வேங்கடம் முதல் குமரி வரை 1/024-027

விக்கிமூலம் இலிருந்து
24. கழுகுதொழு வேதகிரி

ன் நண்பர் ஒருவர் நல்ல பகுத்தறிவுவாதி. செங்கல்பட்டில் நான் உத்தியோகம் ஏற்றிருந்த போது, என் வீட்டிற்கு வந்திருந்தார். மாமல்லபுரம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். என்னைத் துணைக்கு அழைத்தார். 'மாமல்லபுரம் செல்லும் வழியில் திருக்கழுக்குன்றம் இருக்கிறதே, அங்கு பக்ஷி தரிசனம் செய்ய வேண்டாமா? தினசரி சரியாய்ப் பகல் பதினோரு மணிக்கு இரண்டு கழுகுகள் இந்த மலை மேல் வந்து, அங்கு பண்டாரம் கொடுக்கும் சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டுவிட்டுப் போகின்றனவே, அதைப் பார்க்க வேண்டாமா?' என்றேன் நான்.

'இது என்ன பெரிய அதிசயம். நான் மத்தியானச் சாப்பாட்டைச் சரியாக ஒரு மணிக்கு என் ஆபீஸ் அறையிலேயேதான் வைத்துக் கொள்கிறேன். அங்கும் தினசரி அதே நேரத்துக்கு இரண்டு அணில்கள் வருகின்றன. நான் போடும் உணவைச் சாப்பிட்டு விட்டுப் போகின்றன. பக்ஷிகளுக்கெல்லாம் கால உணர்வு (Tine sense) ரொம்பவும் அதிகம். ஆதலால் குறித்த காலத்தில் இங்கு இன்னது கிடைக்கும் என்ற நியதி ஏற்பட்டு விட்டால், அந்த இடத்துக்கு அவை வரத் தவறுவதே இல்லை!' என்று என்னை விளாசி விட்டார், அந்தப் பகுத்தறிவுவாதி.

'உண்மைதான் மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளுக்கு எல்லாம் கால உணர்வு அதிகமே. என்றாலும் ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, நூற்றுக் கணக்கான வருஷங்களாகக்' குறித்த வேளையில் குறித்த இடத்தில் இரண்டு கழுகுகள் தினம் வந்து உண்டு செல்கின்றன என்றால், அது ஒரு அதிசயம்தானே? அதிலும் இன்றைக்கு இருநூற்று எழுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஆம்! 3-1-1681 அன்று பகல் பன்னிரண்டு மணிக்கு இங்கு வந்த டச்சுக்காரர்கள் கூட இப்படிக் கழுகுகள் வருவதையும், அவை உண்டு திரும்புவதையும் பற்றி அன்றே எழுதி வைத்திருக்கிறார்களே ! அதற்கு என்ன சொல்கிறீர்? இத்தனை வருஷமும் இரண்டே கழுகுகள் கால உணர்வு பெற்றிருக்கின்றன சங்கு தீர்த்தம் என்கிறீரா?' என்று மடக்கினேன் நண்பரை. . அதன் பின் அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு திருக்கழுக்குன்றத்தின் மலை அடிவாரத்துக்கு இழுத்துச் சென்றேன்.

இருநூற்று அறுபத்து நாலு ஏக்கர் நிலத்தில் ஐந்நூறு அடி உயரத்தில் இருக்கிறது அந்தச் சஞ்சீவி மலை. அதற்கு நாலு சிகரங்கள். நான்கு வேதங்களுமே நான்கு சிகரங்களாக இருப்பதனால் வேதகிரி என்றும், அந்த வேதகிரிக்கு உரிய வேதகிரி ஈஸ்வரர் அதர்வண வேதச் சிகரத்தின் மேல் இருக்கிறார் என்றும் சொல்வார்கள்.

