வெற்றி முழக்கம்/67. மானனீகை மயக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

67. மானனீகை மயக்கம்

ன் முன்வந்து நின்ற வாசவதத்தையையும் பதுமையையும் நோக்கி, “உங்களோடு சற்றுமுன் பந்தாடிய தோழிப் பெண்கள் எல்லாரையும் ஒருவர்கூட விட்டுப் போகாமல் இப்போதே இங்கே அழைத்து வாருங்கள்” என்று உதயணன் கூறினான். அதைக் கேட்ட பதுமையும் தத்தையும் தத்தம் தோழிமார்களை அழைத்து வருமாறு மீண்டும் அருகிலிருந்த பணிப் பெண்களையே அனுப்பினர். அவர்கள் சென்று மானனீகையைத் தவிர இரண்டு தேவி மார்க்கும் சொந்தமான எல்லாத் தோழிப் பெண்களையும் கூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினர். அவர்கள் யாவரும் வந்தவுடன் உதயணன் தன் கோப்பெருந்தேவியர்களாகிய பதுமையையும் தத்தையையும் நோக்கி, “இதோ நிற்கும் உங்கள் தோழியர்களை ஒவ்வொருவராகச் சுற்றம், குலம், பேர், ஊர் முதலிய விவரங்களோடு எனக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அவர்களும் அவ்வாறே அறிமுகம் செய்தனர். ‘மானனீகை வராததை உதயணன் கண்டுபிடித்து விடுவானோ?’ என்ற நடுக்கம் தத்தையை உள்ளுறப் பயங்கொள்ளச் செய்திருந்தது. எல்லாரையும் அறிமுகப்படுத்தி முடிந்தபின், “ஆம்! அது சரிதான்! உங்கள் தோழியரில் ஒரே ஒரு பெண்ணை மட்டும் நீங்கள் அழைத்துவராமல் மறைப்பதற்குக் காரணம் என்ன?” என்று வாசவதத்தை மேலும் நடுங்குமாறு ஒரு கேள்வியை வினாவினான் அவன். உதயணன், மானனீகை வராமல் இருந்ததைத்தான் அவ்வாறு கேட்கிறான் என்பதை அனுமானித்துக்கொண்டாள் தத்தை. அவனுக்கு மானனீகையின் மேலே அவ்வளவு பற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டு அவளுக்குப் பொறாமையும் சினமுமே ஏற்பட்டன.

“இங்கு வராமல் இருக்கும் அந்தப் பெண்ணிடம் உங்களுக்கு ஏதாவது பேச வேண்டுமானால் அவளைத் தனியாக அழைத்துப் பேசிக் கொள்வதுதானே? அதற்காக இவ்வாறு எங்கள் யாவரையும் கூட்டம் கூட்டி அதைச் சொல்வானேன்?” என்று தனது ஆத்திரத்தைப் புலப்படுத்தும் குரலில் பேசினாள் தத்தை. அவள் பொறாமையினாலேயே அவ்வாறு பேசுகின்றாள் என்பதை உணர்ந்துகொண்ட உதயணன் தன் காதல் மயக்கத்தை அவளறியாதபடி மறைத்துச் சாதுரியமாக வேறு ஒரு செய்தியைக் கூறினான். “தத்தை! அந்தப் பெண்ணை நான் காணக் கருதுவதில் தவறான நோக்கம் ஏதேனும் இருக்குமோ என்று நீ சந்தேகம் கொள்ள வேண்டாம். தோற்று இறந்துபோன என் பகைவனாகிய ஆருணியைப் பற்றிய சில முக்கியமான அரசியல் செய்திகளை அந்தப் பெண் அறிவாள் என்று நான் கேள்விப் பட்டேன். அதற்காகவே நான் அவளைக் காண வேண்டும்” என்று ஒரு பொய்யைக் கூறி அவள் சினத்தை மாற்றினான் உதயணன். இதைக் கேட்டதும் இது மெய் என்றே நம்பிய வாசவதத்தை உடனே ஒரு பணிப் பெண்ணைக் கூப்பிட்டு மானனீகை மறைந்திருக்கும் இடத்தைக் கூறி அவளை அழைத்து வருமாறு சொல்லி அனுப்பினாள்.

