வேங்கடம் முதல் குமரி வரை 2/அழல் உருவன் அண்ணாமலையான்

விக்கிமூலம் இலிருந்து
3

அழல் உருவன்
அண்ணாமலையான்

ரு பலத்த போட்டி, பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும்தான். ஆம் தந்தையும் மகனுமே தம்மில் யார் பெரியவர் என்று வாதமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாதத்தைத் தீர்த்து வைக்க சிவபிரான் வருகிறார். எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார். இருவரும் கேட்கிறபடியாக இல்லை. கடைசியாக அவரே ஒரு போட்டியை ஏற்பாடு பண்ணி அந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று தீர்மானிக்கலாம் என்கிறார். இருவரும் இசைகிறார்கள்.

அவ்வளவுதான், அவர் வானுற ஓங்கி வளரும் ஒரு அழல் பிழம்பாக மாறுகிறார். அந்த அற்புத உருவின் அடியையோ முடியையோ யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என்று போட்டி அமைகிறது. மகா விஷ்ணு வராக உருவில் அடிதேடப் புறப்படுகிறார். அதல பாதாளங்களையே ஊடுருவிச் செவ்கிறார். அன்ன உருவில் பிரம்மா வானுலகில் பறந்து பறந்து செல்கிறார் முடிகாண, சென்று கொண்டே இருக்கிறார்கள் இருவரும். அடியையோ முடியையோ கண்டபாடாக இல்லை இருவருக்கும். இருவரில் விஷ்ணு கொஞ்சம் யோக்கியமானவர். ஆதலால் அடியைக் காண இயலவில்லை என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டு திரும்பிவிடுகிறார் பூலோகத்திற்கு. பிரம்மா அப்படித் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. ஏதாவது குயுக்திபண்ணி இறைவன் முடியைக்கண்டு விட்டதாகச் சொல்ல விரும்புகிறார்.

அந்தச் சமயத்தில் ஒரு தாழம்பூ தலை கீழாக வருகிறது. எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டால், இறைவன் முடியிலிருந்து வருகிறேன் அதிலிருந்து நழுவி கற்ப கோடி காலங்கள் ஆகிவிட்டன என்று சொல்கிறது தாழம்பூ. அதைச் சரிக்கட்டுகிறார் பிரம்மா. தன்னை இறைவன் முடியிலிருந்து பிரம்மா எடுத்து வந்ததாகப் பொய் சாட்சியம் சொல்லச் செய்கிறார். இவர்கள் சொல்வது பொய் என்று அறிய எவ்வளவு நேரம் செல்லும் இறைவனுக்கு. பிரம்மாவைப் பூலோகத்தில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படி சபிக்கிறார். தாழம்பூ தன்னுடைய பூசைக்கே உரியதல்ல என்று இறைவனால் விலக்கப்படுகிறது. விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக் கொண்டதை மெச்சி அவருக்குத் தன் அடியையும் முடியையுமே காட்டுகிறார். அதற்காக அழல் உருவில் இருந்த இறைவன் மலை உருவில் குறுகுகிறார். அப்படிப் பொங்கழல் உருவனாக இருந்த இறைவனே அண்ணா மலையானாக மாறி நிற்கிறார்.

இப்படி ஒரு கதை, அண்ணாமலை என்னும் மலை பூவுலகில் தோன்றியதற்கு. இந்தக் கதையை எல்லாம் இன்றைய பகுத்தறிவாளர்கள் ஒப்புக் கொள்வார்களா? கதைக்குப் பின்னால் இருக்கும் தத்துவ உண்மையைச் சொல்லாவிட்டால். தன்னைப் படைத்துக் காத்து அழிக்கும் தலைவனான இறைவனைக் காண மனிதன் எவ்வளவோ காலம் முயன்றிருக்கிறான். மக்களுள் இரண்டு பிரிவினர். ஒருவர் செல்வத்தால் சிறந்த சீமான்கள்; மற்றவர் அறிவால் உயர்ந்த அறிஞர்கள். செல்வத்தால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை என்று செருக்குடையவர் செல்வந்தர். அறிவால் அறிய முடியாத செயல் ஒன்றும் இருக்கவே இருக்காது என்ற கர்வம் உடையவர் அறிஞர். உண்மை என்ன என்றால் இவர்கள் இருவராலேயுமே இறைவனைக் காண்பது இயலாது என்பது தான். செருக்கும் கர்வமும் நிறைந்த உள்ளத்தால், இறைவன் முடியை என்ன. அடியையுமே காண முடியாது என்ற உண்மையைத்தான் விளக்குகிறது அண்ணாமலையார் கதை.

