வெற்றி முழக்கம்/77. காலமெல்லாம் நிறைந்த களிப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

77. காலமெல்லாம் நிறைந்த களிப்பு

ந்த நிலையில் ஏறக்குறைய தத்தை கருவுயிர்த்துச் சில நாள்கள் கழிவதற்குள்ளேயே மகிழ்ச்சிக்குரிய வேறு பல நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன. யூகி, உருமண்ணுவா, வயந்தகன், இடவகன் ஆகிய நால்வருடைய மனைவியர்களும் ஒரே நாளில் ஆண் குழந்தைகளுக்குத் தாயாகி ஈன்றெடுத்தனர். ஏற்கெனவே அரண்மனையிலிருந்த கோலாகலத்தைக் குறையவிடாமல் வளர்த்துக் கொண்டன. இந்தப் புது இன்ப நிகழ்ச்சிகள். உவகையும் ஆரவாரமும் பன்மடங்காகப் பெருகின. புதல்வர்கள் எல்லோர்க்கும் ஒரே நாளிற் பெயரிடலாம் என்று கருதிப் பெயர் சூட்டு விழாவிற்கு ஒரு நல்ல மங்கல நாளைக் குறிப்பிட்டுக் கூறியிருந்தனர் அரண்மனைக் கணிகள். குபேரனுடைய அருளாற் பிறந்ததனாலும், விஞ்சையருலகையும் வென்று ஆளும் திறமையுடையவனாகக் கூறப்பட்டிருந்ததாலும் உதயணனுக்குப் பிறந்த புதல்வன் ‘நரவாணதத்தன்’ என்று பெயர் சூட்டப்பட்டான். மற்றும், யூகியின் புதல்வனுக்கு, ‘மருபூதி’ என்றும் உருமண்ணுவின் புதல்வனுக்கு ‘அரிசிகன்’ என்றும் வயந்தகன் புதல்வனுக்குத் ‘தவந்தகன்’ என்றும் இடவகன் புதல்வனுக்குக் ‘கோமுகன்’ என்றும் பெயர்கள் சூட்டப்பெற்றன. இப்புதல்வர்களுக்குரிய ஜாதகங்களும் ஏற்கெனவே உரிய காலத்தில் கணிக்கப் பெற்றிருந்தன. உதயணனால் அனுப்பப் பெற்ற தூதுவர், உஞ்சை நகரடைந்து உதயணனுக்கும் நண்பர்களுக்கும் ஆண் மக்கள் பிறந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். இந்த நல்ல செய்தியைக் கொணர்ந்தமைக்காகத் தூதுவர்களுக்குப் பெரும் பொருளும் பரிசில்களும் அளித்தான் பிரச்சோதனன்.

தனக்குப் பேரன் பிறந்ததற்கு அறிகுறியாகப் பிரச்சோதனன் நகரெங்கும் நன்றாக அலங்கரிக்குமாறு ஆணையிட்டான். யூகியைப் பாராட்டி, “உனக்கும் புதல்வன் பிறந்துள்ளமைக்காக நீ செய்ய வேண்டிய தானங்களைச் செய்க” என்று அதற்காக அவனிடம் தகுந்த பொருள்களை அளித்தான். வாசவதத்தைக்குப் புதல்வன் பிறந்துள்ள செய்தியை நகரெங்கும் முரசறைந்து தெரிவிக்க ஏற்பாடுகள் செய்தான். தனக்குப் பேரன் பிறந்ததை ஒரு பெரிய திருவிழாவாகக் கொண்டாடினான். யூகிக்கும் புதல்வன் பிறந்திருப்பதனாலும், உதயணன் அவனை விரைவில் அனுப்பச் சொல்லியிருப்பதாலும், அவன் மிக விரைவில் கோசாம்பி நகருக்குத் திரும்பிவிட நேரும் என்பதைப் புரிந்துகொண்ட பிரச்சோதனன், அவனுக்கும் தன்னுடைய அமைச்சன் சாலங்காயனுக்கும் உள்ள அறிவின் தராதரத்தை ஒரு தருக்கச் சொற்போர் நிகழ்ச்சி மூலமாக நிர்ணயித்துப் பார்த்துவிட விரும்பினான். இந்த எண்ணம் பிரச்சோதனனுடைய மனத்தில் வெகுநாளாக நிலைத்திருந்த எண்ணம். எனவே பூகி கோசாம்பிக்குப் புறப்படுவதற்கு முதல் நாள், யூகிக்கும் சாலங்காயனுக்கும் தன் அவையில் ஒரு தருக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் பிரச்சோதனன். அறிவுப் போராட்டமான அந்தத் தருக்கத்தில் ‘யாருக்கு வெற்றி’ என்று அறிவதில் பிரச்சோதனன் அவையில் யாவரும் ஆவல் காட்டினர்.

