வெற்றி முழக்கம்/76. புதல்வன் பிறந்தான்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

76. புதல்வன் பிறந்தான்

கோசாம்பி நகரத்துக்கு வந்து இளந்தச்சன் உருவத்தோடு அரண்மனை வாயிலில் நுழைந்த பத்திராபதி, முதலில் உருமண்ணுவாவைச் சந்தித்தாள். தச்சுவேலை செய்யக் கூடிய திறமை வாய்ந்த இளம் ஆண்மகனைப் போன்ற தோற்றத்தில் வந்துள்ளவனைக் கண்டு மனமகிழ்ந்த உருமண்ணுவா, உடனே உதயணனிடம் சென்று கூறினான். “அரசே! இப்போது வந்திருக்கும் தச்சுவினை இளைஞன், சிறந்த கலை வல்லான்போல் விளங்குகின்றான். இவனைப் பார்த்ததிலிருந்து நம் விருப்பத்தை இவனால் நிச்சயமாக நிறைவேற்ற முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இவன் இதற்காக எவ்வளவு சன்மானம் கேட்டாலும் நாம் கொடுத்து விடலாம்” என்று கூறிய உருமண்ணுவாவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்ட உதயணன், உடனே அந்தத் தச்சனை அழைத்து வருமாறு பணித்தார். தச்சன் அழைத்து வரப்பட்டான்.

உதயணனும் உருமண்ணுவாவும் வாசவதத்தையின் ஆசையை விவரித்து, அதற்கேற்றபடி ‘பறக்கும் இயந்திரத்தைச் செய்ய இயலுமா?’ என்று தச்சனை வினாவினர். தச்சன் ஒரு மறுப்பும் சொல்லாமல் முகமலர்ச்சியோடு அதற்குச் சம்மதித்தான். அவன் சம்மதித்தவிதமும் அப்போது அவனிடம் தோன்றிய முகபாவமும் உதயணனுக்கு முழு நம்பிக்கையை ஊட்டுவனவாக இருந்தன. இயந்திரப் பொறி செய்வதற்கு ஏற்ற பொருள்களை அளித்து, வேலையை உடனிருந்து மேற்பார்வை செய்யுமாறு உருமண்ணுவாவைக் கேட்டுக் கொண்டான் உதயணன். வேலை தொடங்கி அதிகமான நாள்கள் கழியவில்லை. மிகுந்த திறமையும் சுறுசுறுப்பும் கொண்டு காரியத்தை நடத்தினான் தச்சன். அவர்கள் எதிர்பார்த்த காலத்திற்கு முன்பே இயந்திரம் முற்றுப் பெற்றுவிட்டது. வாசவதத்தை அதில் பறப்பதற்காக ஆசையோடு காத்திருந்தாள். உதயணன் அவளை அழைத்துச் சென்று வானிற் பறப்பதற்குரிய அந்த இயந்திரத்தைக் காண்பித்தான். இயந்திரத்தை வெள்ளோட்டம் விடுகிற பாவனையில் அப்போதே அதில் பறந்து செல்ல விருப்பமுற்றனர் தத்தையும் உதயணனும். மங்கை பங்கனாகச் சிவ பெருமானும் உமாதேவியாரும் ஒருங்கே ஓராசனத்தில் ஏறி அமர்ந்ததைப்போல உதயணனும், வாசவதத்தையும் பறக்கும் இயந்திரத்தில் ஏறியமர்ந்தனர்.

இயந்திரம். புறப்படுகின்ற நேரத்தில் உருமண்ணுவா, உதயணனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான். “அரசே! என் மனைவி, வயந்தகன் மனைவி, இடவகன் மனைவி ஆகியோரும் இப்போது கருவுற்றிருக்கின்றனர். அவர்களுக்கும் தங்கள் தேவியாருக்கு ஏற்பட்டிருப்பது போலவே வானிற்பறந்து பல இடங்களையும் காணவேண்டும் என்ற மயற்கை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. ஆகையால் அவர்களையும் இவ்வியந்திரத்தில் ஏற்றிக்கொண்டு செல்லத் தாங்கள் திருவுளம் பாலிக்கவேண்டும்.”

உருமண்ணுவாவின் இந்த வேண்டுகோளை உதயணன் மறுக்கவில்லை. ஆனால், “இயந்திரம் அவ்வளவு பேர்களைத் தாங்குமோ, தாங்காதோ தெரியவில்லையே?” என்று தச்சனை நோக்கி உதயணன் ஒரு சந்தேகத்தை வெளியிட்டான். “உலகம் முழுவதும் இதில் ஏறினாலும் ஏறட்டுமே! இந்த இயந்திரம் தாங்கும்” என்று சிரித்தவாறே விடையிறுத்தான் தச்சன். தச்சன் இவ்வாறு கூறவும் உதயணன் யாவரையும் ஏறிக்கொள்ளச் சொன்னான். யாவரும் ஏறிக் கொண்டனர். இயந்திரம் புறப்படுவதற்கு இருந்தது. தச்சன், அதைச் செலுத்திக்கொண்டு போகவேண்டிய முறைகளையும், நுணுக்கங்களையும் அப்போது உதயணனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறலானான்.

