வெற்றி முழக்கம்/73. ஆசை பிறந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

73. ஆசை பிறந்தது

விரிசிகை-உதயணன் திருமணம் நிகழ்ந்தபின், கோசாம்பி நகரத்து அரண்மனையின் வாழ்க்கை இன்பமும் அமைதியுமாகப் பல ஆண்டுகள் கழிந்து கொண்டிருந்தன. இன்பமும் அமைதியுமாகக் கழிந்த அந்தப் பல வருடங்களுக்கு நுடுவே நிகழ்ந்த எல்லா நிகழ்ச்சிகளும் கதைப்போக்கிற்கு அவசியமில்லை யாயினும் சில இன்றியமையாத நிகழ்ச்சிகளை அவசியம் குறிப்பாக அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உதயணனின் தலைசிறந்த நண்பர்களாகிய யூகி, வயந்தகன், இடவகன் முதலியவர்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. முதலாவதாகக் குறிப்பிட வேண்டிய செய்தி இது. பல ஆண்டுகள் தானும் தன் மனைவியுமாகக் கோசாம்பி நகரத்திலேயே தங்கியிருந்த யூகிக்கு, மீண்டும் தான் அவனைக் கண்டு அளவளாவ விரும்புவதாகவும், அவன் உடனே வரவேண்டும் என்றும் பிரச்சோதனனிடமிருந்து அழைப்பு வந்தது. உதயணனின் அனுமதி பெற்றுத் தன் மனைவியைக் கோசாம்பியிலேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் உஞ்சை நகருக்குச் சென்றான் யூகி. இவ்வாறு சென்று திரும்பிய பின்னரும், இடையிடையே கோசாம்பியிலும் உஞ்சையிலுமாக யூகி மாறிமாறி இருந்தான். மற்ற நண்பர்கள் தத்தம் மனைவிமாரோடு கோசாம்பியிலேயே உதயணனுக்குத் துணையாகத் தங்கியிருந்தனர். தானே முன்பு இலாவாணத்துக்கு அனுப்பி இருந்த உருமண்ணுவாவையும் இப்போது தன்னிடம் வரவழைத்து வைத்துக் கொண்டிருந்தான் உதயணன். எனவே உருமண்ணுவாவும் தன் மனைவி இராசனையுடனே கோசாம்பி நகரத்தில் வந்து தங்கியிருந்தான். இந்த நிலையில்தான் உதயணனின் வாழ்க்கையில் ஐந்தாவது பகுதியாக அவன் மகன் நரவாண தத்தனின் தோற்றமும் வளர்ச்சியும் தொடங்குகிறது. இவ்வாறு இருக்குங்கால், உதயணனுடைய அரசவைக்கு ஒருநாள், ‘சொந்தப் புதல்வர்கள் இல்லாமையால் தங்கள் உடைமை எவரைச் சேரும்?’ என்பதை அறிந்து கொள்ளும் நோக்கும் அவாவும் உடையதான வழக்கு ஒன்றை இரண்டு வாணிகர்கள் விசாரணைக்குக் கொணர்ந்தனர். அந்த வாழ்க்கை விசாரித்துத் தீர்ப்புக் கூறுமாறு உருமண்ணுவாவை உதயணன் நியமித்தான். உருமண்ணுவா அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினான்.

வழக்கு விவரம் இதுதான். ஒரு தாய் வயிற்றுப் பிறந்த வாணிக மக்கள் மூவர். மூவரும் உடன் பிறந்தவர்களாகையினால் குடும்பத்தின் உடைமைகள் மூவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கப் பெற்றிருந்தன. மூவரும் தனித்தனியே பிரிந்து தத்தம் இல்லற வாழ்க்கையையும் வாணிகத்தையும் செவ்வனே நிகழ்த்தி வந்தனர். மூவருடைய தொழிலும் வாணிகமே! ஆனாலும் மூவரும் அதை மேற்கொண்டிருந்த முறையிலே வேற்றுமை இருந்தது. ஒருவன் அரும்பெரும் பொருள்களைக் கப்பலிலே ஏற்றிச் சென்று பிறநாடுகளில் விற்கும் கடல் வாணிகத்தை மேற்கொண்டிருந்தான். மற்றொருவன் உள்ளூரிலேயே பெரிய கடை ஒன்று வைத்து அதன் மூலமாக வாணிகம் செய்தான். மூன்றாமவன், கிடைப்பதற்கு அரிய பண்டங்களை எளிய முறையில் சேகரித்துக் காலம் வரும்வரை மறைத்துவைத்து, அப் பண்டங்கள் விலையேறிய காலத்தில் அவற்றை விற்று மிகுந்த ஊதியம் சம்பாதித்து வந்தான்.