முன்பே தீர்மானித்தபடியே யூகி, சாலங்காயன் ஆகியோர்களின் தருக்கமிடும் திறமையை நிர்ணயிப்பதற்காக, யூகி உஞ்சையிலிருந்து கோசாம்பிக்கும் புறப்படுவதற்கு முதல் நாள் அறிவு வன்மையுள்ள தன் அவையைக் கூட்டினான் பிரச்சோதனன். உஞ்சைநகரத்து அரண்மனையைச் சேர்ந்தவர்களாகப் பல்வகைத் திறமையும் பெற்ற நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் பிரச்சோதன மன்னனுக்கு முதலமைச்சனாகவும் இருந்தவனே சாலங்காயன். கல்வி கேள்விகளிற் சிறந்து தருக்கத்திலும் பெரும் புலமை படைத்த அரசியல் ஞானி அவன். சொல்லப் புகுந்தால், யூகியோடு சமமாக மதிக்கத்தக்க நுண்ணறியும் சூழ்ச்சித் திறனும் உடையவனே! ஆனாலும் பிரச்சோதனனுக்கு என்னவோ தன் சொந்த ஆர்வத்தைக் கைவிடுவதற்கு மனம் இசையவில்லை. அதனால்தான் அவசரமாக யூகி ஊருக்குப் புறப்பட இருக்கும் நிலையிலும், இந்த விவாத நிகழ்ச்சியை எப்படியும் நடத்தியே விடுவது என்று உறுதியோடு எண்ணி ஏற்பாடு செய்திருந்தான் அவன். பிரச்சோதனனுடைய ஆசையை மறுக்க முடியாத நிலையிலேயே யூகியும் இதற்குச் சம்மதித்திருந்தான்.

சாலங்காயனும் யூகியும் சபையில் வாதமிடத் தொடங்கினார்கள். பிரச்சோதனனும், பற்பல கலைகளிலும் வல்லவரான வேறு சில சான்றோர்களும் வாதத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் வெற்றி தோல்விகளையும் நிர்ணயிப்பதற்குரிய நடுவர்களாக அமர்ந்திருந்தனர். வாதம் வளர வளரச் சாலங்காயன் தளர்ந்து விட்டான். யூகிக்கு எதிர்த்து நின்று தாங்குகிற அவ்வளவிற்கு அவனால் முடியவில்லை. நொடிக்கு நொடி யூகியின் வெற்றியும் சாலங்காயனின் பலவீனமும் தெளிவாகவே புலப்பட்டன. இறுதியில் வாதப் போர் உச்ச நிலையை அடைந்ததும், ‘யூகி வென்றான் சாலங்காயன் தோற்றேவிட்டான்’ என்ற முடிவு தானாக ஏற்பட்டது. அவையோரும் பிரச்சோதன மன்னனும் யூகியின் வெற்றியை மனமாரப் பாராட்டி வாழ்த்துக் கூறினார்கள். “நட்பின் சிறப்பும் கல்விப் பெருக்கமும், பண்பாடும் வீரமும் அமைந்த ஓருருவமாக யூகியை இங்கே நான் காண்கிறேன். பகைவராயினும் அவர்களுடைய தீமையைக் கூறாத திண்மையும் யூகியினிடம் அமைந்துள்ளது” என்று அவையோர் கேட்கும் படியாக யூகியை வாயாரப் புகழ்ந்தான் பிரச்சோதனன்.

