வேங்கடம் முதல் குமரி வரை 4/015-032

விக்கிமூலம் இலிருந்து
15. மதுரை மீனாக்ஷி

சென்னை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவுக்கு ஆறு பேரை அனுப்புவதென்று தீர்மானம் ஆயிற்று. எதற்கென்று தெரியுமா? இப்போது எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி அவர்கள் அங்குள்ள விஷயங்களைக் கற்று நிபுணத்துவம் அடைய நினைக்கிறார்களே, அதுபோல் ஆறுபேர் நகர நிர்மாணம் எப்படி என்று ஆராய, அப்படி அவர்கள் படித்து வந்ததைக் கொண்டு நம் நாட்டில் நகரங்களை அமைக்க அந்த அறிவு உதவும் என்று கருதினார்கள். இதற்காக ஆறு பேர்களைத் தேர்ந்தெடுக்க ஆறு வருஷங்கள் ஆயின. எவ்வளவோ போட்டி யார் யாரெல்லாமோ சிபாரிசு, இவ்வளவும் நடந்து ஆறு பேரைத் தேர்ந்தெடுத்துத் தீர்ந்தது. பேப்பரில் முடிவான உத்தரவு போடவேண்டியவர் முதல் மந்திரி, ஆகவே கடைசியில் "பைல்" அவரிடமும் போயிற்று. அவர் "பைலைப் படித்துப் பார்த்தார். நடந்திருக்கும் விஷயங்களைக் கவனித்தார் கடைசியில் குறிப்பு எழுதினார்.

அவர் எழுதிய குறிப்பு இதுதான்; `தமிழ் நாட்டில் நகர நிர்மானம் எப்படி இருக்க வேணும் என்று படிக்க அமெரிக்க போய்த்தான் தெரிய வேணுமா? இந்த ஆறு பேரும் நேரே மதுரைக்குச் செல்லட்டும். அங்கு நகரம் அமைந்திருக்கும் முறையைக் காணட்டும். நகர நிர்மாணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.' ஆறு பேரும் ஏமாந்தார்கள். அவர்களை அனுப்பக் கங்கணம் கட்டிக் கொண்டு நின்றவர்களும் ஏமாந்தார்கள் உண்மைதானே? நகர நிர்மாணம், அதிலும் தமிழ் நாட்டின் நகர நிர்மாணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? மதுரைக்குச் சென்றால் தெரிந்து கொள்ள முடியாதா? நல்ல நகர நிர்மாணத்துக்கு எடுத்துக்காட்டாக அல்லவா மதுரை நகரம் அமைந்திருக்கிறது.

ஊருக்கு நடுவே கோயில், கோயிலைச் சுற்றிச் சுற்றி வீதிகள். அந்த வீதிகளிலெல்லாம் அங்காடிகள் என்றெல்லாம் அமைந்திருப்பது அழகாய் இல்லையா? அப்படி நகர நிர்மாணத்துக்கே சிறப்பான எடுத்துக்காட்டாய் இருப்பது பழம் பெருமையுடைய மதுரை. அதனையே ஆலவாய், நான்மாடக்கூடல் என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். அந்த ஆலவாயிலே இறைவன் தனது அறுபத்தி நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறான். பாண்டிய மன்னர்கள் அரசு செய்த இடம். இன்னும் எவ்வளவோ பெருமைகளை உடையது மதுரை, அந்த மதுரைக்கே செல்கிறோம்.

மதுரை செல்வதற்கு வழி நான் சொல்லி அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மதுரை நகருக்கு நடுநாயகமாய்க் கோயில், அதைச் சுற்றி ஐந்து வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒவ்வொரு உற்சவத்துக்கு ஏற்பட்டது. ஆடி மாதம் முளைக்கொட்டு விழா. அது நடக்கிற வீதி ஆடி வீதி. இது கோயில் மதிலுக்குள்ளேயே இருக்கிறது. அடுத்த சுற்று சித்திரை வீதி, மாசியில் நடக்கும் மக விழா இப்போது இவ்வீதியில் நடக்கிறது. அடுத்த சுற்று ஆவணி மூல வீதி. பெயரே தெரிவிக்கிறது. ஆவணி மூலப் பெருவிழா இதனில் நடக்கும் என்று. இதனையும் அடுத்தது மாசி வீதி.

