வேங்கடம் முதல் குமரி வரை 3/001-033
(பாகம் - 3)
- காவிரிக் கரையிலே -
1. குடந்தைக் கும்பேசுரர்
'லண்டன் டைம்ஸ்' பத்திரிகையோடு தொடர்புடைய ஆங்கிலேயர் ஒருவர் இந்தியாவுக்கு வருகிறார், கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்பு. தூத்துக்குடியில் கப்பலில் இறங்கி மதுரை எல்லாம் கடந்து 'மெயில் ரயிலிலே' சென்னைக்குப் பிரயாணம் செய்கிறார் முதல் வகுப்பிலே. அந்த முதல் வகுப்புப் பெட்டியிலே ஒரு தமிழ்ப் பிரமுகரும் பிரயாணம் செய்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளவில்லை. இரவு பத்துப் பதினோரு மணிக்கு ரயில் தஞ்சையைக் கடந்து செல்கிறது. தமிழ்ப் பிரமுகர் கும்பகோணத்தில் இறங்கி விடுகிறார். ஆங்கில நண்பரோ சென்னை செல்கிறார். சென்னை எழும்பூர் சென்றதும் பார்த்தால், கும்பகோணத்தில் இறங்கியவர் தம் பெட்டியை ரயிலில் விட்டுவிட்டு, ஆங்கிலேயரது பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்திருக்கிறார். அவர் வேண்டுமென்று செய்திருக்கமாட்டார். ஏதோ பெட்டிகள் ஒரே விதமான பெட்டிகளாக இருந்திருக்க வேண்டும். பெட்டிகள் மாறிவிட்டன. ஆங்கிலேயர் தம் பெட்டியைப் பெற எவ்வளவோ முயன்று பார்த்தார்; கிடைக்கவில்லை. இந்த ஏமாற்றத்துடனே தம் தாய்நாட்டுக்குத் திரும்பினார். லண்டன் சென்று சேர்ந்ததும், 'கும்பகோணம் பிஸினஸ்' என்ற தலைப்பிலே தாம் பெட்டியைப் பறிகொடுத்த விவரத்தை “லண்டன் டைம்ஸ்' பத்திரிகையிலே எழுதினார். அன்று முதல் கும்பகோணத்துக்கு ஓர் அவப் பெயர். கும்பகோணம் என்றாலே ஏதோ தகிடுதத்தம் செய்கிற ஊர் என்றாகிவிட்டது. ஏதாவது ஏமாற்றுக் கச்சவடம் செய்கிறவர்களைப் பார்த்து 'என்ன கும்பகோண வேலையைக் காட்டுகிறாய்?” என்று சொல்கின்ற பழக்கமும் வந்துவிட்டது. ஏன்? கும்பகோணம் என்றாலே ஏமாற்றுதல் என்ற பொருள் என்று ஆக்ஸ்போர்ட் அகராதிக்காரர்களும் எழுதிவைத்து விட்டார்கள். கும்பகோணம் இப்படிப் பிரபலமடைந்துவிட்டது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலே. ஆனால் கும்பகோணம் எவ்வளவு கற்பகோடி காலமாகப் புராணப் பிரசித்தி, சரித்திரப் பிரசித்தி எல்லாம் பெற்ற ஊர் என்பதைக் கும்பகோண மகாத்மியத்தைப் புரட்டிப் பார்த்தவர்கள் அறிவார்கள்.
கும்பகோணம், தஞ்சை ஜில்லாவில், தலை நகராம் தஞ்சையைவிடப் பெரிய ஊர். அந்த நகரின் மத்தியிலே காவிரி ஓடுகிறது. அந்தக் காவிரியின் கரையிலே நெல்லும் வாழையும் செழித்து வளர்கின்றன. அங்கே தான் தென்னிந்தியக் கேம்பிரிட்ஜ் என்ற பெயர் பெற்ற சர்க்கார் கலாசாலை இருக்கிறது. சர். பி. எஸ். சிவசாமி அய்யர், சர். சி. பி. ராமசாமி அய்யர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் முதலிய பேரறிஞர்கள் படித்த கல்லூரி அது. கணித மேதை ராமானுஜம் படித்ததும் அங்கே தான் என்பார்கள், காஞ்சி காமகோடி பீடத்தின் தலைமைக் காரியாலயமும் இங்கே தான். கும்பகோணம் என்றாலே அறிவின் பிறப்பிடம், மேதைகளை வளர்க்கும் பண்ணை என்றெல்லாம் புகழ். கும்பகோண வக்கீல் என்றாலே வல்லடி வழக்கில், அகடவிகட சாமார்த்தியத்தில் எல்லோரையும் விஞ்சியவர்கள் என்ற பிரபலம். இவையெல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் காலூன்றியபின் கும்பகோணம் - பெற்ற பெருமை. ஆனால் பக்த கோடிகளிடையே அது கோவில்கள் நிறைந்த ஊர் என்றுதான் பிரசித்தம். தமிழ் நாட்டில் தெய்வ மணம் கமழும் திருநகராக இருப்பது காஞ்சி. அதற்கு அடுத்த ஸ்தானம் வகிப்பது கும்பகோணம் என்னும் குடந்தையே, ஆனால் காஞ்சியைப் போல் இங்கு சிவனும் விஷ்ணுவும் ஊரைப் பங்கு போட்டுக் கொள்ளவில்லை. எல்லோரும் அடுத்து அடுத்தே வாழ்கிறார்கள்.