மலையின் மேல் ஏற நல்ல படிக்கட்டுகள் கட்டியிருக்கிறார்கள். ஒன்றிரண்டு இடத்தில் தான் படிக்கட்டுகள் செங்குத்தாக இருக்கின்றன. மற்றப்படி எளிதாகவே ஆங்காங்குள்ள மண்டபங்களில் தங்கி இளைப்பாறிப் படிகளில் ஏறி, மலைச் சிகரத்தை அடையலாம். சுமார் பத்து பத்தரை மணிக்குள்ளேயே சென்று விட வேணும். நூற்றுக் கணக்கானவர்கள் நமக்கு முன்னேயே அங்கு வந்திருப்பார்கள். எல்லோரும் வசதியாக இருந்து பார்க்க ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள். சரியாய்ப் பதினோரு மணி அளவில் இரண்டு வெள்ளைக் கழுகுகள் மலையைச் சுற்றியும்,

கழுகுகளுடன் பண்டாரம்

மலையில் உள்ள கோயிலைச் சுற்றியும், மலையில் உள்ள கோயிலைச் சுற்றி வட்டமிடுவதைப் பார்ப்போம்.

அதில் ஒன்று கோயில் மதில் சுவரிலே வந்து தங்கும். அதன் பின், படிப்படியாக இறங்கித் தத்தித் தத்தி ஒரு சிறு பாறையிலே சர்க்கரைப் பொங்கல் தட்டோடு வந்திருக்கும் பண்டாரத்தின் பக்கத்துக்கு வந்து சேரும். அவர் கையிலே உள்ள சர்க்கரைப் பொங்கலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும். அங்குள்ள தண்ணீரிலே தங்கள் அலகுகளைக் கழுவிக் கொண்டு, திரும்பவும் வட்டமிட்டுப் பறந்து, வான் வழியில் மறைந்து போகும்.

அதன் பின் அங்கு கூடியிருப்பவர்கள் என்ன என்ன எல்லாமோ பேசிக் கொள்வார்கள். ஒருவர் சொல்வார்: 'இந்த இரண்டு கழுகுகளும் காலையில் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்கின்றன. மத்தியானம் உணவு அருந்தக் கழுக்குன்றம் வந்து விடுகின்றன. இரவு ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் சென்று நித்திரை செய்கின்றன!' என்று.

இருக்கலாம். ஆனால் காசியிலும் ராமேசுவரத்திலும் இவர்களுக்குப் பூஜை இல்லை. பார்த்ததற்குச் சாட்சியும் இல்லை. உண்ண உணவுக்குத் திருக்கழுக்குன்றம் வருவது நிதரிசனம். தினசரி நிகழ்ச்சி.

இது விஷயம் என்னவென்று அறியத் தல வரலாற்றைப் புரட்ட வேண்டும். ஏதோ பிரம்ம புத்திரர்கள் எட்டுப் பேர் சாரூப பதவி வேண்டிக் கடுந்தவம் புரிந்து, பின்னர் சிவபெருமான் காட்சியளித்தபோது, மறந்து போய்ச் சாயுச்சிய பதவி கேட்டு விட்டதாகவும், அதற்காகவே அந்த எட்டுத் தவசிகளையும் யுகத்துக்கு இரண்டிரண்டு பேராய்க் கழுகுகளாகப் பிறந்து வாழ இறை அருள் செய்திருக்கிறார் என்றும் சொல்கிறது புராணம்.

அவர்களே முந்திய யுகங்களிலே சண்டன் பிரசண்டன் எனவும், சம்பாதி சடாயு எனவும், சம்புகுந்தன் மாகுத்தன் எனவும் பிறந்து முக்தி எய்தியிருக்கிறார்கள். அவர்களில் இருவரே இந்தக் கலியுகத் திலே பூஷா விதாதா என்னும் இரண்டு கழுகுகளாகப் பிறந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று அறிவோம். கலியுகம் முழுவதும் இருப்பது இதே இரண்டு கழுகுகள்தானா - இல்லை , அவற்றின் பரம்பரையா என்று, முன்னிருந்து கண்டவர்களும் இல்லை. இனி இருந்து காணப் போகிறவர்களும் இல்லை. ஒன்று மட்டும் உண்மை.

