வெற்றி முழக்கம்/69. மானனீகை பிழைத்தாள்

விக்கிமூலம் இலிருந்து

69. மானனீகை பிழைத்தாள்

யந்தகன் தன்னை நோக்கிப் பரபரப்போடு ஓடி வருவதைக் கண்ட உதயணன் திடுக்கிட்டான். என்னவோ ஏதோ என்று மனம் பதை பதைத்தது அவனுக்கு ஏற்கெனவே முதல் நாள் இரவு கூத்தப்பள்ளியில் தத்தையிடமே தான் அகப்பட்டுக் கொண்டு ஏமாற நேர்ந்த சம்பவம் வேறு அவன் மனத்தைக் கலக்கியிருந்தது. தனக்கும் மானனீகைக்கும் இடையிலிருந்த இரகசியக் காதலைத் தத்தை புரிந்து கொண்ட சாமர்த்தியமான விதத்தை நினைத்தபோதே அவன் மனம் துணுக்குற்றது. “தத்தை மானனீகையைத் தூணில் கட்டி வைத்து அவள் கூந்தலை அறுத்து அலங்கோலம் செய்வதற்கு முயன்று கொண்டிருக்கிறாள்” என்று ஓடிவந்த வயந்தகன் பரபரப்போடு கூறியதும், உதயணன் அளவற்ற வேதனை அடைந்தான். “வயந்தகா! மானனீகையின் ஒரு மயிரைக் கத்தரிகையால் தீண்டினாலும் அப்புறம் என் உயிர் உடலில் நிற்காது! இது உறுதி. எப்படியாவது இதை நீ தடுக்க வேண்டும்” என்றான் உதயணன். அதைக் கேட்ட வயந்தகன், “திடுமென்று வாசவதத்தைக்கு மானனீகையின் மேல் இவ்வளவு சினம் ஏற்படுவானேன்? அப்படி என்னதான் நிகழ்ந்தது?” என்று உதயணனை நோக்கி வினாவினான். “எல்லாம் நீ பந்து விளையாட்டைப் பற்றி வருணித்து என்னை அதைக் காணும்படி அனுப்பியதனால் வந்த வினைதான்” என்றான் உதயணன். அவன் கோபம் எதிரே நிற்கும் வயந்தகன் மேலே திரும்பிவிட்டதுபோலத் தோன்றியது. பூடகமாகவும் சினத்தோடும் உதயணன் இவ்வாறு தன்னை நோக்கிக் கூறியதைக் கேட்ட வயந்தகன், ‘என்ன நடந்திருக்க வேண்டும்?’ என்பதைத் தனக்குள் அனுமானித்துக் கொண்டான். தானும் சினங்கொண்டவன்போல உதயணனுக்கு மறுமொழி கூறலானான் அவன்.

“பெண்களும் தேவியரும் பந்துகளை விளையாடுகின்ற அழகைக் கண்டு வரவேண்டும் என்றுதான் நான் கூறினேனே யொழிய, ‘மானனீகையைக் கண்டு மயங்கி அவளிடத்தில் கரந்து பழகும் காதல் ஒழுக்கத்தை மேற்கொள்க’ என்று நான் உன்னிடம் சொல்லவில்லையே! கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையின் சினத்தைத் தணிக்கும் தகுதியுடையவர் இங்கு யார் இருக்கிறார்கள்? இயலும் காரியமா என்ன இது? ஆனாலும் என்னால் ஒன்று செய்ய முடியும்! எப்படியாவது ஓர் ஆறு ஏழு நாழிகைவரை மானனீகையின் கூந்தலை வாசவதத்தை அறுத்துவிடாதபடி நிறுத்திச் சாமர்த்தியமாகத் தடுத்துவிட முடியும் அதற்குமேல் அவள் கோபத்திற்கு முன்னால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. எனவே, நீதான் அந்த ஆறு ஏழு நாழிகைக்குள் வேறு யாரையாவது அனுப்பவேண்டும்” என்று உதயணனிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் வயந்தகன்.

