வேங்கடம் முதல் குமரி வரை 1/025-027
25. பெரும்பூதூர் உடையவர்
வைஷ்ணவ மத ஆச்சாரியர்களில் தலை சிறந்தவராக விளங்குபவர் ஸ்ரீராமாதுஜர். ஆதி சங்கரர் வேதங்கள் உப நிஷதங்கள் ஆகியவற்றுக் கெல்லாம் பாஷ்யங்கள் செய்து, பரப் பிரம்மம் ஆம் இறைவனை அடைய ஞானமார்க்கத்தை நமக்குக் காட்டிச் சென்றார்.
ஞான மார்க்கத்தோடு பக்தி மார்க்கமும் சேர்ந்தால்தான் பிரம்மத்தை உணர்வது எளிது என்று உபதேசித்து, சங்கரரின் வித்வைத சித்தாந்தத்தைக் கொஞ்சம் மாற்றி, விசிஷ்டாத்வைத சித்தாந்தமாக நமக்கு அருளியவர், ஸ்ரீராமானுஜர். இவரது வாழ்க்கை வரலாறு சுவையுடையது.
சற்று ஏறக்குறையத் தொள்ளாயிரத்து நாற்பத்து இரண்டு வருஷங்களுக்கு முன் பரம பாகவதர்களான கேசவ சோமயாஜி, காந்திமதி என்பவர்களின் பிள்ளையாக ராமாநுஜர் அவதரிக்கிறார். இவர் அவதரித்த தலம் ஸ்ரீபெரும்பூதூர். இவருக்குத் தாய் தந்தையர் அன்று இட்ட பெயர் இளையாழ்வார். பாலப்பருவம் கழிந்ததும் காஞ்சியை அடுத்த
இவருக்கோ யாதவப் பிரகாசர் சொல்லும் வேதாந்த விளக்கங்கள் எல்லாம் விபரீதமாய்ப் படுகின்றன. குருவையே திருத்த முனைகிறார் அந்த இள வயதிலேயே இவர், சிஷ்யர்களால் இவர் இளைய பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
தம்மை மிஞ்சிவிடுவான் பையன் என்று கண்ட குரு யாதவப்பிரகாசர், காசி யாத்திரை செய்வதென்றும், அங்கு கங்கையில் பயலை மூழ்கடித்து விடுவது என்றும் திட்டமிட்டுப் பயணம் துவக்குகிறார். ஆனால் இவர் தமிழ் நாட்டுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றனவே. பரந்தாமன் சும்மாயிருப்பானா?
விந்திய மலைச் சாரலிலேயே இளைய பெருமாளைச் சந்திக்கிறான். தானும் தன் மனைவியும் வேடன் வேட்டுவச்சி உருவில் வந்து, யாதவப் பிரகாசர் சிஷ்ய குழாத்திலிருந்து இளைய பெருமாளைக் கூட்டி வந்து, காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள சோலையில் விட்டு விட்டு மறைந்து விடுகிறான்.
காஞ்சிக்கு வந்த அந்த இளைய பெருமாளுக்கு அங்குள்ள பேரருளாளனுக்குச் சேவை செய்ய ஆவல் உண்டாகிறது. அப்படியே காஞ்சிக்கு இரண்டு மைல் தொலைவில் உள்ள சாலைக் கிணற்றிலிருந்து தினம் தண்ணீர் இறைத்துத் திருமஞ்சன கைங்கர்யத்தைச் செய்து வருகிறார். இந்தச் சமயத்தில்தான் ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீ ஆளவந்தார், கச்சிவரதனது தரிசனத்துக்கு வந்தவர், இந்த இளைஞனைப் பார்க்கிறார். அவனது தேஜஸைக் கண்டு, தாம் நீண்ட நாட்களாகத் தேடி வந்தது இவனல்லவா என்று தெரிந்து, இவனைத் தன்னிடம் சேர்க்க அந்த அத்திகிரி வரதனிடமே வேண்டிக் கொள்கிறார்.
பெரிய நம்பியிடம் சொல்லி, இளைஞனை ஸ்ரீரங்கம் கூட்டி வரச் சொல்கிறார். ஆனால் இளைஞன் ஸ்ரீரங்கம் போய்ச் சேருமுன்பே, ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளி விடுகிறார். அவரைத் திருப்பள்ளி படுத்தி வைத்திருக்கிறார்கள் (திருநாட்டுக்கு எழுந்தருள்வது என்றால், வைஷ்ணவ பரிபாஷையில் - இறந்து விட்டார் என்றும் திருப்பள்ளி படுத்துதல் என்றால், கிடத்தி வைத்திருத்தல் என்றுமே பொருள்).