இரண்டு கழுகுகள், இத்தனை வருஷங்களாக, இதே இடத்துக்கு இதே நேரத்துக்கு வந்து செல்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாததாக இருக்கிறது. வேதகிரி ஈசுவரரைத் தேடி இக்கழுகுகள் வந்தாலும், அந்த வேதகிரி ஈசுவரரே இந்தக் கழுகுகளால்தானே பிரசித்தி பெற்றிருக்கிறார், ஏன், கோயிலும் மலையும் ஊரும் குளமும் கழுகுக் குன்றம் என்ற பெயரில்தானே நிலைத்திருக்கின்றன.

இந்தக் கழுக்குன்றம் சென்னையிலிருந்து நாற்பத்தைந்து மைல் தொலைவிலே இருக்கிறது. சென்னையிலிருந்தும் செல்லலாம். இல்லை, செங்கல்பட்டு வந்து, அங்கிருந்து தென் கிழக்காக ஒன்பது மைல் போனாலும் சென்று சேரலாம். இந்த ஊரிலே பிரசித்தி பெற்றது கழுகுகள் வரும் சஞ்சீவி மலையும், அம் மலை மேல் கட்டியிருக்கும் வேதகிரி ஈசுவரர் கோயிலுந்தான்.

மலை ஏறுவதற்கு முன், மலையையே வலம் வரலாம். இரண்டரை மைல் நடக்க முடியுமானால் நடக்கலாம். இல்லாவிட்டால் காரிலேயே கிரிப் பிரதக்ஷினத்தை முடித்துக் கொள்ளலாம். மலை மேல் ஏறிக் கழுகு வந்து போவதையெல்லாம் பார்த்த பின், அங்குள்ள கோயிலுக்குள்ளே நுழையலாம்.

இந்தக் கோயிலின் கர்ப்ப கிருஹம் பல்லவ மன்னவன் மகேந்திர வர்மனால் குடைந்து ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். அங்குள்ள உட்புறத்துச் சுவர்களில் சோமாஸ்கந்தர், பிரும்மா, யோக தக்ஷிணாமூர்த்தி முதலியவர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சிற்ப வடிவங்களையெல்லாம் அங்குள்ள இருட்டில் காண்பது கொஞ்சம் கஷ்டமான காரியமே.

இங்குக் கோயில் கொண்டிருப்பவர் வாழைக் குருத்துப் போன்ற வடிவம் உடையவர். சுயம்பு மூர்த்தி என்பார்கள், ஆனால் நாம் காண்பது கவசமிடப்பட்ட சிவலிங்க உருவைத்தான். இவர்தான் வேதகிரி ஈசுவரர். கிழக்கு நோக்கியவராய் அமைந்திருக்கிறார். இந்த வேதகிரியானைத்தான் ஒரு வியாழ வட்டத்துக்கு ஒரு தரம் இந்திரன் பூஜை புரிவதாகப்புராணங்கள் கூறுகின்றன.

இந்திரன் பூஜை என்றால், ஏதோ நீரால் அபிஷேகம், மலர்களால் அர்ச்சனை என்றில்லை. இடி இடித்தே பூஜை. இடி கோபுரத்தின் பேரிலேயே விழுந்து மூலவரை மூன்று முறை வலம் வந்து பூமிக்குள் இறங்கி விடுகிறது என்கிறார்கள். இதனால் கோயிலுக்கோ இறைவனுக்கோ கெடுதி ஒன்றும் நேரிடுவதில்லை. இந்தத் தகவலை நிந்தாஸ்துதியாகச் சொக்கநாதப் புலவர் வெளியிடுகிறார்; ஒரு பாட்டில்,

அடிபட்டீர், கல்லாலும் எறிபட்டீர்,
அத்தனைக்கும் ஆளாய் அந்தப்
படிபட்டும் போதாமல் உதைபட்டீர்!
இப்படியும் படுவார் உண்டோ ?
முடி பட்ட சடையுடையீர்! கழுக்குன்றீர்!
முதற்கோணல் முற்றும் கோணல்
இடிபட்டும் பொறுத்திருந்தீர், சிவசிவா
உமைத் தெய்வம் என்னலாமோ?

