உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 2/திருப்பனந்தாள் சடையப்பர்

விக்கிமூலம் இலிருந்து
28

திருப்பனந்தாள் சடையப்பர்

திருநெல்வேலி மாவட்டத்திலே சில ஊர்களின் பெயர்கள் விசித்திரமானவை. தூத்துக்குடியை அடுத்து ஒரு 'டூவிபுரம்'. பாளையங்கோட்டைப் பக்கம் ஒரு 'பர்கிட் மாநகரம்', ஸ்ரீ வைகுண்டத்துக்குக் கிழக்கே ஒரு ‘பேட்மா நகரம்', திருச்செந்தூர் செல்லும் வழியிலே ஒரு 'காம்பல்லபாத்'. என்றெல்லாம் சிறு ஊர்கள் சமீபகாலத்தில் கிளம்பி இருக்கின்றன. என்ன இவையெல்லாம் 'டிம்பக்டூ' மாதிரியிருக்கிறதே என்று வியப்பு அடையாதீர்கள். கிராம மக்கள் வீடு மனைகள் இல்லாது திண்டாடுவது கண்டு, சர்க்கார் பணத்தைக் கொண்டு நிலங்கள் வாங்கி அங்கு மக்களைக் குடியேற்றிய சப்கலெக்டர்கள், கலெக்டர்கள் பெயரால் ஏற்பட்ட கிராமங்களே இவைகள். ஆம். திருநெல்வேலி மாவட்ட மக்கள் நன்றி மறவா உணர்ச்சியை எடுத்துக் காட்டவாவது இந்தச்சுவையற்ற பெயர்கள் உதவுகின்றனவே என்பதில் ஒரு திருப்தி எனக்கு.

இந்த நன்றி மறவாத உணர்ச்சி திருநெல்வேலிக்காரர்களுக்கு மட்டும் இருக்கவில்லை; அந்த இறைவனுக்குமே இருந்திருக்கிறது. பனைமரங்கள் நிறைந்த ஓர்ஊர் பனந்தாள் என்று பெயர் பெறுகிறது. அங்கு ஒரு கோயில். அக்கோயிலில் ஓர் இறைவன், செஞ்சடையப்பன் என்ற பெயரோடு, அந்தச் செஞ்சடையப்பரை அசுரகுல மகளான தாடகை என்பவள் (ராமாயணத்தில் வரும் தாடகையல்ல) தினசரி பூமாலை புனைந்து ஏத்தி வணங்கி வருகிறாள். ஒரு நாள் மாலையுடன் இறைவன் திருமுன்பு வரும்போது அவள் தன் மேலாக்கு நழுவுகிறது. அவளுக்கோ இக்கட்டான நிலை. மேலாக்கைச் சரிசெய்ய மாலையைக் கீழே தரையில் வைக்கவேண்டும். மாலையைத் தரையில் வைக்காவிட்டால், மேலாக்கு நழுவிப் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் இறைவன் அவள்தன் மானங்காக்க விரைகின்றான். அவள் எளிதாகத் தனக்கு மாலை அணிவிக்கும் வகையில் தலைதாழ்த்திக் கொடுக்கிறான். பக்தர்களது அன்புக்குக் கட்டுப்பட்டவன் அல்லவா! தலையை மாத்திரம்தானா தாழ்த்துவான்? உடலையே வளைத்துப் பக்தர்களது உள்ளத்துக்கு உவகையளிப்பவன் ஆயிற்றே.

இப்படித் தாடகையின் பக்தியை உலகறியச் செய்த அப்பெருமகன் செஞ்சடையப்பன் அன்று முதல்தான் கோயில் கொண்டிருக்கும் தலத்திற்கே அத்தாடகையின் பெயரைக் கொடுத்து, தாடகைசச்சரம் என்றே அழைக்கிறான். அந்தப் பெயரே நிலைக்கிறது அக்கோயிலுக்கு, (திருநெல்வேலி சப்-கலெக்டர்களுக்கும் இச்செஞ்சடைவேதியனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அங்கே சப்-கலெக்டர்கள் தங்கள் தங்கள் பெயரையே விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். இங்கோ இறைவன் தன்பெயரைத் தியாகம் பண்ணிவிட்டு, தன் பக்தையின் பெயருக்குப் பிரதான்யம் கொடுத்து விடுகிறான். அவ்வளவுதான்) இந்தத் தாடகைாச்சரம் என்னும் கோயில் இருக்கும் தலந்தான் திருப்பனந்தாள். அந்தப் பனந்தாள் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