உதயணன் மானனீகையை அழைப்பது ஆருணியைப் பற்றி விசாரிப்பதற்கே என்று தெரிந்து கொண்டதால் தத்தை, பதுமையையும் தோழிமார்களையும் அழைத்துக்கொண்டு அந்தப்புரம் சென்றுவிட்டாள். இதனால் மானனீகையை உதயணன் தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பணிப்பெண் மானனீகையை அழைத்துக்கொண்டு வந்து அவன் முன்பு நிறுத்தினாள். உதயணன் பணிப் பெண்ணுக்குச் சைகை செய்யவே அவளும் ஒதுங்கிச் சென்றாள். செதுக்கி வைத்த பொற்பாவைபோல அழகெல்லாம் ஒன்று திரண்ட உருவமாய் மிரள மிரள விழித்துக் கொண்டு அவன் முன்னே நின்றாள் மானனீகை. உதயணன் காதல் மயக்கம் பிறந்து மிளிரும் கண்களுடனே அவளை ஏறிட்டுப் பார்த்தான். மானனீகை முதலில் அச்சமும் நாணமும் கொண்டு ஒல்கி ஒடுங்கி நின்றாலும், உதயணன் தன்னை ஏறிட்டுப் பார்த்ததும் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு அவன் பாதங்களைக் குனிந்து வணங்கினாள். அவள் வணங்கும் போது ஒசிந்த சின்னஞ்சிறு மின்னல் இடையையே நோக்கும் படி மோக வெறியிலாழ்ந்திருந்தன அவன் கண்கள். அவள் வணங்கி எழுந்ததும், தன் ஆசையைச் சிறிது அடக்கிக் கொண்டு நடிப்புக்காக ஆருணியைப் பற்றி அவளறிந்த விவரங்களைக் கூறுமாறு கேட்டான் உதயணன். “ஆருணியைப் பற்றிய சில மறைவான செய்திகள் உனக்குத் தெரியும் என்று கேள்விப் பட்டேன்! அதை நீ கூறுவதற்கு முன் உன்னைப் பற்றிய விவரங்களையும் எனக்குக் கூறு” என்று அவன் கேட்கவும், அவள் ஏதோ மறுமொழி சொல்லத் தொடங்கினாள்.

அவளது அந்தக் குரல் அமுதமழை பொழிந்ததேபோல உதயணன் செவிகளில் நுழைந்தது. “அரசே! கோசலத்து மன்னனின் கோப்பெருந் தேவியாகிய சுந்தரி என்பவளுக்குச் சேடியாக இருந்தவள் யான். பாஞ்சால ராசனாகிய ஆருணி, கோசல நாட்டை வென்றபோது என்னையும் இன்னும் பல பெண்களையும் சிறைப்பிடித்து இங்கே கோசாம்பி நகரத்துக்குக் கொணர்ந்தான். இங்கே என்னைக் கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாக (அலங்காரஞ் செய்பவளாக) நியமித்திருந்தான். இப்போது ஆருணியை வென்று அவன் நாட்டை நீங்கள் கைப்பற்றி விட்டதனால் நாங்கள் அரண்மனையில் உங்கள் அந்தப் புரத்திற்கு உரிமை மகளிராய் இருக்கின்றோம். என் வரலாறு இதுதான். தாங்கள் கேள்விப் பட்டதுபோல ஆருணியைப் பற்றி எனக்கு வேறு ஒன்றும் தெரியாது” என்று சிரித்துக் கொண்டே விடை கூறினாள்.

மானனீகை தன் சொந்த வரலாற்றைப் பற்றிக் கூறிய போது நிறுத்தி நிறுத்திக் கூறிய விதத்திலிருந்து, அதில் அவள் எதையோ மறைக்க முயல்வதுபோலத் தென்பட்டது உதயணனுக்கு. அவள்மேல் தான் கொண்டுள்ள காதல் ஆர்வத்தை அப்போது உடனடியாக அவளிடம் வெளியிடுவதிற் பயனில்லை' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு உதயணன் அவளைத் தன்னோடு நெருங்கிப் பழகச் செய்வதற்கு ஏற்ற பதவி ஒன்றில் நியமிக்கக் கருதினான். அவ்வாறு நியமித்துவிட்டால் மானனீகை தன்னோடு பன்முறை பழகித் தன் உள்ளத்தை உணர்ந்து அன்பு கொள்ள வழிபிறக்கும் என்று அவன் நம்பினான். “அப்படியானால் இன்று முதல் நீயே வாசவதத்தைக்கும் வண்ணமகளாய் இருந்து பணிபுரிய வேண்டும். உன்னுடைய அலங்காரத் திறமை எல்லாம் வெளிப்படுமாறு அவளை நீ அழகு செய்க” என்று மானனீகையிடம் உதயணன் கூறினான்.

