வேங்கடம் முதல் குமரி வரை 1/026-027

விக்கிமூலம் இலிருந்து
26. உத்தரமேரூர் சுந்தரவரதன்

து ஜனநாயக யுகம். மக்களை மக்களுக்காக மக்களே ஆளும் முறை இன்று எங்கும் பரவியிருக்கிறது. மக்களுக்காக அவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையே எலெக்ஷன் என்றும் தேர்தல் என்றும் சொல்கிறோம். வெள்ளைக்காரர்கள் காலத்தில் இந்த எலெக்ஷன் முறை அமலுக்கு வந்தது.

அப்போது முதலில் வாக்குரிமை, சொத்துடையவர்களுக்கும் கல்வி அறிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்குமே இருந்தது. பின்னர் நாளடைவில் எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் வாக்குரிமை உண்டு என்று வந்தது. இந்த நிலையில் கூட வாக்காளர்களில் பெரும் பகுதியினர்க்குத் தங்கள் கையெழுத்தைப் போடத் தெரியுமே ஒழிய, பிறர் எழுதியதையோ அச்சடித்ததையோ வாசிக்கத் தெரியாது.

ஆதலால் வாக்குரிமைச் சீட்டாம் ஓட் பதிவு செய்வதில் எவ்வளவோ தகராறுகள். இவற்றைத் தவிர்க்க, ஓட்டுப் பெட்டிகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்ற வர்ணக் காகிதங்களை ஒட்டி, அந்த வர்ணத்துக்கு உரிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். மங்களகரமானமஞ்சள் என்பது போன்ற தேர்தல் முறையிருந்தது, நமது தலைமுறையிலேயே.

காலம் மாறிற்று. வெள்ளைக்காரனை விரட்டி அடித்து விட்டு நாமே நம்மை ஆளும் சுதந்திரம் பெற்றோம். நாமோ நம் ஓட்டர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிய வேண்டுவது அவசியம் என்று கருதவில்லை. வயது வந்த எல்லா ஆண்மகனுக்கும், பெண் மகளுக்கும் வாக்குரிமை உண்டு என்று நிர்ணயித்தோம்.

இது காரணமாக, முன்னர் இருந்தது போல், பச்சை மஞ்சள் சிவப்பு என்பதைக் கூட நமது வோட்டர்களால் வேறுபடுத்திக் காண வகையில்லை. அவ்வளவு அறிவு வளர்ச்சி! ஆதலால் இரட்டைக் காளை, கதிர் அரிவாள், ஓலைக் குடிசை, உதய சூரியன், தாமரை, கூஜா, சைக்கிள் என்றெல்லாம் சின்னங்களை ஓட்டுப் பெட்டியில் ஒட்டி, அந்தப் பாகுபாட்டைத் தெரிந்தாவது ஓட்டளிக்கச் செய்திருக்கிறோம், நம் ஓட்டர்களை, இந்த முறையில் கூட எத்தனையோ குளறுபடிகள். இந்த முறை யெல்லாம் நமது தாயகமாம் இந்தியாவிலே.

இம்மட்டோடு, மக்களின் பிரதிநிதிகளாக யார் யார் வரலாம் என்பதற்கு யாதொரு நிர்ணயமும் இல்லை. யார் வேண்டு மானாலும் வரலாம் என்ற நிலை வேறே. இப்படித்தான் ஜனப் பிரதிநிதி, ஓட்டர்கள், ஓட்டளிக்கும் முறை என்றெல்லாம் நமது ஜனநாயகம் விரிந்திருக்கிறது.

'இந்த ஜனநாயகம் வாழ்க!' என்று ஊரோடு சேர்ந்து கூவுவதைத் தவிர, வேறு ஒன்றும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம் நம்மில் பெரும்பாலோர். இப்படி யெல்லாம் இன்று நடக்கும் நமது அருமைத் தமிழ் நாட்டிலே, அன்று, ஆம், ஆயிரம் வருஷங்களுக்கு முன் இந்தத் தேர்தல் முறை எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? இதைத் தெரிந்து கொள்ளவே இன்று நாம் உத்தர பேரூருக்குச் செல்கிறோம்.

