வேங்கடம் முதல் குமரி வரை 2/சீகாழித் தோணியப்பர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
10

சீகாழித் தோணியப்பர்

று ஏழு வருஷங்களுக்கு முன் நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்தேன். அப்போது அமெரிக்க நண்பர் ஒருவர் தம் மனைவியுடன் தஞ்சை வந்திருந்தார். அவருக்குக் கோயில், குளம், சிற்பம், கலை முதலியவற்றைக் காண்பதில் மிகுந்த அக்கறை. (ஏதோ நம் நாட்டு உற்சவங்களில் நடக்கும் கேளிக்கைகளைப் படம் பிடித்து இந்தியர்களின் அநாகரிக வாழ்க்கை என்று அமெரிக்கப் பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதும் கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்ல அவர்) உண்மையிலேயே அவருக்கு நமது கோயில் கட்டிட நிர்மாணத்தில், சிற்பக் கலையில் எல்லாம் நல்ல ஈடுபாடு. அவரைத் தஞ்சை ஜில்லாவில் உள்ள சில பெரிய கோயில்களுக்கு அழைத்துச் சென்று காட்டினேன். அந்தச் சுற்றுப் பிரயாணத்தில் ஓர் இரவு மாயூரத்தில் வந்து தங்கினோம் நாங்கள். அவருக்கு நம் கோயிலில் நடக்கும் உற்சவம் ஒன்றையும் காண வேண்டும் என்று அவா. மாயூரத்தில் விசாரித்தால், மறுநாட் காலை சீகாழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறுகிறது என்றார்கள். எனக்குமே அந்த உற்சவத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆதலால் நானும் நண்பரும் அவரது மனைவியும் அதிகாலையில் எழுந்து ஸ்நானத்தை யெல்லாம் முடித்துக்கொண்டு சீகாழி சென்றடைந்தோம். அங்குள்ள சட்டைநாதர் ஆலயத்தின் ஆஸ்தான மண்டபத்துக்குப் போனோம். காலை எட்டு மணியாவதற்கு முன்னமேயே கூட்டம் கூடிவிட்டது கோயில் பிராகாரத்தில். அந்த ஊரில் உள்ளவர்கள் பக்கத்து ஊரில் உள்ளவர்கள், ஆண் பெண் குழந்தைகள் அடங்கலும் திரளாக வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேர் அங்கே கூடியிருந்தார்கள். எல்லோர் கையிலும் ஒவ்வொரு செம்பு. பணக்காரர்கள் வெள்ளி கூஜா வைத்திருந்தார்கள். கோயிலின் பரம்பரை தர்மகர்த்தரான தருமபுர ஆதீனத்து மகாசந்நிதானம் அவர்களும் அவர்களது பரிவாரம் புடைசூழ எழுந்தருளியிருந்தார்கள். நாங்களோ நல்ல ஒரு கைப்பிடிச் சுவரில் ஏறி நின்றுகொண்டோம்.

