வேங்கடம் முதல் குமரி வரை 3/029-033
29. செங்கோட்டு அர்த்தநாரி
ஓர் இலக்கியக் கூட்டம். அக்கூட்டத்தில் ஓர் அறிஞர் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவரோ சிறந்த சீர்திருத்தவாதி, ஆணுக்குப் பெண் ‘சரிநிகர் சமானம்' என்று அறைகூவுகிறார். பேச்சின் இடையிலே சொன்னார் : ‘நம் நாடு ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்த பொழுது சீமையில் இந்தியா மந்திரியாக இருந்த பெதிக்லாரன்ஸ் என்பவர் பெயர் எப்படி அமைந்தது தெரியுமா? லாரன்ஸ் என்பதுதான் அவர் பெயர். பெதிக் என்பது அவரது மனைவியின் பெயர், இருவரும் சமூக சேவையில் ஈடுபட்டவர்கள். அது காரணமாக இருவரும் தங்கள் இருவரது பெயரையும் இணைத்தே மக்களிடம் அறிமுகம் செய்து கொண்டனர், அம்மை பெயர் மிஸஸ் பெதிக் லாரன்ஸ் என்றால் ஐயா பெயர் மிஸ்டர் பெதிக்லாரன்ஸ். நாமோ நமது மனைவியின் பெயரை முழுக்கவே மறக்கடித்து விடுகிறோம். மிஸஸ் ராமசாமி, மிஸஸ் கிருஷ்ணசாமி என்றே அவர்களையும் அழைத்து வருகிறோம். இது சரியா?' என்ற பேசிக் கொண்டே போனார். அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த நான் இதற்குக் கொஞ்சமும் சளைக்கவில்லை ‘ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதற்கு இந்தப் பெயர் இணைப்புத்தான் முக்கியம் என்றால் பெதிக்லாரன்ஸ் பிறப்பதற்கு எவ்வளவோ காலத்துக்கு முன்பே தமது கடவுளர் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்களே. நாம் வழிபடும் மூர்த்திகளில் பெரும்பாலோர் அம்மையப்பனாகத்தானே இருக்கிறார்கள். அவர்கள் பெயரும் உமா மஹேஸ்வரன், லட்சுமி நாராயணன், சீதா ராமன் என்றுதானே இருந்திருக்கின்றன. பெயரை
மாத்திரந்தானா தங்கள் பெயருடன் கொண்டிருக்கிறார்கள்? அவர்களது வடிவையே தங்கள் வடிவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களே. மனைவியைப் பாகத்தில் வைத்துக் கொள்கிறான் ஒருவன், ஆகத்தில் வைத்துக் கொள்கிறான் ஒருவன், என்? நாவிலேயே வைத்துக் கொள்கிறான் மற்றொருவன். திரிமூர்த்திகளின் கதையே இவ்வளவினதென்றால் இம் மூர்த்திகளை வணங்குகின்றவர்களாகிய நாமா நம் மனைவியை சஹ தர்ம சாரிணிகளாக வைத்துக் கொள்ளத் தயங்கப்போகிறோம்?' என்று எதிர்க் கேள்வி போட்டேன், பேச்சாளரிடம். உண்மைதானே. இம் மூர்த்திகளெல்லாம் நமக்கு நல்ல வழிகாட்டிகளாக அல்லவா அமைந்திருக்கின்றனர். அதிலும் பாகத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறானே அந்த மாதிருக்கும் பாதியன், அந்த அர்த்தநாரியை நினைத்தால் அந்த மூர்த்தியைக் கற்பனை பண்ணிய கலைஞனை நினைக்கிறோம். சொல்லிலும் கல்லிலும் அம் மூர்த்தியை உருவாக்குவதில்தான் எவ்வளவு சிந்தனைத் திறன்? மனித உடம்பின் அமைப்பையும் பார்ப்போமானால் ஒவ்வோர் உடம்பும் இரு வேறு ஒட்டுகளாக அமைக்கப் பெற்றிருத்தல் விளங்கும். ஆணும் பெண்ணும் ஒன்றுகின்ற வகையில் அன்றி, ஊர்வன, பறப்பன, நடப்பன முதலிய எந்த உயிருமே சிருஷ்டிக்கப் படுவதில்லையே. இப்படி சிருஷ்டிக்கப்படும் உயிரும் உடலும் தத்தம் தாயும் தந்தையுமாய் இருவகை இயல்புகளும் பொருந்தி நிற்க வேண்டுவதுதானே. உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் இறைவனை அந்த உருவில், ஆம்! பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் வழிபடுவதில்தான் எத்தனை பொருத்தம். அப்படி இறைவனை அர்த்தநாரியாக, மாதிருக்கும் பாதியனாக, பஞ்சின் மெல்லடியாள் பாகனாக, வழிபடும் தலம்தான் திருச்செங்கோடு என்னும் கொடிமாடச் செங்குன்றூர். அந்தத் திருச்செங்கோடு என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.