பின்னர் பிரச்சோதனன் தனது நாட்டிலுள்ள பேரறிஞர்களை எல்லாம் யூகிக்கு அறிமுகம் செய்து வைத்தான். தன் அமைச்சர்களுள் சிறந்தவராகிய பரதகனின் கன்னி திலகமாசேனை என்பவளையும் யூகியாலேயே தோல்வியுற்ற சாலங்காயனின் தங்கை யாப்பியையும் ‘தன் நாட்டிற்கு வந்து சென்றதற்கு அறிகுறியாக யூகியே திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று பிரச்சோதனன் அவனை வேண்டிக் கொண்டான். யூகியும் அந்த வேண்டுகோளை மறுக்கவில்லை. பரதகன் மகள் திலகமாசேனையையும், சாலங்காயனின் தங்கை யாப்பியையும் தன் மனைவியராக ஏற்றுக் கொண்ட பின்பு, அங்கிருந்து புறப்பட்டுக் கோசாம்பி செல்லுவதற்கு விடை கொடுக்குமாறு பிரச்சோதனனை யூகி வேண்டிக்கொண்டான். கோசாம்பியில் தனக்குப் பிறந்திருக்கும் ஆண்மகனை உடனே சென்று காணவேண்டும் என்ற ஆவலே அப்போது யூகியின் அவசரத்திற்குக் காரணம். இது பிரச்சோதன மன்னனுக்குத் தெரிந்திருந்தது. அவனும் யூகி புறப்படுவதற்கு அன்போடு விடை கொடுத்துப் பரிசில்களாகச் சில சிறந்த பொருள்களையும் நல்கினான்.

“யூகி நீ எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றுகிறது! உன்னைப் பிரிவதனால் ஏற்படும் வேதனையிலும்கூட எனக்கு இப்படி ஓருணர்வு உண்டாகிறது! ஆனாலும் நீ எங்களை மறந்துவிடாதே” என்று பரிவுடனே கூறியபின் அவனைக் கோசாம்பிக்கு அனுப்பினான் பிரச்சோதன வேந்தன். உஞ்சை நகரில் புதிதாக மணந்துகொண்ட மனைவி மார்களோடும், சிறப்பாகக் கிடைத்த பரிசில்களோடும் பிறந்த புதல்வனைக் காண வேண்டும் என்ற ஆசையோடும் கோசாம்பிக்கு விரைந்தான் யூகி. ஆர்வமும் பாசமும் சேர்ந்து உண்டாக்கிய விரைவே அவனுடைய பயணத்தின் விரைவாயிருந்தது. திலகமாசேனை, யாப்பியை இவர்களைத் திருமணம் செய்துகொண்ட மணக் கோலத்தோடு உஞ்சையிலிருந்து கோசாம்பிக்கு வந்த யூகியை உதயணன் சிறந்த முறையில் வரவேற்றான். யூகிக்குப் புதல்வன் பிறந்துள்ளமைக்காக உதயணனும் உதயணனுக்குப் புதல்வன் பிறந்துள்ளமைக்காக யூகியும் ஒருவருக் கொருவர் தங்கள் மகிழ்ச்சியை இனிய மொழிகளால் பரிமாறிக் கொண்டனர். உஞ்சை நாட்டிலிருந்து பிரச்சோதன மன்னன் தன் பேரனுக்குக் கொடுத்தனுப்பிய பரிசிற் பொருள்களையும் பிறவற்றையும் யூகி உதயணனிடம் அளித்தான். பிரச்சோதன மன்னன் தன் மூலமாக உதயணனுக்குக் கூறியனுப்பிய செய்திகளையும் அவனிடம் சென்று விவரித்துக் கூறி விளக்கினான் யூகி.

உஞ்சை நகரத்திலிருந்து திரும்பி யூகி கோசாம்பி நகரத்துக்கு வந்து சேர்ந்த பின்னால், அரண்மனை வாழ்க்கையில் பழையபடி அமைதியும் இன்பமும் சூழ்ந்தன. துன்ப காலத்திலேதான் பொழுதும் காலமும் மெல்லக் கழிவன போலத் தோன்றும். இன்ப காலத்தில் களிப்பு என்னும் அமைதி நிறைந்த அந்த அனுபவத்தினால் காலம் வேகமாகக் கழிந்தாலும் அதை உணர்வதற்குத் தோற்றும் அவா எழுவது இல்லை. கூட உணர முடியாதபடி இத்தகையதொரு களிப்பின் அமைதிதான் பரவியிருந்தது.