ஊருக்கு நடுவில் சாரங்கபாணி என்றால் அவரைச் சுற்றியே கும்பேசுரர், சோமேசுரர் எல்லாம். இவர்கள் தவிர சக்ரபாணி, கோதண்டராமர் வேறே. இன்னும் குடந்தைக் கீழ்க்கோட்டனார், குடந்தை காரோணத்தார் வேறே. மேலும் வீதிக்கு ஒரு கோயில், தெருவுக்கு ஒரு கோபுரம் என்று ஊர் முழுவதும் கோயில்களாக நிரம்பிக் கிடக்கும் தலம் அது. இந்தத் தலத்தையும் இங்குள்ள மூர்த்திகளையும் விடப் பிரபலமானது அங்குள்ள தீர்த்தம். பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருதரம் இந்தக் கும்பகோணத்தில் நடக்கும் மகா மகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் அங்குள்ள மகாமகக் குளத்தைப் பார்த்தும் இருப்பீர்கள். இந்த மகாமகத் தீர்த்தம் எப்படி ஏற்பட்டது என்று முதலில் தெரிந்துகொள்ளலாமே.
மாசி மாதத்தில் மக நட்சத்திரம் விசேஷமானது. அதிலும் குரு சிம்ம ராசியில் இருக்கும் காலம் மிக மிக விசேஷமானது. அப்படி வருவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே. அந்த மகாமக தினத்தன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு, கோதாவரி, நருமதை, சிந்து, காவேரி, வேகவதி என்னும் ஒன்பது நதிகளுமே இங்கு கூடுகின்றன. பாவதாரிகளான மக்கள் எல்லாம் இந்நதிகளிலே தனித் தனியாக மூழ்கித் தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்ள, அந்த மக்கள் பாவங்களையெல்லாம் ஏற்பது காரணமாக இந்த நவகன்னியருமே பாபகாரிகளாக மாறுகின்றனர். சிவபெருமானை வணங்கி இந்தப் பாபங்களைப் போக்கிக் கொள்ளும் வகை வேண்ட, அவரும் இந்தக் காவிரிக் கரையில் உள்ள தீர்த்தக் கட்டத்துக்கு குரு சிம்மராசியில் இருக்கும் நாளன்று வரச் சொல்கிறார். அன்று இங்குள்ள மகாமகக் குளத்துக்கு நவ கன்னியரும் வந்து சேர்ந்து கூடிக் கும்மாள மிடுகின்றனர். அந்தக் கும்மாளத்தோடு கும்மாளமிட்டுக் குளிக்கும் மக்கள் பாவமுமே கரைந்து விடுகிறது என்பது வரலாறு. இத்தகைய பிரசித்தி உடைய தீர்த்தம் இருக்கும் கும்பகோணத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.
கும்பகோணம் போக, எந்த ஊரில் இருந்தும் டிக்கட் வாங்கலாம். நேரே ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கலாம். ஸ்டேஷனைக்கூட இப்பொழுது விஸ்தரித்துக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஸ்டேஷனில் இறங்கியதும் வண்டி பிடித்துக் கொள்ளலாம். ஊருக்குள் செல்ல இரண்டு வழி உண்டு. ஒன்று வட பக்கமாகவும், மற்றொன்று தென் பக்கமாகவும் செல்லும். நாம் தென் பக்கமாகச் செல்லும் பாதையிலேயே போகலாம். - கும்பகோணத்தில் நாம் முதல் முதல் காண வேண்டியது மகாமகக் குளந்தானே. வண்டியில் ஏறி நான்கு பர்லாங்கு தூரம் கடந்ததுமே நாம் மகாமகக் குளக்கரை வந்து விடுவோம்.