உதயணனிடமிருந்து புறப்பட்ட அவன் நேரே மானனீகையை வாசவதத்தை கட்டி வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தான். அவன் அந்த இடத்திற்குள் நுழைந்ததுமே அங்கிருந்த வாசவதத்தையின் தோழி ஒருத்தி, “இப்போது இங்கே வரவேண்டாம் தேவியார் சினம் மிக்க நிலையில் இருக்கிறார்” என்னும் பொருள் புலப்படும் படி கையசைத்துச் சைகை செய்து அவனைத் தடுத்தாள். உடனே வயந்தகன் அவள் கூறியதைக் கேட்டு மிகவும் பயந்து நடுங்கினவன்போல நடித்து, “இவ்வாறு கட்டி வைத்துத் தண்டிக்கும்படியாக அவள் செய்த குற்றம் என்ன?” என்று மானனீகையைச் சுட்டிக்காட்டி அந்தத் தோழியிடம் மெல்லிய குரலில் கேட்டான். அவனுடைய இந்தக் கேள்வியை வாசவதத்தையே செவியுற்று விட்டதனால் பெண் புலிபோலச் சீறிக்கொண்டே அவனுக்கு மறுமொழி கூறுவதற்காகத் திரும்பினாள். வயந்தகன் வாசவதத்தையை அன்றுவரை அவ்வளவு சினத்துடன் கண்டதே இல்லை. “அரசன் என்னும் மதிப்பிற்குரிய பெயரோடு உலாவும் துர்த்தனாகிய கள்வனைக் கேட்டால் அல்லவா இவள் இழைத்த குற்றம் என்னவென்பது தெரியும்?” சுடச்சுட இப்படி வயந்தகனுக்குப் பதில் கூறினாள் தத்தை. அதன் பின்னர் தன் பக்கத்தில் இருந்த தோழியை அருகில் அழைத்து அவள் கையில் ஒரு கூர்மையான கத்தரிகையைக் கொடுத்து மானனீகையின் கூந்தலைச் சிதைக்குமாறு வேண்டினாள்.

அந்தச் சந்தர்ப்பத்தையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய வயந்தகன், “இவள் கூந்தலை எவ்வாறு கத்தரிகையால் விரைவில் அறுக்கலாம் என்பதை நான் நன்கு அறிவேன். இவள் இழைத்த குற்றம் உண்டாயின் நானே இவள் கூந்தலை அரிகின்றேன். கத்தரிகையை என்னிடம் அளியுங்கள்” என்று கூறித் தானே வலுவில் முன் வந்து அந்தக் கொடும் பணியை ஏற்பவன் போல் ஏற்றுக்கொண்டான். வாசவதத்தையும் தோழியை நோக்கிக் கத்தரிகையை வயந்தகனிடம் கொடுக்குமாறு ஏவினாள். தோழியும் கத்தரிகையைப் பணிவுடனே அவனிடம் நீட்டினாள். தோழியின் கையிலிருந்து கத்தரிகையை வாங்கிக்கொண்ட வயந்தகன் அப்படியே பேச்சை வளர்த்து வளர்த்து நேரத்தைக் கழிக்க முற்பட்டான்.

உதயணனுக்கு அவன் கொடுத்துவிட்டு வந்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது ஒன்றே அப்போதிருந்த அவனது நோக்கம். “தேவீ! கூந்தலைக் கத்தரிக்கும் கத்தரிகைகளின் வகைகள் பல, அவற்றின் இலட்சணங்களும் பல. சிலவற்றினாலே நன்மை தீமைகள் விளைவதும் உண்டு” என்று வயந்தகன் தன் பேச்சைத் தொடங்கினான். ஒன்றன்பின் ஒன்றாக மானனீகையின் கூந்தலை அரிவதற்காக வாசவதத்தை அளித்த அக்கத்தரிகைகளைக் குற்றம் கற்பித்து விலக்கிக்கொண்டே பொழுதைக் கழித்தான் வயந்தகன். இங்கே நிலை இவ்வாறிருக்க அங்கே உதயணன் மனம் பதறி, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தான்.