இவர்கள் வாழ்க்கை இவ்வாறு கழிந்துவருங் காலத்தில், கடல் வாணிகம் செய்து, வந்தவனாகிய முதலாமவன், கடலில் கப்பல் கவிழ்ந்து இறந்து போனான். கடலில் எழுந்த கோரப் புயலும் கொந்தளிப்பும் அவன் உயிரைச் சூறை கொண்டுவிட்டன. இதை அறிந்த மற்ற சகோதரர்கள் இரு வரும் அவன் பிணத்தை அது ஒதுக்கப்பட்டிருந்த தீவிலிருந்து கண்டெடுத்து அதற்கு உரிய பிதிர் கடன்களைச் செய்தனர். செய்துவிட்டுத் தங்கள் தாயிடம் சென்று எல்லா விவரத்தையும் கூறி, “இறந்துபோன அவனுக்குப் பிதிர்கடன்கள் யாவற்றையும் தாங்களே செய்திருப்பதனால் அவனுடைய உடைமையைத் தாங்களே இரு பகுதியாக்கிப் பிரித்து எடுத்துக்கொள்ளுவதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு” என்றனர். தாயோ புதல்வனை இழந்த பெருந்துயரத்தால், கண்ணிர் சிந்திப் பேதுற்று இருந்தனளே ஒழிய, அவர்களுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இறந்து போனவனின் உடைமை யாருக்கு உரியது என்பதை அறிந்து கொள்வதற்கே அந்த வாணிக சகோதரர்கள், உதயணனுடைய அவைக்களத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள்.

மேலே கூறப்பட்டவாறு வழக்கின் முழு விவரத்தையும் அவர்கள் வாய்மொழியாகவே உதயணன் அறிந்து கொண்ட பின்,உருமண்ணுவா அவர்களைச் சில கேள்விகள் கேட்டான்.

“இறந்து போனவனுக்கு மனைவி இருக்கின்றாள் அல்லவா?”

“ஆம், இருக்கின்றாள்!”

“இது பற்றி அவள் கருத்து என்ன?”

“இப்போது அவள் கருவுற்ற நிலையில் இருக்கின்றாள்” என்று அறிந்து வந்து கூறினர் அவர்கள்.

“கருவுற்றிருக்கும் அவளுக்கு ஆண் மகன் பிறந்தாலோ, உடமையைப் பற்றி நீங்கள் கனவிலும் உங்களுக்குரியதாக எண்ண முடியாது. பெண் குழந்தை பிறந்தால், உடமை உங்கள் இருவருக்குமே சரி சமாகப் பிரிக்கப்பட்டுச் சேரும். இக் காரணங்களால், அவள் பிள்ளைப்பேறு எய்துகின்ற வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்று உருமண்ணுவா இந்த வழக்குக்குத் தீர்ப்புக் கூறினான்.

இந்த வழக்கிற்குத் தீர்ப்புக் கூறும்படி உருமண்ணுவாவை நியமித்திருந்தாலும், அவையில் இவ் வழக்கு நிகழும்போது தானும் அருகே இருந்தான் உதயணன். வழக்கு முடிந்தபோது உதயணனின் கண்கள் கலங்கியிருந்தன. ‘அவை கலையலாம்’ என்று கட்டளை பிறப்பித்துவிட்டுத்தான் மட்டும் சற்றுநேரம் அங்கேயே அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் உதயணன். அன்று அவையில் நிகழ்ந்து முடிந்த அந்த வழக்கு அவன் உள்ளத்தை உருக்கியிருந்தது. ‘மக்களைப் பெறாத வாழ்வும் ஒரு வாழ்வா! வாழ்க்கையையும் உடைமையையும் எவராவது கண்டவர்கள் பறித்துக் கொண்டு, கையினால் எள்ளும் நீரும் வாரி இறைக்கும் இழிந்த வாழ்வல்லவா அது?’ என்று இதே வினாக்கள், அவன் உள்ளத்தில் திரும்பத் திரும்பச் சுழன்று கொண்டிருந்தன. ஆம்! உதயணனுக்கும் அன்றுவரை மக்கட்பேறு இல்லை. தன் வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாத பின்னத்தன்மையை, இந்த அம்சத்தின் குறைவு உண்டாக்கி விட்டதாக அவன் எண்ணினான். உதயணனின் உள்ளம் இதற்காக ஏங்கியது. ஏக்கம் என்பது ஆசையின் அடிப்படை. அது மட்டுமன்று. விருப்பத்தின் வேதனை. அங்கே உதயணன் உள்ளத்தில் அந்த வேதனை பிறந்துவிட்டது. ‘தனக்குப்பின் கோசாம்பியின் அரியணையை அலங்கரிக்க ஏற்ற மகனொருவன் தனக்கில்லையே’ என்ற பெருங்குறையை அவன் உணர்ந்து கொண்டான்.