என்பது பாட்டு,

வேதகிரி ஈசுவரரை வணங்கிய பின், கோயிலின் வட பக்கமாக இருக்கும் படிகளின் வழியே இறங்கலாம். அந்த வழியிலே ஒரு குடைவரைக் கோயில் உண்டு. இங்கும் சிவலிங்கம், துவார பாலகர் எல்லாம் கற்பாறையிலே செதுக்கப்பட்டிருக்கின்றன.

துவார பாலகர் நல்ல அழகான வடிவம். பல்லவ மன்னன் மகேந்திரன் காலத்துச் சிற்பம். அங்குள்ளதுவாரபாலகர்களை, உத்தரீயத்தை லாவகமாகத் தோளில் போட்டுக் கொண்டு, ஒரு கையை உயர்த்தி, எல்லோரையும் மலை மேல் போய்ப் பார்க்க வேண்டியதைப் பாருங்கள் என்று சொல்லும் நிலையில் செதுக்கியிருக்கிறான் சிற்பி. (நாம்தான் மலையிலுள்ள சிற்பங்களைப் பார்த்து விட்டோமே, அந்தத் தகவலை அந்தத் துவார பாலகரிடம் சொல்லிவிட்டுக் கீழே இறங்கி விடலாம்)

பாலையைவிட்டு இறங்கி, அடிவாரத்தில் உள்ள சித்தாத்ரீ கணபதியையும் வணங்கிவிட்டு, ஊர் மத்தியில் இருக்கும் தாழக்கோயிலுக்குள் செல்லலாம். அங்கு செல்லாமல் திரும்ப முடியாதே. மலை மேல் தரிசிக்காத அம்பிகையை இங்குதானே தரிசிக்க வேண்டும்.

இந்தக் கோயிலை ஒரு பெரிய கோபுரம் அழகு செய்கிறது. கோயிலுக்குள் பிரதான மூர்த்தி சிவலிங்க உருவில் அமைந்த பக்தவத்சலர்தான் என்றாலும், சிறப்பெல்லாம் அன்னை திரிபுர சுந்தரிக்குத்தான். இவளையே 'பெண்ணின் நல்லாள்' என்று பாடி மகிழ்கிறார் திருஞான சம்பந்தர்.

துணையல் செய்தான், தூயவண்டு
          பாழ்செயச் சுடர்கொன்றைப்
பிணையல் செய்தான், பெண்ணின்
          நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்தான், இலங்குளயில்
          மூன்றும் எரி உண்ணக்
கணையல் செய்தான் காதல் செய்,
          கோயில் கழுக்குன்றே

என்பதுதானே சம்பந்தர் தேவாரம். இந்தக் கோயிலில் வரப்பிரசாதி ஆன அம்பிகையைத் தரிசிப்பதோடு, ஏழு அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி கொடுக்கும் வீரபத்திரரையும் தரிசித்து வணங்கலாம்.

இந்தக் கோயில் கட்டிய இடம் எல்லாம் கதலி வனமாக இருந்ததாகவும், அந்தக் காட்டை அழித்தபோது வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த பிள்ளையார் ஒருவர் கிடைத்தார் என்றும், அவரே வண்டுவனப் பிள்ளையார் என்று இன்றும் விளங்குகிறார் என்பதும் கர்ண பரம்பரை.

