வேங்கடம் முதல் குமரி வரை 2/ஆக்கூர் ஆயிரத்து ஒருவர்

விக்கிமூலம் இலிருந்து
16

ஆக்கூர் ஆயிரத்து ஒருவர்

ளவெண்பாப் பாடிய புலவர் புகழேந்தி என்பவர். இவரை ஆதரித்த சிற்றரசனோ சந்திரன் சுவர்க்கி. தன்னை ஆதரித்தவரை மறவாது, நானூறு பாடல்களே உடைய நளவெண்பாவில் நான்கு இடங்களில் பாராட்டுகிறார் புகழேந்தி, கவிச்சக்கரவர்த்தி கம்பனை ஆதரித்துப் போற்றியவர் வெண்ணெய் நல்லூர் சடையப்பர். பதினாயிரம் பாடல்கள் கொண்ட இராம கதையிலே கம்பன் இவரைப் பத்து இடங்களிலேதான் பாராட்டுகிறான். இந்தத் தகவலைச் சொல்லிக் கம்பனிடம் ஒரு தமிழ் அன்பர் கேட்கிறார்: 'கவிஞரே! நானூறு பாட்டில் அவர் நான்கு இடங்களில் சந்திரன் சுவர்க்கியைப் புகழ, நீர் பத்தாயிரம் பாடல்களில் பத்துத் தரம் தானே பாராட்டுகிறீர்; இதுதானா உமது நன்றி அறிதல்?' என்று. இந்தக் கேள்விக்குப்பதில் சொல்லக் கம்பன் சளைக்கவில்லை. 'உண்மைதான்! புகழேந்தி சந்திரன் சுவர்க்கியை நூற்றுவரில் ஒருவராக மதிக்கிறார். நானோ வள்ளல் சடையப்பரை ஆயிரத்தில் ஒருவராக மதிக்கிறேன்' என்பதுதான் அவனது பதில். இப்படி ஒரு வரலாறு கர்ண பரம்பரையில். வள்ளல் சடையப்பருக்கு ஆயிரத்தில் ஒருவர் என்ற பெயர் நிலைத்ததோ இல்லையோ? அறியோம். ஆக்கூரில் உள்ள தான் தோன்றி அப்பருக்கு 'ஆயிரத்து ஒருவர்' என்ற பெயர் நிலைத்திருக்கிறது. கதை இதுதான். சோழ அரசன் ஒருவன் ஆயிரம் பெயருக்கு அன்னம் அளிப்பது என்று சங்கல்பம் செய்து கொள்கிறான். எண்ணிக்கையில் கொஞ்சமும் குறைத்து சங்கல்பம் தவறிவிடக் கூடாதே என்று எண்ணி ஆயிரம் இலைகளைப் போட்டு விட்டு வந்திருந்த அந்தணர்களை எண்ணுகிறான் (அப்போதெல்லாம் பட்டினிப் பட்டாளம் நாட்டில் கிடையாதே. சாப்பாட்டுக்கே ஆள் பிடிக்கத்தானே வேண்டியிருக்கும்) வந்திருப்பவர்களை எண்ணினால் 999 பேர்கள்தான் இருந்தார்கள். கொஞ்சம் காத்திருந்து பார்த்து, ஒருவருமே வராததுகண்டு மன வருத்தத்தோடேயே வந்தவர்களை இலைகளில் உட்காரச் சொல்லிப் பரிமாற ஏற்பாடு செய்கிறான். பரிமாறிய பின் இலை ஒன்றுமே காலியாக இருக்கக் காணோம். இது என்ன? என்று புரியவில்லை அரசனுக்கே. உண்டுவிட்டு அந்தணர்கள் வெளியே போனபோது திரும்பவும் ஒவ்வொருவராக எண்ணிப் பார்க்கிறான். 999 பேர்தான் இருக்கிறார்கள். இது என்ன அதிசயம் என்று வியந்து நின்றபோது, இறைவனே அசரீரியாக 'அரசனே நாமே ஆயிரத்தில் ஒருவராக கிழவேதிய வடிவில் வந்து உன் சமாராதனையில் கலந்து கொண்டோம் மெத்த மகிழ்ச்சியோடு' என்கிறார். இறைவனது அருளை எண்ணி அரசன் மகிழ்கிறான். ஆயிரம் திருநாமம் படைத்தவன், ஆயிரத்தில் ஒருவனாக அங்கு வந்திருக்கிறான். இந்த ஆயிரத்தொருவராம் இறைவனைக் காணவே ஆக்கூருக்குச் செல்கிறோம் நாம்.