மானனீகையும் உடனே தத்தைக்கு வண்ணமகளாக இருப்பதற்குத் தனக்குப் பூரண சம்மதம் என்று கூறிச் சென்றாள். வாசவதத்தையின் வண்ணமகளாக நியமிக்கப் பெற்ற பின்பு, நாள் தவறாமல் தத்தையை நன்கு அலங்காரஞ் செய்து உதயணன் காணும்படி செய்து வந்தாள் மானனீகை. சித்திரம் எழுதுபவர்கள் கண்டாலும் வெட்கமடையுமாறு அவ்வளவு திறமையுடன் தத்தையை மானனீகை அணி செய்து அனுப்புவாள். ஆனால், உதயணன் தத்தையின் அழகைக் கண்டு இரசிப்பதற்குப் பதிலாக, மானனீகையின் காதல் மயக்கத்தில் சிக்கிச் சிதைந்து தவித்துக் கொண்டிருந்தான். தனக்கும் மானனீகைக்கும் இடையே வளர வேண்டிய காதலை வளர்ப்பதற்காகத் தத்தையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அவ்வளவிற்குத் துணிந்து விட்டான் அவன். மானனீகையின் மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த மோகம், அவ்வாறு முற்றிக் கனியத் தொடங்கிவிட்டது. மானனீகை, தத்தையின் நெற்றியில் வாசனைக் குழம்புகளால் பலவகை அழகான திலகங்களைத் தீட்டி அனுப்பியிருப்பாள். ‘மானனீகைக்கு யவன மொழி நன்கு தெரியும்’ என்பதனை அறிந்து கொண்டிருந்த உதயணன் தனக்கு அவள்பால் ஏற்பட்டுள்ள காதலை, வாசதத்தையின் நெற்றியிலிருக்கும் திலகங்களை அழித்துவிட்டு அந்த இடத்தில் எழுதி அனுப்புவான். ஒரு பாவமும் அறியாத வெள்ளை மனத்தினளான வாசவதத்தை, ‘மானனீகை எழுதியனுப்பிய திலகங்களில் ஏதோ குற்றம் இருப்பதனால் கணவன் அவற்றை அழித்து மீண்டும் எழுதுகிறான்’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் வாசவதத்தையின் முகத்தை உதயணனும் மானனீகையும் தங்களிருவரைத் தவிர வேறு எவருமே அரியாத யவன மொழியில், காதல் கடிதம் எழுதும் ஓலையாகவே பயன் படுத்திக்கொண்டு வந்தனர். முதல் முதலாகத் தத்தையை அலங்கரித்து உதயணனிடம் அனுப்பியிருந்த மானனீகை, தத்தை திரும்பி வந்ததும் அவள் முகத்தில் தான் எழுதியிருந்த திலகங்களுக்கும் அலங்காரங்களுக்கும் பதிலாக யவன மொழியில் ஏதோ சுருக்கமாக எழுதப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள்.