‘ஆறேழு நாழிகைகள் வயந்தகன் மானனீகையைக் காப்பாற்றி விடுவான்; அதன் ஒன்றன்பின்பு அவள் கதி..?’ நினைத்துப் பார்க்கவும் அஞ்சியது உதயணன் உள்ளம். இந்தக் துயரம் சூழ்ந்த நிலைமையில் எதிர்பாராத பேருதவி அவனுக்குக் கிட்டியது. புறநகரின் எல்லையில் உஞ்சைநகரம் சென்ற யூகி முதலியோர் திரும்பி வந்து தங்கியிருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் நகருக்குள் வந்துவிடுவார்கள் என்றும் ஒரு காவலன் உதயணனிடம் ஓடோடியும் வந்து கூறினான். உடனே மனம் களித்த உதயணன், யூகியை அப்போதே உடனடியாக அழைத்து வருமாறு அந்தக் காவலனையே அனுப்பினான். ‘அந்தத் துயர நிலையை யூகியின் வரவால், அவனைக் கொண்டு எப்படியும் போக்கிவிடலாம்’ என்று முற்றிலும் நம்பினான் உதயணன். சென்ற காவலன் யூகியை விரைவில் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.

யூகியைப் பெரு மதிப்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்க வேண்டிய உதயணன், அப்போது தன்னைச் சூழ்ந்திருந்த தொல்லையால் அவைகளை மறந்து அவசர அவசரமாக நடந்த நிகழ்ச்சிகள் யவற்றையும் அவனிடம் சுருங்கக் கூறி, எப்படியாவது மானனீகையை அந்த அவமானத்திலிருந்து விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டான். ஆனால் யூகியோ, “உதயண! இந்த விஷயமாய் வாசவதத்தையுடன் சமாதானமாகப் பேசி மானனீகையை விடுவிக்க இயலாதபடி உன் குற்றமே இதில் பெரும்பகுதியாக இருக்கிறது! எனவே மானனீகையை விடுக்குமாறு தத்தையிடத்தில் நான் போய்க் கேட்பதற்கு இயலாது. வயந்தகனைப் போலவே நானும் ஆறு ஏழு நாழிகைகள் மானனீகை அவமானப்படாமல் இன்னும் காத்துவிட எப்படியேனும் முயல்கிறேன். அதுதான் என்னாலும் முடியக் கூடியது. அதற்குள் நீ வேறு ஏதாவது செய்ய இயலுமானால் செய்” என்று கூறிவிட்டு வாசவதத்தையின் அந்தப் புரம் நோக்கிச் சென்றான்.

வாசவதத்தையின் அந்தப்புரத்தினுள் நுழைவதற்கு முன்னால், கண்டவர் அருவருக்கத்தக்க தோற்றமுடைய ஒரு பித்தனைப்போல யூகி மாறுவேடங் கொண்டான். உடலெல்லாம் வெண்ணிறச் சாம்பலைப் பூசிக்கொண்டு, கிழிந்த ஆடைகளை அணிந்து, மிரள மிரள விழிக்கும் கண்களுடனே தத்தை, மானனீகை, வயந்தகன் ஆகியவர்கள் இருக்கும் இடத்தில் யூகி தோன்றினான். ‘திடும்’ என்று அந்தப் பித்தனை அங்கே கண்டதும் வாசவதத்தையின் தோழிகள் பக்கத்திற்கொருவராகச் சிதறி அச்சத்தோடு ஓடினர். வாசவதத்தைக்கும் அங்கே தோன்றிய அந்தப் பித்தனது தோற்றம் அச்சத்தை உண்டாக்கினாலும் ஒருபுறம் அடக்கமுடியாத சிரிப்பு தோன்றி வெளிப்பட்டது. அந்நிலையில் மானனீகையின்மேல் இருந்த தன் கவனத்தை முற்றிலும் பெயர்த்துப் பித்தன்மேல் செலுத்தித் தன் இதழ்களில் நகை திகழ மேன்மேலும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வாசவதத்தை. இந்தச் சமயத்தில் மானனீகைக்கு அருகே கையில் கத்தரிகையோடு நின்று கொண்டிருந்த வயந்தகன் அதை ஒரு புறமாக மறைத்து வைத்துவிட்டு, ‘நடந்த செய்திகளை உதயணனிடம் போய் உடனே கூறுமாறு’ அங்கிருந்த தோழிப் பெண் ஒருத்தியை அனுப்பினான். அங்கே யூகியை அனுப்பிவிட்டு மேலே என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த உதயணனுக்குப் பதுமாபதியின் நினைவு வந்தது. ‘அவளை அழைத்து, அவள் மூலமாகத் தத்தையைச் சினந்தணித்து, மானனீகையை விடுதலை செய்யும்படி ஏதாவது முயல முடியாதா?’ என்று தோன்றியது அவனுக்கு. உடனே பதுமையை அழைத்து வரச் சொல்லி அவசரமாக ஒரு பணிப்பெண்ணை அனுப்பினான் உதயணன்.

