உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 2/ஆமாத்தூர் அம்மான்

விக்கிமூலம் இலிருந்து
2

ஆமாத்தூர் அம்மான்

ரு குடும்பத்திலே அண்ணன் தம்பி இருவருக்கிடையே பாகப் பிரிவினை. பாகப் பிரிவினை என்றால் அண்ணன் தம்பியரிடையே மனக் கசப்பு, அதனால் ஏற்படும் பிணக்குகள், விபரீதங்கள் எல்லாம் நாம் அறிந்தவைதானே. (சமீபத்தில் திரைப்படமாக வந்த பாகப்பிரிவினையைப் பார்த்தே எல்லோரும் பாகப் பிரிவினை என்றால் எத்தனை மனக் கசப்புகள் அண்ணன் தம்பிமாரிடையே வளர்கிறது என்று தெரிந்து கொள்கிறோமே. ஆனால் நான் சொல்லும் கதையிலோ, பாகப் பிரிவினையில் அண்ணன் தம்பிக்குச் செய்யும் துரோகத்தால் அவன் அழிந்தே போகிறான். தெய்வ கோபத்துக்கே ஆளாகிறான்.) குடும்பத் தலைவனான தந்தை இறக்கும் போது மூத்த மகன்தான் உடன் இருக்கிறான். இளையவன் வெளியூர் சென்றிருக்கிறான். பின்னரே இளையவன் ஊர் திரும்புகிறான். ஈமக் கடன்கள் எல்லாம் கழிந்ததும், தன் தந்தையின் செல்வத்தில் பங்கு எதிர்பார்த்த இளையவன் அண்ணனை அணுகித் தனக்கு உரியதைப் பகிர்ந்து கொடுக்க ஒன்றுமே வைக்கவில்லை, பாகம் பண்ணுவதற்கு ஒன்றுமே இல்லை' என்கிறான். தம்பி ஊரில் உள்ள பெரியவர்களிடம் முறையிடுகிறான், ஊராரும் தம்பிக்குப் பரிந்து பேசுகிறார்கள். ஆனால், அண்ணனோ ஒன்றுமே தன்னிடம் இல்லை என்று சாதிக்கிறான். ஊராரும் தம்பியும் 'அப்படியாயின் திருவாமாத்தூரில் உள்ள வட்டப் பாறைக்குச் சென்று அதில் கைவைத்துச் சத்தியம் செய்து கொடுக்கட்டும்' என்கிறார்கள். அந்த வட்டாரத்திலே மக்கள் சிக்கலான வழக்குகளில் தீர்ப்புக் காண வட்டப் பாறையைத் தான் நம்பி இருந்தார்கள்.

பாறையில் கை வைத்து யார் பொய்ச் சத்தியம் செய்தாலும், பாறை வெடித்து நாகம் ஒன்று கிளம்பிப் பொய்ச் சத்தியம் செய்தவரை மடிய வைத்து விடும் என்பது நம்பிக்கை. அண்ணன் இணங்குகிறான், வட்டப் பாறையில் சத்தியம் செய்து கொடுக்க. ஊரார் புடைசூழ அண்ணன் தம்பி எல்லோருமே வட்டப் பாறை வந்து சேர்கிறார்கள். பாறையை நெருங்கியதும், தன் கையில் வைத்திருந்த தடி ஒன்றைத் தம்பி கையில் கொடுத்து விட்டு, அண்ணன் 'எங்கள் குடும்பத்தில் முன்னோர் தேடி வைத்த பொருள் ஒன்றுமே என்னிடம் இப்போது இல்லை' என்று சொல்லி வட்டப் பாறையைத் தொட்டுச் சத்தியம் செய்கிறான். ஊராரும் தம்பியும் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை . அண்ணன் உண்மையே சொல்லி யிருக்கிறான் என்று நம்புகிறார்கள். தம்பி கையில் கொடுத்த தடியைத் திரும்ப வாங்கிக் கொண்டு அண்ணன் நடக்கிறான். எல்லோரும் ஊர் நோக்கித் திரும்புகிறார்கள்.

