உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 3/013-033

விக்கிமூலம் இலிருந்து

13. கடல் நாகைக் காரோணர்

தொண்டை மண்டலம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக உருவாவதற்குக் காரணமாக இருந்தவன் தொண்டைமான் இளந்திரையன். அவன்தன் புகழைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற சங்கப் புலவர் பெரும்பாண் ஆற்றுப் படையிலே பரக்கப் பாடுகிறார்.

இருநிலம் கிடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த்
திரைதரு மரபின், உரவோன் உம்பல்.
மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும்
முரக முழங்கு தானை மூவருள்ளும்
இலங்குநீர் பரப்பின் வளைமிக் கூறும்
வலம்புரி அன்னவசை நீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன்.

என்று பாராட்டப் பெறும் இளந்திரையன் வரலாற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டாமா? சோழ நாட்டிலே கிள்ளி வளவன் என்று ஓர் அரசன் இருக்கிறான். இளவயதிலே அவன் கடல் கடந்து செல்கிறான். அப்படிச் சென்றவன் நாகர் உலகத்துக்கே போகிறான்; அங்கு பீலிவளை என்ற நாக கன்னியைக்கண்டு காதலிக்கிறான். அந்த வட்டாரத்திலே கிடைத்த தொண்டை மலர்களை மாலையாக்கி அவளுக்கு அணிவித்துக் காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறான். பீலிவளையுடன் கூடியிருந்த தலைவன் கிள்ளிவளவன் தன் நாடு திரும்புகிறான். அவளை அறவே மறந்து விடுகிறான். பீலிவளையோ நல்ல ஆண் மகனைப் பெற்றெடுக்கிறாள், அவன் வளர்ந்து வாலிபமாகிறான். தான் சோழன் மகன் என்பதை அறிகிறான்.

அன்னையின் அனுமதியோடு கடல் கடந்து சோழ நாட்டுக்கு வருகிறான். கிள்ளி வளவனைக் கண்டு அரசுரிமை கேட்கிறான். அவன் அணிந்து வந்த தொண்டை மாலையால் உண்மையை உணர்கின்ற சோழ மன்னன், சோழ நாட்டையே இரு கூறாக்கி வட பகுதிக்குத் தொண்டை மாலை அணிந்து வந்த தொண்டையனை அரசனாக்குகிறான். கடல் அலைகொண்டு வந்த இளைஞன் ஆனதினால் அவனை இளந்திரையன் என்கின்றனர் மக்கள். இப்படித்தான் தொண்டைமான் இளந்திரையன் தொண்டை மண்டலத்தின் முதல்வனாகிறான் என்று பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த இளந்திரையன் நாகர் உலகத்திலிருந்து வந்து சோழ நாட்டில் கரை ஏறிய இடம்தான் நாகப்பட்டினம். இந்தக் கடற்கரைக்கு நாகப்பட்டினம் என்று பெயர் பெறுவதற்குப் புராண வரலாறும் ஒன்று உண்டு.

ஆதிசேடனுக்கு ஒரு மகள் ; அவள் சூரியகுலத் தோன்றலாம் சாலீசுக மன்னனைக் கண்டு காதலிக்கிறாள். ஆதிசேடன் இருவருக்கும் மணம் முடித்து வைத்துவிட்டுப் பூலோகத்துக்கு வந்து விடுகிறான். வந்து ஒரு நகரைச் சிருஷ்டித்து அங்கு இறைவனையும் பிரதிஷ்டை பண்ணி வணங்குகிறான். நாக அரசன் உருவாக்கிய பட்டினம் நாகப்பட்டினம் என்று பெயர் பெறுகிறது. அவன் ஸ்தாபித்த இறைவனே காரோணர் ஆகிறார். இப்படித் தான் கடல் நாகைக் காரோணம் உருப்பெற்றது என்பது புராணக் கதை. இப்படிச் சரித்திரப் பிரசித்தியும் புராணப் பிரசித்தியும் பெற்ற கடல் நாகைக் காரோணர் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