சரியாய் ஒன்பது மணி அளவில், உற்சவ மூர்த்திகளான தோணியப்பர், பெரிய நாயகி சகிதம் இரண்டு பெரிய சப்பரங்களில் வெளியில் வந்தார்கள். அதே சமயத்தில் ஒரு சிறிய அழகான பல்லக்கில் ஞானசம்பந்தர் அவருக்கு என்று ஏற்பட்ட கோயில் உள்ளேயிருந்து வெளியே வந்தார். ஞான சம்பந்தர் வந்ததும் பெரிய நாயகியை ஞானசம்பந்தர் பல்லக்குக்கு அருகில் கொண்டு வந்தார்கள். அம்மையின் மடிமீது வெள்ளிக் கலசத்திலிருந்த பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுக்கும் பாவனையில் அர்ச்சகர்கள் பரிமாறினார்கள், அவ்வளவு தான்; அந்த நேரத்தில் உற்சவம் காண வந்திருந்த அன்பர்கள் அனைவரும் அவரவர் கொண்டு வந்திருந்த செம்புப் பாத்திரங்களை, வெள்ளி கூஜாக்களைத் தலைக்கு மேலே தூக்கினர். அப்படித் தூக்கி நிவேதனம் பண்ணிவிட்டு ஒவ்வொருவரும் அந்த இடத்திலேயே, செம்பிலிருந்த பாலைத் தாமும் உண்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். பால் செம்பு கொண்டு போகாத எங்களுக்குமே, ஆதினத் தலைவர் பால் கொடுக்க மறக்க வில்லை. நானும் என்னுடன் வந்த நண்பர்களுமே பாலை உண்டு மகிழ்ந்தோம். கூட்டத்தை விட்டு வெளியில் வந்தோம். வெளியே வந்ததும் அமெரிக்க நண்பர் கேட்டார்: 'இது எல்லாம் என்ன?' என்று, அவருக்கு விளக்கினேன், கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு வருஷங்களுக்கு முன்னால் உலகீன்ற அன்னையாம் பெரிய நாயகி ஞான சம்பந்தராம் பிள்ளைக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை. அந்த வரலாறு இதுதான்:

சீகாழியில் சிவபாத இருதயரது குமாரராக, பகவதி அம்மையார் வயிற்றில் ஞானசம்பந்தர் அவதரிக்கிறார். மூன்று வயதுப் பாலகனாக வளர்ந்திருந்தபோது, ஒருநாள் நீராடச் சென்ற தந்தையாருடன் தானும் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கிறது குழந்தை. எனவே குழந்தையை அழைத்துச் சென்று குளக்கரையில் நிறுத்திவிட்டு, குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி, அகமர்ஷ்ண மந்திரத்தை ஓதிக் கொண்டிருக்கிறார் தந்தை. முழுகிய தந்தை விரைவாக எழாததைக் கண்டு குழந்தை 'அம்மையே! அப்பா!' என்று கதறி அழுகிறது. இந்த அழுகுரலைக் கேட்ட அன்னையாம் பெரியநாயகியும் அத்தனாம் தோணியப்பரும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியதோடு அம்மை இறங்கி வந்து தன் திருமுலைப் பாலைக் கறந்து அதில் சிவஞானத்தையும் கலந்து குழந்தைக்கு ஊட்டி விட்டு மறைகிறார்கள். நீரிலிருந்து எழுந்த தந்தை குழந்தையின் வாயில் பால் வடிவதைக் கண்டு, 'யார் கொடுத்த பாலைக் குடித்தாய்?' என்று அதட்டி, குழந்தையை அடிக்க ஒரு குச்சியை ஓங்குகிறார். அருள்ஞானம் பெற்ற குழந்தையோ உடனே வான வெளியைச் சுட்டிக் காட்டி,

தோடுஉடைய செவியன் விடைஏறி
ஓர் தூவெண்மதிசூடிக்
காடு உடைய சுடலைப் பொடிபூசி,
என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள்
பணிந்து ஏத்த அருள்செய்த
பீடுஉடைய பிரமாபுரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே!

என்று பாட ஆரம்பித்து விடுகிறது. சிவபாத இருதயருக்கோ ஒரே மகிழ்ச்சி, தம் குழந்தைக்கு அன்னை தன் ஞானப் பாலையே ஊட்டியிருக்கிறாளே என்று. இந்த அதிசய சம்பவத்தை நினைவுகூறவே இந்தத் திருவிழா என்றேன். இத் திருவிழா நடக்கும்போது மக்கள் எல்லாம் கொண்டு வந்திருந்த பாலை ஞானசம்பந்தருக்கு நிவேதனம் பண்ணிவிட்டு உண்டால், அவரவர்க்குத் தம் அறியாமை நீங்கி அருள் ஞானம் பிறக்கும் என்று நம்பிக்கை. 'திருமுலைப்பால் உண்டார் மறுமுலைப்பால் உண்ணார்' என்பது பழமொழி. அதுதான் இன்று அத்தனை பேர் பாலை நிவேதித்து அருந்தினர் என்று நண்பரிடம் விளக்கினேன்.

