வெற்றி முழக்கம்/74. வாசவதத்தையின் மயற்கை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

74. வாசவதத்தையின் மயற்கை

த்தை அன்று மாலைவரை ஏக்கம் நிறைந்த எண்ணங்களுக்கு நடுவே தன் பொழுதைக் கழித்தாள். மாலை மயங்கி இருள் படர்ந்து பரவிக் கொண்டிருக்கும் நேரத்விவரத்தையும், உதயணன் அவளுடைய அந்தப்புரத்திற்கு வந்தான். தத்தையைக் கண்டதுமே, அவள் முகத் தோற்றத்திலிருந்தே அவள் உள்ளத்தை ஏதோ ஒரு பெரிய ஏக்கம் அரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானித்துவிட்டான் உதயணன். மெல்ல அவள் அருகில் சென்று அமர்ந்து, பரிவோடு கூந்தலைக் கோதியவாறே வாட்டத்திற்குக் காரணம் என்ன என்பதை வினவினான். தத்தையின் குறிப்பான மறுமொழியிலிருந்து, அன்று அரசவையில் நிகழ்ந்த வழக்கினால் தனக்கு ஏற்பட்ட ஏக்கம் எதுவோ அதுவேதான் அவளுக்கும் அப்போது ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து வியந்தான் உதயணன். தண்ணீர் வேட்கையால் தவிப்பவன், தனக்கு எதிரே குடம் நிறையத் தண்ணீருடனே ஒருவர் வருவதைக் காண்பது போலிருந்தது, உதயணனுக்கும் தத்தைக்கும் ஏற்பட்ட இந்த எண்ண ஒற்றுமை! தங்களுக்கு மக்கட் செல்வம் இல்லாத குறையை மனம் விட்டுப் பேசிக் கொண்டு துயரச் சுமையைக் குறைத்து ஆறுதலடைந்தனர் அவர்கள். ஆறுதல் ஆர்வத்தையும் விளைவித்தது! அதன் பின்பு என்ன? அன்று இரவு கோசாம்பி நகரத்தில் தத்தையின் அந்தப்புரத்தில் மாடத்தின்மேலே காய்ந்த நிலவு வீண் போகவில்லை! இரவு வீண் போகவில்லை!

அந்த இனிய இரவில் உதயணன் ஓர் அழகிய கனவு கண்டான். விரும்பத் தகுந்ததான ஓர் இன்பக் கனவு அது நடுயாமத்து இரவின் கடுமையை விலக்கிக் கொண்டு ஒளிமயமான அழகுடனே தெய்வ நங்கை ஒருத்தி உதயணன் முன் தோன்றினாள். “எங்கள் அரசனாகிய குபேரன் உம்மை அழைத்து வருமாறு என்னை இங்கே அனுப்பினான்” என்று அந்தத் தெய்வீகப் பேரழகு பெண் அவனை நோக்கிக் கூறினாள். “என் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையும் என்னுடன் அங்கே வருவாள்! இதற்குச் சம்மதமானால் நான் உங்கள் அரசனின் அழைப்பை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளுகின்றேன்” என்று உதயணன் அவளுக்குப் பதில் சொன்னான். அந்தத் தெய்வீக நங்கையும் அதற்குச் சம்மதித்து அவனையும் தத்தையையும் தன்னுடன் குபேரனின் நகராகிய அளகாபுரிக்கு அழைத்துக்கொண்டு சென்றாள். அளகாபுரி நகரை அடைந்து குபேரனின் அவைக்குள் உதயணனும் தத்தையும் நுழைந்தபோது அரியணையில் வீற்றிருந்த குபேரன் மிக்க அன்புடனும் பெருமதிப்புடனும் அவர்களை வரவேற்று ஒரு சிங்காதனத்தில் அமரச் செய்தான். பின்பு குபேரனுடைய ஆணையால் அவர்களை அழைத்துச் சென்ற தெய்வீக நங்கை அழகாகவும் ஒளிமயமாகவும் இயற்றப் பட்ட மணிமுடி ஒன்றை உதயணனிடம் அளித்தாள். உதயணன் அதனைத் தனக்களித்த குபேரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நன்றி செலுத்திவிட்டு, அதை வாங்கித் தன் அருகிலிருந்த வாசவதத்தையிடம் அளித்தான். அடுத்து இருவரும் குபேரனிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பிப் புறப்படுவதற்காக எழுந்திருந்தனர். என்ன விந்தை? வாசவதத்தையின் கையிலிருந்த மணிமுடி அப்போது சட்டென்று பிளந்து கண்ணைக் கூசச் செய்யும் ஒளிப் பிழம்பாக மாறி அவள் திருவயிற்றிலே நுழைந்துவிட்டது! கூடியிருந்த யாவரும் இந்த அதிசய நிகழ்ச்சியைக் கண்டனர். வாசவதத்தையோ தன் கையிலிருந்த மணிமுடியைக் காணாமல் திகைத்துப்போய் ஒன்றும் தோன்றாமல் நின்று கொண்டிருந்தாள்!