நாகப்பட்டினம் தஞ்சை ஜில்லாவில் தஞ்சைக்கு நேர் கிழக்கே 55 மைல் தூரத்தில் உள்ள ஒரு கடற்கரைப் பட்டினம் தஞ்சை திருவாரூர் வழியாகவோ, இல்லை மாயூரம் திருவாரூர் வழியாகவோ ரயிலிலும் போகலாம்; காரிலும் போகலாம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரைமைல் தொலைவில் கோயில் இருக்கிறது. அங்குள்ள வண்டிக்காரர்களிடம் காரோணர் கோயில் எங்கிருக்கிறது என்று கேட்டால் பரக்கப் பரக்க விழிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் நீலாயதாக்ஷி அம்மன் கோயில் எங்கிருக்கிறது என்றுதான் கேட்க வேண்டும்.

ஆம். இங்குள்ள நீலாயதாக்ஷி -கருந்தடங் கண்ணி காரோணரை விடப் பிரபலமானவள். அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது அவளது திருக்கோயில். ஆதலால் நீலாயதாக்ஷியின் பெயரைச் சொல்லியே கோயிலைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியானால் இந்தக் கோயிலுக்குக் காரோணர் கோயில் என்று பெயர் வருவானேன் என்றுதானே கேட்கிறீர்கள், அதுவா? இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் காயாரோகணர். இதற்கு முன்னமேயே இரண்டு காயாரோகணர்களைச் சந்தித்திருக்கிறோம், நமது தல யாத்திரையில் ஒன்று கச்சியில், அங்கு அவர் அவ்வளவு பிரபலமானவர் அல்ல. அவருக்கு என்று தனிப்பதிகம் கூட ஒருவரும் பாடவில்லை . அடுத்தவர் தான் குடந்தைக் காரோணர். இவர் கூடக் காசிவிசுவநாதர் என்ற பெயரிலேதான் வழங்கப் படுகிறார். இந்த நாகப்பட்டினத்து இறைவர் மாத்திரமே காயாரோகணர் என்ற பெயரோடேயே நிலைத்து நிற்கிறார். இவர் காயாரோகணர் என்று பெயர் பெறுவானேன்? யமுனைக் கரையில் கருத்தமர் என்ற முனிவரின் புத்திரனாகப் புண்டரீகர் பிறந்து வளர்கிறார். பல தலங்களைத் தரிசிக்கிறார். குடந்தையிலே, ராமர் ருத்திர அம்சம் பெற விரும்பியபோது இறைவன் அவர் உ.டலிலே ஆரோகணித்துக் கொண்டார் என்பதை அறிகிறார்.

இவர் நாகப் பட்டினம் வந்ததும் இறைவனைத் தரிசித்துத் தம்மை அவர் உருவில் ஆரோகணித்துக் கொள்ள வேண்டித் தவங் கிடக்கிறார். புண்டரீகரது தவத்துக்கு மெச்சி அவரது காயத்தைத் தம்மேனியோடு ஆரோகணித்துக் கொள்கிறார். இப்படித் தான் காயாரோகணர் நாகையில் உருவாகியிருக்கிறார். இந்தக் காயாரோகணரே பின்னர் தம் பெயரைக் காரோணர் என்று சுருக்கிக் கொண்டிருக்கிறார். ஆம்! வேங்கடாசலபதியை வே.பதி என்றம், சந்திர சேகரை ச.சேகர் என்றும் குறுக்கி மகிழ்கின்றவர் பெருகியிருக்கிற காலத்தில் வாழ்கின்றவர் அல்லவா?