அப்படி அவரது பூத உடல் இருக்கும்போது, அவரது வலது கையில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியே இருக்கின்றன. ஆளவந்தார் மனத்தில் இருந்த மூன்று அபிலாஷைகளையும் தட்டின்றி நிறைவேற்றுவேன் என்று இளையாழ்வார் வாக்குக் கொடுத்த பின்பே, மடங்கிய விரல்கள் நிமிர்கின்றன. இதன் பின் வைஷ்ணவ மதப்பிரசாரகராக இளையாழ்வார் முனைந்து வேலை செய்கிறார். வீட்டைத் துறக்கிறார். மனைவியைத் துறக்கிறார். சந்நியாசியாகிறார்.
ஸ்ரீராமானுஜர் என்ற திருநாமத்தோடு, ஸ்ரீரங்கம் மேல்கோட்டை திருநாராயணபுரம் முதலிய இடங்களில் தங்கியிருந்து, வைஷ்ணவ மத ஸ்தாபகராகத் தம் புகழ் நிறுவுகிறார். கிட்டத்தட்ட நூற்று இருபது வயதுவரை வாழ்ந்த இந்த ஆச்சாரியாரையே இளையாழ்வார், இராமானுஜர், எம்பெருமானார், எதிராஜர், ஸ்ரீ பாஷ்யக்காரர், உடையவர் என்றெல்லாம் வைஷ்ணவ உலகம் இன்றும் போற்றுகிறது. இவரது புகழையே திருவரங்கத்து அமுதனார் இராமானுஜர் நூற்றந்தாதி என்று நூற்று எட்டுப் பாடல்களில் பாடி மகிழ்கிறார்.
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன், நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ்மறை வாழ்ந்தது, மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுஜன் தன் இயல்பு கண்டே!
ஸ்ரீபெரும்பூதூர் சென்னைக்குத் தென்மேற்கே பங்களூர் செல்லும் வழியில் இருபத்து ஐந்து மைல் தொலைவில் உள்ள பெரிய ஊர். செங்கல்பட்டிலிருந்து சிங்கப்பெருமாள் கோயில் வந்து, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்பினாலும், இவ்வூர் வந்து சேரலாம்.
இந்த ஊருக்கு ஆதிப் பெயர் பூதபுரி என்று இருந்திருக்கிறது. மயான உருத்திரன் சடை விரித்து ஆடிய ஆட்டம் கண்டு, பூதகணங்கள் சிரித்திருக்கின்றன. அதனால் கோபமுற்ற உருத்திரன் பூதகணங்களைத் தன் சந்நிதியிலிருந்து விலக்கியிருக்கிறான். கவலையுற்ற பூத கணங்கள் ஸ்ரீமந்நாராயணனைப் பிரார்த்தித்திருக்கிறார்கள்.
நாராயணனோ அனந்தனை அழைத்து ஒரு சரஸை அமைக்கச் சொல்லிப் பூதகணங்களை அந்த அனந்த சரஸில் முழுகி எழச் சொல்லிப் பூத கணங்களைத் திரும்பவும் உருத்திரனிடம் சேர்த்திருக்கிறார். இப்படிச் சமாதானம் பண்ணி வைத்த நாராயணன் பெற்ற 'நோபல் பரிசு' தான் இந்தக் கிராமம்.
பூதங்களே நிர்மாணித்ததனால் பூதபுரி என்று கிராமத்துக்கும் பெயர் நிலைத்திருக்கிறது. நாராயணனும் ஆதிகேசவப் பெருமாள் என்ற திருநாமத்தோடு அங்கேயே கோயில் கொண்டு விடுகிறான். பூதபுரி தாளடைவில் பூதூர் என்றும், உடையவர் பிறந்த மகிமை காரணமாகப் பெரும்பூதூர், ஸ்ரீ பெரும்பூதூர் என்றெல்லாம் பிரசித்தி பெற்று விடுகிறது.
அம்பரீஷன் பௌத்திரனான ஹரீதரனுக்கு நேர்ந்த ஒரு சாபம், இத் தலத்துக்கு அவன் வந்து. அனந்த சரஸில் நீராடியதால் நீங்கியிருக்கிறது. அதனால் மகிழ்ச்சியுற்ற ஹரீதரன், ஆதிகேசவப் பெருமாளுக்குக் கோயில் எடுப்பித்து, உத்சவாதிகளை யெல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்கிறான்.
சென்னையிலிருந்து வரும்போது தூரத்திலேயே கோபுர தரிசனம் செய்யலாம். ரோட்டை விட்டு விலகிக் கோயில் வாசலுக்கு வந்து சேரலாம். கோபுர வாசலுக்கு நேராக உள்ள துவஜ ஸ்தம்பத்துக்குத் தெற்கே இருக்கும் குதிரைக் கால் மண்டபம் வழியாக மேலே ஏறிச் சென்றால், வட பக்கம் இருக்கும் உடையவர் சந்நிதியையம், வாசலுக்கு மேற்கே ஆதி கேசவப் பெருமாள் சந்நிதி
யையும் காணலாம்.