இத் 'தண் பொழில் சூழ் பனந்தாள் தாடகை ஈச்சரம்' கும்பகோணத்துக்கு வடகிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து காரிலோ, பஸ்ஸிலோ ஏறிச்செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் ஆடுதுறையில் இறங்கிவிட வேண்டும். அங்கிருந்து ஆறு மைல் வண்டியிலே செல்லவேண்டும். பஸ்ஸுக்கெல்லாம் காத்து நின்றால் இடம் கிடைப்பது அரிது. மேலும் சாவதானமாக வண்டியில் சென்றால் ஆடுதுறை ஆபத்சகாயர் கோயிலுக்குச் செல்லலாம். பவளவல்லியாம் அம்மையை வணங்கலாம். அன்று சுக்கிரீவன் பூஜித்த தலம் ஆனதால் தென் குரங்காடு துறை எனப்பெயர்பெற்ற பதி இன்று ஆடுதுறை என்று குறுகி இருக்கிறது. 'நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடும் ஒல்க, வாலினால் கட்டிய வாலியார் வழிபட்ட கோயில்' காவிரியின் வடகரையில் திருவையாற்றை அடுத்து வட குரங்காடுதுறை என்ற பெயரில் இருக்கிறது என்பதையும் இங்கேயே தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் வழியில் திருமங்கலக்குடி என்னும் பாடல்பெற்ற தலத்திற்கும், சூரியனார் கோயில் என்னும் பெயரில் சூரியனையே மூலமூர்த்தியாகக் கொண்ட கோயிலுக்குமே செல்லலாம். இதற்காகத்தான் வண்டிப் பயணம் நல்லது என்றேன். இல்லை, இது வேகயுகம், விரைவிலேயே செல்ல வேண்டும் என்றால்நேரே திருப்பனந்தாளுக்கே செல்லுங்கள். இங்கு தலவிருட்சம் பனை. பனையைத் தல விருட்சமாகக் கொண்டு இன்னும் வட ஆற்காடு மாவட்டத்தில் காஞ்சிக்கு மேற்கே எட்டு மைல் தூரத்தில் உள்ள வன்பார்த்தான் பனங்காட்டூர் மற்றொன்று திருவாரூக்கு வடகிழக்கே எட்டு மைல் தொலைவில் ஆண்டிப்பந்தல் பக்கம் உள்ள பனை ஊர். பனையூர் போவது எளிதே அல்ல, பனக்காட்டூரில் பனையைக் கோயிலுள் கண்டதாக ஞாபகமில்லை. திருப்பனந்தாள் சடையப்பர் கோயிலிலோ கீழைப் பிரகாரவாயில் பக்கம் இரண்டு பனைகள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.

இப்பனந்தாளில் கோயில் மேற்கு நோக்கி இருக்கிறது. செஞ்சடையப்பராம் இறைவன் மேற்கு நோக்கி இருந்தால் அவருக்கு வட பக்கத்தில் தனிக் கோயிலில் மேற்கு நோக்கி இருக்கிறாள் அம்மையாம் பெரியநாயகி. கோயில் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் அழகு செய்கிறது. உள்ளே நுழைந்ததும் பதினாறு கால் மண்டபம் இருக்கிறது. அம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. நாகலோக அரசனான வாசுகியின் மகள் சுமதியம்மை இத்தலத்துக்கு வந்து அம்மையை வணங்கித் தவமியற்றி அவள் விரும்பிய அரித்துவசன் என்னும் மன்னனை மணந்து கொண்டாள் என்பது வரலாறு. நாக கன்னிகை வந்து வழிபட்ட இடத்திலே இன்று ஒரு கிணறு இருக்கிறது. அவள் முத்தி பெற்ற தீர்த்தமே நாககன்னி தீர்த்தம். கோயிலின் திருமாளிகைப் பத்திகளை நல்ல மண்டபங்கள் அழகு செய்கின்றன.

