வெற்றி முழக்கம்/72. விரிசிகை திருமணம்

விக்கிமூலம் இலிருந்து

72. விரிசிகை திருமணம்

விரிசிகையின் தந்தை, விரிசிகையை இலாவாண நகரிலிருந்து அனுப்புகின்ற நாளைக் குறித்து உதயணனுக்குச் செய்தி அனுப்பினார். உதயணன் அரண்மனையிலிருந்து விரிசிகையை அழைத்து வருவதற்கான சிவிகையையும் காவலர்களையும் சில பணிப் பெண்களையும் உடனே இலாவாண மலைக்கு அனுப்பினான். விரிசிகையைக் காண வேண்டுமென்ற ஆவல் நகர மக்களுக்கு மிகுதியாக இருத்தலை அறிந்து உதயணன் சில ஆணைகளை இட்டிருந்தான். ‘விரிசிகையைப் புற நகரத்திலுள்ள சோலை வரைக்கும் சிவிகையில் அழைத்து வரவேண்டும்’ என்றும் ‘அங்கிருந்து வழி நடையாகவே, நகர மக்கள் யாவரும் காணும்படி அவளை வீதிகளின் வழியாக அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும்’ என்றும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன. விரிசிகை நகரத்திற்குள் வருகின்றபோது அந்நகரத்து வீதிகளின் யானை, குதிரை முதலியவற்றின் போக்கு வரவு நீக்கப்பட வேண்டும் என்றும், வீதிகளைத் தூய்மை செய்து நறுமண மலர்களைப் பரப்பி வைக்க வேண்டும் என்றும் ஆணைகள் இடப்பெற்றிருந்தன. விரிசிகையை அழைத்து வருவதற்காக இலாவாணம் சென்றிருந்த அரண்மனைப் பணிப் பெண்கள், காவலர்கள், முதுமக்கள் முதலியோர்க்கும் இந்த ஏற்பாடுகள் முன்கூட்டியே அறிவிக்கப் பெற்றிருந்தன. விரிசிகை வழி நடையாகவே நகர வீதியில் உலா வருவாள் என்ற செய்தி கேட்டு, ‘அவளை எல்லாரும் நன்கு, கண் நிறையக் காணலாம்’ என்னும் ஆசையால் கோசாம்பி நகரின் பக்கத்துச் சிற்றுர், பேரூர்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூடலாயிற்று. உதயணனால் அரண்மனையிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் இலாவாணத்தை அடைந்தனர். விரிசிகை அவர்களோடு புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை முனிவர் முன்கூட்டியே செய்து வைத்திருந்தார். வாழ்க்கையில் அவர் துறவி. பொருள்களின் நிலையாமையையும் அறிந்தவர். உலக மாயையாகிய பாசவலையிலிருந்து விடுபடுவதற்கு முயலும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர். ஆயினும் விரிசிகையின் பிரிவு அவர் மனத்தைத் துறவு நெறியில் மேலும் உறுதிப் படுத்தியது. திடுமென்று அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை! ‘விரிசிகையோடு தாமோ, தம் மனைவியோ, கோசாம்பிக்குச் செல்வதில்லை’ என்ற தீர்மானித்திற்கு வந்தார் அவர். ‘வந்திருக்கும் அரண்மனை மனிதர்களோடும் ஆசிரமத்தைச் சேர்ந்த வேறு சில தவ மகளிர்களுடனும் விரிசிகையை அனுப்பிவிட வேண்டும்’ என்ற உறுதியான எண்ணத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார். துறவு நம்பிக்கை, துறவின்மேல் உறுதியான பற்று என்னும் இவை எல்லாம், ஒரு சிறு பாச உணர்வினால் பாதிக்கப்படுமாயினும் மீண்டும் தொடர்ந்து பலவகையான பாசங்கள் வளர்ந்து கொண்டே போவதற்கே உரிய காரணங்களாகிவிடும். ‘விரிசிகை, உதயணன் திருமணத்தைத் தாம் சென்று கண்டால், தமக்கும் அதே போல உலக வாழ்வில் தம் மகள் மேல் அத்தகையதோர் பாசம் ஏற்பட்டுவிடுமோ?’ என்று அஞ்சினார் மந்தர முனிவர்.