இவ்வளவில் உதயணன் தன் கனவிலிருந்து விழித்துக் கொண்டுவிட்டான். உடனே தத்தையை எழுப்பி அவளிடம் இந்த அற்புதமான கனவைக் கூறினான். அவளும் இதைக் கேட்டு வியந்தாள். பொழுது புலர்ந்ததும் ஆற்றலிற் சிறந்த முனிவர் ஒருவரிடம் போய், இக் கனவை உரைத்து இதற்குப் பயன் கேட்டான் உதயணன். “குபேரனின் நாடு வெள்ளியங்கிரி முதலிய தேவருலகத்து நாடுகளை எல்லாம் வென்று விளங்கக்கூடிய வெற்றி வீரனாகிய புதல்வன் ஒருவன் விரைவில் உனக்குப் பிறப்பான். இந்தக் கனவின் பயன் இதுவே” என்று அம் முனிவர் பயன் கூறினார். உதயணன் அதைக் கேட்டு மிகவும் மனமகிழ்ந்தான்.

நாள்கள் கழிந்தன. கனவின் பயனை முனிவரிடமிருந்து அறிந்து கொண்டதனால் விளைந்த ஆர்வமும் பெருமையும், தத்தைக்கும் உதயணனுக்கும் வளர்ந்து பெருகிற்று. அந்த ஆர்வ வளர்ச்சியின் விளைவுக்கு ஒர் அறிகுறிபோலத் தத்தை அப்போது கருவுற்றிருந்தாள். கருவுக்குரிய அடையாளங்கள் அவள் உடலில் தெளிவாகப் புலப்பட்டன. உடலில் புதிதாக மின்னும் ஒளி ரேகை யிட்டிருந்தது. கருவுக்குரிய தாய்மை யுணர்வின் பொலிவு அவள் மதிமுகத்தில் இலங்கியது. உதயணன் இச் செய்தி அறிந்து பெருமகிழ்ச்சி கொண்டான். கருக்கொண்ட பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் மயற்கை அடிக்கடி அவளுக்கு ஏற்படத் தொடங்கியது. கருவும் நாளுக்கு நாள் அவள் ஆசையையும் தாய்மைப் பெருக்கையும் போலவே வளர்ந்து முதிர்ந்து வந்தது. இந் நிலையில் ஒரு நாள் இரவில் அரிய கனவு அநுபவம் ஒன்று அவளுக்கு ஏற்பட்டது!

‘விஞ்சையர் உலகிலிருந்து புறப்பட்டு வந்த திறமை மிக்க ஒரு வெள்ளை யானை தன் வயிற்றில் நுழைவதாகவும், பின்பு சிறிது காலம் சென்றபின் அது தன் வயிற்றிலிருந்து வெளித் தோன்றி வெள்ளியங் கிரிக்குப் புறப்பட்டுப்போய் அங்குள்ள கதிரவனை விழுங்குவதாகவும், தொடர்பும் பொருத்தமும் நம்பிக்கையும் ஏற்பட முடியாத அபூர்வக் கனவு ஒன்றை அவள் கண்டாள். மறுநாள் காலையில் துயிலெழுந்ததும் உதயணனிடத்தில் தன் கனவை உரைத்து அதன் உட்பொதிந்த கருத்தை விளக்குமாறு வேண்டிக் கொண்டாள் வாசவதத்தை. “உனக்குப் பிறக்கும் புதல்வன் வலிமையில் சிறந்தவனாக இருப்பான்! தன் வீரத்தாலும் ஆற்றலாலும் தேவருலகம் வரையும் சென்று அங்கும் தனது வெற்றியை நிலைநாட்டி ஆணை செலுத்தக் கூடியவனாக இருப்பான் அவன். இதைத் தான் நீ கண்ட கனவும் குறிப்பிடுகிறது! நான் கண்ட கனவிற்கு முனிவர் என்னிடம் உரைத்த பயனிலும் இதே கருத்தைத்தான் விளக்கினார்!” என்று உதயணன் அவளுக்குக் கனவின் பயனை விளக்கித் திருப்தியுறுமாறு செய்தான். பிறக்கப் போகும் தன் புதல்வனின் வீரப் பராக்கிரமத்தைக் கேட்டு மனம் புளகித்தாள் வாசவதத்தை! தாய்மைக்கே இயற்கையான மனக்களிப்பு அவளுக்கு ஏற்பட்டது. கருப்பமுற்றிருக்கும் காலத்தில் மயற்கையினால் பெண்களுக்கு உண்டாகும் இயற்கையான விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவது ஆடவர்களின் அவசியமான கடமை என்பதை நன்கு அறிந்துணர்ந்திருந்த உதயணன், தத்தைக்கு ஏதாவது விருப்பமுண்டாயின் அதை உடனே தெரிந்து கொண்டு நிறைவேற்ற விரும்பினான். தத்தையின் அருகில் அமர்ந்துகொண்டு அன்போடும் பரிவோடும் அவள் விருப்பத்தைக் குறிப்பாகத் தெரிந்துகொள்ள முயன்றான் உதயணன். கந்தவர்களைப்போல வானத்தில் விரும்புமிடங்களில் எல்லாம் பறந்து சென்று, பல ஆறுகளையும் மலைகளையும் நகரங்களையும் காண வேண்டும் என்ற ஆசை தனக்கு மிகுதியாய் இருப்பதாக வாசவதத்தை அவனிடம் தெரிவித்தாள். ‘அறியாமை கலந்த மயற்கை நிலையில் என்ன கேட்கிறோம், எதனைக் கேட்கிறோம், தான் அப்போது கேட்கின்ற அந்த ஆசை நிறைவேற்ற முடிந்தது தானா? அது நிறைவேறுமா என்றெல்லாம் சிறிதளவும் சிந்திக்காமல் கேட்டு விட்டாளே அவள்’ என்றெண்ணி அதை நிறைவேற்றும் வழியறியாமல் தயங்கினான் அவன்.

