உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 4/013-032

விக்கிமூலம் இலிருந்து

13. திருமோகூர்க் காளமேகர்

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து என்பர். பத்துக்கு மேலும் எடுத்த அவதாரங்கள் உண்டு. அதில் சிறப்பானது மோகின் அவதாரம். இந்த அவதாரத்தை இரண்டு தரம் எடுத்திருக்கிறார் அவர். ஒரு தடவை தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க மற்றொரு தடவை அமிர்தம் கடைய வந்த அசுரர்களை வஞ்சிக்க, இரண்டுமே சுவையான கதைகள் தாம். தாருகா வனத்து ரிஷிகள் கல்வி கேள்விகளில் வல்லவர்கள். வேதங்களை ஓதி ஓதி நிரம்ப அறிவைப் பெறுகிறார்கள். அவர்களது அறிவோடு வளர்கிறது ஆணவமும். தம்மைப் படைத்த தலைவனாம் இறைவனையே மறக்கிறார்கள். இறை உணர்வே இல்லாதவர்களாக வாழ்கிறார்கள் இவர்களது ஆணவத்தை அடக்கப் புறப்படுகிறார் இறைவன் பிக்ஷாடனக் கோலத்தில். இந்த அழகிய பிக்ஷாடனது கோலத்தைக் கண்ட ரிஷிபத்தினிகள் மயங்குகிறார்கள். நிறை அழிகிறார்கள். முனிவர்களது கர்வத்தை அடக்க இறைவன் தம் மைத்துனரான விஷ்ணுவையே அழைத்திருக்கிறார். அவரும் வருகிறார், நல்ல மோகினி வடிவிலே, இந்த மாய மோகின்யை முனிவர்கள் பின் தொடருகிறார்கள். ஆணவம் அழிகிறது. அகந்தை ஒழிகிறது. இப்படி ஒரு வெற்றி இறைவனான சிவபெருமானுக்கு மோகினி வடிவில் வந்த தம் மைத்துனர் மூலமாக.

