வேங்கடம் முதல் குமரி வரை 2/திரிபுவன கம்பகரேசுரர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
30

திரிபுவன கம்பகரேசுரர்

க்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர் சேக்கிழார். செயற்கரிய தொண்டுகள் செய்த திருத்தொண்டர் சரிதையைப் பெரிய புராணமாக விரித்தவர். வரலாற்று முறையில் பலரது சரிதத்தை. ஆய்ந்து ஆய்ந்து ஒரு பெரிய காவியத்தையே ஆக்கியிருக்கிறார் அவர். அவர் பெரிய புராணம் பாட நேர்ந்ததற்கு ஒரு கதை உண்டு. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி நல்ல அழகான பல்சுவைக் காப்பியம், அதனால் கற்றோரும் மற்றோரும் அதனை விரும்பிக் கற்க ஆரம்பித்தனர். அது காரணமாகத் தெய்வ நம்பிக்கை, இறைவன் திருத்தொண்டு முதலியவைகளில் அழுத்தமான பற்றில்லாதிருந்தனர் மக்கள். இதனைக் கண்ட சோழ அரசர் ‘வளம் மருவுகின்ற சிவகதையைப் பாடித் தருபவர் இல்லையா' என்று ஏங்கினார். ஆதலால் தொண்டர் பெருமை சொல்லும் சிவகதையை, நவகதையாய்ப் பாட ஆரம்பித்தார் தொண்டை நாட்டுக் குன்றத்தூரில் சேக்கிழார் மரபில் பிறந்த அருள்மொழித் தேவர். இவர் சோழ மன்னனிடம் அமைச்சராக இருந்தவர்; தெய்வ பக்தி மிகுந்தவர்; அம்பலவாணனிடம் ஆறாத காதல் உடையவர். தில்லை சென்று தொழுது நின்றபோது, அம்பலத்தாடும் ஆனந்தக் கூத்தன் 'உலகெலாம்' என்று அடி எடுத்துக் கொடுக்க, பெரிய புராணத்தைப் பாடத் துவங்கினார். புராணம் பாடி முடிந்ததும், தில்லையிலேயே அரங்கேற்றம் திகழ்ந்தது. செயற்கரிய செய்த தொண்டர் சீர் பரவிய சேக்கிழாரை, யானை மீது ஏற்றி, அரசனும் உடன் இருந்து கவரி வீசி அவரது பணியின் சிறப்பைப் பாராட்டியிருக்கிறான்.

செறிமத யானைச் சிரத்தில்
பொற்கலத்தோடு எடுத்து, திருமுறையை
இருத்தியபின் சேவையார் காவலரை
முறைமைபெற ஏற்றி, அரசனும் கூடஏறி
முறைமையினால் இணைக்கவரி
துணைக்கரத்தால் வீச
மறை முழங்க, விண்ணவர்கள்
கற்பகப்பூமாரி மழை பொழியத்
திருவீதி வலம் வந்தார்.

என்று உமாபதி சிவாச்சாரியார் பாடி மகிழ்கிறார். இப்படி அமைச்சரது திருத் தொண்டினைப் பாராட்டிய அரசன்தான் அநபாயன் என்னும் குலோத்துங்கன். இவனையே சரித்திர ஆசிரியர் மூன்றாம் குலோத்துங்கன், திரிபுவனதேவன் என்றெல்லாம் அழைக்கிறார்கள், திரிபுவன வீரதேவன் என்று எப்படிப் பெயர் பெற்றான் என்று அறியச் சரித்திர ஏடுகளைப் புரட்டவேணும். இரண்டாம் ராஜராஜனுக்குப் பின் பட்டத்துக்கு வந்து கி.பி. 1178 முதல் நாற்பது வருஷ காலம் அரியணை இருந்து! அரசு செலுத்தி யிருக்கிறான்; இரண்டு முறை பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த போரில் இவன் விக்கிரம பாண்டியனுக்குத் துணை நின்று வெற்றியை. அவனுக்குத் தேடித் தந்திருக்கிறான். இரண்டாவது போரில் வீரபாண்டியனுக்குத் துணையாக வந்த சேரப் படைகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறான். பின்னர் ஈழம், கொங்கு, வடநாடு முதலிய இடங்களிலும் வெற்றி கண்டு, கடைசியில் விக்கிரம பாண்டியன் மகனான குலசேகர பாண்டியனையுமே வென்று மதுரையில் பட்டம் சூடிக்கொண்டிருக்கிறான். இப்படிச் சேரர், பாண்டியர், கொங்கர், தெலுங்கர் எல்லாரையும் வெற்றி கண்ட விறல் வீரன் திரிபுவன வீரதேவன் என்று பட்டம் சூடிக்கொண்டதில் வியப்பொன்றுமில்லை. ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற சோழப் பேரரசர்கள் வரிசையிலே வைத்து தானும் எண்ணப்படவேண்டும் என இத்திரிபுவனதேவன் நினைக்கிறான். உடனே ஒரு பெரிய கோயில் கட்ட முனைகிறான். அந்தக் கோயிலே இன்று திரிபுவனம் என்னும் தலத்தில் கம்பகரேசுரர் கோயிலாக அமைந்திருக்கிறது. இந்தத் திரிபுவனத்துக்கே செல்கிறோம் நாம்.