செல்வராலும் அறிஞராலும் அறியொணாத இறைவன் பின்னர் யாருக்கு எளியவனாகத் தன் உருவைக் காட்டுகிறான் என்றால், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் பக்தர்களுக்குத்தான். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய மணிவாசகர், அண்ணாமலையில் அந்தப் பொங்கழல் உருவமான அண்ணாமலையானை கண்டபோது 'ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி' என்ற தன் திருவெம்பாவைப் பாடலை ஆரம்பிக்கிறார். பத்தொன்பது பாட்டுப்பாடி முடிந்ததும் ஆதியாகிய முடி எங்கேயிருக்கிறது, அந்த மாகிய அடி எங்கே இருக்கிறது என்று கண்டுவிடுகிறார். இறைவன் காண்பதற்கு எளியவனாக அமைந்து விடுகிறான்.

ஆதியாம் பாதமலர், அந்தமாம் செந்தளிர்கள் என்றுதானே, திருவெம்பாவை இருபதாம் பாட்டு கூறுகிறது. ஆம், இறைவனது அடியும் முடியும் அவனது திருத்தாள்களே என்ற உண்மையைப் பக்தனான கவிஞன் எவ்வளவு எளிதாகக் கண்டு விடுகிறான். மகாவிஷ்ணு வையும் பிரம்மாவையுமே மண்ணைக் கௌவ வைத்துவிடுகிறானே அவன், 'விண்ணிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளக்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானாக' இருக்கும் இறைவனை எவ்வளவு எளிதாகச் சுட்டிக்காட்ட முடிகிறது கவிஞனுக்கு. இத்தனை அரிய உண்மைகளை விளக்கிக்கொண்டு நிற்கின்ற மலைதான் திரு அண்ணாமலை. அந்த மலையின் அடிவாரத்திலே கோயில் கொண்டிருக்கிறவர்தான் அண்ணாமலையார்.

அண்ணாமலையை நினைக்கின்ற போதெல்லாம், இல்லை அண்ணாமலையானைக் கண்டு தொழுகின்ற போதெல்லாம் இறை வழிபாடு உலகத்தில் எப்படித் தோன்றிற்று, என்ற உண்மையுமே விளக்கமுறும். மனிதனுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அவன் வாழ்வதற்கு ஒளியும் என்று அறிகிறோம். சூரியன் இல்லாத பகலும், சந்திரன் இல்லாத இரவும், நட்சத்திரங்கள் இல்லாத வானும் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்ப்போம்.

இறைவனது படைப்புகளில் எல்லாம் சிறந்த படைப்பு ஞாயிறுதானே. அதனிடமிருந்து எழுகின்ற ஒளியும் வெம்மையும் இல்லாவிட்டால் உலகமும் உயிர்களும் உய்வதேது? ஆதலால் சிந்திக்கத் தெரிந்த மனிதன் ஞாயிறையே, ஞாயிறு மூலமாக அதனை உலகுக்குத் தந்த இறைவனையே வந்தித்து வணங்க முற்பட்டிருக்கிறான். இப்படித்தான் எல்லாச் சமயத்தாரிடத்தும் இறை வழிபாடு ஒளி வழிபாடாகவே உரு எடுத்திருக்கிறது. இருள் போக்கும் தன்மையோடு, மருள் நீக்கும் தூய்மையும்,ஆக்கி,காத்து அழிக்கும் தன்மையும், அருவாய், உருவாய், அருவுருவாய் இயங்கும் இயல்பும், பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயினிடத்தே தான் மிகுந்திருக்கின்றன. இப்படி அக்கினியின் இயல்பும் இறைவன் இயல்பும் இணைந் திருப்பதன் காரணமாக ஒளி வழிபாடே தீ வழிபாடாக பரிணமித்திருக்கிறது.