நாலு மைல் தூரம் வந்ததும் திடீரென்று அண்ணன் முன்னிருந்த சிறிய பாறை ஒன்று வெடிக்கிறது. அதிலிருந்து ஒரு நாகம் தோன்றி அவனைத் தீண்டி விடுகிறது. அங்கேயே விழுந்து சாகிறான் அவன். அவன் கையிலிருந்த தடியும் கீழே விழுந்து முறிகிறது. அப்படி முறிந்த தடியிலிருந்து எண்ணற்ற பொற்காசுகள் வெளியே சிதறுகின்றன. அப்போது விளங்குகிறது அண்ணன் செய்த சாகசம். முன்னோரின் பொருளையெல்லாம் பொற் காசுகளாக்கி அதனைக் கைத்தடிக்குள்ளே மறைத்து வைத்து தான் சத்தியம் செய்வதற்கு முன்னமேயே தம்பியிடம் கைத்தடியைக் கொடுத்து, அப்படிச் சொன்னதன் மூலமாக வட்டப்பாறை தெய்வத்திடமிருந்து தப்பி விடலாம் என்று அண்ணன் எண்ணியிருக்கிறான். பாவம், அவன் அறியான் 'அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்' என்பதை. பொய்ச் சத்தியம் பண்ணி விட்டுத்தடியைத் திரும்ப வாங்கிக் கொண்டதும் வட்டப் பாறைத் தெய்வம் தனது கோபத்தைக் காட்டி விடுகிறது. மூத்தவன் உயிர் நீத்த இடம் தும்பூர். திருவாமாத்தூருக்கு வடக்கே நாலு மைல் தூரத்தில் இருக்கிறது. வட்டப் பாறை இருப்பது திருவாமாத்தூர் கோயிலுள் அம்மன் சந்நிதிக்குப் பக்கத்தில். இங்கு கோயில் கொண்டிருப்பவள் முத்தாம்பிகை. அவளே வட்டப் பாறைத் தெய்வமாக விளங்குகிறாள் என்பர். அதற்கேற்றாற்போல் தும்பூரில் தோன்றிய பாம்பின் தலை அங்கிருக்க, அதன் வால் முத்தாம்பிகையின் திருவடிக்கீழ் நீட்டிக் கொண்டிருக்கிறது கல் உருவில். வட்டம் என்றால் ஏதோ வட்ட வடிவமான பாறை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். ஏதோ சிவலிங்கத்துக்கு என்று அமைந்த ஒரு சிறு சந்நிதிதான் அது. இப்படி வட்டப் பாறையால் பிரசித்தி அடைந்த தலம்தான் திருவாமாத்தூர்.

இந்த ஆமாத்தூர் விழுப்புரத்துக்கு மேற்கே நாலு மைல் தூரத்தில் இருக்கிறது. விழுப்புரம்-செஞ்சி ரோட்டில் விழுப்புர நகர எல்லை கடந்ததும் மேற்கு நோக்கி ஒரு மண் ரோடு செல்லுகிறது. அந்தப் பாதையிலே நடந்துதான் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் திருவாமாத்தூர் வந்து சேருவோம். காமதேனு நந்தி பசுக்கள் எல்லாம் மற்ற விலங்குகளின் தாக்குதலை எதிர்க்க வேண்டி இறைவனைப் பல வருஷங்கள் தவம் கிடந்து கொம்பு பெற்றன என்று கூறும் தல புராணம். அதனாலேதான் இந்தத் தலத்துக்குத் தாயூர் என்றும் ஆமாத்துர் என்றும் பெயர் வழங்கி யிருக்கிறது. இதனையே கோமாதுருபுரம் என்றும் புராணம் விவரித்துக் கூறுகிறது. கோயிலை அடுத்து பெண்ணையிலிருந்து பிரியும் பம்பை நதி ஓடுகிறது. கோயில் இந்த ஆற்றின்மேல் கரையில் இருக்கிறது இன்று. ஆனால், திருவாமாத்துர் கலம்பகம் பாடிய இரட்டையர்கள் காலத்தில் கோயில் பம்பையாற்றின் கீழ்க்கரையில் இருந்திருக்கிறது. இதைச் சரியாகக் கவனிக்காமல் இரட்டையர் ஒரு பாட்டுப் பாடுகிறார்கள் கலம்பகத்தில்.