திருப்பனந்தாள் தாடகை

இத்திருச் சுற்றின் கீழ்ப் பக்கத்திலே தலவிருட்சமாம் பனைகளும் அதனை அடுத்துத்தாடகை வழிபட்ட லிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கின்றன. தாடகையின் மாலையை ஏற்று அருளிய அவசரத்தில், அவள் விரும்பிய வண்ணமே அவளது கைகள் பதினாறாகப் பெருக இறைவன் அருள் செய்திருக்கிறான். ஆம் இரண்டே திருக்கரங்கள் இருந்ததனால் தானே ஆடை நெகிழ்வதைச்சரி செய்ய முடியவில்லை ? கரங்கள் பதினாறு என்றால், எத்தனை மாலைகளை எப்படி எப்படி எல்லாம் சாற்றலாம்! அப்படிக் கைகள் வளர்ந்து பூஜை செய்யும் தாடகையின் சிலை ஒன்று மகாமண்டபத்தில் தென்மேற்கு மூலையில், சுவரில் உப்புச உருவில் இருக்கிறது.

இனி கோயிலுள் நுழைந்து செஞ்சடைஅப்பரை வணங்கலாம். அப்படி அங்கு போனதும் ஒரு கேள்வி எழும். 'தாடகைக்காகத் தலை தாழ்த்திய தலைவன், இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறாரே, இவர் எப்போது தாழ்த்திய தலையை நிமிர்த்தினார்?' என்று கேட்கத் தோன்றும். அதை அறிய சேக்கிழாரது பெரிய புராணத்தைப் புரட்டவேண்டும். குங்கிலியக்கலயர் வரலாற்றைப் படிக்கவேண்டும். வரலாறு இதுதான்: கலயர் திருக்கடவூரிலே அந்தணர் குலத்திலே பிறந்தவர். இறைவனது சந்நிதியில் இடையறாது குங்கிலிய தூபம் இடும் பணிசெய்து வந்ததால் குங்கிலியக் கலயர் எனப் பெயர் பெறுகிறார். வீட்டிலோ வறுமை. உணவுக்கு வழியில்லை. மனைவி தன் திருமாங்கல்யத்தைக் கொடுத்து உணவுப் பொருள் வாங்கிவரச்சொன்னால் அதைக் கொண்டு குங்கிலியப் பொதி ஒன்றை வாங்கித் தம் திருப்பணியை நடத்துகிறார். இந்தப் பக்தருக்குச் செல்வம் பெருக இறைவனும் அருள் புரிகிறார். இவர் பனந்தாளில் இறைவன் தாடகைக்காகத் தலை தாழ்த்தியதையும், பின்னர் அரசன் முதலாயினோர் எவ்வளவோ முயன்றும் தலை நிமிர வில்லை என்பதையும் அறிகிறார். இறைவன் என்ன இலேசுப்பட்டவனா? அவ்வளவு எளிதில் தாழ்த்திய தலையை நிமிர்த்திவிடுவானா? அவன் குங்கிலியக் கலயர் வருகைக்காக அல்லவா காத்திருக்கிறான்! கலயர் வருகிறார், இறைவன் சடைமுடிக்கும், தம் கழுத்துக்கும் கயிறு கட்டி இழுக்கிறார். இறைவனும் நிமிர்கிறான். கட்டியிழுத்த கயிற்றின் வலியினாலா நிமிர்கிறான். அன்பெனும் பாசக்கயிற்றின் வலியினால் அல்லவா நிமிர்கிறான்.

