வேங்கடம் முதல் குமரி வரை 2/கங்கை கொண்ட சோழீச்சுரர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
27

கங்கை கொண்ட சோழீச்சுரர்

சோழவள நாட்டிலே கொள்ளிடத்திலிருந்து பிரியும் மண்ணியாற்றின் கரையிலே சேய்ஞலூர் என்று ஒரு சிற்றூர், சேயாம் குமரக் கடவுள் தாம் விரும்பி உறைவதற்கு நல்லஊர் என்று தேர்ந்து எடுக்கப்பட்ட தலம் அது. சேய் நல் ஊர்தான் சேய்ஞலூர் என்று பின்னால் பெயர் பெற்றிருக்கிறது. குமரனாம் சேயை மாத்திரம் அல்ல, இன்னுமொரு மகனையுமே இறைவன் பெற்றிருக்கிறான் இத்தலத்திலே. அந்தக் கதை இதுதான்: எச்சத்தன் என்ற அந்தணனுக்கு விசாரருமன் பிறக்கிறான்; வளர்கிறான். பசுக்களை மேய்ப்பது அந்தணரது தொழில் அல்ல என்றாலும் விசாரருமனுக்குப் பசுநிரைகளை மேய்ப்பதிலே, அவற்றைப் பரிபாலிப்பதிலே அலாதிப் பிரியம். பசுக்களும் விசாரருமனிடம் மிக்க அன்போடு பழகுகின்றன. விசாரருமன் ஆற்றங்கரையிலே மணலால் சிவலிங்கம் ஒன்று அமைத்துப் பூசை செய்கிறான். பசுக்களோ அச்சிவலிங்க வழிபாட்டுக்குத் துணை செய்ய, தாமாகவே பால் சொரிகின்றன. சிவபூசையும் நாளுக்கு நாள் ஓங்கி வளர்கின்றது. யாரோ ஒருவன் இத்தனை விபரத்தையும் எச்சத்தனிடம் கூறுகின்றான். உண்மை அறிய எச்சத்தன் வருகிறான்; நடப்பதை அறிகிறான். பூசை நடக்கும் இடத்துக்கு வந்து விசாரசருமனை அடிக்கிறான்; அங்குள்ள பால் குடங்களைக் காலினால் இடறுகிறான். விசாரசருமன் கோபங்கொண்டு தன் பக்கலில் உள்ள கோலை எடுக்க, அது மழுவாக மாற, அந்த மழுவினால் தந்தையாம் எச்சத்தன் காலையே வெட்டுகிறான். வெட்டுண்ட காலுடன் எச்சத்தன் கீழே விழுந்து மடிகிறான். சிவபூசைக்கு இடையூறு செய்தவனைத் தந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்திய விசாரருமனுக்கு இறைவன் ரிஷபாரூடனாகக் காட்சி தருகிறான். தந்தையற்ற அத்தனையனைத் தன் மகனாகவே ஏற்றுக் கொள்கிறான். இத்துடன் தான் உண்ட பரிகலம், உடுக்கும் உடை, சூடும் மாலை, அணிகள் முதலியவற்றைக் கொடுத்துத் திருத்தொண்டர்களுக் கெல்லாம் தலைவனாக்கி சண்டீசப்பதவியையும் அருளுகிறான். தன் சடை முடியிலிருந்த கொன்றை மாலையையே எடுத்துத் தன் மகனாம் சண்டீசனுக்குச் சூட்டுகின்றான் இறைவன். இதனைப் பாடுகிறார் சேக்கிழார்,

அண்டர் பிரானும், தொண்டர் தமக்கு
அதிபன் ஆக்கி, அனைத்து நாம்
உண்டகலமும், உடுப்பனவும்
சூடுவனவும், உனக்காகச்
சண்டீசனுமாம் பதந்தந்தோம்'
என்று அங்கு அவர் பொன்தட
முடிக்கு துண்டமதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.

என்பது சேக்கிழார் தரும் சொல்லோவியம். இச்சொல் லோவியத்தைக் கல்லோவியமாகக் காண சேய்ஞலூரில் உள்ள சத்தியகிரி ஈசுவரர் கோயிலுக்குப் போய்ப் பிரயோசனமில்லை. அதைக்காணும் ஆவல் உடையவர்கள் எல்லாம் சென்று காண வேண்டியது அந்தக்கங்கை கொண்ட சோழபுரத்துக்கே. அங்கேயே செல்கிறோம் நாம் இன்று.