சித்திரையில் நடக்கும் பெருந் திரு விழாவான, பிரம்மோத்சவம் இந்த வீதியில்தான் நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் வெளியேதான் வெளி வீதி. பஸ் போக்குவரத்துக்கெல்லாம் ஏற்றதாக அகன்ற பெரிய வீதி இது. பஸ்ஸில் சென்றாலும், ரயிலில் சென்றாலும் ஒவ்வொன்றாக இவ்வீதிகளைக் கடந்தே கோயிலுக்கு வரவேணும். ஊருக்கு வெளியிலேயே கோயிலின் நீண்டுயர்ந்த கோபுரங்கள் எல்லாம் தெரியும். சித்திரை வீதி வந்ததும் கோயில் வாயில்களும் தெரியும் நான்கு பக்கத்திலும் வாயில்கள் திறந்தே இருக்கும். இருந்தாலும் நாம் கோயிலுக்குள் செல்ல வேண்டியது கீழ வீதியில் உள்ள அம்மன் கோயில் வாயில் வழியாகத்தான். மற்றக் கோயில்களைப் போல் அல்லாமல் இங்கு முதலில் மீனாக்ஷியைத்தான் வழிபட வேணும். அதன் பின்னர்தான் சுந்தரேசுவரர். மீனாக்ஷிதானே பாண்டிய ராஜகுமாரி, சுந்தரேசர் அவள்தன் நிழலிலேதானே ஒதுங்கி வாழ்கிறார்? அம்மன் கோயில் முகப்பில் அஷ்ட சித்தி மண்டபம். கௌமாரி, ரௌத்திரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்ஞரூபிணி, சாமளை, மகேசுவரி, மனோன்மணி என்று ஆளுக்கொரு தூனை ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலேதான் பழக்கடைகள் முதலியன.

இதனைக் கடந்து மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். அதற்கடுத்தது முதலி மண்டபம், குடந்தை முதலியாரால் கட்டப்பட்டது. அங்கு பிக்ஷாடனர், தாருகா வனத்து ரிஷிகள், ரிஷி பத்தினிகள், மோகினி முதலியோரது சிலைகள் இருக்கின்றன. இந்த முதலி மண்டபத்தையும் கடந்து வந்தால் பொற்றாமரைக் குளத்துக்கும், அதைச் சுற்றியமைந்துள்ள மண்டபத்துக்கும் வந்து சேருவோம். பொற்றாமரையை வலம் வந்து கோயிலுள் செல்ல வேணும். பொற்றாமரை என்ற பெயருக்கு ஏற்பத் தங்கத்தால் தாமரை மலர் ஒன்று குளத்தின் நடுவில் இருக்கும். இங்குதான் வள்ளுவரது குறளைச் சங்கப் புலவர்கள் ஏற்றிருக்கின்றனர். ஆதலால் சலவைக் கல்லில் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளும் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சலவைக் கல் பணியும் அந்தப் பொற்றாமரையும், திருப்பனந்தாள் மடத்து அதிபர் அவர்களது கைங்கர்யம்.