காரோணரைப் பற்றி இவ்வளவு தெரிந்து கொண்ட பின் கோயிலுக்குள் செல்லலாமே. கோயில் கிழக்கு நோக்கிய கோயில். கோயில் வாயிலிலே நீண்டு உயர்ந்த கோபுரம் இருக்காது. முற்றுப்பெறாத மட்டக் கோபுர வாயில் வழியாகத்தான் உள்ளே செல்லவேணும். உள்ளே சென்றதும் நம்மை எதிர்கொண்டு வரவேற்பவர் தல விநாயகரான நாகாபரணப் பிள்ளையார். ஐந்து தலைப் பாம்பு ஒன்று அழகாகக் குடை பிடிக்கும் பாவனையில் பிள்ளையாருக்குப் பின்னால் இருக்கும். ஏதோ பல லிங்கத் திருவுருவுக்குத்தான் நாகாபரணம் என்றில்லை, பிள்ளையாருக்குமே உண்டு என்று சொல்லும் பாவனையில் அமைந்திருக்கும் தலம் நாகப்பட்டினம் அல்லவா? அங்குள்ள விநாயகருக்கு நாகாபரணம் இல்லாமல் இருக்குமா? அவருக்குப் பின்புறந்தான் நந்தி; கல்லுருவில் அல்ல, சுதை உருவில்தான். ஒரு சிறு மண்டபத்துக்குள்ளே அதையும் நாற்புறமும் இரும்பு வேலியிட்டுப் பதனப்படுத்தியிருப்பார்கள். இந்த நந்திக்கு வடபுறம் பந்தல் காட்சி மண்டபம், தென்பக்கம் முத்தி மண்டபம். இந்த மாதிரி முத்தி மண்டபம் கயிலையிலும், காசியிலும், இக்காரோணர் கோயிலிலுமே இருப்பதாகச் சொல்கிறார்கள். நந்தியை வலம் வந்து இடைநிலைக் கோபுரமாம் சோழன் கோபுர வாயிலையும் கடந்தே, ராஜதானி மண்டபம் வரவேணும். இம்மண்டபத்தில் எல்லா மூர்த்திகளும் சேர்ந்து வதிவதால் இத்தலத்துக்கே சிவராஜதானி என்று பெயர் ஆயிற்றே. அந்த ராஜதானி மண்டபத்திலுள்ள தெய்வங்களுக்கெல்லாம் வணக்கம் செலுத்தி விட்டு வடபக்கம் உள்ள நீலாயதாக்ஷியைக் கண்டு தரிசிக்கலாம்.

திருவாரூரில் நீலோத்பலாம்பாள் என்னும் அல்லியங் கோதை என்றால், இங்கு நீலாயதாக்ஷி என்னும் கருந்தடங் கண்ணி-நிரம்ப வரசித்தி உடையவள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாக்ஷியுடன் ஒருங்குவைத்து எண்ணப்படுபவள். சங்கீத விற்பன்னர்களாம் தியாக ராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் மூவரும் நீலாயதாக்ஷியின் அருள் பிரபாவத்தை அழகிய கீர்த்தனங்களாகப் பாடியிருக்கிறார்கள். அதிலும் நீலாம்பரி ராகத்தில் 'அம்ப நீலாய தாக்ஷி' என்று முத்துச்சாமி தீக்ஷிதர் பாடியுள்ள கீர்த்தனம் பிரசித்தம். பாடத் தெரியுமானால் சந்நிதி முன் நின்றுபாடி சாந்நித்யம் பெறலாம். இல்லாவிட்டால் பிறர் பாடக் கேட்டாவது மகிழலாம்.

