வேங்கடம் முதல் குமரி வரை 2/தில்லைச் சிற்றம்பலவன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
9

தில்லைச் சிற்றம்பலவன்

மேனாட்டில் நடனப் பிரசித்திப் பெற்ற ரஷ்ய நாட்டு மாடம் பாவ்லோவா ஒரு நாள் தன் நடனங்களை ஒரு பெரிய அரங்கிலே ஆடிக்காண்பிக்கிறாள். நடனங்களைக் கண்டு களித்த ரசிகர் ஒருவருக்கு, கடைசியாக அந்த அம்மையார் ஆடிய நடனத்தின் பொருள் விளங்கவில்லை . ஆதலால் நடனம் முடிந்து திரையிடப் பெற்றதும் அவசரம் அவசரமாக, அந்த ரசிகர் கிரீன் ரூமுக்குள்ளேயே ஓடி அம்மையாரைக் கண்டு மிக்க ஆர்வத்தோடு கேட்கிறார்: 'அம்மையே! தாங்கள் நடன நிகழ்ச்சியில் கடைசியாக ஒரு அற்புதமான நடனம் ஆடினீர்களே அந்த நடனத்தின் பொருள் என்ன?' என்று. மாடம் பாவ்லோவா சிரித்துக் கொண்டு, 'அவ்வளவு எளிதாக அந்த நடனத்தின் பொருளைச் சொல்லக்கூடும் என்றால் அதை நான் நடனம் ஆடிக் காட்டியிருக்கவேண்டாமே' என்கிறாள். உண்மைதான். வெறும் வார்த்தைகளிலே நடனத்தின் பொருளை எல்லாம் சொல்லி விடக்கூடும் என்றால், அதை நடனம் ஆடிக் காண்பிப்பானேன்? அரங்கம், திரைச்சீலை, பக்க வாத்தியம், உடை, அணி என்றெல்லாம் சிரமப்பட்டு தேடுவானேன்! சொல்லால் விளக்க முடியாததை எல்லாம் நடனம் ஆடித்தான் காட்ட முடியும் என்பதே பாவ்லோவாவின் சித்தாந்தம். இந்தச் சித்தாந்தத்தை எத்தனையோ கற்பகோடி காலங்களுக்கு முன்னால் உலக மக்களுக்கு விளக்கியவன் நடனராஜன். அந்த நடராஜரது நடனத் திருவுருவத்தின் தத்துவங்களை, உண்மை விளக்கம், திருமந்திரம் சித்தியார், சிதம்பர மும்மணிக் கோவை முதலிய நூல்கள் விரிவாகவே கூறுகின்றன என்றாலும், அந்த நடராஜ மூர்த்தியிடமே விளக்கம் கேட்போமானால் அவரும், மாடம் பாவ்லோவாவைப் போல், 'அந்தத் தத்துவங்களை யெல்லாம் இப்படி வார்த்தைகளிலே சொல்லிவிட முடியும் என்றால் நான் ஏன் நடனம் ஆட வேண்டும்?' என்றே நம்மிடம் திரும்பக் கேள்வி போடுவார். சொல்லால் விளக்க முடியாத அற்புதத் தத்துவம் அது. அதை நடனம் ஆடித்தான் விளக்க முடியும். அதற்காகத்தான் அவன் ஆடுகிறான், ஆடுகிறான் அனாதி காலமாக. "வானம் மணிமுகடாய் மால்வரையே தூணாக ஆன பெரும்பார் அரங்காக“ அமைத்துக் கொண்டு ஆடிக்கொண்டே இருக்கிறான். இந்த ஆடும் பெருமானின் அற்புத தரிசனம் காண, தில்லைப்பதிக்கே செல்லவேண்டும். ஆம்! அந்தத் தில்லை என்னும் சிதம்பரத்துக்கே செல்கிறோம் இன்று நாம். தொண்டை நாடு நடுநாடு எல்லாம் கடந்து சோழவள நாட்டுக்குள்ளேயே நுழைகிறோம். சோழ நாட்டிலே இந்த க்ஷேத்திராடனம் தில்லைப்பதியிலேயே துவங்குகிறது மகிழ்ச்சி தருகிறது நமக்கு.

