வெற்றி முழக்கம்/68. உண்மை வெளிப்பட்டது

விக்கிமூலம் இலிருந்து
68. உண்மை வெளிப்பட்டது

றுநாள் வைகறை நேரத்தில் உதயணன் சிறிதும் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ‘பொழுது புலர்ந்ததும், தான் காஞ்சனமாலை மூலமாகக் கேள்விப்பட்ட உதயணன் - மானனீகை உறவைப்பற்றி அவனிடமே சாமர்த்தியமாக விசாரிக்க வேண்டும்’ என்று எண்ணியவாறே மனவேதனையுடனே அன்றைய அந்த இரவை உறங்காமலே கழித்தாள் தத்தை. ‘உதயணன்-மானனீகை ஆகிய இருவரும் தனக்கு அலங்காரம் செய்வது என்ற பேரில் தன்னை எந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்?’ என்பது பற்றிக் காஞ்சனமாலை கூறியவையும், அவர்கள் கூத்தப் பள்ளியில் அளவளாவிச் சரசமாடியதாகக் கேள்விப்பட்டதும் தத்தையின் உள்ளத்தை அணுஅணுவாகச் சிதைத்து வருத்தின. ‘பொழுது புலரட்டும்! உதயணனிடம் சாதுரியத்துடன் பேசி உண்மையை வரவழைத்து விடலாம்’ என்று விடிவதற்குக் காத்திருந்தாள் அவள்.

உதயணன் மானனீகையைக் கூத்துப்பள்ளியில் சந்தித்துப் பிரிந்தபின் அன்றிரவு தத்தையையோ, பதுமையையோ காண்பதற்குச் செல்லாது நேரே தன் சயன அறைக்குச் சென்று உறங்கிவிட்டான். பொழுது புலரும் தருணத்தில் அவன் எழுந்தபோது, வாசவதத்தை தன்னைக் காண்பதற்காக வந்து தன் சயன அறைவாயிலில் காத்திருப்பதை அறிந்தான். அவ்வளவு அருங்காலையில் அவள் தன்னைத் தேடிவர நேர்ந்தமைக்குக் காரணம் என்ன என்றெண்ணியபோது, உதயணனுக்குத் திகைப்பு ஏற்பட்டது. கண்கள் சிவந்து கலங்கிய முகத்துடனே வந்து நின்ற அவளை அணுகி, என்னவென்று அன்போடும் மிகுந்த ஆதரவோடும் கேட்டான் அவன். “அரசே! நேற்றிரவு நான் விந்தையானதொரு கனவைக் கண்டேன்; அதைக் கேட்டருள வேண்டும்” என்றாள் தத்தை. “அது என்ன கனவென்று எனக்கும் தான் சொல்லேன்” என்று கேட்டான் உதயணன். “நேற்று இரவில் மனத்தாலும் உங்களைப் பிரிய விரும்பாத என்னைப் பிரிந்து நீங்கள் கூத்தப்பள்ளிக்குச் சென்று அங்கே வேறொரு பெண்ணுடனே சரசமாடியதாகவும், என் முகத்தில் மாறிமாறி எழுதிய வசனங்களைச் சொல்லி அவளோடு சிரித்ததாகவும், அவளும் நீங்களும் பிரியும்போது நீங்கள் ஓர் மோதிரத்தை அவளுக்கே அணிவிரித்ததாகவும் கனவு கண்டேன் அரசே!” என்றாள் வாசவதத்தை. இவ்வாறு கூறிவிட்டு உதயணனின் முகபாவத்தைத் தன் பார்வையாலே ஊடுருவினாள் அவள். அவன் கைச்சுட்டுவிரலில் மோதிரம் இல்லாமல் விரல் மூளியாயிருப்பதையும் கண்களின் நோக்கிலேயே கண்டுபிடித்துவிட்டாள் தத்தை.

உதயணன் தத்தையின் கனவைக் கேட்டுத்திடுக்கிட்டான். தான் மானனீகையைச் சந்தித்தது அவளுக்குத் தெரிந்துவிட்டதோ என்று பயம் தோன்றியது அவனுக்கு. ஆயினும், அந்த இக்கட்டான நிலையிலும், தன்னைச் சமாளித்துக்கொண்டு, பதில்கூற அவனால் முடிந்தது. “தத்தை! நீ சொல்லுகிறாயே அது போன்ற அநுபவத்தைக் கனவில்கூட நான் நினைத்ததில்லையே! வீணாக ஏதேதோ எண்ணிப் பயந்து கொண்டிருக்கிறாய். கலக்கமடையாதே! உனது உள்ளத்திலேயே நான் இடைவிடாமல் வசிக்கும் போது அங்கிருந்து வேறு ஒருவரை நாடிச்செல்வது என்பது எவ்வாறு சாத்தியம்? உன்னைப்போல் கற்புநெறியில் ஒழுகும் பெண்டிர் இப்படிச் சந்தேகமாக நினைப்பதும் தகுமோ?” என்று ஒருபாவமும் அறியாதவன்போல அவளை நோக்கிக் குழைந்து கூறினான் அவன். இவ்வாறு அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் தனக்குள் சிரித்துக் கொண்டாள் வாசவதத்தை.