ஆக்கூர், மாயூரம்-தரங்கம்பாடி ரயில் பாதையில் உள்ள ஒரு சிறிய ஊர். ஆக்கூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அரை மைல் நடந்தால் ஊர் போய்ச் சேரலாம். இல்லை. மாயூரம் ஜங்ஷனில் இறங்கி காரிலோ, பஸ்ஸிலோ, வண்டியிலோ பத்து மைல் கிழக்கு நோக்கிச் சென்றாலும் சென்று சேரலாம். கோயில் கிராமத்தின் கீழ்ப் பகுதியில் இருக்கிறது. சிறிய கோயில்தான். ஆனால் அது நல்ல மாடக் கோயில். 'எண்தோள் ஈசற்று எழில் மாடம் எழுபது செய்து' உலகாண்டவன் கோச்செங்கட் சோழன். ஏதோ முந்திய பிறவியில் யானையினால் இடர் உற்றவன் ஆனதால், யானை ஏறாத, ஏற முடியாத கோயில்கள் எழுபது கட்டியிருக்கிறான் என்பது வரலாறு. இந்தக் கோயிலுக்குத் தான் தோன்றி மாடம் என்றும் இங்குள்ள இறைவனுக்குத் தான்தோன்றி அப்பர் என்றும் திருநாமம். மிகப் பழைய கோயில் இது என்பதைச் சம்பந்தர்,

நீரார வார் சடையான்,
நீறுடையான், ஏறுடையான்
காரார் பூங் கொன்றையினுள்
காதலித்த தொல்கோயில்

என்றுதானே பாடி அறிவிக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள மூர்த்தியும் சுயம்பு மூர்த்திதான். அதுதான் தெரிகிறதே, தான்தோன்றி ஈசுவரர் என்று சொல்வதிலேயே. கோயிலுள் சென்று தான்தோன்றி நாதரை வணங்கி விட்டு, அவரது துணைவியாம் வாள் நெடுங் கண்ணியையும் கண்டு தொழலாம். ஆனால் அன்று சிற்பி அமைத்த வாள்நெடுங் கண்ணி உருவில் ஏதோ சிறிது ஊனம் உற்று விட்டதால் அவளை வெளியே மண்டபத்தில் கொண்டு வந்து நிறுத்தி யிருக்கிறார்கள். பின்னால் இன்னொரு அம்மையைச் சிலையாக வடித்து நிறுத்தி இருக்கிறார்கள் கர்ப்பக் கிருஹத்துக்குள்ளே. இந்த அம்பிகையின் திரு வுருவில் அந்தப் பழைய அம்பிகை முகத்திலுள்ள களை இல்லை. இவர்களோடு நடராஜருக்கு ஒரு தனிச் சந்நிதி. அங்கு நடராஜர் சிவகாமி அம்மையுடன் எழுந்தருளியிருக்கிறார். இவர்களைத்தான் எல்லாக் கோயில்களிலுமே பார்க்கிறோமே. அந்த ஆயிரத்தொருவரை இங்கே வடித்து வைத்திருக்கிறார்களா என்று அறியத் துடிக்கும் உங்கள் ஆத்திரத்தை அறிவேன். ஆம்! அவரையுமே செப்புச் சிலையாக வடித்து மகாமண்டபத்தில் ஒரு மேடைமீது நிறுத்தியிருக்கிறார்கள். ஏதோ கிழ வேதியராக வந்தார் என்பதுதான் வரலாறு. என்றாலும் மூர்த்தியாக நிற்பவர் கிழவராக இல்லை. நல்ல வாலிப முறுக்கோடேயே நிற்கிறார். கையில் ஒரு கோல் பிடித்திருக்கிறார், கோல் ஏதோ நன்கு ஊன்றிக் கொள்வதற்காக ஏற்பட்ட ஒன்று அன்று; அவரது கௌரவத்துக்கு ஏற்ற ஒன்றாகத்தான் இருக்கிறது. கோலின் கைப்பிடியில் அபூர்வ வேலை. பிடியின் இரண்டு புறங்களிலும் இரண்டு கிளிகள் இருக்கின்றன. நல்ல சந்திரசேகர மூர்த்தம். இரண்டு கைகளில் மானும் மழுவும். வலது கையில் ஒன்று அபயகரம்; இடது கை ஒன்று தாழ்ந்து கோலூன்றி நிற்கிறது. நல்ல சோழர் காலத்திய செப்புப் படிமம். இக்கோயிலுக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். அப்பர் வந்திருக்கிறார். சம்பந்தரையும் அவருடன் வந்த அடியவர்களையும் அங்குள்ள வேளாள மக்கள் மிகவும் நன்றாக உபசரித்திருப்பார்கள் போல் இருக்கிறது. ஆதலால் கோயிலைப் பாடவந்த சம்பந்தர் வேளாளரது வள்ளன்மையையும் சேர்த்தே பாடுகிறார்.