பொற்றாமரையை வலம் வந்து கிளிக்கட்டு மண்டபம் வழியாக மீனாக்ஷியம்மன் சந்நிதிக்குச் செல்லவேணும். அங்கு வருவார் எல்லோரும் வசதியாக நின்று காணக் கிராதிகளெல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள். கருவறையில் மீனாக்ஷி நிற்கிற கோலம் கண்கொள்ளாக் காட்சி. வலக்கையில் கிளியுடன் கூடிய செண்டு ஒன்று ஏந்தி அவள் நிற்கின்ற ஒயில், மிக்க அழகானது. கருணை பொழியும் கண்கள் படைத்தவள் அல்லவா?? கண்ணை இமையாது மக்களைக் காக்கும் அருள் உடையவள் ஆயிற்றே, இவளையே, தடாதகை, அங்கயற் கண்ணி என்றெல்லாம் அழைக்கிறார்கள். அன்னையை வணங்கி அவள் திருக்கோயிலை வலம் வரும்போதே கோயில் திருப்பணி செய்த திருமலை நாயக்கரைச் சிலை வடிவில் அவரது இரண்டு மனைவியருடனும் காணலாம். மீனாக்ஷியின் சந்நிதியை விட்டு வெளி வந்து வடக்கு நோக்கி நடந்தால் நம்மை எதிர்நோக்கியிருப்பார் முக்குறுணிப் பிள்ளையார், விநாயக சதூர்த்தியன்று முக்குறுணி அரிசியை அரைத்து மோதகம் பண்ணி அந்த நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறவர் ஆனதால் முக்குறுணிப் பிள்ளையார் என்று பெயர் பெற்றிருக்கிறார். பெயருக்கு ஏற்ற காத்திரமான வடிவம். அவருக்கு வணக்கம் செலுத்தி, சுவாமி கோயில் பிராகாரத்தில் நடக்கலாம். மேற்குப் பிராகாரத்தில் ஏகாதச லிங்கங்கள் இருக்கின்றன. வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் கடைச்சங்கப் புலவர்கள் நாற்பத்தி ஒன்பது பேரும் சிலை உருவில் இருக்கிறார்கள். கோயில் முன்பக்கம் வந்தால் கம்பத்தடி மண்டபம். இதிலுள்ள சிற்ப வடிவங்களைக் கானக் கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஆதலால் கோயிலுள் நுழைந்து முதலில் சொக்கலிங்கப் பெருமானை வழிபாடு செய்து விட்டு, அவகாசத்துடனேயே இம்மண்டபத்துக்கு வருவோம். மூலத்தானத்தில் லிங்க உருவில் இருப்பவர் சொக்கர். அவரைப் பல பெயர் சொல்லி அழைக்கிறார்கள்,

புழுகுநெய்ச் சொக்கர் அபிடேகச்
சொக்கர்; கர்ப்பூரச் சொக்கர்.
அழகிய சொக்கர், கடம்பவனச்
சொக்கர், அங்கயற்கண்
தழுவிய சங்கத் தமிழ்ச்
சொக்கர் என்று சந்ததம் நீ
பழகிய சொற்குப் பயன் தேர்ந்து
வா இங்கு என் பைங்கிளியே.

என்று அத்தனை பெயரையும் அழகாகச் சொல்கிறது ஒரு பாட்டு, சொக்கர் என்றாலே அழகியவர் என்று தானே பொருள், அதனாலேயே அவரைச் சுந்தரேசுவரர் என்றும் அழைக்கிறார்கள். இவர் இத்தலத்து அதிபதியாய் எழுந்தருளியது நல்ல ரஸமான கதை அல்லவா?

மலயத்துவஜ பாண்டியன் மகளாகத் தடாதகை பிறக்கிறாள். வளர்கிறாள். தடாதகை தந்தைக்குப் பின், தானே மகுடம் சூடிக்கொண்டு பாண்டிய நாட்டை அரசு செய்கிறாள். அப்படி அரசு செய்யும்போது திக்விஜயம் செய்யப் புறப்படுகிறாள். திக்விஜயத்தில் அரசர்கள் மாத்திரம் அல்ல, திக்கு பாலகர்களுமே தலை வணங்குகிறார்கள். வெற்றிமேல் வெற்றி பெற்று இமயத்தையே அடைகிறாள். பகீரதியில் முழுகுகிறாள். மேருவை வலம் வருகிறாள். கடைசியில் கைலாசத்துக்கே வந்துவிடுகிறாள், அங்கு கைலாசபதி சாந்த ரூபத்தோடு பினாகபாணியாக அவள் முன் வந்து சேருகிறார். எல்லோரையும் வெற்றிகண்ட பெண்ணரசி, இந்தச் சுந்தரன் முன்பு நாணித் தலை கவிழ்கிறாள், தடாதகையின் பின்னாலேயே மதுராபுரிக்கு வந்துவிடுகிறார் சுந்தரர். சோமசுந்தரனாக மதுரைத் தடாதகையை மணம் புரிந்து கொள்கிறார். மலயத்துவஜன் ஸ்தானத்தில் தடாதகையின் சகோதரனான சுந்தரராஜனே கன்யாதானம் செய்து தாரை வார்த்துக்கொடுக்கிறார். அன்று முதல் சோமசுந்தரர் தம் மனைவியின் நிழலிலேயே ஒதுங்கி வாழ்கிறார். இந்தத் திருமண வைபவத்தைத்தான் இன்றும் சித்திரைத் திருவிழாவாக மதுரையில் மக்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி நடக்கும் தங்கையின் திருமணத்துக்கே தந்தப் பல்லக்கு, முத்துக்குடை., தங்கக் குடம் முதலிய சீர்வரிசைகளுடன் அழகர் கோயிலில் இருந்து சுந்தரராஜன் வந்து சேருகிறார். இத்திருமணக் கோலத்தைப் பரஞ்சோதி முனிவர் சொல்லில் வடிக்கிறார்.