சிதம்பரம் செல்வதற்கு வழி சொல்ல வேண்டியதில்லை. ரயில்வே ஸ்டேஷன்களில் எந்த ஸ்டேஷனில் ரயில் ஏறினாலும், சிதம்பரத்துக்கு என்று ஒரு டிக்கட் கேட்டு வாங்கலாம். சென்னை தனுஷ்கோடி போட் மெயிலில் ஏறினாலும், இல்லை வேறு சாதாரண பாஸஞ்சர் வண்டிகளில் ஏறினாலும் சரி, தஞ்சைக்கும் விழுப்புரத்துக்கும் இடையே உள்ள இந்தத் தலத்துக்கு வந்து சேரலாம் எளிதாக. ரயிலை விட்டு இறங்கியதும் நேரே கோயிலுக்கே செல்லலாம். இரவில் ஊர் வந்து சேர்ந்தால் நண்பர்கள் வீட்டிலோ அல்லது வேறு ஏதாவது தங்கும்; இடங்களிலோ தங்கிவிட்டுக் காலை ஐந்து மணிக்கே எழுந்து, ஸ்நானம் முதலியவற்றையும் முடித்துக் கொண்டு ஓட்டம் ஓட்டமாக ஆறு மணிக்குள் கோயிலுள் நுழைந்துவிட வேண்டும். கீழ்க்கோபுர வாயிலில் நுழைந்து விரைவாகப் பரந்து கிடக்கும் வெளிப் பிரகாரத்தைக் கடந்து நடராஜன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் சிற்றம்பலம் வந்து சேரவேண்டும். அங்கு நமக்கு முன்னமேயே அன்பர் பலர் வந்து காத்து நிற்பார்கள். தில்லை மூவாயிருவர் கூட்டத்தைச் சேர்ந்த அர்ச்சகர் வருகைக்காக. அப்போது மலையாளத்துச் செண்டை வாத்தியம் போன்ற ஒரு முழவு அதிரும். அந்த முழவு கொட்டும் போதே நம் கால்கள் ஆடும்; முழவின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, நம் இதயத் துடிப்பின் வேகமுமே அதிகரிக்கும்.

அச்சமயத்தில் சிற்றம்பலத்தின் பொற் கதவுகள் திறக்கப்படும். ஆரத்தி காட்டப்படும். நன்கு அலங்கரிக்கப்பட்ட நடராஜனது திருக்கோலத்தைக் கண்டு உடல் புளகாங்கிதம் அடையும், உள்ளம் குழைந்து நெகிழும்.

இந்த நடனத் திருக்கோலத்தையே ஆனந்த நடனம் என்பார்கள். இக்கோலத்தைக் கண்டு தொழுதே அன்று திருமூலர்,

ஆனந்தம் ஆடரங்கு, ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தமாக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக்கூத்து உகந்தானுக்கே

என்று பாடியிருக்கிறார். ஆனந்தம் ஆனந்தம் என்று பரவசமாக ஆடியிருக்கிறார். இந்த ஆனந்தக் கூத்தனின் திருவோலக்கக் காட்சி எப்படி இருக்கும்? கண் குளிரக் கண்டு நாமும் பரவசம் அடைந்தாலும், சொல்லத் தெரிய வேண்டாமா? சொல்லத் தெரிந்த அப்பர் சொல்கிறார்:

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்
வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல்
மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்
பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே

அப்பர் பாட்டுக்கு, ஒரு சிறிய திருத்தம். வெறும் மனித்தப் பிறவி மட்டும் போதுமா? நடராஜனது திருநடனத்தை அனுபவிக்கும் அனுபவத்தோடு ஒட்டிய பிறவி, தமிழ் மனிதப் பிறவியாகவும் இருக்க வேண்டாமா? இந்தச் சமயத்தில் நம் உள்ளத்தில் ஓர் ஐயம் எழும். சித்சபையில் நடனம் ஆடுகிறான் நடராஜன். அப்படி அவன் ஆடுவது ஒரு பெரிய சிதம்பர ரகசியம் என்பார்களே! அப்படி ஒன்றும் காணோமே, நடராஜன் ரகசியமாக ஆடவில்லையே, நல்ல பகிரங்கமாகத்தானே ஆடிக் கொண்டிருக்கிறான் என்றெல்லாம் எண்ணத் தோன்றும். அப்போது அந்தச் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலையும் திறப்பார்கள். திரையை அகற்றுவார்கள், ஆரத்தி காட்டுவார்கள். நாம் உற்றுப் பார்த்தாலும் அங்கு ஒன்றும் தோன்றாது. ஏதோ தங்கத்தால் ஆன வில்வதள மாலை ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருப்பது மாத்திரமே தெரியும். 'இங்கு தான் மூர்த்தி ஒன்றும் இல்லையே, எதற்கு வில்வதளம், எதற்கு ஆரத்தி?' என்று கேட்போம் நாம். அதுதான் 'ரகசியம்'. இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறான் என்பதால், அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் அவனை எந்த உருவில் வணங்குவது? நல்ல வெறும் வெளியையே இறைவனாக வழிபட வகை செய்திருக்கிறார்கள். ஆம் இறைவன் 'வான் நின்று இழிந்து வரம்பு.இகந்த மாபூதத்தின் வைப்பும் எங்கும் ஊனும் உயிரும், உணர்வும்போல், உள்ளும் புறத்தும்' நிறைந்து நிற்பவன் அல்லவா? திருவாரூரில் மண்ணாக, ஆனைக்காவில் நீராக, அண்ணாமலையில் அனலாக, காளத்தியில் காற்றாக வழிபடப் பெறும் இறைவனையே இங்கு ஆகாய உருவில் வழிபடுகிறோம் நாம். இறைவனை ஆகாய உருவில் வழிபடுதல்தான் எத்தகைய சிறந்த வழிபாடு.

எடுத்த எடுப்பிலேயே, நடராஜனைத் தரிசித்து அவர் மிகவும் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கும் ரகசியத்தையும் தெரிந்து கொள்கிறோம். இனி கோயில் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தலத்தின் பழைய பெயர் தில்லை. தில்லைச் செடிகள் நிறைந்த காடாயிருந்ததனால் தில்லை என்று பெயர் பெற்றிருக்கிறது. வியாக்ரபாதர் பூஜித்த தலம் ஆனதால் பெரும்பற்றப் புலியூர் என்று பின்னர் வழங்கியிருக்கிறது. என்றும் சிற்றம்பலத்தை உள்ளடக்கியிருப்பதால் சிதம்பரம் என்றும், பின்னர் இந்தச் சிற்றம்பலத்தையே பராந்தகன் பொன் வேய்ந்து சிறப்புச் செய்த காரணத்தால் பொன்னம்பலம் என்றும் விரிந்திருக்கிறது.