நண்பர் சொன்னார்: 'என்ன அருமையான அனுபவம்! எவ்வளவு அழுத்தமான பக்தியில் பிறந்திருக்கிறது இந்த நம்பிக்கை, பக்தி நம்பிக்கையை வளர்க்கிறது உள்ளத்தில்; அந்த நம்பிக்கை பக்திக்கு ஊன்றுகோலாய் நின்று உதவுகிறது' என்றெல்லாம் வியந்து கொண்டேயிருந்தார். அமெரிக்க நண்பருக்கும் அவர் மனைவிக்கும் அது புதிய அனுபவம். எனக்கோ அது உளம் உருக்கும் அரிய அனுபவம். இந்த அனுபவம் பெற விரும்பினால் சித்திரை மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நக்ஷத்திரத்தன்று சீகாழி செல்ல மறவாதீர்கள். 'ஞான சம்பந்தர் வாழ்விலேயே ஒரு விசேஷம் அவர் பிறந்தது திருவாதிரையிலேயே; அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரையிலேயே; அவர் முத்திப் பேறு பெற்றதும் ஒரு திருவாதிரையிலேதான் என்று அறிவோம்.) இந்த ஞானப்பால் உண்டவைபவம் ஏதோகர்ண பரம்பரைக் கதையல்ல, உண்மையிலேயே நடந்து ஒன்று என்பதற்கு,

போதையார் பொற்கிண்ணத்து
அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உறத்
தான் எனை ஆண்டவன்

என்று ஞான சம்பந்தர் பாடிய பாடலே நல்ல அகச்சான்று, இப்படி ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட தலமாகிய சீகாழிக்கே செல்கிறோம் நாம் இன்று.

சீகாழி தென்பிராந்திய ரயில் பாதையில் மாயூரத்துக்கும், சிதம்பரத்துக்கும் இடையிலுள்ள ஒரு சிறிய ஊர். ஊர் சிறியது என்றாலும் பேர் பெரியது. பிரமபுரம், வேணிபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம் என்றெல்லாம் பன்னிரண்டு திருப்பெயர் கொண்டது. இத்தனை பெயர்களும் காணாதென்று, பெருஞ்சாலை இலாக்காக்காரர்கள் மைல் கற்களில் எல்லாம் சீர்காழி என்று அழுத்தமாக எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்கு ரயில்வேக்காரர்கள் என்ன சளைத்தவர்களா? சிய்யாழி என்றே புதிய பெயர் ஒன்றைச் சூட்டி மகிழ்கிறார்கள்.

இந்தச் சீகாழி சென்றதும் நேரே கோயிலுக்குப் போகலாம். மதில்களும் கோபுரங்களும் கூடியதொரு பெரிய கோயில் அது. சட்டைநாதஸ்வாமி தேவஸ்தானம் என்ற பெயரோடு விளங்குகிறது. தருமபுர ஆதீனத்தார்

மேற்பார்வையில் இருக்கிறது. 1400 ஏக்கர் நன்செய் நிலமும், 300 ஏக்கர் புன்செய் நிலமும், வருஷத்துக்குச் சர்க்கார் தரும் ரூ. 2479-ம் அந்தத் தேவஸ்தானத்தின் சொத்து என்றால் கேட்கவா வேண்டும்? நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது. தருமபுரத்து ஆதீனத்துக்கோயில் ஆனதினாலே கோயில் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. கோயில் மூன்று பகுதியாக இருக்கிறது. பெரிய பகுதியில் இறைவன் தோணியப்பர், சட்டைநாதர் எல்லாம். வட பக்கத்தில் திருநிலை நாயகி கோயிலும் அக்கோயிலின் முன் உள்ள பிரம தீர்த்தமும். இந்தத் தீர்த்தக் கரையிலேயேதான் ஞானப்பால் உண்டிருக்கிறார் ஞானசம்பந்தர், இரண்டு கோயில்களுக்கும் இடையில் மேற்குக் கோடியில் ஞானசம்பந்தருக்குத் தனித்ததொரு கோயில்.