இந்தச் சங்ககிரியிலும் ஒரு சிறு குன்று உண்டு, அதனால்தானே சங்ககிரி துர்க்கம் என்று பெயர் பெற்றிருக்கிறது. சங்ககிரியில் இருந்து போகும் போதே திருச்செங்கோட்டு மலை தெரியும். பெயருக்கு ஏற்பவே சிவந்த நிறத்தோடு அம்மலை காட்சி அளிக்கும். இன்னும் அம்மலை மேல் ஏறி நிற்கும் அர்த்தநாரியைப் போலவே இரண்டு சிகரங்கள் வேறே பின்னிப் பிணைந்து நிற்பதும் தெரியும். பின்னிக் கிடக்கும் பெருங்கோடாகத் திருச்செங்கோடு இருப்பதனால் தானே, வேறு எங்கும் இல்லாத அர்த்தநாரி மூர்த்தம் இங்கு மூல மூர்த்தியாகவே எழுந்தருளியிருக்கிறது.
மலை கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி உயரம் உயர்ந்திருக்கிறது. அதில் 1900 அடி உயரத்தில் கோயில் இருக்கிறது. அம்மலை ஏற 1200 படிகள் இருக்கின்றன. பழனியில் இருப்பது போல் நன்றாகச் செப்பம் செய்யப்பட்டபடிகள் அல்ல. என்றாலும் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக இருக்கும். உயரத்திலும் பழனிக்கு ஒன்றரைப் பங்கு இருப்பதால் ஏறுவது கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். மலை ஏற முயல்வதற்கு முன்னாலேயே அடிவாரத்தில் உள்ள கைலாயநாதர் கோயிலில் சென்று வணங்கி விடலாம். மலை ஏறி இறங்கிய பின்னர் எப்போதடா ஜாகை சென்று இளைப்பாறுவோம் என்றிருக்கும்; அடிவாரத்தில் கோயிலுக்கு எல்லாம் செல்லத்தெம்பு இருக்காதே
இந்தக் கைலாய நாதர் கோயில் ஊருக்கு நடுவில் இருக்கிறது. கமா!i 250 அடி சதுரத்தில் மதில்களுடன் கூடிய பெரிய கோயில்தான், கோயிலின் பெருந்திரு வாயிலே 76 அடி உயரம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இங்கு கைலாய நாதரும் அவரது துணைவி பரிமளவல்லியும் தனித் தனிக் கோயிலில் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே ஒரு சிறு கோயிலில் சுப்பிரமணியர் நிற்கிறார். இவர் ஆறுமுகவன் அல்ல. தலையில் திருமுடியும் கரத்தில் வேலும் தாங்கிய கோலத்தில் இருக்கிறார். இவர்களையும் இத்தல விநாயகரான பட்டி விநாயகரையும் வணங்கிப் பின்னரே மலை ஏற முற்படலாம். அப்போதுதானே உடலில் மாத்திரம் அல்ல, உள்ளத்திலும் வலுவோடு மலை ஏற முடியும்.