தலை தாழ்த்திய தலைவன் நிமிர்வதற்குக் காரணமாயிருந்தவர் கலயர். இப்படித் தாழ்த்தியும் நிமிர்த்தியும் நின்ற காரணத்தால் இறைவன் ஆட்டம் கொடுக்கிறான். அதற்கென அளவெடுத்துப் புதிய ஆவுடையார் ஒன்றைச் செய்து கொண்டு வருகிறார். கலயர் தம் பணி சிறக்கவில்லையே என்று வருந்துகிறார்; வாடி நைகிறார்; அழுதுதொழுகிறார். இறைவனும் இரங்கித்தன்

குங்கிலியக்கலயர் குடும்பம்

உருவை எக்கிக் கொண்டு கலயர் அமைத்த ஆவுடையாரில் பொருந்தி நிற்கிறார். (இந்தச் செஞ்சடையப்பர் நல்ல யோகாசனப் பயிற்சி பெற்றவர் போலும்! சர்வாங்க ஆசனம், நௌலி, உட்டியாணா எல்லாம் போடத் தெரிந்திருக்கிறார். தலையைச் சாய்க்கிறார், உடலை வளைக்கிறார், தலையை நிமிர்க்கிறார், வயிற்றை எக்குகிறார், இன்னம் என்ன எல்லாமோ செய்கிறார். யோகாசனம் பயில்பவர்கள் இவரையே குருவாக அடையலாம் போலும்.) கலயர் புகழ் வளர்கிறது. இவரது மகன் இறந்து பட, அந்த உடலைத் தகனம் செய்ய எடுத்துப் போக, வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாக கன்னிகைத் தீர்த்தத்தில் தீர்த்தமாட்டி வீட்டுக்கு எடுத்துச் செல்லச் சொல்கிறார். வீடு சென்ற மகன் உயிர் பெற்று எழுகிறான். இப்படி வழி மறித்த விநாயகரே இன்று திருப்பனந்தாளிலே வாயு மூலையிலே பிணம் மீட்ட விநாயர் என்ற பெயரோடு வதிகிறார். இத்தனை விவரங்களையும்,

நினைவரிய தாடகைக்கு
அருள் மேனி சாய்த்தவன்,
நிமிராமல் மன்னனுக்கு
நிறை கலையனார்க்கு
முன்போல் நிமிர்ந்தவன்,
நிறை கலையனார் அளித்த
தனயன் உயிர் போனபின்
மீட்ட நாயகன்

என்று சிதம்பர முனிவர் அயிராவதப் பிள்ளையின் பிள்ளைத் தமிழில் பாடுகிறார்.

செஞ்சடையப்பர், பெரியநாயகி, தாடகை, கலயர் எல்லோரையும் அறிமுகம் செய்து கொண்டபின் சுற்றுக் கோயில்களுக்கும் செல்லலாம். ஆலயத்துக்குத் தென் மேற்கு மூலையில் உள்ள ஊருடையப்பர் கோயிலிலும் சென்று வணங்கலாம். பிரமன் ஐராவதம் முதலியோர் வழிபட்டது என்பர். இன்னும் இத்தலத்தில் வழிபட்டுப் பேறுபெற்றவர்கள் அனந்தம் என்று தலவரலாறு கூறும். இந்தச் செஞ்சடை அப்பர் கோயிலுக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார், ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.

விடை உயர் வெல் கொடியான், அடி
வின்ணொடு மண்ணும் எல்லாம்

புடைபட ஆடவல்லான், மிகு
பூதம் ஆர்பல் படையான்,
தொடைநவில் கொன்றையொடு
வன்னி துன் எருக்கும் அணிந்த
சடையவன் ஊர், பனந்தாள்
திருத் தாடகை ஈச்சரமே.

என்பது சம்பந்தர்தேவாரம். அக்கோயிலைக் கட்டியவர் திருப்பனந்தாள் நக்கன் தரணி என்று ஒரு கல்வெட்டு கூறும். இக்கோயில் அம்மன் சந்நிதியைக் கட்டியவர்கள் வெண்கூறு உடையார், அன்பர்க்கரசு, மருதமாணிக்க வில்லவராயர் என்று இறைவன் கோயிலில் மகா மண்டபத்துத் தென்பால் உள்ள கல்வெட்டுத் தெரிவிக்கும். கோயிலைச் சோழ மன்னர்கள் எப்படிப் புரந்து வந்தார்கள் என்பதையெல்லாம் தெரிய ஒரு பெரிய கல்வெட்டு ஆராய்ச்சியே நடத்த வேணும். இன்னும் 1447ல் விஜயநகர வேந்தனாயிருந்த தேவராய மகாராயரின் மகனாகிய மல்லிகார்ச்சுன தேவன் இக்கோயிலின் வைகாசித் திருவிழாவுக்கு நிலம் அளித்த செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகிறது. இவைகளை விரிக்கில் பெருகும். இன்று இந்தக்கோயில் இருப்பது தருமபுரம் ஆதீனத்தின் கீழ். நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது என்று சொல்லவா வேண்டும்?