‘விரிசிகையை மணந்துகொள்ள நான் உடன்படுகின்றேன்’ என்று உதயணன் எப்போது கூறினானோ, அப்போதே உலக வாழ்வில் எனக்கு இருந்த ஒரே ஒரு கடைசி பந்தமும் அற்றுப் போனது. ‘இனி நான் தவத் தொடர்பு ஒன்றை மட்டுமே தாங்குவதற்கு உரியவன்’ என்றிவ்வாறாக மந்தர முனிவர் சிந்தித்தார். ‘விரிசிகையுடன்கூட அவரும் அவர் தேவியும் கோசாம்பிக்குச் செல்லவேண்டாம்’ என்று தம்முடைய மனத்திற்குள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பதுபோல அவருக்குத் தோன்றியது! இறுதியில் முனிவருடைய ஆசை தோற்றது! மனம் வென்றது ஆம். முனிவரும் அவருடைய தேவியும் இலாவாண மலையில் தங்கள் ஆசிரமத்திலேயே தங்கிவிட்டனர். அரண்மனையிலிருந்து வந்திருந்தவர்களும் ஆசிரமத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களுமே விரிசிகையை அழைத்துக் கொண்டு கோசாம்பிக்குச் சென்றனர். அங்கிருந்து புறப்படும்போது விரிசிகை பிரிவுச் சுமை பொறுக்கமுடியாமல் அழுதேவிட்டாள். இளமையிலிருந்து அன்றுவரை தாய் தந்தையரைப் பிரியாமல் வளர்ந்துவிட்ட அவளுக்கு, அன்று அங்கிருந்து செல்வது மிகப் பெரிய வேதனையைக் கொடுத்தது.

இயற்கையின் சகல சம்பத்துக்களாலும் செளபாக்கியங்களாலும் நிறைந்து விளங்கும் இலாவாண மலைச்சாரலிலிருக்கும் தந்தையின் அழகிய ஆசிரமத்தை விட்டுச் செல்வதற்கு மனம் கலங்கினாலும், வேறோர் ஆசை அவளைக் கோசாம்பி நகரத்தை நோக்கி அதிவேகமாக அழைத்துக் கொண்டிருந்தது. அந்தக் காதல் ஆசையின் தீராத தாபத்தை அவளால் விலக்க முடியவில்லை. அவள் ஒரு துறவிக்கு மகள்தான். ஆனால் அவளால் எந்தப் பாசங்களையும் துறக்க முடியவில்லை. கண்ணிர்த் திரை கண்களை மறைக்கத் தந்தையையும் தாயையும் வணங்கிவிட்டு, அந்த அழகு மயமான ஆசிரமத்தையும் நீலமணி முடிதரித்தது போல நெடிது விளங்கும் இலாவாண மலையின் சிகரங்களையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தபின், கோசாம்பி நகரப் பயணத்துக்காகச் சிவிகையில் ஏறினாள் விரிசிகை. அவள் உள்ளம் உவந்தது. கண்கள் நீர் சிந்தின. சிவிகை புறப்பட்டது. இலாவாண மலையிலிருந்து புறப்பட்ட விரிசிகை, கோசாம்பியின் புறநகரில் அமைந்திருந்த கோவில் தோட்டம் ஒன்றில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப் பெற்றாள். அரண்மனையைச் சேர்ந்த பணிப்பெண்களும் தவப் பள்ளியைச் சேர்ந்த மகளிரும் விரிசிகையை நகரத்திற்கு உள்ளே அழைத்துக்கொண்டு செல்லப் பெறுவதற்கு முன்பாகவே, தாங்கள் தங்கியிருந்த தோட்டத்திலேயே மங்கல நீராட்டி அலங்கரித்து விடுவதென்று முடிவு செய்தனர். விரிசிகையின் அழகிய கருங்குழலுக்கு நறு நெய்பூசிப் பல வகை வாசனைப் பொருள்களால் நீராட்டினர். நீராட்டி முடிந்த பின்னர், அழகுக்கு அழகு செய்வதேபோல அவளை அணி செய்யத் தொடங்கினார்கள். பலவகை நறுமண மலர்களால் தொடுத்த பூங்கொத்துக்களை அவள் கூந்தலில் அணிந்தனர். சிறந்த உடைகள், அணிகலன்கள் முதலியவற்றைக் கொண்டு விரிசிகையைப் புனையா ஓவியமாகச் செய்தனர். இயற்கை தன் உடலில் ஊட்டியிருந்த வனப்பைத் தவிர, அது காறும் செயற்கை வனப்புக்கு உரிய எந்த அணிகளையும் பயன்படுத்தி அறியாத விரிசிகைக்கு அலங்காரம் செய்த பெண்கள், இயற்கை வனப்போடு செயற்கை வனப்பையும் அவளுக்கு அளித்தனர். விரிசிகையின் அலங்காரம் முடிந்தது. அரண்மனையிலிருந்து அவளை வீதிகளின் வழியே நடத்தி அழைத்துச் செல்வதற்கு வந்தவர்கள் காத்திருந்தனர். புறப்பட வேண்டிய நேரத்தில், அழகான பெரிய செங்குவளை மலர் ஒன்றை, வலக்கையில் பிடித்துக் கொள்க’ என்று கூறி விரிசிகையிடம் கொண்டு வந்து அளித்தாள் ஒரு தோழி. விரிசிகை அந்த மலரை வாங்கி வலக்கையில் பிடித்துக் கொண்டாள். அது அவளுடைய சோபையைப் பன்மடங்கு எடுப்பாக விளங்கச் செய்தது.