“இந்த இயந்திரம் வானில் விரைவாகச் செல்லுவதும் மெல்லச் செல்லுவதும் நீங்கள் மனத்தில் எண்ணுகின்ற எண்ணத்தைப் பொறுத்தே இருக்கின்றது. உயரப் பறக்க வேண்டிய இடங்கள் இவை இவை என அறிந்து, அவற்றிற்கு ஏற்றபடி பறக்க வேண்டும். ஆற்றின் கரைகள், தீவுகள் முதலிய இடங்களுக்கு இயந்திரத்தைச் செலுத்தி நீங்கள் அவ்விடங்களில் இறங்கி இளைப்பாறலாம். மற்றைய இடங்களில் இறங்குவது அவ்வளவாக உசிதமில்லை. இயந்திரத்தின் இலக்கண வகைகள் இன்னின்ன நிலையிலுள்ளன என்று பறக்கும்போது முற்றிலும் உணரவேண்டும்.”

தச்சன் கூறிய உரைகளைக் கேட்டுக் கொண்டபின் உதயணன் இயந்திரத்தைத் தானே இயக்கினான். வனப்பும் விரைவும் ஒளியும் ஒரு சேரத் தோன்றுமாறு இயந்திரம் விரைவாக மேலெழுப்பிப் பறந்தது. கதிரவன் ஒளியில் தகத்தகாயமாக மின்னிக்கொண்டே மேகக் கற்றைகளைக் கிழித்து விலகிக்கொண்டு இயந்திரம் பறந்து வான்மேற் சென்றது. வாசவதத்தையும் உதயணனும் மற்றையோரும் உள்ளங்களித்தனர். வானவெளியின் பரப்புக்கு உட்பட்ட நாடு நகரங்களையெல்லாம் அவர்கள் மேலே விமானத்திற் பறந்த படியே சுற்றிப் பார்த்தனர். மலைகள் அடர்ந்து செழித்து விளங்கும் வன வனாந்தரங்கள், ஆறுகள், அருவிகள், குளிர்பூம்பொழில்கள் எல்லாவற்றையும் மகிழ்ந்து கண்டனர். ஏறியிருந்தோர் பிரமித்து வியப்புக் கொள்ளுமாறு விரைவும் நுணுக்கமும் கொண்டு இயங்கிப் பறந்தது இந்த இயந்திரம். எல்லாவற்றையும் கண்டு முடிந்தபின் இயந்திரத்தைக் கோசாம்பி நகர் நோக்கித் திருப்பிச் செலுத்தலானான் உதயணன்.

கோசாம்பி நகரத்து அரண்மனையில் இயந்திரத்தை இயற்றிய தச்சன் முதலியோர் அது திரும்பி வருவதை எதிர் நோக்கிக் கோயில் முன்றிலில் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுடைய ஆவல் வீண் போகவில்லை. இயந்திரம் கீழே இறங்குவதற்குத் திரும்பி வந்துகொண்டிருக்கிற காட்சியை, மேலே கண்டார்கள். தாங்கள் சுற்றிப் பார்க்கவேண்டிய அதிசயங்களை எல்லாம் இயந்திரத்தில் பார்த்து முடித்து விட்டுக் கோசாம்பி நகரத்தில் வந்து இறங்கியவுடன் உதயணனுக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி ‘அதை இயற்றிக் கொடுத்த தச்சுவினை இளைஞனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்’ என்பதே யாகும். இயந்திரத்திலிருந்து இறங்கியதும் ஆவலோடு பாய்ந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த தச்சனைக் கட்டித் தழுவிக் கொண்டான் உதயணன்.