கோயிலில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததும் கர்ப்பக்கிருஹம் சென்று லிங்க உருவில் இருக்கும் பிரமபுரி ஈசுவரரை வணங்கலாம். அவருக்கு வலப்பக்கத்தில் மகா மண்டபத்தில் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றார். அவர் சின்னஞ்சிறு குழந்தை வடிவினர் ஆனதனாலே, வயிர நகைகளும், பட்டாடைகளும் உடுத்தி, அழகாகவே நிற்பார். வஸ்திரங்களையெல்லாம் களைந்து விட்டுப் பார்த்தால், அந்தப் பிள்ளையின் முகத்தில் பால்வடியும். கையிலே வழக்கமாக இருக்கும் பொற்றாளம் இராது. இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். (அம்மை அருள் ஞானத்தைக் குழைத்துக் கொடுத்த பால் கிண்ணம் அதுவே போலும்.) வலது கையோ தோடுடைய செவியனாம் தோணி புரத்தானைச் சுட்டிக் காட்டும். இந்த ஞான சம்பந்தரையும் தரிசித்து வணங்கிவிட்டு, கோயிலின் மேற் பிராகாரத்திலுள்ள கட்டு மலைமீது எளிதாக ஏறலாம்.

அங்கே அந்த மலை மீது குருமூர்த்தமான தோணியப்பர் பெரிய நாயகி சமேதராகக் காட்சி கொடுக்கிறார். அவருக்கும் மேல் தளத்திலே, மலை உச்சியிலே தென் திசை நோக்கியவராயச் சட்டைநாதர் நிற்கிறார். தோணியப்பரும் சட்டைநாதரும் சுதையாலான திருவுருவங்களே. இந்தப் பேரண்டத்தைச் சுற்றி வளைந்து கிடக்கும் பெருங்கடல் ஊழிக்காலத்தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமாமகேசுவர் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார். (ஆம்! பைபிளில் வரும் Deluge என்னும் மகா பிரளயமும் Noah's Arc என்னும் தோணியும் இதனையே குறிக்கின்றன போலும்) அன்று அப்படி வந்த தோணியப்பரே இன்று தோணி ஒன்றும் இல்லாமலேயே இக்கட்டு மலையில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இரணியனது உயிர் குடித்த நரசிங்கம் அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுக நாதரேசட்டைநாதர் என்று தலவரலாறு கூறும். இது சிவனது பைரவ மூர்த்தங்களில் ஒன்று. இவரையே ஆபத்துத்தாரணர் என்று மக்கள் வணங்குகின்றனர். இவரையே,

“துங்க மாமணித் தூணில் வந்து,
இரணியன் தோள் வலி
தனை வாங்கும்
சிங்கஏற்று உரி அரைக்கு அசைத்து,
உலகு எலாம் தேர்ந்து அளந்து
அவன் மேனி
அங்கம் யாவும் ஓர் கதையதாய்க்
கொண்டு, அதன் அங்கியாய்ப்
புனைகாழி
சங்கவார் குழைச் சட்டைநாயகன்
துணைத் தாமரைச்
சரண் போற்றி”

என்று தலபுராணம் போற்றி வணங்குகிறது. இதே சட்டைநாதர் முத்துச் சட்டைநாதர் என்ற பெயரோடும் வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவர் உருவிலும் காட்சி கொடுக்கிறார் இக்கோயில் உள்ளேயே.