தத்தை, மானனீகையிடம், “மானனீகை! நீ எழுதிய திலகங்களில் தவறுகள் நிறைந்திருந்ததாகச் சொல்லி என் கணவர் இவ்வாறு திருத்தி எழுதினார். இதை உன்னிடமும் காட்டச் சொன்னார்” என்றாள், மனத்தில் சூதறியாதவளாக. மானனீகை வியந்தாள். ‘உதயணன் தன்னைக் காதலிக்கிறான்’ என்பதை அறிந்து மானனீகை மனம் பூரித்துக் களிப்பு அடைந்தாள். எனினும், ‘தத்தையைக் கருவியாக வைத்துக் கொண்டு தாங்கள் யவன மொழியில் அவ்வாறு தங்களது உள்ளங்களைத் திறந்து காட்டிக் கொள்கிறோம்’ என்றெண்ணும்போதே அச்சமும் நாணமும் அவளை வருத்தித் தயக்கம் கொள்ளுமாறு செய்திருந்தன. எனவே, மறுநாள் வாசவதத்தைக்கு அலங்காரம் செய்தபோது தான் அவனுக்கு எழுதிய பதிலில், ‘என் மீது அன்பு பூண்ட தேவரீர் எழுதியனுப்பிய திருமுகத்தைக் கண்டேன். இத்தகையதொரு சூழ்ச்சிமுறையால் வாசவதத்தையை இதற்குப் பயன்படுத்திக் கொள்வது எனக்கு மிக்க பயத்தை அளிக்கிறது. பேதை மீது இவ்வளவு மிகுந்த அன்பு தங்களுக்கு வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். என் போலப் பெண்ணாகப் பிறந்த ஒருத்திக்கு, இது நடுக்கத்தை உண்டாக்குவதாக இருக்கிறது. தத்தைக்குத் துரோகமாக அமையக்கூடிய இதனை, அறமுறைக்கு மாறாக நான் செய்ய விரும்பவில்லைய என்று எழுதி அவளை உதயணனிடம் அனுப்பினாள்.

மானணிகையின் மறுமொழியுடனே தத்தையைக் கண்ட உதயணன், அதைப் படித்து வெந்த புண்ணில் வேல் எறிந்தது போலக் கலங்கினான். மானனீகை தன் கருத்துக்கு இசையாதவள்போல அஞ்சி எழுதியிருந்த சொற்கள் அவனை வருத்தின. உடனே, இந்த அலங்காரத்தில் பிழைகள் மலிந்திருக்கின்றன. வேறு நான் செயகிறேன் பார் என்று தத்தையிடம் கூறி, அவள் அலங்காரத்தைக் குலைத்து, ‘இன்றைக்குள் உன்னைச் சந்தித்து அளவளாவ முடியாமற் போகுமானால் நான் இறந்துபோவது உறுதி மறுமொழி எதிர்பார்க்கிறேன்’ என்று புதிதாக மானனீகைக்கு எழுதி, அதை உடனே சென்று மானனீகையிடம் காட்டுமாறு தத்தையை அனுப்பினான். உடனே சற்றைக்கெல்லாம் தத்தை அதை மானனீகையிடம் சென்று காட்ட அவள் உதயணன் பிடிவாதத்திற்கு அஞ்சி மறுக்க முடியாமல் தத்தைக்கு வேறு அலங்காரம் செய்பவள் போல், ‘இன்றிரவு கூத்தப் பள்ளியிலிருக்கும் குச்சரக் குடிகையில் காத்திருக்கவும். அங்கு வந்து சந்திப்பேன்’ என்று மறுமொழி எழுதி அவளை உதயணனிடம் அனுப்பினாள்.

வாசவதத்தை திரும்பவும் வரக்கண்ட உதயணன் மனம்மகிழ்ந்து அவளை அருகிற்கொண்டு மானனீகை தனக்கு எழுதியிருப்பதைப் படித்துணர்ந்து மகிழ்ந்தான். மானனீகை சந்திப்பதற்குச் சம்மதித்து, இடமும் குறித்து அனுப்பியிருந்தது அவனை உவகைக் கடலுள் மூழ்கச் செய்தது. ‘தத்தை! இந்த அலங்காரத்தில் ஒரு பிழையும் இல்லை. இது நன்றாக இருக்கிறது. மானனீகையை நான் பாராட்டியதாகக் கூறு’ என்று சொல்லித் தத்தையை அனுப்பி விட்டான் அவன். பகல் கழிந்து இரவு எப்போது வரப் போகிறது என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்துத் துடி துடித்தது அவன் உள்ளம். இரவு வந்தது. மானனீகை வாசவதத்தையின் அந்தப்புரத்திலிருந்து மறைவாக வெளியேறித் தான் குறிப்பிட்டிருந்த கூத்தப்பள்ளியில் குச்சரக் குடிகையுள் சென்று இருந்தாள்.