சரி, இனி மலை ஏறத் தொடங்கலாமா? அதற்கு முன் இத்தலத்தைக் கொடிமாடச் செங்குன்றூர் என்றும் இங்குள்ள மலையை நாககிரி என்றம் ஏன் அழைக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ளலாம், கொடிகளை வீசும் மாட மாளிகைகள் நிறைந்த சிவந்த மலையை உடையதால் கொடிமாடச் செங்குன்றூர் என்று பெயர் பெற்றிருக்க வேணும். நமக்குத்தான் தெரியுமே, அந்த வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் நடந்த போட்டி மகா மேருவை ஆதிசேடன் தன் படத்தை விரித்து மூடிக்கொள்கிறான், வாயுவோ மேருவைப் பெயர்க்கும் வண்ணம் வீசுகிறான். வாயுவின் வேகம் தாங்காமல் சர்ப்ப அரசன் தன் படத்தைச் சற்றே மேலே தூக்கியிருக்கிறான் சிறிது மூச்சு வாங்க. அவ்வளவுதான்; மேருவின் சிகரங்களில் ஒன்று பிய்த்துக் கொண்டு வந்து விழுந்திருக்கிறது. இங்கே அத்துடன் சேடனது வாயின் இரத்தம் பட்டுச் சிவந்த குன்றாகவே அது இருந்திருக்கிறது. இதனாலேயே செங்கோடு என்றும் நாககிரி என்றும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
அடிவாரத்தில் கஜமுகப்படி விநாயகர் முதற் படியிலேயே ஒர் இழுவை மரத்தடியில் இருக்கிறார். அவரை வணங்கிவிட்டே மலை ஏறவேணும். அதன்பின் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் திருமடம், திரு முடியார் மண்டபம் எல்லாம் படியேறிக் கடக்கவேணும். இங்கேதான் கற்பாறையிலே, நாககிரி என்ற பெயருக்கு ஏற்ப அறுபதடி நீளத்தில் பெரிய உருவில் ஐந்து தலைப் பாம்பு ஒன்றைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். பாம்பின் படத்தின் நடுவிலே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த நாகசிலைப் பக்கத்திலுள்ள சிறு மண்டபத்திலிருந்து சுமார் 200 படிகளைக் கடந்தால் செங்குந்த சின்ன முதலியார் மண்டபம் வரும். அதன்பின் சிங்கத்தூண் மண்டபம். இதையும் கடந்த பின்பே அறுபதாம் படி என்னும் சத்தியப் படிகள். பிற தலங்களில் பதினெட்டாம் படியென்றும், கருப்பன் என்றும் கூறும் இடத்தைப் போன்றது இது. ஏதாவது தீராத வழக்கென்றால், வாதிடுபவர்கள் இந்த அறுபது படிகளையும் ஏறி, தான் சொல்லுவது எல்லாம் சத்தியம் என்று அந்தப் படிகளின் பேரில் உள்ள முருகக் கடவுள் அறியச் சொல்லவேணும். இன்றும் இச்சத்திய முறை நடக்கிறது.