இவர்களையெல்லாம் பார்த்த பின்னர் வெளியே வந்து பிரம தீர்த்தத்தைச் சுற்றிக் கொண்டு திருநிலைநாயகி சந்நிதி சென்று வணங்கலாம். அதன்பின் ஞானசம்பந்தர் கோயிலுள்ளும் நுழைந்து அங்கு சிலை உருவில் இருக்கும் ஞானசம்பந்தரையுமே கண்டு தொழலாம். ஒரு அர்ச்சனையுமே செய்யச் சொல்லலாம். அப்படிச் சொன்னால் ஓர் உண்மை விளங்கும். முருகப்பெருமானுக்கு உரிய அஷ்டோத்தரத்தைச் சொல்லியே அர்ச்சனை செய்வார் அர்ச்சகர். இது என்ன என்று வினவினால், முருகனது அவதார மூர்த்தம்தானே ஞானசம்பந்தர் என்ற விடை பெறுவோம். இப்போது தெரிகிறது, பெரியநாயகி ஏன் இறங்கி வந்து ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினார் என்று. எத்தனை அவதாரம் எடுத்தாலும் தன் குழந்தையைத் தெரியாமல் போய்விடுமா தாய்க்கு? ஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்த இந்தத் தலத்துக்கு அப்பர் வந்திருக்கிறார்; சுந்தரர் வந்திருக்கிறார். இத்தலத்தின் புனிதத்தன்மையை உணர்ந்து இதை மிதிக்க அஞ்சி எட்ட இருந்து பார்த்து விட்டே திரும்பியிருக்கிறார் சுந்தரர்.

முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளும் காட்டி,
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே

என்பதுதானே அவரது தேவாரம்.

இத்தலத்தின் சரித்திர ஏடுகளைப் புரட்டினால் எவ்வளவோ விஷயங்கள் அறியலாம். இக்கோயிலில் நாற்பத்து ஏழு கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்களது கல்வெட்டுகளோடு வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகளும் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களும், நில அளவை முறைகளும், தலம் மூர்த்தி இவைகளின் அமைப்புகளும் விளங்கும். “இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேசம் திருக்கழுமலம்” என்ற நீண்ட பெயரில் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கும். வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்தியுள்ள நிபந்தங்கள் கணக்கில் அடங்கா. இவற்றையெல்லாம் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு விட்டு விட்டு நாம் திரும்பி விடலாம்.

சீகாழி தோணியப்பரையும், ஆளுடைய பிள்ளையையும் தரிசித்த சூட்டோடேயே ஞானசம்பந்தர் திருமணத்தோடு சிவசாயுஜ்யம் பெற்ற தலமான அந்த நல்லூர்ப் பெருமணத்திற்குமே போய் வந்து விடலாமே. நல்லூர்ப் பெருமணம், ஆச்சாள்புரம் என்ற பெயரோடு இன்று விளங்குகிறது. சீகாழிக்கு வடக்கே பத்து மைல் தொலைவில் உள்ள சிறிய ஊர் அது. பதினாறு வயது நிரம்பிய ஞானசம்பந்தருக்கு, பெருமண நல்லூரில் இருந்த நம்பியின் பெண் ஸ்தோத்திர பூரணியைத் திருமணம் பேசுகிறார்கள். திருமணச் சடங்குகள் நடக்கின்றன. திருமணச் சடங்குகள் முடிந்ததும், மனைவியையும் உடன் வந்த உற்றார் உறவினர் அனைவரையுமே கூட்டிக்கொண்டு கோயிலுள் நுழைந்து ‘காதலாகிக் கசிந்து' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடிக்கொண்டே அங்கு தோன்றிய சோதியிலேயே எல்லோரும் இரண்டறக் கலந்தனர் என்பது வரலாறு. ஞானசம்பந்தரது திருமணக்கோலம் இக் கோயிலில் இருக்கிறது; மிகவும் பிற்பட்ட காலத்தில் செய்து அமைத்த வடிவம் என்றே தோன்றுகிறது. இவரைக் கல்யாண சம்பந்தர் என்கிறார்கள். குழந்தையாகக் கண்ட ஆளுடைய பிள்ளையைக் கல்யாணக் கோலத்திலும் கண்ட திருப்தியோடேயே நாம் இத்தலத்திலிருந்து திரும்பலாம்தானே.