நீலாயதாக்ஷியை வணங்கிய பின்னர் அந்தப் பிரகாரத்திலுள்ள வாயிலையும் கடந்து உட்கோயிலுக்குச் செல்லலாம். அங்கு நின்று பார்த்தால் கோயில், கோபுர மில்லாவிட்டாலும் பிரம்மாண்டமான கோயில் என்று காண்போம். அங்குள்ள பிரகாரத்தைச் சுற்றினால் விநாயகர், ஆறுமுகன், அதிகார நந்தி, பைரவன், சந்திரன், சூரியன், புண்டரீகர், சாலீசுக மன்னன், இந்திரன் முதலிய அஷ்ட திக்குப் பாலகர்கள், சமயக் குரவர் நால்வர், மாவடிப் பிள்ளை யாரை எல்லாம் கண்டு தொழலாம். இந்தப்பிரகாரத்தின் வடபகுதியிலேதான், தசரதனே பிரதிஷ்டை செய்த சனிசுவரன் வேறே தனித்து நிற்பார். இன்னும் கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் எல்லாமே ஒரே வரிசையில் மேற்கு நோக்கியே 'கார்ட் ஆப் ஆனர்' கொடுத்துக்கொண்டு நிற்பார்கள். ஒருவருக்கு ஒருவர் வக்கரித்துக்கொண்டு நிற்கமாட்டார்கள். இதை அடுத்தே சங்க மண்டபம்; அந்த மண்டபத்தின் மேற்கிலேதான் தியாகராஜரும், காயாரோகனரும். தியாகராஜர் பூலோகத்துக்கு எழுந்தருளிய வரலாற்றைத் தான் திருவாரூரிலேயே கண்டு கொண்டோமே, அங்குள்ளவர் வீதிவிடங்கர் என்றால் இங்குள்ளவர் சுந்தரவிடங்கர். அங்கு நடந்தது அசபா நடனம் என்றால் இங்கு நடந்தது தரங்க நடனம். இங்கு தியாகராஜர் திருவாரூரில் உள்ள கோலாகலத்தில் இருக்க மாட்டார். அந்தக் கோலாகலம் எல்லாம் திருவாரூர் தியாகராஜருக்கென்றே ஏற்பட்டவை. என்றாலும் இந்தத் தியாகராஜரையும் வணங்கிவிட்டு வடக்கு நோக்கி நடந்தால், மூலவராம் காயாரோகனர் சந்நிதி வந்து சேருவோம். நல்ல வடிவில், லிங்கத் திரு உருவில் இருப்பார்.

அங்கு கருவறைச் சுவரிலே காயாரோகனருக்குப் பின்னாலே இருப்பவர் ஆதிபுராணர். சோமாஸ்கந்தர், அகஸ்தியர் முதலிய ஏழு முனிவர்களக்குக்காட்சி கொடுத்த கோலம். கயிலையில் நடந்த திருமணக் கோலத்தை அகத்தியருக்கு மட்டுந்தான் காட்டுவதாக எக்ரிமெண்டு, அவருடன் மற்ற ஆறுமுனிவர்களும் சேர்ந்து கொண்டால் எல்லோருக்கும் தரிசனம் கொடுத்துத் தானே ஆக வேண்டும். ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கெல்லாம் அருள் செய்பவன் ஆயிற்றே. ஆதலால் தான் நமக்குத் தரிசனம் கொடுக்கிறார். காயாரோகணரையும், சோமாஸ்கந்தரையும் வணங்கிவிட்டு வெளியே வரும்போது, மண்டபத்தின் ஒரு பகுதியை இரும்புக் கிராதிகள் போட்டு, அதைப் பத்திரமாகப் பூட்டியும் வைத்திருப்பதைப் பார்ப்போம். அந்த நீண்ட சிறு

அறைக்குள் தான் நெருக்கி இடம் பிடித்துக்கொண்டு, அந்தக் கோயிலில் செப்புச் சிலை வடிவில் உள்ள தெய்வங்கள் எல்லாம் இருப்பார்கள். இவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே நமக்கு முன்பே அறிமுகமானவர்கள்தான் என்றாலும் இவர்களுக்கிடையில் ஒரு பஞ்சமுக விநாயகர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளியிருப்பார். செப்புச் சிலை வடிவில் ஒரு நல்ல வேலைப் பாடு. வேறு ஒரு தலத்திலும் இல்லாதது. இவரையே ஹேரம்ப விநாயகர் என்றும், இவரே சர்வ வல்லமை உள்ளவர் என்றும் சாஸ்திரங்கள் கூறும். இவருடன் வில்லேந்திய வேலன் ஒருவனும் உண்டு. இடது கை வில்தாங்க வலது கை அம்பை விடுகின்ற பாணி. இன்னும் இந்தக் கோயிலில் இரண்டு நடராஜ வடிவங்கள். எல்லாவற்றையும் கலை அன்பர்கள் கண்டுகளிக்கலாம் பல மணி நேரம் நின்று பார்த்து. இத்தனையையும் பார்த்துவிட்டு வெளியே வரலாம்.

இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மூவருமே வந்திருக்கிறார்கள். மூவரும் காரோணரைப் பாடியிருக் கிறார்கள்.

கருந்தடங் கண்ணியும் தானும்
கடல் தாகைக் காரோணத்தான்
இருத்த திருமலை என்று
இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான்

பெருந்தலை பத்தும். இருபது
தோளும் பிதிர்ந்து அலற
இருந்தருளிச் செய்ததே,
மற்றுச் செய்திலன் எம் இறையே!

என்பது அப்பர் தேவாரம். இந்தச் சுந்தரர் இருக்கிறாரே அவர் கருமமே கண்ணாயினர். எங்கு சென்றாலும் தனக்கு என்ன என்ன வேண்டும் என்பதைக் கேட்கத் தவறமாட்டார். கேட்டதை வாங்காமலும் போகமாட்டார். கடல் நாகைக் காரோணம் மேவியிலிருந்த பெருமானிடம் அவர் கேட்கும் பொருள்களின் 'ஜாபிதா' வைப் பாருங்களேன். அதையும் தனக்கெனக் கேட்காதவர் போலவுமே பரவை சங்கிலியாருக்காவே கேட்பவர் போலவுமே வினயமாகக் கேட்கிறார்.

பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் :எனக்கும் பற்றாய பெருமானே!
மற்று யாரை உடையேன்?

உண்மயத்த உமக்கு அடியேன் குறைதீர்க்க
வேண்டும், ஒளிமுத்தம், பூணாரம்
ஒண்பட்டும் பூவும்

கண்மயத்த கத்தூரி, கமழச் சாந்தும் வேண்டும்.

என்று ஜாபிதாவை நீட்டிக் கொண்டே போகிறார். சமயக் குரவர் நால்வருள்ளும் இவர்தானே கோலாகலமாக வாழ்வு நடத்தியவர். வேண்டும் பொருள்கள் பலவாக இருத்தல் வியப்பில்லையே. இன்னும் இத்தலத்தில்தான் அறுபத்து மூவரில் ஒருவரான அதிபத்தர் வாழ்ந்திருக்கிறார். பரதவர் குலத்தில் பிறந்த இவர் மீன் பிடிக்கும் தொழில் நடத்தியிருக்கிறார். தம் வலையில் அகப்படும் முதல் மீனைச் சிவபெருமானுக்கு என்று விட்டு விட்டுப் பழகியிருக்கிறார். ஒரு தடவை பொன் மீனே முதல் மீனாகக் கிடைத்திருக்கிறது. அதையுமே இறைவனுக்கு விட்டிருக்கிறார். இவர் அன்பை உணர்ந்து இவருக்குத் தரிசனம் தந்து இவரை ஆட்கொண்டிருக்கிறான் இறைவன், அதிபத்தர் கெட்டிக்காரர்தான். தம் வலையில் கிடைத்த மீனை விட்டு, பக்தி வலையில் பரமனையே பிடித்துப் போடக் கற்றிருக்கிறாரே. இவர் வாழ்ந்த இடம் செம்படவர் சேரியாம். நம்பியாங்குப்பம் என்கிறார்கள். அங்கு அதிபத்தர் கோயில் ஒன்று மண் மேட்டில் புதைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இன்னும் இத்தலத்தில் காயாரோணகர் கோயிலை ஒட்டிய சுற்றுக் கோயில்களும் பல உண்டு. அவகாச உடையவர்கள் எல்லாம், அமரநந்தீசர் கோயில், கைலாச நாதர் கோயில், கட்டியப்பர் கோயில், விசுவநாதர் கோயில், குமார் கோயில் முதலிய கோயில்களுக்குச் சென்று வணக்கம் செலுத்தலாம்; இந்தக் கோயில்களுக்கு எல்லாம் செல்ல அவகாசம் இல்லாதவர்களும் மேற்கு நோக்கிக் கொஞ்சம் எட்டி நடந்து சௌந்தரராஜப் பெருமாளைத் தரிசிக்காமல் மட்டும் திரும்பக் கூடாது. உண்மையில் அங்கு மூலமூர்த்தியாக நிற்கும் சௌந்தரராஜன், சுந்தரமாக அழகுடையவர், நாகராஜனுக்குப் பிரத்யக்ஷமாகி அனுக்கிரகித்திருக்கிறார். அங்கு தனிக்கோயிலில் சௌந்தரவல்லித் தாயார் வேறே இருக்கிறாள். சுந்தரராஜனைத் திருமங்கை மன்னன் பத்துப் பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்திருக்கிறான்; வாழ்த்தி வணங்கியிருக்கிறான்.