அன்று இந்தத் திருப்பனந்தாளில் ஒரு பட்டன் இருந்திருக்கிறான். வரையாது கொடுக்கும் வள்ளன்மை உடையவன் அவன். அவனது கொடைத்திறனைக் காளமேகப் புலவர் பாடியிருக்கிறார்.

விண்ணீ ரும் வற்றிப் புவி நீரும்
வற்றி, விரும்பி அழக்
கண்ணீரும் வற்றிப் புலவோர்
தவிக்கின்ற காலத்திலே
உண்ணீர் உண்ணீர்' என்று உபசாரம்
பேசி, உண்மையுடன்

தண்ணீரும் சோறும் தருவான்
திருப்பனந்தாள் பட்டனே.

என்பது பாட்டு, இந்தப் பட்டனைப்பற்றி நாம் கேட்பதெல்லாம் கர்ண பரம்பரையில்தான். ஆனால் இன்று ‘ரிக்கார்டு' பூர்வமாகத் தானங்கள் செய்யும் ஓர் அடிகளாரை அங்கு பார்க்கிறோம்நாம். திருப்பனந்தாள் மடாதிபதியைத் தான் குறிப்பிடுகிறேன், இன்று மடாதிபதியாக இருப்பவர்கள் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ அருள்நந்தித்தம்பிரான் சுவாமிகள். சென்ற பதினாறு வருஷ அருளாட்சியில் அவர்கள் செய்துள்ள தருமங்கள் எண்ணில் அடங்கா. திருமுறை வளர்ச்சிக்கு, கல்வி அபிவிருத்திக்கு, அன்ன தானத்துக்கு, வைத்தியத்துக்கு இன்னும் என்ன என்ன காரியங்களுக்கு எல்லாமோ மொத்தம் 290 தருமங்களுக்கென ரூ.59, 70,745 வரை வழங்கியிருக்கிறார்கள். இந்தக் கணக்கு சரியானது அல்ல. இவ்வளவும் 1960 மார்ச்சு மாதம் முடியும் வரைதான். அதற்குப்பின் தான் பல வருடங்கள் கழிந்து விட்டனவே. இன்னும் எத்தனை லக்ஷம் இந்த இடைக்காலத்தில் கொடுத்திருக்கிறார்களோ நான் அறியேன். பிறர்க்கு உதவும் தருமங்கள் செய்யாத நாளெல்லாம் பிறவா நாள் என்று கருதுபவர்கள் ஆயிற்றே அவர்கள், அவர்களது அறங்கள் ஓங்க, பணி சிறக்க எம்பெருமான் செஞ்சடையப்பனை இறைஞ்சுகின்றேன். ஒரேயொரு விஷயம். பணம் படைத்த மற்றவர்கள் எல்லாம் பணத்தை இறுக்கி முடிந்து வைத்துக்கொண்டிருக்கும் போது இந்த மடாதிபதி மட்டும் இப்படி வாரி வழங்குவதன் ரகசியம் என்ன என்று பல தமிழ் அன்பர்கள் எண்ணுகிறார்கள் என்பது வாஸ்தவம்தான். 'இற்றைச் செய்தது மறுமைக்கு ஆகுமா?' எண்ணுபவர்கள்தான் மற்றவர்கள். அருள்நந்தி அடிகளோ இற்றைச் செய்வது இற்றைக்கே ஆகட்டும் என்ற திடமான கொள்கையுடையவர் என்று தெரிகிறது. அதில் பெறுகின்ற ஆத்ம திருப்திக்குமேல் வேறு திருப்தி உண்டா ?