உத்தரமேரூர் செங்கல்பட்டு ஜில்லாவிலே உள்ள ஒரு சிறிய ஊர்தான். இதற்குப் போகச் சென்னை - திருச்சி டிரங்க் ரோட்டிலே, சென்னையிலிருந்து நாற்பது மைல் வந்து, செங்கல்பட்டு, பாலாற்றுப் பாலம் எல்லாம் கடந்து மாமண்டூர் பக்கம் மேற்கு நோக்கிப் பத்தொன்பது மைல் போக வேணும். இல்லை என்றால் சென்னையிலிருந்து காஞ்சி வந்து, வேகவதி, பாலாறு எல்லாவற்றையும் கடந்து மாகறல் வழியாகவும் வந்து சேரலாம்.

ஊருக்குள் செல்லும் வழியிலேயே கடைத் தெருவையும் பஸ் ஸ்டாண்டையும் ஒட்டி, ஒரு சிறு மாடக் கோயில், மதில் எல்லாம் இடிந்து கிடப்பதால், ஊரில் உள்ள கழுதைகளும், மாடுகளும் இக்கோயில் பிராகாரத்திலேயே நிற்கும். இந்த அடையாளங்களை வைத்து எளிதாகக் கோயிலைக் கண்டு பிடித்து விடலாம்.

இந்தக் கோயிலில்தான் வைகுண்டப் பெருமாள் இருக்கிறார். அவருக்கு எண்னெய், தண்ணீர் கிடைப்பது மீக்க அரிது என்றாலும் இந்தக் கோயில் சுவர்களில்தான் ஒரு கல்வெட்டு, சோழ மன்னர்கள் காலத்து எலெக்ஷன் எப்படி நடந்தது என்று கூறுகிறது. இந்தக் கல்வெட்டின்படி, அந்தக் காலத்து மக்கள் வாக்குரிமைச் சீட்டுகளை ஓலையில் எழுதி, அதற்கென வைத்துள்ள ஒரு குடத்தில் போடுவார்கள். இப்படிப் போடும் முறையையே குடவோலை என்பார்கள்.

ஏரி வாரியம், தோட்ட வாரியத்துக்குப் பிரதிநிதிகளாக விரும்புபவர்கள் பெயர்களை ஓட்டர்கள் எழுதி, இக்குடத்தில் இடுவார்கள். பின்பு குடவோலையைப் பெரிய சபை கூட்டி வயது முதிர்ந்த நம்பியாரின் முன்னிலையில் ஒரு சிறுவனைக் கொண்டு, ஓலைகளை ஒவ்வொன்றாய் எடுத்து, ஒரு மத்தியஸ்தன் கையில் கொடுப்பார்கள். அவனும் உள்ளங்கையை அகல விரித்துக் காட்டி விட்டு ஓலையை வாங்கி வாசிப்பான். அவன் வாசித்த பிறகே, நம்பியாரும் சபையோரும் படிப்பார்கள்.

யாரூடைய பெயருக்கு அதிகச் சீட்டுகள் கிடைத்திருக் கின்றனவோ, அவர்களே தோட்டவாரியம் ஏரிவாரியம் முதலிய பொதுக் காரியங்களுக்கு நியமிக்கப் படுவார்கள். இதை யெல்லாம் விளக்கமாகவே கூறும் கல்வெட்டு.

இக் கல்வெட்டு பண்டித வத்ஸன், வீர நாராயணன், குஞ்சரமல்லன் என்ற விருதுப் பெயர்களைப் பெற்ற பராந்தகச் சோழன் காலத்தில் பொறிக்கப்பட்டது என்று அறிகிறோம். இவன் ஆட்சிக் காலம் கி.பி. 907 முதல் 950 வரை - நாற்பத்து மூன்று ஆண்டுகள். இக் கல்வெட்டின் ஒரு பகுதியைப் படிக்கிறீர்களா?

'ஸ்வஸ்தி ஸ்ரீமதுரை கொண்ட கோ பர
கேசரி வர்மருக்கு பாண்டு பதினாலாவது
நாள் பதினாறு காளியூர்க்கோட்டத்து
தன்கூற்று உத்தரமேரூர் சதுர்
வேதி மங்கலத்து ஸபையோம்:
இவ்வாண்டு முதல் எங்களுக்குப் பெரு
மானடிகள் எம்பெருமான் ஸ்ரீவீர
நாராயணன் ஸ்ரீபராந்தக தேவன்
ஸ்ரீமுகம் வரக்காட்ட, ஸ்ரீமுகப்படு
ஆக்ஞையால் சோழநாட்டுப்
புறங் கரம்பை நாட்டு, ஸ்ரீவங்க
நகர், காரநிசை கொண்ட யகரமவித்த
பட்டனாசிய, சோமாசிப் பெருமாள் இருந்து
வாரியமாக ஆட்டொருகாலும் ஸம்வத்ஸர
வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு
வியவஸ்தை செய்த பரிசாவது.......'