கங்கை கொண்ட சோழபுரம், திருச்சிராப்பள்ளியில் உடையார்பாளையம் தாலுகாவில் இருக்கிறது. அரியலூர் ஸ்டேஷனில் இறங்கி ஜயங்கொண்ட சோழபுரம் சென்று பின்னும் செல்லவேண்டும். இப்பாதை முப்பது மைல் தொலைவுக்குமேல் இருக்கும். இதைவிட நல்லவழி கும்பகோணத்திலிருந்து கல்லணை என்னும் 'லோயர் அணைக்கட்டு' பதினாறு மைல் தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து சென்னை செல்லும் ரோட்டில் நான்கு மைல் போய், அங்கிருந்து ஜயங்கொண்ட சோழபுரம் கிளைச்சாலையில் திரும்பவேண்டும். திரும்பி ஒரு மைல் சென்றால் இக்கோயில் இருக்கும் இடம் வந்து சேரலாம். கொள்ளிடத்தில் கட்டியுள்ள லோயர் அணைக்கட்டைக் கடந்ததுமே கோயில் விமானம் தெரியும். நல்ல பொட்டல் காட்டில் கோயில் இருப்பதால், எந்த ரோட்டில் வந்தாலும் ஏழுஎட்டு மைல் தூரத்திலேயே கோயில் விமானத்தைக் காணலாம். இந்தக் கோயில் இருக்கும் ஊர் கங்கை கொண்ட சோழபுரம் என்றும், இக்கோயில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. இக்கோயிலையும் கட்டி, இந்த நகரத்தையும் நிர்மாணித்த ராஜேந்திரசோழனை, கங்கைகொண்ட சோழன் என்று சரித்திரம் கூறுகிறது. கோயில் வாயில் செல்வதற்கு முன்னமேயே, தலம் கோயில், அரசன் இவர்கள் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே. தஞ்சையில் இருந்து அரசாண்டு, உலகம் புகழும் அந்தத் தஞ்சைப் பெரிய கோயிலை எடுப்பித்த ராஜராஜனைத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அந்த ராஜராஜனின் மகனே ராஜேந்திரன். சேரர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் எல்லோரையும் வென்றதுடன் கடல் கடந்து சென்று ஈழநாட்டையும் மும்முடிச் சோழ மண்டலமாக்கி, இன்னும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைக்கொண்டவன் ராஜராஜன். அவன் மகனான ராஜேந்திரனோ, வடநாட்டில் கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன், கிழக்கே மலாயா வரை சென்று கடாரத்தையும் கைப்பற்றியவன். அதனாலே அவன் கங்கை கொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்றும் பாராட்டப் பெற்றிருக்கிறான் சரித்திர ஆசிரியர்களால். தந்தை ஒரு கோயில் கட்டினான் என்றால் தனயனும் ஒரு கோயில் கட்ட முனைகிறான், அக்கோயிலில் பிரதிஷ்டை செய்திருக்கும் பிருஹதீசுவரருக்குக் கங்கையிலிருந்தே நீர் கொண்டு வந்து குடமுழுக்குச் செய்ய விழைகிறான். இப்பணியை நிறைவேற்றத் தன் படை வீரர்களை ஒரு மாதண்ட நாயகன் தலைமையில் அனுப்பி வைக்கிறான். அம்மாதண்ட தாயகனும் இடையில் உள்ள தெலுங்குநாடு, வேங்கி நாடு, தென்கோசலம், வங்காளம் முதலிய நாடுகளையும் வென்று பகையரசர் தலையிலேயே கங்கை நீர் நிரம்பிய குடங்களை ஏற்றிக்கொண்டு திரும்பியிருக்கிறான். வெற்றியோடு மீண்ட மாதண்ட நாயகனை கோதாவரிக் கரையில் சந்தித்து அழைத்து வருகிறான் ராஜேந்திரன். கங்கை கொண்ட வீர ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழன் என்று பெயர் பெறுகிறான். அவன் அமைத்த நகரம் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிறது. அங்கு அமைத்த கோயில் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கங்கை கொண்ட வெற்றியைக் கூறுகிறது அவனது மெய்க்கீர்த்தி ஒன்று.