வாளார்கண் செந்துவர்வாய்
மாமலையான் தன்மடந்தை
தோள் ஆகம் பாகமாப்
புல்கினான் தொல்கோயில்,
வேளாளர் என்றவர்கள்
வள்ளண்மையான் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரில்
தான் தோன்று மாடமே,

என்பதுதான் அவர் பாடிய தேவாரம். அப்பரும் தான்தோன்றியப்பரை நாவாரத் துதிக்கிறார்.

கண்ணார்ந்த நெற்றி உடையார்
போலும், காமனையும் கண் அழலால்
காய்ந்தார்போலும்,
உண்ணா அருநஞ்சம் உண்டார்
போலும், ஊழித்தீயன்ன
ஒளியார்போலும்,
எண்ணாயிரங்கோடி பேரார்
போலும், ஏறு ஏறிச்செல்வர்
இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும்மேயார்
போலும், ஆக்கூரில்
தான்தோன்றி அப்பனாரே.


என்பது அப்பர் பாடிய பத்துப் பாட்டில் ஒரு பாட்டு. இந்த ஆக்கூரில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து வளர்ந்து முத்தியடைந்திருக்கிறார். அடியார்களை எல்லாம் விருப்புடன் வரவேற்று உபசரித்து அன்னம் அளித்து அஞ்செழுத்து ஓதி ஈசன் திருவடி மறவாமல் வாழ்ந்து வந்தவர் அவர் என்பர் சேக்கிழார். சீர்கொண்ட வள்ளல் சிறப்புலியல்லவா அவர்.

இக்கோயிலிலும் கல்வெட்டுக்களுக்குக் குறைவில்லை. அதில் ஒரு கல்வெட்டு சோழமன்னர் காலத்தில் கிராம நிர்வாகம் எப்படி நடந்தது, அரசியல் எப்படித் தாழ்ந்திருந்தது என்பதைக் குறிக்கும். விஷயம் இதுதான்: இந்தக் கிராமத்தையடுத்த நடுவில் கோயில் என்ற பகுதியில் ராஜராஜ விண்ணகரம் என்று ஒரு விஷ்ணு கோயில் இருக்கிறது. இங்குள்ள பெருமானைத் திருமஞ்சனம் ஆட்ட வைகாசி மாதத்தில், சிவன் கோயிலை அடுத்துள்ள ஆனந்த புஷ்கரணிக்கே எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்த வழக்கத்தை மூன்றாம் ராஜராஜனது அதிகாரிகள் தடை செய்திருக்கிறார்கள். கி.பி. 1230 ல் இப்படி ஏற்படுத்திய தடை சரியானதன்று என்று கிராம நிர்வாகிகளான கூற்றப் பெருமக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் ராஜராஜ விண்ணகர் எம்பெருமானைக் காவிரிக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு பண்ணி அதற்குப் பாதை ஒதுக்க நிலங்களைத் தானம் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலங்களை இறையிலி நிலங்களாகக் கணக்குகளில் பதிந்திருக்கிறார்கள். இதைக் கல்வெட்டிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். இன்னுமொரு ரசமான வரலாறு, மூன்றாம் ராஜராஜன் காலத்தில் முக்கிய படைத் தலைவனான கோப்பெருஞ் சிங்கனைப் பற்றியது. இந்தக் கோப்பெருஞ் சிங்கன் மைசூரிலிருந்த ஹொய்சலர்களை யெல்லாம் அடக்கி வெற்றி கண்டு கோப்பெருஞ் சிங்கன் பரகேசரி என்ற விருதுப் பெயரோடு சோழ நாட்டில் காவிரிக் கரையில் உள்ள கோயில்களுக்கு வந்து மூர்த்திகளைத் தரிசித்திருக்கிறான். அவன் ஆக்கூருக்குமே வந்திருக்கிறான். ஆக்கூர் மக்கள் அன்றைய வரிகளைக் கொடுக்க இயலாதவர்களாக வெளியூர் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் கொடுக்க வேண்டிய வரிகளையெல்லாம் தள்ளுபடி செய்து, திரும்பவும் அவர்களை ஆக்கூருக்கே அழைத்துக் குடியேற்றியிருக்கிறான். சோழர் காலத்தில் மாத்திரம் என்ன? பின்னர் வந்த நாயக்க மன்னர்கள் காலத்திலும் ஆக்கூர் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகவே இருந்திருக்கிறது. கி.பி. 1517-ல் விஜயநகர மன்னன் கிருஷ்ணதேவராயர் தம்முடைய திக்விஜய ஞாபகார்த்தமாக, கோயில் நிலங்களுக்கு விதித்திருந்த வரி பதினாயிரம் வராகனை தள்ளுபடி செய்திருக்கிறார். அப்படி வரித் தள்ளுபடி செய்யப்பட்ட கோயில்களிலே இந்த ஆக்கூர் தான்தோன்றி மாடமும் ஒன்று என்று வரலாறு கூறுகிறது.