அடுத்த தடவை மோகினி வடிவம் எடுத்தது இதைவிடச் சுவையானது. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து அருந்தினால் அமரர்கள் ஆகலாமெனத் தேவர்கள் நினைக்கிறார்கள், பாற்கடல் கடையத் தங்களால் மாத்திரம் இயலாதென்று, அசுரர்களையும் உடன் சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அமுதத்தில் பங்கு கொடுக்க இசைந்திருக்கிறார்கள். சும்மாவே துன்புறுத்தும் அசுரர் அமிர்தத்தை வேறு சாப்பிட்டுவிட்டார்கள் என்றால் கேட்பானேன்? ஆதலால் பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்த உடன் தேவர்கள் அசுரர்களுக்கு பங்கைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். அசுரர்களோ விடுவதாக இல்லை. இந்த நிலையில் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டிருக்கிறார்கள். விஷ்ணு மோகனமான மோகினி வடிவத்தில் வந்திருக்கிறார். இருவருக்கும் அமுதத்தைத் தாமே பங்கிட்டுத் தருவதாகச் சடறியிருக்கிறார். அப்படியே அமுதத்தைப் பரிமாறவும் முனைந்திருக்கிறார். தேவர்கள் பக்கம் வரும்போதெல்லாம் தாராளமாய் வாரி வழங்கிவிட்டு, அசுரர்கள் பக்கம் போகும்போது ஆடிப் பாடி அவர்களை மயக்கியிருக்கிறாார் அமிர்தத்தைக் கொடாமலேயே. கடைசியில் அமிர்தம் காலியாகிவிடுகிறது ஒரு துளிகூட அசுரர்கள் பெறாமலேயே. இப்படி அசுரர்களை ஏமாந்த சோனாகிரிகளாக்க எடுத்திருக்கிறார் ஒரு தடவை மோகனாவதாரம். இந்த மோகனாவதாரம் எடுத்த தலம்தான் மோகனூர். அதுவே மோகூர் என்று குறுகியிருக்கிறது. அந்தத் திருமோகூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமோகூர், மதுரைக்கு வடக்கே ஏழு எட்டு மைல் தொலைவில் இருக்கிறது. மதுரை-மேலூர் ரோட்டில் ஒத்தக் கடைவரை நல்ல சிமெண்ட் ரோட்டில் போய் அதன்பின் கிழக்கே திரும்பி ஒரு மைல் சென்றால் திருமோகூர் போய்ச்சேரலாம். கோயிலைச் சுற்றி நாலு புறமும் வயல்களும் தடாகங்களும். 'தான் தாமரை தடம் அணிவயல் திருமோகூர்' என்றுதானே நம்மாழ்வார் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்; கோயிலைச் சற்றி நீண்டுயர்ந்த மதில் அழகு செய்கிறது. கோயிலுக்கு வடக்கு மதிலுக்குப் பக்கத்திலே புஷ்கரணி அதில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். இதையெல்லாம் பார்த்துக் களித்த பின்னரே கோயிலுள் செல்லலாம்; கோயில் பெரிய கோயில், கிழக்கு வாயிலைத் தாண்டியதும் கம்பத்தடி மண்டபம், அங்குதான் இக்கோயிலைத் திருப்பணி செய்த சிவகெங்கைச் சீமை பாளையக்காரர்களான சின்ன மருது, பெரிய மருது இவர்களின் சிலைகள் இருக்கின்றன. பெரிய மருது கட்டிய கோபுரத்தைத்தான் காளையார் கோயிலில் பார்த்திருக்கிறோமே. அங்கேயே வடபுறம் க்ஷீராப்தி நாதர் சந்நிதி வேறே. அடுத்த வாயிலையும் கடந்து சென்றால் கருட மண்டபம் வந்து சேருவோம். அங்கு மூன்று நான்கு நல்ல சிலைவடிவங்கள் தூண்களில் இருக்கின்றன. சீதாப்பிராட்டியை அணைத்த வண்ணம் நிற்கும் ராமன் ஒரு தூணில், அதனை அடுத்து லக்ஷ்மணான் ஒரு தூணில், இவர்கள் தவிர மன்மதன் ரதி முதலியவர்கள் வடிவங்கள், இவர்களுக்கிடையில் ஒரு சிறு கோயிலில் பெரிய திருவடியான கருடாழ்வார் நிற்கிறார். இனி மகாமண்டபத்தைக் கடந்து அர்த்தமண்டபத்துக்குச் செல்லலாம். அங்கிருந்து பார்த்தால் காளமேகப் பெருமாள் என்னும் மூலவர், தேவியர் இருவரோடும் நின்றகோலத்தில் சேவை சாதிப்பார். கம்பீரமான வடிவம். இந்தக் காளமேசுப் பெருமானையே கவி காளமேகம்,

பொன்னனைய அரக்கன் ஐந்நூற்றுவரைக்
காவை, பொரு சிலையைக்
கனைகடலைப் பொன்னன் ஈன்ற
நன்மகற்காப் கரர்களில்
ஐவருக்காய், காதல் நப்பின்னைக்காய்
நடவைக்காக
மன்னுகிரால் வடிக்கலையால்
வளையால், புள்ளால் வயங்குதோன்
வலியால் வானரங்களாலும்
முன்னுடல் கீறிச் சிரங்கொண்டு
அம்பில் வீழ்த்தி முதலொடும் கொண்டு
இருத்தசைத்த மோகூரானே