ஆற்குழையோ, அரவோ, ஆயர்பாடிஅருமனையோ
பாற்கடலோ, திங்களோ தங்கும் ஆகம் பலபலவாம்
மாற்கமும் ஆகிநின்றார் மாதைநாதர் வலங்கொள்பம்பை
மேற்கரையில் கோயில் கொண்டார்புரம்சீறிய வெங்கனைக்கே

என்பது பாட்டு. இந்தக் கலம்பகம் அரங்கேறும்போது தான், பிறர் இப்பிழையைச் சுட்டிக் காட்ட இரட்டையர் மனம் மறுகுகிறார்கள். 'யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள் என்று பழியை அந்தக் கலைமகள் தலையிலே போடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அரங்கேற்றம் நடந்த அன்றிரவு ஒரு பெருமழை. ஆற்றிலே வெள்ளம். விடிந்ததும் பார்த்தால் கோயிலுக்கு இடப் பக்கத்தில் ஓடிய பம்பை, தன்னுடைய வழியை மாற்றிக் கொண்டு கோயிலுக்கு வலப்புறம் ஓடி இருக்கிறது; ஆற்றின் கீழ்க்கரை யிலிருந்த கோயில் இப்போது ஆற்றின் மேல் கரைக்கே சென்று விடுகிறது 'வலங்கொள் பம்பையின் மேற்கரையில் கோயில் கொண்டார்' என்று இரட்டையர்கள் பாட்டு நிலைத்து விடுகிறது. இன்றும் ஆறுமுன் ஓடிய நிலையும், இன்றைக்கு ஓடும் நிலையையும் காணலாம். எல்லாம் தெய்வத் தமிழ் செய்கின்ற காரியம்.

இத்தனை விவரங்களையும் தெரிந்தபின் இனி நாம் கோயிலுக்குள் செல்லலாம். இத்தலத்தில் கோயில்களை அமைத்திருப்பதில் ஒரு புதுமை. சோழ மன்னர்கள் கட்டிய கோயில்கள் பலவற்றில் இறைவன் கிழக்கு நோக்கியவராகவும், அவருக்கு இடப்பக்கம் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பிகையும் இருப்பார்கள். சில இடங்களில் அன்னையை, இறைவனுக்கு இடப்பாகத்தில் கிழக்கு நோக்கியவராகவே நிறுத்தியிருக்கிறார்கள். பின்னர் நாயக்க மன்னர்கள் இடப்பக்கமிருந்த அம்பிகையும் வலப் பக்கத்துக்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனையும் இல்லாமல் இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனியாக ஒன்றை ஒன்று எதிர் நோக்கிய வண்ணம் கோயில்கள் கட்டியிருக்கிறார்கள் இங்கே. இறைவன் கிழக்கு நோக்கிய வராகவும் இறைவி மேற்கு நோக்கிய வண்ணமும் இருக்கிறார்கள். இறைவன் கோயில் வாயிலில் கோபுரம் இல்லை. அடிப்படை போட்டது போட்டபடியே நிற்கிறது. இறைவன் திருப்பெயர் அபிராமேசுவரர். அழகியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரையே ஆமாத்தூர் அம்மான் என்று பாடிப் பரவுகிறார் திருஞான சம்பந்தர்.

புள்ளும் கமலமும் கைக் கொண்டார்
தாம் இருவர் உள்ளும் அவன் பெருமை
ஒப்பளக்கும் தன்மையதே

அள்ளல் விளை கழனி ஆமாத்தூர்
அம்மான் எம் வள்ளல் கழல் பரவா
வாழ்க்கையும் வாழ்க்கையே.

என்பது ஞானசம்பந்தர் தேவாரம். இந்த ஆமாத்தூர் அம்மான் சுயம்பு மூர்த்தி. பசுக்கள் வழிபாடு செய்த அடையாளமாகக் குளம்புச் சுவட்டைத் தம் தலையிலே தாங்கி நிற்கிறார். இவரையே இராமன் இலங்கையிலிருந்து திரும்பும்போது வழிபாடு செய்திருக்கிறான். அதனால் 'இராமனும் வழிபாடு செய்யும் ஈசன் இவர்' என்பது அப்பர் திருவாக்கு. ஞானசம்பந்தர், அப்பர் இருவரையும் தவிர சுந்தரராலும் பாடப் பெற்றவர் இவர். இந்த சுந்தரர்தான் பொல்லாதவர் ஆயிற்றே. இந்த ஆமாத்தூர் அழகனிடமும் பொற்காசு பெறத் தவறவில்லை.

பொன்னவன் பொன்னவன்
பொன்னைத் தந்து என்னைப்போகவிடான்
மின்னவன் மின்னவன்
வேதத்தின் உட்பொருளாகிய
அன்னவன் அன்னவன்
ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன்
என் மனத்து இன்புற்று இருப்பவனே

என்று பாடவும் அவர் மறக்கவில்லை.

