வெற்றி முழக்கம்/66. பந்தாடிய சுந்தரிகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

66. பந்தாடிய சுந்தரிகள்

யூகி உஞ்சை நகரத்திற்குச் சென்ற பின்பு, பலநாள் பிரிந்த துயரம் தீரக் காதலி தத்தையின் எழிலில் திளைத்தும் பதுமையின் வனப்பில் மயங்கியும் இன்பமயமான வாழ்க்கையை மேற்கொண்டான் உதயணன். தத்தையும் பதுமையும் அரண்மனையிலுள்ள ஆடல் பாடல் மகளிரும் அருங் கலைஞர்களுமே உதயணனுடைய நாள்களை இன்பமும் சுவையும் நிறைந்திடச் செய்தனர். எந்நேரமும் மகிழ்ச்சி நிறைந்திடப் போது கழிந்தது உதயணனுக்கு.

உதயணன் வெளியே உலாவச்செல்லும் நாள்களில் அவன் இல்லாத நேரத்தில், அரண்மனைச் சோலைக்கு இடையே உள்ள வெளியில் தோழிகளுடனேயே பதுமையும் வாசவதத்தையும் பந்தாடுவது வழக்கம். உதயணன் அரண்மனையில் இருக்கும் நேரங்களிலே அவர்கள் இந்தப் பொழுது போக்கு விளையாட்டை மேற்கொள்வதில்லை. தான் இல்லாதபோது அவர்கள் பந்து விளையாடுகிறார்கள் என்ற செய்தியை வயந்தகன் மூலமாக உதயணன் அறிந்து கொண்டான். வயந்தகன் அவர்களுடைய பந்தாட்டத்தை விவரித்து வருணித்ததைக் கேட்ட உதயணனுக்குத் தானும் ஒருமுறை மறைந்திருந்து அந்த விளையாட்டைக் காண வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.

உதயணன் பாஞ்சால ராசனாகிய ஆருணியை வென்ற போது, ஆருணியின் உரிமை மகளிராகிய ஆடலங் கணிகையர் பலரைக் கைப்பற்றியிருந்தான். வாசவதத்தை வந்தபின்பு அந்த மகளிரை இரு பகுதியாகப் பிரித்துப் பதுமைக்கு ஓர் பகுதியும் தத்தைக்கு ஓர் பகுதியுமாகக் கொடுத்து விட்டிருந்தான். அவர்களும் இந்த பந்தாட்டத்தில் கலந்து கொண்டு விளையாடினர். வாசவதத்தையும் பதுமையுமாகக் கட்சி பிரித்துக்கொண்டு, அவர்கள் தங்களுக்குள் போட்டியிட்டு விளையாடும் அந்த விளையாடல், பார்க்கச் சுவை நிறைந்த காட்சியாக இருக்கும் என்றும் உதயணன் அவசியம் அதனைக் காணவேண்டும் என்றும் வயந்தகன் ஆசையைக் கிளப்பிவிட்டு விட்டான். உதயணன் அந்தப் பந்தாட்டத்தைக் காண்பதற்குத் தீர்மானித்தபோது ஒரு தடையும் எழுந்தது. ‘அவன் விளையாட்டைக் காண்பதற்கு வரப் போகிறான்’ என்பதை அறிந்தாலே அந்தப் பெண்கள் அச்சமும் நாணமும் கொண்டு ஓடிவிடுவர். இதனால் ஒரு பெண்ணைப் போலவே மாறுவேடங் கொண்டு, அவர்கள் விளையாடும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெண்யானையில் அமர்ந்தவாறே அதனைக் காண்பது என்ற யோசனையை வயந்தகன், உதயணனுக்குக் கூறினான்.

உதயணனும் தத்தை-பதுமை பந்தாடலைக் காண்பதற்காகப் பெண்ணாக மாறுவேடம் பூண்டான். பெண்கள் கூட்டத்திற்கு நடுவே பெண்ணாகக் கலந்து பழகி நடிப்பதற்கு அவன் மிகுந்த பழக்கமும் முன்னெச்சரிக்கையும் கொள்ள வேண்டியிருந்தது. தோழிகளும் நாட்டிய மகளிருமாக நூற்றுக்கணக்கான பெண்கள் சூழ இருந்தனர். பதுமையும் தத்தையும் ஆட்டத்திற்கு இருபுறங்களிலும் முறையே தலைமை வகித்தனர். உதயணன் ஓர் உயரிய பெண் யானையின்மேல் ‘பெண்ணாக’ வீற்றிருந்தான். ஆட்டம் தொடங்கியது. அவர்கள் விளையாடுவதற்குப் பயன்படுத்திய பந்துகள் நெட்டியினாலும், பஞ்சினாலும், உலண்டு உன்னும் ஒருவகைப்பட்டு நூலாலும் செய்யப்பட்டிருந்தன. மயிற்பீலி, பட்டுக் கயிறு, பாம்பின் மெல்லிய தோல் முதலிய பல்வேறு வகைப் பொருள்களால் அவை புனையப் பெற்றிருந்தன. அப் பந்துகள் யாவுமே பெண்கள் கைப்பற்றி விளையாடுவதற்கு ஏற்ற மென்மையும் நளினமும் பொருந்தி விளங்கின.

