உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 2/இடைமருது ஈசனார்

விக்கிமூலம் இலிருந்து
29

இடைமருது ஈசனார்

ரு கவிஞன். கிராமத்தில் வாழ்கிறான். பட்டண நாகரிகம் எல்லாம் அறியாதவன். அவன் ஒருநாள் மாலை வேளையில் மதுரைத் திருநகருக்கே வருகிறான். தெரு வீதிகளையெல்லாம் சுற்றிச் சுற்றிக் கீழக்கோபுரவாயிலுக்கே வந்து விடுகிறான். அந்தச் சமயத்தில் ஒரு கணிகை, பேரழகு வாய்ந்தவள் அங்கு வருகிறாள். அழகை ஆராதனை பண்ணும் கவிஞன் ஆயிற்றே, ஆதலால் அவள் அழகைக் கண்டு மெய் மறக்கிறான்; அவள் பின்னாலேயே நடக்கிறான்; அவளை அணுகி அவள் வீட்டின் விலாசம் கேட்கிறான். இவனது நிலை கண்டு புன்முறுவல் பூத்தாலும், 'யாரோ ஒரு பட்டிக்காட்டுப் பைத்தியம் இது' என்றுதான் எண்ணுகிறாள் அவள். இதற்கு வீடு இருக்கும் இடம் சொல்லானேன் என்று கருதுகிறாள். 'இங்கே, இக்கோபுர வாயிலிலேயே நில்லும்; கோயிலில் இருந்து திரும்பும் போது நானே கூட்டிச் செல்கிறேன்' என்று சொல்லிவிட்டுக் கோயிலுக்குள் போகிறாள். போனவள் கீழக் கோபுர வாயில் வழியாகத் திரும்பாமல் தெற்குக் கோபுர வாயில் வழியாகவே வீட்டுக்குப் போய்விடுகிறாள். பட்டிக்காட்டுக் கவிஞன் காத்து நிற்கிறான், நிற்கிறான் பலமணிநேரம். தம் உள்ளம் கொள்ளை கொண்டவள் வராதது கண்டு, கோயிலிலிருந்து திரும்புவர்களிடத்து, அந்தக் கணிகையின் அங்க அடையாளங்களைச் சொல்லி, 'அவள் கோயிலினுள் இருக்கிறாளா?' என்று கேட்கிறான். அவர்களோ, 'இல்லையே' என்கிறார்கள். பின்னர் அவர்கள் 'சரி' அந்தப் பெண்ணின் பெயர் என்ன? என்று கேட்டால், 'தெரியாதே' எனக் கையை விரிக்கிறான். இப்படியெல்லாம் பலமணிநேரம் நின்ற கவிஞனின் ஆதங்கம் எல்லாம் ஒரு பாட்டாக வருகிறது. பாட்டு இதுதான்:

'இல்' என்பார் தாம் அவரை,
யாம் அவர்தம் பேர் அறியோம்;
பல் என்று செவ்வாம்பல்
முல்லையையும் பாரித்து,
'கொல்' என்று காமனையும்
கண்காட்டி, கோபுரக்கீழ்
'நில்' என்று போனார் என்
நெஞ்சை விட்டுப் போகாரே!