இந்த இறைவன் கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள். முதல் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் இக்கோயில் கட்டிய அச்சுத தேவராயன் சிலை இருக்கிறது. இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், இராமர், காசி விசுவநாதர், சுப்பிரமணியர் எல்லாம் தனித் தனி சந்நிதிகள். முருகன், திருமகள் எல்லாம் இத்தலத்தில் வழிபட்டு அருள் பெற்றவர் என்பது புராண வரலாறு.

இறைவனை வணங்கிய பின் 'முத்தை வென்ற முறுவலாள்' கோயிலுக்குச் செல்லலாம். இக் கோயிலுக்குத்தான் நீண்டுயர்ந்த கோபுரம். அன்னையின் திருப் பெயர் முத்தாம்பிகை. அழகிய நாயகி அவள். அதனால்தான் அழகை ஆராதித்த அந்த அருணகிரியார் 'முத்தார் நகை அழகுடையாள்' என்றே பாடி மகிழ்கிறார். அற்புத அழகோடு கூடியவளும், வரப் பிரசித்தி உடையவளுமான அன்னையைத் தரிசித்துவிட்டு மேல் நடக்கலாம். அந்தக் கோயில் பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றித் தெற்குப்பக்கம் வந்தால், பிரசித்தி பெற்ற வட்டப் பாறை இருக்கிறது. இங்குள்ள லிங்கத் திருவுக்கும் வணக்கம் செலுத்திவிட்டு வெளியே வரலாம். தல விருட்சம் வன்னி. அடியிலே மூன்று கவடுகளோடு கிளம்பிப் பெரிய மரமாகவே வளர்ந்திருக்கிறது. இக்கோயிலின் வாயிற்புறத்தில் விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை இருவரும் இருக்கிறார்கள். சங்கு சக்கர தாரியாய் நிற்கும் விஷ்ணு துர்க்கை நல்ல சிலாவடிவம். அருள் பொழியும் அந்தத் திருவுருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றால் நேரம் போவதே தெரியாது.

ஆமாத்தூர் விஷ்ணு துர்க்கை

இத்தனையும் பார்த்து விட்டுத் திரும்பும்போது என் உள்ளத்தில் மட்டும் ஒரு குறை. எங்கள் திருநெல்வேலியிலே, எங்கள் தெருவை அடுத்த அனவரததானத் தெருவிலே பிறந்து, எனது பாட்டனாருக்கும் அவர்தம் சிறிய தகப்பனாருக்கும் குரு மூர்த்தியாக விளங்கிய வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் என்னும் ஒரு குறை. எங்கள் திருநெல்வேலி யிலே, எங்கள் தெருவை அடுத்த அனவரததானத் தெருவிலே பிறந்து, எனது பாட்ட னாருக்கும் அவர்தம் சிறிய தகப்ப னாருக்கும் குரு மூர்த்தியாக விளங்கிய வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் என்னும் முருகதாச சுவாமிகள் இந்தத் திருவாமாத்தூரில் ஒரு மடம் நிறுவினார்கள் என்றும், இங்கேயே ஞானசமாதி கொண்டார்கள் என்றும் சொல்வார்கள். அந்தச் சமாதியைப் பார்க்கவில்லையே என்று நான் ஏங்கினேன். உடனே உடன் வந்த நண்பர் பக்கத்தில் உள்ள நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்குதான் தூய்மையான சூழ்நிலையில், தவத்திரு முருகதாச சுவாமிகளின் சமாதி இருக்கிறது. சமாதியையும் சமாதியின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் சின்னஞ்சிறிய பழனி ஆண்டவன் திருக்கோலத்தையும் கண்டு வணங்கி விட்டுத் திரும்பினேன். முருகதாச சுவாமிகள் இத்தலத்தையும் இங்குள்ள மூர்த்தியையும் பற்றி மூவாயிரத்து நானூற்று எண்பத்து மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்று சொன்னாலே போதும். அதை விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை யல்லவா?

திருவாமாத்தூர் அம்மானின் கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகள் நடந்து முடிந்து, சென்ற சித்திரையில் கும்பாபிஷேகமும் நடந்திருக்கிறது. வசதியுள்ளவர்கள் எல்லாம் சென்று முத்தாம்பிகையையும் அபிராமேசுவரரையும் வணங்கலாம். ஒரேயொரு எச்சரிக்கை. பாகப் பிரிவினையில் தம்பியை ஏமாற்ற முனைந்த தமையனைப் போல் ஏதாவது ஏமாற்றுக் கச்சவடம் மட்டும் செய்து விடாதீர்கள். வட்டப் பாறை தெய்வம் பொல்லாதது.