நடராஜன், உலக மக்கள் எல்லாம் உய்யத் தன் ஆனந்த தாண்டவத்தை ஆடிக்காட்ட எல்லா இடங்களையும் விட்டு விட்டு இந்தத் தலத்தை ஏன் தேடிப் பிடித்து எடுத்தான் என்பது ஒரு ரஸமான வரலாறு. வியாக்ர பாதர் (புலிக்கால் உடைய முனிவர் ஆனதனாலே இப்பெயர். அவருக்குத் தந்தை தாயார் இட்டபெயர் என்னவோ தெரியவில்லை..) காசியில் வாழ்ந்தவர். தில்லையின் பெருமையைத் தந்தை சொல்ல, காசியை விட்டுத் தில்லைக்கு வருகிறார். தில்லைக் காட்டின் நடுவிலே ஓர் ஆலமரத்தின் அடியிலே முளைத்து எழுந்த லிங்க உருவைக் காண்கிறார். அந்த உருவுக்கே வழிபாடு செய்கிறார். (இந்த லிங்கத் திருவுருவே இன்று இந்தத் திருக்கோயிலில் கர்ப்பக் கிருஹத்தில் கோயில் கொண்டிருக்கும் திரு மூலட்டானேசுவரர், இந்த உருவைக் சுற்றியே கோயில் உருவாகியிருக்கிறது. பின்பு) வழிபாட்டுக்குரிய மலர்களை, வண்டு சுவைக்கு முன்பே எடுத்துப் பூஜிக்க நினைக்கிறார். அதற்காகப் பொழுது புலராமுன் மரங்களில் வழுக்காமல் ஏறப் புலிக் கால்களையும், இருட்டிலும் நன்றாகக் கண் தெரியப் புலிக் கண்களையும் இறைவனை வேண்டிப் பெறுகிறார். இப்படி இந்த வியாக்கிரபாதர் வாழும் நாளில் பதஞ்சலி முனிவரும் வந்து சேருகிறார் தில்லைக்கு. அன்று அந்த வான் அரங்கிலே நடராஜன் ஆடிய ஆட்டத்தைப் பற்றி பதஞ்சலியிடம் சொல்கிறார். இருவரும் சேர்ந்தே தவங்கிடக்கிறார்கள் இறைவனை நோக்கி, அவர்களுக்கு அந்த அற்புத நடனத்தைக் காட்ட. இதே சமயத்தில், இத் தில்லை வனத்தின் அதிதேவதையான தில்லைக்காளி, நடனத்தில் தன்னை ஒப்பாரும், மிக்காரும் இல்லை எனத் தருக்கித் திரிகிறாள். தில்லைக் காளியின் செருக்கு அடக்கவும், முனிவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும், இறைவன் பூவுலகுக்கு இறங்கி வருகிறார். தில்லைக் காளியுடன் போட்டியிட்டு நடனம் ஆடுகிறார். அவளுமே சளைக்காமல் ஆடுகிறாள். கடைசியில் தில்லைக் காளி ஆட முடியாத அந்த

தில்லை சிற்பங்கள்
ஊர்த்துவ தாண்டவத்தையே ஆடுகிறார். காளி தோல்வியை ஒப்புக் கொள்கிறாள். நிருத்த சபை, நடராஜனது முழு ஆளுகைக்குள் வந்து விடுகிறது. தில்லைக் காளியோ செருக்கடங்கி, ஊருக்கு வடபுறத்தே ஒதுங்கி எல்லைக் காளியாகி விடுகிறாள். இப்படித்தான் சிற்றம்பலத்தான் இந்தத் தில்லையிலே இடம் பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறும் தல வரலாறு.
தில்லை சிற்றம்பலவன் கோயில் கோபுரம்

இந்தத் தில்லைச் சிற்றம்பலமுடையான் கோயில் மிகப் பெரிய கோயில். 'கோயில்' என்றாலே வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம், சைவர்களுக்கு இந்தச் சிதம்பரம் என்று ஆகிவிட்டது தமிழ் நாட்டில், இக் கோயிலின் விஸ்தீரணம் நாற்பது ஏக்கர் பூமி. நான்கு நான்கு வாயிலிலும் நான்கு ராஜ கோபுரங்கள், இந்தக் கோபுரங்களை இணைத்து நல்ல கருங்கல் மதில்கள். கீழ்க் கோபுரம் கி.பி. 1250-ல் மதுரையிலிருந்து அரசாண்ட சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது என்றும் பின்னர் பச்சையப்ப முதலியாரால் செப்பனிடப்பட்டது என்றும் கூறுவர். வடக்கு கோபுரம் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விஜயநகர மன்னனாக இருந்த கிருஷ்ண தேவராயனால் அவனது ஒரிஸ்ஸா வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. தெற்குக் கோபுர வாயில் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோப்பெருஞ்சிங்கதேவன் என்ற பல்லவ மன்னனால் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோபுரங்களில் எல்லாம் எண்ணற்ற சிற்ப வடிவங்கள். அகஸ்தியர், திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், அக்கினி தேவர், அசுவினி தேவர்களோடு, சந்திரசேகரர், கல்யாண சுந்தரர், பாசுபதர், அர்த்தநாரி, திரிபுராந்தகர், கஜசம்ஹாரர் முதலிய எண்ணற்ற திருக்கோலங்கள் கோபுரத்திலுள்ள மாடங்களில் நிறைந்திருக்கின்றன. எங்கும் காணாத திருக்கோலங்களை யெல்லாம் இங்கே கண்டு மகிழலாம். மேலும் இந்த நான்கு கோபுர வாயில்கள் வழியாகவே, சமய குரவர் நால்வரும் நுழைந்திருக்கிறார்கள் என்பது வரலாறு, கிழக்குக் கோபுர வாயிலாக மணிவாசகரும், தெற்குக் கோபுர வாயிலாக ஞானசம்பந்தரும், மேற்குக் கோபுர வாயிலாக அப்பரும், வடக்குக் கோபுர வாயிலாகச் சுந்தரமூர்த்தியும் நடராஜப் பெருமானை வணங்கி வழிபட எழுந்தருளி யிருக்கிறார்கள். அதனாலேயே கோபுரம், கோபுர வாயில் எல்லாம் புனித மடைந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