அத்தலம் நின்ற மாயோன்
ஆதி செங்கரத்து நங்கை
கைத்தலம் கமலப்போது
பூத்ததோர் காந்தள் ஒப்ப

வைத்தகு மனுவாய் ஓதக்
கரக நீர் மாரி பெய்தான்
தொத்தலர் கண்ணி விண்ணோர்
தொழுது பூமாரி பெய்தார்.

இதனையே கல்லில் வடித்து நிறுத்துகிறான் ஒரு சிற்பி, அச்சிற்ப வடிவமே கம்பத்தடி மண்டபத்தில் தென்கிழக்குத் தூணில் நிற்கிறது.

கம்பத்தடி மண்டபத்துக்கு வருமுன் கோயில் உள்ளே வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிக்கொண்டு நிற்கும் கற்பகத்தையும் கண்ணாரக் கண்டு வணங்கலாம். வலது காலையே ஊன்றி நடனம் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டு வருந்திய ராஜசேகர பாண்டியனைத் திருப்தி செய்யக் கால் மாறி ஆடினான், அந்த நடராஜன் என்பது வரலாறு, கம்பத்தடி மண்டபத்தில் எண்ணரிய சிற்பங்கள், எல்லாம் சிலைவடிவில். அக்கினி, வீரபத்திரர், ஊர்த்துவத் தாண்டவர், காளி காலசம்ஹாரர், காமதகனர், ரிஷிபாந்திகர் முதலிய சிற்ப வடிவங்கள் எல்லாம் அழகானவை. கம்பத்தடி மண்டபத்துக்கு வடக்கே நூற்றுக்கால் மண்டபம் இருக்கிறது. அதனையே நாயக்கர் மண்டபம் என்பர். அடுத்த வெளிப்பிராகாரத்துக்கு வந்தால் அங்குதான் அரியநாத முதலியார். ரதி முதலிய சிற்பங்களைத் தாங்கிய ஆயிரங்கால் மண்டபம். வீர வசந்தராய மண்டபம். சுவாமி சந்நிதிக்கும், அம்மன் சந்நிதிக்கும் இடையேதான் கல்யாண மண்டபம். இதையெல்லாம் பார்த்தபின் ஆடி வீதியில் ஒரு சுற்றுச் சுற்றினால் வடக்கு வாயில் பக்கம் சங்கீதத் தூண்களையும் காணலாம். இனி வெளியே வந்தால் பிரபலமான புது மண்டபம் இருக்கிறது. அங்கே எல்லா இடத்தையும் கடைகளே அடைத்துக் கொண்டிருக்கும். இதற்கிடையிலே உள்ள ஊர் மண்டபத்தில் திருமலை நாயக்கரது குடும்பம், கல் யானைக்குக் கரும்பு அருத்திய சித்தர், கரிக் குருவிக்கு உபதேசித்த குருநாதன் சிலா வடிவங்களையும் காணலாம்.