இந்தக் குளம் பெரிய குளம். கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஏக்கர் விஸ்தீரணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நல்ல படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டிருகிறது. இதன் நான்கு கரைகளிலும் பதினாறு சிவ சந்நிதிகள் இருக்கின்றன. இக்குளத்தின் மத்தியில் ஒன்பது கிணறுகள் இருக்கின்றன. இந்த ஒன்பது கிணறுகளின் தான், முன் சொன்ன நவகன்னியர் மகாமகத்தன்று எழுகிறார்கள் என்ற நம்பிக்கை. இந்தத் தீர்த்தத்துக்கு இந்தப் புனிதம் ஏற்பட்டதற்குக் காரணம் இதில் அமுதம் தங்கியது என்று ஒரு வரலாறு. அந்த வரலாற்றிலே தான் இந்தத் தலத்தின் பெயராம் குடமூக்கு, அத்தலத்தில் : உள்ள மூர்த்தியாம் கும்பேசுரரைப் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
பிரம்மதேவருக்கு அவருடைய சிருஷ்டித் தொழிலுக்கு உதவியாக இருந்திருக்கிறது இறைவன் அருளிய அமுதக் குடம். அந்தக் குடத்தைப் பத்திரமாக அவர் மகாமேரு பர்வதத்தில் வைத்திருந்திருக்கிறார், பிரளய காலத்தில் உலகமே பிரளயத்தில் முழுகிய போது, இந்தக் குடம் வெள்ளத்தில் மிதந்திருக்கிறது. வெள்ளம் வடிகிற போது, இந்தக் குடம் ஓர் இடத்திலே வந்து தங்கி இருக்கிறது. பிரமனது வேண்டுகோளின்படி, சிவபெருமான் வேட வடிவத்தில் வந்து அம்பு எய்து இந்தக் குடத்தைச் சோதித்திருக்கிறார். குடத்தினின்றும் அமுதம் வழிந்து ஓடியிருக்கிறது. உடைந்த குடத்து ஓடுகளையும், சிந்திய அமுதத்தையும் சேர்த்துச் சிவலிங்கமாக ஸ்தாபித்திருக்கிறார் சிவபெருமான். கும்பத்திலிருந்து தோன்றிய பெருமான் ஆனதினாலே கும்பேசர் என்ற பெயர் பெற்று அங்கே நிலைக்கிறார். ஊருமே கும்பகோணம் என்று பெயர் பெறுகிறது.
குடத்திலிருந்து சிந்திய அமுதம் வழிந்த இடத்திலேதான் மகாமகக் குளம் இருக்கிறது. அதனால்தான் அங்கு பெருகும் தீர்த்தத்திற்கு அத்தனை மகிமை; ஆதலால் நாமும் ஒரு முழுக்குப் போடலாம் அங்கே. அதற்குத் துணிவு இல்லாதவர்கள், மகாமகக் குளத்து நீரைத் தலையில் பரோக்ஷித்துக் கொண்டே கிளம்பிவிடலாம், ஊரில் உள்ள கோயில்களைக் காண, ஒருநாளை சிவனுக்கு என்றும் ஒருநாளை விஷ்ணுவுக்கென்றும் ஒதுக்கி வைத்து விடலாம். முதலில் மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள குடந்தைக் காயாரோகணத்தாரையே வணங்கிவிட்டு மேல் நடக்கலாம். இவரையே காசி விசுவநாதர் என்று மக்கள் அழைக்கிறார்கள்.
இராவணாதி அரக்கர்களை வதம் செய்யப் புறப்பட்ட ராமன் அத்தொழிலை நன்கு நிறைவேற்றத் தம்மிடம் ருத்திர அம்சம் இல்லை என்பதைக் காண்கிறார். அந்த அம்சம் பெறவேண்டிக் காவிரிக் கரையிலே காசி விசுவநாதரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார். ராமன் விரும்பிய வண்ணமே ராமனது உடலில் சிவன் ஆரோகணிக்கிறார். அதனால் இராவண வதம் முட்டின்று முடிகின்றது என்பது புராணக் கதை, ராமனது. காயத்தில் ஆரோகணித்தவர் ஆதலால் காயாரோகணர் என்ற பெயர் பெறுகிறார். இந்தக் காயாரோகணத்தார் சந்நிதி மேற்கு பார்த்து இருக்கிறது. சிறிய கோயில்தான். கோயிலில் நுழைந்ததும் வடபுறம் உள்ள ஒரு மண்டபத்தில் நதிகளாகிய நவகன்னியரும் நின்று கொண்டி ருக்கிறார்கள். தல முக்கியத்துவம் வாய்ந்தவளான காவிரி வாயிலுக்கு நேரே நின்று கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் பக்கத்துக்கு நால்வராக ஒதுங்கிக் கொள்கிறார்கள். எல்லாம் சுதையாலான வடிவங்களே.