கூட வரும் அர்ச்சகர்கள் முதலில் நம்மை உடையவர் சந்நிதிக்கே அழைத் துச் செல்வார்கள். ஆம்! அருளாளரான உடையவர் இங்கே ஆதிகேசவனை விடப் புகழ் பெற்றவராயிற்றே. நாமும் அவரையே முதலில் தரிசித்து, அவர் அருள் பெற்று, அதன் பின் ஆதிகேசவன் அருள் பெற விரையலாம். உடையவர் சந்நிதியில் மூலவர் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் இருக்கிறார். அந்த மூலவருக்கு இளையாழ்வார் என்ற பிள்ளைத் திருநாமமே நிலைத்திருக்கிறது. இந்த மூலவருக்கு முன் செப்புச் சிலை வடிவில் இருப்பவரே உற்சவ மூர்த்தி. கூப்பிய கையுடன் இருக்கும் இந்த எம்பெருமானாரைத் தமர் உகந்த திருமேனி என்பார்கள். இராமானுஜரது ஜீவிய காலத்திலேயே, அவருடைய வடிவத்தை அழகாகச் சிற்ப வடிவங்களாகச் செய்து, அவ் வடிவங்களை அவரே ஆலிங்கனம் பண்ணச் செய்து, பிரதிஷ்டை செய்ததாக வரலாறு.
அப்படிப் பிரதிஷ்டை செய்யப் பெற்றவைகளில் மூன்று பிரசித்தமானவை. இப்படி ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை பண்ணியது தானான திருமேனி என்றும், மேல் கோட்டையில் பிரதிஷ்டை செய்தது தான் உகந்த திருமேனி என்றும், இந்த ஸ்ரீ பெரும்பூதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது தமர் உகந்த திருமேனி என்றும் சொல்லப் படுகின்றன.
தானான திருமேனியையும் தானுகந்த திருமேனியையும் : விடத் தமர் உகந்த திருமேனியே அழகானது. பிரசித்தி உடையது.
உடையவரின் உறவினரும் சிஷ்யர்களுமான முதலியாண்டானும், கந்தாடை ஆண்டானும் உவந்து பிரதிஷ்டை செய்த மூர்த்தியானதால், இவரைத் தமர் உகந்த திருமேனி என்கிறார்கள். உடையவரது திருவடியின் கீழ்ச் சடகோபம் இருக்கும். இங்குள்ள சம்பிரதாயம் தெரியாமல், சடகோபம் சாதிக்க வேணும் என்று கேட்கக் கூடாது, அர்ச்சகரை. அப்படிக் கேட்டால் அவர் மிகவும் கோபித்துக் கொள்வார். முதலியாண்டான் சாதிக்க வேணும் என்றே கேட்க வேண்டும். என்றுமே திருவடிதாங்க ஆசைப்பட்ட முதலியாண்டானுக்கு உடையவர் அளித்த கௌரவம் இது.
இந்த உடையவரை வணங்கி விட்டு வெளியே வந்தால், துவஜ ஸ்தம்ப மண்டபம் வந்து சேருவோம். இங்கு நான்கு ஸ்தம்பங்களுக்கு மேற்பட்ட ஸ்தம்பங்கள் இருந்தாலும், அவைகளில் நான்கையே பூதங்கள் ஸ்தாபித்துக் கோயிலைக் கட்டியிருக்கின்றன. இங்குதான் உற்சவ காலங்களில் திருமஞ்சனம் முதலிய ஆராதனங்கள் நடைபெறுகின்றன.
இனி மேற்கே திரும்பி ஆதிகேசவர் சந்நிதிக்கு வரலாம். வாயிலிலேயே ஜய விஜயர் என்னும் துவார பாலகர்கள் கம்பீரமாக எழுந்து நிற்பார்கள். அவர்களிடம் அனுமதி பெறாமலேயே உள்ளே நுழையலாம். ஆதிகேசவப் பெருமாள் கிழக்கு நோக்கியவராய் நின்ற திருக்கோலத்தில் நமக்குச் சேவை சாதிப்பார். தூக்கிய இரண்டு கைகளில் சங்கும் சக்கரமும். மற்றொரு வலது கை ஹஸ்தம் அபயப்பிரதானம் அளிக்கும். மற்றொரு இடக்கையோ நீண்டு தாழ்ந்து தொடையில் இருத்தப்பட்டிருக்கும்.