இந்த வரலாற்றை யெல்லாம் படித்துத் தெரிந்த நான், இந்தத் தலம் சென்றிருந்தபோது, அன்று அந்த நடுவிற் கோயிலில் இருந்த ராஜராஜ விண்ணகரத்து எம் பெருமானைத் தேடித் திரிந்தேன். ஊராரோ அல்லது சிவன் கோயில் அர்ச்சகர்களோ அந்தக் கோயில் இருக்கும் இடம் சொல்லவில்லை. ஆனால் ஊர்ப்பிள்ளைகள் சிலர் ஊருக்குத் தென்பக்கத்தில் தோப்புக்குள்ளிருந்த ஒரு சிறு கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்தக் சிறு கோயிலின் கதவோ சாத்தியிருந்தது. அக்கோயில் அர்ச்சகரைத் தேடிப் பிடிப்பதோ மிக்க சிரமமாக இருந்தது. அவரைக் கண்டு பிடித்துக் கோயிலைத் திறக்கச் சொன்னால் அந்தக் கோயில் ராஜகோபாலன் கோயில் என்று தெரிந்தது. கோயிலில் உள்ள கற் சிலைகளைவிட அங்கிருந்த செப்புச் சிலைகள் மிக்க அழகாயிருக்கின்றன.

அன்று கோகுலத்தில் பசுக்களை மேய்த்துத் திரிந்த கோபாலன் நல்ல ராஜ வடிவத்திலே உருவாகியிருக்கிறான். பின்னால் நிற்கும் பசுவின் பேரில் சாய்ந்து கொண்டு ஆநிரை மேய்க்கும் அழகான மூர்த்தியாக நிற்கிறான். அவன் அணிந்திருக்கும் அணிகளும் பணிகளும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. அவன் மாத்திரந்தானா நிற்கிறான் அங்கே? இல்லை, ஸ்ரீதேவி பூதேவி சமேதனாக நிற்கிறான். சோழர் காலத்துச் செப்புப் படிமங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த வடிவங்கள். ஏதோ இவையெல்லாம் கவனிப்பாரற்ற ஒரு சின்னக் கோயிலுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கின்றன. இப்படி எத்தனை எத்தனை வடிவங்களோ இந்தத் தமிழகத்துக் கோயில்களில்? ஆக்கூர் தான்தோன்றி நாதரையும், ஆயிரத்து ஒருவரையும் பார்க்கப் போன இடத்திலே இந்த ராஜகோபாலன் தம்பதிகளையும் பார்க்கக் கிடைத்தது நமது பாக்கியமே. இதனால்தான் சம்பந்தர் 'விண்ணொளிசேர் ஆக்கூர்' என்று பாடுகிறார். இப்படி சம்பந்தர் பாடிய பெருமையைச் சேக்கிழார் நினைக்கிறார்.

பொன்னிநீர் நாட்டின் நீடும்
பொற்பதி'புவனத்து உள்ளோர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு,
இல்லை என்னாதேஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த
மறைத்திரு ஆக்கூர் அவ்வூர்

என்பதுதானே ஆக்கூரைப் பற்றி அவரது அறிமுகம். சைவ வைணவ பேதமில்லாமல் நாமும் எல்லா மூர்த்திகளையும் பார்த்து வணங்கிவிட்டே மேல் நடக்கலாம்.