தொடுகடல் சங்குகொடு அடல்மகி பாலனை வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித்து அருளி
ஒண்திறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கடல் உத்தரலாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கை
மாப்பொரு தண்டால் கொண்ட
கோப்பரகேசரி வர்மரான
உடையார் இராஜேந்திர சோழதேவர்

என்பதுதான் மெய்க்கீர்த்தி.

இனி கிழக்கு நோக்கியிருக்கும் கோயிலை நோக்கி நடக்கலாம். முதலிலே கோயில் வாயில் என்று ஒன்று இருக்காது. அங்கு கோபுரம் ஒன்றும் அழகு செய்யாது. என்றாலும் முன்னால் ஒரு வாயிலும் கோபுரமும் இருந்து இடிந்து விழுந்திருக்கவேண்டும் என்பது மட்டும் தெரியும். கொள்ளிடத்தில் அணைகட்டியபோது இங்குள்ள கற்களை எல்லாம் இடித்து எடுத்துப்போய் உபயோகித்துக் கொண்டனர் என்பதும் பிரசித்தம். (உத்திரமேரூரில் குடவோலைச் சாஸனமுள்ள கற்களையே பெயர்த்து எடுத்து இன்று மக்கள் வீடு கட்டுகிறார்கள் என்றால், அன்றிருந்த ஆங்கில சர்க்கார் அதிகாரிகள், இக்கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில் மதில்கற்களை அணைகட்டுவதற்கு உபயோகித்துக் கொண்டார்கள் என்பதில் வியப்பு என்ன?) இன்று இடிந்து கிடக்கும் மதில் சுவர் கிழமேல் 584 அடி, தென்வடல் 372 அடி.ஆனால் கங்கை கொண்ட சோழன் இதைவிட விஸ்தாரமாக ஆறு கோபுரங்களுடன் சுற்றாலைகள் எல்லாம் அமைத்தான் என்பர் அங்குள்ளவர்கள்.

அது எல்லாம் எவ்வளவு உண்மையோ? இன்றிருக்கின்ற கோயிலே பிரும்மாண்டமானதாக இருக்கிறது. வெளிப்பிரகாரத்தில் கல்லாலும் சுதையாலும் கட்டப்பட்டபிரும்மாண்டமான நந்தி ஒன்றும், அதை ஒட்டிச்சிங்கமுகக் கிணறு ஒன்றும் இருக்கும். இந்தக் கோயில் பிராகாரத்தில் வலம் வருவதும் கொஞ்சம் கஷ்டம். உறுத்தும் கல்லுக்கும் அழுத்தும் நெருஞ்சி முள்ளுக்கும் 'ஜவாப்' சொல்லவேண்டியிருக்கும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் வலம் வரவேணும். தெற்குப் பிரகாரத்தில் இருநூறு அடி வந்ததும், அங்கு எழுந்திருக்கும் விமானத்தைப் பார்க்கலாம். விமானம் நூறு அடி சதுரத்தில் தரையிலிருந்து இருபது அடிவரை உயர்ந்து அடிப்பீடத்தின் மேல் கர்ப்பகிருஹத்தின் மேல் 170 அடி உயரம் எழுந்திருக்கிறது. பிரும்மாண்டமான அப்பீடத்தின் பேரில் எழுந்து நிற்பதால், தஞ்சைப் பெரிய கோயில் விமானத்தில் உள்ள கம்பீர்யம் இல்லை. அங்குள்ள விமானம் 80அடி சதுர பீடத்தின் மேல் 216 அடி உயர்ந்திருக்கிறது. கங்கை கொண்டானுக்கோ தந்தையை விஞ்சவேண்டுமென்று ஆசை. ஆதலால் அடிப்பீடத்தை நூறு அடி சதுரமாக்கி அதற்கேற்ற உயரத்தில் - ஆம். சுமார் 300 அடி உயரத்தில் விமானத்தை உயர்த்தி விடவேண்டும் என்று எண்ணம். சிற்பிக்கோ, அடித்தளத்துக்கு ஏற்ற வகையில் விமானத்தை உயர்த்த முடியவில்லை. இதைப்பற்றி ரஸமான வரலாறு கூட ஒன்று உண்டு.