'இறைவனை ஞானச் சுடர் விளக்காய் நின்றவன் என்று அப்பர் பாடினால், ஆதி அந்தம் ஆயினாய், சோதியுள் ஓர் சோதியானாய் என்று சம்பந்தர் வழிபடுகிறார். சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று மாணிக்கவாசகரும், தூண்டா விளக்கின் நற்சோதி என்று சுந்தரரும் இறைவனை அழைத்தால், கற்பனை கடந்த சோதி, கருணையே உருவமாக நிற்கிறான் என்று சேக்கிழார் பாடிப் பரவி மகிழ்கிறார். பயிலும் சுடர் ஒளி மூர்த்தி பங்கயக்கண்ணன் என்று நம்மாழ்வார் பாற்கடல் சேர்ந்த பரமனைக் குறித்தால், திருத்தக்கத்தேவர் சுடரிற் சுடரும் திருமூர்த்தி என்றே பாடுவார். இப்படியே அடியார்களும் கவிஞர்களும் இறைவனைப் பொங்கழல் உருவனாகவே காண்கிறார்கள். இந்த அனல் வழிபாடே பின்னர் திருவிளக்கு வழிபாடாக மக்களிடையே இன்றும் நிலைத்திருக்கிறது. இச்சிறிய திருவிளக்கு வழிபாடே, பெரிய கார்த்திகைத் திருநாளாக அண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது.

அண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம் ஓர் அற்புதமான அனுபவம். கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று லக்ஷக் கணக்கான மக்கள், ஆண் பெண் பிள்ளைகள் எல்லாம் அண்ணாமலையார் கோயில் பிராகாரத்திலும், நகரின் தெருக்களிலும், வீடுகளின் மாடிகளிலும் குழுமியிருக்கின்றனர். சரியாய் மாலை ஆறு மணிக்கு, முழுமதி வானில் எழுந்து கோபுர உச்சியைத் தடவி நிற்கிறது. அந்தச் சமயத்தில் கோயிலுள்ளே பஞ்ச மூர்த்திகளும் மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். அதிர்வெடி யொன்று கிளம்புகிறது வானை நோக்கி. ஐந்து கற்பூர ஆரத்தித் தட்டுகளை உயர்த்துகிறார்கள் அர்ச்சகர்கள். அதே சமயத்தில் அண்ணாமலையின் உச்சியில் உள்ள கற்பூரக் கொப்பறையிலிருந்து சுடர் எழுந்து வான் நோக்கி நிமிர்கிறது. "அரோகரா, அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷம் மக்களிடையே எழுகிறது உச்ச ஸ்தாயியிலே. பார்ப்பவர் உடல் புல்லரிக்கிறது; உள்ளம் விம்மிப் பெருமிதம் அடைகிறது பொங்கழல் உருவனைக் காணுவதால்.

இத்தனை அனுபவத்திற்கும் நிலைக்களனாய் இருப்பது தான், வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை என்னும் தலத்திலே உள்ள அண்ணாமலையார் கோயில். இக்கோயில் சுமார் இருபத்து
திருவண்ணாமலை

நான்கு ஏக்கர் விஸ்தீர்ணமுள்ள நிலத்தில் அமைந்திருக்கிறது. கோயிலைச்சுற்றி உயரமான மதில். மதிலின் நான்கு புறத்தும் நான்கு பெரிய கோபுரங்கள், கிழக்கே பிரதான வாயிலில் உள்ள ராஜகோபுரம் பதினொரு நிலைகளும் இருநூற்றுப் பதினேழு அடி உயரமும் உடையது. பரத சாத்திரத்தில் உள்ள தாண்டவ லட்சணம் என்னும் நாட்டிய நிலைகள் நூற்று எட்டையும் விளக்கும் சிற்ப வடிவங்கள் இருபக்கத்துச் சுவர்களிலும் நிறைந்து இருக்கும். இந்த வாயிலைக் கடந்தால் முதலில் நாம் சென்று சேர்வது கம்பத்து இளையனார் கோயில். அருணகிரியார் பிரார்த்தனைக்கு இரங்கி, பிரபுட தேவராயருக்கு முருகப் பெருமான் கம்பத்தில் காட்சி அருளிய இடத்தில் இந்தத் திருக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு வில்லேந்திய வேலன் மயில் மீது காலையூன்றி கம்பீரமாக எழுந்து நிற்கும் நிலை கலையுள்ளம் படைத்தவர் கண்களுக்கு ஒரு பெரு விருந்தாகும்.