உதயணன் வரவை எண்ணி, நேரம் கழிந்து கொண்டிருந்தது அவளுக்கு. உதயணன் தான் கூத்தப்பள்ளியில் மானணிகையைச் சந்திக்கச் செல்வது பதுமை, தத்தை இருவருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இருவரையும் ஒரு தந்திரமான வழியினால் ஏமாற்றினான். வாசவதத்தையிடத்தில் தான் அன்றிரவு பதுமையின் அந்தப்புரத்தில் தங்கப் போவதாகவும், பதுமையிடத்தில் தான் அன்றிரவு வாசவதத்தையின் அந்தப்புரத்தில் தங்கப் போவதாகவும் தனித்தனியே கூறி இருவரையும் ஒருங்கே ஏமாற்றி விட்டுக் கூத்தப்பள்ளியில் மானனீகையைக் காணப் புறப்பட்டான். தான், பதுமை-தத்தை இருவரையுமே ஏமாற்றிவிட்டதாக அவன் எண்ணம். ஆனால் அன்று காலையில் மானனீகையும் அவனுமாகத் தன்னைப் பலமுறை அலங்கரித்து ஒருவர்பால் ஒருவர் அனுப்பியதாலும் வேறு சில நினைவுகளினாலும் மனத்திடையே மானனீகை, உதயணன் உறவைப்பற்றி ஐயம் கொண்டு சிந்திப்பதற்குக் காரணமாக இருந்ததாலும் தத்தை உண்மையறிந்து வருமாறு காஞ்சனமாலை என்னும் தோழியை உதயணன் அறியாமல் அவன் பின்னே அனுப்பியிருந்தாள்.

உதயணன் இரவில் எவரும் அறியாமல் கூத்தப் பள்ளியின் உட்புறம் புகுந்தபோது காஞ்சனமாலையும் அவன் பின்னால் உட்புகுந்து ஒருபுறமாக ஒளிந்துகொண்டு ‘என்ன நடக்கிறது?’ என்று கவனிக்கலானாள். கூத்தப்பள்ளியின் இடையே அமைந்திருந்த குச்சரக் குடிகையில் நுழைந்து மானனீகையைச் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தான் உதயணன். மானனீகையின் அழகையும் அவள்மேல் தனக்கு எற்பட்ட அளப்பரிய காதலையும் பாராட்டி அவளது மனம் நெகிழுமாறு பேசினான் உதயணன். மானனீகை அவன் புகழுரைகளைக் கேட்டுத் தலைகுனிந்தாள். உதயணன் ஆர்வத்தோடு அவள் கைகளைப் பற்றினான். மானனீகை அடுத்த விநாடி அவன் அணைப்பிலே சிக்கிக் கொடியெனத் துவண்டாள். மகிழ்ச்சி மிகுதியில் வசமிழந்தனர் அவர்கள். வசமிழந்த அந்த நிலையே நீடித்தது.

வெகு நேரம் கழித்தபின் உதயணன், ‘வாசவதத்தையின் முகம் தங்களுக்கு எவ்வாறு திருமுகம் எழுதுவதற்குப் பயன்பட்டது?’ என்பதைச் சிரித்துக்கொண்டே மானனீகையிடம் விளையாட்டாகக் கூறினான். அதற்குப் பதிலாக மானனீகையும் சிரித்துக்கொண்டே சில கூறினாள். இறுதியாக, இரவு நெடுநேரம் ஆகியிருக்கவே இருவரும் பிரியவேண்டிய போது நெருங்குவதை அறிந்தனர். ‘நாள்தோறும் தன்னை அதே இடத்தில் வந்து அன்று போலவே சந்திக்க வேண்டும்’ என்று அவளை வேண்டிக் கொண்டு தன் சிறு விரலில் அணிந்து கொண்டிருந்த மோதிரத்தை அவள் கரத்து விரலில் அணிவித்து மகிழ்ந்தான் உதயணன். இதுவரை ஒளிந்து இருந்து கொண்டே இந்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் கண்டு கொண்டிருந்த காஞ்சனமாலை, இப்போது மெல்ல அங்கிருந்து வெளியேறிச் சென்றாள். அவள் தத்தையின் அந்தப்புரத்திற்கு உடனே சென்று, நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அவளிடம் கூறத் தொடங்கிய அதே நேரத்தில், இங்கே கூத்தப்பள்ளியிலிருந்து மானனீகையும் உதயணனும் பிரிய மனமின்றியும் இன்ப நினைவுகளோடும் பிரிந்து வெளியேறினர்.