பட்டிக்காட்டுக் கவிஞன் பாட்டில், 'கோபுரக்கீழ் நில்' என்று நிறுத்திவைத்து விட்டு, கோயிலுள் சென்று மறைந்த கணிகை, அவள் வரவுக்காக ஏங்கி நிற்கின்ற கவிஞன் எல்லோரையுமே பார்க்கிறோம். ஆம்! இந்தப்பாட்டைப் பாடியவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்தான். பட்டிக்காட்டுக் கவிஞன் இதயதாபத்தை நன்கு புரிந்து கொண்டல்லவா பாடியிருக்கிறான். இப்படித் தாபத்தோடு நிற்கிற கவிஞனைப்போல் சோழப் பிரமஹத்தி ஒரு கோயில் வாயிலில் காத்துக் கிடக்கிறது எத்தனையோ வருஷங்களாக. அது காத்துக்கிடக்க நேர்ந்த கதைக்கு இரண்டு உருவம். ஒன்று வரகுணபாண்டியனைப்பற்றி. மற்றொன்று சோழன் அஞ்சத்துவசனைப்பற்றி. மதுரையிலிருந்து அரசாண்ட வரகுணபாண்டியன் குதிரை ஏறி வருகிறான். வழியில் அயர்ந்து கிடந்த பிராமணன் ஒருவன் மீது குதிரை இடற, அதனால் பிராமணன் இறக்கிறான். இந்தத் தவறுக்காக, வரகுணபாண்டியனைப் பிரமஹத்தி தோஷம் தொடருகிறது. அது காரணமாக எத்தனையோ தொல்லைகளுக்கு உள்ளாகிறான் பாண்டியன். இந்தப் பிரமஹத்தி தோஷம் எத்தனை பரிகாரம்பண்ணியும் நீங்கவில்லை. இறை அருளில் நம்பிக்கை கொண்ட பாண்டிய மன்னன் திரு இடை மருதூர் வருகிறான். பிரமஹத்தியும் தொடர்கிறது. ஆனால் கோயில் கீழவாயிலில் நுழைந்து மகாமண்டபத்தைக் கடந்ததும், பிரமஹத்தியால் தொடர்ந்து செல்லமுடிய வில்லை. 'சரி உள்ளே சென்ற பாண்டியன் திரும்ப இப்படித்தானே வருவான்? வரும்போது அவனைத்தொடர்ந்து செல்லலாம்' என்று அக்கோயில் வாயிலிலேயே நின்றுவிடுகிறது. வரகுண பாண்டியனோ தோஷம் தன்னை விட்டு நீங்கிவிட்டது என்று அறிந்ததும், மகாலிங்கப் பெருமானை வணங்கி மேலக் கோபுரவாயில் வழியாகவே ஊர் திரும்பிவிடுகிறான். இந்தச் செய்தி பாண்டியன் பிரமஹத்தியைப்பற்றி. இதே முறையிலே சோழன் அஞ்சத்துவசனையும் பிரமஹத்தி தொடர்கிறது;அவனும் கோயிலுள் நுழைந்து இறைவனை வணங்கி மேலக் கோபுர வாயில் வழியாகத் திரும்பிவிடுகிறான்; சோழப் பிரமஹத்தி காத்தே கிடக்கிறது கீழ வாயிலில் என்றும் ஒரு வரலாறு.

எது எப்படியேனும் இருக்கட்டும், பிரமஹத்தி கீழவாயிலில் இடப்புறப் பொந்தில் இருப்பது (சிற்ப உருவில்தான்) இன்றும் கண்கூடு. அது காரணமாகவே அந்தக் கீழ வாசலில் நுழைபவர்கள் எல்லாம் இன்றும் வேறு வழியாகத்தான் வீடு திரும்புகிறார்கள். ஆம். கீழவாயில் வழியே திரும்பினால், நாம்தான் பாண்டியன் அல்லது சோழன் என்று' தொடர்ந்து விடக்கூடாதே என்று பயம். நம்மைப் பிரமஹத்திகள் தொடராது என்றாலும் வேறு எத்தனையோ ஹத்திகள், வறுமை, நோய் முதலியவை தொடரக் காத்துத்தானே கிடக்கின்றன. மகா லிங்கரை வணங்கிய பின்னும் அவை தொடரலாமா? அதற்காகவாவது நாம் கீழ வாயிலை விடுத்து வேறு வாயில்கள் வழியாக வெளி வரவேண்டியதுதான். இப்படி, சென்ற வாசல் வழியாகத் திரும்பக் கூடாதென்ற திட்டத்தோடு இருக்கும் கோயில்தான், திரு இடை மருதூர் மகாலிங்கப் பெருமான் கோவில். அந்தத் திரு இடை மருதூருக்கே போகிறோம் நாம் இன்று.

திரு இடை மருதூர், தஞ்சைமாயூரம் ரயில் பாதையில் கும்பகோணத்துக்கு வட கிழக்கே ஆறு மைல் தூரத்தில் இருக்கிறது. ரயிலிலே போகலாம், காரிலே போகலாம், இல்லை பஸ்ஸிலும் போகலாம். ரயில்வேக்காரர்கள் திருவிடமருதூர் என்றே போர்டு போட்டிருக்கிறார்கள். ரயிலைவிட்டு இறங்கி இரண்டு பர்லாங்கு வடக்கு நோக்கி நடந்தால் தெற்கு வாயிலில் கொண்டு விடும். இன்னும் ஒரு பர்லாங்கு கிழக்கு நோக்கி நடந்து கீழக் கோபுர வாயில் வந்து, அங்குள்ள காருண்யாமிர்ததீர்த்தத்தில் நீராடிவிட்டு உள்ளே செல்லலாம். குடைவருவாயிலைக் கடந்ததும், திருவாவடுதுறை ஆதீனத்தார் கட்டளைப்படி மண்டபத்துத் தூண் ஒன்றில் கட்டிவைத்திருக்கும் பலகை ஒன்றைப் பார்க்கலாம். அதில் தலத்தை ரயில்வேக்காரர்களை விட 'அழகாகத்' திருவிடமருதூர் என்று எழுதி வைத்திருப்பார்கள். 'இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் உள்ளே வரக்கூடாது' என்று எச்சரிக்கையும் செய்திருப்பார்கள். திரு இடை மருதூர் என்ற அழகான பெயர்தான் தமிழ் வளர்க்கும் ஆதீனத்தாரால் திருவிட மருதூர் என்று அழைக்கப்படுகிறது. இது கொஞ்சம் வருத்தத்தையே தருகிறது. (இந்த போர்டை எவ்வளவு விரைவில் அகற்றுகிறார்களோ, அவ்வளவுக்கு நல்லது. ) இனி கோயிலில் சுதையால் அமைந்திருக்கும் அழகான நந்தியையும் முந்திக்கொண்டு படித்துறை விநாயகர் நமக்குக் காட்சி கொடுப்பார். வீரசோழன் ஆற்றங்கரைப் படித்துறையில் இருந்தவர் போலும் இவர், மருத மரங்கள் நிறைந்த சோலையின் நடுவே இறைவன் தோன்றி உரோமச முனிவருக்கு ஜோதிர்லிங்கமாகக் காட்சி கொடுத்ததால், இடைமருதூர் என்று பெயர் பெற்றது என்பர். வீரசோழன் இங்குள்ள காடுகளை வெட்டி நிலத்தைப் பண்படுத்தி ஆலயத் திருப்பணி செய்த காரணத்தால் இதனை வீரசோழபுரம் என்றும் கூறுவர். வீரசோழன் பெயரால் ஓடும் காவிரியின் கிளை நதியும் இந்த ஊரை அடுத்தே ஓடுகிறது. இந்தத் தலம் பல தலங்களுக்கு நடுநாயகம். வலஞ்சுழியில் விநாயகர், சுவாமிமலையில் முருகன், ஆய்ப்பாடியில் சண்டீசர், சிதம்பரத்தில் நடராஜர், சீகாழியில் பைரவர், திருவாவடுதுறையில் நந்தி, சூரியனார் கோயிலில் நவக் கிரஹங்கள் என்றெல்லாம் சுற்றாலயங்கள் கொண்ட மகாலிங்கர் பெருமுலை நாயகியுடன் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். இத்தலத்தை மத்தியார்ஜுனம் என்றும் இங்குள்ள அம்பிகையைப் பிருஹத் சுந்தர குசாம்பிகை என்றும் நீட்டி முழக்கி அழைப்பார்கள் வடநூலார்.

இந்தக் கோயிலுக்கு மூன்று பிராகாரங்கள். முதல் பிராகாரம் அசுவமேதப் பிரதக்ஷனைப் பிரகாரம். இங்கு வலம் வருபவர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர். அடுத்தது கொடுமுடிப்பிராகாரம். இங்கு வலம் வருபவர் திருக்கயிலையை வலம் வந்த பயன் பெறுவர். அடுத்தது பிரணவப் பிரகாரம். இதுவே கருவறையை ஒட்டியது. இங்கு வலம் வருபவர் மோக்ஷ சாம்ராஜ்யத்தையே பெறுவர். நாம், எல்லாப் பிரதக்ஷணத்தையும் சுற்றி எல்லா நலன்களையுமே பெற்றுவிடுவோமே. படித்துறை விநாயகர் அருள் பெற்று நந்தியையும் கடந்து அதன்பின்தான் உள் கோயிலுக்குச் செல்லவேண்டும். அந்த வாயிலின் வடபக்கத்திலே தான் சோழப் பிரம்மஹத்தி ஒரு பொந்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது: ஒரே சோக வடிவம். நாம் பொந்தையோ, அதிலுள்ள பிரமஹத்தி சிலை வடிவையோ பார்க்கவேண்டாம். நாம் பார்க்கவேண்டிய பொந்து கர்ப்பக் கிருஹத்தில் அல்லவா இருக்கிறது. அதை மணிவாசகர்,

எந்தை எந்தாய் சுற்றம்
மற்றும் எல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்து, என்னை
ஆண்டு கொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடை மருதில்
ஆனந்தத் தேன் இருந்த
பொந்தைப் பரவி நாம்
பூவல்லி கொய்யாமோ?

என்று அழகாகப் பாடுகிறாரே, ஆதலால் மேலேயே நடக்கலாம். அடுத்தப் பிரகாரத்தின் வடபக்கத்தில் தலவிருட்சமான மருதமரத்தையும், அங்கு இறைவன் திருமஞ்சனத்துக்குத் தண்ணீர் எடுக்கும் கிருஷ்ண கூபத்தையும் பார்க்கலாம். அதன்பின் அர்த்தமண்டபம் கடந்து, பிரணவப் பிரகாரம் வலம் வந்து மகாலிங்கரைக் கண்டு தொழலாம். பட்டுப் பட்டாடைகள் சுற்றியிருப்பதோடு, நாகாபரணமும் அழகு செய்யும். சுடர் எறியும் விளக்குகள் ஒளி செய்யும். இவற்றுக்கிடையில் லிங்கத்திருவுருவமும் கொஞ்சம் தெரியும். அவரை வணங்கி எழுந்து, கீழவாயிலுக்கு வராமலேயே அப்படியே அம்பிகையின் சந்நிதிக்குச் சென்றுவிடலாம். கம்பீரமான கோலத்தில் நின்று கொண்டிருக்கும் பெருநலமாமுலை நாயகியைத் தொழுத பின்னர் அவளை வலம் வந்து வெளி வரலாம். அப்படி வந்தால் நாம் மூகாம்பிகை சந்நிதி வந்து சேருவோம். இங்கு இறைவி தவம் செய்யும் திருக் கோலத்தில் இருக்கிறாள், இம்மூகாம்பிகை வரசித்தி உடையவள். நீங்காத நோயும் இங்கு நீங்கும். இவளது சக்தி எல்லாம் பக்கத்தில் உள்ள மேரு வடிவில் உள்ள சக்கரத்தில் அமைந்து கிடக்கிறது. இத்தலத்தில் அகத்தியர் உமையை நோக்கித் தவம் செய்தார் என்றும், உமை தனித்து வந்து அகத்தியருக்குக் காட்சி கொடுத்தார் என்றும், பின்னர் உமையும் அகத்தியரும் செய்த தவத்துக்கு இரங்கி இறைவன் ஏகநாயகனாகக் காட்சி கொடுத்ததோடு இறைவியை வைகாசி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார் என்றும் புராண வரலாறு. இந்த மூகாம்பிகை கோயில் விமானம் தமிழ் நாட்டுக் கோயில் விமானங்கள் போல் இராது. ஏதோ ஊசிக் கோபுரம் போல் இருக்கும்.

இத்தலத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பானது. இக்கோயிலின் மேலக் கோபுரத்தைக் கட்டியவனும் மற்றும் பல திருப்பணிகள் செய்தவனுமான வீர சோழனே ஜோதிர் மகாலிங்கப்பெருமானுக்குப் பூச நீராட்டுதலையும் ஏற்படுத்தினான் என்பர். பூசத் தன்று ஏகநாயகர் காவிரியில் உள்ள கல்யாண தீர்த்தத்துக்கு எழுந்தருளித் தீர்த்தம் கொடுத்தருளுவார். அன்று தேவர்கள் எல்லாம் வந்து விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்று ஒரு நம்பிக்கை. 'பூசம் புகுந்து ஆடப்பொலிந்து அழகான ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ' என்றுதானே சம்பந்தர் அவரது பாடலில் இத்தலத்தினைச் சுட்டிக்காட்டுகிறார். ஆதலால் வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள், பூசநீராடி, காசி சென்று கங்கையில் நீராடிய பலனையெல்லாம் பெறுங்கள் என்பேன் நான்.

இத்தலத்தில் பட்டினத்தாரும் அவரது சீடர் பத்திரகிரியாரும் இருந்ததாக வரலாறு. கீழக்கோபுர வாயிலில் பட்டினத்தாரும் மேலக்கோபுர வாயிலில் பத்திரகிரியாரும் சிலை உருவில் இருக்கிறார்கள். இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் எல்லோருமே வந்து பாடியிருக்கிறார்கள்.

கனியினும், கட்டிப்பட்ட கரும்பினும்,
பனிமலர்க் குழல்பாவை நல்லாரினும்,
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்,
இனியன் தன் அடைந்தார்க்கு இடை மருதன்.

என்ற அற்புத அனுபவத்தைப் பெற்றவர் அப்பர், இன்னும் இத்தலத்தைக் கருவூர்த்தேவர் திருவிசைப்பாவிலும், பட்டினத்தார் மும்மணிக் கோவையிலும் பாடியிருக்கிறார்கள். இன்னும் அந்தாதி, உலா, கலம்பகங்கள் எல்லாம் உண்டு. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளும் அனந்தம். சுமார் 50 கல்வெட்டுகளுக்கு மேல் உண்டு. மிகப் பழைய கல்வெட்டுகள் மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மனுடையதாகும். 1200 ஆண்டுகளுக்கு முன்னமேயே சிவன் திருக்கோயில் உள்ளிடத்தைப் புதுப்பித்திருக்கிறான் இவன். இன்னும் இங்கு ஒரு சண்பகத் தோட்டம் அமைத்து அதனைத் திருவேங்கடப் பிச்சியான் தன் மேற்பார்வையில் வைத்திருந்தான் என்றும் கூறுகின்றது. இங்கு ஒரு நாடக சாலையமைத்து அதில் பண்ணும், பரதமும் நடந்திருக்கின்றன. அந்த நாடகசாலையே இன்று கல்யாண மண்டபமாக அமைந்திருக்கின்றது. பாடல்பாட, விளக்கெரிக்க எல்லாம் நிபந்தங்கள் பல ஏற்பட்டி ருக்கின்றன. இவற்றை விரிக்கில் பெருகும். இந்தக் கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் மேற்பார்வையில் இருக்கிறது. சமீபத்தில் நால்வர் மண்டபம் முதலிய திருப்பணிகள் செய்திருக்கிறார்கள் ஆதீனத்தார்.

திருவாவடுதுறை ஆதீனம் என்றதும், அன்று அங்கு ஆதீன கர்த்தர்களாக இருந்து தமிழ் வளர்த்த மகா சந்நிதானத்தின் பெருமைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வரும். ஆதலால் நேரமும் காலமும் உடையவர்கள் ஏழுஎட்டு மைல் வடகிழக்காக நடந்து அங்குள்ள மாசிலாமணி ஈசுவரர், ஒப்பிலா முலையாள் இருவரையும் தரிசித்து விட்டே திரும்பலாம். இங்கிருந்துதான் திருமூலர் திருமந்திரம் எழுதியிருக்கிறார். அவரது கோயில், அவர் தங்கியிருந்த அரசடி முதலியவற்றையும் வணங்கலாம். அத்தலத்தில் இறைவனை நந்தி பூஜித்தார் என்பது வரலாறு. கல்லால் சமைக்கப்பட்டிருக்கும் நந்தி பெரிய உரு. செப்புச் சிலை வடிவில் இருக்கும் நந்தியும் அழகானவர். இத்தலத்துக்கு வந்த சம்பந்தர், தம் தகப்பனார் யாகம் செய்ய இறைவனிடம் பொன் வேண்டியிருக்கிறார். சம்பந்தரின் இனிய பாடலைக் கேட்டுக்கொண்டே இருந்த இறைவன் பொன் கொடுப்பதை மறந்திருக்கிறார். உடனே சம்பந்தர் 'இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல். அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே!' என்று கோபித்துக் கொண்டே புறப்பட்டிருக்கிறார். உடனே இறைவன் விழித்துக்கொண்டு பொற்கிழி கொடுத்திருக்கிறார். இப்படி எல்லாம் நாம் கோபித்துக் கொண்டு திரும்பவேண்டாம். நாம் வணங்கும்போது அந்த ஆவடுதுறை அப்பன் நம்மை 'அஞ்சல்' என்று அருள் பாலிப்பான், அப்படியேதான் சொல்கிறார். எப்போதும் பணத்துக்கே அடிபோடும் சுந்தரர்கூட.