குடவோலை கல்வெட்டுள்ள கோயில்

என்ன, போதுமல்லவா! கல்வெட்டுத் தமிழ் என்றால் இப்படித்தான் இருக்கும். இதில் தலை வால் எல்லாம் கண்டு பிடித்துச் சரித்திரம் உருவாக்குவது என்பது சிரமசாத்தியமான காரியமே. அதை எல்லாம் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கே விட்டு விடலாம்.

இக்குடவோலைக் கல்வெட்டு சாஸனத்தின்படி யார் யார் வாரியப் பிரதிநிதிகளாகத் தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உடையவர்கள், யார் யார் தகுதியற்றவர்கள் என்றும் நாம் அறிகிறோம். எழுபது வயதுக்கு மேற் போகாதவர்களாகவும், முப்பத்தைந்து வயதுக்குக் குறையாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். தேர்தலுக்கு நிற்பவர்கள் சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்தவர்களாகவும், குணங்களில் குறைபாடு

சுந்தரவரதர் கோயில்

இல்லாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். வாரியங்களில் வேலை செய்து கணக்குக் காட்டாமல் இருந்தாரும், அவர்களது பந்துக்களும் தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர்கள். (இதை விடக் கடுமையான நிபந்தனைகள் நமது இந்தியச் சட்டத்திலும் இருக்கவே செய்கிறது என்றாலும், அத்தனையையும் சரிக்கட்டி விட்டு, உண்மையிலேயே தகுதி இல்லாதவர்கள் பலர் இன்றையத் தேர்தல்களுக்கு நின்று வெற்றி பெறுகிறார்கள் என்பதும் உண்மைதான்). குடவோலையைப் பற்றிய கல்வெட்டுத் தகவல்கள் இத்தனையையம் எளிதாகத் தெரிந்து கொண்டீர்கள், ஆனால் இவ்வளவு தகவலையும் வைகுண்டப்பெருமாள் கோயில் சென்றால் தெரிந்து கொள்ள முடியாது. கோயிலின் முன்பாகம் கடைகளால் மறைக்கப் பட்டிருக்கும். கல்வெட்டுகளைப் படிப்பது என்பது இயலாத காரியம். இடிந்து விழுந்த கற்களை - கல்வெட்டு இருந்த கற்களைத்தான் - மக்கள் தங்கள் தங்கள் வீட்டுக் கட்டடம் கட்ட எடுத்துப் போகிறார்கள் என்றும் கேள்வி. புதை பொருள் இலாகாக்காரர்கள் கொஞ்சம் விழிப்போடிருந்து இதையெல்லாம் தடுக்க வேணும்.

வந்ததோ வந்தோம், ஆதலால் படி ஏறி, மூடிய கதவிடுக்கு வழியாக வைகுண்டப் பெருமாளை வணங்கி விட்டு மேலே நடக்கலாம்.

இந்த உத்தரமேரூரில் பார்க்க வேண்டிய கோயில்கள் இன்னும் இரண்டு உண்டு. இங்கு அந்தக் காலத்தில் ஏழு கோயில்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். இக் கோயில்களில் எல்லாம் பெரியதும் சிறப்புடையதும் சுந்தர வரதராஜ சுவாமி கோயில்தான். இது அந்த ஊரில் உள்ள பெரிய தெருவின் மேலக் கோடியில் விமானங்கள் கோபரங்கள் எல்லாம் உடையதாயிருக்கிறது.

இக் கோயில் மூன்று தளங்களோடு கூடிய கோயில், அடித்தளத்தில் இருப்பவர் சுந்தர வரதராஜர். இவர் நின்ற கோலத்தில் சேவை சாதிப்பார். இவரைத் தவிர, இந்த அடித்தளத்திலேயே அச்சுத வரதன், அநிருத்தவரதன், கல்யாணவரதன், ஆனந்தவல்லித்தாயார், ஆண்டாள் முதலிய எல்லோரையும் தரிசிக்கலாம்.