ஆதிகேசவனைச் சென்று கண்டு வணங்குபவர்களுக்குச் சம்சாரமாகிய கடலின் ஆழம் தொடையளவுதான் என்று காட்டுவதாக ஐதீகம். வலது மார்பில் ஸ்ரீவத்ஸம். இத்துடன் ஸ்ரீதேவி பூதேவியார் வேறே. இந்த ஆதிகேசவருக்கு முன்னாலே கேசவா நந்தன வர்த்தனன் என்னும் உத்சவர். இவரது திருஉரு மற்றப்படி ஆதிகேசவன் திருஉரு போலவே இருந்தாலும், தாழ்ந்த இடக்கை மட்டும் ஆகூயவரதமாக இருக்கிறது. ஆம், மக்கள் எல்லோரையும் வாருங்கள் என்று அழைத்து அருளுகின்ற நிலை. (இவருக்கு ஒரு பயம் போலும். பிரபலமான உடையவர் பக்கத்திலேயே இருப்பதால், அவரை வணங்கி, விண்ணப்பம் செய்ய வேண்டியவைகளைச் செய்து விட்டுத் தம்மைக் கவனிக்காமலே சேவார்த்திகள் போய் விடுவார்களோ என்று.) அப்படி அவசரமாக ஓடுபவர்களைக்கூடத் தன் பக்கம் அழைத்து அருள் செய்யும் அருளாளர் இவர்.
இந்தக் கோயிலின் பெரிய பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் தாயார் சந்நிதியிருக்கிறது. தாயாருடைய திருநாமம் எதிராஜவல்லி. உடையவர் அவதரித்த பின், பெருமாள் அவருடைய பெயரோடு தன் பெயரும் இணைந்திருக்க வேண்டுமென்று விரும்பி, எதிராஜநாதன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டிருக்கிறார். எதிராஜநாதனது மனைவியாம் லக்ஷ்மியும் தன் பெயரை எதிராஜவல்லி என்றே மாற்றிக் கொள்கிறாள். இத்தனை ஈடுபாடு எதிராஜனிடம், அந்தப் பெருமாளுக்கும், இந்தத் தாயாருக்கும். இவர் சர்வாலங்கார சுந்தரி.
இன்னும் இக்கோயிலில் சக்கரவர்த்தித் திருமகனுக்கு, கருடனுக்கு எல்லாம் தனித்தனிச் சந்நிதிகள் இருப்பது போல், நம்மாழ்வாருக்கு, ஆண்டாளுக்கு, திருக்கச்சி நம்பிகளுக்கெல்லாம் தனித் தனிச் சந்நிதிகள் உண்டு. இவைகளில் பிரசித்தமானது ஆண்டாள் சந்நிதியே. ஆண்டாளிடத்து, அவளது பாசுரங்களிடத்து உடையவருக்கு நல்ல ஈடுபாடு.
ஆண்டாளுக்கு ஓர் ஆசை - தான் பாடிய நாச்சியார் திருமொழிப் பிரபந்தத்தைத் திருமாலிருஞ்சோலையில் பெருமானுக்கு நூறு தடா நிறைய அக்கார அடிசல் பண்ணி, அத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென்று.
அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கிறார், உடையவர். அந்த ஆசை நிரம்பிய குதூகலத்தில், ஸ்ரீபெரும்பூதூர் மாமுனியாம் உடையவரை 'அண்ணா ' என்றே அழைக்கிறாள் ஆண்டாள். இதனாலேயே இவருக்குக் கோயிலண்ணன், திருப்பாவை ஜீயர் என்றெல்லாம் பெயர்கள் வழங்குகின்றன. ஆண்டாளை மங்களா சாஸனம் பண்ணிய பெரியவர்கள், 'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!' என்றே வழிபடுகிறார்கள்.
இன்னும் இந்தக் கோயிலில் பார்க்க வேண்டியவை எவ்வளவோ உண்டு. அத்தனையும் பார்க்க நமக்கு நேரம் ஏது? அதிலும் இராமானுஜரை, அவரது தமர் உகந்த திருமேனி வடிவழகைக் கண்ட பின், கண்கள் மாத்திரம் என்ன, இதயமுமே நிறைந்து விடுமே.
மற்றவைகளைப் பார்க்க; அவ்வடிவங்களை உள்ளத் திருத்த இடம் ஏது? ஆதலால் கோயிலைக் கடந்து வெளியே வருகிற போது, நாமும் அந்தப் பிள்ளைப் பெருமாள் ஐயங்காருடன் சேர்ந்து,
பிடிக்கும் பரசமயக்குல வேழம்பினிற, வெகுண்டு
இடிக்கும் குரல் சிங்கஏறு அலையான், எழுபாரும் உய்யப்
படிக்கும் புகழ்எம் இராமானுஜமுனி பல்குணமும்
வடிக்கும் கருத்தினற்கே திருமாமணி மண்டபமே
என்று பாடிக் கொண்டே திரும்பலாம்.