கோயிலை நன்றாகப் பார்த்து விட்டோம். இத்தலத்துக்கு மதுரை என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிய வேண்டாமா?
மீனாக்ஷி திருக்கல்யாணம்
சிவடெருமான் தன் சடையில் சூடிய பிறையில் உள்ள அமுதத்தைத் தெளித்து இந்நகரை நிர்மாணித்தால் இந்நகரமானது மதுரமாக இருந்திருக்கிறது. இன்னும் கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்னும் நால்வரும் பிரபலமாக இருக்கும் இடம் ஆனதால் நான்மாடக் கூடல் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. கன்னியான மீனாக்ஷி இருந்து அரசு புரிந்ததால் கன்னிபுரீசம் என்றும், சிவபெருமான் சுந்தரபாண்டியனாக இருந்து அரசாண்ட சாரணத்தால் சிவராஜதானி என்றும் பெயர் பெற்றிருக்கிறது. இத்தலத்தில் மாதமொரு திருவிழா. எப்படிக் காஞ்சி கோயில்கள் நிறைந்த நகரமோ அதுபோல் இந்த நகரம் விழாக்களால் சிறப்பான நகரம். மதுரையில் மீனாக்ஷி கோயிலைப் பார்ப்பதோடு அங்குள்ள திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர்த் தெப்பக்குளம், கூடல் அழகர் கோயில் முதலியவைகளையும் பார்க்கத் தவறக்கூடாது. கூடல் அழகர் ஊரின் மேற்கோடியில் இருக்கிறார். மூன்று தலங்களில் நின்றும், இருந்தும், கிடந்தும் சேவை சாதிக்கிறார்.

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் 44. இன்னும் திருமுகச் செப்புப் பட்டயங்களும் உண்டு. பராக்கிரம பாண்டியன், செண்பக மாறன், குலசேகர தேவர், மல்லிகார்ச்சுனராயர், கோனேரின்மை கொண்டான், விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கர், முதலியோரது திருப்பணிகள் இக்கோயிலும் மண்டபங்களும். இவைகளின் லிவரங்களெல்லாம் திருப்பணி மாலை என்ற பாடலில் வரிசையாக அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இத்தனை சொல்லியும் ஒன்றைச் சொல்ல விட்டுவிட்டால் இத்தலத்தின் வரலாறு பூரணமாகாது. இத்தலத்தின் பெருமையே இங்கு இறைவன் நடத்திய அறுபத்திநான்கு திருவிளையாடல்களின் பெருமைதான். இதனை வடமொழியில் ஹாலாசிய மகாத்மியத்திலும், தமிழில் பரஞ்சோதியார் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் காணலாம். இந்திரன் வழிபட்டது, மீனாக்ஷியைத் திருமணம் செய்தது. பிட்டுக்கு மண் சுமந்தது, வன்னியும் கிணறும் இலிங்கமும் அமைத்தது. கால் மாறி ஆடியது முதலியவை முக்கியமானவை. இவைகளுக்கெல்லாம் தனித்தனி திருவிழாக்களே நடக்கின்றன. கோயில்களின் பல பாகங்களில் இதற்குரிய சிற்ப வடிவங்களும் இருக்கின்றன அவைகளைத் துருவிக் காண ஆசையும், அதற்கு வேண்டிய அவகாசமும் வேண்டும்.

இத்தலத்துக்கு அப்பரும், சம்பந்தரும் வந்திருக்கிறார்கள். மாணிக்கவாசகர் வரலாறு முழுக்க முழுக்க இத்தலத்தில் நடந்தது தானே! சம்பந்தர் இங்கு வந்ததும், பாண்டியனை! சைவனாக்கியதும், சமணர்களைக் கழுவேற்றியதும் பிரசித்தமான காவியமாயிற்றே! கூன்பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் இந்தத் தலத்தில் பெருமை பெற்றவர்கள் மங்கையர்க்கரசியையும் அங்கயற்கண்ணியையும் சேர்த்தே வழிபடுகிறார் சம்பந்தர்.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை,
வரிவளைக்கை மடமாணி?
பங்கயச் செல்வி, பாண்டிமா தேலி
பணி செய்து நாடோறும் பரவ
பொங்கழல் உருவன் பூத நாயகன், நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே.

என்பதுதானே அவரது பாடல். நானும், 'ஆலவாய் எனபது இதுதான்' என்று சுட்டிக் காட்டிவிட்டு நின்று கொள்கிறேன். மதுரையைப் பற்றி இவ்வளவுதானா சொல்லலாம்? 'சொல்லிடில் எல்லை இல்லை' என்பதுதான் என் அனுபவம்.