அது இதுதான்: போட்ட அஸ்திவாரத்திற்கு ஏற்றவாறு விமானம் எழுப்ப வகை அறியாத சிற்பி, திருவாரூர் சிற்பியினிடம் கேட்கச் செல்கிறான். திருவாரூர் சிற்பியோ, அகண்ட கமலாலயத்தை ஒட்டி அதில் ஊறிவரும் தண்ணீரை வடிக்க வழியறியாது, இந்தக் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பியைத் தேடிவருகிறான். இருவரும் நடுவழியில் ஒரு சத்திரத்தில் சந்திக்கிறார்கள். 'வாளை மலிந்த ஊரில் ஊற்றுக்கண்ணை அடைப்பதா பிரமாதம் ?" என்கிறான் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பி. 'பஞ்சு பெருத்த இடத்தில் விமானத்தில் கல் ஏற்றுவது என்ன கஷ்டம்' என்கிறான் திருவாரூர் சிற்பி. இருவரும் ஊர் திரும்புகிறார்கள்.

இறைக்கும் நீரிலே வாளை மீன்களை விட, அவை சென்று ஊற்றுக் கண்களில் புகுந்து ஊற்றுக் கண்களை அடைத்துக்கொள்ள நீரை இறைத்து வேலையை முடிக்கிறான் திருவாரூர் சிற்பி. பஞ்சு என்னும் சாரக் கட்டைகளை அடுக்கி அதன்மேல் கற்களை ஏற்றி விமானம் அமைக்கிறான் 'கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பி. எவ்வளவுதான் சாரம் கட்டினாலும் 170 அடிக்குமேல் விமானம் உயரவில்லை. என்றாலும் ஒன்பது நிலைகளோடு உயர்ந்து உயர்ந்து, மேலுள்ள பகுதி சரிந்து சரிந்து உச்சியில் குவிந்து குவிந்து ஒற்றைக் கலசம் தாங்கி நிற்கிறது விமானம். கலசத்தின் உயரம் பன்னிரண்டு அடி. அதற்கேற்றவாறே அகலமும். (இது எப்படித் தெரிந்தது என்று கேட்காதீர்கள். பல வருஷங்களுக்கு முன்பு இக்கோயில் கலசம் விழுந்திருக்கிறது. 1951-ம் வருஷம், தஞ்சை வெற்றிவேல் பிரஸ் அதிபர் திரு. பக்கிரிசாமி பிள்ளையின் முயற்சியால் கலசம் புதுப்பிக்கப்பட்டுத் தஞ்சையில் இருந்து ஒரு பெரிய லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது உடன் இருந்து காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இனி நான் சொல்வதை நம்புவீர்களல்லவா?) கருவறையைச் சுற்றிய கோஷ்டங்களில், நர்த்தன விநாயகர், நடராஜர், அர்த்தநாரி, கங்காதரர், பிக்ஷாடனர், லிங்கோத்பவர் எல்லாம் இருக்கிறார்கள். நாம் காணவந்தது இவர்களை அல்லவே.

ஆகவே விறுவிறுஎன்று நடந்து வடக்குப் பிராகாரம் வந்து அங்கிருந்து அர்த்த மண்டபம் செல்வதற்கு

சண்டீச அனுக்கிரஹமூர்த்தி

அமைத்திருக்கும் படிகளில் ஏறி மேற்கே திரும்பினால் நான் முன்சொன்ன சண்டீச அனுக்கிரக மூர்த்தியைக் காணலாம். நல்ல கம்பீரமான கற்சிலை, அன்னை பார்வதியுடன் அத்தன் அமர்ந்திருக்கிறார் ஒரு பீடத்தில். அவர் காலடியில் சண்டீசர் கூப்பிய கையுடன் இறைவனோ கொன்றை மாலையை, சண்டீசர் தலையைச் சுற்றி அலங்கரிக்கிறார். மாடத்தில் இருக்கும் இந்தச் சிற்ப வடிவத்தைச் சுற்றிய சுவர்களிலே, சண்டீசர் கதை முழுவதுமே, சின்னச் சின்னவடிவில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