இத் தலத்துக்குச் சம்பந்தரைத் தவிர, மற்றச் சமயக் குரவர் மூவருமே வந்திருக்கிறார்கள். கழுக்குன்றமர்ந்த கற்பகத்தைக் கண்ணாரக் கண்டதாகப் பாடிப் பரவசம் அடைகிறார், அப்டர். 'சென்று சென்று தொழுமின் கழுக்குன்றமர்ந்த பிரானை!' என்று சுந்தரர் மக்களை யெல்லாம் வேண்டிக் கொள்கிறார்.

எல்லோருக்கும் மேலாக மாணிக்கவாசகர் கழுக்குன்றத்து உச்சியானை நினைந்து நினைந்து பாடுகிறார். 'கணக்கில்லாத திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே!' என்று சொன்னதோடு திருப்தி அடையாது, ‘காண ஒண்ணாத திருக்கோலம் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே!' என்றும் கூறி, அவர் பெற்ற அனுபவத்தை விரிக்கிறார். மணிவாசகர் திருவடி என்று ஓரிடத்தையும் பார்க்கலாம் கிரிசுற்றும் போது. அங்கு மணிவாசகர் விழா சிறப்பாக நடைபெறுகிறது, வருஷம் ஒரு முறை.

இந்தத் தலத்தில் வேதகிரியானையும் திரிபுர சுந்தரியையும் விடப் பெருமையுடையது சங்கு தீர்த்தம். ஊருக்குத் தென் கிழக்குக் கோடியிலே இருப்பதுதான் அச் சங்கு தீர்த்தம் என்னும் தெப்பக்குளம். ஒரு நல்ல நீராழி மண்டபம். இந்தக் குளத்தின் தண்ணீரில் தாமிரச்சத்து இருக்கிறது என்கிறார்கள். இக்குளத்தில் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு தரம் ஒரு சங்கு 'பிறக்கிறது. (அப்படிக் கிடைத்த சங்குகளை யெல்லாம் கோயிலிலே சேகரித்து வைத்திருக்கிறார்கள்)

சங்கு பிறக்கும் சமயத்தில் இந்தத் தீர்த்தத்தில் குளிப்பது மிகவும் விசேஷம். கும்பகோணத்து மகாமக தீர்த்தத்தோடும், கோதாவரி புஷ்கர தீர்த்தத்தோடும் போட்டியிடும் இச்சங்கு தீர்த்த ஸ்நானம். இச் சங்கு தீர்த்தத்துக்குத் தென் கிழக்கே ஒரு பர்லாங்கு தூரத்தில் ஒரு சிறு கோயில், அங்குக் கோயில் கொண்டிருக்கிறார் ருத்ர கோடீசுவரர், அபிராமி நாயகியுடன். அவுணர்களை எல்லாம் கொலை செய்த பாவத்தைப் போக்கக் கோடி ருத்திரர்கள் இங்கு வந்து வணங்கி, இந்த லிங்கத் திருவுருவைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்பது புராண வரலாறு.

இன்று இத் தலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் வேதகிரியானும் பக்தவத்சலனும் ருத்ரகோடீ ஈசுவரனுமே என்றாலும், அன்று இத்தலத்தில் வேத நாராயணன் கோயில் கொண்டிருந்ததாகவும் வரலாறு உண்டு, இந்த ஊருக்கே வேதநாராயணபுரம் என்று ஒரு பெயர் உண்டே . ஆனால் அந்த வேத நாராயணர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

சைவ வைணவ பேதம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, தன் துணைவியைக் கூடக் கீழே விட்டு விட்டு, வேதகிரியான் தான் கழுகு முனிவர்களுக்கு ஆசி கூற மலை மேலேயே ஏறி நின்று கொண்டிருக்கிறானே. நாமும் கழுகு வேதகிரியனைத் தொழுவதோடேயே திருப்தி யடையலாம். வேதநாராயணனைத் தேடி அலைய வேண்டாம்.