வாழியரோ இவர்! வண்ணம்
எண்ணில் மாகடல் போன்றுஉளர்
கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர்
சங்கு பற்றி அச்சோ
ஒரு அழகிய வா?

என்றுதானே சௌந்தரராஜனின் அழகை அனுபவித்துப் பாடியிருக்கிறான். இந்தக் கோயிலில் ஆண்டாளுக்கு, மணவாள மாமுனிகளுக்கு எல்லாம் தனித்தனிச் சந்நிதி. இங்குள்ள உற்சவரும் மிகவும் அழகியவர்தான். அத்துடன் ஓர் அழகிய செப்புச் சிலை உக்கிர நரசிங்கருக்கு, இரணியன் உடல் கிழிக்கும் நிலையிலே, அளவில் சிறியதேயானாலும் கலை அழகில் மேம்பட்டது.

கடல் நாகைக் காரோணரைத் தரிசிக்க வந்த நாம், சௌந்தரராஜனையும் அவன் துணைவி சௌந்தர வல்லியையுமே தரிசித்து விட்டோம். இத்துடன் நமது சமரச மனோபாவனை நிற்காது இத்தலத்தில். அந்தக் காலத்திலேயே, சோழ மன்னன் ராஜராஜன் இங்குள்ள புத்த விஹாரத்துக்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தையே சாஸனம் பண்ணிக் கொடுத்திருக்கிறான். பௌத்த மதமானது நம் நாட்டில் பிறந்து வளர்ந்தது. பிறநாட்டிலிருந்து வந்த முஸ்லிம், கிறிஸ்துவ சமயத்துக்குமே இங்கு இடமுண்டு. நாகப்பட்டினத்திலிருந்து நாலு மைல் வடக்கு நோக்கி நடந்தால் நாகூரில் மகம்மது மீரான் என்ற பெரியார் அடக்கமாகி உள்ளார். அங்கு நடக்கும்கந்திரி, சந்தனக் குடம், இதில் எல்லாம் கலந்து கொள்பவர்கள் இந்துக்களே, நாகப்பட்டினத்திலிருந்து தெற்கு நோக்கி எட்டு மைல் நடந்தால் அங்கு வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில். தீரா நோய் தீர்த்தருள வல்லவள் அவள் என்பது பிரசித்தம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா, வேளூர் வைத்திய நாதனை யொத்த புகழ் உடையவள், மக்கள் பிணி தீர்க்கும்பான்மையிலே. இங்கும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். நம்பிக்கையில் வளர்வதுதானே பக்தி. அத்தகைய பக்தி இத்தலத்தை ஓட்டி நல்ல சமரச முறையிலே வளர்கிறது என்றால் இதைவிட என்ன புகழ் தான் வேண்டும் இத்தலத்துக்கு?