இந்த அறுபதாம் படிமேல் எல்லையில் இருக்கும் முருகனை அன்றே அருணகிரியார் சத்திய வாக்கியப் பெருமாள் என்று அழைத்து திருப்புகழ் பாடியிருக்கிறார். நாம் சத்தியம் ஒன்றும் செய்யா விட்டாலும், சத்திய வாக்கியப் பெருமானுக்கு வணக்கம் செலுத்தும் வாக்கில் கொஞ்சம் அங்குள்ள மண்டபத்தில் தங்கியிருந்து இளைப்பாறி மேலும் நடக்கலாம், அதன் பின் செட்டிக் கவுண்டன் மண்டபம், தேவரடியான் மண்டபம், இளைப்பாறு மண்டபம் எல்லாம் கடந்தே கோபுர வாசல் மண்டபத்துக்கு வந்து சேரவேணும். அங்கும் கொஞ்சம் இருந்து இளைப்பாறிக் கொண்டே கோயிலுள் செல்லலாம். இந்த மண்டபத்தை ஒரு பெரிய கோபுரம் அழகு செய்கிறது. அந்த மண்டபத்துக்கே கீழ்ப்புறம் இருபது படிக்கட்டுகள் கீழ் இறங்கியே கோபுரத்தின் பிரகாரத்துக்கு வரவேணும். இனி அக்கோயிலை வலம் வர முனைந்தால் முதல் முதல் நாம் வந்து சேருவது செங்கோட்டு வேலவர் சந்நிதிதான். அவன் பாலசுப்பிரமணியன், இவன் மிகவும் அழகு வாய்ந்தவன். அவன் அழகினைக்கண்டே அருணகிரியார்,
மாலோன் மருகனை, மன்றாடி
மைந்தனை, வானவர்க்கு
மேலான தேவனை, மெய்ஞ்ஞான
தெய்வத்தை, மேதினியில்
சேலார் வயல் பொழில் செங்கோடனைச்
சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே
அந்த நான்முகனே
என்று பாடி மகிழ்கிறார். இந்த அருணகிரியார் இந்தச் செங்கோட்டுவேலனிடம் மிக ஈடுபாடு உடையவர் என்று தெரிகிறது. கந்தர் அலங்காரத்தில் அவனுக்கு என்று எட்டுப் பாட்டை ஒதுக்கி விடுகிறார். இன்னும் கந்தரனுபூதி, திருப்புகழ் பாடும் போதும் இவனை மறக்கவில்லை. கிழக்கு நோக்கி நிற்கும் இந்த வேலன் வலதுகரத்தில் வேலும் இடது கரத்தில் கோழிக் கொடியுடனும் நிற்கிறான். உற்சவ மூர்த்தமாக நிற்கும் வேலவனோ வள்ளி தெய்வயானை சகிதமாகவே நிற்கிறான். இவனைக் கண்டு தொழாது மேல் நடக்க இயலாது. இக்கோயிலின் முன் மண்டபம் நல்ல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. சந்நிதிக்குச் சென்றதும் மகா மண்டபத்தில் நாம் முதலில் காண்பது அர்த்தநாரீசுவரரின் உற்சவ மூர்த்தத்தையே. செப்பு வடிவத்தில் சிறந்த வடிவம். தலையிலே சடைமுடிக்குப் பதிலாக ஓர் 'ஆண்டாள் கொண்டை' மற்றப்படி இடப் பாகம் எல்லாம் பெண்மையும் வலப்பாகம் ஆண்மையும் நிறைந்திருக்கும். வலப்பாகத்தில் மற்ற அர்த்தநாரியில் இல்லாத விதத்தில் ஒரு கோலை மிடுக்காக ஏந்தியிருப்பார். இன்னும் இம் மூர்த்திக்கு இரண்டே திருக்கரங்கள் என்பதும் உய்த்துணரத் தக்கது. இந்த வடிவினையே மாணிக்கவாசகர்,
தோலும் துகிலும், குழையும்
சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும்
பசுஞ் சாந்தும், பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும்
உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ!
என்று பாடியிருக்கிறார். இந்த வடிவினை இந்தப் பாட்டோடு பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு தொண்டு கிழ முனிவர் மூன்றுகால்களுடன் இவர் காலடியில் நிற்பதைக் காண்போம். இவர் யார் என்று விசாரித்தால் அவர்தாம் பிருங்கி முனிவர் என்பார்கள். பிருங்கி சிவனையே தொழுபவர்; சக்தியை வணங்காதவர். இது சக்தியாம் அன்னைக்கு அவமானமாக இருந்திருக்கிறது. அதற்காக இறைவனிடம் வேண்டி அவர் உடலிலேயே பங்கு பெற்றிருக்கிறாள். அப்போதுகூட பிருங்கி வண்டு உருவெடுத்து இந்த அர்த்தநாரி வடிவத்தைத் துளைத்துச் சிவனை மாத்திரம் வலம் வந்து வணங்கினாராம். அப்படி வணங்கும்போது தம் உடலில் உள்ள சதையை எல்லாமே உதறி எலும்பும் தோலுமாகவே நின்றிருக்கிறார். அதனால் இறைவன் இவருக்கு மூன்றாவது கால் கொடுத்திருக்கிறார்.