அன்னையையும் அத்தனையும் செதுக்கியதில் காட்டிய அக்கறையைச் சண்டீசரைச் செதுக்குவதில் காட்டவில்லை சிற்பி. நான் ஊகிக்கும் காரணம் இதுதான். கங்கைகொண்ட சோழனாம் ராஜேந்திரனுக்கே இறைவன் முடிசூட்ட முனைகிறான் என்ற குப்தமாகக் காட்டவே சிற்பி இச்சண்டீரனுக்கு கிரஹமூர்த்தியை உருவாக்கி யிருக்கிறான். சண்டீசனது முகத்தை ராஜேந்திரனது முகம் போலவே அமைத்திருக்கிறான். இதைக்கண்டு ராஜேந்திரன் உள்ளம் மகிழ்ச்சியுற்றாலும், வேண்டாத அலங்காரங்களை, அச்சிற்ப வடிவுக்குச் செய்யவேண்டாம் என்று கட்டளையிட்டுத் தன் பணிவைக் காட்டியிருக்கிறான். அதனால்தான் அரைக்குக்கீழே உள்ள பாகம் செம்மையாகச் செதுக்கப்பட வில்லை என நினைக்கிறேன். இந்தச் சிற்ப வடிவம் கலை உலகிலே பிரசித்தம். இந்த ஒப்பற்ற சிலைக்கு எதிர்த்த சுவரிலே, ஞான சரஸ்வதி கொலுவீற்றிருக்கிறாள். 'ஒன்றே யென்னில் ஒன்றே யாம்' என்று நமக்கெல்லாம் ஞான உபதேசம் செய்யும் நிலையில் இருக்கிறாள். இவளது அழகை வர்ணித்தல் இயலாது. சென்று கண்டு மகிழுங்கள் என்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன்.

இனி அந்த வடக்கு வாயில் வழியாகவே கோயிலுள் நுழையலாம், அர்த்த மண்டபத்தில் இருந்து கொண்டு மேற்கே திரும்பினால் கருவறையில் உள்ள பெரு உடையாரை, கங்கைகொண்ட சோழீச்சுரரைக் காணலாம். சாதாரணமாக லிங்கத் திருவுருவின் பரிவட்டங்களைப் பற்றிப் பேசும்போது மூன்று முழமும் ஒரு சுற்று (லிங்கத் திருவுருவைச்சுற்ற ) என்பார்கள். இங்கு அந்தப் பருப்பு எல்லாம் வேகாது. லிங்கத்திருவுருவைச் சுற்ற 15 முழம் வேணும்; ஆவுடையாரைச் சுற்றவோ ஐம்பத்து நாலு முழமே வேணும். 13அடி உயரத்தில் உயர்ந்திருக்கும் பெருஉடையார், பெரிய திருஉரு உடையவரே. அபிஷேகம் முதலியன் செய்யப் பெரிய கிராதி கட்டவேண்டியிருக்கிறது. கருவறையில் வெளிச்சம் காணாது. நன்றாகத் தீப அலங்காரம் செய்தால் கோலாகலமான காட்சியாக இருக்கும். இந்தப் பெருஉடையாரை, சோழீச்சுரத்தானை வணங்கிய பின்பே,

அன்னமாய் விசும்பு பறந்து
அயன்தேட, அங்ஙனே
பெரியநீ! சிறிய
என்னையாள விரும்பி
என்மனம் புகுந்த எளிமையை
என்றும் நான் மறக்கேன்,

என்று திருவிசைப்பா பாடியிருக்கிறார் கருவூர்த்தேவர். நாம் அந்த இசைப்பாவைப் பாடிக்கொண்டே கிழக்கு நோக்கி நடந்து மகா மண்ட்பத்தைக் கடக்கலாம். பெரியமண்டபம்; அதற்கேற்ற தூண்கள், கலை அழகு ஒன்றும் இல்லை. செப்புப் படிமங்கள் பல இருட்டில் புதைந்து கிடக்கும். அவற்றையெல்லாம் தேடிப்பிடித்தே காணவேண்டும். இருட்டோடு இருட்டாக ஈசான மூலையிலே ஒரு சிலை. அதனை நவக்கிரஹம் என்பர். ஒரு சதுரமான கல். அதன் எட்டு மூலைகளிலும் எட்டுக் கிரஹங்கள். மேல் தளத்தில் ஒரு மலர்ந்த பதுமம். பக்கத்தில் ஏழு குதிரைகள் இழுக்கும் பாவனை. அதனை ஓட்டும் அருணன் என்றெல்லாம் அமைந்திருக்கும். நவக்கிரஹ அமைப்பில் இது ஒரு புதிய முறை. தவறாமல் பார்க்கவேண்டியதொன்று. கோயிலுள் பார்க்க வேண்டியவை இவைகளே.