“இளங்கலைஞனே! எவராலும் நிறைவேற்றிவிட முடியாத ஆசையை என் மனைவி என்னிடம் வெளியிட்டாள். ‘அவள் விருப்பம் நிறைவேற வழியின்றி வீணாகவே போய் விடுமோ?’ என்று அஞ்சி, நான் நம்பிக்கை இழந்தநிலையில் மனம் சோர்ந்து இருந்தேன். அப்போது நீ வந்து என் முன் தோன்றி, இந்த அருமையான இயந்திர ஊர்தியை எனக்கு இயற்றிக் கொடுத்தாய்” என்று இவ்வாறு தச்சனை நோக்கிக் கூறிவிட்டுத் தன் உடலில் அணிந்து கொண்டிருந்த அணிகலன்களை எல்லாம் கழற்றி அவனுக்கு அளித்தான் உதயணன். ஆனால் தச்சன் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. “அரசே! நான் யார் என்பதை இப்பொழுது உங்களிடம் கூறுகிறேன்” என்று தச்சனிடமிருந்து வந்த குரல் இனிமையான பெண் குரலாக இருக்கவே உதயணன் திகைப்போடு தச்சனை நிமிர்ந்து பார்த்தான். அங்கே தச்சன் இல்லை. ஒலியும் வனப்புமாகப் பொலிவோடு விளங்கும் தேவ கன்னிகை ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். உதயணன் ஒன்றும் புரியாமல் வியந்தான். அக்கன்னிகை தொடர்ந்து பேசவானாள்: “இதுதான் என்னுடைய உண்மையான உருவம் அரசே! குபேரனுடைய சாபத்தால் நான் முன்பு பிரச்சோதனராசனிடம் பத்திராபதி என்ற பெண் யானையாக இருந்தபோது உன்னையும் வாசவதத்தையையும் வழிப்பயணமாக இரவில் சுமந்து கொண்டுவர நேர்ந்தது. அப்போது நடுவழியில் இறந்த என் காதில் பஞ்சமந்திரத்தை உபதேசித்துப் பழம் பிறவியிலிருந்த தேவ கன்னிகையாக மாறுவதற்கு நீ உதவி செய்தாய். அதனால் உனக்கு நான் நிறைந்த நன்றிக்கடன் பூண்டுள்ளேன். என் உதவிக்கு உன்னிடம் நான் எந்த மாற்றுதவியையும் எதிர்பார்க்கவில்லை. மேலும் உன்னோடு என்னை வெற்றவளாகவும் கருதவில்லை நான்” என்று கூறிய பின் வானத்தில் சஞ்சாரம் செய்யப் பயன்படக் கூடிய மந்திரம் ஒன்றையும் உதயணனுக்குக் கூறிவிட்டு, யாவரிட மும் விடைபெற்றுக்கொண்டு சென்றாள் பத்திராபதி. வத்தவர்கோனாகிய உதயணனும் பிறரும் அவளை வணங்கி அன்போடு அவளுக்கு விடையளித்தனர். சில திங்கள் கழிந்தன.

வாசவதத்தையின் கரு முற்றிய நிலையை அடைந்தது. உரிய காலத்தில் தங்கச் சிலைபோல ஒர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள் வாசவதத்தை. உதயணன் வாசவதத்தை ஆகிய இருவருடைய உள்ளத்திலும் நிறைந்திருந்த மகிழ்ச்சியைப் போலவே நாட்டு மக்கள் யாவரிடத்தும் மகிழ்ச்சியை நிரப்பியிருந்தது இந்த நிகழ்ச்சி. அரண்மனை வந்தோர்க்கு எல்லாம் வரையாது வழங்குவதற்குப் பலவகைத் தான தருமங்கள் நடக்க ஏற்பாடு செய்திருந்தான் உதயணன். சிறைப் பிடிக்கப் பெற்று அரண்மனைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தவர்கள் யாவரும் இச்சமயத்தில் விடுதலை செய்யப் பெற்றிருந்தனர். அரசருக்கு ஆண் குழந்தை பிறந்ததைக் கொண்டாட நகரெங்குமே கோலாகலமான திருவிழாக்கள் பல நிகழலாயின. தனக்குப் புதல்வன் பிறந்த களிப்பில் நாடெங்கும் உள்ள கலைஞர்கள் யாவரும் பங்கு கொள்ள வேண்டும் என்று கருதிய உதயணன், அவர்களை எல்லாம் தன்னிடம் வரவழைத்துப் பரிசில் அளித்து மகிழ்ந்தான். தனக்குப் புதல்வன் பிறந்த செய்தியை அறிவிக்க வேண்டிய உறவினர்க்கும் மற்ற பேரரசர்க்கும் அறிவிப்பதற்காகத் தக்க தூதுவர்களைத் திருமுகங்களுடனே எல்லா நாடுகளுக்கும் அனுப்பி வைத்தான். தன் தம்பியர்களாகிய பிங்கல கடகர்களுக்கு இந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கூறி அவர்களையும் உடனே அழைத்துவரச் செய்தான் உதயணன், உஞ்சையில் அப்போது தங்கியிருக்கும் யூகியையும் அழைத்துக்கொண்டு அவனுடன் விரைவில் வந்து பேரனைக் கண்டு செல்ல வேண்டும் என்று பிரச்சோதனனுக்கு ஒரு திருமுகம் எழுதியிருந்தான். யூகி அப்போது தன்னுடன் இல்லாதது பெருங்குறையாகவே இருந்தது உதயணனுக்கு.