“ஏதோ கனவிற் கண்டதை மற்றவர்களிடம் கூறினால் தீமை நிகழாதென்று எண்ணிக் கூறினேன். வேறு எதுவும் நான் பிழையாக எண்ணிக் கொள்ளவில்லை. அன்றியும் என் மனத்திலுள்ளவற்றை உங்களிடமன்றி வேறு யாரிடம் நான் கூறுவேன்?” என்று அவனுக்குப் பதில் கூறிவிட்டு, வஞ்சகம் பொருந்திய அவன் செயலை எண்ணி எண்ணி வருந்தும் மனத்தினளாய் அவள் அங்கிருந்தும் அகன்றாள். ‘வாசவதத்தை உண்மையாகவே இப்படி ஒரு கனவுதான் கண்டிருக்கிறாளே அன்றி, வேறு எதுவும் நிகழ்ந்ததை அவள் அறியமாட்டாள்! கனவினால் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பயத்தையும் சந்தேகத்தையும்கூட நம்முடைய மறுமொழியால் நாம் தெளிவு செய்துவிட்டோம். இனி நமக்கும் மானனீகைக்கும் குறுக்கே நிற்க எவருமில்லை’ என்று நினைத்துக் கொண்டான் உதயணன்.

தன் எண்ணத்தையும் சூழ்ச்சியையும் வெளியாக்கும் படியான ஒரு திட்டத்தை வாசவதத்தை போட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு எப்படித் தெரியப் போகின்றது? அன்றும் ‘பகல் நேரம் எப்போது கழியப் போகின்றது? இரவு எப்போது வரும்?’ என்றெண்ணி மானனீகையைச் சந்திக்கும் இன்ப நினைவோடு இருந்தான் அவன். காலையில் உதயணன் சயன அறைக்கு வந்து, அவனிடம் தன் கனவைக் கூறுபவள் போலக் கூறி, அவன் நெஞ்சை ஆழம் பார்த்துவிட்டுப் போன வாசவதத்தை, தன் அந்தப் புரத்திற்குச் சென்றதும், முதல் காரியமாக மானனீகையை வரவழைத்து அவள் எங்கும் வெளியே செல்லாதபடி காவலில் வைத்துவிட்டாள். உதயணனின் சிறு விரல் மோதிரம் மானனீகையின் கையில் இருந்ததையும் அவள் கவனித்துக் கொண்டாள்.

பகற்பொழுது கழிந்து இரவுப்பொழுது வந்தது. வாசவதத்தை, மானனீகையைக் காத்துக் கொண்டிருந்த காவலர்களை மிகவும் கவனத்தோடு காக்குமாறு எச்சரித்துவிட்டுக் கூத்தப் பள்ளிக்குத் தானே புறப்பட்டுச் சென்று, மானனீகை உதயணனுக்காக முதல் நாளிரவில் எந்த இடத்தில் காத்திருந்தாளோ அதே இடத்தில் தானே இருளில் மறைந்து நின்று கொண்டாள். ‘மானனீகை வந்து காத்திருப்பாளே’ என்று இரவில் யாரும் அறியாதபடி புறப்பட்டுக் கூத்தப்பள்ளியைச் சேர்ந்த குச்சரக் குடிகைக்கு வந்தான் உதயணன். மானனீகைதான் இருளிடையே மறைந்து நிற்கின்றாள் என்றெண்ணிக் கொண்ட அவன், ‘மானனிகை!’ என்று அன்பொழுக அழைத்துக்கொண்டே அவளைத் தழுவ வந்தான். அங்கு நின்ற தத்தை பேசாமல், மெளனமாக இருந்துவிட்டாள். தழுவ வந்த கைகளை மட்டும் தன்னைத் தழுவ விடாமல் விலக்கினாள் வாசவதத்தை. தழுவவிடாமல் தன் கைகளை விலக்கியதைக் கண்டு, ‘மானனீகை நம்மோடு ஊடுகிறாள் போலும்’ என்றெண்ணிக் கொண்டான் உதயணன். எனவே, அவளது ஊடலை நீக்க வேண்டும் என்று கருதி, “இந்த அரசு முழுவதும் எனக்கு வேண்டும் என்று நீ கேட்டாலும் இதை உனக்கு உடனே அளித்து விடுவேனே மானனீகை உன் சினத்தை என்னால் எவ்வாறு தாங்க முடியும்? கோபம் தணிவாயாக மானனீகாய்!” என அவளை நோக்கிக் கூறியவாறே உதயணன், அவள் கால்களைப் பற்றினான். அவள் உடனே கோபத்தோடு தன் கால்களை அவன் பிடியிலிருந்து உதறிக் கொண்டு ஒதுங்கிச் சென்றாள். அந்த நிலையிலும், ‘அவள் மானனீகை இல்லை, வாசவதத்தைதான்’ என்பதை உணராத உதயணன், “மானனிகாய்! ஒரு புதுச் செய்தியைக் கேட்டாயா? நேற்றிரவு நாமிருவரும் இங்கே சந்தித்துப் பேசிய நிகழ்ச்சிகளை எல்லாம் வாசவதத்தை இன்று காலை என்னிடம் வந்து, தான் அவ்வாறு ஒரு கனவு கண்டதாகக் கூறினாள். பாவம்! அவளுடைய பேதமையைப் பார்த்தாயா? வாசவதத்தை சூதுவாதில்லாதவள். ‘என் மனத்திலும் அத்தகைய நினைவு இல்லை’ என்று நான் கூறியவுடனே அதை நம்பிக் கேட்டுக் கொண்டு பேசாமல் போய்விட்டாள் அவள்!” எனக் கூறினான். தான் கூறிய அதனாலாவது அவள் ஊடல் தணிந்துவிடும் என்றெண்ணிக் கொண்டு அவளை நெருங்கினான் உதயணன்.