அது தன்னுடைய சாதனையின் வரம்பை விஞ்சிய வேண்டுகோளாயிருப்பது அவனுக்குப் புரிந்தது. அவளுடைய இந்த வேண்டுகோளை இப்படி எதிர்பாராத விதமாகக் கேட்டதும் திகைத்து விட்டான் உதயணன். இப்படிக் கேட்டதற்காக வாசவதத்தையின் மேலும் குற்றம் சொல்லி விடுவதற்கில்லை! தனது இந்த விருப்பம் பலிக்குமோ, பலிக்காதோ என்றஞ்சி இதனைத் தானாக வெளிப்படுத்தாமல் இருந்த அவளை, “எது உன் அசையாக இருப்பினும் சரி, அதை நிறைவேற்ற நான் தயங்கமாட்டேன். துணிந்து சொல்” என்று தைரியப்படுத்திக் கேட்டவனே உதயணன்தான். அவனுடைய தைரியத்தின் துரண்டுதலாலும் தனது மயற்கையாலும் அவள் அப்படிக் கேட்டாள். தத்தை வெளியிட்ட அந்த வேண்டுகோளைக் கேட்டதிலிருந்து மலைத்துப் போய்ச் சிந்தனையிலாழ்ந்துவிட்டான் உதயணன். அவளது அபூர்வமான இந்த ஆசையை ‘எந்த வகையில், எப்படிப் பூர்த்தி செய்யலாம்?’ என்றே அவனுக்கு விளங்கவில்லை. இந்த விதமான அந்தரங்க விஷயங்களை அவன் உருமண்ணுவாவோடுதான் கலந்து சிந்திப்பது வழக்கம், நேற்றுவரை கோசாம்பியில் அவனுடனேயே தங்கியிருந்த உருமண்ணுவா, இன்றுதான் ஓர் இன்றியமையாத செயலின் நிமித்தம் இலாவாண நகரத்துக்குச் சென்றிருந்தான். அவன் இருந்தலாவது தத்தையின் இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு ஏதாவது ஒருவழி கூறுமாறு அவனிடம் போய்க் கேட்கலாம். அவனும் அருகில் இல்லாதது உதயணனுக்கு ஒரு கையே இல்லாமற் போனதுபோலச் சோர்வு தருவதாக இருந்தது. வேறு வழியின்றி அவன் தன் அமைச்சர்களில் சிலரை அழைத்துத் ‘தத்தையின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஏதேனும் மார்க்கம் இருக்கிறதா?’ என்பதைப் பற்றிச் சிந்தித்தான். அவர்களையும் இதுபற்றிச் சந்தித்து ஒரு வழி கூறுமாறு வேண்டிக் கொண்டான்.

ஒரு முடிவும் செய்ய இயலாமல் இரண்டொரு நாள்களும் சென்றுவிட்டன. அப்போது அவசர காரியமாக இலாவாண நகரம் சென்றிருந்த உருமண்ணுவா திரும்பி வந்து விட்டான். உருமண்ணுவாவைக் கண்டதுமே தத்தையின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் மனம் திகைக்கும் தன் நிலையையும் அவனிடம் பரபரப்போடு விவரித்தான் உதயணன். உருமண்ணுவா உதயணனுக்கு அப்போது உடனே தேவையான அரிய யோசனை ஒன்றைக் கூறினான். ‘உரு மண்ணுவா வந்தால் தன் கவலை தீரும்படி தனக்கு ஏதாவது வழி கூறித் தத்தையின் ஆசை நிறைவேறுவதற்கு உதவி செய்வான்’ என்று உதயணன் நம்பிக் கொண்டிருந்த நம்பிக்கை பாழாகிவிடவில்லை! அந்த நம்பிக்கை மேலும் ஊக்கமடையும் படியாகவே இருந்தது, உருமண்ணுவா கூறிய யோசனை. உருமண்ணுவாவின் சிறந்த ஞாபகசக்தியும் அறியும் கூர்மையும் அதிலிருந்து உதயணனுக்கு நன்றாக விளங்கியது.