‘மக்கட்பேறு இல்லையே? தனக்குப்பின் தன் மரபும் தன்னால் ஆளப்படும் நாடும் என்ன ஆவது?’ என்ற கவலை, ஏக்கம், வேதனை ஆகியவைகளினால் உதயணன் எந்த ஒரு துயரத்தை அடைந்தானோ, அதே துயரத்திலாழ்ந்து அங்கே அந்தப்புரத்தில் வாசவதத்தையும் ஏங்கிக் கொண்டிருந்தாள். அன்று காலை எழுந்திருந்தது முதலே இந்தக் கவலை ஏனோ அவளுடைய இதயத்தைப் பற்றி வாட்டிக் கொண்டிருந்தது. தவத்துறையில் சிறந்த துறவிகளின் துறவுச் சாலைக்குச் சென்று, அவர்களை வழிபட்டுவிட்டு வந்தபின் அவர்களுடைய நல்ல ஆசி மொழிகளினால் தனக்கு நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் வாசவதத்தை தனது அந்தப்புரத்து மேல்மாடத்திலே வந்து இருந்தாள். அவள் மேல்மாடத்தில் வந்து அமர்ந்து, கவலைமிக்க நெஞ்சுடன் வானவெளியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் அப்போது அங்கே தென்பட்ட வேறு ஒருகாட்சியும் அவள் மனத்தை ஏக்கமுறச் செய்யும்படி அமைந்திருந்தது.

புறாக்கள் கூட்டம் கூட்டமாகத் தத்தம் குஞ்சுகளுக்கு இரை தேடி எடுத்துவந்து கொண்டிருந்தன. பவழம்போலச் சிவந்த கால்களுடனும் வெண்புகை போன்ற நிறத்துடனும் அந்தப் புறாக்கள் பறந்து வரும் வேகத்விவரத்தையும் தங்கள் தங்கள் குஞ்சுகளுக்கு இரையூட்ட வேண்டிய தாய்மையின் அவசரமும் கலந்திருப்பதுபோலத் தோன்றியது அவளுக்கு! இதயத்தை வகிர்ந்துகொண்டு வெளிவருவதுபோல ஒரு நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது. வாயில் கெளவிய இரையுடனே வந்த அந்தப் புறாக்களிற் சில, மேல்மாடத்தின் அருகே கீழ்ப்புறமிருந்த தோட்டத்திலுள்ள மரங்களில் வந்து அமர்ந்து, தம் வாயிலிருந்த இரையைக் குஞ்சுகளுக்கு ஊட்டின. குஞ்சுகள் தாயின் வாயிலிருந்து தமக்குக் கிடைத்த அந்த இரையை மகிழ்வோடு உண்பதையும், தாய்ப் பறவை அவிவரத்தையும் அநுபவிக்கும் தியாகங் கலந்த இன்பத்தையும் தத்தை கண்டாள்!

தத்தையின் உள்ளம் வெதும்பியது! வாழ்க்கையில் பெண்மையின் அநுபவத்துக்கு உரியனவாகக் கிடைத்து வருகிற உணர்வுகளில் மிகவும் புனிதமானது தாய்மை. ‘அது தனக்கு அன்றுவரை கிடைக்கவே இல்லை’ என எண்ணும் போதே துயரம் தாங்காமல் நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது தத்தைக்கு. அவள் முடிவிலாத துயரச் சிந்தனையில் ஆழ்ந்தாள்.