முதல் முதலாக இராசனை என்னும் பெண் விளையாட்டைத் தொடங்கி வைத்தாள். சிலம்புகள் குலுங்கக் கை வளைகள் கலகல என்று கீதம் செய்ய, அவள் பந்தைப் பாய்ந்து பாய்ந்து ஆடிய காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இடை விடாது ஆயிரம் எண்ணிக்கைவரை அவள் சோர்வு இல்லாமல் பந்தை அடித்துவிட்டு நீங்கியதும், வாசவதத்தையின் உயிர்த்தோழியாகிய காஞ்சனமாலை என்பவள் தொடர்ந்து ஆடினாள். பந்தாடுவதிலுள்ள சில சாதுரியமான முறைகளைக் கடைப்பிடித்து ஆடியதனால் அவளால் ஆயிரத்து ஐந்நூறு எண்ணிக்கைவரை ஆட முடிந்தது. காஞ்சனமாலைக்குப் பின்பு விளையாடிய பதுமையின் தோழியாகிய அயிராபதி, அரிய முயற்சியின் பேரில் ஈராயிரம் எண்ணிக்கைவரை பந்தடித்துக் காண்போரை வியக்கச் செய்தாள். அயிராபதி இவ்வாறு அற்புதமான சாமர்த்தியத்தோடு விளையாடியதைக் கண்டு, அடுத்து விளையாட வேண்டிய முறை உடையவளான வாசவதத்தையின் தோழி விச்சுவலேகைக்கு மிகுந்த ஆத்திரமும் பொறாமையும் ஏற்பட்டுவிட்டது. எனவே அதன் விளைவாக அவள் ஈராயிரத்தைந்நூறு எண்ணிக்கைவரை ஆடிக்காட்டி, அயிராபதியின் திறமையிலும் தன் திறமை உயர்ந்த தென்று நிரூபித்தாள். இதற்குப்பின் விளையாடிய பதுமையின் தோழியாகிய ஆரியை என்பவள், திறமையாக விளையாடினாலும், மூவாயிரம் எண்ணிக்கைக்கு மேலே அவளால் ஆடமுடியவில்லை.

ஆரியை விளையாடி முடித்தவுடன் பந்தை எடுத்து விளையாட ஒருவரும் முன்வராமற் போகவே, வாசவதத்தை தன் தோழிகளை நோக்கி, உங்களில் எவரும் விளையாடுவதற்கு முன் வருவதற்கு விரும்பவில்லையா?’ என்று சற்றுச் சினந் தொனிக்கும் குரலிலேயே கேட்டாள். உடனே கோசல நாட்டைச் சேர்ந்தவளும் வாசவதத்தையின் ஆயத்திலிருந்த வளுமான மானனீகை என்ற வனப்புமிக்க பெண், பெருமிதந் தோன்ற நடந்து முன்வந்தாள். பந்தை எடுத்து விளையாடுவதற்கு முன், அவள் கூடியிருந்த மற்ற பெண்களை நோக்கிச் சில கருத்துக்களைப் பேசலானாள். அந்தப் பேச்சில் அதுவரை விளையாடியவர்கள் தத்தம் ஆடல்களிற் செய்த தவறுகளைச் சொல்லிவிட்டுப் பந்தாட வேண்டிய முறையைப் பற்றியும் விளக்கிக் கூறிய பின்பே அவள் விளையாடுவதற்காகப் பந்தை எடுத்தாள்.

நல்ல பந்துகளாக இருபத்தொரு பந்துகளைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டாள் அவள். விளையாட்டிற்காக அவள் செய்துகொண்ட ஆயத்தங்களே, அவளுடைய ஆடும் திறமையைப் புலப்படுத்துவன போலத்தெரிந்தன. இது வரை பெண் யானைமேல் இளநங்கைபோல மாறுவேடங் கொண்டு பார்த்து வந்த உதயணன், மானனீகை என்ற அந்த பெண்ணின் அழகாலும் ஆட்டத்தாலும் பெரிதும் கவரப்பட்டான். அவள் அழகிலும் பந்தாடும் விதத்திலும் ஒரு வகை மோகமும் கவர்ச்சியும் ஏற்பட்டு மயங்கியது அவன் உள்ளம். கூந்தல் குழன்று சரிய, குதூகலம் திகழும் முகத்தில் குறுகுறு வென்று வியர்வரும்பக் கண்களும் புருவங்களும் பாய்ந்து வளைந்து பந்துக்கு ஏற்பத் திசைகளிலே மாறிமாறித் திரும்ப, அபூர்வமான அழகும் கலைத்திறனும் காட்டி விளையாடினாள் மானனீகை. அவளுடைய அந்த அருமையான ஆட்டத்திற்கும் அழகிற்கும் உதயணனுடைய மனம் சிறிது சிறிதாக அவனையறியாமலே தானாக அடிமைப்பட்டுக் கொண்டிருந்தது. அவனால் அதைத் தடுக்க முடியவில்லை.