தவப்பள்ளியிலிருந்து உடன் வந்திருந்த பெண்கள் அங்கிருந்தே விடை பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்வதற்கு விரும்பினார்கள். நகருக்குள் வருவதற்கு அந்தப் பெண்கள் விரும்பவில்லை. அரண்மனையிலிருந்து விரிசிகையை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தவர்களுக்குள் சாங்கியத்தாயும் இருந்தாள். தவப்பள்ளியிலிருந்து உடன் வந்திருந்த பெண்கள், “சாங்கியத் தாயே! நாங்கள் இங்கிருந்தே விடை பெற்றுக் கொள்கிறோம். விரிசிகையை அரண்மனையில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது, இனி உங்கள் பொறுப்பு” என்று அவளிடம் வேண்டிக்கொண்டனர். விரிசிகையை நோக்கி, “விரிசிகை! உதயணனின் பிற மனைவியர்களாகிய தத்தை, பதுமை, மானனீகை ஆகியோர்களையே இனி நீ உன்னுடைய தாயாராகவும், தமக்கையராகவும் நினைத்துக்கொண்டு அவர்களை மதித்து வாழ வேண்டும். நாங்கள் சென்று வருகிறோம். எங்களை மறந்துவிடாதே!” என்று கூறிவிட்டு வாழ்த்தியபின் ஆசிரமத்திற்குத் திரும்பினர். விரிசிகை அவர்களைக் கைகூப்பி வணங்கிக் கண்களில் நீர்மல்க விடை கொடுத்தாள். அவர்கள் சென்றபின் விரிசிகையை, மக்கள் காணுமாறு வீதிகளின் வழியே நடத்தி அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

கோசாம்பியின் புறநகரத்துச் சோலையிலிருந்து இலாவாணத்திற்குத் திரும்பிச் சென்றவர்கள், விரிசிகையின் தந்தையான மந்தர முனிவரிடமும் தாய் நீலகேசியிடமும் நடந்தவற்றை விவரித்தனர். அதே ஆசிரமத்தில் அதே மலைச்சாரலில் விரிசிகை யில்லாமல் வாழ்வது அவருடைய மனத்தை வேதனையால் அரித்தது. பாசவுணர்வாகவும் உருப்பெற்று அரித்தது. திடீரென்று மந்தர முனிவருக்கு மனத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை! “நீலகேசி” என்று தன் தேவியை அழைத்தார். நீலகேசி அவருக்கு முன்வந்தாள். “இனி என்னால் இதே ஆசிரமத்தில் விரிசிகையை மறந்து எனது கடுமையான தவத்தின் நியமங்களை மேற்கொண்டு பொறுமையாக வாழ முடியாது போலிருக்கிறது. நான் வேறிடத்திற்குப் போகிறேன். உன்னையும் பிரிந்து தனிமையான கடுந்தவத்தில் ஈடுபடப் போகிறேன் எனக்கு விடைகொடு” என்றார். அவள் ஏதேதோ சொல்லி மறுத்துக் கூற முயன்றாள். ஆனால், மந்தரமுனிவர் அவளுடைய மறுப்பை இலட்சியம் செய்யாமலே புறப்பட்டுவிட்டார். ஆசிரமத்து நிகழ்ச்சி இவ்வாறிருக்கக் கோசாம்பி நகரின் நிகழ்ச்சிகளை மேலே தொடர்ந்து கவனிப்போம்.