இத்திரிபுவனம் கும்பகோணத்துக்கும் திருவிடை மருதூருக்கும் இடையிலுள்ள சிற்றூர். ரயிலில் செல்பவர்கள் கும்பகோணத்தை அடுத்த திருநாகேசுவரம் ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக்கொண்டு செல்லலாம். ஆனால் பாதை நன்றாயிராது. திருவிடை மருதூர் அல்லது கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கி வண்டியோ, காரோ வைத்துக்கொண்டு செல்வதுதான் நல்லது. இந்த ஊரை அடுத்த அம்மா சத்திரத்திலே பட்டுப் புடவை நெசவு அதிகம். பெண்களை அழைத்துக் கொண்டு செல்பவர்கள் கையில் நிறைய பணமும் எடுத்துக்கொண்டே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஊர் திரும்பும்போது தாம்பத்ய உறவிலே பிளவு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியில்லை. கோயில் கோபுரம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னமேயே தெரியும். நீண்டு உயர்ந்து கம்பீரமாக இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கோயில் வாயிலுக்கு நேரே கிழக்கே இருந்தும் வரலாம். இல்லை, தென் பக்கத்து ரோட்டிலிருந்து பிரியும் கிளை வழியாகவும் வரலாம். பெரிய புராணம் என்னும் கலைக்கோயிலை எழுப்பிய சேக்கிழார், அங்கு தோரணத் திருவாயில், திருமாளிகைத் திருவாயில், திரு அணுக்கன் திருவாயில் என்ற மூன்று வாயில்களையும் ஒருமுற்ற வெளியையுமே காட்டித் தருகிறார்.

அந்தச் சொற் கோயிலுக்கு ஏற்ற கற்கோயிலாக இக்கோயிலைக் கட்டி யிருக்கிறான் திரிபுவன வீரதேவன். முன் வாசல் கோபுரம் தோரணத் திருவாயில் ஏழடுக்கு மாடங்களோடு கூடியது. இரண்டாம் கோபுரம் திருமாளிகைத் திருவாயில் மூன்று அடுக்கு நிலங்களுடையது. இந்த இரண்டு வாயில்களையும் கடந்துதான் கோயிலுக்குள் செல்ல வேணும். இனிக் கோயில் பிராகாரத்தை வலம் வரலாம். விரிந்து பரந்த பிராகாரம் அது. நன்றாகத் தளம் போட்டு மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும். ஏதாவது பெரிய சமய மகாநாடு அல்லது இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்றால் அழகாக நடத்தலாம்.

ஐயாயிரம் பேர்கள் உட்கார்ந்து அமைதியாகக் கேட்கலாம். அவ்வளவு விசாலமானது. இந்தக் கோயிலின் விமானம் சிறப்பு உடையது. தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் போல் உயரத்திலோ அல்லது காத்திரத்திலோ பெரியது அல்ல. என்றாலும் கண்கவரும் அழகு வாய்ந்தது. சச்சிதானந்த விமானம் என்றல்லவா பெயர் அந்த விமானத்துக்கு! ஆதலால் பார்ப்பவர் உள்ளத்துக்கு ஓர் அமைதி, ஆனந்தம் எல்லாம் அளிக்காதிருக்காது அந்த விமானம். விமானத்தை நல்ல வர்ணம் பூசி மேலும் அழகு செய்திருக்கிறார்கள். அதன் நிர்வாகஸ்தரான தருமபுரம் ஆதீனத்தார். விமான தரிசனம் செய்து கொண்டே மேலப் பிராகாரத்துக்கு வந்துவிட்டால் அங்கு கருவறையின் பின்சுவரில், மேற்கே பார்த்த கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். தமிழ் நாட்டிலுள்ள லிங்கோத்பவர் திரு உருவங்களிலெல்லாம் சிறந்த உரு அது. பொங்கழல் உருவனாகக் காட்சி கொடுப்பார். அவர் அழல் உருவன் என்பதைக் காட்ட அங்கு சுடர்விடும் நீண்ட வட்ட வடிவையே சிற்பி உருவாக்கியிருக்கிறான்.