பதுமாபதி உடனே உதயணனிடம் ஓடிவந்தாள். உதயணன் அவளை அன்போடு தழுவிக்கொண்டு வரவேற்றான். அன்பும் இனிமையும் இழைத்த குரலில், “அடிச்சியை இப்போது விரைவாக அழைத்த காரணம் என்ன?” என்று கேட்டாள் பதுமை. உதயணன் அதற்கு மறுமொழி கூறாமல் அமைதியாக அவளையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பதுமை மீண்டும் அதே பழைய கேள்வியைக் கேட்டாள். உதயணன் இப்போதுதான் மெல்ல வாயைத் திறந்தான். “பதுமை! இப்போது வாசவதத்தையிடம் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதை நானே அவளிடம் சென்று நிறைவேற்றிக்கொள்ள இயலாதவனாக இருக்கின்றேன். அவளிடம் போக எனக்குத் தயக்கம் உண்டாகிறது. எனக்குத் தெய்வீகக் காதலி நீ! என் பொருட்டு நீ தத்தையிடம் சென்று இதைச் செய்துதான் ஆகவேண்டும்” என்று வேண்டிக் கொண்டு அவளிடம் விவரங்களைச் சூசகமாகக் கூறினான்.

பதுமை அவன் வேண்டுகோளை மறுக்க முடியாமல், வாசவதத்தையைக் காண்பதற்குச் சென்றாள். தத்தை பதுமையைப் புன்முறுவலோடு வரவேற்றாள். பதுமை, தத்தையை ஓர் ஒதுக்குப் புறமாக அழைத்துச் சென்று, “இவ்வாறு இந்த இளம்பெண்ணைக் கட்டிவைத்துத் துன்புறுத்துவதனால் நமக்கென்ன ஊதியம் கிடைத்து விடப்போகின்றது? கணவனே நெறிதவறிப் பிழை செய்து விட்டாலும் பெண்களாகப் பிறந்த நாம் பொறுத்துப் போதலே நமக்குப் பெருமை! இழிந்தவர்கள் செய்யும் குற்றத்தைப் பெருந்தகைமை உடையவர்கள் ஒரு பொருட்டாகக் கொள்வார்களா? என் பொருட்டு நீ இந்தப் பெண்ணைத் துன்புறுத்துகின்ற செயலை இவ்வளவில் விட்டு விட வேண்டும்” என்று அவளை அன்புடனே வேண்டிக் கொண்டாள். பதுமையின் அந்த வேண்டுகோளால் மானனீகை தற்காலிகமாகப் பிழைத்தாள். அவசரப்பட்டுப் பதறி உடனே மானனீகையைத் தண்டித்துவிடாமல், சற்றே நிதானமாக யோசித்தாள் வாசவதத்தை.