கையிலே செங்குவளை மலரை ஏந்தித் தெய்வமகள் ஒருத்தி ஊர்ந்து வருவதுபோலக் கோசாம்பி நகரத்து வீதியில் மென்னடை பயின்று, தன்னை அழைத்துச் செல்லும் அரசபோக ஆரவாரங்களுடனும் பரிவாரத்தினருடனும் சென்றாள் விரிசிகை. அவளுக்குப்பின் ஆசிரமத்தில் அவள் பழகிப் பயின்ற குயில், மயில், புறா, கிளி, மான், பாவைகள் முதலியவற்றையும் கொண்டு சென்றனர். விரிசிகை இவ்வாறு வீதியில் நடந்து அரண்மனைக்குச் சென்றபோது அவளைக் கண்ட கோசாம்பி நகரத்து மக்கள் பலவாறு பாராட்டி வியந்தனர். “மந்தர முனிவர் செய்த வேள்வியில் தோன்றியவளோ இந்தத் தெய்வ கன்னிகை?” என்று வியந்து கூறினர் சிலர். “கையிலே செங்குவளை மலரைப் பற்றிச் செல்லும் திருமகளின் அவதாரமோ?” என்று வியந்தனர் வேறு பலர். “உதயணன் இத்துணை நாள் இவளைப் பிரிந்து எவ்வாறு இங்கே ஆற்றியிருக்க முடிந்தது?” என்றெண்ணிக் கொண்டனர் மற்றும் சிலர். “இவளுக்கு நிகரான அழகுடையவளை உலகிலேயே காண்பது அரிது! ‘நானே சிறந்த அழகி’ என்று இறுமாந்திருக்கும் எந்தப் பெண்ணும் இவளைக் கண்டால், உறுதியாகத் தலைகுனிந்து நாணிப்போவது நிச்சயம்! இயற்கையிலேயே அழகின் பிம்பமாக விளங்கும் இவளுக்கு அலங்காரம் செய்திருக்கிறார்களே! அவர்கள் எவ்வளவு பெரிய பேதைகள்!” என்று இவ்வாறு அவளைக் கண்டவர்கள் தத்தமக்குத் தோன்றியபடியெல்லாம் பேசிக் கொண்டு பொழுது போக்கினர். விரிசிகை அரண்மனையை அடைந்தாள்.

அரண்மனை வாயிலில் உதயணன், யூகி, வயந்தகன் முதலியவர்களும் வாசவதத்தை, பதுமாபதி, மானனீகை முதலியவர்களும் அவளை வரவேற்பதற்குக் காத்திருந்தனர். விரிசிகை வந்த உடனேயே தத்தை முதலிய பெண்கள் அவளை அன்போடு தழுவித் தங்கள் அந்தப் புரத்திற்கு அழைத்துச் சென்றனர். கள்ளங்கபடில்லாத அந்தப் பெண், மிக விரைவிலேயே தன் அன்பால் தத்தை, பதுமை முதலியவர்களுடைய மனத்தில் நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றுவிட்டாள். தத்தை முதலிய மூன்று தேவியர்களுமே பெற்ற தாயார்போல இருந்து விரிசிகையின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தனர். உதயணனுடைய வாழ்வு, நான்கு அன்பு நிறைந்த காதல் மகளிரொடு இன்ப நிறைவாக வாய்த்தது. கோசாம்பி நகரத்து மக்களும் அமைதியான நல்லாட்சியுற்றனர். கோசாம்பி நகரத்து அரண்மனையிலே நிறைந்த நல்வாழ்வின் போக அமைதி பரவித் திகழ்ந்தது.