபதியின் அந்தப்புரத்திற்கு ஆளனுப்பி, ‘உன் தமக்கை முறையுடையவளாகிய வாசவதத்தை இன்று வந்திருக்கிறாள்! நீ வந்து அவளைக் காண்க’ என்று அவளுக்குச் செய்தி அறிவிக்கச் செய்திருந்தான்.

செய்தியறிந்த பதுமை, ‘வாசவதத்தை வந்துவிட்டாளே!’ என்று சிறிதேனும் பொறாமை அடையவில்லை. பெருந்தன்மையோடு கூடிய மகிழ்ச்சியே தத்தையின் வரவால் அவளுக்கு ஏற்பட்டது. உடனே ஆர்வம் முந்தும் மனத்துடன் பலவகைச் சிறந்த ஆடை அணிகலன்களை ஏந்திய தோழியர்கள் புடைசூழத் தத்தையைக் கண்டு பேசுவதற்கு விரைந்து வந்தாள் பதுமை. அவள் வந்த சமயம் உதயணன் அங்கே இல்லை. வாசவதத்தையும் சாங்கியத் தாயும் மட்டுமே இருந்தனர். உதயணன் தத்தையைத் தன் உயிரினும் சிறந்தவளாகக் கருதி வருவதை நன்கு உணர்ந்தவளாகையினால்தான், பதுமை அங்ஙனம் வலிய தேடி அவளைக் காண வருவதைச் சிறிதும் இழிவாகக் கருதவில்லை. தத்தையை வணங்கித் தழுவிக் கொண்டாள் அவள். “வாசவதத்தை! உன் கற்பின் புகழ் ஓங்கி வளர்க!” என்று பாராட்டினாள். அதன்பின் தத்தையும் அவளும் அருகருகே யிருந்த இரு ஆசனங்களில் அமர்ந்து கொண்டிருந்த தோற்றம் இரண்டு தாமரை மலர்களில் திருமகள் இருவர் அமர்ந்து கொண்டிருந்ததுபோல எழிலாய் விளங்கிற்று. இவர்கள் இங்கு இவ்வாறிருக்க யூகியைத் தன் அரசவை மண்டபத்துக்குக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தான் உதயணன். அரசவையைச் சேர்ந்த யாவரும் யூகியை அன்போடும் பெருமதிப்போடும் வரவேற்றனர். அவையில் உதயணனுக்கு அருகில் யூகி அமர்ந்து கொண்டதும், ‘தன்னை உச்சயினி நகரத்துச் சிறையிலிருந்து மீட்டனுப்பிய பின்பு அவன் எங்கெங்கே, எவ்வெவ்வாறு மறைந்து வாழ்ந்தான்?’ என்பதையும், ‘இலாவாண நகரில் அரண்மனை எரியுண்ட பின் தத்தை, எவ்வாறு எங்கே அவனால் வாழ்விக்கப் பட்டாள்?’ என்பதையும் எல்லோரும் அறியும்படி விவரித்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டான் அவன்.

நடந்தவற்றை எல்லாம் தெளிவாக விவரித்துரைத்தபின், “நீ உனக்குரிய கோசாம்பி நாட்டை மீண்டும் பெறவேண்டும் என்பதற்காகவும், அரசாட்சியின் அருமையையும் பொறுப்பையும் உணர வேண்டுமென்பதற்காகவும், தம்பியர்களாகிய பிங்கல கடகர் உன்னை வந்தடைவதற்காகவுமென்றே உன் மேல் எனக்குள்ள உரிமையைப் பாராட்டி இவைகளை எல்லாம் சூழ்ச்சியாகச் செய்தேன்” என்று உதயணனிடம் கூறினான் யூகி. மறைந்த வாழ்வின்போது தன் திட்டங்களுக்கு ஏற்ப ஒத்துழைத்த உருமண்ணுவா, வயந்தகன், இடவகன் முதலியோரைப் பாராட்டி யூகி நன்றி தெரிவித்துக் கொண்டான். வயந்தகன், உருமண்ணுவா முதலியோரும் அப்போது அங்கே அரசவை மண்டபத்திலேயே இருந்தனர். உதயணன், “யூகி! உனக்கும் எனக்கும் உள்ள நட்பு உயிரோடு ஒன்றிய நட்பு. நீ செய்திருப்பவை எல்லாம் என் நன்மையின் பொருட்டே என்பதை நான் உணர்கிறேன்” என்று யூகியை நோக்கி இனிய மொழிகளாற் சொன்னான். அவ்வளவில் அரசவை அன்று கலைந்தது.

அரசவையிலிருந்து உதயணன் அந்தப்புரத்திற்கு வந்த போது பதுமையும் வாசவதத்தையும் சேர்ந்து அவனெதிரே வந்து அவனை வரவேற்றனர். அவர்களது இணையான அந்தக் காட்சி உதயணனை வியப்பும் மயக்கமும் அடையும்படி செய்தது. அன்று உதயணன் உண்ணும்பொழுது பதுமை, தத்தை இருவரும் சேர்ந்து உணவு பரிமாறி அவனை உபசரித்தனர். தான் உண்டு எழுந்தவுடன் அவர்களை நோக்கி, “நீங்கள் இருவரும் இன்று ஒரே உண்கலத்தில் சேர்ந்து உண்ணுங்கள்! அந்த அழகிய உருக்கமான காட்சியை நான் அருகேயிருந்து காணப் போகின்றேன்” என்று உதயணன் வேண்டிக் கொண்டான். பதுமையும் தத்தையும் சிரித்துக் கொண்டே அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டனர். அங்ஙனமே சேர்ந்து உண்ணவும் செய்தனர். உதயணன் அதைக் கண்டு மகிழ்ந்தான்.

சாப்பிட்டு முடிந்ததும் பதுமை உதயணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, “இதுவரை எத்தனையோ திங்கள் தத்தையைப் பிரிந்து வேதனையுற்று இருந்தீர்கள்! உங்களுக்காக நீண்டகாலப் பிரிவு என்னும் மகத்தான தியாகத்தைச் செய்திருக்கும் கற்பின் செல்வி தத்தையுடன், என்னைச் சில நாள்கள் மறந்து, தாங்கள் ஒருங்குகூடி மகிழ்ந்து இருத்தல் வேண்டும்! இது அடியாள் தங்களிடம் வேண்டிக்கொள்ளும் வரம்! யான் என் அந்தப்புரத்திற்குச் செல்லுகின்றேன். நீங்களிருவரும் அன்புடன் எனக்கு விடையளிக்கவேண்டும்” என வேண்டிக்கொண்டாள். அவளுடைய மாசற்ற அன்பு உள்ளத்தைக் கண்டு உதயணனுக்கு மனம் நெகிழ்ந்தது. பதுமை மீண்டும் இருவரையும் வணங்கி விட்டுச் சென்றாள்.