இனி வடக்கு நோக்கிச் சென்றால் மூலவராம் அர்த்தநாரீசுவரரைக் காணலாம். நல்ல வெண்மை நிறத்தில் உற்சவ மூர்த்தம் போலவே இருப்பார். காலடியில் நீர் ஊறிக்கொண்டிருக்கும். மேற்கு நோக்கி நிற்கிறார் இவர். ஆனால் மேற்கு நோக்கி வாயில் கிடையாது. ஒரு சித்திரப் பலகணிதான் அங்கு உண்டு. இப்படி நிற்கும் அர்த்தநாரியைக் கண்டுதானே சம்பந்தர்,
வெந்த வெண்ணீறு அணிந்து,
விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்தணவும் விரலாள் ஒரு
பாகம் அமர்ந்து அருளிக்
கொந்தணவும் பொழில் சூழ்கொடி
மாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார்
அவலம் அறுப்பாரே
என்று பாடியிருக்கிறார். இன்னும் ஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்திருந்தபோது மக்களை யெல்லாம் குளிர் சுரம் வாட்ட அவர், ‘செல்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்' என்று பாடி மக்களைக் குளிர் சுரம் தீண்டாமல் காப்பாற்றியிருக்கிறார்.
இந்த அர்த்தநாரீசுவரரைப் பார்த்தபின் அங்கேயுள்ள விசுவநாதர், விசாலாக்ஷி, ஆதிகேசவப் பெருமாள், நாகேச்சுரர் சந்நிதிகளுக்கும் சென்று வணங்கலாம். மேலும் மலை ஏறி பாண்டீசர் கோயிலுக்குச் சென்றும் வணங்கலாம். இக்கோயில்தான் மலைச் சிகரத்தின் உச்சியில் இருக்கிறது. இங்குள்ள லிங்க மூர்த்தியை வந்தீசர் என்றும் அழைக்கின்றனர். புத்திரசந்தானம் பெற விரும்புபவர்கள் கார்த்திகை நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் சென்று வணங்கினால் மகப்பேறு பெறுகிறார்கள்.
இந்தக் கோயிலில் நிறையக் கல்வெட்டுகள் உண்டு. ராஜகேசரி வர்மன், பரகேசரி வர்மன் காலத்துக் கல்வெட்டுக்கள் பிராமண போஜனம் செய்விக்க ஏற்படுத்திய நிபந்தங்களைக் கூறுகின்றன. அறுபதாம் படிப்பக்கம் மதுரை கொண்ட பரகேசரி வர்மனது வெற்றிகளைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவை அக்காலத்தில் கிராம சபைகள் எப்படி நடந்தன என்பதையெல்லாம் குறிக்கின்றன. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கிருஷ்ண தேவராயன், மதுரை திருமலை நாயக்கர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. மலைமேலே அக்காலத்திலே கோட்டை ஒன்று இருந்தது என்பதற்குக்கூடச் சான்றுகள் கல்வெட்டில் கிடைக்கின்றன. இன்று அக்கோட்டையின் சின்னம் முழுவதும் அழிந்து போயிருக்கிறது. கோட்டை போய்விட்டது. கோட்டை வாசல் என்ற பெயர் மட்டும் இருக்கிறது. நமக்குள்ள கால் வலியில் இதைப் பற்றியெல்லாம் விரிவாக ஆராய்ச்சி செய்யத் தோன்றாது. ஆதலால் இத்துடனேயே நிறுத்திக்கொண்டு திரும்பி விடுவோம்.