இனி சர்வ சித்தி விநாயகர், பாதாள லிங்கேசுவரர், கோபுரத்து இளையனார் முதலியவர்களைத் தரிசித்த பின் நாம் கடக்க வேண்டியது வல்லாள மகாராஜன் கோபுரம். உடல் நோயால் நலிந்த அருணகிரியார் தன் உயிரை மாய்த்துக்கொள்ள இக்கோபுரத்தின் மீதேறி அங்கிருந்து குதித்தார் என்றும், அப்போது முருகப் பெருமானே அவரைத் தன் கையில் ஏந்தித் தரைதனில் விட்டார் என்றும், அன்று முதல், உடலில் மட்டும் அல்லாமல் உள்ளத்திலேயும் நலிவடையாதவராய் திருப்புகழ் பாடத்துவங்கினார் என்றும் அறிகிறோம். அருணகிரியாரைத் தாங்கியது போல நம்மையும் தாங்குவான் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் நாமும் கோபுரத்தில் ஏறிக் குதிக்க முனையலாம். இதன் பின் கிளிக் கோபுரத்தையும் பஞ்சமூர்த்தி மண்டபங்களையும் கடந்து சென்றால் அண்ணாமலையாரைக் கண்டு தொழலாம். நல்ல லிங்கத் திருவுருவில் அமைந்தவர் அண்ணாமலையார். பொன் போர்த்த நாகாபரணமும் நிறைய மலர்மாலைகளும் அணிந்தவராக காட்சி தருவார். இந்த அண்ணாமலையாரையே 'லிங்கோத்பவர்' என்று கலையுலகம் உருவாக்கியிருக்கிறது. ராஜராஜனும் அவனுக்குப் பின் வந்த சோழர்களும் கட்டிய கோயில்களில் எல்லாம் கோஷ்ட விக்கிரகமாக இவர் நின்று கொண்டி ருப்பதை நாம் அறிவோம்.

அண்ணாமலையான் ஆலய வெளித்தோற்றம்
அண்ணாமலையாரை வலம் வந்து, பின்னர் அவருக்கு இடப்பக்கத்திலே கோயில் கொண்டிருக்கிற உண்ணாமுலையம்மையைத் தரிசிக்கப் போகலாம். மகா மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் நவசக்தி மண்டபம், அங்கு உருவாகியிருக்கும் சக்திகளும், காலசம்ஹாரரும் வீணாதாரரும், இருபதாம் நூற்றாண்டு சிற்பிகளின் கைத்திறன். ஆதலால் அவைகளில் மிக்க கலை அழகை எல்லாம் எதிர்பார்த்தல் இயலாது. கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் அண்ணாமலையாரின் தர்ம பத்தினி உண்ணா முலையம்மை, கம்பீரமான திருஉரு அல்லாவிட்டாலும் அழகும் எழிலும் நிறைந்த உருவம், இந்த அண்ணா மலையார் கோயிலின் பெரும் பகுதி வல்லாள மகாராஜனால் கட்டப்பட்டது என்று கர்ணபரம்பரை கூறும்.

இந்த வல்லாளன் சரித்திர பிரசித்தி பெற்ற வனில்லை என்றாலும் இவனைப்பற்றி, இவனது பக்தியைப் பற்றி ஒரு கதை, ஒரு நாள் அண்ணாமலை அண்ணல் அடியவர் வடிவந்தாங்கி வல்லாள ராஜனிடம் வருகிறார். வந்தவர், 'அன்றிரவு தன்னுடன் தங்க ஒரு பெண் வேண்டும்' என்கிறார். இல்லை என்று சொல்ல அறியாத வல்லாளன் தேவதாசிகளில் ஒருத்தியை அனுப்ப விரைகிறார். அவர்கள் ஒவ்வொருவரும் அன்று பிறர் வயப்பட்டு இருப்பதாகத் தகவல் வருகிறது. மன்னன் இதை அறிந்து மயங்கியபோது, மன்னனின் இளையராணி சல்லமாதேவியே அடியவர்க்குத் தன்னுடலைத்தத்தம் பண்ண முனைகிறாள். ஆனால் பஞ்சணையில் தூங்கிய அடியவரைத் துயில் எழுப்ப அவர் பாதத்தைச் சல்லமை தீண்டலும் அவர் பச்சைப் பசுங் குழவியாகி வருகிறார். அரசன் அரசியரது பிள்ளைக் கலிதீர்க்க வந்த இந்த பிள்ளைப் பெருமான், பின்னர் இடபாரூடராய்க் காட்சி தந்து மறைகிறார். இப்படி வல்லாளன் மகனாக அவதரித்த அண்ணாமலையார் இன்று மாசி மகத்தன்று பள்ளிகொண்டாபட்டுக்கு எழுந்தருளி, வல்லாளனுக்கு வருஷாப்தீகச் சடங்கையெல்லாம் செய்கிறார். இறைவனின் பிள்ளைகளாக மக்கள் இருப்பதை அறிவோம். இறைவனே பக்தனது பிள்ளையாக மாறி அவனுக்கு ஈமக்கடன் செய்யும் முறையை இங்கேதான் அறிகிறோம்.