இருளில் அவள் கரங்கள் அவன் பிடியிற் சிக்கின. ஆனால், வாசவதத்தை கைகளை விலக்கிக்கொண்டு, “நான் மானனீகை இல்லை; வாசவதத்தை! இதோ என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு அவன் முன் ஒரு விநாடி நின்றாள். மறுவிநாடி அங்கிருந்து பாய்ந்து ஓடிவிட்டாள். வெளியே அவளுக்காகக் காத்திருந்த காஞ்சனமாலையோடு வேகமாக அந்தப்புரம் சென்றுவிட்டாள் அவள். உதயணன் திடுக்கிட்டான். திகைப்பு அவனை அப்படியே சிலைபோல நிற்கும்படி செய்துவிட்டது. அடுத்தகணம் தான் இனி அங்கே நிற்பதும் அபாயம் எனக் கருதி, அவனும் ஓடிச்சென்று பக்கத்தில் இருந்த வேறு ஓர் மண்டபத்தில் ஒளிந்து கொண்டான். அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. ‘தத்தைக்கு இந்த உண்மை தெரிந்ததன் விளைவு என்ன ஆகுமோ?’ என்று அவன் மனம் பதைபதைப்பு அடைந்தது. வெகு நேரம் அந்த மண்டபத்திலேயே இருந்து சிந்தித்தபின், அவன் தன் சயனஅறைக்குச் சென்றான். மறுநாள் பொழுது விடிந்தது. வாசவதத்தை துயிலெழுந்ததும் முதல் வேலையாக மானனீகையைக் காவல் வைத்திருந்த இடத்திற்குள் சென்று தன் ஆத்திரத்தை அவள் மேல் காட்டுவது என்று புறப்பட்டாள். மானனீகையைக் காவல் வைத்திருந்த இடத்திற்குச் சென்றதும், “அடி நன்றி கெட்டவளே! இருந்திருந்தும் எனக்கே துரோகம் செய்வதற்குத் துணிந்துவிட்டாயா? கூத்தப்பள்ளியில் நள்ளிரவில் நாடகமா ஆடுகின்றாய்? அரசனோடு அங்கே போய் ஏது செய்தாயடி? என்ன சொல்லி அவரை மயக்கினாய்?” என்று ஆத்திரத்தோடு உரத்த குரலில் வினவினாள். வாசவதத்தை சில பணிப் பெண்களை அழைத்து, மானனீகையை அங்கிருந்து சித்திரத் தூண் ஒன்றில் கட்டி வைக்கும்படி கட்டளையிட்டாள். உடனே மானனீகை பலவந்தமாகத் தூணுடனே சேர்த்து வைத்துக் கட்டப்பட்டாள்.

‘அவளை எந்த வகையிலும் அவமானப்படுத்திவிட வேண்டும்’ என்ற குரோத உணர்ச்சி வாசவதத்தையின் மனத்தில் கொதித்து எழுந்திருந்தது. உதயணனை மயக்கக் காரணமாக இருந்த மானனீகையின் அழகைச் சிதைத்து அழித்துவிட வேண்டும் என்று தோன்றியது தத்தைக்கு. பக்கத்தில் இருந்த பணிப் பெண்ணை அழைத்து, “இந்தத் துரோகியின் தலை மயிரைக் கத்தரித்து இவள் அழகை நிர்மூலமாகச் செய்தால் ஒழிய, என் மனம் திருப்தியுறாது” என்று கூறி, அந்தப் பணிப்பெண்ணை உடனே ஒரு கத்தரிகை எடுத்து வருமாறு அனுப்பினாள். அப்போது தற்செயலாக அந்தப் பக்கம் வந்த வயந்தகன், கத்தரிகை எடுத்து வரச்சொல்லி அவள் பணிப்பெண்ணை அனுப்புவதையும் மானனீகை தூணிலே கட்டப்பட்டிருப்பதையும் கண்டுவிட்டான். ‘என்ன நேருமோ’ என்ற அச்சத்தோடு வேகமாகத் தான் கண்ட அக்காட்சிகளை உதயணனிடம் போய்க் கூறுவதற்குப் புறப்பட்டான் அவன்.