அடுத்த தளத்தில் இருப்பவர் வைகுண்ட வரதர். அவருடன் கிருஷ்ணார்ச்சுனர், யோக நரசிம்மர், லக்ஷ்மி வராகன் எல்லோருமே இருக்கிறார்கள், இவர்களையும் தரிசித்த பின், மூன்றாவது தளத்தில் ஏறலாம். அங்கு நல்ல வசதியாகக் காலை நீட்டிக் கொண்டிருப்பவர் ரங்கநாதவரதர். இக்கோயில் இப்படி மூன்று தளங்களாகக் கட்டப் பட்டிருந்தாலும், அவைகளில் வீற்றிருக்கும் ஸ்திர பேதங்கள் நேருக்கு நேராக ஒன்றின் மேல் ஒன்றாக அமைக்கப் படவில்லை, இப்படி விமான அமைப்பும் மூர்த்திகளின் அமைப்பும் கொண்ட கோயில் தமிழ் நாட்டில் அதிகம் இல்லை.

இந்த இடத்தில் உள்ள சுந்தரராஜ வரதனைப் பிரும்மா ருத்ரன் பூதேவி மார்க்கண்டேயர் முதலியோர் வழிபட்டு முத்தியடைந்தார்கள் என்பது தல புராண வரலாறு. மார்க்கண்டனுக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான் என்பதுதானே புராணப் பிரசித்தம். அப்படி இருந்தும் இந்த வரதனிடம் அவர் ஏன் வந்து சேர்ந்தார் என்று சந்தேகிப் போம் நாம். தம் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க நம்மாழ்வாரே வருவார்.

புக்கடிமையினால் தன்னைக் கண்ட
மார்க்கண்டேயன் அவளை
நக்கபிரானும் அன்று உய்யக்கொண்டது.
நாராயணன் அருளே
கொக்கலர் நடந்தாழை வேலி
திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க
மற்றைத் தெய்வம் விளம்புதிரே!

என்பதுதானே நம்மாழ்வார் விளக்கம்.

இந்த உத்தரமேரூர் முழுவதையும் இப்படியே வரதர்களும் வைகுண்ட வாஸர்களுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றில்லை. ஊருக்கு மேல் கோடியில் கொஞ்ச இடத்தைக் கைலாசநாதருக்கும் அவருடைய குமாரர் சுப்பிரமணியருக்கும் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

சுப்பிரமணியர் கோயில் சமீபத்தில் எழுந்த கோயில். கைலாசநாதர் கோயிலையும் விமானத்தையும் பார்த்தாலே அது பல்லவர் காலத்திய கோயில் என்று தெரியும். அங்குள்ள கல்வெட்டுகளும் அதனையே கூறுகின்றன, நடுவிலே பிரதானமான கோயில், அதைச் சுற்றிச் சின்னஞ்சிறு கோயில்கள் எழுந்திருக்கின்றன. அக் கைலாசநாதர் கோயிலைத் தவிர, கேதாரீசுவரருக்கும் ஒரு கோயில் உண்டு. அக்கோயில் சுவரில் உள்ள கல்வெட்டுகள் பழைமையானவை. ஆனால் இன்று அதனைப் புதுப்பித்துக் கட்டியிருக்கின்றனர்.

சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டினால், ஒரு கோட்டை இருந்ததாகவும், அதில் யமுனைக் கரையிலிருந்து வந்த விராடராஜன் வசித்ததாகவும் சொல்வார்கள். இக்கோட்டையையே பின்னர் ராஜேந்திர சோழன் கைப்பற்றிக் கொண்டு, இந்த ஊருக்கே ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம் என்று பெயரிட்டிருக்கிறான். அவனே இங்கு வேதம் ஓதுதலுக்கும் ஓதுவித்தலுக்கும் நிபந்தங்கள் ஏற்படுத்தி, நிலங்களைத் தானம் வழங்கியிருக்கிறான்.

இவ்வூருக்கு அழகு தருவது ஊரின் மேற்கேயுள்ள ஏரி. மிகவும் பெரிய ஏர் அது. லோகமகா தேவி குளம் என்று கணக்குகள் கூறும். எந்த லோகமகா தேவி என்று தெரியவில்லை. சோழ மன்னரின் மனைவியரில் எத்தனையோ லோகமகா தேவிகள். அவர்களில் யார் பெயரால் இந்தக் குளம் வெட்டப்பட்டது என்பதை எல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கே விட்டு விடலாம் நாம். சுந்தரவரதனையம் கைலாச நாதரையும் வணங்கிய திருப்தியோடு ஊர் திரும்பலாம். குடவோலைக் கல்வெட்டைத் தாங்கியும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் வைகுண்டப் பெருமானுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரும் வடிக்கலாம்.