இனி வெளிச்சுற்றுக் கோயில்களையும் பார்க்கலாம். விநாயகர், மஹிஷமர்த்தினி, சண்டீசர், அம்பிகை சந்நிதிகள் எல்லாம் தனித்தனி. இங்குள்ள விநாயகர் கணக்க விநாயகர் என்ற பெயருடன் விளங்குகிறார். இந்தப் பெரிய கோயில கட்டும் பொறுப்பை ஓர் அமைச்சரிடம் ராஜேந்திர சோழன் ஒப்படைத்திருக்கிறான். அமைச்சரோ நிறைந்த சிவபக்தி உடையவர், பணத்தை வாரிவாரித் திருப்பணி வேலையை நடத்துகிறார். அவருக்கோ கணக்கு என்று ஒன்று எழுதி வைத்துக்கொள்ள நேரமில்லை. அரசரிடம் யாரோ கோள் மூட்டியிருக்கிறார்கள், அரசரும் அமைச்சரிடம் தாம் கணக்குகளைப் பார்வையிட விரும்புவதாகச் சொல்கிறார். அமைச்சர் என்ன பண்ணுவர்? ஆனால் அமைச்சரையும் முந்திக்கொண்டு விநாயகர் கணக்குப் பிள்ளைவடிவத்தில் அரசர் முன் ஆஜராகிறார். கணக்கை வாசிக்கிறார். 'எத்து நூல் எண்ணாயிரம் பொன்' என்று கணக்கைப் படிக்க ஆரம்பித்ததுமே 'போதும் போதும்' என்று நிறுத்தி விடுகிறார் அரசர். கற்களை வெட்டிச் செதுக்குமுன் கயிற்றை சுண்ணாம்பில் தோய்த்துக் குறிசெய்து கொள்வான் சிற்பி. அந்தக் கயிற்றுக்கே எத்து நூல் என்று பெயர். எத்து நூலே எண்ணாயிரம் பொன் என்றால் மற்றச் செலவுகளை எப்படிக் கணக்கிடுவது. இப்படி ஒருகணக்குப் பிள்ளையாக வந்த விநாயகரே கணக்கவிநாயகராக அந்தக் கோயிலில் தங்கிவிடுகிறார்.

இந்தக் கங்கை கொண்ட சோழீச்சுரத்தின் பெருமையையும், விசாலமான பரப்பையும் வெளிப்படுத்தும் சின்னங்கள் பல அங்கே இருக்கின்றன. இங்கே பழைய அரண்மனைகள் இருந்த இடம் இன்று மாளிகை மேடாய் விளங்குகிறது. அங்கே மேடு இருக்கிறது, மாளிகை இல்லை. இன்னும் தொட்டி குளம், பள்ளிவாடை, செங்கல்வேடு, குயவன்பேட்டை, யுத்தபள்ளம் என்றெல்லாம் பல பகுதிகள் அங்கு அன்று வாழ்ந்த மக்கள் தொகுதிகளைப் பற்றிக் கதை கதையாகக் கூறுகின்றன. எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் சோழகங்கம் என்ற பெரிய ஏரி ஒன்றும் இருந்திருக்கிறது. அந்த ஏரியின் கரை 16மைல், அதற்கு வந்த கால்வாயின் நீளம் 60மைல். எல்லாம் இடிந்து இன்று கரைகள் மட்டுமே காணப்படுகின்றன.

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் அனந்தம். பாண்டி மன்னன் கோமாறவர்மன் இரண்டாம் குலசேகரதேவன், விக்கிரம பாண்டியன், கோநேரின்மை கொண்டான் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்கள் பிராகாரச் சுவர்களில் காணப்படுகின்றன. விஜயநகர மன்னர்கள் கல்வெட்டும் இரண்டு உண்டு. மற்றவை எல்லாம் சோழர் காலத்தியவையே. குலோத்துங்கன், வீரராஜேந்திரன், திரிபுவனச் சக்கரவர்த்தி கோநேரின்மை கொண்டான் கல்வெட்டுக்கள் பிரசித்தமானவை. கோயில் சிதைந்தது போலவே கல்வெட்டுக்களும் சிதைந்திருக்கின்றன. என்றாலும் அவை சொல்லும் வரலாறுகளோ எண்ணிறந்தவை, இக்கோயிலைவிட்டு இக்கோயில் உள்ள ஊரைவிட்டு வெளியேறும்போது அந்தக் கங்கை கொண்ட சோழனவன் கனவில் உருவான கங்கையணி வேணியனின் கலைக்கோயில் பொலிவு இழந்து நிற்பது நம் நெஞ்சை உறுத்தாமல் போகாது.