கோயிலுக்குள் நுழைந்த பின் எங்கெங்கெல்லாம் செல்ல வேண்டும், எந்தெந்த மூர்த்தியை எல்லாம் தொழ வேண்டும் என்றும் எளிதாகச் சொல்ல முடியாத அளவுக்கு மூர்த்திகளும் சுற்றுக் கோயில்களும், மண்டபங்களும் அங்கே உண்டு. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் முக்குறுணி விநாயகர். மேலைக் கோபுரத்தை அடுத்து கற்பக விநாயகர். இவர் ஏழு திருக்கரங்களோடு கூடிய நர்த்தன கணபதி. இவரே தல விநாயகர். இங்கு சண்முகருக்குத் தனித்ததொரு சந்நிதி இருப்பதோடு, பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் பெரிய தொரு கோயில் வேறே இருக்கிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் கட்டிக் கொடுத்த கோயில் ஆனதால், இவர் பாண்டிய நாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார்.
தில்லை கோயில் தூண்கள்

இவை தவிர, மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயில், அம்மன் சந்நிதி, துர்க்கை கோயில்கள் எல்லாம் உண்டு. இன்னும் இந்தக் கோயிலில் நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், சிவகங்கைத் தீர்த்தம் முதலியவைகளும் இருக்கின்றன . முன்னர் விவரித்த சித்சபை, கனக சபைகளோடு ஊர்த்துவ தாண்டவர்

கோயில் (சிதம்பரம்)
இருக்கும் நிருத்த சபை வேறே. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பெரிய சிவன் கோயிலுக்குள்ளே கனகசபைக்குப் பக்கத்தில் தென் திசையில் தலை வைத்து வடதிசைக் காலை நீட்டித் தில்லை கோவிந்தராஜர் வேறே படுத்துக் கொண்டிருக்கிறார். 'கருது செம்பொனின் அம்பலத்தில்' ஒரு கடவுள் நின்று நடித்தால் காவிரித் திருநதியில் துயிலும் கருணை மாமுகிலான அரங்க நாதனும், இங்கேயே வந்து காலை நீட்டிப் படுத்துக் கொள்கிறார். தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரும் நடராஜரைச் சேவிப்பது போலவே இவரையும் சேவிக்கிறார்கள்.