இக்கோயிலில் நூற்று ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தமச்சோழன், பரகேசரிவர்மன், ராஜேந்திர சோழதேவன், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜ தேவன் முதலிய சோழ மன்னர்களும். மாறவர்மன், குலசேகரன் முதலிய பாண்டிய மன்னர்களும் ஏற்படுத்திய நிபந்தங்களைக் குறிக்க எழுந்தவையே இதில் பெரும் பகுதியான கல்வெட்டுக்கள். கீழ் வாசலில் உள்ள ராஜ கோபுரத்தை விஜய நகர மன்னன் கிருஷ்ணதேவராயன் கட்டி முடித்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது, இவனே ஆயிரக்கால் மண்டபம், சிவகங்கைக்குளம் முதலியவற்றை உருவாக்கியவன் என்றும் அறிகிறோம். விஜயநகர நாயக்க மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்ட ராஜ நாராயண சாம்புவராயன் ஒரு கோபுரம் கட்டினான் என்றும் அந்தக் கோபுரத்தில் இருந்தே 'ஜீரணோத்தார தாஸகம்' என்ற கோயில் திருப்பணி விளக்க நூலை வாமதேவன் எழுதினான் என்றும் ஒரு கல்வெட்டு கூறுகின்றது. கோயில் நிரம்பப் புராதனமான கோயில் என்பதும், இக்கோயிலைச் சோழர், பாண்டியர், நாயக்கர், நகரத்தார் எல்லாம் கட்டியும் புதுப்பித்தும், நிபந்தங்கள் ஏற்படுத்தியும், பாதுகாத்திருக்கிறார்கள் என்றும் அறிகிறோம்.

கோயிலை விட்டு வெளியே வருமுன் உங்களை ஓர் அற்புதமான மூர்த்தியின் முன்னர் கொண்டு சென்று நிறுத்த விழைகிறேன். ராஜராஜசோழனுக்கு முந்திய சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களில் எல்லாம் கர்ப்பக் கிரகத்திற்கு வெளியே மேற்கே பார்த்த கோஷ்டத்தில் அர்த்தநாரியின் அழகிய சிலாவுருவம் இருக்கப் பார்ப்போம். ஆனால் அற்புதமாக செப்புச் சிலை வடிவத்தில் நடராஜரையும், திரிபுராந்தகரையும், பிக்ஷாடணரையும் வடித்தெடுத்த சோழநாட்டுச் சிற்பிகள் அர்த்தநாரியை மட்டும் செப்புச்சிலை வடிவில் அமைக்க மறந்துவிட்டிருக்கிறார்கள். இதன் காரணம் யாதோ? திருச்செங்கோட்டு மலையில் உள்ள கோயிலில் அர்த்தநாரி என்னும் மாதிருக்கும் பாதியன், கல்லிலும் செம்பிலுமே உருவாகி இருக்கிறான் என்றால் அது சோழர்களுக்கு மிகவும் பிந்திய காலத்தில்தான். ஆனால் அந்த மாதிருக்கும் பாதியனை, பஞ்சின் மெல்லடியாள் பாகனை அற்புதமான செப்புச்சிலை வடிவில் பார்ப்பது இத்தலத்தில்தான். நல்ல சோழர் காலத்துச் செப்புச் சிலை. நிரம்ப அழகு வாய்ந்த திருஉருவம். அந்தத் திரு உருவின் முன் நின்று,

உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய ஒருவன்,
பெண்ணாகிய பெருமான் மலை
திருமாமணி திகழ,
மண் ஆர்ந்தள அருவித்திரன்
மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவணம் அறுமே

என்று நாமும் ஞானசம்பந்தரோடு சேர்ந்து பாடினால் நமது வினைகளும் அகலும். ஆதலால் தயாராயிருங்கள் அடுத்த தீபத் திருநாளன்று அண்ணாமலை சென்று தொழ.