பந்தாட்டத்தின் பலவித சாதுரிய நிலைகளையும், வகைகளையும் தன் ஆட்டம் மூலமாக யாவரும் கண்டு ஆச்சரியமடையும்படி செய்த மானனீகை, எண்ணாயிரம் எண்ணிக்கை ஆடி முடித்தபின்பே பந்தைக் கீழே வைத்தாள். இருபத்தொரு பந்துகள் அவள் ஆடுவதற்குப் பயன்பட்டிருந்தன. மானனீகையின் இந்த நிகரற்ற வெற்றியால் வாசவதத்தையின் பக்கம் மாபெரும் மகிழ்ச்சி யாரவாரம் எழுந்தது. மானனீகையின் ஆட்டம் இருகட்சியினரையுமே வியப்பிலாழ்த்திவிட்டது. ‘இந்தப் பெண்ணின் அழகை நம் அரசன் காண நேர்ந்தால் பின்பு நம்மை நினைத்துக்கூடப் பார்க்கமாட்டானே இவள் அழகுதான் எவ்வளவு அரிது?’ என்று காரணமற்ற ஒரு விதமான பொறாமை எண்ணமும் மானனீகையைக் கண்டு வாசவதத்தைக்கு உண்டாயிற்று. ‘உண்மையில் அந்த அழகியை உதயணன் அப்போதே மாறுவேடத்துடன் கண்டு கொண்டிருக்கிறான்’ என்பதை அவள் எவ்வாறு அறிவாள்? பதுமை முதலாக அந்தக் கூட்டத்திலிருந்த மற்றவர் யாவருக்கும்கூட வாசவதத்தைக்கு ஏற்பட்டதுபோல் மானனீகையின்மேல் இவ்வாறு பொதுவாக ஒரு பொறாமை ஏற்படவே செய்தது.

மானனீகை பந்தாட்டத்தை நிறுத்தியவுடனே ஆசையால் தன்னை மறந்துவிட்ட உதயணன், சற்று அருகிலே சென்று அவளைக் காணவேண்டும் என்று விரும்பினான். எனவே உடனே தான் அமர்ந்திருந்த பெண் யானையின் மேலிருந்து கீழே இறங்கிச் சட்டென்று தன்னுடைய பெண் வேடத்தைக் கலைத்துவிட்டான் அவன். வேடம் கலைந்தவுடன் தன் சுய உருவத்தோடு அவர்களுக்கு இடையே அவன் சென்று நின்றான். சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று அவனை அங்கே கண்டதினால் பதுமை, தத்தை முதலிய யாவரும் அச்சமும் நாணமும் கொண்டு அங்கிருந்து ஓடிச் சென்று விட்டனர். அங்ஙனம் ஓடிச் சென்றுவிட்ட அவர்கள், நேரே தத்தை அந்தப்புரத்திற்குள்ளே போய் மறைந்து கொண்டனர். ‘மானனீகையின் அழகுக் கவர்ச்சியினால் தன்வசமிழந்து ஓடி வந்திருக்கிறான் உதயணன்’ என்பதை அவன் நிலையிலிருந்து புரிந்து கொண்டாளாகையினால், மானனீகையை வாசவதத்தை ஒர் அறைக்குள் தள்ளி மறைந்திருக்கும்படி செய்து விட்டாள்.

மானனீகையை மீண்டும் உதயணன் கண்டு விடாதபடி செய்துவிட வேண்டும் என்பது அவள் கருத்து. ‘மானனீகையின் அழகால் அரசன் என்ன ஆவானோ?’ என்ற பயம் அவளுக்கு உண்டாயிற்று. பூஞ்சோலையில் தான் திடுமென்று சென்று நின்றதும் யாவரும் ஓடி விட்டதனால் ஏமாற்றமடைந்த உதயணன், ‘மானனீகையை இனி எப்படிக் காணுவது?’ என்று கலங்கினான். ‘உடனே தத்தையையும் பதுமையையும் அழைத்துக் கேட்டால் என்ன?’ என்று தோன்றியது அவனுக்கு. அவ்வாறே செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அவனும் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றான். சென்று அரண்மனையை அடைந்தவுடன் குற்றேவல் மகளிராகிய பணிப் பெண்களை அழைத்து, “அந்தப் புரத்திற்குச் சென்று பதுமையை உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள்! தத்தையின் அந்தப்புரம் போய் அவளையும் அழைத்து வாருங்கள்!” என்றான். அவன் மனவுணர்வுகள் கட்டுக் கடங்காத ஆவலில் இருந்தன. உதயணன் கூப்பிட்டனுப்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் பணிப் பெண்கள், தத்தையும் பதுமையும் முன்வரப் பின் தொடர்ந்து அவனிடம் அவர்களை அழைத்து வந்தனர். பதுமை, தத்தை இருவரும் அவனை வணங்கித் தங்களை அப்போது அழைத்தனுப்பிய காரணம் யாதென்று இனிய மொழிகளாலே கேட்டனர்.