மகாமக உற்சவத்தில் எழுந்தருளச் செய்வதற்காகச் செப்புச் சிலை வடிவிலும், இந்த நவ கன்னியரைச் சிறிய உருவில் சமீப காலத்தில் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தச் செப்புப் படிமங்கள் ஒதுக்குப் புறத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். அவர்களைத் தேடித்தான் பார்க்க வேண்டும். இனிக் கோயிலுள் இருக்கும் விசுவநாதரையும் விசாலாக்ஷியையும் வணங்கலாம். இந்தக் கோயிலுக்கு சம்பந்தர் வந்து காயாரோகணத்தாரைப் பாடிப் பரவி இருக்கிறார். சம்பந்தர் குறிப்பிடாத மகாமகத் தீர்த்த விசேஷத்தைச் சேக்கிழார் கூற மறக்கவில்லை . 'பூமருவும் கங்கை முதல் புனிதமாகப் பெருதீர்த்தம் மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடுங் கோயில்' என்றல்லவா பாடுகிறார்.
இந்தக் குடந்தைக் காரோணத்தாரைக் காண மறந்தாலும், இவரது கோயிலுக்கு மேற்கே ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள குடந்தைக் கீழ்க் கோட்டனாரைக் கண்டு தரிசிக்காமல் மேல் நடத்தல் கூடாது. இது ஒரு கலைக் கோயில். இங்கு கோயில் கலையின் பலபடிகளைப் பார்க்கலாம். இங்கு கோயில் கொண்டிருக்கும் நாகேசுவரனை இந்திரனும் சூரியனும் வழிபட்டதாக ஐதீகம். இந்திரன் வழிபட்டானோ என்னவோ? சூரியன் இன்றும் வழிபடுகிறான், ஒவ்வொரு வருஷம் சித்திரை மாதம் 10, 11, 12 தேதிகளில் காலை ஆறு மணிக்கெல்லாம் கோயில் வாயில், கொடி மரம், நந்தி, பலிபீடம் எல்லாவற்றையும் கடந்து சூரியன் கருவறைக்குள் புகுந்துவிடுகிறான். அந்த அறையை ஒளிமயமாக் ஆக்குவதோடு தன் ஒளியாகிய கரங்களாலே லிங்கத் திருவுருவத்தைத் தழுவி வழிபடுகிறான். இந்த வழிபாடு ஓர் அற்புதக் காட்சி. இக்காட்சி அமையும் வகையில், கட்டிடம் கட்டிய சிற்பிகளுக்கு நமது தலை தானாகவே வணங்கும். இன்னும் வெளி முற்றத்தைக் கடந்து நடந்தால் கல் தேர் போல் அமைந்த ஒரு பெரிய மண்டபத்தைப் பார்ப்போம். அதுதான் நடராஜர் சந்நிதி, அந்தக் கல்தேர் சக்கரங்கள், அதனை இழுக்கும் குதிரைகள் எல்லாம் அழகானவை. உள்ளே சென்றாலோ, 'அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த' அதற்கேற்ப நடனமிடும் நடராஜர் திருக் கோலத்தைக் காணலாம். கோயிலுள் சென்று நாகேசுவரனை வணங்கி வலம் வந்தால் எண்ணரிய கலைச்செல்வங்களை மாடக் குழிகளில் காணலாம். கல்லிலே வடித்த கட்டழகியும் அவள் பக்கத்திலேயே முற்றும் துறந்த பௌத்த பிக்ஷவும் நிற்பார்கள் தென் பக்கத்திலே.