மூவாயிர நான்மறை யாளர்
முறையால் வணங்க
தேவாதி தேவன் திகழ்கின்ற
தில்லைத் திருச்சித்ர கூடம்

என்று இந்தக் கோவிந்தராஜர் கோயில் கொண்டிருக்கும் சித்ர கூடத்தை, திருமங்கையாழ்வார் மங்களா சாஸனம் செய்திருக்கிறார். பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற் பகுதியில் சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கன் நடராஜரது சந்நிதியை விரிவாக்க விரும்பி, இந்தக் கோவிந்தராஜரை எடுத்துக் கடலில் எறிந்து விட்டான் என்றும், ராமானுஜர் இந்த விக்கிரகத்தைக் கைப்பற்றித் திருப்பதியில் பிரதிஷ்டை செய்தார் என்றும், பதினாறாம் நூற்றாண்டிலே கிருஷ்ணதேவராயனது சகோதரன் அச்சுதராயன் திரும்பவும் கோவிந்தராஜரைத் தில்லையிலே பிரதிஷ்டை செய்திருக்கிறான் என்றும் சரித்திரம் கூறும். சைவமும் வைணவமும் பின்னிப் பிணைந்து இணைந்து வாழும் பெருங்கோயிலாக இக் கோயில் இன்று நிலவுகிறது என்று சொன்னால் வியப்பில்லை.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் பாடிய திருப்பதி இது. இந்த மூவரால் பாடப் பெற்ற பெருமையோடு, மணிவாசகரை முழுக்க முழுக்க ஆட்கொண்டு, அவர் பாடிய திருவாசகத்துக்குப் படி எடுக்கும் பெருமானாக அமைந்தவன் சிற்றம்பலவன். மணிவாசகரைக் கோவையார் பாடச் சொன்னவனும் அவனே. இது தவிர, திருநீலகண்டர், திருநாளைப் போவார், கூற்றுவர், கோச்செங்கட் சோழர், கணம்புல்லர், சேரமான் பெருமாள் முதலிய அடியவர்கள் முத்திபெற்ற ஸ்தலம். பொன்வண்ணத்தந்தாதி பாடிய சேரமான் பெருமானுக்கு ஆடிய பாதத்தின் சிலம்பொலி கேட்கச் செய்தவன் இந்தச் சபாநாயகன். இன்னும் இத்தலத்தில் தான் சேக்கிழார் எழுதிய திருத் தொண்டர் பெரிய புராணமும் அரங்கேறி இருக்கிறது. இத்துணை பிரசித்தி பெற்ற இக்கோயிலின் வரலாறு மிகப் பழமையானது. பல்லவ மன்னர்களும், சோழப் பேரரசர்களும், பாண்டியர்களும் போட்டி போட்டுக் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். அம்பலத்துக்குப் பொன் வேய்ந்திருக்கிறார்கள், நிபந்தங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். சிவபாத சேகரனான ராஜராஜன் தில்லைச் சிற்றம்பலவனிடத்திலே எல்லையில்லாத காதல் கொண்டவன். அவன் ராஜ்யத்தில் நிலம் அளக்கும் கோல் 'சிற்றம்பலக்கோலாக' இருந்தது. நெல் அளக்கும் மரக்காலோ 'ஆடவல்லானாகவே' இருந்தது. மேலும் திருமுறைகளை எல்லாம் இச்சிற்றம்பல முடையான் கோயிலிலிருந்து எடுத்துத் திருமுறை வகுத்திருக்கிறான் அந்தத் திருமுறை கண்ட சோழன் ராஜராஜன்.

இந்தத் தில்லையை அடுத்தே, இன்று அண்ணாமலை சர்வகலாசாலை உருவாகியிருக்கிறது. ஒரு பெரிய சர்வகலாசாலையை அமைக்க இதைவிட ஒரு சிறந்த இடத்தை, ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. தில்லை நடராஜன் அல்லும் பகலும் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பதற்கு உரிய காரணங்களை நாம் அறிவோம். ஆனால் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களோ வேறு ஒரு காரணமும் கூறுகிறார்கள். அவர்கள் கூறும் காரணம் இதுதான்:

“தில்லைப்பதி உடையான்

சிற்றம்பலந் தன்னில்

அல்லும் பகலும் நின்று

ஆடுகின்றான் எல்லைக்கண்

அண்ணா மலை மன்

அமைத்த கலைக்கழகம்

கண்ணாரக் கண்டு களித்து.”

இன்னும் அதிகமாக நான் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன?