வேங்கடம் முதல் குமரி வரை 2/நனிபள்ளி நற்றுணை நாயகர்

விக்கிமூலம் இலிருந்து
17

நனிபள்ளி நற்றுணை நாயகர்

சோழப் பேரரசர்களில் மிக்க பெருமை யுடையவன் ராஜராஜன். அவனையும் விடப் புகழ்படைத்தவன் அவன் மகன் ராஜேந்திரன். இவன் கி.பி. 1014 முதல் 1044 வரை அகண்ட தமிழகத்தை ஆட்சி புரிந்திருக்கிறான். தந்தை இட்ட பெயர் மதுராந்தகன் என்றால், முடி சூடியபோது ராஜேந்திரன் என்று அபிஷேகப் பெயர் சூடிக்கொள்கிறான். இவனும் தந்தையைப் போலவே பிறநாடுகளின் பேரில் படை கொண்டு சென்று அந்தந்த அரசர்களை வெற்றி கண்டு தமிழகத்தை மிகவும் விரிவுடையதாக ஆக்கியிருக்கிறான்.

இவன் ஆட்சியின் கீழிருந்த சோழ சாம்ராஜ்யம் இன்றையச் சென்னை ராஜ்யத்தையும், மைசூரில் ஒரு பகுதியையும், ஈழ நாட்டையும் கொண்ட பெரிய ராஜ்யமாக இருந்திருக்கிறது. இவனுடைய ஆசை எல்லாம் வங்காளம் முதலிய வடநாடுகளையும் வென்று கங்கையையும் காவிரியையும் இணைத்து விடுவது என்பதுதான். அதனால் வடக்கு நோக்கிப் படையெடுத்து அங்குள்ள அரசர்களை வென்று மகிபாலன் என்பவனது தலையில் கங்கை நீர் நிரப்பிய குடம் ஒன்றை ஏற்றித் தன் தலைநகருக்கே கொண்டு வந்திருக்கிறான். இப்படிக் கங்கையைக் கொண்டுவந்த பேரரசனைக் கங்கை கொண்டான் என்றே பாராட்டி யிருக்கிறார்கள். இத்துடன் விட்டானா இவன்? கப்பற் படைகளைக் கடல் நடுவில் செலுத்தி இன்றைய மலேயாவில் ஒரு பகுதியான கடாரத்தையும் கைப்பற்றியிருக்கிறான். அதனால்தானே கல்வெட்டுக்களில் எல்லாம் 'பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்' என்று இவன் மெய்க்கீர்த்தி பாடப்பட்டிருக்கிறது. இப்படி இவன் கங்கையையும் கடாரத்தையும் கொண்டதை,

களிறு கங்கைநீர் உண்ண, மண்ணையில்
காய் சினத்தோட கலவு செம்பியன்
குளிருதெண்திரை குண கடாரமும்
கொண்டு மண்டலம்குடையுள் வைத்ததும்

என்று ஜயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியில் பாராட்டியிருக்கிறார். கங்கை கொண்டதன் ஞாபகார்த்தமாகக் கங்கை கொண்ட சோழிச்சரம் எழுந்து நிற்பதை அறிவோம். மேலும் தெற்கே திருநெல்வேலி வரை இவன் யாத்திரை செய்திருக்கிறான் என்பதை வலியுறுத்த அங்கே கங்கைகொண்டான் என்றே ஒரு சிறிய கிராமத்துக்குப் பெயரிட்டு இருக்கிறான் என்பதையும் அறிவோம். ஆனால் கடாரம் கொண்ட வெற்றியை நிலைநிறுத்த ஒரு ஞாபகச் சின்னம் நிறுவினான் என்று சரித்திரம் திட்டமாகக் கூறவில்லைதான். கங்கை கொண்டதைவிட, கடல் கடந்து சென்று கடாரம் கொண்டதுதானே பெரிய வெற்றி. தன்னுடைய சிறந்த கப்பற்படையைக் கடல் நடுவில் செலுத்திக் கடாரத்து அரசனாகிய சங்கிராம விஜயோத் துங்கவர்மனைப் போரில் புறங்கண்டு, அவனது பட்டத்து யானையையும் பெரும் பொருளையும் வித்யாதர தோரணத்தையும் கவர்ந்து கொண்டு ஸ்ரீவிஜயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், பப்பாளம் முதலிய இடங்களைக் (ஆம்! இன்றைய மலேயா, சுமத்ரா முதலிய தீவுகளில் உள்ள நகரங்களின் அன்றையப் பெயர்களே இவை) கைப்பற்றினான் என்று இவன் மெய்க்கீர்த்தி சிறப்பாகச் சொல்கிறது, கடாரம் இன்றைய மலேயாவின் மேல்கரையிலுள்ள 'கெடா' என்ற பெயருடைய நகரமே என்றும் தெரிகிறோம். இப்படிக்கங்கா நதியும், கடாரமும் கைக் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோனை, கங்கை கொண்டான் என்று எப்படி அழைத்தார்களோ, அப்படியே கடாரம் கொண்டான் என்றும் அழைத்திருக்க வேண்டுமே. கங்கை கொண்ட சோழீச்சரம் போல், கடாரம் கொண்ட சோழீச்சரம் ஒன்றும் உருவாக்கியிருக்க வேண்டுமே. அப்படி உரு வாக்காமலா இருந்திருப்பான் என்று எண்ணிக் கொண்டே சரித்திர ஏடுகளைப் புரட்டினேன். சோழ நாட்டில் உள்ள தலங்களின் பெயர்களை அலசி ஆராய்ந்தேன். கண்டு பிடித்தேன் ஓர் உண்மையை, தஞ்சை ஜில்லாவிலே மாயூரத்துக்கு வடகிழக்கே எட்டு மைல் தூரத்தில் ஒரு சிறிய ஊர் ‘புன்செய்' என்ற பெயரில் இருக்கிறது. இந்த ஊருக்கே தேவாரத்தில் நனிபள்ளி என்ற பெயரும் வழங்கியிருக்கிறது. ஆனால் அந்த வட்டாரத்தில் விசாரித்தால் புன்செய் என்ற பெயரும் தெரியாது, நனிபள்ளி என்ற பெயரும் தெரியாது. மக்கள் இந்த ஊரை அழைப்பது எல்லாம் 'கிடாரம் கொண்டான்' என்ற பெயரில்தான். கடாரம் கொண்டான் என்ற மிக்க பெருமையோடு வழங்க வேண்டிய பெயர் எப்படிச் சிதைந்து கிடாரம் கொண்டான் ஆகிவிட்டது என்று தெரிகிறபோது கொஞ்சம் வருத்தம் ஏற்படவே செய்கிறது. இன்று நாம் இந்தக் கிடாரம் கொண்டான் என்னும் நனிபள்ளிக்கே செல்கிறோம்.

இந்த நனிபள்ளிக்கு மாயூரத்திலிருந்து காரிலோ, வண்டியிலோ போகலாம். இல்லை, மாயூரம்-தரங்கம்பாடி ரயில் வழியில், செம்பொன்னார் கோயில் ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக் கொண்டும் செல்லலாம். நல்ல மண் ரோடுதான். ஆதலால் விரைவில் போய் விரைவில் வந்துவிட முடியாது. கொஞ்சம் சாவதானமாகவே போய்த் திரும்ப வேண்டும். செம்பொன்னார் கோயில், இல்லை, அந்தச் செம்பொன் செய் கோயில் சேர்ந்ததுமே அங்கு கோயில் கொண்டிருக்கும் சொர்ணபுரி ஈசுவரரையும் மருவார் குழலியையும் கண்டு வணங்கலாம். 'தேவர் சென்று வணங்கும் செம்பொன் பள்ளியான் மூவரால் முதலாய் நின்ற மூர்த்தி' என்பர் அப்பர், இக்கோயிலில் விசேஷமாகக் காண வேண்டியவை ஒன்றும் இல்லைதான். என்றாலும் கர்ப்பக் கிருஹத்தில் இருக்கும் மருவார் குழலி மற்றையக் கோயில்களில் காண்பது போன்று நான்கு திருக் கரங்களோடும் சமபங்க நிலையிலும் நின்று கொண்டிருப்பவள் அல்ல. மதுரை மீனாக்ஷியைப் போல் இரண்டே திருக்கரம். அதிலும் இடக்கரம் ஒயிலாகத் தொங்க விடப்பட்டும், வலக்கரம் உயர்ந்து செண்டேந்தியும் இருக்கும். செப்புச் சிலையில் வடிக்கும் அழகை, கற்சிலையிலேயே அமைத்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறான் சிற்பி. சந்தணக் காப்பிட்டுக் கண் குளிரக் கண்டால் அம்மையின் அழகு முழுவதையும் அப்படியே அள்ளிப் பருகலாம்.

மருவார் குழலியைக் கண்டு தரிசித்த தெம்போடேயே நனிபள்ளி நோக்கி நடக்கலாம். போகிற வழியிலேயே இந்த நனிபள்ளிதான், திருஞானசம்பந்தரது தாயாகிய பகவதி அம்மையார் பிறந்த தலம் என்பார்கள். சின்னஞ்சிறு பிள்ளையாய்த்தாளம் ஏந்திப் பாடிக்கொண்டே சென்ற ஞானசம்பந்தர், தம் பாட்டன் பாட்டி வீட்டுக்கு வராமலா இருந்திருப்பார்? வந்திருக்கிறார், அங்குள்ள நற்றுணை அப்பரைப் பாடியும் இருக்கிறார்.

தோடு ஒரு காதனாகி
ஒரு காது இலங்கு
சுரிசங்கு நின்று புரளக்,

காடு இடமாக நின்று
கன லாடும் எந்தை
இடமாய காதல் நகர்தான்,
வீடு உடன் எய்துவார்கள்
விதி என்று சென்று
வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுஉடன் ஆடு செம்மை
ஒலி வெள்ளம் ஆரும்
நனிபள்ளி போலும் நமர்காள்

என்பதே சம்பந்தர் பாடிய பாடல். நாமும் சம்பந்தர் பாடிய பாடல்களைப் பாடிக் கொண்டே செல்லலாம். (நான் இந்தக் கோயிலுக்குச் சென்றது நான்கு வருஷங்களுக்கு முன். அன்று

நனிபள்ளி விமானம்

கோயில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. கோபுர வாயிலுக்குக் கதவு கூட இல்லை . ஏதோ தட்டி வைத்து அடைத்திருந்தார்கள். நாடெல்லாம் கும்பாபிஷேகம் நடக்கும் இந்நாளில், இக்கோயிலும் செம்மை செய்யப்பட்டிருக்கிறதோ என்னவோ?') இந்தக் கோயில் உள்ளே இருக்கிற மூர்த்தியை விட வெளியே கோஷ்டத்தில்

இருப்பவர்கள் பிரமாதம். கர்ப்பக் கிருஹத்தைச் சுற்றிய பிராகாரம் ஒன்றே ஒன்றுதான். அந்தப் பிராகாரமும், கோயிலின் கர்ப்பக் கிருஹமும் முழுக்க முழுக்கக் கல்லாலேயே கட்டப்பட்டவை. ராஜேந்திரன் தன் கடார வெற்றியைக் கொண்டாக் கட்டியிருக்க வேண்டும். இக்கோயிலின் மேற்கு நோக்கிய கோஷ்டத்தில் நல்ல லிங்கோத்பவர் இருக்கிறார். தெற்குக் கோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தியும் விநாயகரும் இருக்கிறார்கள். விநாயகர் நல்ல காத்திரமான உரு. பருத்த தொந்தியுடன் நன்றாகச் சப்பணம் கூட்டியே உட்கார்ந்து விடுகிறார் அவர். வட பக்கத்துக் கோஷ்டத்திலே பிரம்மா நின்ற திருக்கோலம். துர்க்கை மிகவும் கம்பீரமாக நிற்கிறாள், அங்கு சக்கரம் ஏந்தியகையாளாய். ஒருகரத்தால் அபயம் அளித்து ஒரு கையை இடுப்பில் வைத்து, ஒரு கால் மடக்கி ஒரு காலை நீட்டி, கன கச்சித
அறுமாமுகன்

அழகோடு உருவாகியிருக்கிறாள் கல்லிலே. இரண்டு முனிவர்கள் காலடியிலே வணங்கி நிற்கிறார்கள். கலை உலகிலே ஒரு அற்புத சிருஷ்டி. இந்த ஐந்து விக்கிரகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே, இந்தக் கோயிலுக்கு உங்களை அழைத்து வந்திருக்கிறேன் இத்தனை தூரம்.

இவர்களையெல்லாம் கண்டு களித்த பின்னரே நற்றுணை அப்பரையும், மலையான் மடந்தையையும் தொழுது வணங்கக் கோயிலுள் நுழையலாம். நான் போனபோது அர்ச்சகர் அருமையாக என்னை அர்த்த மண்டபத்துக்கே அழைத்தார். நானோ மிக்க பணிவுடனே, மகா மண்டபத்திலேயே நின்று கொண்டு தரிசித்தேன். இந்தப் பணிவுக்குக் காரணம் 'என்றும் பணியுமாம் பெருமை' என்பதனால் அல்ல. அர்த்த மண்டபத்தின் முன் வாயில் நிலையில் மேல் தளத்துக்கல் இரண்டாகப் பிளந்து எப்போது கீழே விழுவோம் என்று காத்துக் கொண்டிருந்ததை நான் கண்டுவிட்ட காரணமே. அர்ச்சகருக்கு இருந்த மனத் துணிச்சல் எனக்கு இல்லை. ஆதலால் வெளியே நின்றே தரிசித்தேன். இந்தக் கோயிலில் சில செப்புப் படிவங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவைகளில் ஒன்று மயிலேறி விளையாடும் மாமுருகன் திருஉரு. இந்த முருகனுக்குப் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோள்களும் இருக்கின்றன. ஆனால் அச்சம் அகற்றும் அயில் வேலைக் காணோம். அதோடு ஏதோ கண்ணை மூடித் தியானத்தில் இருப்பவன்போல் இருக்கிறான். 'கருணைத் திருஉருவாய் காசினியில் தோன்றிய குருபரன்' இவன் என்றே கூறத் தோன்றுகிறது எனக்கு. நல்ல அழகு வாய்ந்த செப்புப் படிமம்.

இனி கோயிலை விட்டு வெளியே வரலாம். இங்கு கோயில் கொண்டிருக்கும் நற்றுணை அப்பரை, நனிபள்ளி அடிகளை அப்பர் பாடியிருக்கிறார்; சுந்தரர் பாடியிருக்கிறார். சமணராய் இருந்து மாறிய அப்பர் அடிகளை, சமணர் அரசனான பல்லவ மகேந்திரவர்மன் நஞ்சு கொடுத்துக் கொல்ல ஏற்பாடு பண்ணியிருக்கிறான். ஆனால் அந்த நஞ்சும் இறைவன் அருளால் அப்பருக்கு அமுதமாகவே மாறியிருக்கிறது. இதைக் கூறுகிறார், அப்பர் இந்தத் தலத்துக்குரிய பதிகத்தில்.

துஞ்சு இருள் காலை மாலை
தொடர்ச்சியை மறந்து இராதே,

அஞ்சு எழுத்து ஓதின் நாளும்
அரன் அடிக்கு அன்பதாகும்,
வஞ்சனைப் பால்சோறு ஆக்கி
வழக்கிலா அமணர் தந்த
நஞ்சு அமுதாக்கு வித்தார்
நனிபள்ளி அடிகளாரே!

என்பதுதான் அப்பர் தேவாரம். நல்ல அகச்சான்று தரும் பாடல் அல்லவா?

இத்தலம் நல்ல சரித்திரப் பிரசித்தி உடையது என்பதை முன்னரே அறிந்தோம். இக்கோயிலில் பதினெட்டுக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ராஜேந்திரன் வீர வெற்றியைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் உண்டு. அவன் காலத்தில் ரிஷப வாகன தேவர்க்குத் திருவிழா நடத்த இறையிலி ஒப்பந்தம் செய்யப்பட்டதெல்லாம் குறிக்கப் பட்டிருக்கிறது. இன்னும் விஜய நகரத்து கிருஷ்ண தேவராயன் மெய்க்கீர்த்திகளையெல்லாம் இக் கல்வெட்டுக்கள் கூறுவதால், கோயில் முன்பகுதி கோபுரம் எல்லாம் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த வட்டாரமே ஆதியில் பாலையாய் இருந்து, பின்னர் ஞான சம்பந்தரால் நெய்தல் நிலமாக்கப்பட்டு, அதற்கும் பின்னர் காடாகவும் வயல்களாகவும் மாறியிருக்கின்றன. இந்தத் தகவல் நமக்குப் பதினோராம் திருமுறை ஆளுடைய பிள்ளையார் அந்தாதியிலிருந்து கிடைக்கிறது. 'நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானமாகிய அஃதே போதில் மலிவயல் ஆக்கிய கோன்' என்றே ஞானசம்பந்தர் பாராட்டப்படுகிறார், இது என்ன பிரமாதமான காரியம் அவருக்கு. எலும்பையே பெண்ணுரு ஆக்கியவர் ஆயிற்றே. பாலையை வயலாக ஆக்குவதுதானா பிரமாதமாக காரியம்? தாயார் பிறந்த ஊரை நல்ல வளமுடையதாக்குவதில் அவருக்கு ஆவல் இராதா?