மேற்கு நோக்கியமாடத்திலே அழகான அர்த்தநாரீசுரர் வடிவம், இக்கோயில் ராஜராஜன் காலத்துக்கும் முந்தியது என்று பாறைசாற்றிக் கொண்டு நிற்கும். கலை உலகிலே ஓர் அற்புத சிருஷ்டி அது. இடப்பாகத்தில் இருக்கும் பெண்ணின் இடையைப் பெரிதாக்கி அதற்கேற்றவாறு ஒரு நெளிவு கொடுத்துச் சிற்பி அச்சிலா உருவத்தைச் சமைத்திருப்பது பார்த்துப் பார்த்து அனுபவிக்கத் தக்கது. வட பக்கத்துக் கோஷ்டங்களிலோ பிரம்மா, துர்க்கை எல்லாம்; இதோடு ஒரு பொந்துக்குள்ளே அழகிய பிக்ஷாடனர் ஒருவர். இந்த நாலைந்து சிலைகளை மட்டும் பார்த்துவிட்டால் போதும், சோழர் கலை வளத்தை உலகுக்கு அறிவிக்க. இந்தச் சிலைகளைச் செய்தமைத்த கலைஞர்களுக்கும் வணக்கம் செய்துவிட்டுத் திரும்பலாம் நாம். வரும் வழியிலே தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் பெரிய நாயகியையும் வணங்கலாம்.
அவகாசம் இருந்தால், பிராகாரங்களில் உள்ள மற்றச் சுற்றுக் கோயில்கள் அங்குள்ள மூர்த்திகளையும் கண்டு தரிசிக்கலாம் இக்கோயில் வாயிலிலிருந்து வடக்கே வந்து மேற்கே திரும்பி நடந்தால், ஒரு சிறு கோபுர வாயிலில் கொண்டு வந்து விடும். இதுதான் ஏழைச் சோமேசர் கோயில். இவர் ஏழை என்பதைக் கோயில் தெற்குச் சுவரில் உள்ள விளம்பரங்களே சொல்லும். இங்கு காணவேண்டிய கலை அழகுகள் ஒன்றும் இல்லைதான். இங்குள்ள சோமேசர், தேனார் மொழியாள் இருவரையும் வணங்கி விட்டு இன்னம் மேற்கு நோக்கி நடந்து இடையில் உள்ள பொற்றாமரைக் குளத்தையும் கடந்தால் இத்தலத்தின் பிரதான சிவன் கோயிலான கும்பேசுரர் சந்நிதிக்கு வந்து சேரலாம். பெரிய கோயில். ஆண்டவன் கும்பவடிவிலே லிங்கத் திருவுருவாக அமைந்திருக்கிறார். இவருக்குத் தங்கக் கவசம் சாத்தியே அபிஷேகம் முதலியன நடக்கின்றன. உடைந்த கும்பத்தின் துண்டுகளைச் சேர்த்து அமைக்கப்பட்ட திருஉருவந்தானே.
இங்குள்ள அம்பிகை மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். வணங்குபவர்களுக்குச் சர்வ மங்களத்தையும் அளிக்க வல்லவள் என்று நம்பிக்கை. அம்பாள் சந்நிதிக்கருகில் வேட வடிவங்கொண்ட சிவபெருமான் வேறே எழுந்தருளியிருக்கிறார். இவருக்குப் பூஜை முதலியன நடைபெறுகின்றன. இக்கோயில் துவஜ ஸ்தம்பத்துக்கு அருகில் லக்ஷ்மி நாராயணப் பெருமானும் இடம் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். இங்குள்ள சிலா உருவங்களில் அழகானது வீரபத்திரன் திருக்கோலம். சிவனை அவமதித்த தக்ஷனைத் தன் காலால் மிதித்து மடக்கித் தலை கொய்யும் வீரபத்திரனின் நிலை அச்சம் தருவதொன்று. ஆனால் ஐயகோ! வீரபத்திரனின் கையிரண்டும் பின்னமுற்றல்லவா கிடக்கிறது. சம்பந்தர் காரோணத்தாரை மட்டும் பாட, அப்பர் கீழ்க் கோட்டாத்தாரை மட்டும் பாட, இந்தக் கும்பேசுரர் மட்டும் இருவராலும் பாடப் பெற்றிருக்கிறார். அதிர்ஷ்டக்காரர்தான்,
நங்கையாள் உமையாள் உறைநாதனார் அங்கையாளோடு அறுபதம் தாள்சடைக்
கங்கையாள் அவள் கன்னி எனப்படும்
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே
என்பதுதான் அப்பர் தேவாரம். -
இத்தலத்தில் இப்படிப் பாடப்பெற்ற மூவர் மாத்திரமே இருக்கிறார்கள் என்றில்லை. இன்னும் அபிமுகேசுரர், ஆதி விசுவேசுரர், பாணபுரி ஈசுவரர், காளகஸ்திநாதர், ஏகாம்பர நாதர் எல்லோருமே இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே மகாமக ஸ்நானத்துக்கு வந்தவர்கள் போலும். இனி, இத்தலத்தில் உள்ள விஷ்ணு கோயிலைக் காணப் புறப்படலாம்.