லிங்கோத்பவரை வணங்கி வலம் வரும்போதே கோயிலின் அடித்தளத்திலுள்ள யாளி வரிசை, யானைவரிசை முதலியவைகளையும் காணலாம். அவைகளைப் பார்க்கும் போது பேலூர், ஹலபேடு முதலிய இடங்களில் உள்ள ஹொய்சலர் சிற்பங்கள் ஞாபகத்துக்கு வரும். சொல்லடுக்குகளின் மூலம் இன்னிசை எழுப்புவது போல் கல்லிலே உருவ அடுக்குகளை அமைப்பதன் மூலம் ஒரு மன எழுச்சியையே உண்டாக்கலாம் என்று தெரிந்திருக்கிறான் சிற்பி. இதனைப் பார்த்துக்கொண்டே உட்கோயிலில் நுழையலாம். கருவறையில் இருப்பவர் கம்பகரேசுரர். நல்ல அழகு தமிழில் நடுக்கம் தீர்த்த நாயகர் என்பது அவர் திருநாமம்.

தல வரலாற்றைத் திருப்பினால் பிரகலாதன், திருமால், வரகுணன் முதலிய எத்தனையோ பேருக்கு இவர் நடுக்கம் தீர்த்திருக்கிறார். ஆம்! நாமும்தான் வறுமையால், வயோதிகத்தால், நோய் நொடியால் எப்போதுமே நடுங்கியபடியே தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நடுக்கம் எல்லாம் தீர்ந்து 'அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே! உச்சி மீது வான் இடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென் பதில்லையே' என்று பாரதியுடன் சேர்ந்து பாடும் தெம்பு பெற இந்த நடுக்கம் தீர்க்கும் பெருமானை வணங்கத்தானே வேண்டும். ஆதலால் அவரை வணங்கிவிட்டு வெளியில் வரலாம்.

இந்தக் கோயிலில் உள்ள செப்புச் சிலைகளில் சிறப்பாய் இருப்பது பிக்ஷாடனத் திருக்கோலம், தனியாக ஒரு பீடத்தில், அலங்காரம் பண்ணி நிறுத்தி வைத்திருப்பார்கள். கூடுமானால் மூர்த்தியை அவன் இருக்கும் வண்ணத்திலேயே காட்டச் சொல்லிக் கண்டு மகிழலாம். அதன்பின் மூலக் கோயிலுக்கு இடப்புறத்தில் அம்பிகையின் சந்நிதிக்கும் சென்று வணங்கலாம். அம்பிகையின் பெயர் அறம் வளர்த்த நாயகி. இறைவன் நமது நடுக்கங்களை யெல்லாம் தீர்த்தால் இறைவி அறம் வளர்த்து நம்மை யெல்லாம் புரக்கிறாள். அவளையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம்.

'இந்தக் கோயிலில் பார்க்கவேண்டியது எல்லாம் இவ்வளவுதானா?' என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இனித்தான் நீங்கள் பார்க்க வேண்டிய அதிமுக்கியமான சரபர் சந்நிதி இருக்கிறது. சரபர் வரலாறு இதுதான். அதிக்கிரமங்கள் செய்து வந்த இரணியனை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழிக்கிறார்; பிரகலாதன் முதலான பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரணியன் உடல் கிழித்து உதிரம் குடித்ததும், நரசிம்மருக்கு ஒரு வெறியே ஏற்படுகிறது. பாதி மிருகம் தானே. ஆதலால் உலகத்தையே அழிக்க முற்படுகிறார்.

தலைவலி போய்த் திருகுவலி வந்த கதை ஆயிற்று அவரது காரியங்கள். தேவரும் மக்களும் அச்சமுற்றனர். சிவபிரானிடம் முறையிட்டனர். உடனே அவர் நரசிம்மத்தையும் வெல்லும் சரபராக உரு எடுக்கிறார். நரசிம்மத்தைத் தம் காலில் அடக்கி ஒடுக்குகிறார். சரபம் என்றால் அண்டப் பேரண்டப் பக்ஷி என்று கேட்டிருக்கிறோம். சிவபிரான் எடுத்த திருக்கோலம் சிங்க முகத்தோடே விரிந்த சிறகுகளோடே இத்தலத்தில் நடுக்கம் தீர்த்து அபயம் அளிப்பதாகும். இங்கு கம்பகரேசுரரோடு அச்சம் தீர்த்து அருள் புரிபவர் சரபருந்தான். நரசிம்மனை அடக்கும் சரபராக இறைவன் எழுந்தார் என்று கொள்வது வைஷ்ணவ பக்தர்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். 'எல்லா மூர்த்திகளும் தோன்றி நின்று ஒடுங்கும் இறைவன் ஒருவனே; அவனே நரசிம்மன்; அவனே கம்பகரேசுரன்; அவனே சரபன்' என்று மட்டும் உணரத் தெரிந்து கொண்டால் அமைதி பெறலாம்.

சரபர் உருவத்தில் பயங்கரமாக இருப்பினும் வர பலத்தில் சிறந்தவர் அவர். ஆதலால் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே அவரது சந்நிதிக்கும் சென்று வணங்கி அருள் பெற்று மீளலாம். தெற்கு நோக்கிய சந்நிதியில் சிலை உருவிலே மூலவராகவும், செப்புப் படிவத்திலே உற்சவராகவும் எழுந்தருளியிருக்கிறார். இந்தச் சந்நிதிக்குச் செல்பவர்களுக்குக் கலை அழகைக் காணும் பெருவாய்ப்பு ஒன்று காத்துக் கிடக்கும். சரபர் இருக்கும் மாடத்தின் வாயிலிலே இரண்டு பெண்கள் கொடியடியில் நிற்கும் மடக் கொடிகளாக நிற்பார்கள். கல்லிலே வடித்த கட்டழகிகள் அவர்கள். அவர்கள் நிற்கிற பாணியிலேதான் எத்தனைக் கவர்ச்சி ?

நடந்தாள் ஒரு கன்னி மாராச
கேசரி நாட்டில் கொங்கைக்
குடந்தான் அசைய ஒயிலாய்,
அது கண்டு கொற்றவரும்
தொடர்ந்தார், சந்நியாசிகள் யோகம்
விட்டார் சுத்த சைவ ரெலாம்
மடந்தான் அடைத்து சிவபூசையும்
கட்டி வைத்தனரே.

என்று ஒரு பாட்டு.

அந்தக் கன்னி யாரென்று கவிஞன் கூறவில்லை. அந்தக் கன்னியே இரண்டு உருவில் இங்கு வந்து நிற்கிறாளோ என்று தோன்றும். இக்கன்னியர் இருவரும் சரபர் சந்நிதியில் நிற்பானேன்? சரபரைத் தரிசிக்கும்போது ஏற்படும் அச்சம் எல்லாம் நீங்கவும், திரும்பும்போது உள்ளத்திலே ஒரு கிளுகிளுப்பை ஊட்டவுமே இவர்களை இங்கு நிறுத்தி வைத்திருக்க வேணும். சிற்பி செதுக்கிய சாதாரணக் கற்சிலைகள் அல்ல அவை, உயிர் ஓவியங்கள். சரபரையோ இல்லை, கம்பகரேசுரரையோ கண்டு வணங்கக் கருத்து இல்லாத கலைஞர்கள்கூட இப்பெண்களைக் காண இத்திரி புவனத்துக்கு ஒரு நடை நடக்கலாம். அதன் மூலமாக, அழகை ஆராதனை செய்யத் தெரிந்து கொள்ளலாம்.

கலைதானே பக்தி வளர்க்கும் பண்ணை . இந்தப் பெண்களைப் பார்த்த கண்களை அங்கிருந்து அகற்றுவது கடினம்தான். என்ன செய்வது? வீடுவாசல், மக்கள் சுற்றம் என்றெல்லாம் இருக்கிறார்களே, அவர்களை நினைக்க வேண்டாமா? ஆதலால் வேண்டா வெறுப்போடு வெளியே வரலாம். வீடும் திரும்பலாம்.

இக்கோயில் எழுந்த வரலாற்றைத்தான் முன்னமேயே பார்த்துக் கொண்டோமே. இன்னும் பல விபரங்கள் தெரிய வேண்டுமென்றால் கல்வெட்டு ஆராய்ச்சி ஒன்று நடத்த வேண்டியதுதான். இந்தக் கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்தது. அங்குள்ள ஏழு கல்வெட்டுக்கள் எத்தனை எத்தனையோ கதைகளைச் சொல்லுகின்றன. கல்வெட்டுக்களில் இறைவன் திரிபுவனமுடையார், திரிபுவன ஈசுவரர், மகாதேவர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் பேசப்படும் பெருமக்கள் ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனும் மூன்றாம் குலோத்துங்கனுமே. குலோத்துங்கனின் ஆசிரியரும் ஸ்ரீகந்த சம்புவின் புதல்வருமான ஈசுவர சிவன் இக்கோயிலைப் பிரதிஷ்டை செய்தார் என்று ஒரு கல்வெட்டு கூறும். குலோத்துங்கன் பெற்ற வடநாட்டு வெற்றிகளைக் கூறும் கல்வெட்டுக்களும் உண்டு. மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களைப் பற்றியெல்லாம் விவரிக்கும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. மேலும், மீமாம்சமும், தமிழும், திருப்பதிகங்களும் முறையே ஓத விரிவான பல்கலைக்கழகம் ஒன்றும் அங்கு இருந்திருக்கிறதென்று அறிகிறோம். இப்போதுகூட ஒரு பல்கலைக்கழகத்தை கலை வளர்க்கும் கூடத்தை அங்கே ஆரம்பிக்கலாம். அதைக் கவனிக்கவேண்டியவர்கள் ஆதீன கர்த்தர் அல்லவா; நான் இல்லையே.