என்று அவன் பிரதாபங்களையெல்லாம் விரிவாகச் சாங்கோபாங்கமாகவே பாடியிருக்கிறார். இக்கோயிலிலேயே 'இடங்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்' என்று நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்தபடி புஜங்க சயனராய்ப் பள்ளி கொண்டிருக்கும் கோலமும் இருக்கிறது. இத்தனையைக் கண்டாலும்
திருமோகூர் மன்மதன்
நமக்கு, அந்த மோகினியான மோகன வடிவத்தையே கானும் ஆவல் மிஞ்சி நிற்கும். இந்த ஆவலைத் தீர்க்க அங்கு மூர்த்தியோ அல்லது சிற்ப வடிவமோ இல்லை. ஆனால் இந்த மோகன வடிவத்தைக் கண்டு தான் ஆகவேண்டும் என்றால் மாயூரம் பக்கத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுரர் கோயிலுக்கு ஒரு நடைகட்ட வேண்டியதுதான். அங்கு காம ரூபிணியாக இருக்கும் மோகினியைக் காணலாம். இங்கு தாயாருக்கு ஒரு சந்நிதி உண்டு. தாயாரின் திருநாமம் மோகனவல்லி. இந்த மோகனவல்லி அந்த மோகன வண்ணனுடன் போட்டிபோடக்கூடிய அழகு வாய்ந்தவளாக இல்லை. இக்கோயில் கருவறையின்மீது உள்ள விமானமும் கேதகி விமானம் என்னும் சிறப்பான விமானம். கோயிலுக்கு வெளியே பெரிய பாறையில் பன்னிரண்டு திருக்கரங்களுடன் சக்கரத்தாழ்வார் செதுக்கப்பட்டிருக்கிறார். பெரிய சக்கரமும் அதன் நடுவில் சுதர்சன ஆழ்வாரும் உருவாகியிருக்கிறார்கள், சக்கரத்தாழ்வார் விரைவாகச் செல்லும் பாணியில் இருக்கிறார்.

இத்தலம் புராணப் பிரசித்தி மாத்திரம் உடைய தலம் அல்ல, மதுரைக் காஞ்சி என்ற பழைய சங்க இலக்கியம், மோகூர் அவையசும் விளங்கக் கோசர் வந்து பழையனுக்கு உதவி செய்ததைக் குறிக்கிறது. மௌரியர், வடுகரை முன்னேறவிட்டுத் தென்திசை மேல் படையெடுத்து வந்தபோது மோகூர் அவர்களுக்குப் பணியாமல் நின்றிருக்கிறது. மோகூருக்குத் துணையாகக் கோசர் ஆலம்பலத்தில் தோன்றிப் பகைவரைச் சிதைத்தனர் என்றும் கூறும். மோகூர்ப் பழையனைச் செயகுட்டுவன் வென்று அவன் காவல் மரமாகிய வேம்பைத் தடிந்தான் என்று பதிற்றுப் பத்து கூறும். இதனால் மௌரியர் காலத்துக்கு முன்னமேயே போகர் பழம் பெருமையுடன் சிறப்புற்றிருந்தது என்பது தெளிவாகும். கிரேக்க வானசாஸ்திரியான டாலமி, மோகூரைப் பற்றித்தம் பூகோளப் படத்தில் குறித்திருக்கிறார் என்றால் அதிகம் சொல்வானேனே்? இக் கோயிலிலே இடைக்காலக் கல்வெட்டுகள் நிறைய இருக்கின்றன. தென் பறம்பு நாட்டின் ஒரு பகுதியான மோகூர் விளங்கியிருக்கிறது. பறம்பு நாடு பாரியின் நாடு, மோகூரின் பழையன் என்பவனது பலத்த கோட்டை இருந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் இக்கோயில் கோட்டையாக உதவியிருக்கிறது. கோயில் குடி, திரும்பூர் என்றெல்லாம் வழங்கியிருக்கிறது. கர்நாடக யுத்தத்தின்போது முகமது அலிஹீரன் மோகூர் ஆலயத்தை முற்றுகையிட்டு ஆலயத்துள் புகுந்த பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்திருக்கிறான். கோயில் ஸ்தானீகர்களாக கள்ளர் குலமக்கள் ஹீரானின் படைகளை விரட்டி அவர்கள் கைப்பற்றிய பொருள், விக்கிரகங்களையெல்லாம் மீட்டிருக்கின்றனர். இவ்வளவு சரித்திரப் பிரசித்தியுடனும் விளங்குவது இக்கோயில்.